Oviyam 4

கருணாகரன் கழுத்து டையைச் சரிசெய்ய அவருக்குத் தேவையான பொருட்களை அந்தச் சின்ன சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தார் கற்பகம்.
“கருணா…” மனைவியின் கொஞ்சற் குரலில் லேசாகத் திரும்பினார் கருணாகரன். இந்தக் குரலில் மனைவி குழைந்தால் ஏதோ பெரிதாகத் தன்னிடம் நடத்திக் கொள்ளத் திட்டம் போடுகிறாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
“என்ன… குரல் ரொம்பத்தான் கொஞ்சுது? கருணாக்கு என்ன வெச்சிருக்கே?”
“உங்களுக்குக் குடுக்க எங்கிட்டச் சக்தி இருக்கா கருணா?”
“இஞ்சப்பார்ரா… இது எப்போ இருந்து?”
“கேலி பண்ணாதீங்க கருணா.” சிணுங்கினார் கற்பகம்.
“சரி… என்ன விஷயம் சொல்லு.”
“செழியனுக்கு ஒரு வரன் வந்திருக்கு…”
“அப்படியா! சொல்லவே இல்லை. நமக்குத் தெரிஞ்சவங்களா கற்பகம்?”
“ம்… அப்படிச் சொல்ல முடியாது… ஆனாத் தெரிஞ்ச மாதிரித்தான்.” மனைவியின் பதிலில் கருணாகரனின் நெற்றி சுருங்கியது.
“புரியலை…”
“சந்திரமோகன் அண்ணாக்குத் தெரிஞ்ச பொண்ணாம்.”
“அப்படின்னா எனக்கும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்குமேம்மா. பொண்ணு யாரு?”
“அண்ணா ஹாஸ்பிடல்ல வர்க் பண்ணுதாம்.” தயங்கிய படியே பதில் சொன்னார் கற்பகம். உன் பதில் எனக்கு அத்தனை திருப்தியாக இல்லையே என்பது போன்று மாறியது கருணாகரனின் பாவம்.
“தப்பா எதுவும் சொல்லிடாதீங்க கருணா. பொண்ணோட ஃபோட்டோ ஒன்னு அண்ணா அனுப்பி இருந்தாங்க. அவ்வளவு அழகா இருக்கா. ரொம்பப் பொறுப்பான, பொறுமையான பொண்ணாம். அப்பா பேங்க்ல வர்க் பண்ணுறாராம். ரொம்ப நல்ல குடும்பமாம்.” மனைவி மூச்சு விடாமல் பேசவும் கருணாகரன் தாடையைத் தடவிக் கொண்டார்.
“உனக்குப் பிடிச்சிருக்கா கற்பகம்?” கணவனின் கேள்வியில் கற்பகத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. லேசாகத் தடுமாறினார்.
“கற்பகம்… உன்னைத்தான் கேக்குறேன். உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா?”
“ஃபோட்டோல தான் பார்த்திருக்கேன். ஒரு தரம் நேர்ல போய்ப் பார்க்கட்டுமா?” மனைவி ஆவலாகக் கேட்கவும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் கருணாகரன். முகம் சிந்தனையைக் காட்டியது.
“கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க கருணா. ஊர் உலகத்துல நடக்குற கூத்துகளைப் பார்க்கும் போது வயிறு கலங்குது.  எனக்கு எம்புள்ளைங்க நிம்மதியா வாழணும். இந்த வீடு நிம்மதியா இருக்கணும். வரப்போறவ கொண்டுவந்து தான் இங்க நிறையப் போகுதா என்ன? வீட்டை ரெண்டு பண்ணாத பொண்ணு வந்தாப் போதும். எனக்கு இந்த சாதி, அந்தஸ்துல எல்லாம் நம்பிக்கை இல்லை.”
“செழியனுக்குத் தெரியுமா?”
“இன்னைக்குக் காலையில தான் பேசினேன். ஷாக் ஆகிட்டான்.” கற்பகத்தின் முகத்தில் இப்போது கொள்ளைப் புன்னகை.
