NNA1

NNA1

நீயும் நானும் அன்பே…

அன்பு-1

சூரியன் அதன் சுழலும் வேகத்தால், பூமியின் மறைந்திருந்த பக்கத்தைக் காணச்செல்லும் குதூகலத்துடன் தன்னை மறைத்துக் கொள்ளத் துடிக்கும் சாயுங்கால வேளை.

மெட்ராஸின் (தற்போதைய சென்னை 96 வரை மெட்ராஸ் என அழைக்கப்பட்டது) வெயிலுக்கு, வெண்ணெய் தானாகவே உருகி நெய்யாகும் அளவிற்கு, கதிரவன் மறைந்தும் அவன் விட்டுச் சென்ற கதிர்களின் தாக்கத்தால் சூழல் இன்னமும் தகித்தது.

கோடைக்கால பின்பொழுது என்பதால், காற்றோட்டமான வீட்டில்கூட கசகசவெனும் அசௌகர்ய உணர்வோடு சமையல்கட்டில் தூக்கிப் போட்ட கொண்டையுடன் வியர்வை வழிய நின்றிருந்தார் புஷ்பராணி.  

மாலை நேரத்திலேயே, அவசர அவசரமாக இரவுக்கான உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.

கணவனும், மகளும் இன்று புஷ்பாவின் பிறந்த ஊரான சீவகங்கை மாவட்டத்தில் (1997 க்குப் பிறகே சீவகங்கை சிவகங்கையாக மாற்றப்பட்டது) உள்ள மானகிரி எனும் சிற்றூருக்குச் செல்ல இருக்கிறார்கள்.

மெட்ராஸில் இதுவரை பணிபுரிந்து வந்த புஷ்பராணியின் கணவர் வெற்றிசெல்வனுக்கு, இன்னும் ஓரிரு மாதங்களில், இடமாறுதலோடு கூடிய பதவி உயர்வு வரவிருப்பதால், ஒன்பதாம் வகுப்பில் அடியெடித்து வைக்கும் மகளின் படிப்பு தடைபடாமல் இருக்க வேண்டி, மகளை இந்த ஆண்டு துவக்கத்திலேயே காரைக்குடியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் சேர்க்க திட்டமிட்டிருந்தனர்.

மத்திய அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் வெற்றிக்கு, பணிமாறுதல் தற்போது அண்டை மாநிலத்தில் என்பதால், மகளை புஷ்பராணியின் தாய் வீட்டில், அவரின் பெற்றோர்களின் மேற்பார்வையில் விடுவதற்காகத் திட்டமிட்டிருந்தபடி அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தது குடும்பம்.

எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மகள் நவீனாவை, அங்கிங்கு அலைக்கழித்து, ஆண்டையும், படிப்பையும் வீணாக்காமல் இருக்க வேண்டி இந்த முன்னேற்பாடு.

வெற்றிச்செல்வனது தாயார், தனது மூத்த மகன் குடும்பத்தோடு காரைக்குடியிலுள்ள அவர்களது பூர்விக வீட்டில் இருக்கிறார்.  ஆனாலும் வயதுப் பிள்ளையைப் பார்க்கும் அளவிற்கு உடலும், மனமும், அவருக்குத் திடமாக இல்லை. 

தனது தாயைப் பார்க்கவே ஆள் தேவைப்படும் நிலையில், மகளை புஷ்பாவின் தாய் வீட்டில் கொண்டு விடச் சம்மதித்திருந்தார் வெற்றி.

ஓரகத்தியை நம்பி தனது மகளை அவரின் பொறுப்பில் விட புஷ்பாவிற்குமே எப்பொழுதும் விருப்பம் இருந்ததில்லை.  ஒரு மணி நேரம் கூட அவரிடம் மகளை ஒப்படைக்க பிரியமில்லாத நிலையில், ஆண்டு கணக்கில் என்பதால் அதைப்பற்றிய யோசனைக்கு இடம் கொடுக்கவில்லை.

நவீனாவிற்கு மனதிற்குள் ஏக வருத்தம்.  தனது தம்பி நந்தாவை மட்டும் உடன் வைத்துக்கொண்டு, தன்னை மட்டும் பெற்றோர் ஊருக்கு அனுப்புகிறார்களே என்று.

வேலையாக இருந்த தாயிடம் அவ்வப்போது வந்து, செல்லச் சிணுங்கலோடு, “ம்மா… கண்டிப்பா நான் அங்க போகத்தான் வேணுமா?”, கடைசி நேரத்திலாவது முடிவுகள் மாறுமா என தனது முயற்சியை மேற்கொண்டிருந்தாள் நவீனா.

