Rainbow Kanavugal-13 and14

13

திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனதை மதுவால் இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த ஒரு மாதத்தில் அவள் கனவிலும் கூட கற்பனை செய்திராத உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அவளை அழைத்து சென்றிருந்தான்.

நிறைய நிறைய ஆச்சரியங்களும் அதிசயங்களும் கூடவே புதுப்புது காதல் அனுபவங்களும் என்று அஜய் அந்த ஒரு மாதத்தில் அவள் வாழ்க்கையையே புதுவிதமாக மாற்றியிருந்தான்.

பறவையை போல உலகமெல்லாம் சுற்றி திரிந்த அந்த நாட்களை எண்ணும் போதே அவள் உள்ளம் குதூகலித்தது. . வாழ்வின் நினைவுபெட்டகத்தில் ஒரு பொக்கிஷமாக அவளுக்கு அந்த ஒரு மாதம் மாறியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

ஆனால் இப்போது புரட்டி பார்த்ததால் நடந்தவையெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை போல தோன்றியது அவளுக்கு. வீட்டிற்கு வந்த மறுநாள்தான் அவள் தன்னுடைய ட்விட்டர் முகநூல் பக்கங்கள் மொத்தமாக முடக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்து போனாள்.

அப்போதே தன் தோழி ரேகாவை அவள் அழைக்க, அவளுக்கு வேறு சில அதிர்ச்சியான தகவல்களும் காத்திருந்தன.

எந்த வழக்கை அவள் நடத்தியே தீர வேண்டுமென்று தீவிரமாக இருந்தாலோ அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்திருந்தனர். ஊடகங்களும் அது பற்றி மொத்தமாக மறந்துவிட்டு வேறு செய்திகளுக்கு தாவியிருந்தன. மக்களும் கூட.

அதோடு அல்லாமல் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின்  அம்மாவே, அந்த வழக்கை நடத்த வேண்டாமென்று முடித்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு அவள் உச்சபட்சமாக அதிர்ந்தாள்.

“ஏன் டி… நீ இதெல்லாம் எனக்கு முன்னடியே ஃபோன் பண்ணி சொல்லல?” என்றவள் ரேகாவிடம் சீற,

“உன் நம்பரை காண்டெக்ட் பண்ணவே முடியல மது… அதுவுமில்லாம உன்னை தொந்தரவு பண்ணவும் எனக்கு சங்கடமா இருந்துச்சு” என்றாள்.

“அறிவே இல்லடி உனக்கு?” என்று தோழியிடம் கடிந்து கொண்டவள் சட்டென்று நிறுத்தி, “ஆமா ஏன் என் நம்பரை உன்னால காண்டெக்ட் பண்ண முடியல?” என்று கேட்டாள்.

“தெரியலையே” என்றவள் சொல்ல மதுவின் மூளை வேறு சில விஷயங்களை சிந்தித்து பார்த்தது.

அஜயுடன் தேனிலவு புறப்படும் தருவாயில் அவன் தன்னிடம் பரிசாக ஒரு புது செல்பேசியை தந்துவிட்டு பழைய பேசியை வீட்டிலேயே வைக்க சொன்னது அந்த சமயத்தில் நினைவுக்கு வந்து மனதை நெருடியது.

ஏதேதோ அரத்தமில்லாமல் பயணிக்கும் மூளையை கடிவாளமிட்டு நிறுத்தியவள்,

‘அப்படியெல்லாம் இருக்காது’ என்று தனக்குத்தானே சொல்லி சமாதானமும் செய்து கொண்டாள்.

ரேகா அப்போது, “மது” என்று அழைக்க, “ம்ம்ம் சொல்லு” என்றாள்.

“இன்னொரு விஷயத்தை சொல்லவே மறந்திட்டேன்” என்க,

“இன்னொரு விஷயம் வேறயா?” என்று மது சலித்து கொண்டாள். என்ன சொல்ல போகிறாளோ என்று அவள் பதட்டம் கொள்ள,

“உன்னை கோர்ட்ல சுட வந்தாங்க இல்ல… அதை அப்படியே ப்ளேட்டை திருப்பி போட்டுட்டாங்க” என்றாள் ரேகா.

“என்னடி சொல்ற?” அவள் புரியாமல் வினவ,

“அவங்க ஒன்னும்… உன்னை சுடலையாம்? அந்த ரவுடி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த போலிஸ்காரனை காழ்புணர்சசி காரணமாக சுட்டானாமாம்? அந்த போலிஸ்காரனே இதை ஒத்துகிட்டு பேட்டி கொடுத்தான்”

“இதெல்லாம் எப்போ நடந்தது ரேகா?”

“நீ ஊருக்கு கிளம்பி போன பிறகுதான் நடந்தது… கோழை பசங்க… நீ இல்லாத நேரமா பார்த்து பேசி இருக்கானுங்க… நீ இருக்கும் போது இப்படி பேசியிருந்தா நீ அவனுங்களை சும்மா விட்டிருப்பியா… கிழிச்சு தொங்க விட்டிருக்க மாட்ட” என்று தோழி சொன்ன நொடி மது பெருமூச்செறிந்தாள்.

‘இனி இந்த விஷயத்தில் எதுவுமே செய்ய முடியாது’ என்ற விரக்தி நிலை அவளை ஆட்கொண்டுவிட,

“சரி நான் அப்புறம் பேசுறேன்… நீ ஃபோனை வை” என்று இணைப்பை துண்டித்துவிட்டாள்.

