(ஆயுதக் கடத்தல்/arms trafficking, துப்பாக்கிச் கடத்தல் /gun running பிசினெஸ் என்று அழைக்கப்படுகிறது.இது சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகளின் சட்டவிரோத வர்த்தகம். இது எல்லைகள் கடந்த குற்றவியல் அமைப்புகளுடன் தொடர்புடைய, பரந்த அளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
பல ஆபத்தான ஆயுத வகைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கண்காணிக்க, ஐக்கிய நாடுகள் சபை, 1991 இல், வழக்கமான ஆயுதங்களுக்கான பதிவேட்டை/Register for Conventional Arms, உருவாக்கியது.
இந்தியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்ற நாடுகளைவிட சற்றே கடுமையானவை. அப்போதும் கூட 40 மில்லியன் இந்தியர்கள் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களில் 85% தங்கள் துப்பாக்கிகளைப் பதிவு செய்யவில்லை என்று கன்போலிசி. org. குறிப்பிடுகிறது.
துப்பாக்கி சம்பந்தப்பட்ட 90% படுகொலைகளுக்கு இந்த ஆயுதங்கள் காரணமாகின்றன. இந்தியாவில் 3/100 பேர் துப்பாக்கிகளைக் வைத்திருக்கிறார்கள்.
அதிகளவில் பொதுமக்கள், தனியாருக்குச் சொந்தமான துப்பாக்கிகள் வைத்திருப்பவர் எண்ணிக்கை என்ற கணக்கெடுப்பின் படி உலகநாடுகள் 178டில் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறது எகனாமிக் டைம்ஸ் ஆய்வறிக்கை.)
அத்தியாயம் 8
“உங்களுக்கு எங்க ஈஸ்வர் கூடத் திருமணம் என்று பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்களா டாக்டர் மேடம்!.. பகல் கனவு எல்லாம் பலிக்காதாமே!… ட்ரீம் ஆன் டாக்டர்.
எங்களைத் தாண்டித் தான் ஈஸ்வர் உங்களை நெருங்க முடியும். நெருங்க விடமாட்டோம். உங்களுக்கும் ஈஸ்வருக்கும் திருமணம் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.” என்ற செல்வத்தின் சிரிப்புடன் எமி, ரிஷியின் சிரிப்பும் நாராசமாய் சம்யு, ஹேமா காதில் ஒலித்தது.
அதிர்ந்து திகைத்து விழித்தார்கள் சம்யுக்தாவும், ஹேமாவும்.
செல்வத்தின் குரலில் என்ன இருந்தது? ஒரு வித வைராக்கியம், அந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டோம் என்ற திமிர், ஆணவம், அகம்பாவம் என்று சொல்லலாமா?
செல்வத்தின் குரலில் இருந்த ஏதோ ஒன்று சம்யுக்தாவை அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மை. அந்தக் குரல் ஒலித்த துவனி, சம்யுக்தாவை அவளே அறியாமல் மிடறு விழுங்க வைத்தது.
‘சொல்வதை அப்படியே நிறைவேற்றிக் காட்டுவேன்‘ என்று நிற்பவனின் குரலில் இருக்கும் தெளிவுடன் ஒலித்தது செல்வத்தின் குரல்.
‘தானும் ஈஸ்வரும் காதலிப்பது இவர்களுக்கு ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை. ஏன்?… ஈஸ்வருக்கு தான் இணையில்லை என்று நினைக்கிறார்களா?…இல்லை இவர்களின் நட்புக்குக் குறுக்கே நான் வருகிறேன் என்று பொறாமையா?…
நான் காதலிப்பதற்கும், இவர்கள் நட்பிற்கும் என்ன சம்பந்தம்?… இவர்கள் நட்பைப் பிரித்து விடுவேன் என்று பயப்படுகிறார்களா?…’ என்று எவ்வளவு யோசித்தும் சம்யுக்தாவிற்கு விடை தெரியவில்லை.
சம்யுக்தா அடுத்து என்ன பேசுவது, அடுத்த என்ன சொல்வது என்று கூடப் புரியாதவளாய் செல்வம், எமி, ரிஷி வார்த்தையில் திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.
அவள் கையிலிருந்த மொபைல் வாங்கி அதை ஹோல்டு போட்ட ஹேமா,
“ஆறடி மனிதனையும் சாய்க்கும் ஆற்றல் உள்ளது,ஈரடி நாக்கு என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி விட்டுச் சென்றார்கள்!.
இதுங்க எல்லாமே மனுஷ ஜென்மங்களே இல்லை சம்யு. பாம்பிற்கு கூடப் பல்லில் தான் விஷம் இருக்கும். இதுங்களுக்கு உடல் முழுக்க விஷம். விட்டுத்தள்ளு.
இந்தத் திருமணத்தை இன்றே நீ ஏற்பாடு செய்திருக்க, ஒரு வகையில் இந்த மூவரும் கூடத் தானேடா காரணம்!.
‘அவ கோடீஸ்வரி, நீ மாத சம்பளம் வாங்குபவன். உனக்கும் அவளுக்குத் திருமணம் நடக்க, அவங்க அப்பா விடுவாங்களா?…’ என்று பேசிப் பேசி, ஈஸ்வர் மனதில் தாழ்வு மனப்பான்மையை, ஏற்றி ஈஸ்வரை புலம்ப வைத்திருப்பவர்கள் இவர்கள் தானே!
இவங்களை ஜெயிக்க விடாதே!.. உனக்கு ஈஸ்வர் மேலேயும், அவன் காதல் மேலயும் நம்பிக்கை இருக்கிறது அல்லவா!… ஈஸ்வர் தான் முக்கியம். இவர்கள் எல்லாம் தூசுக்கு சமம். ” என்றாள் ஹேமா சம்யுக்தாவின் தோளை அணைத்து.