“வேற என்னடாம்மா செய்யறது.  இன்னும் ட்டூ இயர்ஸ் நீ ஆச்சி வீட்லதான் இருக்கிற மாதிரி இருக்கும்”, வெந்திருந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது தெரியாமலேயே நிதர்சனத்தை மகளிடம் நிச்சலனமாகக் கூறியிருந்தார் புஷ்பா.

“வேற வழியே இல்லையாம்மா?”, பாவம்போல கேட்ட மகளைக் கண்ணுற்றவர், கணவர் வெற்றியை ஏறிட்டு இயலாத தன்மையோடு நோக்கினார்.

மனைவி, மகளின் பேச்சைக் கேட்டபடியே, இதுவரை அவரது பணிகளில் கவனம் செலுத்தியவருக்கும் மனவருத்தமே.

மகனும் சற்றுப் பெரியவனான பிறகு, குடும்பத்தை காரைக்குடியில் விடுவதாக எண்ணம் அவருக்கு.

இந்த பதவி உயர்வோடு கூடிய பணிமாறுதல் அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான வெற்றிக்கு, இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடுவதில் விருப்பமில்லை.

‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ எனும் பழமொழிக்கேற்ப இதுவரை வாழ்ந்தவரால், இடமாறுதலோடு கூடிய பதவி உயர்வை மறுக்க மனம் இடங்கொடுக்கவில்லை.

“நந்தாவை மட்டும் உங்க கூடயே வச்சிக்கறீங்க, அவனையும் ஆச்சி வீட்ல விட வேண்டியதுதான!”, தனது எதிர்ப்பை பலவழிகளில் காட்டியபடியே இருந்தவள், தனது வயதிற்குரிய நியாய மனப்பான்மையோடு கேள்வியை முன்வைத்தாள் பெண்.

நந்தா தற்போதுதான் மூன்றாம் வகுப்பு முடித்திருக்கிறான்.  எதுவாக இருந்தாலும், நந்தாவுடன் மட்டுமே போட்டிக்கு நிற்பாள் நவீனா.

“அவன் இப்போ ஃபோர்த்துதான போறான் குட்டிம்மா.  நீ இப்போ நைன்த்டா!”, என குரலில் வித்தியாசத்தைக் காட்ட முயன்றிருந்தார் வெற்றி.

“என்னைக் குட்டிம்மானு சொல்லிக்கிட்டே, பெரியவளைப்போல எங்கேயே கொண்டு போயி தனியா தள்ளிவிடப் போறீங்க!”, விட்டால் அழுதுவிடும் நிலையில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

“நீ இனி பெரிய புள்ளை.  உனக்கு இனி அடிக்கடி ஸ்கூல் மாத்த முடியாது.  அதான் இன்னும் டூ இயர்ஸ் ஆச்சி வீட்டில இருந்தா, அப்புறம் அம்மாவும் காரைக்குடிக்கு வந்திருவா! 

அங்க ஊருல, உங்க சித்தி வீடு, மாமா குடும்பம், இன்னும் நிறைய சொந்தக்காரங்க சுத்திலும் இருக்காங்க! 

இங்கவிட அங்க உனக்கு நல்லா பொழுது போகும்”, சமாதானம் சொன்னார் வெற்றி.

இதுவரை சொந்த பந்தங்களோடு ஒட்டவிடாமல் தனித்தே வைத்திருந்தவர், தங்களது தேவைக்காக மகளிடம் சொந்தங்களைப் பற்றி விலாவாரியாக விளக்கி என்ன பயன்!  மனிதருக்கு அது புரியவில்லை.

“யாரு அங்க இருந்தா எனக்கு என்னப்பா! நீங்க யாரும் அங்க என் பக்கத்துல இல்லைல!”, கூறான அரிவாள் போன்ற வினாவை தந்தையை நோக்கி எழுப்பியிருந்தாள் பெண்.

“கொஞ்ச நாள் இருடாம்மா, அம்மாவையும் காரைக்குடியில கொண்டு வந்து விட ட்ரை பண்ணுறேன்.  இப்ப நேரமாகுது, கிளம்புடா செல்லம்!”, என்று மகளின் வினாவில் இதயம் ரணமாக வலித்த உணர்வை மறைத்தபடியே

“சமத்து புள்ளைதான நீ!  சிலநேரங்கள்ல இப்படியெல்லாம் எதிர்பாக்காதது நடக்கும்.  அதுக்காக மனசொடியக் கூடாது.  தைரியமா இருக்கணும்”, என்று மகளுக்கு தைரியம் கூறுவதாக எண்ணி தனக்கே தைரியம் கூறியிருந்தார் வெற்றி. 

‘எதுக்கெடுத்தாலும் பெரிய புள்ளையா வளந்துட்டேன்னே சொல்றீங்க! நான் குழந்தையாவே இருந்திருக்கலாம் போல, போங்கப்பா!