ரேகா சொன்னவற்றை பற்றி தீவிரமாக யோசித்தவள்,  அஜய் வாங்கி தந்த அந்த நவீனரக செல்பேசியை எடுத்து ஆராய்ந்தாள்.

கடந்த ஒரு மாதத்தில் சில குறிப்பிட்ட அழைப்புகள் மட்டுமே அதில வந்திருந்தன. பெரும்பாலும் அது அவள் பெற்றோர்களின் அழைப்புகளாக மட்டுமே இருந்தன. அவளாக யாருக்கு அழைத்தாலும் அதிலிருந்து அழைப்புகள் செல்லாமல் போனது நினைவுக்கு வந்தது.

“நம்ம எப்போ வீட்டுக்கு போவோம்?” என்று அவள் கேட்கும் போதெல்லாம், “இந்த ட்ரிப் உனக்கு சந்தோஷமா இல்லையா? என் கூட இருக்க உனக்கு பிடிக்கலையா?” போன்ற கேள்விகளை கேட்டு திசை திருப்பிவிடுவதும், அவள் வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பும் போது யோசிக்க விடாமல் அவன் தந்த முத்தங்களும் எப்போதும் அணைப்பிலேயே வைத்திருந்த அவன் கரங்களும் என்று நடந்தவற்றை யோசித்து பார்த்து மேலும் மேலும் அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

அவனுடைய கைபிடிக்குள் இந்த ஒரு மாதமும் தன்னை வைத்திருந்தானோ?

இந்த கேள்வி உதித்த மறுகணமே அவன் மருத்துவமனையில் திருமணத்தை ஒரு மாதத்திற்குள் முடிக்க கேட்டதும் சேர்த்து நினைவுக்கு வந்தது. எந்த இடத்திலும் தான் அவன் எண்ணத்தை உணராத வண்ணம் சாமர்த்தியமாக அவன் நடந்திருக்கிறான்.

அந்தளவு அவன் காதல் தன் மூளையை மழுங்கி போக செய்திருக்கிறது என்று யோசிக்கும் போதே அவள் உள்ளம் எரிமலையாக தகிக்க அஜய் எப்போது வருவான் என்று படுக்கையில் சாய்ந்தபடி காத்திருந்தாள்.

நேற்று நடுநிசி நேரத்தில்தான் அவர்கள் பயணம் முடிந்து விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியது. காலை விடிந்ததும் அலுவலகம் புறப்பட்டவன், “நல்லா ரெஸ்ட் எடு… வெளியே எங்கேயும் போகாதே… வேற வேலை எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று அழுத்தி இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டு சென்றான்.

சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. அந்த காத்திருப்பு அவள் கோபத்தை இன்னும் இன்னும் அதிகரித்தது.

இரவு உணவுக்காக சுரேஷும் பாஸ்கரனும் மாறி மாறி அவளை அழைக்க, பசியில்லை என்று சொல்லி அவர்கள் இருவரையும் எப்படியோ பேசி சமாளித்து அனுப்பிவிட்டாள்.

ரேகாவிடம் பேசிய பிறகான நிறைய யோசனைகள் அவளை மனதளவில் ரொம்பவும் பாதித்திருந்தது. அவனுக்காக காத்திருந்து காத்திருந்து ஓய்ந்து போனவளாக படுக்கையில் சரிந்துவிட்டாள்.

அஜய் வரும் போது அவள் ஆழ்ந்த உறக்க நிலையிலிருநத்தாள். மது உணவு உட்கொள்ளாத விஷயத்தை அவன் வந்ததுமே பாஸ்கரன் தெரியப்படுத்தியிருந்தார்.

அறைக்குள் நுழைந்தவன் அவள் படுக்கையில் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து உறங்கிவிட்டாளோ என்று எண்ணி அவளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று சத்தமின்றி உடைகளை மாற்றிவிட்டு அவளை அணைத்து கொண்டு படுத்து கொள்ள, அவள் உறக்கம் களைந்தது. .

அந்த நொடியே தன் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு எழுந்து கொண்டாள்.

“நீ இன்னும் தூங்கலையா மது?” என்றவன் கேட்க, அவள் பதிலேதும் பேசமால் அவனை முறைத்து பார்த்திருந்தாள்.

“ஆமா… நீ சாப்பிடலன்னு அப்பா சொன்னாரு… ஏன்?” என்றவன் கேட்க அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“ப்ச்… என்ன லேட்டா வந்துட்டேன்னு கோபமா?” என்றவன் எழுந்து அவள் கரத்தை பிடிக்க எத்தனிக்கும் போதே அவன் கையை உதறிவிட்டு எழுந்து நின்றிருந்தாள்.

“என்னாச்சு மது?” என்றவனும் எழுந்து அவள் அருகில் வர,

“என்னாச்சுன்னு உனக்கு தெரியாதா?” என்றவள் பார்வை அவனை ஏறஇறங்க கடுப்பாக பார்க்க, அவன் புருவங்கள் முடிச்சிட்டன.

“எனக்கு தெரியலயே மது? என்ன விஷயம்னு சொல்லு?” என்றவன் நிதானமாக கேட்க,

“நான் அந்த கேசை வாதாட கூடாதுன்னுதான் ஒரு மாசம் ஹனிமூன் ட்ரிப்னு சொல்லி என்னை ஊர் ஊரா சுத்த வைச்சியா அஜய்?” என்று கேட்டாள்.

