UTN 20

உயிர் தேடல் நீயடி 20

கேள்விப்பட்ட செய்தியில் அதிர்ந்த காவ்யதர்ஷினியின் கண்களும் முகமும் கலக்கத்தை பூசிக்கொண்டன.

விபீஸ்வர் அவளின் முகமாற்றத்தை கவனித்தப்படி, ஆலையின் பொறுப்பாளரோடு பேசிக்கொண்டே நடந்தான்.

இன்று அவர்கள் ஆலையை மேற்பார்வையிட வந்திருந்தனர். எங்கும் ராட்சத இயந்திரங்கள் இயங்கி கொண்டிருக்க, வழக்கமான வேலைகளை கவனித்தபடி மூவரும் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்.

அந்த அறை சிறிதாயினும் தேவையான வசதிகளுடன் நேர்த்தியாக அமைந்திருந்தது. மேலும் சில வேலைகளை அவர்கள் சரிபார்த்திருக்க, காவ்யா விபீஸ்வரை வித்தியசமாக சற்று கலவரமாக பார்த்திருந்தாள்.

தன் பணியை முடித்து கொண்டு ஆலை பொறுப்பாளர் வெளியே நகர்ந்து விட,
“என்னை அப்படி குறுகுறுன்னு பார்க்காத கவி! அப்புறம் ம்ம்…” விபீஸ்வர் குறும்பாக இழுத்தான்.

“விளையாடுற விசயமா சர் இது, ஓர் உயிர் போயிருக்கு சர்!” அவள் முகத்தில் அதிர்ச்சியும் கலக்கமும் போட்டியிட்டது.

“நீ இவ்வளவு டென்ஷன் ஆக அவசியம் இல்ல கவி, அந்த மாணிக்கம் கருணா கிட்ட இருந்து தப்பிக்கிறேன் பேர்வழின்னு அந்த ஓல்ட் பில்டிங் மேல இருந்து குதிச்சிருக்கான். ஸ்பாட் அவுட்” அவன் சாதாரணமாக விளக்க,

“எவ்வளவு ஈஸியா சொல்லிட்டிங்க சர், இதுக்கு பேர் கொலை…! அவன் தப்பே செஞ்சிருந்தாலும் அதுக்காக உயிரை எடுக்கிறது பாவம் சர்” அதைப்பற்றி நினைக்கவே இவள் உள்ளம் நடுங்கியது.

விபி தன் இடத்தில் இருந்து எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான். “எனக்கும் உயிரோட வேல்யூ தெரியும், அதான் அவன் உடம்புல உயிரை மட்டும் விட்டு வைக்க சொல்லி இருந்தேன். இப்ப அங்க நடந்தது தற்கொலை. நீ வீணா குழப்பிக்காத” என்றவனின் கைகள் புது பழக்கமாய் அவள் கரத்தை பற்றி ஆறுதலாக அழுத்தின.

“இந்த ஒருவாரமாவா அந்த மாணிக்கத்தை அடைச்சு வச்சிருந்தீங்க! ஏன் சர்?” அவள் கேள்வி திகைப்பாக வந்தது.

“பின்ன, உன்ன கைநீட்டி அடிச்சவனை அப்படியே விட சொல்றீயா?” அவன் முகத்தில் ஏறிய கடுமைக்கு சற்றும் பொருந்தாமல்‌ அவன் மற்றொரு கரம் அவளின் அறைவாங்கிய கன்னத்தில் மென்மையாக பதிந்தது.

காவ்யா தனக்குள் ஏதோ தடுமாறுவதை போல் உணர்ந்தாள். அவனின் உரிமையும் இத்தனை நெருக்கமும் அவளுக்கு வேறேதோ உணர்த்துவதாய்,
மூளைக்குள் பொறி தட்ட சட்டென எழுந்து விலகி நின்றாள்.

முன்பு போல் அவளின் விலகலை இப்போது ஏற்றுக் கொள்ள முடியாமல், “கவி!” கண்டனமாக அவன் குரல் சீறியது.

“ஏன் சர், என்னோட விசயத்தில நீங்க தேவை இல்லாம இவ்வளவு இன்வால்வ் ஆகுறீங்க?” காவ்யா பதற்றமாக வினவ,
“ஏன்னா? நீ என்னோட கவி…!” அவளை நேர் பார்வையாய் பார்த்து விபீஸ்வர் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாய் தன் மனதை உரைக்க, அதிர்ச்சியில் கண்கள் அகல விரிய முகம் வெளிறி நின்றாள் காவ்யதர்ஷினி.

