nna3a

nna3a

நீயும் நானும் அன்பே…

அன்பு-3A

நவீனா குளித்து வெளி வரவும், புஷ்பாவின் தங்கை மகள்களில் இளையவளான வரலெட்சுமி, நவீனாவின் வருகையை அறிந்து, அவளைத்தேடி வரவும் சரியாக இருந்தது.

நவீனாவைவிட மூன்று வயது இளையவள் அவள்.  நவீனாவைக் கண்டவுடன் வாயெல்லாம் பல்லாக, “அக்கா! நீ பாக்க ரொம்ப அழகா இருக்க!”, என்று முகத்திற்கு நேராகவே புகழ்ந்திருந்தாள்.

“நீ மட்டும் என்னவாம்! சும்மா ஏஞ்சல் கணக்கா இருக்கே!”, என்று வழமையான துடுக்குத்தனம் வெளிப்பட பேசியிருந்தாள்.

பெரும்பாலும் விளையாட்டுத் தோழர்களோடு கிண்டலாக பேசி பழகியிருந்தவளுக்கு, வாழைப்பழத்தில் வைத்த காலைப் போல எதிர்பாராமல் வாய் வார்த்தை வழுக்கி வந்திருந்தது.

“நிசமாவாக்கா!”, என்று நவீனாவின் வார்த்தையை நம்பிக் கேட்ட சின்னவளைப் பார்த்து, தனது பொய்யான சமாளிப்பால் மனம் வருந்தியிருந்தது.

‘இவளிடம் இனி இப்படி விளையாடக்கூடாது’ என்று தனக்குள் தீர்க்கமாக எண்ணிக்கொண்டாள் நவீனா.

“இதுல பொய்யெல்லாம் வேற சொல்லுவாங்களா?”, தான் கூறியதை அவளை நம்ப வைக்கும் முயற்சியில், வேறு வழி தெரியாமல் செய்வதைத் திருந்தச் செய்ய முயன்றிருந்தாள் பெண்.

நவீனாவிற்கு, வரலெட்சுமியின் புகழ்ச்சி புதிது.  தான் வளர்ந்த இடத்தில், தன்னுடன் இதுவரை பழகிய யாரும் முகத்திற்கு நேராக வரலெட்சுமியைப் போல மனதில் உள்ளதைப் பட்டெனப் பகிர்ந்ததில்லை.

இங்கு வந்து சென்ற காலங்களிலும், தாயாரின் பின்னோடு தெரிந்தவளுக்கு யாரைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருந்தது.

ஒரு நிமிடம் தாயிடமிருந்து தன்னைப் பிரித்து வைத்து, சாதாரணமாக நாலு வார்த்தை பேசுவதற்குள், பேசியவரை, ‘போதும்டா சாமி, இனி இந்தப் புள்ளைகிட்ட வச்சிக்கிறக் கூடாது’ என்று யோசிக்கிற நிலையை உண்டாக்கிவிடுவாள் பெண்.

தனித்திருந்த நவீனாவை இன்று இலகுவாக அணுகியிருந்தாள் வரலெட்சுமி.

உடை மாற்றி, தலைமுடியை உலர்த்தத் துவங்கினாள் நவீனா.

உடன் நின்று வளவளத்தபடியே, “உங்க முடியும் நல்லா நைசா அழகா இருக்கு!”, என்று அதைக் கைகளில் பிடித்துப் பார்த்தவாறு ரசனையோடு கூறிய வரலெட்சுமி, சகோதரியின் முடியை உலர்த்துவதற்கும் உதவினாள்.

அடுக்களையின் நிலையை அறிய அவ்வப்போது சென்று, கண்டு வந்தவள், “நீ வரேன்னுதான் ஆச்சி இன்னிக்கு ஆப்பம் எல்லாம் போட்டுருக்காக அக்கா!”, சிரித்தபடியே நவீனாவிடம் அன்றைய காலை ஆகாரம் பற்றிய தகவலை ஆதாரம் இல்லாமல் விசேஷக் குரலில் மெதுவாகப் பகின்றாள். 

