உயிர் தேடல் நீயடி 16

காவ்யதர்ஷினி பதற்றத்துடன் தான் அந்த உயர் மட்ட கேளிக்கை விடுதி முன்‌ இறங்கினாள்.

வேறு‌ எங்கும் விபீஸ்வர் இல்லாத பட்சத்தில் அவன் இங்கு தான் இருக்க வேண்டும் என்பது இவளின் கணிப்பு. மாலையில் அவன் இந்த வழியில் சென்றதை கவனித்திருந்தாளே!

ஒருபுறம் அவன்மீது ஆத்திரமும் கோபமும் வந்தது. எத்தனை அலைபேசி அழைப்புகள் ஒன்றிற்கும் அவனிடம் பதில் இல்லை. ரங்கராஜன் பாவம் என்ன செய்வது என்று விளங்காமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். வயதின் சோர்வு வேறு அவரிடம் அதிகமாகவே தெரிந்தது.

வெறுமனே யோசித்து கொண்டிருக்க அவளாலும் முடியவில்லை. ஒரு முடிவோடு இங்கு வந்திருந்தாள். இங்கேயாவது விபி சார் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் உழற்றி கொண்டிருந்தாள்.

அங்கு சென்று விபீஸ்வரை பற்றி விசாரிக்க எந்த தகவலும் சொல்ல மறுத்துவிட்டனர். அவள் உள்ளே போகவும் அனுமதி மறுக்கப்பட்டது.

கைகளை பிசைந்தபடி இவள் தயங்கி நிற்க, அங்கே வந்த சில இளம்பெண்களிடம் நிலமையை கூறி உதவி கேட்க, அவர்கள் தங்களுடன் அவளையும் உள்ளே அழைத்து வந்து விட்டனர்.

அந்த இடத்தை பார்த்தபோது முதலில் இவளுக்கு தலை கிறுகிறுக்க தான் செய்தது. இங்கே அவனை தேடி பிடிப்பது இயலாத காரியம் என்று எண்ணியவள் அலைப்பேசியின் வழி ரங்கராஜனிடம் அதையே சொல்ல, “விபி சாரோட மொபைல்‌ சிக்னல் அங்க தான் இருக்கு, ரவி‌ கன்பார்ம் பண்ணி சொல்லி‌ இருக்கான். நாங்க அங்க வந்தா லேட் ஆகிடும் காவ்யா, இந்த ஒருமுறை மட்டும் ப்ளீஸ்‌மா அவரை சீக்கிரம் அழைச்சிட்டு வந்திடுமா” என்றார் அவர்.

அங்கே சுற்றிலும் தேடி பார்த்தவளுக்கு அவன் தெரிந்தபாடில்லை. ஒருமுறை ஆழ மூச்செடுத்து, பிள்ளையாரப்பனை வேண்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தவர்கள் கூட்டத்திற்குள் நுழைந்து விட்டாள்.

அந்த மினுமினுக்கும் ஒளியில், தங்களை மறந்து ஆடிக் கொண்டிருந்தவர்களை விலக்கி, ஒதுக்கி அவனை தேடி கொண்டு முன்னேறினாள். யாரோ அவள் கரம் பிடித்து இழுக்க, “விபி சர்…” என்று திரும்பியவள் முகம் தோய்ந்து போனது. அங்கு எவனோ ஒருவன் நின்றிருக்க, “கையவிடு” இவள் உதறி கொண்டாள்.

“என்ன அவசரம், கொஞ்ச நேரம்…” துள்ளிசை சத்தத்தில் அவன் பேசுவது முழுதாய் இவளுக்கு கேட்கவில்லை.

