nna3B

nna3B

நீயும் நானும் அன்பே…

அன்பு-3B

 

உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் ஹரிதாசனின் (தற்போதைய) துணைவியை சேர்த்திருப்பதாகவும், உதவிக்கு பெண்கள் யாரேனும் வர முன்வந்தால், மெட்ராஸிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டு அன்று காலையில் தொலைபேசி மூலம் அன்னம்மாளுக்கு  செய்தி வந்திருந்தது.

ஹரிதாசனே தனது தாயிக்கு அழைத்துப் பேசியிருந்தார்.

“அவளுக்கு ரொம்ப முடியல!  பொண்ணை தனியா விடவும் மனசில்ல!  கூடவே ஆஸ்பத்திரில வச்சிக்கவும் வசதிப்படல!  யாராவது வந்து எம்பொண்ணை என் வீட்ல இருந்து கவனிச்சிட்டா, மிருணாவுக்கு சரியாகறவரை எனக்கு உதவியா இருக்கும்மா!”, என உதவி கேட்டு அழைத்தவரின் குரலைக் கேட்ட அன்னம்மாள் மனம் இளகியிருந்தார்.

அதை மருமகளிடமும் மறையாது பகிர்ந்திருந்தார்.

சசிகலா தனது பங்காக எதையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளாமல், ‘அப்படியா அத்தை’, என்று பட்டும் படாமல் மரியாதையின் நிமித்தமாக கேட்டுவிட்டு, தாமரை இலையில் ஒட்டாத நீரைப்போல அதைப் பெரிய விடயமாக மனதில் கொள்ளாமல் அகன்றிருந்தார்.ளு

செய்தி கேட்டது முதல், தங்களது வயல்வெளிகளில் பணிக்கு வந்து செல்லும் பெண்மணியை அழைத்துப் பேசியிருந்தார் அன்னம்மாள்.

உதவிக்கு அனுப்பும் பெண்ணுடன், தானும் ஒரு எட்டு மெட்ராஸ் வரை சென்று மகனைப் பார்த்து வர எண்ணினார் அன்னம்மாள்.

கணவனின் மறைவிற்குப் பின் வீட்டுப் பக்கமே வந்திராத தன் ஒற்றை மகனைக் காண மனம் துடித்தது.

‘எப்டியெல்லாம் வளத்த எம்புட்டு சிங்கக் குட்டி, இப்ப ஒத்தைல என்ன பாடு படறானோ’, என தனது மகனைக் காண உள்ளம் ஏங்கினார்.

அன்னம்மாள் பேரனிடம் இதுவிடயம் பகிரவே, எரிமலையாக வெடித்திருந்தான்.

“ஏன் ஆத்தா, உங்களுக்கு இந்த மானம், மரியாதை இதப்பத்தி எல்லாம் எதாவது தெரியுமா? இல்லை தெரியாதா? 

மகன்னு வந்துட்டா, எல்லாத்தையும் மறந்து தூக்கி வீசிட்டு, எங்களைப் பத்தி யோசிக்காம போயிருவீங்களா?” என்று கொந்தளித்திருந்தான்.

கொந்தளிப்பிற்கான காரணம், குருவேல் சொல்லி வளர்த்திருந்த முறைமைகள். 

குருவேலின் கரிசனமான கவனிப்பில், கண்ணியமாக வளர்ந்திருந்தான் ஜெய்சங்கர்.

தாயின் மனநிலையை புரிந்து கொண்டவனால், தனது ஆத்தாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மகனின் கொந்தளிப்பினைக் கண்ட சசிகலா, “அவங்க புள்ளையத்தான போயி பாக்கணும்னு ஆசப்படுறாக.  அதுக்கு அவங்களை எதுக்கு குறை சொல்லுற சங்கரு?” என்று மகனிடம் நியாயம் கேட்கப் போக

“இன்னிக்கு மகனைப் பாக்கப் போவாங்க! அப்புறம் எல்லாமே எம்மகன்தான்னு அங்கேயே உக்காந்துகிருவாக!