அந்த கேள்வியில் அவன் அப்படியே மௌன நிலையில் நின்றுவிட அவன் முகம் ஆழ்ந்த யோசனைக்குள் சென்றது.

“நீ சைலண்டா இருக்கிறதை பார்த்தா… அப்போ அதான் காரணம்” என்று அவள் அவனை நேர்கொண்டு பார்க்க,

“அப்படி எல்லாம் இல்ல மது?” என்றவன் மறுத்தாலும் அவன் விழிகள் அவள் விழிகளை பார்க்காமல் தவிர்த்தன.

“பொய் சொல்லாதே அஜய்” என்றவள் அவனை தீயாக பார்த்த கணம், “ப்ச்… இப்ப எதுக்கு நீ இவ்வளவு கோபப்படுற… எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்… உட்காரு” என்றவன் அவள் தோள்களை பற்றி படுக்கையில் அமர வைக்க எத்தனிக்கவும் அவனை தள்ளிவிட்டவள்,

“எல்லாத்தையும் செஞ்சிட்டு… எவ்வளவு கூலா பேசுற நீ.. அதுவும்  எனக்கு யார் கிட்ட இருந்தும் ஃபோன் கூட வாரதபடி ப்ளேன் பண்ணி பண்ணியிருக்க…” என்று உக்கிரமானாள். அந்த நொடி அவன் பொறுமையும் பறந்திருந்தது.

 

“ஆமான்டி பண்ணேன்… உன் அகௌன்ட் எல்லாத்தையும் ப்ளாக் பண்ணது கூட நான்தான்” என்று அவன் சொன்ன கணம் அவள் கோபம் உச்சத்தை தொட,

“ஏன் டா இப்படி பண்ண? இது மட்டும்தான் பண்ணியா இல்ல இன்னும் வேறெதாச்சும் பண்ணி இருக்கியா… உனக்கு அந்த கிரிமினல்ஸ்க்கும் என்ன வித்தியாசம்… ஒருவேளை அவங்க சொல்லித்தான் நீ இதெல்லாம் செஞ்சியா?” என்று அவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டு உலுக்க தொடங்கினாள்.

“ஷட் அப் மது” என்று ஆங்காரமாக கத்தியவன், “யார் சொல்லியும் நான் எதுவும் செய்யல… நான் எல்லாமே உனக்காகதான் செஞ்சேன்… உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு செஞ்சேன்” என்று முடிக்க அவள் அவன் சொன்னதை கேட்டு பதிலேதும் பேச முடியாமல் நின்றிருந்தாள்.

“புரிஞ்சிக்கோ மது… எல்லாமே நான் உன் நல்லதுக்காகதான் செஞ்சேன்” என்றவன் அவளை அணைத்து கொள்ள வந்த அந்த நொடியே, “விடு… என்னை தொடாதே” என்று அவனை விட்டு விலகியவள்,

“நீ யாரு என் நல்லதுக்காக யோசிக்க?” என்றாள்.

“நான் யோசிக்காம உனக்காக வேற யாருடி யோசிப்பா” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக தன் கைவளைக்குள் கொண்டு வந்திருந்தான்.

அவன் பிடி வெகுவாக இறுக அவள் மிரண்டு விழிக்க, “நீ அந்த கேசை எடுத்து நடத்த கூடாதுன்னுதான் நான் இவ்வளவும் செஞ்சேன்… அந்த கேஸுன்னு இல்ல… இனிமே நீ எந்த கேசையும் எடுத்து நடத்த கூடாது” என்றான் அதிகாரமாக!

அவன வார்த்தைகளை கேட்டு அவள் விழிகளில் கனலேறியது. “அது என் ப்ரோபஷன்… அதை நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது” என்றாள்.

“என்னால உன்னை விட்டு கொடுக்க முடியாது… எனக்கு நீ முக்கியம் மது… நீ மட்டும்தான் முக்கியம்… உன் பாதுக்காப்புதான் எனக்கு முதல… உன் ப்ரோபஷனால உனக்கு பிரச்சனை வரும்னா நீ அதை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவன் அழுத்தம் திருத்தமாக  சொல்லி முடிக்க,

“அப்படின்னா நான் உன் கூட இருக்க மாட்டேன்” என்றவள் அவனுக்கு பதிலடி தந்திருந்தாள்.

அதோடு அவள் பிரயத்தனப்பட்டு அவன் அணைப்பிலிருந்து வெளியேற, அதிர்ச்சியோடு நின்றவன்,

“அப்போ என்னை விட உனக்கு உன் ப்ரோபஷன்தான் முக்கியமா?” என்று வினவினான்.

“ஆமா… எனக்கு என் ப்ரோபஷன்தான் முக்கியம்… எனக்கு அதுதான் முதல” என்றாள் தீர்க்கமாக!

“திரும்ப சொல்லு” என்று அஜயின் குரல் கரகரக்க,

“எத்தனை தடவை சொன்னாலும் அதான்… எனக்கு என்  ப்ரோபஷன்தான் முதல… அப்புறம்தான் எனக்கு யாரா இருந்தாலும்” என்று தெளிவாக சொன்னாள்.