இனி என்னைக் குட்டிம்மானு கூப்டுங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு’, என தந்தையின் வார்த்தைகளைக் கொண்டே தனக்குரிய நியாயம் கிடைக்காததால் வருத்தத்தோடு வாயில் முனங்கியவாறே அங்கிருந்து அகலத் துவங்கினாள் பெண்.

வாய்விட்டுச் சிரித்த வெற்றி, “அது நீ குழந்தையா இருந்ததுல இருந்தே அப்பா அப்டிக் கூப்பிட்டு பழகினதுடா.  சட்டுன்னு பழக்கத்தை விடமுடியல!”, மகளிடம் மனதோடு இளகிப் பேசினார் வெற்றி.

“ரெண்டு வருசங்கழிச்சு அம்மாவை அங்க விடறத இப்பவே எங்கூட விட வேண்டியதுதானப்பா!”,  நியாயமாக மகள் கேட்டதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலை வெற்றிக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்தது வெற்றிக்கு. 

உணவு மற்றும் இதர அனைத்தும் பக்குவமாகக் கையாள வேண்டிய கட்டாயம்.  அதற்கு அவரால் மெனக்கெட இயலாததால், மனைவியை மகளோடு அனுப்ப இயலவில்லை.

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, “சீக்கிரமாவே அம்மாவை காரைக்குடியில கொண்டுவந்து விட ட்ரை பண்றேண்டா.  அதுவரை சமத்தா ஆச்சிட்ட இருந்துக்கோ!”, என்று மகளிடம் தாஜா செய்திருந்தார் வெற்றி.

அவருக்கும் மகளின் கெஞ்சல் மனதைத் தைத்தது. 

மகள் என்று வரும்போது, மனம் சற்றே தடுமாறியது.  ஒத்து வந்தால் பார்ப்போம்.  இல்லையென்றால் மனைவியை காரைக்குடியில் குடி அமர்த்திவிடலாம் என்ற முடிவோடு மகளின் மனம் வாடாமல் இதமான பதில்களைத் தந்திருந்தார்.

குழந்தை மனம் மட்டுமன்றி, செயல்களும் பருவமெய்தியும் இன்னும் மாறாமல் இருந்தது, நவீனாவிற்கு.

நவீனாவை தனது பிறந்த ஊரான மானகிரியில் தங்கியிருந்தபடியே, காரைக்குடியில் படிக்க அனுப்ப விரும்புவதாக, தந்தைக்கு முன்பே கடிதம் எழுதியிருந்தார் புஷ்பராணி.

புஷ்பராணியின் தந்தையும் மறுக்காமல், “அதற்கென்ன, பேத்தியை நல்லா படிக்க வச்சுட்டாப் போச்சு”, என்ற தொணியில் பதில் கடிதமும் அனுப்பிய கையோடு, காரைக்குடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பேத்தியை சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார் பெரியவர் தங்கவேலு.

கோடை விடுமுறையும் முடிந்து, பள்ளிகள் திறக்க இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், மகளை அழைத்துச் சென்று, பள்ளியில் சேர்த்துவிட்டு வருவதற்காக வெற்றிச்செல்வன் தற்போது மகளோடு கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

நவீனாவிற்கு வேண்டிய அனைத்தையும், புஷ்பராணியே எடுத்து வைத்திருந்தார்.

பேச்சு பேச்சாக சென்றாலும், விளையாட்டில் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவள், மீண்டும் அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தாள் நவீனா.

நவீனா, தம்பி நந்தாவுடன் சேர்ந்து, அண்டை வீட்டுப் பிள்ளைகளுடன் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

கோடை விடுமுறை என்பதால் இளம்பிள்ளைகள் அனைவருக்கும், வீட்டுப்பாடம், வேறு எந்த வேலையும் இல்லாமல், இனிமையான மனநிலையோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நாட்கள் குதூகலமாகச் சென்றிருந்தது.

இரவு உணவைத் தயார் செய்து உரிய முறையில் அதை எடுத்து வைத்துவிட்டு, நவீனாவைக் கிளப்பும் முயற்சியில் இறங்கினார் புஷ்பராணி.

மகளுக்கு அறிவுரைகளைக் கூறியவாறே, குளிக்க வைத்து, புதிய உடையை அணிவித்தவர், கணவனுடன் மகளை ஒருவழியாக ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்.

புஷ்பாவிற்கும் மனம் முழுவதும் வெறுமை குடியேறியிருந்தது.  எதற்கும் குழந்தைகளை இதுவரை விட்டுப் பிரிந்திராதவர், இன்று மகளை ஊருக்கு அனுப்பும் போது உயிர்வலியை உணர்ந்தார்.