விலகி நடந்தவளை மீண்டும் வழிமறித்து ஏதோ உளரினான் அவன். “டேய், பனங்கொட்ட தலையா, நானே விபி சர் கிடைக்கலைன்னு டென்ஷன்ல இருக்கேன், சும்மா என்னை சீண்டாம போயிடு” என்று அவளும் சத்தமிட,

“முதல்ல என்னை கவனி அப்பறம் உன் விபி சார தேடிக்கலாம்” என்று அவள் தோளில் கைபோட முற்பட்டவன்‌ கைகள் தடுக்கப்பட்டன. திரும்பி பார்க்க அங்கே நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் கூரிய பார்வையில் அலட்சிய பாவத்தோடு விபீஸ்வர் நின்றிருந்தான்.

“பாஸ் இது என் ஆளு, நீங்க வேற ஆள பாருங்க” என்று விபீஸ்வர் இலகுவாக சொல்ல, “ஓகே சாரி பாஸ்” அவன் பவ்வியமாக விலகிக் கொண்டான்.

“நான் ஒண்ணும் உங்க ஆளு இல்ல” விபீஸ்வரிடத்தில் கோபமாக சத்தமிட்டாள் காவ்யா தான் அவனை தேடி வந்த வேலையையும் மறந்து.

அவளின் கைபிடித்து அங்கிருந்து இழுத்து சென்றவன், “இப்படி இன்டீசன்டா கத்தாத காவ்யா, எதுக்கு என்னை தேடி வந்த?”

தன் தலையில் அடித்து கொண்டவள், “சாரி சர், அம்மா சீரியஸ் கண்டிஷன்ல ஹாஸ்டல்ல அட்மிட் ஆகி இருக்காங்க” அவள் படபடவென சொல்ல,

“ஓ காட், உன் அம்மாவுக்கு சீரியஸ்னா ஏன் என்னை தேடிவர?” போதை வீச்சில் அவள் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இவன் குழம்பி கேட்டான்.

“அச்சோ சர், என் அம்மாவுக்கு இல்ல உங்க அம்மாவுக்கு தான்… சாரி மேடம் தான் ஹாஸ்பிடல்ல இருக்காங்க!” என்க.

இவன் முகம் மொத்தமாக வீழ்ந்து போனது, “என்ன சொல்ற கவி? மாம்… மாம்க்கு என்னாச்சு?” விபீஸ்வர் அதிர்ந்து வினவ,

“ரிலாக்ஸ் சர், மேம் சீக்கிரம் குணமாகி வந்துடுவாங்க, நீங்க ஏன் சர் ஃபோன் எடுக்கல?” அவள் குரலும் தோய்வாய் கேட்டது.

“ஓ ஷிட், என் மோபைல் கார்ல விட்டுட்டேன்” என்றவன் தன் காரை நோக்கி வேகமாக விரைந்தான். கைப்பேசியில் வந்திருந்த அழைப்புகள் அவன் முகத்தில் அறைவதாய்.

கார் வேகமாக மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அம்மாவின் அருகில் இருக்க வேண்டிய நேரத்தில் தான் இப்படி குடித்துவிட்டு ஆடிக் கொண்டிருந்ததை நினைத்து உள்ளுக்குள் குறுகி போனான் அவன்.

விபீஸ்வரின் கலங்கிய முகத்தை கவனித்தவள், ‘பாவம்… இந்த ஒரு கெட்ட பழக்கம் மட்டும் இல்லனா, இவர் நிச்சயம் அக்மார்க் நல்லவர் தான் போல’ என்று எண்ணிக் கொண்டாள் காவ்யா.

மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் லலிதாம்பிகை. ரங்கராஜன் விபியை எதிர்க்கொண்டு நேராக தலைமை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

“சிவியர் அட்டாக், உடனே ஆப்ரேஷன் பண்ணி ஆகணும்! இதுல சைன் பண்ணுங்க” என்று மருத்துவர் ஒரு காகிதத்தை நீட்ட, அதனை படித்து பார்த்தவன், ஆழ மூச்செடுத்து கையெழுத்திட்டு தந்தான்.