ஹேமாவின் பேச்சில் தெளிந்த சம்யு, புன்னகைக்க, “இரு… இந்தத் திருமணம் நடக்காது என்றா சொல்றாங்க!… இங்கே திருமண ஏற்பாடே நடத்தியாகி விட்டது… இன்று உனக்கும், ஈஸ்வருக்கு திருமணம் என்பதை சொல்றேன்… வயிறு எரியட்டும்…” என்று கால் ஹோல்டு எடுக்கச் சென்ற ஹேமாவை கைப்பிடித்துத் தடுத்தாள் சம்யு.
“சொல்ல வேண்டாம் ஹேமா… இங்கே வந்தபிறகு தான், ஈஸ்வருக்கு கூடத் தெரியணும் என்று தான் சொல்லாமல் இருக்கேன். இங்கே வந்து தெரிஞ்சுக்கட்டும். சொல்லிவிட்டால் வந்து கொண்டிருக்கும் ஈஸ்வரை அவங்க வர விடாமல் செய்வாங்க.
‘ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு என்று ஹாஸ்பிடல் போகணும்…’ என்று ட்ராமா போடுவாங்க. இல்லையென்றால் காரை வேண்டும் என்றே ஆக்ஸிடென்ட் கூடச் செய்வாங்க… ‘எலிமெண்ட் ஆப் சர்ப்ரைஸ்’ இப்போ நம்ம பக்கம் இருக்கு.
கோயிலுக்கு வந்து சேர்ந்த பிறகு, இந்தத் திருமண ஏற்பாடு தெரிய வந்தால், ஈஸ்வரை பேசிப் பேசிப் பிரைன் வாஷ் செய்ய முடியாது.
ஈஸ்வர் மட்டும் கோயிலுக்குள் வரணும். ஈஸ்வர் கையில் திருமாங்கல்யம் எடுத்தபிறகு தான், இவர்கள் உள்ளே வர வேண்டும். இவர்களை நீ, மணி அப்பா, கவிதா அம்மா துணை கொண்டு தடுத்து நிறுத்தப் பாரு… அதற்குள் ஈஸ்வரின் ஷாக்கை குறைத்து, கையில் திருமாங்கல்யம் எடுக்க வைத்து விடுகிறேன்.
‘எந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டோம்’ என்று இவர்கள் அறைகூவல் விடுகிறார்களோ, அவர்கள் கண் முன்னே இந்தத் திருமணத்தை நடத்தி காட்டணும் ஹேமா. பேசிப் பிரயோஜனம் இல்லை… செயலில் காட்டுவோம்.
ஈஸ்வர் என் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டி, என்னை அவனின் சரி பாதியாக ஆக்கிக் கொள்வதை கண் குளிர பார்த்து, அட்சதை துவட்டும்… இது தான் இப்படி பேசும் இவர்களுக்குச் சரியான தண்டனை.
நண்பனின் திருமணத்தில் அருகில் இருக்கவும் முடியாது… விலகவும் முடியாது. தடுத்து நிறுத்தவும் முடியாது என்ற நிலையில் தவிக்கட்டும்.
இதை விடவா வாய் வார்த்தையாய் பேசி விடுவது தண்டனையைக் கொடுத்து விடும்?. எதையும் இப்போ சொல்லாதே!…” என்றாள் சம்யுக்தா புன்னகையுடன்.
“அடியாத்தி!… நீ வேற லெவல். நீ டாக்டர் தானா இல்லை ஏதாவது தாதா கூட்டத்தின் தலைவியான்னு அடிக்கடி இப்படி பிளான் போட்டு என்னைக் காபரா படுத்துறே!… இருந்தாலும் இத்தனை கிரிமினல் மூளை உனக்கு இருக்கக் கூடாது செல்லம்மா!
அடிக்கடி நியாபக படுத்து… உன் கோபத்திற்கு இந்தச் செல்வம், எமி, ரிஷி லூசுங்க மாதிரி நான் ஆளாகி நிற்கக் கூடாதுன்னு. என்னவோ பெரிய லார்ட் லபக்கதாஸ் பேரன் என்று கெத்தாய் சுத்திட்டு இருக்குங்க. நீ வச்சி செய்.
நான் போய்ப் பூக்கார அக்கா, மணி அங்கிள், கவிதா அம்மா கிட்டே பேசிட்டு வரேன். நம்ம கிட்டே இருந்து அழைப்பு வரும் வரை, அந்த மூன்று குரங்குகளை வெளியவே நிறுத்தி வைக்கச் சொல்றேன்.
இதுங்களுக்கு எல்லாம் இது தான் சரியான அடி. நீ கலக்கு…” என்ற ஹேமா, தங்கள் திட்டத்தைச் சென்று மணி, கவிதா, பூக்கார அக்காவிடம் சொல்லச் சென்றாள்.
புன்னகையுடன் அழைப்பை ஏற்றச் சம்யுக்தா, செல்வம், எமி, ரிஷியின் பேச்சை வழக்கம் போல் குப்பைக்குச் சமமாய் பாவித்து,
“என்ன உங்க பக்கத்தில ஈஸ்வர் இல்லையா?” என்றாள் வெகுநக்கலாக.
சற்று நேரம் எதிர் பக்கத்திலிருந்து வராத பதிலே, சொல்லாமல் சொன்னது அவர்கள் மூவரின் அருகில் ஈஸ்வர் இல்லை என்பதை.
“உனக்கு எப்படி தெரியும்?” என்றான் செல்வம் சந்தேகத்துடன்.
அவன் கண்கள் காருக்கு வெளியே போலீஸ் உடன் பேசிக் கொண்டிருந்த ஈஸ்வர் மேல் படிந்தது.
“ரொம்ப யோசித்து மூளை என்ற பெயரில் கடுகு சைசில் இருக்கும் அதையும் ரொம்ப கசக்கி பிழியாதே செல்வம்.