காயத்தினை சரிசெய்ய, வலியெடுத்தாலும், அதனை பொறுத்துக் கொண்டு முறையாக சுத்தம் செய்தபின் மருந்திடுவது போலத்தான், இதுவும் என தன்னையே தேற்றியிருந்தார் புஷ்பா.

அதாவது மகளுக்கு பக்குவம் வர, இதுபோலான தங்கல்கள் அவளைப் பக்குவப்படுத்தும் என்பது புஷ்பாவின் எண்ணம்.  மேலும் வேறு வழியில்லாததால் இப்படியொரு முடிவினை எடுத்தாக வேண்டிய சூழல் என தனக்குத் தானே தேறுதல் கூறியிருந்தார்.

நவீனாவிற்குரிய சில நியாயங்கள் இருந்தன.  அவற்றைக் கவனிக்கத் தவறிய பெற்றோர்களை, அவள் இனி தன் வாழ்வில் எந்தளவு எதிர்பார்ப்பாள் என்பது?  அதை இனி அவள் மட்டுமே முடிவு செய்வாள்.

குழந்தைபோல குணத்தோடு இருந்தாலும், பருவமெய்திய பெண் குழந்தைகளின் மனவோட்டம் மிக நீளமானது, ஆழமானது, வெகு வேகமானது.

புஷ்பாவிற்கு அதுபோல ஒரு சம்பவம் அவரது பருவ வயதில் எழாமல் போனதும், நவீனாவை தற்போது தனித்துவிடக் காரணமாக அமைந்திருந்தது.

நவீனாவிற்கு இனி எந்தச் சூழலிலும், பெற்றோரிடம் இறங்கிச் சென்று, தனது நலனுக்காக, தேவைக்காகக் கெஞ்சுவதை அவள் விரும்பவில்லை.

முடிவெடுத்துவிட்டாள்.  ஆனால் அதை முகத்தில் காட்டாமல் கிளம்பினாள்.

தான் எவ்வளவோ கெஞ்சியும் தன்னைக் கண்டு கொள்ளாதவர்களிடம் தனக்கு இனி என்ன இருக்கிறது? என்று மனம் தன்னைத் தனித்து நிற்கச் சொல்லியிருந்தது.

மனம் நிறைய பயம் இருக்கிறது.  தாத்தா, ஆச்சி மற்றும் இதர சில உறவுகளை அரைநாள், அதிக பட்சம் ஒரு நாள் அளவு அருகில் இருந்து கவனித்திருக்கிறாள்.

நெருங்கிய பழக்கம் என்று அவளுக்கு யாரும் நினைவில் இல்லை.

அப்போதெல்லாம் உடன் தாயிருந்ததால், தாயிடம் அண்டியே தனது நாட்களை இதுவரைக் கடந்திருந்தவளுக்கு, இனி வரும் நாட்கள் எப்படிச் செல்லுமோ என்கிற பயம் வந்தது.

கடிதப் போக்குவரத்தில் பெரியவர்கள் மட்டுமே இதுவரை தங்களது சுகங்களைப் பற்றியும், உறவினர்களைப் பற்றியும் பகிர்ந்திருந்தார்கள்.

தங்கவேலுவின் வீட்டில் தொலைபேசி இருந்தது.  ஆனால் வெற்றியின் வீட்டில் இல்லாததால், அலுவலக தொலைபேசியை முக்கிய விடயங்களைக் கூற மட்டுமே இதுநாள் வரை பயன்படுத்தி வந்தார்கள்.

திருமணமான பிறகு, புஷ்பா இரண்டு முறை, இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக இரு குழந்தைகளின் பிரசவகாலத்தில் மட்டும் பிறந்தகத்தில் தங்கியிருக்க இதுவரை அனுமதித்திருந்தார் வெற்றி.

அதற்குமே முதலில் சரியென்று கூறவில்லை மனிதர்.  “எங்கம்மாவை இங்க கூட்டிட்டு வந்திருவோம்.  உனக்கு இங்கேயே டெலிவரி பாத்துக்கலாம் புஷ்பா”, என்றவரிடம்

“இல்லைங்க!  எனக்கு இதை மட்டும் மறுத்துச் சொல்லாதீங்க!  என்னை எங்கம்மா வீட்டுலயே கொண்டு போயி விட்ருங்க”, என கண்களில் நீரோடு வயிற்றுப் பிள்ளையோடு நின்றவளை மறுக்க மனதில்லாமல் கொண்டு போய் விட்டிருந்தார் மனிதர்.

எதாவது ஊரில் விசேஷம் என்றால் பெரும்பாலும் வெற்றி தனியாகவே வந்து கலந்து கொண்டு செல்வார்.