“அப்போ உனக்கு நான் முக்கியமில்ல இல்ல?” என்ற கேட்ட அஜயின் தொனி மாறியிருந்தது. அவன் பார்வையில் தெரிந்த அழுத்தமான வலி அவள் கோபத்தை மட்டுபடுத்திவிட,

“நீ முக்கியமில்லன்னு நான் சொல்லல அஜய்” என்று நிதானித்தாள்.

“இல்ல… நீ அப்படிதான்டி சொன்ன… நான் முக்கியமில்லன்னு சொன்ன” என்றவன் வெடித்தான். அவன் பார்வையில் வெறியேற அதனை உணர்ந்தவள்,

“அப்படி இல்ல அஜய்” என்று அவனை சாமதானம் செய்ய முற்பட்டாள். அவனோ தன் கார் சாவியை கையிலெடுத்து கொண்டு அறை கதவை திறக்க செல்ல,

“அஜய் எங்க போற?” என்று படபடப்போடு கேட்டாள்.

“எங்கேயோ போறேன்” என்றவன் அவள் புறம் திரும்பி நின்று,

“சாக போறேன்… உனக்கென்ன… உனக்குதான் நான் முக்கியமில்லையே” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தான். அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

அவள் பதறியபடி, “அஜய் வேண்டாம்” என்று அவனை தடுப்பதற்குள் சீறியபடி வாயிலை விட்டு கடந்திருந்தது அந்த கார்.

‘ஐயோ! எனக்கு அறிவே இல்ல… யோசிக்காம இப்படி பேசியிருக்க கூடாது… கடவுளே!’ என்று அவள் தலையிலடித்து கொண்டு உள்ளம் பதைபதைத்து போனாள்.

மீண்டும் அறையை நோக்கி அவள் செல்ல, அவன் தன் கைபேசியையும் எடுத்து செல்லவில்லை. அவள் பதட்டம் மேலும் அதிகரித்தது.

‘ஐயோ! எதாச்சும் பண்ணிப்பானோ… கோபத்தில வண்டியை அக்சிடென்ட் பண்ணிட்டா… ஏன் நான் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? இல்ல இல்ல ஏதோ கோபத்தில அப்படி சொல்லிட்டு போறான்… உஹும் அப்படியெல்லாம் பண்ணிக்க மாட்டான்… பண்ணிக்க கூடாது’ அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள்.

“அஜய் திரும்பி வந்திரு டா… ஐம் சாரி… நான் தெரியாம பேசிட்டேன்” என்று அழுது கொண்டே மானசீகமாக அவனிடம் பலமுறை மன்னிப்பு கோரினாள்.

நேரம் ஆக ஆக அவளின் பயம் அதிகரித்து கொண்டே சென்றது.

“மாமா கிட்ட சொல்வோமா? சுரேஷ் கிட்ட சொல்வோமா?” என்று அறையை விட்டு ஒவ்வொரு முறையும் வெளியேறியவள், எப்படி சொல்வது என்ன சொல்வது, ‘அவங்க மட்டும் என்ன செய்வாங்க… ஃபோனும் இங்கே இருக்கே!’ என்று மீண்டும் சுவற்றிலடித்த பந்து போல அறைக்கே திரும்பினாள்.

அந்த அறையின் பால்கனி வழியாக அவன் வருகிறானா என்று எதிர்பார்த்து கால்கடுக்க நின்றிருந்தாள். நேரம் கடந்து சென்றதுதான் மிச்சம். அவன் வரவில்லை.

அவள் தவிப்பு அதிகரித்து கொண்டே போனது. ஒரு நிலைக்கு மேல் உள்ளம் கலங்கி தரையில் சரிந்தாள்.

‘அஜய் திரும்பி வந்திரு’ என்று அவள் மனம் மட்டும் இறைஞ்சி கொண்டே இருந்தது. கண்ணீர் வழிந்து வழிந்து வற்றி போய் அவள் கன்னங்களில் கண்ணீர் தடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தது.

அவளுக்கே புரியவில்லை. இப்படியெல்லாம் ஓரு நாளும் தான் அழுததே இல்லையே.

அஜயின் மீதான காதல் தன்னை இப்படி கோழையாக மாற்றிவிட்டதே! காதலின் முன்னிலையில் அவளின் தைரியம் சமார்த்தியம் சமயோசித புத்தியெல்லாம் மொத்தமாக அடிப்பட்டு போனது.

அஜய் நல்லபடியாக வந்து சேர்ந்து விட வேண்டும் என்று எண்ணம் மட்டுமே அவளின் தேகத்தின் ஒவ்வொரு செல்களிலும் எதிரொலித்து கொண்டிருந்தது.

அந்த இரவு முழுக்க அஜய் தவறாக எதுவும் முடிவெடுத்துவிட கூடாதே என்று நொடிக்கு நொடி பயந்து கொண்டிருந்தாள்.  ஒரு நிலைக்கு மேல் தரையில் அமர்ந்திருந்தவள் கால்களை மடித்து தலை சாய்த்து உறங்கிவிட்டிருந்தாள்.

விடியலினை அறிவிக்கும் பறவையின் சத்தங்கள் அவள் உள்ளுணர்வை எழுப்பிவிட, பதறி கொண்டு விழித்து பார்த்தாள். அந்த அறை முழுக்கவும் சுற்றி பார்த்தாள். அவன் இல்லை.