உங்களைப் பின் தொடர்ந்து FBI, CIA எல்லாம் அனுப்பலை… ஈஸ்வர் இருக்கும்போது இப்படி எல்லாம் உங்க வாய் பேசாதே!… ஈஸ்வர் எடுக்கும் கிளாஸ்சுக்கு பயந்தே, நீங்க மூவரும் அவன் முன்னாடி, நல்லவங்க வேஷம் கண ஜோராய் போடுவீங்களே!…
ஈஸ்வர் அருகில் இல்லையென்றால் தானே, உங்களுக்கு இப்படி குத்தல், நக்கல் பேச்சு எல்லாம் சரளமாய் வரும்.
‘இந்தத் திருமணம் நடக்காது’ என்று இவ்வளவு தைரியமாய் என் கிட்டே சொல்வதை அப்படியே ஈஸ்வர் முன்னாடி சொல்லு… சொல்லு… சொல்லித்தான் பாரேன்… அப்போ தெரியும் ஈஸ்வருக்குள் இருக்கும், ‘சந்திரமுகன்’ எப்படி வெளியே வருவான் என்று.
உங்க பேச்சைக் கேட்டு, ‘நீ கோடீஸ்வரி, நான் மாத சம்பளக்காரன். உனக்கும் எனக்கும் எப்படி செட் ஆகும்?. உங்க அப்பா எப்படி நம் காதலை ஏத்துப்பாங்க?’ என்று சினிமா டயலாக் ஈஸ்வர் விடலாம்.
ஆனால், எந்த அளவிற்கு ஈஸ்வருக்கு என்மேல் பொஸசிவ்னெஸ் இருக்கு என்பது, எனக்கு மட்டுமில்லை, உங்களுக்குமே என்று நல்லாவே தெரியும்.
தைரியம் இருந்தால், ‘நல்ல நண்பர்கள்’ என்று அவன் முன் நீங்கள் போடும் வேஷத்தை களைத்து விட்டு, அவன் கிட்டே, ‘என்னை லவ் செய்யாதே!… சம்யுவை திருமணம் செய்யாதே!…’ என்று சொல்லித் தான் பாருங்களேன். அப்போ தெரியும் அவன் கோபத்தின் அளவு.” என்றவளின் பேச்சைக் கேட்டுச் செல்வத்தின் கை முஷ்டி இறுகியது.
“ஆமா, உன் விஷயத்தில் நான் சொல்வதை கேட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பான் பாரு!… அவன் தான், ‘உன் காதல்’ என்ற கண்ணாடி அணிந்து, ‘அபிராமி!… அபிராமி!…’ என்று அலையும், ‘குணா கமலை’ விட மோசமான பைத்தியக்காரனாய் சுத்திட்டு இருக்கானே!…
காதலில் விழுந்தவனுக்கு நண்பனாய் இருப்பதை விட வேற கொடுமை இல்லை. இதுல, இதை வேற சொல்லி, ஏற்கனவே பைத்தியம் பிடித்துச் சுத்திட்டு இருக்கும் அந்தச் சிம்பன்சிக்கு தேளும் சேர்ந்து கொட்டியது போல் குதிக்க வைக்கணுமா!…” என்ற செல்வத்தின் முணுமுணுப்பு வெகுதெளிவாகக் கேட்க, சம்யுவின் முகத்தில் புன்னகை வந்தது.
“புரிஞ்சா சரி. என்னைப் பற்றித் தவறான பிம்பம் உருவாக்க முயன்று, ரிஷி ஈஸ்வரிடம் வாங்கிய அடி மறந்து போச்சா?… அன்னைக்கு ஈஸ்வர் கொடுத்த ஒரு அடி, அந்த முகத்தில் தெரிந்த கோபம் என்னைக்குமே உங்களுக்கு மறக்கக் கூடாது.
எங்க காதலுக்கு குறுக்கே வராமல் இருப்பது உங்களுக்கு நல்லது. இல்லை மூக்கை நுழைத்துத் தான் ஆவேன் என்றால், இப்போ நீங்க மூவரும் பேசிய பேச்சு அனைத்தும் ரெகார்ட் ஆகி தான் இருக்கு.
ஆதாரம் இல்லாமல் உங்களை எல்லாம் சமாளிக்க நான் என்ன லூசா?… பேசுவது நீங்க மூவரும் தான் என்பது தெரிந்த உடனே ரெகார்ட் செய்ய ஆரம்பித்து விட்டேன்.
இதை ஈஸ்வரிடம் போட்டுக் காண்பிக்க வெகுநேரம் எனக்கு ஆகாது செல்வம். பெட்டெர் ஸ்டே அவே பிரம் அஸ்…” என்றாள் சம்யு வெகுநிதானமாய்.
எமியும், ரிஷியும், “ஹேய்!…” என்று ஒரே சமயத்தில் கத்தி விட, செல்வம் முகத்தில் பாராட்டுபோல், இன்ச் அளவுக்கு உதடு பிரிந்து புன்னகை என்று ஒன்று வெளிப்பட்டது.
“இந்த அளவிற்கு உங்க கிட்டே மூளையை, சிந்திக்கும் திறனை நான் எதிர்பார்க்க வில்லை டாக்டர். கிரிமினல் பிரைன் தான் உங்களுக்கு. உங்களை அண்டர்எஸ்டிமேட் செய்துட்டேன் போலிருக்கே!…” என்றான் செல்வம் பாராட்டுபோல்.
“நன்றி… எல்லாம் சகவாச தோஷம் தான் செல்வம். நண்பர்களான நீங்களே, இத்தனை கிரிமினலாக யோசிக்கும்போது, ஈஸ்வரின் காதலியான நான், அவன் என்னைப் பிரியாமல் இருக்க, எத்தனை கிரிமினலாக யோசிக்க வேண்டி இருக்கும். அதுவும் உங்களை மாதிரி நண்பர்கள் கூட இருந்தால் வேறு வழி?” என்றாள் சம்யுக்தா அலட்டிக் கொள்ளாமல்.