புஷ்பாவின், தங்கை மற்றும் தம்பி இருவரது திருமணத்திற்குமே,  இரண்டு நாட்கள் முன்பே காரைக்குடியில் உள்ள அவர்களது வீட்டில் குழந்தைகளோடு வந்து தங்கிக் கொண்டவர், மனைவியை மட்டும் மானகிரியில் விட்டிருந்தார்.  

மூன்றாம் நபர்களைப்போல முகூர்த்த நேரத்தில் மட்டும் வந்து நின்றுவிட்டு, குழந்தைகளை உடன் அழைத்துச் சென்றிருந்தார் வெற்றி.

புஷ்பா மட்டும் இரண்டு நாட்கள் அங்கிருந்து தனது பங்காக சில பொறுப்புகளை எடுத்துச் செய்துவிட்டு, கணவர் வந்து அழைத்ததும் உடன் கிளம்பியிருந்தார்.

தங்கவேலுவிற்கு வெற்றியின் செயல் கண்டு மனவருத்தம் இருந்த போதிலும், இதுவரை மகளை எந்தக் குறையுமில்லாமல் நன்றாக வைத்துக் கொள்ளும் மருமகன் மீது அளவு கடந்த மரியாதை.

சுயகௌரவம் அங்கு தலைதூக்கி நிற்பதால் இந்த நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிருந்தார் பெரியவர்.

எதாவது பேசப் போக, நாளடைவில் அது மகளின் இல்வாழ்க்கையில் இடைஞ்சலாகி விடக்கூடாதே என்கிற எண்ணத்தில் விட்டுவிட்டார் தங்கவேலு.

கோடை விடுமுறையில் கூட குழந்தைகளை ஊருக்கு அழைத்துச் செல்வதை விரும்பமாட்டார் வெற்றி.

“வேணுங்கறதை எல்லாம் சொல்லு, வாங்கித் தாரேன்.  புள்ளைகளுக்கு செய்து கொடுத்திட்டு, நீயும் நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடு. 

ஊருக்குப் போனா நம்ம நினைச்ச நேரத்திற்கு எதுவும் செய்ய முடியுமா? சொல்லு!

நம்ம வீட்டில இருக்கிற மாதிரி சுதந்திரமா, நினைச்ச நேரத்தில படுக்க, உக்கார, ஒரு டிவி பாக்க.. இந்த மாதிரி, அங்க போயி இருக்க முடியுமா?

பசிச்சா கூட உடனே சாப்பிட முடியுமா? யாருடா கூப்பிட்டு, எப்படா சோறு போடுவாங்கன்னு ஒவ்வொரு வாயா பாத்திட்டே ஒக்காந்துட்டு இருக்கணும்”, என்று மனைவியிடம் மறுத்துவிடுவார் மனிதர்.

வெற்றியின் அனுபவத்தில், நாளொன்றுக்கு என்றில்லாமல், ஒவ்வொரு வேளைக்கும் ஒரு மாமனார் வீட்டில் சாப்பாடு என்றழைத்து, அதற்கும் காலங்கடத்துவதையே மனிதருக்கு அறவே பிடிக்கவில்லை.

தனது விருப்பத்தை, எதிர்பார்ப்பை அவர்களிடம் திணிக்கும் அளவிற்கு அவர் பிற்போக்கு சிந்தனையாளர் இல்லை.

இலகுவாக தோன்றாத இடத்தில், வந்து இருப்பதை, தங்குவதை அவராகவே குறைத்துக் கொண்டிருந்தார் வெற்றி.

புஷ்பாவும் கணவரின் செயல் கண்டு, முதலில் மனம் வருந்தினாலும், பிறகு தன்னையே மாற்றிக் கொண்டிருந்தார்.

வெற்றியின் இந்த செயல்களுக்கு முக்கிய காரணம், திடீர் பணக்காரர்களான வேலு குடும்பத்தில் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த தனக்கு உரிய நியாயம், மரியாதை கிடைக்கவில்லை என்பதே.

இத்தனை குழப்பத்திற்கு இடையில், தனது மகளை மாமனாரின் பொறுப்பில்விட ஒரு மனம் சரியென்றாலும், மறுமனம் வேண்டாம் என்றது.

யோசனையோடே வெற்றி தன் மகளுடன் மானகிரியை நோக்கிப் பயணித்திருந்தார்.

————–

தங்கவேலு, நன்முல்லை அவர்களின் மூத்த புதல்விதான் புஷ்பராணி.  புஷ்பராணிக்கு ஒரு தங்கையும், தம்பியும் இருக்கிறார்கள்.

புஷ்பராணியின் தங்கையான கலாராணியை உள்ளூரிலேயே மனமுடித்துக் கொடுத்திருந்தார்கள்.

