Oviyam 7

காரிலிருந்து இறங்கிய இளங்கோவைக் கட்டிக் கொண்டான் இளஞ்செழியன். ஆத்மார்த்தமான நட்பு இருவரதும்.
“டேய் மச்சான்! எப்படிடா இருக்கே?”
“நல்லா இருக்கேன்டா இளங்கோ. மலேஷியா லைஃப் எப்படிப் போகுது?”
“செமையாப் போகுதுடா. யாரோட தொல்லையும் இல்லாம சூப்பராப் பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு…”
“டேய்… டேய்… ஒரு டாக்டர் மாதிரிப் பேசுடா.”
“இதென்னடா வம்பாப் போச்சு. டாக்டர்னாப் பொண்ணுங்களை சைட் அடிக்கக் கூடாதா என்ன? நாங்களும் மனுஷங்க தாம்பா. நீ விசுவாமித்திரர் மாதிரி இருந்துங்கோ. நோ ப்ராப்ளம்… ஆனா எங்களை அனுபவிக்க விடு செழியா.”
“சரி… சரி… பொலம்பாதே…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சந்திரமோகன் தனது காரைப் பார்க் பண்ணிவிட்டு இறங்கி வருவது தெரிந்தது.
“குட் மார்னிங் அங்கிள்.”
“குட் மார்னிங் செழியா.”
“அங்கிள்… இது யாருன்னு தெரியுதா?”
“ம்…” சந்திரமோகன் சற்று யோசிக்கவும் இளையவர்கள் இருவரும் சிரித்தார்கள்.
“இளங்கோ அங்கிள். கார்த்திகேயன் அங்கிளோட பையன்.”
“அட ஆமா! பார்த்து ரொம்ப நாளாச்சா! அதுதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை. என்னப்பா? இன்னும் எத்தனை நாளைக்கு மலேஷியாவுல இருக்கப்போறே? அப்பா அம்மாக்கு வயசாகுதில்லை. அன்னைக்குப் பாரு… திடீர்னு அப்பாக்கு முடியாமப் போச்சு. செழியன் பார்த்துக்கிட்டான் தான். இருந்தாலும்… புள்ளை பக்கத்துல இருக்கிற மாதிரி வருமா?”
“சரிதான் டாக்டர்.” இது இளங்கோ. அன்று அர்த்த ஜாமத்தில் ‘ஸ்டென்ட்’ போடுவதற்காக வந்த செழியனின் பழைய ஹெட்மாஸ்டரின் மகன்.
“உங்களை மாதிரிப் படிச்ச, கெட்டிக்கார டாக்டர்களோட சேவை நம்ம நாட்டுக்கும் தேவைப்பா. கொஞ்சம் அதப்பத்தியும் யோசியுங்க.” புன்னகை முகமாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார் சந்திரமோகன்.
“ரொம்பத் தான்க்ஸ்டா செழியா. அந்த உதவியை என் வாழ்நாள்ல நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.”
“அடப்போடா! அது என்னோட கடமைடா. அதுக்குப் போய் தான்க்ஸ் சொல்லிக்கிட்டு.”
“அது யாரு மச்சான் மாதவி? அம்மாவும் அப்பாவும் ஒரே புகழ் மாலை சூட்டுறாங்க. விட்டா அந்தப் பொண்ணை என் தலையில கட்டிருவாங்க போல இருக்கு. அப்படி அன்பா கவனிச்சுதாம், பொறுமையான பொண்ணாம், அவ்வளவு அடக்கமாம், அழகாம்… அப்பப்பா! காது புளிச்சுப் போச்சு மச்சான். உண்மையைச் சொல்லப்போனா… இப்போ நான் உன்னைப் பார்க்க வரலை. அந்த மாதவியைப் பார்க்கத்தான் வந்திருக்கேன்.” இளங்கோ தன்பாட்டில் பேசிக்கொண்டு போக செழியனின் முகம் சோபையிழந்து போய் விட்டது.