“இதை எல்லா விஷயத்திற்கும் யூஸ் செய்யுங்க டாக்டர்… உங்களுக்குத் தான் நல்லது. ஈஸ்வர் என்ற ஒருவனின் காதல் மேல் மட்டும் கவனத்தை வைக்காதீர்கள் மேடம்.
உங்களைச் சுற்றி யார், என்ன, எப்படி இருக்கிறார்கள் என்று அறிந்துணரும் அறிவும் மிகவும் அவசியம். பூனை கண்ணை மூடிட்டு இருப்பதை போல் இருந்தால், உலகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம் கவனத்திற்கு வராமல் தான் போகும்.
கோடீஸ்வரியான, அழகிய பொம்மையான தங்களிடமிருந்து, காதல் சாம்ராஜ்ய இளவரசியிடமிருந்து நான் ரொமான்ஸ் தான் எதிர்பார்த்தேன்.
இந்தப் பிளானிங் எல்லாம் எதிர்பார்த்திருக்க வில்லை தான். குட்… நான் நினைத்ததை விட நீ வேறு மாதிரிப் பெண் தான். ஆனால் இந்த அறிவு, பிளானிங் எல்லாம் போதாது.
ஆனாலும் உங்களின் இந்தத் தீடீர் மாற்றம் எதிர்பாராத பிளசண்ட் சர்ப்ரைஸ் தான் எனக்கு . உங்களுக்கும் மூளை என்ற ஒன்று இருக்கிறதா என்று பல நாள் யோசித்து இருக்கிறேன் இளவரசியாரே!…” என்றான் செல்வம் வஞ்ச புகழ்ச்சி அணிபோல்.
செல்வத்தின் இந்த மாதிரிப் பேச்சு அடிக்கடி நடப்பது தான். புகழ்வது மாதிரி வெளிப்பார்வைக்கு தோன்றினாலும், அதன் பின் இகழ்ச்சியே அதிகமாய் இருக்கும் என்பதை பலமுறை கண்டிருக்கும் சம்யுக்தாவிற்கு இன்றைய செல்வத்தின் பேச்சும் அதையே தான் நினைவிற்கு கொண்டு வந்தது.
ஆசிரியர் நடத்திய வகுப்பும் நினைவுக்கு வந்தது.
“வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
‘தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்’ என்ற ஒரு திருக்குறள் இதற்குச் சிறந்த விளக்கம்.
கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால், தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.’ என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். புகழ்வது போல் இகழ்தல் என்று இதைத் தான் சொல்வோம்.” என்று அன்று சொல்லப்பட்டது இன்று நினைவிற்கு வந்தது
அதே பாணியைச் செல்வம் கையாண்டு, ‘இளவரசி!…’ என்று போற்றுவது போல் தோன்றினாலும், ‘நீ உங்க அப்பாவின் பணத்தில் உடல் வளர்க்கும் பார்பி டால், நீ ஷோ கேஸ் பொம்மை… உங்க அப்பா காட்டும் பாதையில் ஆடும் குரங்கு. மூளை எல்லாம் உனக்கு இருக்காது. எதற்கும் லாயக்கு இல்லை…’ என்று இகழ்கிறான் என்று புரிந்து விட்டது சம்யுக்தாவிற்கு.
சம்யு காட்டமாய் ஏதோ சொல்வதற்குள், கார் கதவைத் திறந்து கொண்டு ஈஸ்வர் பேசிக் கொண்டே உள்ளே ஏற, சம்யுக்தாவும், மற்றவர்களும் வாயை மூடிக் கொண்டார்கள்.
“ஹ்ம்ம்!… அந்தத் தண்ணீரை கொடு ரிஷி…. பாவம்!… அவங்களுக்கே தெரிலை எப்போ டிராபிக் க்ளியர் ஆகும் என்று… முடிந்த அளவிற்கு வேகமாய் தான் செய்யறாங்க… பட் அதையும் தாண்டி இப்படி ட்ராபிக் ஆகியிருக்கு…” என்ற ஈஸ்வர் ரிஷி கொடுத்த தண்ணீரை பருகி விட்டு, செல்வம் கையில் இருந்த தன் போனை பார்த்து,
“யார் போனில்?…” என்றான் ஈஸ்வர்.
“டாக்டர் மேடம் தான்… நைஸ் டாக்கிங் டு யு பிரின்சஸ்… வில் டாக் அகைன்…” என்ற செல்வத்திற்கு,
“கேம் இஸ் ஆன் செல்வம்… வைட்டிங்….” என்ற சம்யுவின் பதிலும், சிரிப்பும் செல்வத்தின் முகத்தில் இறுக்கத்தை கொண்டு வந்தது .
பின் சீட்டிலிருந்து ரிஷியும், எமியும் தங்கள் எரிச்சல், கோபத்தை, ஈஸ்வரின் முன்னிலையில் காட்ட முடியாதவர்களாய், தத்தளிக்க, போனை ஈஸ்வரிடம் கொடுத்த செல்வம் பின்னால் இருந்த இருவரை பார்க்க அவர்கள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.
“செல்வம்!…”என்று எமி ஏதோ சொல்ல வந்ததை, பார்வையாலேயே அடக்கினான் செல்வம்.
வேண்டாம் என்பது போல் தலையாட்டிய செல்வம், ஈஸ்வரை பார்வையால் காட்ட,
எமி சட்டென்று, “செல்வம் !… இந்த ட்ராபிக்கில் ரெண்டு மணி நேரமாய் நின்று தலை வலிக்குது. காபி வாங்கி கொடு….” என்றாள்.