“அப்டியா!  நீயா எதாவது வந்து சொல்லாத! நான் வரலைனா அப்ப என்ன செய்வாங்க ஆச்சி?”

“இட்லி, தோசைனு போடுவாங்க. ஆப்பம், முக்குளி எல்லாம் இப்டி யாராவது வீட்டுக்கு வந்தாதான் பண்ணுவாங்க.  இப்ப நீ சாப்ட வந்தாதான் எனக்கும் குடுப்பாக! சீக்கீரம் வாக்கா!”, என்று எந்தக் கிலேசமும் இல்லாமல், கெஞ்சும் குரலில் தன்னை அழைத்தவளைக் கண்டு நவீனாவிற்கு சிரிப்பு வந்திருந்தது.

தன் தாய், உணவை தயார்செய்து வைத்துக் கொண்டு, ‘வந்து சாப்பிடு’ என்று பலமுறை அழைத்தும், வேண்டா வெறுப்பாக சாப்பிடப் போகும் தன்னை நினைத்துக் கொண்டாள்.

வரலெட்சுமியின் உணவின் மீதான ஆர்வம் கண்டவளுக்கு, “அப்ப பிரேக்ஃபாஸ்டுக்கு எப்பவும் என்ன சாப்பிடுவ உங்க வீட்ல?”, நவீனா

“பிரேக்கிஸ்டுனா என்னக்கா?”, தமிழ்வழிக் கல்வியில் அந்த ஊரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் பயிலுபவளுக்கு இன்னும் ஆங்கில வார்த்தைகள் பற்றிய புலமை இல்லாததால், வெகுளியாக தமக்கையிடம் கேட்டிருந்தாள்.

தங்கையின் பேச்சினைக் கேட்டவளுக்கு ‘ஐயோடா’ என்றிருந்தது.

“அது…என்னனா… காலைச் சாப்பாடா… வீட்ல உனக்கு சித்தி என்ன செய்து குடுப்பாங்கனு கேட்டேன்!”, அவளின் நிலை புரிந்து, அதற்குரிய பொருளை இயம்பினாள் நவீனா.

‘இதுவே மெட்ராஸ்லனா, வேற மாதிரி மேனேஜ் பண்ணிருக்குங்க புள்ளைங்க.  இவ இப்டி நம்மகிட்ட வந்து ஓபனா கேக்குறாளே!’ என எண்ணத் தோன்றியது நவீனாவிற்கு.

“அதுவா பழையதுதான் குடுக்கும் அம்மா! எப்பவாவது விசேசம், பண்டிகை அப்ப மட்டும், இட்லி, தோசை போடும்!”, என்று வரலெட்சுமி கூற ஆச்சர்யமாக இருந்தது பெண்ணுக்கு.

இந்தச் செய்தி நவீனாவிற்கு புதிது.

தன் தாய் பெரும்பாலும், இட்லி தோசையையும், ஒரு மாற்றம் வேண்டி அவ்வப்போது, சப்பாத்தி, அடை, வெண்பொங்கல், பூரி என இன்னும் உணவகத்தில் உள்ளதுபோல காலை உணவாக எதாவது ஒன்றைச் செய்து தந்ததை உணர்ந்தவளுக்கு எத்தனை மாற்றங்கள் அங்கும், இங்கும் என எண்ணத் தோன்றியது.

எதையும் மறைக்காமல் உள்ளதை உரைத்தபடியே வந்து தனது கரம் பற்றியிருந்தாள் வரலெட்சமி.

“சீக்கிரம் வாக்கா! எனக்கு ஆப்பம் பசிக்குது!”, என்று  அழைத்தவளின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு அவளையும் மீறி சிரித்திருந்தாள்.

“வயிறு பசிக்குதுன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன வித்தியாசமா ஆப்பம் பசிக்குது உனக்கு!”, என்றவள், கரத்தை விடாமல் பற்றி அடுக்களை நோக்கி இழுத்தவளைப் பார்த்து,

“நானே வரேன். கையை விட்டுட்டு நீ முன்னே நட!”, என்று வரலெட்சுமியின் கைகளுக்குள் மாட்டிய கையை தானாகவே உருவிக் கொண்டாள்.