ரிசப்ஷனைத் தாண்டி இவர்கள் நடந்து கொண்டு போக, எதிரே இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மாதவி. கையில் ஏதோ ஒரு ரிப்போர்ட் இருந்தது.
“மாதவி…”
“டாக்டர்!”
“இது இளங்கோ. நம்ம கார்த்திகேயன் அங்கிளோட பையன். மலேஷியால வர்க் பண்ணுறான்னு அன்னைக்குச் சொன்னேனே.”
“ஓ… ஆமா… ஞாபகம் இருக்கு டாக்டர். ஹலோ டாக்டர். அங்கிள் எப்படி இருக்காங்க?”
“ரொம்ப நல்லா இருக்காங்க. சதா உங்கப் பேச்சுத்தான். ரொம்ப தான்க்ஸ் மாதவி. அப்பாவை மட்டுமில்லை… அம்மாவுக்கும் ரொம்ப சப்போர்ட்டா இருந்தீங்களாம்.”
“அது என்னோட ட்யூட்டி தானே டாக்டர்.”
“இருந்தாலும் எனக்கு உங்களைப் பார்த்து தான்க்ஸ் சொல்லணும்னு தோணிச்சு. தான்க் யூ.”
“இட்ஸ் ஓகே டாக்டர்.” சொல்லிவிட்டுப் பெண் நகர… அவள் சற்றுத் தூரச் சென்ற பின்னர் போகும் பெண்ணைத் திரும்பிப் பார்த்து விசிலடித்தான் இளங்கோ.
“மச்சான்! சூப்பரா இருக்காடா…” இளங்கோ ரசித்துப் பேசிக் கொண்டிருக்க, மாதவியைப் பார்த்தவண்ணம் திரும்பியிருந்த அவன் தலையைத் தன் புறமாகத் திருப்பினான் இளஞ்செழியன்.
“இந்த உகத்துல இருக்கிற யாரை வேணும்னாலும் சைட் அடி மச்சான். ஆனா சிஸ்டர் யூனிஃபார்ம்ல இருக்கிற மாதவி உனக்கு நிஜமாவே சிஸ்டர் தான்.”
“டேய் மச்சான்! என்னடா சொல்லுற?” பெருங் குரலெடுத்துச் சிரித்த இளங்கோவைத் தனது ரூமிற்குள் அவசரமாகக் தள்ளிக்கொண்டு போனான் இளஞ்செழியன்.
“எதுக்குடா இப்படிக் கத்துறே?”
“டேய் மச்சான்! சரியாச் சொல்லு… அந்தப் பொண்ணு பேரு நிஜமாவே மாதவியா? இல்லை மேனகாவா? நம்ம விசுவாமித்திரரா இப்படியெல்லாம் பேசுறது?” இப்போதும் ஆச்சரியம் தாங்காமல் இளங்கோ பெரிதாகச் சிரித்தான்.
“ஆமா… ரிசப்ஷன்ல ஒன்னு நிக்கும்… மேனகான்னு. அந்த ஏழரையை என் தலையில கட்டிடாத மச்சான்.”
“ம்ஹூம்…” இளங்கோ செழியனைக் கூர்ந்து பார்க்க அவன் முகம் சிவந்து போனது.
“ஆஹா… பய கவுந்துட்டான் பா. வெக்கமெல்லாம் வருதே…”
“டேய்… ஓட்டாதடா…”
“எப்படியெப்படி… ஓட்டாதேயா? நம்ம செட்ல இருக்கிற அத்தனை பேரையும் கூட்டி உன்னை ஒரு வழி பண்ணலை… நான் இளங்கோ இல்லைடா. மவனே… நிம்மதியா ஒரு பொண்ணை சைட் அடிக்க விட்டிருப்பியா? இன்னைக்கு வசமா மாட்டி இருக்க இல்லை…” கூத்தடித்த நண்பனைப் பார்த்தபோது செழியனின் முகம் வாடிப்போனது.
“என்னடா மச்சான் டல்லாகிட்டே?”
“இளங்கோ…”
“சொல்லுடா… எதுக்குத் தயங்குறே?”