“மாம்க்கு… ஒண்ணும் ஆகாது இல்ல டாக்டர்?” விபி கமறலாக கேட்க,
“ஒண்ணும் ஆக கூடாது என்பதற்காக தான இந்த ஆப்ரேஷன் பண்றோம். நம்பிக்கையா இருங்க… இத்தனை நாள் எப்படி கவனிக்காம இருந்தீங்க விபீஸ்வர்? இனிமேலாவது உங்க அம்மா மேல கொஞ்சம் கேர் எடுத்துக்கங்க ஓகே” என்று மருத்துவர் மேலும் வலியுறுத்த இவனுக்கு மேலும் வேதனை கூடியது. அம்மாவை கவனிப்பதில் தான் தவறி விட்டோம் என்ற உண்மை சுடுவதாய்.

லலிதாம்பிகையின் அறுவை சிகிச்சை முடியும்வரை நால்வரும் அங்கிருந்தனர்.
கலங்கி உடைந்து அமர்ந்திருந்தவனை பார்க்க அனைவருக்கும் வருத்தமாக தான் இருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து, அவர் கண் விழிக்க நான்கு மணிநேரம் கெடு வைத்தார் மருத்துவர்.

விபீஸ்வர், கண்ணாடி தடுப்புகளின் வழி நினைவற்று கிடந்த லலிதாம்பிகையை பார்த்து நின்றான். கடைசியாக தன் அப்பாவை உயரற்ற‌ உடலாக பார்த்து, இவன் கையாலாகாமல் கதறிய தருணங்கள் இவன் நினைவில் பாரமாய் மோதின.

‘ப்ளீஸ் ப்பா, எனக்கு மாம் வேணும்… அவங்களையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க ப்பா… இனிமே மாம் பக்கத்தில இருந்து நான் பார்த்துக்கிறேன் ப்பா, சாரி ப்பா! எனக்கு மாம் வேணும் ப்பா…’ அவன் உள்ளம் தன் தாயின் நலம் வேண்டி, தந்தையிடம் மானசீகமாக கதறியது.

அவன் கண்ணீரை பார்த்து காவ்யா, கலில் இருவருக்கும் வருத்தமாக தான் இருந்தது. எதையும் அலட்சிய பாவத்தோடு கடந்து செல்லும் அந்த ஆண்மகனின் விழிகளில் கண்ணீர் தடங்கள் இருவரையும் அசைத்து பார்க்க தான் செய்தது.

“மேடம் நல்லபடியா குணமாகி வருவாங்க சர், நீங்க வருத்தப்படாதீங்க” மனம் கேட்காமல் காவ்யா ஆறுதல் சொல்ல, “முடியல கவி… என் அப்பா கூட இப்படி தான் என்னை விட்டுட்டு போயிட்டாரு… இப்ப மாம்! எனக்கு ரொம்ப பயமா இருக்கு கவி…” அந்த ஆறடி ஆண்மைக்குள் இருந்த சிறு பிள்ளையின் பரிதவிப்பை உணர்ந்தவளின் கண்களும் கலங்கியது.

தன் அப்பாவை இழந்து நின்ற வேதனை தருணங்கள் நினைவில் எழ, அவளும் கலங்கினாள். லலிதாம்பிகை மேடம் எப்படியும் குணமாகி வர வேண்டும் என்று தன் பிள்ளையாரிடம் அவசர வேண்டுதல் வைத்தாள் விபீஸ்வரனுக்காக.

கலில் இருவருக்கும் தேநீர் வாங்கி வந்து கொடுக்க, இருவரும் மறுப்பு சொல்லாமல் வாங்கி பருகினர்.