இங்க பதினேழு வருசமா நாம கஷ்டப்பட்டத அவங்க வேணா மறந்திருக்கலாம்.  ஆனா என்னால சாகற வரை எதையும் மறக்க முடியாது. 

அவருக்கு இங்க வரணும்னா வந்து அவங்கம்மாவை பாத்துட்டுப் போகட்டும்.  நான் வேணாங்கலை.  ஆனா ஆத்தா அங்க போனா அது நமக்குத்தான் அசிங்கம்”, என்று மகன் கூறவே, மேற்கொண்டு பேச முடியாமல் மௌனியாகி இருந்தார், சசிகலா.

பேரனின் பேச்சில் உள்ள நியாயம் அன்னம்மாளுக்குப் புரிந்தாலும், மகன் தனித்துக் கஷ்டப்படுகிறானே என்று பெற்ற மனம் அடித்துக் கொண்டது.

ஆனாலும் பேரனுடன் பேச்சை நீட்டினார்.  அவன் தனது ஆத்தாவின் வார்த்தைகளைக் கேட்டு எரிமலையாகியிருந்தான்.

நிதானம் இல்லாமல் கோபத்தில் பெரியவர்களிடம் எதுவும் பேசிவிடக்கூடாது என்கிற எண்ணம் எழவும், வெளியே கிளம்பியிருந்தான்.

பகல் முழுவதும், வயல்வெளிகளிலும், மற்ற இதர வேலைகளிலும், கோபம் மறைய வேண்டி, கவனம் செலுத்தியவனுக்கு, பல நிகழ்வுகளின் மனம் ஈடுபட்டு, இயல்பாகியிருந்தான்.

மனம் சற்று அமைதியடைந்தபின் வீட்டை மனம் நோக்க, மனம் அன்று காலையில் முதன் முதலாகச் சந்தித்த நவீனாவை நினைக்க, வீடு திரும்பியிருந்தான்.

வந்தவன் தங்கவேலு ஐயாவின் வீட்டில் சென்று, சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, தங்களது பகுதிக்கு வந்திருந்தான்.

தனது பேச்சைக் கேட்டு கிளம்பாத அன்னம்மாளைக் கண்டவனுக்கு சற்றே இதமாக உணர்ந்திருந்தான்.

உதவிக்கு வந்த பெண்ணையும், அன்னம்மாளையும் மெட்ராஸிற்கு செல்லாமல் தடுத்த ஜெய்சங்கர், தற்போது இரவில் உறக்க வராமல் மொட்டை மாடியில் உலா வருகிறான்.

வேலை எதுவும் இல்லாமல் இருந்த மனதில் காலையில் நடந்த விடயங்கள் வந்து போனது. குழப்பம் மனதில் மீண்டும் வந்து கும்மியடிக்கவே, தனிமையை நாடி மாடிக்கு வந்திருந்தான்.

ஹரிதாசன் ரிட்டையராகி வந்து, மெட்ராஸில் தனது புதிய குடும்பத்தோடு செட்டிலாகியிருந்தார்.

தந்தையைப் பற்றி இளம் வயதிலேயே அறிந்து கொண்டிருந்தவனால், ஒதுங்கி இருக்க முடிந்ததே அன்றி, அவரின் மேல் கொண்டிருந்த கோபம் கடுகளவும் குறையவில்லை.

ஹரிதாசனுக்கு தற்போது பதினைந்து வயதில் ஒரு மகளும் இருந்ததை அறிந்தவன், வெகுண்டு போயிருந்தான் சங்கர்.

இளவயது முதலே வீட்டின் சூழலை உள்வாங்கி வளர்ந்தவனுக்கு, நல்ல பக்குவம் இருந்தது.

தந்தைக்கு தன்னால் உதவ இயலாத மனநிலையில், ஆத்தா எடுத்த முடிவில் குறுக்கே நிற்பதும் தவறோ என்ற எண்ணத்தோடு உறக்கத்தை உணர முடியாமல் உலாவினான்.