தான் அப்படி சொன்னதும் இவள் கண்கள் இப்படி தான் விரியும் என்று நினைத்திருந்தவனின் எதிர்பார்ப்பு நிறைவேறிட அவனிதழ் மென்மையாய் விரிந்தது.

“நான் நான் எப்படி? நீங்க… ஏதோ தப்பா…!” என்று பதறி திணறி நின்றவளின் முகம் நோக்கி இவன் கரம் வாஞ்சையோடு உயர, அவள் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டாள்.

உயர்ந்த கரத்தை வேகமாய் உதறி விட்டு ஆழ மூச்செடுத்தவன், “நான் நீயாகி போய் ரொம்ப நாளாச்சு கவி, அதை நீதான் இன்னும் புரிஞ்சுக்காம இருக்க”

“…!”

“முன்ன காதலுக்கு ஸ்பெல்லிங் என்னனு கேட்டவனுக்குள்ள, இப்ப காதலை உணர வச்சது நீதான் கவி!”

காவ்யா முதல் கட்ட அதிர்விலிருந்து விலகி தன்னை மீட்டுக் கொண்டாள். “காதலா? அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா சர் உங்களுக்கு? தினம் ஒரு பொண்ணு தேவைன்னு தேடுற உங்களுக்கு எல்லாம் காதல் எதுக்கு சர்?” அவள் கோபமாக வார்த்தைகளை வீசினாள்.

அவளின் கேள்வியில் விபீஸ்வர் கண்களை அழுத்தி மூடி திறந்தான். “உன்ன பார்க்கிற வரைக்கும் அதெல்லாம் எனக்கு தப்பா தோணல கவி… நான் வளர்ந்த சிச்சுவேஷன்ல அதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸியா கிடைச்சது, நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்… தட்ஸ் ஆல் நானா அதை தேடி போகல”.

“வாவ், எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டிங்க சர்…! இது உங்க லைஃப், நீங்க எப்படின்னா போங்க, அதுக்குள்ள என்னை ஏன் இழுக்க ட்ரை பண்றீங்க?” காவ்யா ஆதங்கமாக கேட்க,

“நானில்ல, நீதான்…! என் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் மாத்தி வச்சது நீதான்! என் ஃபீலிங்க்ஸ நான் சொல்லும் போதும் புரிஞ்சுக்காம அடம்பிடிக்கிறதும் நீதான்!” விபீஸ்வரும் அவளுக்கிணையாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

“நடு ராத்திரியில, குடி போதையில என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண முயற்சி செஞ்சீங்க இல்ல, அப்பவே உங்களை நல்லா புரிஞ்சிகிட்டேன் சர்” அவள் வெறுப்பான பதிலை வீசினாள்.

“எனக்கு அப்ப தெரியாதே கவி, நீதான் என் காதல்னு! இனி என் மொத்த வாழ்க்கைக்கும் நீ மட்டும்தான்னு… தெரிஞ்சு இருந்தா அப்படி ஒரு முட்டாள் தனத்தை செஞ்சிருக்க மாட்டேன்…” அவனிடத்திலும் கசந்த பதில் தான் வந்தது.

“நான் உங்க காதல் இல்ல சர், மறுபடியும் அப்படி சொல்லாதீங்க… அந்த மாணிக்கத்துக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ரெண்டு பேரும் எங்கிட்ட… ச்சே ஆஆஅ…!” விபீஸ்வர் ஆவேசமாக அவள் கையை முதுகுபுறமாய் சுழற்றி மடித்து, அவள் முகத்தை தனக்கு நேராக கொண்டு வந்திருந்தான்.

“அந்த ராஸ்கலும் நானும் உனக்கு ஒண்ணா? சொல்லு காவ்யா?” விபீஸ்வரின் கோப பார்வை அவளை தகித்தது.

“…!”

“அன்னைக்கு அத்தனை போதையிலும் நீ ‘ஓகே’ சொல்லணும்னு உன் ஒரு வார்த்தை பதிலை தான் கேட்டுட்டு இருந்தேன்… உனக்கு கைல அடிபடாம இருந்திருந்தாலும் நீ சம்மதம் தராம உன்ன நான் நெருங்கி இருக்க மாட்டேன், புரிஞ்சுதா?” அவன் கைகள் தந்த அழுத்தத்திலும் அவன் பார்வை வீச்சிலும் இவளின் தொண்டைக்குழி உலர்ந்து கண்கள் கலங்கியது.

