Oh Papa Laali–Epi 3

அத்தியாயம் 3

சிங்கப்பூரின் முழு அழகை தரிசிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சிங்கப்பூர் ஃளையரில் ஏற வேண்டும். ஜயண்ட் வீல் என அழைக்கப்படும் இந்த ராட்சத ராட்டினத்தில் ஏறினால் இந்தோனேசியாவின் ஸ்பைஸ் ஐலண்ட் மற்றும் மலேசியன் ஸ்ட்ரேய்ட்ஸ் ஆப் ஜோகூரும் கண்ணுக்குத் தெரியும். இதில் ஹை டீ பேக்கேஜிம் இருக்கிறது. அதற்குறிய பணம் செலுத்தினால் டீ குடித்துக் கொண்டே வானைத் தொடலாம்.

 

“உன் மேல ஒரு கண்ணு

நீதான் என் மொறப்பொண்ணு

ஒன்னோட இவ ஒன்னு

உன்ன மறந்தா வெறும் மண்ணு”

புகிஸ்சில் இருந்த ஜோய்டேன் ஹால் களைகட்டி இருந்தது. அங்கு நடக்கும் ஒரு திருமண விருந்துக்கு டீ.ஜேவாக இருக்க சூர்யாவை அழைத்திருந்தார்கள்.

சேனலுக்கு நிகழ்ச்சிப் படைப்பது மட்டுமில்லாமல் இப்படி வெளியாட்களுக்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாக வழி நடத்திக் கொடுப்பான் இவன். இந்த மாதிரி திருமண விருந்து, பிறந்தநாள் விருந்து ஏன் காது குத்துக்குக் கூட சிலர் அழைப்பார்கள். இவனது ஸ்கேடுல் இடம் கொடுத்தால் முடிந்த அளவு ஒத்துக் கொள்வான் சூர்யா. நான்கு பேரை சந்தித்த மாதிரியும் இருக்கும், பணவரவும் இருக்கும்.

இந்த மாதிரி வெளி நிகழ்ச்சிக்குப் போகும் போது, இவன் புகழ் பெற காரணமான டேலண்ட் ஷோவில் இவனோடு களம் இறங்கிய பள்ளி நண்பன் சிவாவையும் சேர்த்துக் கொள்வான் சூர்யா. சிவா டீஜே சிஸ்டத்தைப் பார்த்துக் கொள்ள, சூர்யா பாட்டு பாடி, ஜோக்கடித்து, வந்திருந்தவர்களை பேச வைத்து என நிகழ்ச்சியை வழி நடத்துவான். பெண் பாடகியாக சிவாவின் கேர்ள்ப்ரேண்டும் இவர்களோடு கலந்துக் கொள்வாள்.

இந்த திருமண விருந்தில் சூர்யாவும் சிவாவின் காதலி மேகியும் (மகேஷ்வரியின் சுருக்கம்) சேர்ந்து பாடலை பாடி முடிக்க, கைத்தட்டத்தான் அங்கு ஆளில்லை. வந்திருந்தவர்கள் மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் ஒவ்வொரு மேசையாக நடந்து போய் வந்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளையின் அப்பா குடுகுடுவென இவர்கள் நின்றிருந்த மேடை அருகே வந்து,

“தம்பி! டபுள் பார்க்கிங் போட்டுருக்காங்களாம் இந்த கார்காரங்க. கொஞ்சம் நகர்த்த சொல்லுப்பா காரை” என சொல்லி கார் நம்பர் எழுதி இருந்த தாளையும் நீட்டி விட்டு குடுகுடுவென ஓடினார். சூர்யா அவர் சொன்னதை செய்து விட்டு அடுத்த பாடல் பாட ரெடியாக, அழகான குட்டி தேவதை ஒன்று அவன் அருகே வந்து நின்றாள்.

“யெஸ் ஏஞ்சல்! வாட் கென் ஐ டூ ஃபோர் யூ?” என சிரித்த முகமாக கேட்டான் இவன்.

“அங்கிள்! இந்தாங்க பைனேப்பிள் ஜூஸ்! தொண்டைக் காஞ்சிருக்குமாம்! குடிச்சுட்டு பாடுவீங்களாம்!” என கையில் இருந்த கண்ணாடி கிளாசைக் கொடுத்தாள்.

“சோ ஸ்வீட்மா நீங்க!” என கிளாசை வாங்கி மெல்ல அருந்தினான் சூர்யா.

“தேங்க்ஸ் அங்கிள்! ஆனா நானா கொண்டு வரல! ஒரு அக்கா குடுக்க சொன்னாங்க!”

“அக்காவா?”

“ஆமா! அவங்க நேம் இஸ் ஸ்கை மூன்” என சொல்லிவிட்டு இவன் மேலே விசாரிப்பதற்குள் தன் பெற்றவர்களிடம் சென்று விட்டாள் அவள்.