நீண்ட நேரம் உலாவியவன் கால்கள் ஓய்ந்திருந்தது.  ஓய்விற்காக, தனது அறைக்குக் கிளம்ப எண்ணி மாடியிலிருந்து இறங்க உத்தேசித்து வர, அதேநேரம் மாடியை நோக்கி யாரோ வரும் சத்தத்தை படிகளில் உணர்ந்து திரும்பினான்.

மூவரின் வீட்டு உள்பகுதியிலிருந்து மாடிக்கு வர தனித்தனியே வழி இருந்தது.  படிகள் அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்ததால், நடப்பதை அமைதியான பொழுதில் மாடியில் இருப்பவர்கள் நன்கு உணரலாம்.

காதின் கேட்கும் திறனை நம்பிக் காத்திருந்தவன் கண்களுக்கு கிடைத்த உருவம், தங்கவேலு ஐயாவின் வீட்டிலிருந்து மேலே வந்திருந்ததைக் கண்டிருந்தான்.

‘இந்நேரத்தில யாரு?  ஆச்சி, ஐயா பெரும்பாலும் மாடிக்கு வரமாட்டாக, சித்தப்பா, சித்தி யாரும் இப்ப ஊருல இல்லை. வேற யாரா இருக்கும்?’ என யோசித்தபடியே,

வெளிச்சம் குறைவாக இருந்த அந்தப் பகுதியில் நின்றிருந்த உருவம் கண்களுக்கு சற்று நேரம் நன்கு புலப்படாமல் இருக்கவே, உருவத்தை நோக்கி நடந்தவாறே,

“யாரது?” என்று சத்தமாகக் கேள்வியெழுப்பினான்.

//////////////

“யக்கா, என்ன நீ இன்னும் எந்திரிக்கலையா? விடிஞ்சு இம்பூட்டு நேரமாவா தூங்குவாக!”, என்ற வரலெட்சுமியின் கேள்வியில் எழுந்தாள்.

முன்னிரவில் தந்தையின் பிரிவில் கலங்கியிருந்தவள், தற்போது முற்றிலுமாக கலக்கத்திலிருந்து மீண்டிருந்தாள்.

பின்னிரவில் தன் கனவில் வந்து வம்பு செய்தவனைப் பற்றியே எண்ணியவாறு, காலைக் கடன்களை செவ்வனே முடித்தாள்.

காலை எழுந்தது முதலே கண்ணில் படாதவனை,

‘எங்க இன்னிக்கு டீடாவையே காணும்’ என 

எண்ணங்கள் பல சங்கரைப் பற்றியே ஓட, தனது காலைப் பணிகளை விரைந்து முடித்தாள்.

கடந்து போன தினத்தில் இருவருக்கிடையே வந்த டா, டீ என்று ஒருவரையொருவர் அழைத்துப் பேசிய நிகழ்வுக்குப்பின், இரண்டு எழுத்தையும் இணைத்து சங்கருக்கு ‘டீடா’ என்று பட்டப்பெயர் சூட்டி, தனக்குள் அவனைப் பற்றி எழும் எண்ணங்களின்போது பெண் அவ்வாறு அழைக்கத் துவங்கியிருந்தாள்.

வரலெட்சுமியோடு அன்று முழுவதும் பொழுது இனிமையாகப் போனது. இடையில் கலாராணி வந்து, தமக்கையின் மகளை நலம் விசாரித்துச் சென்றார்.

அன்று மாலையில் அன்னம்மாளின் மகள்கள் இருவர் வந்து நவீனா நலம் காண வந்து சென்றனர்.

உள்ளூரில் இருப்பதால் அவ்வப்போது தாய் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமே.  தற்போது நவீனா வந்திருப்பதை ஒரு சாக்காக வீட்டில் கூறிவிட்டு வந்து சென்றிருந்தனர்.

ஏற்காடு சுற்றுலா முடிந்து அனைவரும் அன்று மாலையில் வீடு திரும்பியிருந்தனர்.