“தேங்க்ஸ் கலில், அம்மாவை சரியான நேரத்தில ஹாஸ்பிடல்ல சேர்த்ததுக்கு” விபீஸ்வர் தன் நன்றியை தெரிவிக்க, “பரவாயில்ல சார், இனிமே எங்க போனாலும் ஃபோன மறக்காம எடுத்துட்டு போங்க சார்!” கலில் தயங்கிய படி சொன்னான்.
“ம்ம் சரி, நீ கிளம்பு” என்று விபி உத்தரவிட, கலில் சென்று விட்டான்.

மணி இரவு இரண்டை தாண்டிக் கொண்டிருந்தது. உடல் சோர்வு காரணமாக ரங்கராஜனும் காலை வருவதாக கூறிவிட்டு, முன்பே சென்று விட்டிருந்தார்.

இப்போது இவளும் வீட்டிற்கு போக வேண்டும்! விபியை தனியே விட்டு போவதற்கும் தயக்கமாக தோன்றியது. எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தென்ன பிரயோஜனம்? நோய்வாய்ப்பட்டு கிடக்கையில் இவர்களை தாங்க எந்தவொரு சொந்தமும் உடனில்லையே! என்று அசூசையாக எண்ணிக் கொண்டாள் காவ்யா.

எங்கோ வெறித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் வந்தவள், “சர், அப்ப நானும்…?” தயக்கமாய் காவ்யா விடைபெற கேட்க,

அவன் சிவந்த கண்கள் அவளிடம் திரும்பின. “நான் ரொம்ப மோசமானவன் இல்ல! மாம் உயிருக்கு போராட்டிட்டு இருக்கும் போது… நான் அங்க பப்ல…” முழுதாக சொல்ல முடியாமல் அவமானத்தில் அவன் முகம் கசங்கியது.

“விடுங்க சர், நீங்க ஃபோனை மறக்காம இருந்திருந்தா, உடனே தகவல் தெரிஞ்சு வந்திருப்பீங்க தானே” எதற்கென விளங்காமல், இவள் அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

“மாம் திரும்பி வந்திடுவாங்க தானே, என்மேல கோவிச்சிட்டு, என்னை தனியே விட்டு போக மாட்டாங்க இல்ல” அவளின் கை பிடித்து பிதற்றினான் அவன். போதை மயக்கம் ஒருபுறம், அம்மாவின் நிலை மறுபுறம் என விபீஸ்வர் உள்ளுக்குள் அலைகழிந்து கொண்டிருந்தான்.

“மகன் எவ்ளோ பெரிய தப்பு செஞ்சிருந்தாலும் அம்மா எல்லாத்தையும் மன்னிச்சிடுவாங்க சர், எந்த அம்மாவும் எப்பவும் தன் மகனை விட்டு கொடுக்க மாட்டாங்க… விடுஞ்சதும் மேடம் நல்லபடியா உங்ககிட்ட பேசுவாங்க பாருங்களேன்” காவ்யா நம்பிக்கையோடு பேசியபடி தன் கையை அவன் பிடியிலிருந்து உருவிக் கொள்ள முயல, அவன் பிடி மேலும் இறுகியது.

“நீ தப்பா நினைக்கலன்னா, நான் கொஞ்ச நேரம் உன் கையை பிடிச்சிட்டு இருக்கவா ப்ளீஸ்” தனித்துவிடப்பட்ட சிறுவன் போல அவளிடம் ஆதரவு வேண்டினான் விபீஸ்வர். காவ்யா பதிலின்றி சங்கடமாக அவனுக்கடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

தனக்காக எச்சரிக்கை செய்தது அவளின் அறிவு! அவனுக்காக பரிதாபப்பட்டது அவளின் மனது!

அவளின் மென் விரல்களில் தன் கைவிரல்களை கோர்த்து கொண்டவன், பின்புறம் தலைசாய்த்து இமைகளை மூடிக் கொண்டான். ஏதோ இக்கட்டில் சிக்கியது போல காவ்யாவின் இதயம் வழக்கத்தை விட அதிகமாக தடதடத்தது.