தனக்கு முன்பாக ஒற்றைக்கால் மாற்றி, மாற்றி குதித்தபடியே தனது மனமகிழ்ச்சியை உடல்மொழியில் காட்டியவாறு ஓடியவள், “ஆச்சி! அக்கா வந்திருச்சு! நீங்க முதல்ல சாப்பிட எம்பங்கைக் குடுங்க!”, என்றவாறு சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள் வரலெட்சுமி.

அமர்ந்தபடியே தனதருகே அமருமாறு சைகை காட்டியவளின் அருகே போய் நிதானமாகவே அமர்ந்திருந்தாள் நவீனா.

அதற்குள் சிறு பட்டாளமே அங்கு வந்திருந்தனர். வந்திருந்தவர்களை சந்தித்த ஞாபகம் இருந்ததே அன்றி, யாரின் பெயரும் தெளிவாக நினைவில் இல்லை நவீனாவிற்கு.

அனைவரையும் பார்த்து நட்பாக சிரித்திருந்தாள் பெண்.

பருவமெய்திய பெண்களைத் தவிர, மூன்று குடும்பத்து பெண்மக்களின் இளவாரிசுகள் அனைவரும் அங்கு கோடை விடுமுறையைக் கழிக்க வந்திருந்தனர்.

பருவமெய்திய பெண்ணை வேறெங்கும், தனது தாய்வீடே ஆனாலும், (தாய்)தானில்லாத வேளையில் தனித்து தங்கும்படி விடுவது கிராமத்தில் பழக்கமல்ல!

ஆச்சி வீட்டிற்கு, இளையவளான வரலெட்சுமியைப் போல, பருவமெய்திய காரணத்தால் வர முடியாத தனது அவலநிலையை எண்ணி, வருத்தத்தில் மூத்தவள் ராஜலெட்சுமி வாடிய வதனத்தோடு வீட்டில்தான் இருந்தாள்.

பதினைந்து நபர்கள் தாராளமாக அமரும் வகையில் இருந்த அந்த இடத்தில், அடுத்தடுத்து அனைவரும் வந்து அமர, ஆச்சியின் சொற்படி, அனைவருக்கும் வேண்டியதை எடுத்து வந்து தந்தார், சமையல்கட்டில் உதவும் செல்வி.

சிரிப்பும், கும்மாளமுமாக அனைவரும் உண்டு முடித்து வெளியே கிளம்ப, நவீனாவையும்… வரலெட்சுமி, உடன் வந்து விளையாட அழைத்தாள்.

மற்ற நேரமாக இருந்திருந்தாள் நவீனாவும் விளையாடப் போயிருப்பாள்.  முந்தைய தினமே தாயின் வாய்வழியே அறிந்திருந்த தகவலின்படி அவளுக்கு வேறு வேலை இருப்பதை உணர்ந்து தயங்கி நின்றிருந்தாள்.

வரலெட்சுமியின் அழைப்பைக் கவனித்திருந்த ஆச்சி நன்முல்லை, “நீ போயி விளையாடறதா இருந்தா விளையாடு!  அந்தப் புள்ளைக்கு டவுனுல கொஞ்சம் சோலியிருக்கு!”, என்று வரலெட்சுமியை மட்டும் அனுப்பியிருந்தார்.

—————————————–

வெற்றிச்செல்வன், நவீனா இருவரும் அவளைப் பள்ளியில் சேர்க்க வேண்டி காரைக்குடிக்கு கிளம்பினர். உடன் கிளம்பிய தங்கவேலுவைக் கண்ட வெற்றி,

“நீங்க எதுக்கு மாமா அலைஞ்சுகிட்டு, காலைல மாதிரியே (ஹரிதாசன்)தாஸ் மச்சான் பையனை கூட கூட்டிட்டுப் போறேனே!”, என்க

“அவன் அவங்க ஆத்தா(அன்னம்மாள்) கூட கோவமா இருக்கான் மாப்பிள்ளை.   வீட்டுல ஒரே சத்தமாம்.  மதினிட்ட போயி சங்கரு எங்கனு இப்போதான் கேட்டேன்.  வழக்கம்போலத்தான் உம்பேரன் கொதிச்சுப் போயி வெளியே கிளம்பிட்டான் தங்கம்னு, மதினி சொன்னாங்க!