வீடு இன்னும் களைகட்டியது.  இவளுக்கோ மூச்சு முட்டியது.

மாமன்மார்கள், அத்தைமார்கள், தாத்தா, ஆச்சி என நவீனாவை ஒருவழியாக்கியிருந்தனர்.

அனைவரிடமும் இன்முகமாகப் பேசி, அப்பாடா என்று அறைக்குள் நுழைந்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.  அதற்குள் வரலெட்சுமியின் தலைமையில் புதிய கூட்டமொன்று இவளிருந்த அறையை அன்றிரவு முற்றுகை இட்டிருந்தது.

—————–

நவீனாவை விட மூத்தவனாக இதுவரை சங்கர் மட்டும் இந்த வீட்டில் இருப்பான் என அதுவரை நவீனா நினைத்திருந்தாள்.

மற்றொரு (ராஜவேலுவின் மகன்) மாமாவின் மகனான சாந்தனு,

‘ஏய், நீ எப்ப வந்த? என்ன இங்க நீ மட்டுந்தான் வந்திருக்கியா, அத்தை, நந்தாலாம் வரலையா?’, என வீட்டிற்கு வந்திருந்தவளிடம் மூச்சுவிடாமல் விசாரித்தான்.

வந்தது முதல் நவீனா தவிர அவர்களது வீட்டில் வேறு யாரையும் பார்த்திராததால் அங்ஙனம் கேட்டிருந்தான்.

விடயத்தைக் கூறியவளிடம், தானும் அதே பள்ளியில் படிப்பதாகவும், பத்தாம் வகுப்பு தேர்வின் தேர்ச்சிக்குப்பின் அதே பள்ளியில் கல்வியைத் தொடரப் போவதாகவும் கூறினான்.

பெரும்பாலும், மாமன்மார்களின் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிப்பதால்தான், தன்னையும் அங்கு சேர்த்திருப்பதை தெரிந்து கொண்டாள்.

இவளையும் சேர்த்து ஐவர் அந்தப் பள்ளிக்கு சென்று வரக்கூடிய நிலையில், அனைவரிடமும் அன்பாகவே பேசியிருந்தாள்.

இணக்கத்தன்மையை வளர்க்க வேண்டிய கட்டாயம் உணர்ந்து, அவர்களிடம் இனிமையாவே பேசினாள் நவீனா.

இரவு உறங்கும் நேரம் வந்தும் ஜேஜே என விளையாட்டு மோகத்தில் திரிந்தவர்களை, அதட்டி உறங்க அனுப்பியிருந்தனர் பெரியவர்கள்.

முந்தைய நாளின் கலக்கம் கரைந்திருக்க, நவீனா அன்று எந்தச் சங்கடமும் இன்றி நிம்மதியாக உறங்கினாள்.

——————–

அடுத்தடுத்து வந்த நாட்கள், பேசியோ, விளையாண்டே பொழுதுகள் புலர்வதும், மறைவதுமாகச் சென்றது.

சிறிய பெண்ணாக இருந்தாலும், செய்திக் களஞ்சியமாக வரலெட்சுமி இருந்ததைக் கண்டு அதிசயித்திருந்தாள் நவீனா.

“வரலெட்சுமின்னு, ரொம்ப நீளமா இருக்கு உம்பேரு!  இனி உன்னை வரானு கூப்பிடவா?”, என்று நவீனா கேட்க

நவீனாவின் நவீனமான தனது பெயரில் மகிழ்ந்து வேகமாகத் தலையாட்டியவள்,

“சங்கரு மச்சானும் என்னைய அப்டித்தேன் கூப்பிடுவாக!”, என கொசுறு செய்தியையும் நவீனாவிற்கு கூறி. நவீனாவின் மனதை சற்றே பஞ்சராக்கியிருந்தாள்.