அவளின் ஏறி இறங்கிய தொண்டைக்குழியிலும், கண் கண்ணாடிக்கு பின் கலங்கிய கண்களையும் பார்த்து இவன் முகமும் சுருங்கியது.

“இனி எப்பவுமே இப்படி பேசாத காவ்யா, உன்னால என் மனசை புரிஞ்சிக்க முடியலன்னா பரவால்ல, நான் உன்மேல வச்சிருக்க காதலை கொச்சபடுத்தாத… அன்னிக்கும் உன்கிட்ட இதைதான் கேட்டேன்… இப்பவும் உன்கிட்ட அதையே தான் கேட்கிறேன்! எனக்கு நீ வேணும் காவ்யா… என் வாழ்நாள் முழுக்க நீ எனக்கே எனக்கா வேணும்…!”

இவன் விழிகளும் கலங்கி மொழிய, அவள் பார்வை மிரண்டு விரிந்தது.

“நானும் ஒருத்தி கிட்ட பிரப்போஸ் பண்ணுவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்ல, பட் இப்ப… லவ் யூ டி சோடாபுட்டி…!” என்று தன் காதலை சொன்னவன், இன்னும் தன் கைப்பிடியில் சிக்கி நிற்கும் பெண்ணவளின் அரும்பிதழில் அழுத்தமாய் முத்தமிட்டு விலக்கினான்.

காவ்யா இருகைகளாலும் தன் வாய்மூடி அதிர்ந்து நின்று விட்டாள். அடுத்ததை யோசிக்க கூட இயலாமல் அவள் உள்ளும் புறமும் ஸ்தம்பித்து போயிருந்தன அந்த சில கணங்களில்…

.
.
.

இரவு வானம் விடியலின் வெண்மை பூசிக் கொள்ள, தன்னவளிடம் முதல் முத்தம் பகிர்ந்து கொண்ட தருணம் நினைவில் எழந்து ஆணிவனின் வதனமும் சற்றே வெட்க சிவப்பை பூசிக் கொண்டது.

அன்று இருகைகளால் வாய்மூடி மிரண்டு துடித்து நின்ற அவளின் நிலை இவனுக்கு பாவமாக தான் தோன்றியது.
தன் காதல் வேகத்திற்கு அவள் ஈடாக மாட்டாள் என்பதும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது. எனினும் அவனால் தன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியாமல் போனது.

தான் அவசரப்பட்டது புரிந்து தன்னை நொந்து கொள்ளவும் செய்தான். ஆனாலும் அவர்களின் திருமணத்தை அத்தனை அவசரமாய் ஆத்திரமாய் அடுத்த ஒரு மாதத்திற்குள் முடித்து இருந்தான் விபீஸ்வர்.

அவனிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. ‘நான் காவ்யா முழு சம்மதித்திற்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்திருக்கலாம்… அந்த நேரத்தில உடைஞ்சு போயிருந்தவளை நானும் அத்தனை அழுத்தம் கொடுத்து திருமணத்தை முடித்திருக்க கூடாது!’ என்ற காலம் சென்ற ஞானோதயம் இப்போது வந்தது அவனுக்கு.

கதவு‌ தட்டப்படும் சத்தம் கேட்டு, “கம்மின்” அனுமதி தர, கலில் தான் உள்ளே வந்தான்.

“குட்மார்னிங் சர்” பணிவாக வணக்கம் வைத்தவன் கையோடு கதவையும் தாழிட்டான்.

“குட் மார்னிங் கலில்” காலை புன்னகை முகத்தில் படர, விபீஸ்வர், கட்டிலில் இருந்து கீழே கால் வைத்து மெள்ள இறங்கி நின்றான்.

கலில் பற்றுதலாக தன் கையை நீட்ட, அவன் கையை பிடித்த படி மெதுவாய் அடியெடுத்து வைத்து விபீஸ்வர் நடை பயின்றான்.

அந்த அறையில் இந்த நடைப்பயிற்சி அரைமணி நேரம் தொடர்ந்தது.