………………………..

சின்ன புள்ளைங்க தப்பு பண்ணா பெரியவங்க கண்டிக்கலாம்.  இங்க பெரியவங்களே தப்பு பண்ணா, சின்னவன் அவன் என்ன செய்வான் பாவம்!  அதான் கத்திட்டு, பய கோபமா வெளியே கிளம்பிட்டான்போல!

விஸ்வாமித்ரனையே பய மிஞ்சிருவான்… கோவத்துல!”, என்று தங்கவேலு மருமகனிடம் விடயம் பகிர்ந்தார்.

அதற்குமேல் அவர்கள் வீட்டு விடயம் பற்றிக் கேட்பது அநாகரிகமாகத் தோன்றியதால், வெற்றியும் அமைதியாகி இருந்தார்.

நவீனாவை பள்ளியில் சேர்த்துவிட்டு, நோட்டு புத்தகங்களை பெற்றுக் கொண்டு, பள்ளிச் சீருடைக்கான துணிகளை வாங்கித் தைக்க அளவு கொடுத்துவிட்டுத் திரும்பியிருந்தனர்.

காரைக்குடி சென்று மகளுக்கு வாங்கித்தர வேண்டிய லிஸ்டை கையில் கொடுத்தனுப்பியிருந்தார், புஷ்பா.

திரும்பும் வழியில், லிஸ்டில் இருந்த அனைத்தையும் வாங்கிக் கொண்டு சுமார் இரண்டு மணியளவில் வீடு திரும்பியிருந்தனர்.

நவீனாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலை.  பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவும் முடியாமல், தந்தையோடு அமர்ந்து இயல்பாகப் பேசவும் முடியாமல், ஒரு புரியாத மனோநிலையில் அவளுக்கே புதிராக இருந்தாள்.

வந்த வேலை ஒரு வழியாக முடிந்திருக்க, அன்று மாலையில் மெட்ராஸ் கிளம்புவதாக இருந்தார் வெற்றி.

நவீனாவிற்கு தந்தை கிளம்பும் நேரம் நெருங்க, நெருங்க, முந்தைய நாளைவிட இன்னும் அதிகம் மூச்சடைக்கும் உணர்வு.

கிளம்பும் வேளையில், நவீனாவையும் அழைத்துக் கொண்டு மருமகனை வழியனுப்ப மானாமதுரை புறப்பட்டிருந்தார் தங்கவேலு.

வயதானவரை ரொம்ப அலைய விடுகிறோமோ என்ற எண்ணத்தில், “இன்னும் தாஸ்மச்சான் பையன், வீட்டுக்கு வரலையா மாமா?”, என்று மாமனாரிடம் கேட்டிருந்தார் வெற்றி.

“அவன் கோவம் அவ்வளவு சீக்கிரத்துல இறங்காது மாப்பிள்ளை!

அவ்வளவு சீக்கிரத்துல பயலுக்கு கோவம் வராது!  வந்துட்டா அது சரியாகிறதுக்குள்ள எல்லாத்தையும் சாகடிச்சிரும் பயபுள்ள!

பாசக்கார பயதான்!  

ஆனா எதுவும் கண்ணுக்கெதுரே தப்புன்னா இப்டித்தான் நடந்துக்குவான்! 

இதுல அவனை மட்டுமே குறை சொல்ல முடியாது!  அவன் கடந்து வந்த பாதை அப்டி!”, என்று மிகவும் வருத்தமான குரலில் மருமகனுடன் பகிர்ந்தார்.

வெற்றிக்கும் சங்கரின் மனநிலையை ஒருவாறு கணிக்க முடிந்தது.  வருத்தப்பட மட்டுமே முடிந்ததால், சங்கரைப் பற்றிய தொடர் சிந்தனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தார் வெற்றி.

வெற்றி தனது வயோதிகத்தை உணர்ந்தே தன்னை மறுக்கிறார் என்பதை உணர்ந்த தங்கவேலு,

“எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை மாப்பிள்ளை! ஒரு நாளைக்கு தான!”, என்று அவரே வண்டியை எடுத்திருந்தார்.