“எனக்கும் தலை வலிக்குது செல்வம் அண்ணா… எனக்கும் காபி வேண்டும்…” என்றான் ரிஷி.
“ஈஸ்வர்!… இவங்களுக்கும் தலை வலிக்குதாம்… அதோ அந்தக் கடையில் காபி குடிச்சுட்டு வரோம்…” என்று மற்ற மூவர் கீழ் இறங்கியதை கூட, ஈஸ்வர் கவனிக்கும் நிலையில் இல்லை.
அந்த மூவரின் கோபம் அவர்கள் கடுப்புடன் காரை விட்டு இறங்கி, கார் கதவை அடித்துச் சாற்றிய வேகத்திலேயே தெரிந்தது.
சம்யுக்தாவை படுத்தி எடுக்க, இவர்கள் போட்ட பிளானை வழக்கம்போல் தூசாகக் கடந்து விட, இவர்களுக்குத் தலைவலி சம்யுக்தாவால் வந்தது தான் மிச்சம்.
காபி குடிக்க செல்கிறோம் என்று இறங்கியவர்கள், அவர்கள் கார் அருகே இருந்த மர நிழலுக்குக் கீழ் சென்று நின்று காரசாரமாய் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.
‘சம்யுக்தாவிடம் பேசி நாலு மணி நேரம் ஆச்சு…’ என்று ஈஸ்வர் மனம் சிணுங்கியதை மட்டும் மற்ற மூவரும் கேட்டு இருந்தார்கள், ஹார்ட் அட்டாக் வந்து விழுந்திருப்பார்கள்.
நாலு மணி நேரத்திற்கு முன் கடலை வறுத்து விட்டு, என்னவோ வருஷக்கணக்கில் காதலியுடன் பேசாதவன் போல் துடித்த ஈஸ்வரை நல்லவேளை மூவரும் பார்க்கவில்லை.
தன் நண்பர்கள் வெளியே எரிமலையாய் குமுறி கொண்டிருப்பதை அறியாத ஈஸ்வர், ஏசி காருக்குள் சில்லென்று அமர்ந்து, சம்யுவுடன் காதலை சுனாமியாக வளர்க்க ஆரம்பித்தான்.
வெளியே அவன் நண்பர்கள் மூவரும் எரிமலையாகக் குமுறி கொண்டிருந்தார்கள்.
அத்தோடு ஈஸ்வர் போனிலிருந்து, எதற்குச் செல்வம் சம்யுக்தாவை அழைத்தான், எதற்குக் குதறி வைத்தான் என்ற கேள்வி சம்யுக்தாவும் கேட்கவில்லை. அழைத்த செல்வமும் சொல்லவில்லை.
அவனவன் போலீஸ் செக்கிங், டிராபிக் ஜாம் என்று நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டிருக்க, ஈஸ்வர் விட ஆரம்பித்த ஜொள்ளில் சென்னையே மிதக்க ஆரம்பித்தது.
“பேபிகேர்ள்!…” என்று உலகத்தின் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி, ஈஸ்வர் விளிக்கச் சம்யுவின் மன சுணக்கம் சற்று மட்டுபட்டது.
‘ஈஸ்வர் தன்னை விரும்புகிறான். மற்றவர் ஆயிரம் பேசினாலும், ‘ரோஜாவைச் சுற்றி இருக்கும் முள்ளைப் போல,’ கடந்து விட வேண்டும் இவர்களை.
வாழ்வில் எல்லோர்க்கும், எப்பொழுதும் நாம் பிடித்தவர்களா இருப்போம் என்றும் சொல்ல முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. உனக்கு முக்கியம் ஈஸ்வர் மட்டும் தான்.’ என்று மீண்டும் மனம் சொல்ல, செல்வம், ரிஷி, எமி ஏற்படுத்திய வார்த்தை தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டாள்.
அதற்குள் ஈஸ்வர் பதறியவனாக, “ஏன்ஜெல்!… என்னமா லைனில் இருக்கியா?.” என்றான்.
“ஹ்ம்ம்… லவ் யு டா…” என்றாள் சம்யு மனம் நிறைந்தவளாய்.
“ஹ்ம்ம் லவ் யு டூ ஸ்வீட்டி…” என்றான் ஈஸ்வர்.
“எந்த அளவிற்கு?” என்றாள் சம்யு புன்னகையுடன்.
“பேபிகேர்ள்!… டோன்ட் டீஸ் மீ… அப்புறம் விளைவுகள் விபரீதமாய் இருக்கும். இந்தக் கேள்வியைத் தனியா இருக்கும்போது கேளு ஏன்ஜெல்.
இப்போ சுத்தி ஆளுங்க இருக்காங்க… நீயும் கோயிலில் இருக்கே!… நமக்கான தனிமை கிடைக்கும்போது, என் பதில் வார்த்தையால் இருக்காது. பெட்டெர் பீ ரெடி ப்ரிஷியஸ்… என் பதிலைச், செயலாய் பார்ப்பதற்கு.” என்றான் ஈஸ்வர் முணுமுணுப்பாக.
சம்யுக்தாவின் முகம் ஜிவ்வென்று சிவந்து போனது. அவன் வார்த்தைகள் கொடுத்த கிறக்கம் தாள முடியாதவளாய், கீழ் உதட்டைப் பற்களால் கடித்து தலை குனிந்தாள் சம்யு.
“உதட்டைக் கடிச்சிட்டு இருக்கீயா?…” என்றான் ஈஸ்வர், சம்யு அப்படி தான் செய்வாள் என்பதை உணர்ந்தவன் போல்.
அந்தக் கள்ளனுக்கு தான் சம்யுவின் எல்லா செயலும் அத்துப்படியாயிற்றே!