“மாட்டேன்னு சொல்லிட்டாடா.”
“என்ன?! லூசாடா அந்தப் பொண்ணு? செழியனை வேணாம்னு சொல்ல.”
“கொஞ்சம் சிக்கலாகிப் போச்சு மச்சான்.” என்றவன் காலேஜில் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.
“ஓ… இவ்வளவு நடந்திருக்கா?‌ கவலைப்படாதே…‌ பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லை. அந்தப் பொண்ணு தரப்பிலயும் நியாயம் இருக்கில்லை. அர்ச்சனா இப்படிப் பேசி இருக்கும் போது அவங்க எப்படி மச்சான் பொண்ணு குடுக்க சம்மதிப்பாங்க?‌ பேசிப் புரிய வெக்கலாம். நீ வருத்தப்படாதே.”
“ம்… பார்க்கலாம்.”
“நீ எதுக்குடா லவ்வைப் பொண்ணுக்கிட்டச் சொல்லாம தம்பிக்கிட்டப் போய்ச் சொன்னே?”
“தெரியலைடா மச்சான்.‌ அந்தப் பையன் மேல கொலை வெறியில தான் அன்னைக்குக் காலேஜுக்குப் போனேன். ஆனா எப்போ அவன் மாதவியோட தம்பின்னு தெரிஞ்சுதோ… அப்போல இருந்து அவனை வேறாப் பார்க்கத் தோணலைடா இளங்கோ. ஏதோ பேசப்போக… என்னென்னவோ ஆகிப் போச்சு. இவ என்னடான்னா… முகத்தைக் கூடப் பார்க்காம முறுக்கிக்கிட்டுத் திரியுறா.”
“இதெல்லாம் காதல்ல சகஜம் மச்சான். என்ஜாய்… இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு பொண்டாட்டிக்கிட்ட இதையெல்லாம் பேசுறப்போ எவ்வளவு சுகமா இருக்கும்? அப்படி யோசிச்சுப் பாரு” நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
***
டாக்டர் சந்திரமோகன் மாதவியின் வீடு வரை வந்திருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உமாசங்கரும் வீட்டில் தான் இருந்தார். சந்திரமோகன் ஏற்கெனவே இவர்கள் குடும்பத்திற்குப் பழக்கமானவர் என்பதால் கவனிப்புப் பலமாகவே இருந்தது.
“உமாசங்கர்… எனக்குச் சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. மாதவி கல்யாண விஷயமாத்தான் நான் உங்கக்கிட்டப் பேச வந்திருக்கேன்.”
“சொல்லுங்க டாக்டர்.”
“மாப்பிள்ளை வேற யாருமில்லை… டாக்டர் இளஞ்செழியன் தான்.” இப்போது உமாசங்கரும் அமுதவல்லியும் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
“டாக்டர்… நடந்த பிரச்சனை என்னன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்…”
“சின்னப்பிள்ளைங்க ஏதோ தெரியாமப் பண்ணிட்டாங்க. அதுக்காக நம்ம பொண்ணுக்கு வர்ற நல்ல வரனை வேணாம்னு சொல்லலாமா உமாசங்கர்?”
“நீங்க சொல்லுறது நியாயம் தான் டாக்டர்… இல்லேங்கலை. ஆனா அந்த வீட்டுல எம்பையனுக்கு என்ன மரியாதை இருக்கும்? பொண்ணு வாழ்க்கை சிறக்கணுங்கிறதுக்காக பையனை விட்டுக்குடுக்கச் சொல்லுறீங்களா?”
“அப்படியில்லை உமாசங்கர். செழியன் வீட்டுல எல்லாருமே நல்ல மாதிரி.”
“ஆனாலும் மாதவியைப் பத்தி ஒரு தப்பான பேச்சு வந்திடுச்சே டாக்டர். அதுக்கும் மேல… எங்களுக்கு ரொம்பவே மீறின இடம் அது.‌ விரலுக்குத் தக்கதா வீக்கம் இருந்தாத் தான் நல்லா இருக்கும் டாக்டர்.”