“காலையில இருந்து உங்களுக்கு ஒரே அலைச்சலா இருக்கேன்னு பாத்தேன் மாமா”, என்று வெற்றி மனதில் உள்ளதை மறையாமல் கூறியிருந்தார்.

“என்னைக்கோ ஒரு நாளு அலைஞ்சா ஒன்னும் செய்யாது மாப்பிள்ளை! நீங்க மனசப்போட்டுக் குழப்பாம கிளம்புங்க!”, என்று பேத்தியையும் அழைத்துக் கொண்டு மானாமதுரையை நோக்கிப் பயணமானார் பெரியவர்.

நவீனா தனக்குள் எழுந்த கலவையான உணர்வுகளைக் கையாள வழி தெரியாமல், துக்கத்தைத் தூர நிறுத்தி, அழுகையையும் அனாகதத்தில் அடக்கியதால், தலைவலி துவங்கியிருந்தது.

ஆனாலும், ஸ்திரமாக இருப்பதுபோலக் காட்டிக் கொண்டாள் பெண்.

ஒரு வழியாக பெண்ணை விட்டுவிட்டு அரை மனதோடு வெற்றி மெட்ராஸை நோக்கிக் கிளம்பியிருந்தார்.

வெற்றிக்கோ, மகள் ‘இங்க இருக்க மாட்டேன்பா!’ என்று ஒரு வார்த்தை தன்னிடம் கூறினால், பணம் போனாலும் பரவாயில்லை என, உடன் அழைத்துச் சென்று விடுவோம் என்றே நினைத்திருந்தார்.

எந்த உணர்வையும் காட்டாமல் நின்ற மகளை, தனது தைரியலெட்சுமியாக எண்ணி உச்சி முகர்ந்து, “சமத்தா இருந்துக்கடா குட்டிம்மா!”, என்றுவிட்டு. மாமனாரிடமும் கூறிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

மகளின் மனமாற்றத்தால், தான் எடுக்கும் முடிவைக் கேட்டு பெரியவர்கள் சமரசம் செய்தாலும், மனைவி புஷ்பா மற்றும் மகனை காரைக்குடிக்கு அனுப்பிவிடுவோம் என்று ஒரு முடிவோடு இருந்தார் வெற்றி.

அதற்கு எல்லாம் எந்தத் தேவையும் இல்லாமல் செய்தவள், பெற்றவர்களைத் தேடிய மனதைச் சமாளிக்கும் வழி தெரியாமல், உயரத்தில் இருந்து தரையில் விழுந்த கண்ணாடியிலிருந்து சிதறுண்ட துகள்கள்போல, தனக்குள் நொறுங்கியிருந்தாள்.

வீடு திரும்பியவள், தலைவலியென அறைக்குள் முடங்கி, தனக்குள் அழுது தீர்த்தாள்.

‘அம்மா, அப்பான்னு எல்லாரும் இருந்தும் யாருமில்லாதவளபோல இப்டி தனியா வந்து தனிமையில அழணும்னு இருக்குபோல!’, என தனக்குள் மறுகியிருந்தாள் பெண்.

அறைவாசலில் வந்து ‘பிள்ளைகளோடு விளையாடு! பேசிக் கொண்டிரு!’ என்று ஒருவர் மாற்றி மாற்றொருவர் என பெரியவர்கள் வந்து இதமாக அழைக்க

‘இல்லை! எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு!’ என்று தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் முடம்போல முடங்கியிருந்தாள்.

வரலெட்சுமிதான் அவ்வப்போது அறைக்குள் வந்து எட்டிப் பார்த்து, நவீனாவைப் பற்றிய நவீன செய்திகளை ஆச்சிக்கு மட்டும் கேட்கும் வகையில், தனது கீச்சுக்  குரலில் ஒலிபரப்பியவாறு இருந்தாள்.

ஆம், இனி பள்ளி திறக்கும் நாள்வரை நவீனாவுடன் தங்கப் போவதாக வீட்டில் தாயிடம் கூறிவிட்டு, அன்று காலையிலேயே ஆச்சி வீட்டை நோக்கிக் குதூகலமாகக் கிளம்பி வந்திருந்தாள் வரலெட்சுமி.