“ம்…”
“கொஞ்சம் டைம் குடுங்கம்மா, யோசிச்சுப் பதில் சொல்றேன்னு சொன்னான்.”
“ம்…”
“கருணா… நான் அந்தப் பொண்ணை ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்க்கட்டுமா?”
“உனக்கு இவ்வளவு பிடிச்சிருக்குன்னா நான் என்னம்மா சொல்லப் போறேன். ஆனா யாருக்கும் இப்பவே வாக்குக் குடுக்க வேணாம். செழியனையும் ஃபோஸ் பண்ணக்கூடாது. நானும் குடும்பத்தைப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கிறேன் என்ன?”
“ம்…” உற்சாகமாகத் தலையாட்டிய மனைவியின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினார் கருணாகரன். இரண்டு நாட்கள் டெல்லியில் வேலை இருந்ததால் பயணப்படுகிறார்.
கணவரை ஏர்போர்ட் வரை அழைத்துச் சென்ற கற்பகம் அங்கிருந்த படியே சந்திரமோகனை அழைத்தார்.
“சொல்லும்மா கற்பகம்.”
“அண்ணா… நான் அவர்கிட்டப் பேசிட்டேன். செழியனுக்கு ஓகேன்னா அவருக்கும் ஓகே தான் போல. நாம இன்னைக்கேப் பொண்ணைப் பார்க்கலாமாண்ணா?” கற்பகத்தின் குரலில் அத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி சந்திரமோகனையும் தொற்றிக் கொண்டது.
“நான் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு உன்னைக் கூப்பிடுறேன் கற்பகம்.”
“சரிண்ணா. தாமதப் படுத்தாதீங்க. நான் காத்துக்கிட்டு இருப்பேன்.”
“சரிம்மா.”
இங்கே பேச்சு இப்படி இருக்க… அங்கே அருணை அமைதிப்படுத்த மாதவி தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்.
காலேஜிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரன்ட்டிற்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அருணின் முகத்தில் அத்தனை ஆவேசம் தெரிந்தது.
“ஆனாலும் அந்த மனுஷன் இவ்வளவு சுலபத்துல பின்வாங்குவார்னு நான் நினைச்சேப் பார்க்கலைக்கா!”
ஆச்சரியப்பட்ட முல்லையை முறைத்தான் அருண்.
“தங்கை தான் பொறுக்கின்னு பார்த்தா அண்ணனும் பக்காப் பொறுக்கியா இருக்கான்.”
“அருண்!”
“நீ சும்மா இரு மாதவி. உனக்கு ஒன்னும் தெரியாது.”
“ஆமாடா… எனக்கு ஒன்னுமே தெரியாது. அந்த மனுஷன் எங்க ஹாஸ்பிடல்ல வர்க் பண்ணுற பெரிய சர்ஜன். அது தெரியுமா உனக்கு?” மாதவி வெடித்த போது அங்கிருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். அருண் உட்பட.
“என்னக்கா சொல்லுறீங்க?”
“ஆமா காஞ்சனா… ரொம்ப நல்ல மாதிரி.”
“அதுதான் உங்களைப் பார்த்ததும் ஆஃப் ஆகிட்டாரா!” ஆனாலும் அந்தப் பதிலில் அருண் திருப்தியடையவில்லை. செழியன் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது.
“அருண்! எதுக்குடா அந்தப் பொண்ணை அடிச்சே நீ? அப்படி என்ன தான் அவ அக்காவைப் பத்தித் தப்பாப் பேசினா?” விஷால் சுவாரசியமாகக் கேட்கவும் அருணின் முகம் கடுகடுத்தது.
“அதான் கேக்குறான் இல்லை… வாயைத் தொறந்து பதிலைச் சொல்லேன்.” மாதவி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
“பொண்ணா அவ… பேய்… இன்னொரு பொண்ணைப் பத்தி இப்படிப் பேசுறோமேன்னு ஒரு எண்ணம் வேணாம்?” இப்போதும் அருண் குமுறினான்.
“அப்படி என்னத்தை மச்சான் அவ சொல்லித் தொலைச்சா?”