“சின்ன வயசுல இருந்தே எனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்கும் கவி…!” விபீஸ்வர் தன் மனவோட்டங்களை வார்த்தைகளில் வடிக்க முயன்றான்.

“அவர் செம ஃபாஸ்ட் தெரியுமா? பேசறதுல, நடக்குறதுல, ஒரு முடிவு எடுக்கறதுல… அவர் தான் எனக்கு எல்லாம், அவர் செய்யற ஒவ்வொரு வேலையையும் ரசிச்சு ரசிச்சு பார்ப்பேன்… பெரியவனானதும் உங்களை மாதிரியே நானும் வரணும் ப்பான்னு சொல்லுவேன்! அதுக்கு அப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? ‘என்னை மாதிரி வரணும்னு ஒரு கூட்டுக்குள்ள உன்ன அடைச்சுக்காத ஈஸ்வர்… நீ உனக்கான தனி அங்கிகாரத்தோட வாடா, என் மகனா இதுன்னு நான் ஆச்சர்யபடணும் பெருமைபடணும் அப்படி வரணும் டா நீ…’.

“என் விருப்பு, வெறுப்பு எதுக்குமே தடை சொல்ல மாட்டாரு. நான் ஏதாவது தப்பு செஞ்சா கூட, ‘உனக்கு அதை செய்யணும்னு தோணுதா செய், அது தப்புன்னு உன்னால எப்ப உணர முடியுதோ அப்ப விலகி வந்திடு’ன்னு ரொம்ப சாதாரணமா சொல்லுவார்” என்று சொல்லி மெதுவாக சிரித்தான். அவன் உணர்ச்சிவசப்பட்டு பேச காவ்யா அமைதியாய் கேட்டிருந்தாள்.

அவனுக்கே தெரியாமல் தன் மறுபக்கத்தை அவளிடம் திறந்து காட்டிக் கொண்டிருந்தான் விபீஸ்வர்.

“முன்ன இருந்தே அம்மா மேல எனக்கு பெருசா இன்ட்ரஸ்ட் இருந்தது இல்ல கவி…! அவங்க எதிலயுமே ஸ்ட்ராங்கா, பிரைட்டா இருக்க மாட்டாங்க, அப்ப இருந்தே ஃப்ரண்ஸ், கிளப், டிவி, கோவில்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அவங்க முடிஞ்சு போவாங்க… அதை தவிர அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது. தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ண மாட்டாங்க. ஆனா, என் அப்பாக்கு தெரியாத எந்த விசயமும் இந்த உலகத்துல இருக்காதுன்னு எனக்கு தோணும்… நான் எதைபத்தி கேட்டாலும் அவர்கிட்ட டக்டக்னு ஆன்சர் வரும்…!”

“ஒருசில நேரத்தில எனக்கும் தோணி இருக்கு, எந்த விதத்திலும் மேட்ச்‌ இல்லாத அம்மாவ எப்படி அவர் லைஃப் பார்னரா தேர்ந்தெடுத்தாருன்னு! ஆனா, அவரை பொறுத்தவரைக்கும் மாம் தான் எல்லாம்‌ அவருக்கு. வீட்டுக்கு வந்தா அம்மா கூட தான் அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ணுவாரு. அவங்களுக்கு என்ன தேவைன்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து கவனிப்பாரு… எனக்கு கோபம் வரும் ஆஃபிஸ்லயும் வேலை பார்த்துட்டு வீட்ல‌ வந்தும் அப்பா தான் எல்லாம் பார்க்கணுமா, கொஞ்சமாவது அம்மா கேரிங்கா நடந்துக்கணும்னு தோணும்! அதை கேட்டா அப்பா, ‘உன் அம்மா வளர்ந்த குழந்தை டா, அவளோட இந்த இன்னசென்ட் தான் எனக்கு அவகிட்ட ரொம்ப பிடிச்சதே, அவ எப்படியோ அப்படியே அவளை ஏத்துக்கடா, உனக்கும் அவளை பிடிக்கும்’னு சொல்லுவாரு. ப்ச் அப்பா அம்மாவ அவ்ளோ லவ் பண்ணாரு கவி”

“…!”