“வாவ் மைக் (இங்கே மச்சி என்பது போல பொருள்படும்)! சொல்லவே இல்ல! காதல் வைரஸ் உன்னையும் தாக்கிடுச்சா?” என மெல்லியக் குரலில் கேட்டான் சிவா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா” என வாய் சொன்னாலும் கண்கள் அலை பாய்ந்து கூட்டத்தை அலசியது!

‘இங்கயும் வந்துட்டியாடி ஃபேக் ஐடி! இன்னிக்கு உன்னைத் தேடி புடிச்சு என்ன விளையாட்டு இதுன்னு கேட்டுடனும்!’

“ஒன்னும் இல்லாமயா அன்னாசி சாறை அமிதம் ரேஞ்சுக்கு வழிச்சுக் குடிச்சிருக்க!” என சிவா கேட்கவும் தான் சொட்டு விடாமல் குடித்து முடித்திருந்த கிளாசைப் பார்த்தான் சூர்யா.

“தாகம்டா சிவா!”

“ஆமா, ஆமா! ஏதோ மோகம் ஏதோ தாகம்தான்! நீ நடத்து! ஸ்டைலா ஸ்லிம்மா உள்ளவன கூட நம்பலாம்! உன்னை மாதிரி குண்டா அண்டா மாதிரி இருப்பவன நம்பவே கூடாதுடா”

“போடா டேய்!”

மேகி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வந்திருந்தவர்களை கலகலப்பாக ஆட சொல்லி, பாட சொல்லி, மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல வைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

வந்திருந்த மக்களில் பெண்களை மட்டும் சூர்யாவின் கண் மெல்ல ஸ்கேன் செய்துக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் எல்லாம், சாப்பிட்டுக் கொண்டும், வைன் அருந்திக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்க இவனை யாரும் தனிப்பட்டு கவனித்த மாதிரி இல்லை.

தன் வேலையை முடித்துக் கொண்டு மேகி இவர்கள் அருகே வந்தாள்.

“பொண்ணு மாப்பிள்ளை சாப்பிடற டைம் இப்போ! நேயர் விருப்பம் வைக்கலாம்!” என சொல்லியவள் டீ.ஜே. சிஸ்டத்தின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த சிவாவின் மடியில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

அவர்கள் இருவரின் அந்நியோன்யம் அறிந்த சூர்யா, மெல்லிய புன்னகையுடன் நேயர் விருப்ப நிகழ்ச்சியைத் தொடக்கினான். வாய் பேசினாலும் கண்கள் அலைபாய்ந்த வண்ணமே இருந்தன அவனுக்கு. அவர்கள் வைத்திருந்த குட்டி மேசையில் கலர்புல் தாட்கள் இருக்க, சில பேனாக்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. மணமக்களுக்கு டெடிகேட் செய்ய பாட்டை எழுதி தங்கள் பெயரையும் எழுதி கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு. நிறைய பேர் வரிசைப் பிடித்து நின்று டெடிகேட் செய்ய வேண்டிய பாடலையும் தங்கள் வாழ்த்தையும் எழுதி, இவர்கள் வைத்திருந்த கண்ணாடி ஜாடியில் போட்டு விட்டு சென்றனர்.

அதில் எல்லாவற்றையும் பாட நேரம் போதாமல் போனாலும், அவர்களின் பெயரை வாசித்து குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் பாடினார்கள் சூர்யாவும் மேகியும்.

“அடுத்த பாடலை ‘வெட்டிங் கப்பில்ஸ் குளிரும் கம்பளியும் போல கட்டிக் கொண்டும், பஞ்சும் நெருப்பும் போல பற்றிக் கொண்டும்,   வாழ்வாங்கு வாழ வேண்டும்’ என வாழ்த்தி விரும்பிக் கேட்கிறார் ஸ்கைமூன்” என மேகி படிக்க, சட்டென அந்தத் தாளை வாங்கிப் பார்த்தான் சூர்யா. அதே அடுக்கி வைத்தது போல தெய்வீக எழுத்து. தவமின்றி கிடைத்த வரமே எனும் பாடலைக் கேட்டிருந்தாள் அவள்.

இந்தப் பாடலைப் பலமுறை பல நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறான் சூர்யா. பாடல் ஆரம்பத்தில் சூரியன், சூரியன் என பல தடவை வரும்.

‘வேணும்னே என் பேர் வச்ச பாட்டக் கேட்டிருக்கா! பேர பாரு மூனாம் மூனு! இவ பண்ணுற டார்ச்சர்ல மூனு படத்துல வர மாதிரி நான் கழுத்த அறுத்துக்கிட்டு சாகாம இருந்தா சரி! நடிகர் முரளி பாடிக்கிட்டே கண்ணால காதலிய தேடுவாறே அந்த மாதிரி என்னைத் தேட வச்சிருவா போலிருக்கே! இது சரிப்பட்டு வராது! என்னை வச்சி செய்யறதுக்காக யாரோ விளையாடற விளையாட்டு இது! மட்டி மாதிரி போய் மாட்டிக்கக்கூடாது!’ மனதை ஒரு நிலைப்படுத்தியவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் அழகாக அவள் கேட்டப் பாடலை பாடி முடித்தான்.