“அவ என்னதான் சொல்லி இருந்தாலும் இவன் கை நீட்டினது தப்பு விஷால். அதை என்னால ஏத்துக்கவே முடியலை.”
“ஆமா… நீ இப்படியே நியாயம் பேசிக்கிட்டு உக்காந்திரு. நீ நைட் ட்யூட்டி பார்த்து சம்பாதிக்குற பொண்ணாம். அந்தத் திமிர் புடிச்சவ சொல்லுறா? என்னை என்ன பண்ணச் சொல்லுற?” அருணிற்கு மூச்சு வாங்கியது.
“இதுல நீ கோபப்பட என்னடா இருக்கு? நான் நைட் ட்யூட்டி பார்க்கிறேன் தானே? ஏன்? அவ அண்ணா கூட நைட் ட்யூட்டி பார்க்குறார். இதுல தப்பாப் பேச என்னடா இருக்கு?”
“என்னக்கா சொல்லுறீங்க நீங்க?‌ அருணாவது வெறும் அறையோட விட்டான். இது மட்டும் எங்காதுல விழுந்திருந்தா அவ தலைமயிரை ஒன்னொன்னாப் பேத்திருப்பேன்.” இது காஞ்சனா.
“ஆ… அப்படிச் சொல்லு காஞ்சனா. உனக்குக் கோபம் வருதில்லை? அப்போ எனக்கு வராதா? அவ வேணுமின்னேப் பேசினா. நான் வர்றது தெரிஞ்சுதான் பேசினா.” அருண் பற்களை நறநறவென்று கடித்தான்.
“அப்படியா மச்சான்?”
“ஆமாண்டா… அவ கூடவே இன்னொருத்தி திரிவாளே. அவ தான் இவளுக்கு தகவல் சேகரிச்சுச் சொல்லி இருப்பா. இவளும் அவ இஷ்டத்துக்குப் பேசுறா. விடுவேனா நானு. அவ பல்லைப் பேத்திருக்கணும். தப்பிட்டா.”
“சரி விடு அருண், கோபப்படாதே. நீயும் அவளைச் சும்மா சும்மாச் சீண்டியிருக்கக் கூடாது. கொஞ்சம் பெரிய இடத்துப் பொண்ணில்லையா? அதான்… சீனியர்னும் பார்க்காம உன்னோட மோதிப் பாராக்குறா.”
“என்ன பேசுற முல்லை நீ? நம்ம காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க வசதியா இருந்தும் அடக்கமா இருக்காங்க. ஏன்? நீங்கெல்லாம் இல்லையா? உங்களையெல்லாம் நம்ம சீனியர்ஸ் என்ன பாடு படுத்தினாங்க. தாங்கிக்கலை?”
“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அருண். அதை நீ புரிஞ்சுக்கணும்.” மாதவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் ஃபோன் சிணுங்கியது. சந்திரமோகன் அழைத்துக் கொண்டிருந்தார்.
“ஹலோ.”
“மாதவி… பிஸியா இருக்கியாம்மா?”
“இல்லை டாக்டர்… நீங்க சொல்லுங்க.”
“ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா இன்னைக்கு?”
“இல்லை டாக்டர், கோவிலுக்குப் போகணும் அவ்வளவு தான். நீங்க சொல்லுங்க.”
“ஓ… அப்போ நல்லதாப் போச்சு. எந்தக் கோவில்னு சொன்னா நானும் அங்க வர்றேன். கொஞ்சம் பேசணும் மாதவி.” டாக்டர் சொல்லவும் மாதவிக்குத் திக்கென்றது. அதற்குள் இவர் காதுவரை விஷயம் போய்விட்டதா? செழியன் அந்த அளவிற்கு சந்திரமோகனிடம் எல்லாவற்றையும் பேசுபவனா?
“டாக்டர்… ஏதாவது ப்ராப்ளமா?”
“ஐயையோ! இல்லைம்மா. கார்த்திகேயனுக்கு வேண்டப்பட்டவங்க ஒருத்தர் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அவர் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டியாம்.” சந்திரமோகன் சொல்லி விட்டுச் சிரிக்கவும் மாதவியும் சிரித்தாள். ‘அப்பாடா’ என்றிருந்தது.