“அப்பா தவறினப்போ… என்னைவிட மாம் தான் ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க… அப்ப தான் நானும் அம்மாவ கேர் பண்ணனும்னு தோணுச்சு! என்னால முடிஞ்ச வரைக்கும் அம்மாவ நல்லா பார்த்துக்கிட்டேன் கவி…! நான் அம்மாவையும் மிஸ் பண்ண விரும்பல, அவங்களை திரும்ப வர சொல்லு கவி… நான் இன்னும் நல்லா அவங்களை பார்த்துப்பேன்…” விபீஸ்வர் கண்ணோரம் கரை உடைந்து நீர் கோடிட்டது.

என்ன ஆறுதல் மொழி சொல்வதென்று காவ்யாவிற்கு தெரியவில்லை. தன் கைக்குட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

தயக்கமின்றி அதனை பெற்று கண்களை ஒற்றி எடுத்தவன், “சாரி கவி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” என்றான். அவளின் பார்வை அவனை பரிவாய் வருடி தந்தது. அதுவே அவனுக்கு ஆறுதலாய் இருக்க, ஏதோ மனதிற்குள் லேசாக உணர்ந்தான்.

அங்கே உரையாடல்கள் ஓய்ந்து அமைதி நிலவ, வெளியே, இரவு கடந்து விடியலை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது வானம்.

முழு இரவும் உறக்கமின்றி கழிந்ததால் உடல் சோர்வில் இருவரும் கண் அயர்ந்திருந்தனர்.

விபீஸ்வர் தோளில் இவள் தலை சாய்த்து உறங்கி இருக்க, அவன் கன்னம் காவ்யா தலைமீது பதிந்து இருந்தது. இருவரின் கைகளும் கோர்த்தபடி இருக்க, அவர்களை கடந்து சென்ற ஓரிருவர் பார்வை இவர்கள் மீது பதிந்து விலகியது.

சட்டென உறக்கம் கலைய பதற்றமாக விழித்துக்கொண்டான் விபீஸ்வர். தன் தோள்மேல் வாகாய் சாய்ந்து உறங்கி கிடந்தவளை பார்த்தும் அவனுக்குள் ஏதோ மெல்லிய உணர்வு இதமாய் பரவியது. அம்மாவின் உடல்நிலை பற்றிய பதற்றம் நீங்கி, தெளிவாக நம்பிக்கையாய் உணர்ந்தான்.

அவளை கலைக்க மனமின்றி அசையாமல் அமர்ந்திருந்தான். கோர்த்தபடி இன்னும் இருந்த கைகளை கவனித்தவன், தன் விரல்களை மெல்ல தளர்த்த, தானாய் அவள் விரல்கள் அழுத்தி பிடித்து கொள்ள இவன் இதழில் மென்னகை அரும்பியது. சற்றே தலை சாய்த்து அவளின் முகம் பார்த்தான்.

காமத்தை தாண்டிய ஏதோ புனிதமான உணர்வு அவனை சுகமாய் நிறைத்தது. அந்த உணர்வுக்கு பெயர் வைக்க தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் பிடித்து இருந்தது.

அவன் விரல்கள், அவள் முகத்தில் வழிந்திருந்த மயிரிழைகளை மென்மையாக விலக்கிவிட முயல, சட்டென கண்விழித்துக் கொண்டாள் காவ்யா. அவன் தோளிலிருந்து பதறி விலகி எழுந்து நின்றாள்.

“சசாரி சர்… தெரியாம தூக்க கலக்கத்தில…” அவள் உளறி கொட்ட, இவன் கண்கள் அவளையே பரவசமாக பார்த்திருந்தன.