“இப்போ உன் பக்கத்தில் இருக்க கூடாதான்னு இருக்குடீ… எத்தனையோ முறை சொல்லிட்டேன்… உதட்டை அப்படி கடிக்காதே என்று… டோட்டல் கன்ட்ரோல் எனக்குப் போகுதுன்னு சொன்னால் புரிஞ்சுக்கணும்…. வேண்டாம் நான் கார் ஓட்டணும். என்னை டெம்ப்ட் செய்யாதே!…” என்றான் ஈஸ்வர்.
“எங்கே இருக்கேடா?…” என்றாள் சம்யுக்தா பேச்சை மாற்றும் விதமாய்.
ஈஸ்வர் தன் போக்குக்கு எதை எதையோ பேசிக் கொண்டு போக, சம்யு நிலையை உணர்ந்து ஹேமா, முகத்தைத் திருப்பிக் கொண்டு, மௌனமாய் சிரிக்க, அதைக் கண்டு முகம் சிவந்து, நெளிந்து கொண்டிருந்த சம்யுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
“பேச்சை மாத்தறீங்களா மேடம்?…” என்றான் ஈஸ்வர் ஆழ்ந்த குரலில்.
‘இவனுக்கு நேரம் காலம் கிடைக்குது பாரு ரொமான்ஸ் செய்ய… அய்யோ!… இவன் சாதாரண வாய்ஸில் பேசினாலே, எனக்குத் தலை சுத்தி போகும். நேற்றிலிருந்து ஹஸ்கி வாய்ஸில் பேசி, பேசியே கொல்றானே!…’ என்று உள்ளுக்குள் உருகி கொண்டிருந்தாள் சம்யு.
“என்னடீ!… பதில் சொல்லு…” என்றான் ஈஸ்வர் விடாமல்.
“ப்ரோபெஸ்சர் சார்… ஒரு வாரமாய், ஒரு மார்க்கமாய் தான் இருக்கு உங்க பேச்சு… சரியேயில்லையே!…” என்றாள் சம்யு.
“பல மார்க்கமாய் உன்னிடம் பேச நான் தயார் தான். நீ தான் கண்டுகவே மாட்டேங்கிறே!… சரியில்லையென்றால் அதைச் சரியாய் ஆராய்ச்சி செய்ய, நான் ரெடி டாக்டர் மேடம். ஆராய்ச்சியை எங்கே, எப்போ வைத்துக்கலாம் என்று சொல்லுங்க மேடம்.ஆராய்ச்சியாளன் ரெடியா இருக்கேன்…” என்றான் ஈஸ்வர்.
“ஆராய்ச்சியா… எ… எந்… எந்த ஆராய்ச்சி?…” என்றாள் சம்யு திணறியவளாய்.
“பேச்சைப் பற்றிய ஆராய்ச்சி தான் மேடம்… நீங்கத் தானே சொன்னீங்க. என் பேச்சு ஒரு மார்க்கமாய் இருக்குன்னு… பல மார்க்கமாய் உங்களிடம் பேச, செய்ய வேண்டிய ஆராய்ச்சியைத் தான் சொன்னேன்.தியரியா இல்லை பிராக்டிகல்? நீ எந்த ஆராய்ச்சியைப் பற்றி நினைச்சே பேபி?.” என்றவனின் கடைசி வாக்கியம் மட்டும் ஹஸ்கி வாய்ஸில் இருக்க, சம்யுவிற்கு மீண்டும் முகம் சிவந்தது.
“நான் எதையும்… எதையும் நினைக்கலையே!…” என்றவள் திணறலே, ஈஸ்வருக்கு சம்யுவின் பொய்யை உடைத்து விட்டது.
‘அய்யோ!… இப்படி படுத்தறானே… டேய் போதும்டா… முடியலை…’ என்று சம்யு மனதிற்குள் சிணுங்கினாலும், ஈஸ்வரின் இந்த நெருக்கம் அவளுக்குப் பிடித்தே இருந்தது.
“காரில் அவர்களையெல்லாம் வச்சிட்டு எதுக்கு இப்படியெல்லாம் பேசறே!.. என்ன நினைப்பாங்க…” என்றாள் சம்யு.
“அவங்க இல்லையென்றால் அப்போ உனக்கு ஓகேவா?…” என்றான் ஈஸ்வர்.
“எதுக்கு ?…” என்றாள் சம்யு உள்ளே போய் விட்ட குரலில்.
“நீ எதை நினைச்சியா அதுக்கே தான்…” என்றான் ஈஸ்வர் விடாமல்.
“நான் எதை நினைச்சேன்!… நான் எதையுமே நினைக்கலை…” என்றாள் சம்யு.
“ஆனா, நான் உன்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்கேன் சம்யு… ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே!…’ என்று உன்னால் புலம்பிட்டு இருக்கேன். என்னை என்னடி செய்தே?…
‘பிளாக் ஹோல்’ மாதிரிக் கண்ணை வச்சிட்டு, என்னை முழுசாய், உன் ஈர்ப்பு விசையில் விழ வைத்துட்டு இருக்கியேடி!… இருபத்தி நான்கு மணி நேரமும் உன்னுடன், உன் நெருக்கத்தில் உன் உதட்டில், உன் அணைப்பில் இருக்க வேண்டும் என்றே இருக்கிறதே!…
மீட்டிங் போட்டுடலாமா பேபி கேர்ள்?… நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கு… இன்னும் ஐம்பது வகை முத்தத்தை, ஆயிரம் ஆக்கும் ஆராய்ச்சிக்கே, உங்க உதட்டைக் கொடுக்க மாட்டேங்கறீங்க… இதுல ஹ்ம்ம் நான் எப்போ ஆயிரம், லட்சம் வகை முத்தங்களைக் கண்டு பிடிக்கிறது!.
தவிர நீ கஞ்சா தோட்டம் மாதிரி, உன் அருகே வந்தாலே, உன்மத்தம் பிடித்துப் போகிறது சம்யு. எண்ணம், சொல், செயல் எல்லாமே உன் ஒருத்தியிடம் தோற்று நிற்கிறேன்.