“மாமா கிட்ட சொல்லிடனும்” என்று அறையை விட்டு வெளியே செல்ல பார்த்தவள்,  ஏதோ ஒரு உந்துதலில் மீண்டும் பால்கனி வழியாக சென்று பார்த்தாள்.

அஜய் எடுத்து சென்ற கார் வாசலில் நின்றிருந்தது. அத்தனை நேரம் அவள் மனதை அழுத்தி கொண்டிருந்த பாரம் விலக, ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டு வெளியே வந்தாள்.

இருள் விலகியிருக்கவில்லை. சூரியன் மெதுவாக மேலெழும்பி கொண்டிருந்தான். தோட்டத்தை சுற்றிலும் அவள் அலைந்து திரிந்து தேடி பார்க்க, அவன் எங்கேயும் காணவில்லை. காரில் சாவி மட்டும் தொங்கி கொண்டிருந்தது. மீண்டும் உள்ளம் படபடக்க வீட்டிற்குள் வந்தாள்.

நிசப்தமான நிலையில் அந்த வீடே அமைதி கோலம் பூண்டிருந்தது. எல்லோருடைய அறை கதவுகளும் மூடிய நிலையிலிருக்க, சத்தம் எழுப்பாமல் அந்த முகப்பறையை சுற்றி வந்தாள். அவன் அவள் பார்வைக்கு தென்படவேயில்லை.

மீண்டும் விழிகளில் கண்ணீர் திரள ‘எங்கடா போன நீ’ என்று உடைந்து நிற்கும் போது ஓரமாக இருந்த வலது பக்க அறை நினைவு வந்தது.

‘அத்தை ரூம்ல’ என்று யோசித்தவள் வேகமாக அந்த அறைக்குள் சென்று பார்க்க, அவன் அங்கேதான் இருந்தான்.

தாய் மடிக்காக ஏங்கும் குழந்தை போல தன் அம்மாவின் கையை பற்றியவாறு தலை சாய்த்தபடி வீற்றிருந்தான்.

அவனை பார்த்த பிறகுதான் அவளுக்கு உயிரே வந்தது. விழிகளின் கண்ணீர் மெல்ல அவள் கன்னங்களில் இறங்கியது. அந்த கணத்தில் சந்தோஷம் துக்கம் என்று இரண்டையும் ஒரு சேர ஒன்றாக அனுபவித்தாள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த சூழ்நிலையிலும் அவன் காதலை சோதித்து பார்க்கும் விஷபரிட்சையை அவள் செய்ய எத்தனிக்கவில்லை. அவன் உயிரை விடவும் தன் ஆசை, கனவு, இலட்சியம் இது எதுவுமே முக்கியமில்லை என்ற மனநிலைக்கு அவள் வந்திருந்தாள் என்று சொல்வதை விட அவள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

14

மதுவின் அந்த ஒன்பது மாத திருமண வாழ்க்கையில் அவளின் உலகமாகவே அஜய் மாறியிருந்தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படி மாற்றியிருந்தான்.

மதுவிற்கு தன்னை தவிர்த்து வேறு யாருமே, அல்லது வேறு எதுவுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. அது அவன் நடந்து கொண்ட விதத்திலேயே அவளுக்கு புரிந்திருந்தது.

ஆனால் தன் நிலைமையை அவனுக்கு எப்படி புரிய வைப்பதென்றுதான் அவளுக்கு தெரியவில்லை. அந்த சூழ்நிலையில்தான் அவள் கருத்தரித்தாள்.

அதற்கு பிறகு வேறுவழியின்றி அவள் உடல் உபாதைகள் அவனை சார்ந்திருக்கும்படியான நிலைக்கு தள்ளியது. அவள் கருத்தரித்த விஷயம் தெரிந்த அதேநேரத்தில் சரவணனுக்கு அவன் ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

“ப்ளீஸ் அஜய்… சரோ கல்யாணத்துக்கு போயிட்டு வந்திடலாம்… உனக்கு வேலையிருந்தா நான் அம்மா அப்பா கூட” என்று சொன்ன நொடி உஷ்ண பார்வை பார்த்தவன்,

அவள் முகத்தை பார்த்தும் தன் கோபத்தை மட்டுபடுத்தி கொண்டு, “ப்ளீஸ் மது… பிவ்டீன் டேஸ்தான் ஆகியிருக்கு… இந்த மாதிரி நேரத்தில லாங் டிரைவ் எல்லாம் பண்ணவே கூடாது” என்றான்.

“வேணா நீ உன் அம்மா அப்பா கிட்ட கூட கேட்டு பாரேன்… அவங்களும் வேணாம்னுதான் சொல்லுவாங்க”

அதற்கு மேல் பிடிவாதம் பிடித்து வேறெதாவாது எடாகுடமாக ஆகி தொலைந்தால், பிறகு அது தன்னக்கே எதிராக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் அவள் அது பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் தன் நெருங்கிய நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஆதங்கம் இன்றுவரை அவள் மனதில் தங்கியிருந்தது.

என்ன சொல்வது? அந்த விதிதான் அவளை சரவணின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்துவிட்டதோ என்னவோ?

அப்படி போயிருந்தால் சரவணனின் மனைவிதான் இந்துமதி என்று அவளுக்கு தெரிந்திருக்க கூடும். ஒருவேளை அப்படி தெரிந்திருந்தால் சுரேஷின் இறப்பை கூட அவள் நடக்காமல் தடுத்திருக்க முடியுமோ என்னவோ?. ஆனால் அதுவும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது.