எந்த ஒப்பனையும் இன்றி, அரைகுறை உறக்கத்திலிருந்து விழித்து வெளிறி தெரிந்த முகம்… அதில் கலைந்து வழிந்திருந்த முடி சில கற்றைகள்… சோர்ந்த கண்களில் சற்றே சறுக்கி இருந்த அவளின் கண் கண்ணாடி… ஏதோ அதிசய ஓவியம் போல அவளை அவளாய் அப்படியே தன்னுள் சேகரித்து கொள்ள முயன்றான்.

அவனின் பார்வையை கவனித்து காவ்யா, அவசரமாய் தன் முகத்தையும், கலைந்த முடியையும், கண்ணாடியையும் துப்பட்டாவையும் சரிபடுத்திக் கொள்ள,
இப்போது விபீஸ்வர் சத்தமாகவே சிரித்து விட்டான்.

“ஏன் சர், சிரிக்கிறீங்க?” காவ்யா கலவரமாக கேட்க,

“நான் சொல்லிடுவேன், ஆனா, நீ கோவபடுவ” என்றான்.

காவ்யா அவனை கண்கள் சுருக்கி முறைக்க, “ஹேய் அப்படி முறைக்காத, மார்னிங் லுக்ல ரொம்ப அழகா, நேச்சுரலா தெரியற அதான் சொல்ல வந்தேன்… வேற ஒண்ணும் இல்ல” என்றான் அதே விரிந்த சிரிப்போடு.

‘ராத்திரி எல்லாம் அழுமூஞ்சி கணக்கா அழுது வடிஞ்சிட்டு, இப்ப பேச்ச பாரு… சிரிப்ப பாரு… இவனுக்கு” என்று தனக்குள்முணுமுணுத்தபடி காவ்யா நகர்ந்து விட்டாள்.

தன் வீட்டுக்கு கைப்பேசியில் அழைத்து பேசிவிட்டு, அவர்களின் கேள்விக்கு பொறுமையாக பதில் தந்துவிட்டு திரும்பினாள். செவிலி பெண் வந்து அழைக்க, விபீஸ்வர் சற்று பதற்றமாக லலிதாம்பிகை அறைக்குள் நுழைந்தான்.

லலிதாம்பிகைக்கு விழிப்பு வந்திருந்தது, ஆனாலும் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவரின் கை பற்றிக் கொண்டவன், “உங்களுக்கு ஒண்ணும்‌ இல்ல மாம், எல்லாம் சரியா போச்சு… நைட் ஃபுல்லா என்னை ரொம்ப பயமுறித்திட்டீங்க மாம்… வீட்டுக்கு வாங்க உங்களை கவனிச்சுக்கிறேன்” விபீஸ்வர் மிரட்டுவதை போல பேச, அவர் முயன்று சோர்வாய் சிரித்து தலையாட்டினார்.

அவர்கள் பேசுவதை கண்ணாடி தடுப்பு வழி பார்த்திருந்த காவ்யதர்ஷினிக்கும் நிம்மதியாக இருந்தது.

அதே நிம்மதி உணர்வோடு வெளியே வந்த விபீஸ்வர், நேராக காவ்யாவை அணைத்திருந்தான். “மாம் சரியாயிட்டாங்க கவி…” என்று சந்தோசமாக அவன் சொல்ல, “சர்…!” இவளின் குரல் சங்கடமாக ஒலிக்க, அவன் பிடியிலிருந்து விலகி நின்றாள்.

அவளை வித்தியாமாக பார்த்து வைத்தவன், அவள் காதருகில் குனிந்து, “சரியான கட்டுபெட்டி நீ, ப்ச் வேஸ்ட்” சொல்லிவிட்டு வேகநடையோடு மருத்துவர் அறை நோக்கி சென்றான். இவளின் விரிந்த கண்களையும், கார முறைப்பையும் நினைத்து சிரித்தப்படி.

#

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!