“செழியனைப் போல ஒரு நல்ல பையனை நீங்கத் தேடினாக் கூடக் கண்டுபிடிக்க முடியாது உமாசங்கர்.”
“புரியுது டாக்டர். எங்கப் பொண்ணுக் குடுத்து வெக்கலைன்னு நினைச்சுக்கிறோம். பொண்ணுக்காகப் பையனை என்னால விட்டுக்குடுக்க முடியாது. கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமா அக்காவோட உறவில்லாம வாழுறதை அருணும் ஜீரணிக்க மாட்டான். மாதவியும் ஒத்துக்க மாட்டா. எங்களைத் தப்பா நினைக்காதீங்க டாக்டர்.”
கைகளைக் கூப்பி இப்படிப் பேசும் மனிதரிடம் என்னவென்று விளக்குவது? மாதவி தன்னிடம் மறுப்புத் தெரிவித்ததை செழியன் தன் அம்மாவிடம் கூறியிருந்தான்.
அவர் மூலமாக சந்திரமோகனின் காதுகளுக்குத் தகவல் வந்திருந்தது. நாட்களை வீணடிக்காமல் சீக்கிரமாகப் பேசி முடிக்கலாம் என்றுதான் மனிதர் கிளம்பி வந்திருந்தார்.‌ ஆனால் எதுவும் சாதகமாக முடியவில்லை. சோர்ந்து போனார்.
அதேவேளை… இளங்கோ பலத்த பிரயத்தனங்களுக்குப் பிறகு அருணை அணுகி இருந்தான். செழியனின் வாடிய முகம் அனைவரையும் முடுக்கி விட்டிருந்தது.
“ஹாய் அருண்! ஐம் இளங்கோ.” நேசமாகக் கரம் நீட்டிய அந்த இளைஞனின் கரத்தை அருணும் பற்றிக் குலுக்கினான். அன்று ஏதோ நல்ல மூடில் இருந்திருப்பான் போலும்.
“சொல்லுங்க சார். இதுக்கு முன்னாடி நாம பார்த்திருக்கோமா என்ன?” புன்னகையோடு கேட்ட இளையவனுக்குத் தான் யாரென்று இளங்கோ சொல்லவும் அவன் நெற்றி சுருங்கியது.
“அவசரப்படாதே அருண். உன்னோட அவசரத்தால உங்கக்காக்கு வர இருக்கிற ஒரு நல்ல வாழ்க்கையைக் கெடுத்திடாதே.” அந்த வார்த்தைகள் அருணைக் கொஞ்சம் நிதானிக்கச் செய்தன.
“செழியனைப் போல ஒரு நல்ல மனுஷனைப் பார்க்க முடியாது அருண். அவன் என்னோட ஃப்ரெண்ட் எங்கிறதுக்காக இதை நான் சொல்லலை. காலேஜ் நாட்கள்ல கூட நாங்கெல்லாம் தண்ணி, பொண்ணுங்கன்னு கூத்தடிக்கும் போது ஒரு சிரிப்போட வேடிக்கை பார்த்த ஆள் அவன். சமூகத்துல இன்னைக்கு பெரிய அந்தஸ்துல இருக்கான். மாதவியை ரொம்பவே நேசிக்கிறான். இதை விட என்ன வேணும் அருண் உனக்கு?”
“அந்த வீட்டுல என்னோட அக்கா நிம்மதியா வாழணும் சார்.”
“அதுல உனக்கென்ன சந்தேகம் அருண்?”
“எப்படி சார் வாழ முடியும்? கல்யாணத்துக்கு முன்னாடியே நைட் ட்யூட்டி பார்க்கிற பொண்ணுன்னு அவ்வளவு கேவலமாப் பேசுறாங்க. அந்த வீட்டுல எங்கக்கா எப்படி சார் நிம்மதியா வாழ முடியும்?”
“அது உம்மேல உள்ள கோபத்துல வந்து விழுந்த வார்த்தைகள் அருண்.”