யார் யார் வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். மதுவின் வாழ்க்கையில் அஜய் நுழைந்தது போல!

அஜயின் வெறித்தனமான காதல் ஒருவிதத்தில் அவளை மூச்சு முட்ட வைத்து அழுத்தம் கொடுத்தாலும் மற்றொரு விதத்தில் அதே காதல் அவளை ஆதரவாக தாங்கி கொண்டதையும் அவளால் மறுக்க முடியாது.

முதல் மூன்று மாதம் உணவு உட்கொள்ள முடியாமல் தூங்க முடியாமல் சோர்ந்து களைத்து போன நேரங்களில் ஒரு தாயிற்கு நிகராக அவளை கவனித்து கொண்டான்.

அவள் தன்னையும் மீறி வாந்தி எடுத்த சமயங்களில் அருவருப்பு உணர்வின்றி கைகளில் ஏந்தி கொண்டான். அவள் சாப்பிட முடியாமல் அவஸ்த்தையுறும் நேரங்களில் அவனுமே உணவு உண்ணாமல் அவளுக்காக பட்டினி கிடந்தான். அவள் எந்தளவு வாடினாலோ அதைவிட இரு மடங்கு அதிகமாக அவன் அவளுக்காக உருகி மருகினான்.

அடுத்தடுத்த மாதங்களில் அவள் உடல் உபாதைகள் குறையுமென்று பார்த்தால் அது இன்னும் இன்னும் அதிகரித்து கொண்டே போனது. அந்த சமயத்தில்தான் மருத்துவர் அவள் கருவிலிருப்பது இரட்டை சிசு என்று கண்டறிந்து சொல்ல அஜயின் காதலும் கவனிப்பும் இன்னும் பன்மடங்காக பெருகியிருந்தது.

நடக்க முடியாமல், ஓரிடத்தில் நிற்க முடியாமல் என்று அவள் நிலைகொள்ளாமல் தவிக்கும் போதெல்லாம் ஒரு குழந்தையை தாங்குவது போல அவளை தன் கரத்தில் தாங்கி கொண்டான்.

தூங்க முடியாமல் அவள் புரளும் போது அவனும் அவளுக்காக உறக்கம் தொலைத்து தன் மடியை தலையணையாக கொடுத்து அவளுக்காக விடிய விடிய உட்காரந்தபடியே உறங்கியிருக்கிறான். கால் வீங்கி வலியில் அவள் அவதியுறும் போது கால்களை பிடித்தவன் அவள் உறக்கம் கலைந்துவிடாமலிருக்க இரவு முழுக்கவும் பிடித்துவிட்டபடியே கூட இருந்திருக்கிறான்.

உறக்கம் களைந்து எழுந்து பார்த்தவள் நெகிழ்ந்து கண்கள் கலங்கி போவாள். அவனின் இந்த எல்லையில்லா அன்பும் காதலுமே அவனை மீறி எதுவும் செய்ய முடியாமல் அவளை அவனிடம் கட்டுண்டுவிட செய்தது.

இப்போது கூட சரவணனை தவிர வேறு யார் அந்த இடத்திலிருந்தாலும் அவள் சென்றிருக்க மாட்டாள். ஆனால் அது சரவணன் என்ற போது அவளால் மறுக்க முடியவில்லை.

அஜய் பெரிதாக இந்த விஷயத்தில் தன் கோபத்தை அவளிடம் காட்டி கொள்ளாத போதும் அவன் உள்ளம் அதை எண்ணி எந்தளவு கொந்தளித்து கொண்டிருக்கும் என்று அறியாதவள் அல்ல அவள்.

அதுவே அவளை பதட்டத்தில் ஆழ்த்தியது. இந்த கோபத்தை அஜய் வேறு ஏதாவது ஒரு விதத்தில் சரவணன் மீது காட்டிவிடுவனோ என்று பயந்தாள்.

இவ்வாறு யோசித்தபடி உறங்காமல் தவித்தவளுக்கு சரவணன் இந்துமதியை பார்த்திருப்பானா என்ற கேள்வி எழுந்தது. அவள் உள்ளுணர்வு வேறு அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று அடித்து கொண்டது.

வேகமாக தன் பேசியை எடுத்தவள் அவன் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்.

“மதுவை பார்த்திட்டியா? இப்போ எங்க இருக்க”

சில நொடிகள் காத்திருந்து பதிலேதும் வராமல் போக,

“நீ எங்க இருக்க சரோ… எனக்கு ரிப்ளை பண்ணு” என்று அனுப்பினாள். அதற்கும் பதில் வரவில்லை.

“ஏதாச்சும் பிரச்சனையா? ரிப்ளை பண்ணு” என்றவள் தொடர்ச்சியாக நிறைய குறுஞ்செய்திகளை அனுப்பி பார்த்தாள். ஒன்றும் பயனில்லை.

மனம் என்னவோ ஏதோ என்று பதற அவன் செல்பேசிக்கு அழைத்தாள். ரொம்பவும் முக்கியமாக  ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மட்டுமே அவனுக்கு அவள் அழைத்து பேசுவாள். அதுவும் அவனிடம் நவீனரக அண்ட்ராய்ட் மொபைல் கிடையாது.

அவனுக்கு அதை உபயோகிப்பது அவ்வளவு சௌகரியமாக இல்லாததால் அந்த மாதிரி பேசிகளை அவன் வாங்குவதில்லை.