“அது என்னோட ட்யூட்டி தானே டாக்டர்.”
“அதை வர்றவங்கக் கிட்ட நீயே சொல்லும்மா.”
“சரி டாக்டர்.” இது வழமை என்பதால் மாதவியும் பிகு பண்ணாமல் ஒத்துக்கொண்டாள். அவள் பணியில் இதுபோல நடப்பதெல்லாம் சகஜம் தான்.
“யாருக்கா?” இது காஞ்சனா.
“எங்க சீஃப். யாரோ பேஷன்ட்டோட சொந்தக்காரங்க தாங்க்ஸ் சொல்லணுமாம். அதுக்காகக் கூப்பிட்டாங்க.”
“ஓகேக்கா. அப்போ நாங்களும் கிளம்புறோம்.”
“இந்த முரடனைக் கொஞ்சம் நல்லாப் பார்த்துக்கோங்கப்பா.” இளையவர் பட்டாளம் கிளம்பவும் மாதவி இப்படிக் கவலைப் பட்டாள். அருண் அக்காவை முறைத்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.
***
மாதவி கோவிலுக்கு வந்திருந்தாள். மனது இருந்த நிலைமைக்கு அம்மா சொல்லும் முன்பாகவே கிளம்பி வந்து விட்டாள்.
அவள் மனம் முழுவதும் இளஞ்செழியன் தான் நிறைந்து நின்றிருந்தான். எவ்வளவு பெரிய டாக்டர்! இந்த ஒரு மாத கால இடைவெளியில் அவன் எத்தனை கெட்டிக்காரத்தனமான, கைராசியான டாக்டர் என்று அவள் புரிந்து கொண்டிருந்தாள்.
இவ்வளவும் இருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும் கொஞ்சமும் தலைக்கனம் இல்லாமல் அவன் பழகும் விதம், நடந்து கொள்ளும் முறைகள் என்று அவள் நிறையவே வியந்திருக்கிறாள்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன் முன்பு இன்று தலைக்குனிவாகிப் போய்விட்டதே! அருணைப்பற்றி என்ன நினைத்திருப்பார்!
என்னைப்பற்றி, என் குடும்பத்தைப் பற்றித் தவறாகத் தானே எண்ணம் உருவாகி இருக்கும்.
ஆனாலும்… அத்தனை அமைதியாகப் போய்விட்டாரே! ஹாஸ்பிடலில் அவரைப் பார்த்தால் இனி எப்படி முகம் கொடுத்துப் பேசுவது? இனிமேல் தன்னோடு பேசுவாரா?
முதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அருண் தவறான பையன் இல்லாவிட்டாலும் நடந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.
“மாதவி!” சிந்தனை கலைய நிமிர்ந்தாள் மாதவி. டாக்டர் சந்திரமோகன் நின்றிருந்தார். பக்கத்தில் இவள் அம்மாவின் வயதை ஒத்த ஒரு பெண்மணி நின்றிருந்தார். பிரகாரத்தில் உட்கார்ந்தபடி சிந்தனையில் இருந்த மாதவி சட்டென்று எழுந்து விட்டாள்.
“டாக்டர்!”
“என்ன பலமான யோசனையில இருக்காப்போல!”
“ஒன்றுமில்லை டாக்டர்… சும்மா தான்.”
“சரி சரி… இவங்க கற்பகம். என்னோட ஃபேமிலி ஃப்ரெண்ட். இன்னும் சொல்லப்போனா எனக்கு தங்கை மாதிரி.” அறிமுகப்படுத்தினார் சந்திரமோகன்.
“வணக்கம்மா.” மாதவி வணக்கம் வைக்க கற்பகமும் வணக்கம் வைத்தார். கோவில் பிரசாதத்தை இவள் நீட்ட வாங்கிக் கொண்டவர் குங்குமத்தை எடுத்து மாதவி நெற்றியிலும் வைத்து விட்டார். முகம் முழுக்கப் புன்னகை அப்பி இருந்தது.