“அப்ப நான் உன்னை வேற பேசு வச்சு கூப்பிடறேன்”, என்று வேகமாக உரைத்தவளிடம்

“இல்லை நீயும், மச்சான மாதிரியே வரானே கூப்பிடுக்கா.  எனக்கு அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு”, என்று கூறியிருந்தாள் அந்த வாண்டு வரா.

“உனக்கு வராதான் பிடிக்குதுனா சரி! அப்டியே கூப்பிடறேன்”, என அதை பொருட்டாகக் கொள்ளாமல் விட்டிருந்தாள்.

தன்னை விட நல்ல பக்குவத்தோடு, அனைவரையும் இலகுவாக அணுகும் வரலெட்சுமியை, புதுமையானவளாகவே, தான் வந்த ஓரிரு நாட்களில் மனதில் இருத்தியிருந்தாள் நவீனா.

வீட்டில் உள்ள பெரியவர் முதல் பிறந்த குழந்தை வரை, பழைய செய்திகள் முதல் இன்று நடப்பது வரை, அவள் பிறக்குமுன் நடந்த நிகழ்வுகள் முதல் இன்றைய நாள் வரை நடக்கும் அனைத்து செய்திகளையும் ஓரளவு அறிந்து வைத்திருந்தாள்.

யார், எப்படி உறவு என எந்தச் சிக்கலான உறவையும் எளிதாகப் புரியும்படி தமக்கைக்கு விளக்கினாள். வயது வித்தியாசமின்றி கேட்பவற்றிற்கு உரிய தகவலை இலகுவாக தன்னிடம் பகிர்ந்து கொண்டவளை ஆவென பார்த்திருந்தாள் நவீனா.

இதெல்லாம் நமக்கு எதுவுமே தெரியலையே!  இவளுக்கு மட்டும் எப்டி தெரியுது.  இந்த ஊருலயே இருந்ததாலா? என்று பலவாறு யோசித்திருந்தாள் பெண்.

கற்றுக் கொள்ளவும், கலந்து கொள்ளவும் நிறைய விடயங்கள் கொட்டிக் கிடந்ததைக் கண்டவள், தன்னை அதனோடு ஐக்கியப் படுத்திக் கொண்டாள்.

//////////////

பள்ளி செல்லும் நாளும் நெருங்கியிருந்தது.

காரைக்குடிக்கு வேலையாகச் சென்ற சங்கரிடம் டெய்லர் தந்த அட்டையைக் கொடுத்து அனுப்பியிருந்தார் தங்கவேலு.

வரும்போது தைத்திருந்த புதுச் சீருடையை மறக்காமல் வாங்கி வந்திருந்தான். முல்லை ஆச்சியிடம் கொடுக்க வந்தவனின் கண்களில் விழுந்திருந்தாள் நவீனா.

நின்றிருந்தவளைக் கண்டு, அவளிடமே

“இந்தா… அளவு சரியா இருக்கானு போட்டு பாத்துக்க!”, என நீட்டியிருந்தான் சங்கர்.

தைத்திருந்த சீருடைகளை வாங்கி வந்து தந்தவனைக் கண்டவள் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

இளக்கமில்லா முகத்துடன், பெண்ணின் முகம் பார்க்காமல் ஆச்சியைப் பார்த்தவாறே தன்னிடம் கொடுத்தவனை, “எதுக்கு இவ்வளவு அலட்சியம்!”, என்று நினைத்தபடியே வாங்கியிருந்தாள்.

மாமன் பிள்ளைகள் ஆகட்டும், சித்தி பெரியம்மாவின் பிள்ளைகள் ஆகட்டும், அனைவருக்கும் ஹீரோவாகவே இருந்தான் சங்கர்.

தோற்றத்திலும் தோரணையோடு இருந்தவனை பாரபட்சமின்றி அனைவருமே ரசிப்பதையும், வராவின் வார்த்தைகள் மூலம் அறிந்திருந்தாள்.

சங்கரைத் திருமணம் செய்து கொள்ள, தனது பெரியம்மா, சித்தியின் மகள்களுக்கு இடையே கடும்போட்டி நடப்பதாகக் கூறிய வராவை வியப்பாக பார்த்திருந்தாள்.