தம்பி ராமச்சந்திரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணமாகி குடும்பத்தோடு மானகிரியிலேயே வசித்து வந்தான்.

தங்கவேலுவுடன் உடன் பிறந்தவர்கள் இருவர்.  ஒரேமாதிரியான செட்டிநாட்டு தோற்றம் கொண்ட மூன்று மச்சு வீடுகளில் அடுத்தடுத்து மூவரும் குடியிருந்தனர்.

ஒரே காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகளும் அமைந்திருந்தது.

மூத்தவர் குருவேலு தற்போது உயிரோடு இல்லை.  அவரின் மனைவி அன்னம்மா மட்டும் இருக்கிறார்.  குருவேலுவிற்கு ஒரு மகனும், மூன்று பெண் மக்களும் இருந்தனர்.

இளையவர் ராஜவேலுவிற்கு நான்கு பெண் மக்களும், இரண்டு மகன்களும் இருந்தனர்.

பெரும்பாலும் வேலு குடும்பத்தார் மூவரும், உள்ளூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் அல்லது காரைக்குடியில் தங்களது சம்பந்தக்களைச் செய்திருந்தனர்.

தங்கவேலு மற்றும் அவரது சகோதரர்கள் விவசாயத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பி வாழ்ந்திருந்தனர்.

செம்மண் கொண்ட நிலத்தில் விளையக்கூடிய அனைத்தும் குறைவின்றி, வருடந்தோரும் விளைந்திட எந்தக் குறையுமில்லை இதுவரை அவர்களுக்கு.

இருந்தாலும் மூத்தவர் மலேசியாவிலும், இளையவர் பர்மாவிலும் சில ஆண்டுகள் சென்று பணிபுரிந்தனர்.

அண்ணன்கள் இருவரும் அனுப்பிய பணத்தினைக் கொண்டு, காரியமாக ஏக்கர் கணக்கில் நிலபுலன்களை வாங்கியதோடு, முறையாக விவசாயம் செய்து, நடுத்தர வர்க்கமாக இருந்தவர்கள், மேல்தட்டு வர்க்கமாக இன்று முன்னேறியிருந்தனர்.

மூவரின் பிள்ளைகள் அனைவருக்கும் போதிய கல்வியைக் கொடுத்து, பெரும்பாலும் நல்ல அரசாங்கப் பணியில் தற்போது ஆண்கள் அனைவரும்  காலூன்றியிருந்தனர்.

பெண்கள் அனைவரும் இளங்கலை மற்றும் அறிவியல் பட்டக்கல்வியை படித்திருந்தாலும், யாரும் பணிகளுக்குச் செல்லவில்லை.

பணிக்கு எந்த கணவன்மார்களும் தங்களது மனைவியை அனுப்பவில்லை என்பதே இங்கு சரியாக இருக்கும்.

சிவகங்கை ஜில்லாவிலேயே வேலு குடும்பம் என்றால் தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்கு, சகோதர்கள் மூவரின் ஒற்றுமையும், வளர்ச்சியும், வானளவு பிரசித்தியாக இன்றளவும் பேசப்படுகிறது.

—————–

மாலை வேளையில் சுத்தம் செய்திருந்த முற்றத்தில் தண்ணீர் தெளித்து, பரந்து கிடந்த அவ்விடம் பளிச்சென்று இருந்தது.

தண்ணீர் தெளித்திருந்ததால், மாலை நேரக் காற்று வீச, முற்றத்தில் தெளித்திருந்த நீரின் தன்மையால் அவ்விடம் குளிர்ந்து, இதமான நல்ல உணர்வைத் தந்திருக்க, தினசரி அங்கு அமர்வதை வழக்கமாக்கியிருந்தார், தங்கவேலு.

தங்கவேலு அவரின் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, பேரன் பேத்திகள் விளையாடுவதை பார்த்தபடியே, அடுத்தநாள் ஊருக்கு வரவிருக்கும், மருமகன் மற்றும் பேத்தியைப் பற்றி சிந்தித்தபடியே அமர்ந்திருந்தார்.

பேத்திக்கு இதுவரை இங்கு தனியே வந்து தங்கிப் பழக்கமில்லை.  யாருடனும் இணக்கமான உறவு இதுவரை கிடையாது. 

அப்டி இருக்க, குழந்தை இங்கு எப்படி தங்களோடு ஒட்டுவாள் என்கிற எண்ணம் மனதில் தோன்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.

அதேநேரம் யமஹாவில் உள்ளே நுழைந்த பேரனைப் பார்த்தவருக்கு, மனதில் ஏதோ தோன்ற

“சங்கரு, இங்க செத்த (சிறிது) நேரம் வந்துட்டுப் போப்பா”, மூத்தவர் குருவேலுவின் மகன் வழிப்பேரன் ஜெய்சங்கர்.  அனைவரும் சங்கர் என்றே அழைப்பார்கள்.