“முன்னைவிட இப்ப வலி குறைஞ்சு இருக்கில்ல சர்”

“ம்ம் பட் பிடிப்பிலாம சுயமா ரெண்டு அடி எடுத்து வைக்க முடியல தடுமாறுது”

“சீக்கிரமே நீங்க பழையபடி நடந்துடுவீங்க சர், எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு” என்று மகிழ்ந்த கலிலை விபி ஆர தழுவி இருந்தான்.

“தேங்க்ஸ் கலில்” முதலாளியின் முதல் அணைப்பில் இவன் நெளிந்தபடியே, “நீங்க என்ன சொன்னாலும் நான் மறுக்காம செய்வேன் சர், அது என்னோட கடமை” என்றான்.

“ம்ம் அப்ப நான் சொல்ற இந்த வேலையை சரியா முடிச்சிடு” என்று விபீஸ்வர் அவன் செய்ய வேண்டியதை பொறுமையாக விளக்கினான்.

கவனமாக கேட்டுக்கொண்டு, “சரி சர், வர்ஷினி மேடம் இதுக்கு ஒத்துக்குவாங்களா சர்?” சந்தேகமாக கேட்டான்.

“நான் அவகிட்ட முக்கியமான விசயம் பேசணும்னு சொல்லு… என்னை நேர்ல வந்து பார்க்க சொல்லு… அப்படியும் மாட்டேன்னு சொன்னா காவ்யாகாகன்னு சொல்லு, கண்டிப்பா ஒத்துப்பா” விபீஸ்வர் இளநகையோடு சொல்லிவிட்டு, சுவரை பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

அதே நேரம் இதமான சூட்டில் தேநீரை பருகிய படி, இதுவரை காவ்யா வழக்கில் எதுவும் சரியாக தெரியவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தார் காசிநாதன்.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த வழக்கை முடித்தே தீர வேண்டும் என்று மேலிடத்தின் அழுத்தம் வேறு இவரை படுத்திக் கொண்டு இருந்தது.

இந்த இரண்டு வார விசாரணையில் பெரிதாக விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காவ்யதர்ஷினி பிறந்த வீட்டிலாவது ஏதாவது தகவல் கிடைக்குமா? என்று எண்ணமிட்டபடி கிளம்பினார்.

காலைநேர பரபரப்பிலும் அமைதியாக இருந்தது அவர்கள் வீடு. சிவா குளித்துவிட்டு துவைத்த உடைகளை உலர்த்திவிட்டு வர, மஞ்சரி சமைத்துக் கொண்டிருந்தாள். பார்கவி ஓய்வில் உள்ளே படுத்திருந்தார்.

அழைப்பு மணி ஒலிக்கேட்டு வந்து கதவை திறந்த சிவா, காசிநாதனை உள்ளே அமர சொல்லி விட்டு உடைமாற்றி வர நகர்ந்து விட்டான்.

அந்த வீட்டை ஒருமுறை அலசிய அவர் பார்வையில் திகைப்பே மிஞ்சியது. அந்த சிறிய வீடு விலையுயர்ந்த சோஃபா, மர சாமான்கள் அலங்கார பொருட்கள் என வெகு ஆடம்பரமாக காட்சி தந்தது.

‘லோன் போட்டு வாங்கின வீட்டை இவ்வளோ செலவு பண்ணி டெகரேட் செஞ்சிருக்காங்க… ஓ பணக்கார வீட்டு சம்மந்தம் கிடைச்சதால வந்த ஆடம்பரமா இது!’ காசிநாதன் தனக்குள் கணக்கிட்டு கொண்டார்.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், காவ்யா பத்தி நீங்க என்ன விசாரிக்கணும்?” என்று சிவா அவர் முன் வந்து அமர்ந்து கொள்ள, மஞ்சரியும் அவர்கள் அருகில் வந்து நின்றாள்.

பார்கவி மும் எழுந்து வந்து மகனோடு அமர்ந்து கொண்டார். மாலை அணிந்து நிழற்படமாக சிரித்து கொண்டிருந்த தன் மூத்த மகளின் முகத்தில் பார்கவியின் பார்வை பட்டு திரும்பியது.

“நான் விசாரிச்ச வரைக்கும் காவ்யா தைரியமான பொறுப்பான பொண்ணா இருந்திருக்காங்க… ஆனா, இந்த கல்யாணம் எப்படி சாத்தியம் ஆச்சு? அவங்களோடது வசதியான குடும்பம், உங்களோடது…” காசிநாதன் கேள்வியாக நிறுத்தினார்.