உன்னுள் நீ மறைத்து வைத்திருக்கும் இந்த மாயங்கள், மர்மங்களை எல்லாம் சோதித்து அறிய வேண்டுமே!… சோதிக்க சோதிக்க நீ காலத்தையே மறக்கச் செய்யும் மகோன்னதம். பேரானந்தம் ஒன்றின் தொடக்கம்டீ நீ.
உன் ஒளிரும் கண்ககள் மின்னும் போதெல்லாம், என் இதயம் பிரகாசிப்பது உனக்குப் புரிகிறதா சம்யு?
உன் அழகு பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க, தீண்டத் தீண்ட, ‘ஏன் முடிவற்றதாக’ எனக்குத் தெரிகிறது என்று உன்னைத் தேடி தேடி ஆராய வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது.
இதையெல்லாம் ஆராய்ந்து அறிய வேண்டும் சம்யு. சொல்லு மீட்டிங் போடலாமா?… உன்னில் என் தேடலை, ஆராய்ச்சியைத் தொடங்கட்டுமா?” என்றான் ஈஸ்வர்.
“ஈஸ்வர்!… ப்ளீஸ்!… நான் கோயில் வாசலைத் தாண்டி வெளி வந்து ரோட்டில் நிற்கிறேன் ஈஸ்வர். ப்ளீஸ்!… இதெல்லாம் நாம் தனியா இருக்கும்போது, நம் வீட்டில் பேசலாம்… இப்படி பொது இடத்தில் நின்றுட்டு வேண்டாம் ஈஸ்வர்.” என்றாள் சம்யு முணுமுணுப்பாக.
“என்னை ஏன் குறை சொல்றே சம்யு!… காதலிக்க மாட்டேன் என்று சொன்னவனை துரத்தி, துரத்து காதலித்து, காதலிக்க வைத்து, காதல் என்ற போதையை எனக்கு அறிமுகம் செய்தவள் நீ. அதன் ஆழத்தில் மூழ்கத் துணை நின்றவள் நீ.
உன்னால், உன் அருகில் நான் பைத்தியமாகி விட்டேன் சம்யு. இப்படியெல்லாம் உன்னைப் பார்க்கும் முன்பு நான் இப்படி இல்லையேடீ!…
எத்தனையோ பெண்களைக் கடந்த போதெல்லாம், வராத உணர்வுகள் எல்லாம், உன் ஒற்றை ஒர விழி பார்வையில் விழித்தெழுந்து பேயாட்டம் போட வைக்கும்போது நான் என்ன செய்வேன்சொல்லு!…
இந்தக் காதல் என்ற நோயின் இன்னொரு சைட் எபெக்ட் மோகம் ஸ்வீட்டி… அது கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும் தீ சம்யு… என்னுள் அந்தத் தீயை பற்ற வைத்தவளும் நீ தான்… தினமும் அதைப் கொழுந்து விட்டு எரிய வைப்பவளும் நீ ஒருத்தி மட்டும் தான். இதை வெல்ல துணையாய் தேவைப்படுவதும் நீ தான்.” என்று பேசிக் கொண்டே போனவனின் கை பட்டு காரிலிருந்த ரேடியோ ஆன் ஆக,
‘மோகம் என்னும் தீயில்
என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் உந்தன் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாய பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது
எந்தன் மூச்சு நின்று
போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம்
வந்து யாகம் செய்யும் நேரம்…நேரம்…
நீயே இங்கு வந்து தண்ணீர் ஊற்ற
வேண்டும்… வேண்டும்….
மனதில் உனதுஆதிக்கம்
இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்
விரகம் இரவைச் சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில்நீடிக்கும்
ஆசை என்னும் புயல்
வீசி விட்டதடி ஆணி வேர்
வரையில் ஆடி விட்டதடி….“என்ற பாடல் யேசுதாஸ் அவர்களின் குரலில் சத்தமாக ஒலிக்க ஆரம்பிக்க, சம்யுக்தா உதட்டைக் கடித்து தலை குனிந்தாள்.
https://www.youtube.com/watch?v=utSrVNerRM0
“பாரு!… நான் காதலிக்கும் உனக்கு என் நிலைமை புரியலை. ஆனா, ரேடியோகாரனுக்கு தெரிந்து இருக்கு… சிச்சுவேஷன் சாங் மாதிரி போடறான். அவனுக்கு இருக்கும் கருணை கூட உனக்கு என்மேல் இல்லை சம்யு…” என்று சிணுங்கியவனின் குரல் சம்யுக்தாவை புரட்டி எடுத்தது.
“ இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிட்டு இருந்தவனா இப்படியெல்லாம் பேசுறே!…” என்றாள் சம்யு.
“எங்கே பால் கிடங்கையே சுவாகா செய்யத் தான் ஆசையா இருக்கு… மேடம் கிட்டே இருந்து தான் சரியான ரெஸ்பான்ஸ் இருக்க மாட்டேங்குதே!… இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மாமா வைட்டிங். கான்பரென்ஸ் போட நான் தயார். மேடமுக்கு வசதி எப்படி?..” என்றான் ஈஸ்வர்.
‘அடியாத்தீ!… இவன் சுத்தி சுத்தி அங்கேயே வந்து நிக்கிறானே!… நானும் எத்தனை தடவை தான் இவனை டைவர்ட் செய்யறது!… காதலால், காதலித்து, காதலை வைத்தே கொல்வது எப்படி என்று இவன் கிட்டேயிருந்து தான படிக்கணும் போலிருக்கு. ஸ்வீட் செல்ல ராஸ்கல்…
தனியா இருக்கும்போது, முகம் பார்த்துப் பேச வேண்டியதை எல்லாம் லூசு நடு ரோட்டில் நின்னுட்டு போனில் பேசிட்டு இருக்கு. தனியா கையில் சிக்கு நீ. அப்போ இருக்கு…’ என்றவளை அவளின் மனசாட்சியே,
‘அவன் உன் கையில் சிக்குவது இருக்கட்டும்… நீ அவன் கையில் சிக்கினால் உன் நிலைமையை யோசி செல்லம்… இவனே சுனாமி மாதிரி பொங்கிட்டு கிடக்கான்…பார்த்துப் பத்திரம் ஏற்கனவே இவன் எந்த எல்லைக்குள்ளும் நிற்கமாட்டான்.