சந்திரமோகனுக்கு அந்த ஒற்றைச் செய்கையே கற்பகத்தின் மனதைப் படம்பிடித்துக் காட்ட அவரைத் திரும்பிப் பார்த்தார். கற்பகத்தின் முகமே சொன்னது.
முதற்பார்வையிலேயே மாதவியிடம் கற்பகம் அவுட் என்று. ஆனால் பையன் என்ன சொல்லுவானோ!
“மாதவி… கார்த்திகேயன் அண்ணா எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. அவங்கதான் உன்னைப் பத்தி நிறையவே பாராட்டிப் பேசினாங்க. எனக்கும் உன்னை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்னு தோணிச்சும்மா. அதான் கிளம்பி வந்துட்டேன்.”
“அது என்னோட ட்யூட்டி தானே ஆன்ட்டி.”
“நல்லாச் சொன்னே போ! இன்னைக்கு எத்தனை பேரு அவங்க ட்யூட்டியை உருப்படியாப் பண்ணுறாங்க.”
“அதைச் சொல்லும்மா கற்பகம். ஒழுங்கா அவங்கவங்க ட்யூட்டியைப் பார்க்குறதுக்கே இப்போ நன்றி சொல்ல வேண்டி இருக்கு.”
சொல்லிவிட்டு சந்திரமோகன் வெடிச் சிரிப்புச் சிரிக்க பெண்கள் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
“பார்த்தீங்களா ஆன்ட்டி… சீஃப் என்னை எப்படிக் கேலி பண்ணுறாங்கன்னு.”
“அதானே! மாதவி… கண்டிப்பா ஒருநாள் நீ எங்க வீட்டுக்கு வரணும், சரியா?”
“ம்… வர்றேன் ஆன்ட்டி. நீங்க எனக்கு நன்றி சொல்றதைவிட டாக்டர் செழியனுக்குத்தான் நன்றி சொல்லணும். அதுதான் நியாயமும் கூட.” மாதவி பேச கற்பகத்தின் கண்கள் பளிச்சிட்டன.
சந்திரமோகன் மௌனமாகவே அந்த நாடகத்தைப் பார்த்தபடி இருந்தார்.
“அப்படியா என்ன?”
“ம்… அப்போதான் ட்யூட்டி முடிஞ்சு போன டாக்டர் எதையும் பொருட்படுத்தாம பேஷன்ட்டோட கண்டிஷன் தெரிஞ்சு உடனேயே வந்துட்டாங்க. ரொம்ப அக்கறையாப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கும் பேஷண்ட் ரொம்ப வேண்டப்பட்டவங்களாம். அவங்களோட பழைய ஹெட்மாஸ்டர்னு சொன்னாங்க.”
“ஓ…” கற்பகம் சந்திரமோகனைப் பார்க்க அவர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த புன்னகை இருந்தது. செழியன் மாதவியிடம் இவ்வளவு பேசி இருக்கிறானா? அத்தனை சுலபத்தில் யாரிடமும் இவ்வளவு பேச மாட்டானே!
பொதுப்படையாக சிறிது நேரம் பேசிவிட்டு இவர்கள் கிளம்ப மாதவியும் கோவிலை விட்டு வெளியே வந்தாள். மீண்டும் மனம் முழுவதையும் இளஞ்செழியனே வியாபித்துக் கொண்டான்.
நாளை அவளுக்கு ட்யூட்டி இருந்தது. எந்த முகத்தோடு அந்த மனிதரைப் போய்ப் பார்ப்பது. ஒரு ஃபோன் பண்ணி அவரிடம் மன்னிப்புக் கேட்கலாமா?
ம்ஹூம்… அது அத்தனை மரியாதையாக இருக்காது. நேரில் பார்த்துத் தான் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஆனால் அதைச் செய்யும் தைரியமும் அவளிடம் இருக்கவில்லை.
அதே நேரம் வீட்டுக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தார் கற்பகம். மாதவியைப் பார்த்தது முதல் அவரது மனதில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அதை வெளிப்படையாகவே சந்திரமோகனிடம் சொல்லிவிட்டார்.