“ஒருநாள் திடீர்னு விபீஸ்வரை, காவ்யா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருந்தா… அப்ப தான் ‘நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம் கல்யாணத்துக்கு உங்க சம்மதம் மட்டும் போதும்’னு அவர் கேட்டாரு… எங்க காவ்யாவுக்கு இவ்வளோ பெரிய இடம் அமைஞ்சிருக்குன்னு நான் ரொம்ப சந்தோசபட்டேன்… ஆனா இப்ப அவளையே இழுத்துட்டு நிக்கிறேன்…” பார்கவி சொல்லிமுடித்து சேலை முந்தானையால் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

“விபீஸ்வர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“விபி மாமா பத்தி குறை சொல்ல ஒண்ணுமே இல்ல சர், கல்யாணத்துக்கு முன்னையும் அப்புறமும் அக்கா மேல ரொம்ப உயிரா இருந்தாரு… இப்படி ஒரு விபத்து நடக்காம இருந்து இருக்கலாம்… காவ்யா உயிரோட இருந்து இருக்கலாம்”
சிவா விபீஸ்வருக்கு சாதகமாகவே பேச, பார்கவி மகனை முறைத்து வைத்தார்.

“கல்யாணத்துக்கு பிறகு காவ்யதர்ஷினி கிட்ட ஏதாவது சொல்லும் படியா மாற்றம் தெரிஞ்சதா உங்களுக்கு?” காசிநாதனின் அடுத்த கேள்விக்கு மஞ்சரி பதில் தர முன் வந்தாள்.

“நிறைய இன்ஸ்பெக்டர், இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சுதுல இருந்தே அக்கா ரொம்பவே மாறி போயி இருந்தா… காதலிச்சவரை கல்யாணம் பண்ணிக்க போற நிறைவோ, பெரிய இடத்துல வாக்கபட போற சந்தோசமோ அவ கிட்ட இல்லவே இல்ல…!”

“நீங்க இதைப்பத்தி காவ்யா கிட்ட கேட்டீங்களா?”

“கேட்டேன் அக்கா சரியா பதில் தரல… அதோட எங்ககிட்ட அதிகமா பேசறதையும் குறைச்சுட்டு தனியா போய் உக்கார்ந்திருப்பா…”

“சரி கல்யாணம் முடிஞ்ச அப்புறம்?”

“அது… எப்பவாவது தான் வீட்டுக்கு வருவாங்க, விபி மாமாவும் கூடத்தான் வருவாரு… எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா பேசுவாரு, அக்காவை பேச்சுக்கு இழுத்துட்டே இருப்பாரு… காவ்யா தான் உம்முன்னே இருப்பா…” மஞ்சரியின் கண்முன்னே அனைவரும் சந்தோசமாக இருந்த நிகழ்வுகள் விரிந்தன.

“ஒருவேளை நடந்த விபத்து கொலை முயற்சியா இருந்தா நீங்க யாரை சந்தேகபடுவீங்க?” காசிநாதனின் கடைசி கேள்வியில் இளையவர்கள் யோசனையில் இருக்க, பார்கவியின் பதில் பட்டென்று வந்தது.

“விபீஸ்வர் மேல தான்…”

“எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க மா?”

“ஒருமுறை இதை காவ்யா தான் சொன்னா, ‘பணக்காரங்க பத்தி அவங்க குணம் பத்தி தெரியாம வெகுளியா இருக்கீங்க மா! அதை புரிஞ்சிக்கும் போது நீங்க கஷ்டபடுவீங்க, நான் உங்ககூட இல்லாம போனாலும் சிவா, மஞ்சரியை நல்லபடியா பார்த்துக்கங்க, உடைஞ்சு போய் மூலையில உக்கார்ந்துட்டு அவங்களையும் கலங்க விட்டுடாதீங்க, எப்பவும் தைரியமா இருங்க…!’ அவ சொன்னதை அப்ப நான் தான் புரிஞ்சுக்கில…” பார்கவி தலையில் அடித்து கொண்டு அழ, மற்ற இருவரும் அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.

அதற்கு மேலும் விசாரணையை தொடர முடியாமல் காசிநாதன் விடைபெற்று கிளம்பினார். அந்த விபத்து பற்றிய ரகசியத்தை எப்படியும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு.

#

உயிர் தேடல் நீளும்…