‘டீடாவுக்கு வந்த டீக்கான வாழ்வப் பாரேன்’ எனும்படியான பார்வை அது என்பது புரியாமலே, வரா வாண்டடாக வந்து சங்கரைப் பற்றிய விடயங்களை, பெரியவள் கேட்காமலேயே பகிர்ந்திருந்தாள்.

உடலின் அளப்பறிய உயிராற்றல், முகவசியம், ஜெகவசியத்தை தந்திருக்கும்.

வசியம் என்பது வயதைப் பொறுத்தல்ல.  உயிராற்றலின் திணிவைப் பொறுத்தது.

சங்கரின் வசியத்தோற்றம், பாரபட்சமின்றி, அனைவரையும் அவனிடம் இணக்கமாக இருக்கத் தூண்டியது. இது இயல்பு.

தனக்கு மட்டுமே வம்பனாகத் தெரிபவன், இவர்களுக்கு எப்டி ஹீரோவானான் என்பதையும், அடுத்தடுத்த அவர்களின் பேச்சிலிருந்து கண்டு கொண்டாள் நவீனா.

அன்பும், இதமான பேச்சுகளும், அரவணைத்துச் செல்லும் குணமும், கருணையும் அனைவரையும் அவனிடம் கட்டிப் போட்டிருந்தது. 

அன்பும் கருணையும் இறைவனின் குணம்!

இயல்பாக அக்குணத்தைக் கொண்டவனை, அனைவருமே கொண்டாடினர்.

சிறு குழந்தையைக் கூட வசியம் செய்திருந்தான்.

அதனால் வரா சிறு பெண்ணாக இருந்தாலும், சங்கரைப் பற்றிய வார்த்தைகளைப் பேசிவதில் மகிழ்கிறாள்.

வரலெட்சுமி சில நேரங்களில், “நம்ம சங்கரு மச்சான்…” என ஆரம்பித்து அவனைப் பற்றி பல கதைகளை மகிழ்வோடும், சிரிப்போடும் பகிர்ந்து கொண்டதைப் பார்த்தவளுக்கோ, சங்கரைப் பற்றி எதுவும் கணிக்க முடியாமல் இருந்தது.

‘டீடா விடயத்தை அவன் இன்னும் மறக்கவில்லையோ!’ என நினைத்தவாறே சங்கர் முகத்தை கூர்ந்து கவனித்தாள்.

முகம் தெளிவாக இருந்தது. அது ஆச்சியோடு பேசுவதால் அங்ஙனம் இருப்பதையும் அறிந்துகொண்டாள். 

எதையும் அவனது வதனத்தில் இருந்து கண்டு கொள்ள இயலாதவள், கையில் வாங்கிய துணியுடன், சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவளது அறைக்குள் நுழைந்திருந்தாள்.

சரிபார்த்தவள், அறையை விட்டு வெளியில் வர, ஆச்சியுடன் அலவளாவியவனைக் கண்டவாறே வந்து, “சரியா இருக்கு”, என்று கூறிவிட்டு அகன்றிருந்தாள்.

முகத்தினை உம்மென வைத்துக் கொண்டு, ‘ம்’, என தலையை மட்டும் அவள்பக்கம் ஆட்டிவிட்டு, ஆச்சியோடு இலகுவாக சிரித்துப் பேசியவனைப் பார்த்தவளுக்கு, தன்னை அவன் நிராகரிக்கும் உணர்வு வந்திருந்தது.

‘அப்டியென்ன நான் அன்னிக்கு தப்பா சொல்லிட்டேன்’, என தனக்குள் கேள்வியோடு அறைக்குள் நுழைந்தவள், அன்றைய நாளினை நினைவு கூர்ந்தாள்.

/////////

நவீனா, அன்று என்ன தப்பாகச் சொன்னாள்?

நடந்தது என்ன? அடுத்த அத்தியாயத்தில்…

error: Content is protected !!