அவனால் பேச முடியாமல் போனாலும் தான்தான் பேசுகிறேன் என்பதை தெரிவிக்கும் விதமாக அருகிலிருக்கு ஏதேனும் பொருள் வைத்து மும்முறை அடித்து சத்தம் எழுப்புவான். அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த மொழி!

இம்முறையும் அப்படி எதிர்பார்த்துதான் அவனுக்கு அழைத்திருந்தாள். அவன் தன் அழைப்பை ஏற்றாலே போதும் என்று அவள் அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்த பேசி ரீங்காரமிட்டது. தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்த அந்த செல்பேசியின் அழைப்பு சத்தத்தில் ஜெயாவிடம் பேசி கொண்டிருந்த சாரங்கபாணி, “யாரோட போன் அடிக்குது?” என்று எரிச்சலில் கத்த,

அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் அது தங்ளுடையது இல்லையென்று மறுத்துவிட்டனர். ஜெயாவும் குழப்பமாக சுற்றும் முற்றும் பார்த்திருக்க,

தரையில் ஒரு பேசி தனந்தனியாக அடித்து கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. அதனை கை காண்பித்து எடுக்க சொன்னவள் அந்த பேசியில் மதுபாலா என்று ஒளிர்ந்த பெயரை பார்த்து, அது யாருடையது என்றும்  கணித்துவிட்டாள்.

சாரங்கபாணி அவள் முகத்தை பார்த்து, “யாரோட போன் இது? ஸ்டேஷன் வந்தவங்க யாரச்சும் விட்டுட்டு போயிட்டாங்களா?” என்று கேட்கவும்,

“இது அந்த இந்துமதியோட புருஷன் ஃபோன்” என்றாள் ஜெயா.

“அதெப்படி நீ அவ்வளவு கரெக்ட்டா சொல்ற?” சாரங்கபாணி சந்தேகமாக புருவத்தை நெரிக்க, அவள் அந்த செல்பசியில் ஒளிர்ந்த பெயரை அவரிடமும் காண்பித்தாள்.

சாரங்கபாணியின் முகம் படுஉக்கிரமாக மாறியிருந்தது. எரிமலையே வெடித்து சிதறியது போல தீயாக பார்த்தவரின் முன்னிலையில் அப்போது மட்டும் மது இருந்தால் பார்வையாலேயே எரித்து சாம்பலாக்கி இருப்பார்.

‘இந்த ஆள் ஏன் இவ்வளவு காண்டாகுறான்… இந்த பொண்ணு மேல அப்படியென்ன கோபம்?’ என்று ஜெயா யோசித்திருக்க சாரங்கபாணி அவளிடம்,

“அந்த பொண்ணோட புருஷன் ஊமைன்னுதானே நீ சொன்ன… அப்புறம் இவ அவனுக்கு ஃபோன் பண்ணியிருக்கா?” என்றவளை ஏறஇறங்க முறைத்து கொண்டே கேட்டார்.

“ஊமைன்னுதான் சொன்னேன்… ஆனா காது கேட்க்காதுன்னு நான் சொல்லவே இல்லையே… அவனால் பதில் சொல்ல முடியாட்டியும் அந்த பொண்ணு பேசறது அவனுக்கு கேட்கும்தானே” என்றாள் ஜெயா!

அவள் சொல்வதை ஏற்று கொண்ட சாரங்கபாணி மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வரவும் சுற்றியிருப்பவர்களை அமைதியாக இருக்க சொல்லி கை காண்பித்துவிட்டு, அழைப்பை ஏற்றார்.

மறுகணமே மது அருவி போல தன் நண்பனுக்கான தவிப்பையும் படபடப்பையும்  கொட்ட தொடங்கியிருந்தாள்.

“சரோ… ஏன்டா காலை அட்டென்ட் பண்ண இவ்வளவு நேரம்… நீ ஃசேபா இருக்கியா… உனக்கு ஒன்னும் இல்லையே… என் மெசேஜ்க்கு ஏன் ரிப்ளை போடல… நான் எவ்வளவு டென்ஷனாகிட்டேன் தெரியுமா?” என்று மூச்சை பிடித்து கொண்டு மது பேசுவதை கேட்டு சாரங்கபாணியின் வஞ்சக புத்தி தப்பும் தவறுமாக யோசித்தது.

‘அவளுக்கென்ன இவன் மீது இவ்வளவு கரிசனம்? இரண்டு பேருக்கும் அப்படியென்ன தொடர்பு இருக்கும்?’ என்ற கேள்வியும் கூடவே நிறைய அருவருப்பான பதில்களும் அந்த மனிதனின் வக்கிரமான மூளைக்குள் உதித்தது.

ஆனால் இந்த எண்ணங்களை எல்லாம் பற்றி துளியும் யோசித்திராத மது தன் நண்பனின் நிலைமையை குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்.

அவள் பயத்தை தாண்டி இப்போது சந்தேகம் உதிக்க, “சரோ” என்று சில முறைகள் அழைத்துவிட்டு,

“யார் காலை அட்டென்ட் பண்ணது?” என்று கேட்டாள்.

‘எப்படி அவள் கண்டு கொண்டாள்?’ என்று சாரங்கபாணி யோசிக்க,

“ஹெலோ யாரு?” என்று மீண்டும் கேட்டாள் மது.