இதில் திருமணம் என்னும் லைசன்ஸ் வேற கொடுக்கப் போறே!… நைட் அவனிடம் சிக்கி என்ன ஆகப் போறியோ!…காதலித்தே உன் உயிரை உறிஞ்சி எடுக்கப் போறான் திருடன்…’ என்று உசுப்பி விட, அந்த எண்ணம் கொடுத்த மயக்கத்தில் நின்றவளை, இன்னும் மயக்க ஈஸ்வரின் குரல் கிசுகிசுப்பாய் சம்யுவின் செவிகளை மலர்கணையாய் ஊடுருவியது.
“பேபிகேர்ள்!… கான்பிரென்ஸ் போடலாமா?… மீட்டிங்கில் அலசி ஆராய வேண்டிய விஷயம் நிறையே இருக்கே!… எத்தனை நாள் தொடர்ந்தாலும் இந்த மீட்டிங் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போகும் போலிருக்கே!…. “என்றான் மீண்டும்.
‘இவன் விட்டா கான்பரன்ஸ் என்பதின் அர்த்தத்தையே மாத்திடுவான் போலிருக்கே!… இப்படியெல்லாம் பேசாதே என்றாலும், என் காது கேட்காது என்று அடம் பிடிக்கிறானே!…’ என்று காதலோடு அலுத்து கொள்வதை தவிர சம்யுக்தாவிற்கு வேறு வழியில்லை.
“என்னை என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றே தெரியவில்லைடீ. நான் மீள யாரும் விரும்பாத உன்னத போதை நீ. எனக்கு நீ வேண்டும் சம்யு… எப்பொழுதும் எனக்காக மட்டும்… என்னுடன் மட்டும் நீ இருக்க வேண்டும்… I need you… I want you…
நீ இல்லாமல் போனால் இந்த ஈஸ்வர் என்பவன் நடைபிணத்திற்கு சமம் சம்யு…. என்னை விட்டுப் போக மாட்டே தானே!… என்னுடனே இருப்பே தானே சம்யு?…. எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் இல்லைடீ…. என்னை விட்டுப் போயிடாதே சம்யு….” என்றான் ஈஸ்வர் உணர்ச்சி பெருக்குடன்.
காதலில் குழைந்து வழிந்து கொண்டிருந்தவனின் குரல் சட்டென்று ஏக்கம், தவிப்பு, துக்கம், துயரம் என்று மாற,
“என்னடா ஆச்சு?…” என்றாள் சம்யு வியப்புடன்.
“ஒண்ணுமில்லை சம்யுமா… மனசு என்னவோ பதறிட்டே இருக்கும்மா. என்னவோ உன்னையும், என்னையும் பிரித்து விடுவார்களோ என்று பயமாய் இருக்கு.
உன் அப்பா பத்தி விசாரித்தபோது, அவர் எந்த அளவிற்கு பணத்திற்கு மதிப்புக் கொடுப்பவர் என்பதெல்லாம் தெரிய வந்தது என்று தான் சொன்னேனே!. அதைக் கேட்டதிலிருந்து மனசை பிசைந்துட்டே இருக்கு சம்யு…” என்றான் ஈஸ்வர் கவலையுடன்.
சில பல மாதமாய் ஈஸ்வரின் இந்தப் புலம்பல் அதிகமாகி இருந்தது.
‘உன் தந்தை நம் காதலை சேர விடமாட்டார்’ என்ற அவனின் புலம்பலே, சம்யுக்தாவை இரவோடு, இரவாகத் தன் தந்தையிடம் கூடத் தெரிவிக்காமல் இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்ய வைத்தது.
இன்னொரு காரணம் நால்வர் மனதில் இருந்த சந்தேக தீ, பயம் ,சந்தேகம் சம்யுக்தாவையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
உள்ளுணர்வு ஏதோ பெரிதாக நடக்கப்போவதாய் அலற ஆரம்பித்து இருந்தது. தாயின் மரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமே, இந்தப் பயம் மனதில் எழுந்ததை நினைத்துப் பார்த்த சம்யுக்தா, ஈஸ்வரை இழக்க விரும்பவில்லை. அதனால் தான் ஈஸ்வரே அறியாமல் இந்தத் திருமண ஏற்பாடு.
‘All roads leads to rome எல்லா பாதைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்கிறது’ என்ற பதத்திற்கு ஏற்ப, தன்னை சுற்றி, தானே அறியாமல் நடக்கும் ஏதோவொன்று, தன்னை எதையோ நோக்கி நடத்தி செல்கிறது என்ற கலக்கமும் சம்யுக்தவிடம் தோன்றியிருந்தது.
தன்னை வழி நடத்தி செல்லும் இந்தப் பாதை, இலக்கைச் சென்று அடையும்போது, அங்கே ஏதோ நடக்க கூடாத ஒன்று நடக்க போகிறது என்ற எண்ணம் சம்யுக்தாவை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தது.
‘ ஈஸ்வரை தான் இழக்க போகிறோமா, இல்லை ஈஸ்வர் என்னை இழக்க போகிறானா?…’ என்ற பயம் மீண்டும் தலை தூக்க, வெளிறிப்போன முகத்துடன் மிடறு விழுங்கினாள் சம்யுக்தா.
ஆட்டம் தொடரும்…