‘அண்ணா! நான் முடிவே பண்ணிட்டேன். என் வீட்டு மருமக இவதான். இந்தப் பொண்ணுதான் என்னோட இளஞ்செழியனுக்குப் பொருத்தமான பொண்ணு.’
‘அவசரப்படாத கற்பகம். வீட்டுல எல்லார்க்கிட்டயும் பேசிட்டு முடிவு பண்ணலாமே.’
‘இல்லைண்ணா… எம் பேச்சுக்கு செழியன் எப்பவுமே மறுப்புச் சொல்ல மாட்டான். அவர்தான் கொஞ்சம் முரண்டு பிடிப்பார். ஆனாலும் நான் சமாளிச்சிடுவேன்.’
‘அப்படியே நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் கற்பகம்’ சந்திரமோகன் சென்றுவிட புன்னகை முகமாக வீட்டிற்குள் நுழைந்தார் கற்பகம். அண்ணனும் தங்கையுமாக ஹாலில் அமர்ந்திருந்தார்கள். தான் இருந்த மனநிலையில் அவர்கள் இருவரின் முகங்களையும் சரியாகக் கவனிக்கவில்லை கற்பகம்.
“அடடே! என்ன இன்னைக்கு அதிசயமா ரெண்டு பேரும் இந்த நேரத்துக்கு இங்க உக்கார்ந்து இருக்கீங்க? செழியா… நீ ஹாஸ்பிடல் போகல்லை?” தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்த கற்பகம் மகனை அப்போதுதான் கவனித்தார். இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.
“செழியா! என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” அப்போதும் மகன் வாயைத் திறக்கவில்லை.
“செழியா!” கற்பகத்தின் குரல் இப்போது லேசாக உயர்ந்தது.
“உங்க பொண்ணு திடீர்னு கால் பண்ணி என்னைக் கூப்பிட்டாம்மா. அதனாலதான் கிளம்பி வந்தேன்.”
“ஏன்? என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?”
“அதை அங்கேயே கேளுங்க.” மாதவியை அந்த இடத்தில் பார்த்த மாத்திரத்தில் தவறு தன் தங்கையின் மேலும் இருக்க வாய்ப்புண்டு என்று செழியனுக்குத் தோன்றியதால் காரில் வரும் போதே தங்கையைப் பேச வைத்திருந்தான்.
திக்கித் திணறியபடி அர்ச்சனா சொல்லிய விஷயங்களில் அவன் தாடை இறுகிப்போனது. இப்போது அதை விட இரட்டிப்புக் கோபத்தை தகவல் தெரிந்தபோது அன்னையின் முகம் காட்டவும் மகள் பயந்தே போனாள். அங்கே ஒருவன் காலேஜில் தன்னைக் கைநீட்டி அடித்தது அவளுக்கு மறந்தே போனது.
“செழியா… இப்போதான் கோவிலுக்குப் போய்ட்டு மாதவியைப் பார்த்தேன்.”
“அம்மா!” இளஞ்செழியன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அம்மாவின் வேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று காலையில் தானே இந்தப் பேச்சையே ஆரம்பித்தார்!
“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”
“அம்மா!”
“அம்மாவைச் சந்தோஷப்படுத்த ஏதாவது பண்ணணும்னு நீ நினைச்சா… அந்தப் பொண்ணைக் கட்டிக்க.” செழியன் திகைத்துப் போனான். கற்பகத்தின் குரலில் இருந்த உறுதி அவனைக் கலங்கச் செய்தது. தங்கையின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.
‘மாதவி’ என்பது யாரென்று தெரியாததால் புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவள் மூளைக்கு அப்போது எட்டியதெல்லாம், அண்ணாவிற்குத் திருமணம். அவ்வளவுதான்.
முகத்தில் குழப்பம் சூழ்ந்து கொள்ள எழுந்து விட்டான் இளஞ்செழியன். கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும் போல தோன்றவே ரூமிற்குள் போய்விட்டான். மகளைக் கோபமாக முறைத்தது அன்னையின் பார்வை.
error: Content is protected !!