மதுரையில் உள்ள வேளாண் கல்லூரியின் மூன்றாமாண்டு படித்து வருகிறான்.  தற்போது பருவ விடுமுறைக் காலமென்பதால் நண்பர்களோடு வெளியில் சென்றுவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.

“என்ன ஐயா? கூப்பிட்டீக!”, என்றபடி வண்டியை நிறுத்திவிட்டு வந்தவன் தங்கவேலுவின் காலடியில் வந்து அமர்ந்திருந்தான்.

பதறியவர், “ஏன்யா இப்டி வந்து கீழ உக்காருற, எத்தனை தடவை சொல்றேன்.  இப்டி கீழ வந்து உக்காறாதேன்னு. மேல அந்த சேருல போயி உக்காரு சங்கரு”, என்று தனதருகே கிடந்த மற்றொரு மர நாற்காலியை பேரனிடம் காட்டி இதமான இன்சொல்லால் அமரச் சொன்னார் தங்கவேலு.

“இருக்கட்டும்யா, என்ன விசயமா கூப்பீட்டீகன்னு இன்னும் சொல்லலையே”, என்று தனது காரியத்தில் கண்ணாக இருந்தான்.

“ஒன்னுமில்லை.  நாளைக்கு உங்க புஷ்பா அத்தையோட வீட்டுக்காரவரு இங்க நம்ம வீட்டுக்கு வராரு.  அவுகளை மானாமதுரைல வந்து கூப்டுக்கறதா அத்தைக்கு எழுதியிருந்தேன்.  அதான் நீ நாளைக்கு வெள்ளன போயி கூட்டிட்டு வரமுடியுமானு கேக்கத்தான் கூப்பிட்டேன்”, என்று பேரனிடம் தான் அழைத்ததற்கான விளக்கம் கூறினார்.

“அதுக்குத்தான் கூப்பீட்டீகளா ஐயா. சரி.. நானே போயி கூப்பீட்டு வரேன்”, என்றவன்

“லீவு முடியறப்பவா அத்தை இங்க வராக?”, என்று அடுத்து தனது வினாவை முன் வைத்திருந்தான் பேரன்.

“இல்லைபா.  புஷ்பா மகளை இங்க காரைக்குடியில சேக்கப் போறோம்.  அதுக்குத்தான் மாப்பிள்ளை அந்தப் புள்ளைய மட்டும் கூட்டிட்டு வராக”, பேத்தியின் நினைவில் சோகமாகவே கூறினார்.

“அதுக்கு எதுக்கு ஐயா வருத்தமாச் சொல்றீங்க.  சென்னையில இருந்து இங்க கொண்டு வந்து ஏன் சேக்குறாக?”, என்ற பேரனின் கேள்விக்கு, மருமகனின் பணி மாறுதல் பற்றிய விளக்கங்களை கூறியிருந்தார் தங்கவேலு.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டவன், “நீங்க வருத்தப்படாதீக ஐயா.  இங்க சின்னப் புள்ளைகளோட சேந்து அந்தப் புள்ளையும் இருந்துக்கும்.  நீங்க விசனப்பட இதுல ஒன்னுமில்லை”

“இதுவரை நம்ம யாருகிட்டயும் அது வந்து இருந்ததில்லை சங்கரு.  அதான் மனசுல ஒரே வாதனையா(வேதனை) இருக்கு”, எனத் தனது மனதில் உள்ளதைப் பேரனிடம் பகிர்ந்திருந்தார்.

“எதுனாலும் பாத்துக்கலாம் ஐயா, மனச போட்டு உழட்டாதீக”, என்றுவிட்டு வீட்டிற்குள் சென்றிருந்தான் சங்கர்.

ஜெய்சங்கருக்கு மூன்று வயது இருக்கும்போது புஷ்பா, வெற்றியின் திருமணம் நடந்திருந்தது.  அதன்பிறகும் புஷ்பாவை பெரும்பாலும் அவன் இங்கு வீட்டில் கண்ட ஞாபகம் இல்லை.

விசேசங்களில் வந்து நிற்பவர், எப்போது கிளம்பினார் என்றே யாருக்கும் தெரியாது என்கிற நிலையில் வருவதும், போவதும் சரியாக சங்கரும் உணர்ந்ததில்லை.

ஜெய்சங்கரை மிகவும் இளம் பிராயத்திலேயே, அவனது தாய்மாமாவின் பொறுப்பிலும், அதன் பிறகு விடுதியிலும் தங்கிப் படிக்க அனுப்பியிருந்தனர்.