“அதையே தான் நானும் சொல்றேன். எம்மேல உள்ள கோபம் எப்பவும் எங்கக்கா மேல தான் திரும்பும். அது அவளை நிம்மதியா வாழ விடாது. அன்னைக்கன்னைக்கு சம்பாதிக்கிறவனா இருந்தாலும் போதும் சார். மாதவி நிம்மதியா வாழணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்.”
“செழியன் உங்கக்காவை உள்ளங்கைல வச்சுத் தாங்குவான் அருண்.”
“இப்போ அப்படித்தான் சொல்லுவாங்க சார். நாளைக்கே ஒரு குழத்தை பொறந்ததுக்கு அப்புறமா இந்தப் பேச்செல்லாம் வரும். அதைத் தாங்கிக்கிற சக்தி எங்களுக்கெல்லாம் இல்லை சார். மாதவி குடும்பத்துக்காக நிறையப் பண்ணி இருக்கா. போற இடத்துல அவ சுகப்படணும். ரொம்பப் பொறுமைசாலி. அவளுக்கு நாங்க நல்லது மட்டும் தான் பண்ணணும் சார்.”
“அருண்!”
“உங்க செழியன் சார் காதல் மயக்கத்துல இப்போ இருக்கார். ஆனா இது வாழ்க்கை சார். அந்த அடங்காததைக் கை நீட்டி நான் அடிச்சிருக்கேன். அடிச்சது தப்புன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கலை. ஆனா… நான் எப்படி அந்த வாசப்படியை மிதிக்க முடியும்? அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா நான் எதையும் தியாகம் பண்ணத் தயார். ஆனா அதுவே கேள்விக்குறி தானே? அவங்கப் பொண்ணை நான் கைநீட்டி அடிச்சிருக்கேன். எங்கப் பொண்ணை அவங்க நல்லா வெச்சுக்குவாங்கன்னு என்ன நிச்சயம் சொல்லுங்க?”
“………….”
“செழியன் சார் நல்லவராவே இருக்கட்டும். ஆனா… அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர் மட்டும் எங்கக்கா வாழ்க்கை இல்லை சார். அவரைச் சார்ந்தவங்களும் தான். நிம்மதி போயிடும். இப்போப் பேச எல்லாம் நல்லா இருக்கும் சார். ப்ராக்டிகல்னு வரும்போது புரியும். விட்டிருங்க சார்.”
இளங்கோவிற்கு வாயடைத்துப் போனது. தனக்குப் பேசச் சந்தர்ப்பமே கொடுக்காமல் யதார்த்தத்தைப் புட்டுப் புட்டு வைத்த அருணை வியப்பாகப் பார்த்தான். கோபக்காரன் என்று தான் நினைத்திருத்தான்… ஆனால் இவன் பாசக்கரனாக இருக்கிறானே!
செழியனுக்கு இப்போது என்ன பதில் சொல்வது? எல்லாக் கதவுகளும் மூடிவிட்டது போலவே தோன்றியது இளங்கோவிற்கு.
***
ஹாஸ்பிடல் வளாகமே அன்று கோலாகலமாக இருந்தது. அந்த வருடத்தின் ஆண்டு விழாவை டாக்டர் சந்திரமோகன் மிகவும் விமரிசையாக ஏற்பாடு பண்ணி இருந்தார்.
ஹாஸ்பிடல் புல்வெளியில் வண்ண விளக்குகளின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. ஆங்காங்கே மேசை நாற்காலிகள் போடப்பட்டு சின்னதாக ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.
சந்திரமோகன் தனக்குத் தெரிந்த ஒரு அரசியல்வாதியை பிரதம அதிதியாக அழைத்திருந்தார். நோயாளிகளும், அன்றைக்கு ட்யூட்டியில் இருக்கும் ஊழியர்களும் அந்த விழாவில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து விட்டு ஹாஸ்பிடல் வளாகத்தைத் தெரிவு செய்திருந்தார்கள்.
அன்று இளங்கோவும் ஃபங்ஷனுக்கு வந்திருந்தான். சந்திரமோகனின் விஷேட அழைப்பில் அட்டகாசமாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டு அந்த இடத்தையே ரணகளப்படுத்திக் கொண்டிருந்தான்.