அதன் பிறகு எந்த வித அலட்டலும் இல்லாமல், மனதை அலைபாய விடாமல் அந்தத் திருமண விழாவை நடத்திக் கொடுத்தான் சூர்யவர்மன். நிகழ்ச்சி முடிந்து இவர்கள் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப மணி ஒன்றாகி விட்டது.

“பப்புக்குப் போலாமா மைக்?” என கேட்டான் சிவா.

“இல்லடா வீட்டுக்குப் போறேன்!”

“ஏன் வீட்டுல புள்ள குட்டி அழுவுதா நீ இன்னும் வரலன்னு? என்ன மைக் நீ! நைட் இஸ் ஸ்டில் யங் மேன்!”

“வா சூர்யா! லாஸ்ட் டைம் கூட நீ வரல! டேபிள் பார்த்து வைக்க சொல்லிட்டேன் நம்ம கைங்ககிட்ட(கைங்க என்பது நம்ம செட் என்பது போல பொருள்படும்)! இன்னேரம் பார்ட்டி சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கும்! கமான்!” என அழைத்தாள் மேகியும்.

இவன் தயங்க,

“ஏன் அன்னாசி கோவிச்சிக்குமா?” என கேட்டான் சிவா.

“அது யாரோ ப்ராங்க் பண்ணறாங்க! நீ வேற ஏன் அதையே புடிச்சு தொங்கற! நாளைக்கு காலையிலேயே ஷூட் இருக்குடா! அதான் யோசனையா இருந்துச்சு! சரி வரேன்! ஓன் ஹவர் தான் இருப்பேன்” என ஒத்துக் கொண்டான் சூர்யா.

அக்காவுக்கு காய்ஸ் நைட் அவுட் என மேசேஜைத் தட்டி விட்டவன், பேஸ்புக் நோட்டிபிகேஷனைப் பார்த்து ஆப்ளிகேஷனைத் திறந்தான். அவன் எதிர்ப்பார்த்த மாதிரி மேசேஜ் வந்திருந்தது. எவ்வளவு தடுத்தும் புன்னகை வரும் போல இருந்தது அவனுக்கு, திறந்துப் பார்த்தான்.

“நீ சூரியன் நான் வெண்ணிலா

உன் ஒளியால் தானே வாழ்கிறேன்!”

என அனுப்பி இருந்தாள் ஸ்கைமூன்.

இவன் ஆன்லைனில் இருந்தான் ஆனால் பதில் அனுப்பவில்லை.

“ரிப்ளை பண்ண மாட்டீங்களா வர்மன்?”

இன்னும் அமைதி இவனிடம்.

“உங்கக் கூட பாடன பொண்ணு அவ ஆள் மடியில உட்கார்ந்தப்போ நீங்க ஏன் ஏக்கமா பார்த்தீங்க வர்மன்? உங்க மடியில உட்கார அப்படி யாரும் இல்லைன்னா? நோ வோரிஸ்! நான் இருக்கேன் இனிமே! உங்க மடியில ஜம்முன்னு உட்கார்ந்துக்குவேன்! இனி உங்க மடி எனக்கு மட்டும்தான். ஒன்லி ஃபோர் மீ!”

இவனுக்கு சிரிப்பாக வந்தது.

‘லூஸ்சாடி நீ! என் மடியில உட்கார பொண்ணுங்க கியூ கட்டி நிக்கற மாதிரி பில்டப்ப பாரு!’

சிரித்துக் கொண்டாலும் பதில் போடவில்லை அவன்.   

“அப்புறம் இன்னொன்னு வர்மன்!”

என்னவென்று இவன் கேட்கவில்லை. அவளே சொல்லுவாள் என காத்திருந்தான். ஐந்து நிமிடம் காத்திருந்தவள், இவன் பதில் போடாததால் அவளே ரிப்ளை செய்திருந்தாள்.

“இன்னிக்கு நீங்க போட்டிருந்த கிரே கலர் ஸ்லேக் பேண்டுக்கு ப்ளூ கலர் ஷூ மேட்சிங்காவே இல்ல வர்மன். என்னால பார்க்கவே முடியல! அப்பவே அந்த ஷீவ கழட்டிட்டு ப்ளேக் கலர்ல ஷீ மாட்டி விடனும்னு கை பரபரன்னு இருந்துச்சு!”

இதற்கு அவனால் ரிப்ளை போடாமல் இருக்கவே முடியவில்லை.

“போடி அரை லூசு!”

என அனுப்பி விட்டவன், சிவாவின் காரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.