அதனால் புஷ்பாவின் பிரசவ காலங்களில்கூட, சங்கர் புஷ்பாவைக் கண்ட நினைவு இல்லை.

கேள்விப்பட்ட நிகழ்வாகவே இதுவரை புஷ்பா பற்றிய விடயங்கள் அவனுக்கு தெரிய வந்திருந்தது.

பாஞ்சாலங்குறிச்சி நாயகி, ‘மதுபாலா’ வின் சாயலில் இருக்கும் தனது புஷ்பா அத்தையை நினைத்தவனுக்கு, ‘எல்லா அத்தையும் இங்க வந்து போற மாதிரி அவுக ஏன் நம்ம வீட்டுக்கு வர மாட்டிங்கறாங்க’ என்கிற இத்தனை நாட்கள் வழமைபோல எழுந்த கேள்வி இன்றும் எழுந்து மறைந்தது.

அதைப்பற்றி யாரிடமும் கேட்கவும் அவனுக்கு பிரியமில்லை.

புஷ்பா அத்தையின் மீது சிறுவயதிலேயே காரணம் அறியாத அன்பு இழையோடியிருந்தது சிறுவனுக்கு.  அது இன்றளவும் குறையவில்லை.

தனது தாய் சசிகலாவைத் தேடிச் சென்றவன், வெற்றி மாமாவும், அவரது மகளும் வரும் விடயத்தைக் கூறிவிட்டு, அதிகாலையில் மானாமதுரைக்கு அவர்களை அழைக்கச் செல்ல வேண்டியிருப்பதைக் கூறினான்.

சசிகலாவும், வெற்றியும் சின்னம்மா, பெரியம்மா பிள்ளைகள்.

வெற்றிச் செல்வனுக்கு, சசிகலா சின்னம்மாவின் மகள், தங்கை உறவு. 

ஜெய்சங்கரின் தந்தை, ஹரிதாசன், சசிகலாவின் திருமணத்திற்கு முறையாகச் சம்மதம் வாங்கி, முன்னின்று செய்தவர், வெற்றிச் செல்வனே.

அந்தஸ்து பேதமிருந்தாலும், அனைவரிடமும் இன்முகமாக பேசுபவர் ஹரிதாசன்.

ஹரிதாசனுக்கு, தனக்கு இளையவரான வெற்றிச்செல்வனுடன் நல்ல இணக்கமான உறவு இளவயது முதலே இருந்தது.

தூரத்து உறவினர்கள் என்ற முறையில் காணும்போது நன்றாக பேசிக் கொள்வார்கள்.

உறவுக்காரத் திருமணத்தில் சசிகலாவைக் கண்டவர், பெற்றோர்களிடம் கூற, முதலில் மறுத்தவர்கள் பிறகு சசிகலாவின் வீட்டில் சென்று பெண் கேட்டனர்.

சசிகலாவின் பெற்றோர், அந்தஸ்தைக் காரணமாகக் காட்டி சசிகலாவைத் தர மறுத்துவிட்டனர். 

ஹரிதாசனின் வசதிக்குத் தகுந்தவாறு தங்களால் சீர் செய்ய இயலாது என்று காரணம் கூறி மறுத்திருந்தனர்.

ஹரிதாசனுக்கு, சசிகலாவைக் கண்டதும் காதல் என்ற நிலையில் உண்டான பித்தம் தெளிய, அடுத்து தொடர்பு கொண்டது வெற்றிச்செல்வனையே.

“நீ சொல்லு வெற்றி.  நீ எடுத்துச் சொன்னா கண்டிப்பா உங்க சித்தி வீட்டுல அந்தப் பொண்ணை எனக்கு கட்டிக் கொடுப்பாக”, என்று வெற்றியை தொந்திரவு செய்தே தனது திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தார் ஹரிதாசன்.

வந்த இடத்தில் மாமியார், மருமகள் பிரச்சனை எதுவும் வந்திருக்கவில்லை.  கணவர் மட்டுமே பிற்பாடு சசிகலாவின் பிரச்சனையாகியிருந்தார்.

மகனின் பேச்சில் அண்ணன் வருவதை அறிந்தவருக்கு, பழைய நினைவுகள் வந்து போக, அசைபோட்டவாறே அன்று உறங்கச் சென்றார், சசிகலா.

‘எய்தவன் எங்கோயிருக்க, அம்பை நோவதில் எந்தப் பலனும் இல்லை’ என்பதை அறிந்திருந்தவர், அனைத்தையும் ஒதுக்கிவிட்டு உறங்கத் துவங்கினார்.

 

விடியல் சொன்ன செய்தி என்ன?

அடுத்த அத்தியாத்தில் காணலாம்.

error: Content is protected !!