செழியனுக்கு அப்போதுதான் ட்யூட்டி முடிந்திருந்தது. வீடுவரை போய் அவசர அவசரமாக ஒரு குளியலைப் போட்டு விட்டு ஓடி வந்திருந்தான்.
மாதவிக்கு அன்று ஓய்வுநாள் என்பதால் நிதானமாகவே புறப்பட்டு வந்திருந்தாள். இளஞ்சிவப்பு வண்ணப் பட்டுப் புடவையில் நல்ல பச்சையில் பார்டரும், ஹெட்பீஸும் இருக்க, அதே பச்சை வண்ணத்தில் ப்ளவுஸ் அணிந்திருந்தாள்.
கண்ணை உறுத்தாத மெல்லிய அலங்காரம் அவளுக்கு எடுப்பாக இருந்தது. கண்களை அவளை விட்டுப் பிரிக்க செழியன் படாதபாடு பட்டுப் போனான்.
அருணோடு பைக்கில் வந்து இறங்கிய பெண்ணை செழியன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை இளங்கோ மெதுவாகக் கவனித்துக் கொண்டான். நண்பனைப் பார்க்கவே பாவமாக இருந்தது இளங்கோவிற்கு.
பெண்கள் என்றாலே நான்கடி தள்ளி நிற்பவன் இளஞ்செழியன். அப்படியானவர்கள்தான் விழுந்தால் எழுந்து கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ந்து போவார்கள் போலும்!
சந்திரமோகனின் முயற்சியும் பலனளிக்கவில்லை. இளங்கோவும் இயன்றவரை முயற்சித்து விட்டான்.‌ இனிமேல் எப்படிக் காய் நகர்த்துவது என்று யாருக்கும் புரியவில்லை.
கற்பகத்தையும் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டுத் தான் வந்தான் இளங்கோ. குடும்ப நண்பர்கள் என்பதால் நல்ல பழக்கம் எப்போதும் உண்டு.
‘என்னை என்னப் பண்ணச் சொல்லுறே இளங்கோ. அந்தப் பொண்ணை நானும் தான் பார்த்தேன். இவதான் என்னோட செழியனுக்கு ஏத்த பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தா…’ அதற்கு மேல் கற்பகம் பேசவில்லை. பெருமூச்சு ஒன்று மட்டுமே வந்தது.
‘ஆனா… பயல் நொறுங்கிப் போயிட்டான் ஆன்ட்டி.’
‘அது எனக்கும் புரியுதுப்பா… சரியாகச் சாப்பிட மாட்டேங்கிறான், முகங்குடுத்துப் பேசமாட்டேங்கிறான். நான் என்னதான் பண்ண முடியும்? சந்திரமோகன் அண்ணாக்கிட்டச் சொல்லிப் பேசச் சொன்னேன். பொண்ணைக் குடுக்க முடியாதுன்னுப் பெத்தவங்கச் சொல்லும் போது நாம என்னதான் பண்ண முடியும் இளக்கோ?’
‘ம்… நானும் அந்தப் பையன் கிட்டப் பேசிப் பார்த்தேன் ஆன்ட்டி. அவங்க நிலைமையில இருந்து யோசிச்சுப் பார்த்தா அவங்க சொல்லுறதும் சரிதான் இல்லையா?’
‘என்னவோ போ! கடைசியில சும்மா இருந்த எம்புள்ளையை நானே ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டேன்.’ அன்று கண்ணைக் கசக்கிய ஆன்ட்டி பேசிய வார்த்தைகள் எத்தனை உண்மை என்பதை செழியன் இப்போது நிரூபித்துக் கொண்டிருந்தான்.
பின்னல் அசைந்தாட நடந்து வந்துகொண்டிருந்த மாதவியை அவன் கண்கள் இம்மியளவும் விட்டு நகரவில்லை. தலை நிறையப் பூவும் குடை ஜிமிக்கியும் அவளுக்கு இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருந்தது.