சாரங்கபாணி அப்போது சத்தமாக சிரிக்க, மது குழப்பி போனாள்.

“பரவாயில்லையே நீ புத்திசாலிதான்… ஆனா எப்படி அந்த மளிகை கடைக்காரன் இல்லன்னு கண்டுபுடிச்ச” என்றவர் எகத்தாளமாக கேட்க,

“நீங்க யார் பேசறது… சரோ எங்க?” என்று கண்டிப்பான குரலில் கேட்டாள் மது.

“நான் யாருன்னு உனக்கு தெரியல?” என்று கேட்ட நொடி அவள் குழம்பிய நிலையில், “யாருன்னு சொன்னாதானே தெரியும்” என்று வினவினாள்.

“நீ புத்திசாலியாச்சே… சொல்லாமலே கண்டுபிடி” என்று சாரங்கபாணி ஒரு கேலி சிரிப்போடு உரைக்க,

“நீ யாரா வேணா இருந்துட்டு போ… அதை பத்தி எனக்கு கவலை இல்ல… சரோ எங்க? அதை முதல சொல்லு” என்றாள் திட்டவட்டமாக!

“ஆமா… சரோ சரோன்னு செல்லமா கூப்பிடுற.. அப்படி என்னடி கனெக்ஷன் உனக்கும் அவனுக்கும்?”

அந்த கேள்வியில் மிகுந்த எரிச்சல் அடைந்தவள்,

“சீ வாயை கழுவு… அவன் என் ப்ரெண்டு” என்றாள் அதட்டலோடு!

“ப்ரெண்டா?” என்று ஏளன தொனியில் சொல்லி சிரித்தவர், “இப்பதான் ஒரு எட்டு ஒன்பது மாசம் முன்னாடி உனக்கு கல்யாணம் ஆச்சு இல்ல… அதுகுள்ள என்னடி உனக்கு வயிறு இவ்வளவு பெருசா இருக்கு?” என்று கேட்டு வைக்க அவளின் கோபம் கட்டுங்கடங்காமல் போனது.

“யாருடா நீ… உன்கிட்ட பேச கூட எனக்கு அசிங்கமா இருக்கு” என்றவள் மேலும் அடங்கா சீற்றத்தோடு, “சரோ எங்கன்னு மட்டும் இப்போ நீ சொல்லல… நீ இருக்கிற இடம் தேடி வந்து உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்… பார்த்துக்கோ” என்றவள் எச்சரிக்கை விடுத்தாள்.

“என்னை நீ… உண்டு இல்லன்னு பண்ணிடுவியா? ஹா ஹா” என்றவர் எக்காளமாக சிரித்து,

“அவன் எங்கன்னு உனக்கு இப்போ தெரிஞ்சிக்கணும்… அப்படிதானே?” என்று கேட்டார்.

“ஆமா தெரிஞ்சிக்கணும்” என்று மது பரபரப்போடு சொல்லவும்,

“அந்த மளிகை கடைக்காரனை நாரா நாரா உரிச்சு அவன் கடையில பொட்டலம் கட்டுற மாதிரி அவனையே பொட்டலம் கட்டி அனுப்பிட்டேன்… பிழைப்பானாங்கிறதே சந்தேகம்தான்” என்று சொன்ன மறுநொடி பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போனாள் மது.

“என்ன சத்தத்தையே காணோம்… ஏன் அடிச்சன்னு கேட்க மாட்டியா?” என்று சாரங்கபாணி கேட்க அவள் உள்ளம் துடித்தது. பேச முடியாமல் வேதனையில் தொண்டை அடைத்தது.

“நீ கேட்கலனாலும் நான் சொல்லுவேன்” என்ற சாரங்கபாணி நிறுத்தி நிதானமாக, “போலிஸ்காரன் மேல கையை வைச்சா என்ன ஆகும்னு அவனுக்கு காட்ட வேண்டாம்” என்றான் அழுத்தமாக!

மதுவிற்கு அதிர்ச்சி தங்கவில்லை. சரவணன் அடித்தானா? அதுவும் ஒரு போலிஸ்காரனை?!! நம்ப முடியாமல்,

“இல்ல அப்படியெல்லாம் இருக்காது…. சரோ அப்படியெல்லாம் பண்ண மாட்டான்” என்றாள்.

“அவ்வளவு நல்லவனா உன் ப்ரெண்டு?” என்று சாரங்கபாணி கிண்டல் தொனியில் கேட்க அவளுக்கு பேச முடியாமல் அழுகைதான் வந்தது.

“இதுக்கெல்லாம் நீ கண்டிப்பா பதில் சொல்லணும்” என்றவள் கடுங்கோபத்தோடு கண்ணீர் பெருக சொல்ல,

“சொல்லிட்டா போச்சு… நீ நேர்ல வா… உனக்கு தனியா ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் வைச்சிருக்கேன்” என்று சொன்ன சாரங்கபாணி இணைப்பை துண்டித்துவிட மது அதிர்ந்து போனாள்.

‘ஐயோ! இப்போ சரோக்கு என்னாச்சுன்னு தெரியலயே’ என்றவள் உள்ளமும் உடலும் நடுங்க, படபடப்பில் தலையெல்லாம் சுழன்றது அவளுக்கு. மயக்கம் வரும் போல தடுமாறியவள் அருகே இருந்த ஜன்னல் கம்பிகளை திடமாக பற்றி கொண்டாள்.

error: Content is protected !!