ஒரு வாரத்திற்கு முன்பே நவீனாவின் வருகையைப் பற்றித் தெரிந்திருந்தவள், அந்நாளை எதிர்பார்த்திருந்து தெளிவாக அன்று வந்திருந்தாள்.

வரலெட்சுமிக்கு தனது தமக்கையைவிட, என்றாவது ஊருக்கு வந்து செல்லும் நவீனாவின் மீது எப்பொழுதுமே அளவுகடந்த பாசம்.

பேச்சு சத்தம் அவ்வப்போது முனுமுனுப்பாக நவீனாவிற்குக் கேட்டாலும், எதையும் வெளிக்காட்டாமல், கண்களை மூடிக்கிடந்தவளை யாரும் தொந்திரவு செய்யவில்லை.

‘சின்னப்புள்ளை தான…! இதுவரை இப்டி வந்து தனியா இங்க தங்குனதில்லல…! ஒரு நாள் அப்டிதான் கஷ்டமா இருக்கும்.  நாளும் பொழுதும் போகப் போக எல்லாம் சரியாகிரும்!’ என்று தங்கவேலு, வளரும் பிள்ளைகள் பற்றிய மனசோதிடத்தை மனைவியிடம் கூறியிருந்தார்.

கணவரின் கூற்று, அவரைத் தேற்றவே அன்றி தனக்கல்ல என்பதை அறுதியிட்டு அறிந்திருந்த நன்முல்லை ஆச்சி அமைதியாகவே கேட்டிருந்தார்.

நேரம் கடந்தது.  இரவு ஏழு மணி வாக்கில் கோபம் சற்று மட்டுப்பட வீடு திரும்பிய சங்கர், நேராக தங்கவேலு ஐயாவை வந்து சந்தித்தான்.

“மாமா ஊருக்கு கிளம்பிட்டாங்களா ஐயா!”, என்று மரியாதை நிமித்தமாக விசாரித்தான்.

“ம்… உன்னையத்தான் தேடுனாக! சொல்லிட்டுப் போகறதுக்கு தான்!  நீதான் வெளி வேலையா எங்கேயோ ரொம்ப தொலைவுல போயிட்ட போலயே!”, எல்லாம் அறிந்திருந்தாலும், எதையும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் பேரனிடம் பேசினார்.

“இல்லை ஐயா”, என்றவன் அன்று வீட்டில் நடந்தது எதையும் மறைக்காமல் தங்கவேலுவுடன், தண்மையாகவே பகிர்ந்திருந்தான்.

பேரன் கூறுவதை அமைதியாக கேட்டிருந்தவர், சங்கர் கூறி முடித்ததும், “மதினியும் என்னப்பா பண்ணுவாங்க.  அவங்க வயசுக்கு மகனைப் பாக்க, கூட இருக்க, ஆச வரும்ல ராசா!  தாஸூக்கிட்ட சொல்லி ஒரு எட்டு வந்து ஆத்தாவைப் பாத்துட்டுப் போகச் சொல்லு!”, என்று தனது பக்கச் செய்தியாக பேரனிடம் கூறிவிட்டு

“ரொம்ப கிறக்கமா தெரியுறியே சங்கரு! இன்னிக்கு காட்டுல வேலை ரொம்பவா, சாப்பிட்டியா எதாவது? முல்லைய எதாவது கொண்டு வரச் சொல்லட்டா?”, என்று தனது பேச்சின் திசையை முற்றிலுமாக மாற்றியிருந்தார் பெரியவர்.

பெரியவரின் பேச்சில் விடயம் புரிந்தாலும், “எதுவும் இப்ப வேணா ஐயா”, என்றவன் மனம் இலேசாக உணர்ந்து, நடப்பிற்கு வந்திருந்தான்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கிருக்க, நவீனாவைக் காணாமல் விழியால் துழாவி கிடைக்காமல் போகவே, “என்ன ஐயா, நம்ம புஷ்பா அத்தை மக… அந்தப் புள்ளையக் காணோம்!”, என்று கேட்டான்.