மாதவியை இப்படிக் கலர்க்கலராக செழியன் பார்த்ததில்லை. எப்போதும் அந்த யூனிஃபார்ம் தானே. அன்றைக்குக் காலேஜில் பார்த்தது மட்டும் தான்.
“ஹலோ டாக்டர்… ஹார்ட்டு வீக் டாக்டர்…” மேனகா பாடியபடி செழியனையும் இளங்கோவையும் கடக்க, கூடவே வந்த ரஞ்சிதா,
“இது காதலென்னும் நோய்… ஒரு கன்னிப் பெண்ணைப் பார்…” என்றுவிட்டு நகர்ந்தாள். செழியன் சட்டென்று மாதவியை விட்டுப் பார்வையை நகர்த்திக் கொண்டான். இளங்கோ தான் வந்த சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டான்.
“அறிவுக் கொழுந்துடா மச்சான் நீ. போயும் போயும் இதுங்கக் கிட்டப் போய் மாதவியைப் பத்தி விசாரிச்சிருக்கியே. பாரு… எப்படி உன்னைப் பிரிச்சு மேயுறாளுங்கன்னு.”
“ம்ப்ச்…” உச்சுக்கொட்டி விட்டு மாதவியை நோக்கிப் போனான் இளஞ்செழியன். இவனைக் காணவும் மாதவி அழகாகப் புன்னகைத்தாள்.
“மாதவி… என்ன இப்போல்லாம் பார்க்கிறதே ரொம்பக் கஷ்டமா இருக்கு?”
“அப்படியெல்லாம் இல்லை டாக்டர். வேலைக்கே நேரம் சரியா இருக்கு.”
“ம்… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அருணோட எக்ஸாம் எப்படியாம்? நல்லாப் பண்ணி இருக்கானாமா?” ஒரு உரிமையோடு செழியன் பேசத் தவித்துப் போய் நிமிர்ந்து பார்த்தாள் மாதவி.
“என்னாச்சு மாதவி?‌ ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா இதையெல்லாம் நான் கேக்கக் கூடாதா?” ஒரு வலியோடு சிரித்தான் டாக்டர்.
“நீங்க எப்பவுமே என்னோட மரியாதைக்குரிய நபர் டாக்டர். உங்களை ஒரு பிரமிப்போட தான் நான் என்னைக்கும் பார்த்திருக்கேன். உங்களை என்னோட ஃப்ரெண்ட்னு சொல்லிக்கிறது என்னோட பாக்கியம் டாக்டர்.”
“நானும் சாதாரண மனுஷன் தான் மாதவி. கொஞ்சம் அந்தக் கண்ணோடயும் என்னைப் பாருங்க.” பேசிய படியே இருவரும் குளிர்பானங்கள் இருந்த பகுதிக்கு வந்திருந்தார்கள். செழியனின் கண்ணசைவில் அங்கு நின்றிருந்த பையன் இருவருக்கும் ஜூஸ் கொண்டுவந்து கொடுத்தான். ஒன்றை மாதவியின் கையில் கொடுத்தவன் ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டான். அவள் பருக ஆரம்பிக்கவும்,
“இளங்கோவை ஞாபகம் இருக்கில்லை?” என்றான்.
“ஆமா டாக்டர்.”
“அங்க நிக்குறான்… போலாமா?”
“ம்…” அவள் சம்மதிக்க இருவரும் இளங்கோவை நோக்கிப் போனார்கள். அவனும் இவர்களைத்தான் பார்த்தபடி இருந்தான். ஜோடிப் பொருத்தம் அமோகமாக இருந்தது. ஆனாலும் என்ன பண்ண? அதற்குக் குடுத்து வைக்கவில்லையே!
“வணக்கம் டாக்டர்! அப்பா எப்படி இருக்காங்க?”
“ரொம்ப நல்லா இருக்காங்க. உங்க வீட்டுல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா?”