“அதுக்கு அவக அப்பா ஊருக்கு கிளம்புனதுல கொஞ்சம் மனச்சங்கடம் போலயா!  அதுதான் ஸ்டேசனுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தலைவலின்னு போயி படுத்திருக்கு!”, என்றார் பெரியவர்.

“புள்ளைகளோட புள்ளையா விளையாண்டா எல்லாம் சரியாப் போகும்னு சொல்லி, எழுப்பி கூட்டிட்டு வரேன்யா”, என்றவன் நிற்காமல் நவீனாவின் அறையை நோக்கிச் சென்றிருந்தான்.

அறை வாசலில் போய் நின்றவன், “ஏய் புள்ளை!”, என்றழைக்க

அசையாமல் படுத்திருந்தவளை கண்டு, வரலெட்சுமியைக் கொண்டு பார்க்கச் சொன்னான்.

“வரா இங்க வா, உங்கக்கா என்ன செய்யுதுனு வந்து பாரு புள்ளை”, என்று கூற உடனே சங்கரின் பேச்சைக் கேட்டு சிட்டெனப் பறந்து வந்தவள், நவீனாவை அருகில் சென்று கவனித்தாள்.

“அக்காவுக்கு தலைவலினு சொல்லிச்சு மச்சான்.  அதான் தூங்குது”, என்றவள் அதற்குமேல் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால்,

“நான் விளாட போறேன் மச்சான்”, என்றபடியே அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டு அசையாமல் படுத்திருந்தவள், “புள்ளையா?  எனக்குன்னு பேரு இல்லையா”, என்று அந்த தலைவலிக்கு இடையேயும் நினைத்தவாறே, மூடிய இமைகளுக்குள் கண்மணிகள் அசைய, அசையாமல் படுத்திருந்தாள்.

வரலெட்சுமி சென்று சிறிது நேரம் அசையாமல் நின்று பார்த்தவன், “தூங்குற புள்ளைய சட்டுனு எழுப்பிறலாம்.  ஆனா தூங்கற மாதிரி நடிக்கறவங்களை அவ்வளவு சீக்கிரத்துல யாராலயும் எழுப்ப முடியாது!”, என்று நவீனாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு நகர்ந்திருந்தான்.

‘பெரிய ஜேம்ஸ்பாண்ட் 007 துப்பறிஞ்சிட்டாரு!’ என மனதில் அந்த வலியோடும் சங்கரின் பேச்சைக் கேட்டு நினைத்திருந்தாள்.

“ஆத்தா, அந்தப் புள்ளைக்கு பசிக்கு எதாவது குடுத்து தூங்க வைங்க!”, என்று சத்தமாக முல்லையிடம் கூறியபடியே, அவர்களின் பகுதிக்கு சென்றிருந்தான்.

பேரன் கூறிவிட்டுச் சென்றது ஒருபுறம் இருக்க, ஆச்சிக்கும் மனசு கேட்காமல், இரவு ஒன்பது மணியளவில் பேத்தியை வந்து கண்டவருக்கு, எல்லாம் புரிந்தது.

குழந்தை உள்ளத்தோடு, குதூகலமாகத் திரிந்தவளின் மனதில் விழுந்த இந்த பிரிவு உண்டாக்கிய வேதனைகளை, அவள் படுக்கையில் சுருண்டு படுத்திருந்த விதத்தைக் கொண்டே கணித்திருந்தார்.

கையில் எடுத்து வந்திருந்த பாலை, நவீனாவை எழுப்பி கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துவிட்டு, சிறிது நேரம் தலையில் அமிர்தாஞ்சனை எடுத்து நெற்றிப் பொட்டில் அழுந்தத் தேய்த்தார்.  பிறகு முதுகில் தட்டிக் கொடுத்தவாறே அருகில் அமர்ந்திருந்தார்.

அன்பான கவனிப்பில் வலி குறைந்திட, அயர்ந்து உறங்கத் துவங்கியவளை விட்டுவிட்டு, அறையிலிருந்து வெளியேறினார் முல்லை.

————————-

error: Content is protected !!