“ம்…” பேச ஆரம்பித்த மாதவி நெற்றிப்பொட்டை லேசாக அழுத்திப் பிடித்தாள். முகத்தில் ஏதோவொரு அசௌகரியம் தெரிந்தது.
“மாதவி! என்ன ஆச்சு?” செழியன் கொஞ்சம் பரிதவிக்க இளங்கோ முகத்திலும் கவலையின் சாயல் தெரிந்தது.
“தெரியலை டாக்டர்… தலையை என்னவோ பண்ணுது.”
“வாங்க… அங்க செயார்ல உக்காரலாம்.” செழியன் அழைக்க மாதவியின் நடையில் தடுமாற்றம் தெரிந்தது. செழியனின் கரத்தைப் பெண்ணாகவே பற்றிக் கொண்டாள். செழியனும் அவள் தோளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.
“ஒன்னுமில்லை மாதவி… இப்படி உக்காருங்க.” இளங்கோ அவசரமாக இழுத்துப் போட்ட நாற்காலியில் அமர்ந்தவள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள்.
“அருணுக்கு ஃபோன் பண்ணணும்… வீட்டுக்குப் போனா நல்லா இருக்கும் போல இருக்கு டாக்டர்…” அவள் வார்த்தைகள் நிதானமின்றி வர இளங்கோவின் கண்கள் ஆராய்ச்சியாகச் சுருங்கியது.
“இல்லையில்லை… இப்போ பைக்ல போக வேணாம். நான் கார்ல ட்ராப் பண்ணுறேன்.”
“ஓ… தான்க் யூ டாக்டர்.” அவளுக்கும் அதுவே சரியென்று பட்டதோ என்னவோ சட்டென்று சம்மதித்தாள் பெண். கைத்தாங்கலாக அவளைக் கார் வரை கூட்டிவந்த செழியன் கதவைத் திறந்து மாதவியை வசதியாக உட்கார வைத்தான்.
“மாதவி… வசதியா இருக்கா?” சீட்டில் தலையைச் சாய்த்தபடி அமர்ந்து இருந்தவள் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினாள்.
ட்ரைவர் சீட்டில் ஏறப்போன இளஞ்செழியனைத் தடுத்தது நண்பனின் குரல்.
“மச்சான்… நானும் கூட வர்றேன்டா.”
“வேணாம் இளங்கோ!” நண்பனின் நெஞ்சில் தன் உள்ளங்கையை வைத்துத் தடுத்தான் இளஞ்செழியன்.
“மச்சான்!”
“காரை ஃபாலோ பண்ணாதே…”
“மச்சான்… இது தப்புடா!”
“தெரியும்… ஆனா எனக்கு வேற வழியில்லை. மாதவியை என்னால யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாது.”
“அவசரப்படாத செழியா… மாதவி உனக்குத்தான். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை. கொஞ்சம் பொறுமையா இரு.”
“நாளைக்கு இவளைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களாம். பொண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சாம். சும்மா… ஒரு சம்பிரதாயத்துக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். ஒரு வேளை நாளைக்கே நிச்சயதார்த்தம் நடந்தாலும் நடக்கலாம்.”
“………..!”
“இன்னும் என்னைப் பொறுமையா இருக்கச் சொல்லுறியா இளங்கோ?”
“இருந்தாலும்… செழியா…”
“என் விரல் கூட அவ மேல படாது, பயப்படாதே.”
“சேச்சே… நான் அந்த அர்த்தத்துல சொல்லலைடா. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?”
“அப்போ அமைதியா இருந்து வேடிக்கை பாரு. யாராவது ஏதாவது கேட்டா, மாதவிக்கு உடம்புக்கு முடியலை… செழியன் வீடு வரைக்கும் ட்ராப் பண்ணிட்டு வர்றேன்னு போயிருக்கான்னு மட்டும் சொல்லு. அது போதும்.” அதற்கு மேலும் தாமதிக்காமல் அந்த ப்ளாக் ஆடியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான் இளஞ்செழியன்.
இளங்கோவிற்கு நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை. திக்பிரமை பிடித்தவன் போல நின்றிருந்தான்.