UUP–EPI 18

அத்தியாயம் 18

அண்ட்டி முல்லேரியன் ஹார்மோன் (Anti- Mullerian hormone) தான் ஆண் குழந்தைப் பிறப்பிற்கு ஏதுவாக செயல்படும் ஹார்மோனாகும். க்ரோமோசம் எக்ஸ்.வை(ஆண்) என இருக்கும்போது பெண்ணின் உடல் அண்ட்டி முல்லேரியன் ஹார்மோன் சுரக்கவைத்து டேஸ்டெஸ்ட்ரோனை அதிகரித்து ஆண் பிள்ளைகளுக்கு உள்ள குண நலன்களை கொடுக்கிறது.

 

 

“அம்மா, மனசே பாரமா இருக்கும்மா! கதிரு கிட்ட வாக்குக் குடுத்துருக்கேன்மா, அவன் மாப்பிள்ளைய ஓக்கே பண்ணதும்தான் கல்யாணம்னு!”

“என்ன சண்மு! என் கிட்ட வெளாட்டுக் காட்டறியா? விடிஞ்சா கல்யாணம். ஒரு வாரமா தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி இதையே சொல்லிட்டு இருக்க! உன்னைப் பெத்தவ நான்! உனக்கு நான் செய்யாத நல்லத என்ன அவன் செஞ்சிருவான்! சரி, அழுது கரையறீயேன்னு போனும் போட்டுக் குடுத்தேன்தானே? லைனு போகலைனா என்னடி பண்ணறது? ஒழுங்கு மரியாதையா கல்யாணப் பொண்ணா சிரிச்ச முகத்தோட இரு! உன் தம்பி அழுமூஞ்சி கோலத்துல உன்னைப் பார்த்தா, கவலையாயிடுவான்”

பெரிதாக அட்வைஸ் செய்த மீனாட்சி, மகளைப் படுக்க சொல்லி அவளை மெல்ல தட்டிக் கொடுத்தார். சண்முவுக்குத்தான் தூங்க முடியாமல் கண்ணில் நீர் கொட்டியபடியே இருந்தது. அம்மாவுக்கு முதுகு காட்டிப் படுத்தவள், மௌனமாய் அழுது கரைந்தாள். கதிருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் அவளின் சோகத்திற்கு காரணம். அவன் இல்லாமல் தனக்குத் திருமணம் நடப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவள் அந்தப் பெரிய இடரில் இருந்து தப்பித்து வந்த தினத்தில் இருந்து அவள் வாழ்க்கை அவள் வசம் இல்லை.

வீட்டிற்கு வந்திருந்த கண்ணன் தன் அக்காவைக் கட்டிப்பிடித்து கதறி விட்டான்.

“அக்கா, உனக்கு மட்டும் எதாச்சும் ஆகியிருந்தா எங்க நிலைமை என்ன? அம்மா சொன்னதைக் கேட்டதும் என்னால தாங்க முடியலக்கா! இடிஞ்சி போய் உட்கார்ந்துட்டேன். இவர்தான் என்னை தேற்றி இங்க கூட்டிட்டு வந்தாரு” என அருகில் நின்றிருந்தவனைக் சுட்டிக் காட்டினான்.

தம்பியின் இறுகிய அணைப்பில் இருந்தவள், அப்பொழுதுதான் நிமிர்ந்து வந்திருந்தவனைப் பார்த்தாள்.

“வா..வாங்க”

தன் குடும்பம் தவிர ஓர் அந்நிய ஆண்மகனுக்கு தனது நிலைமை பறைசாற்றப்பட்டதை அறிந்து அவள் மனம் படாதபாடு பட்டது. அவள் உணர்வை உணர்ந்தவன் போல,

“கண்ணா! என்ன நடந்துப் போச்சுன்னு நீயும் அழுது அவங்களயும் பயம் காட்டற! அவங்க களைச்சுப் போய் தெரியறாங்க! கூட்டிட்டுப் போய் ரெஸ்ட் எடுக்க வை, போ!” என சொன்னவன், இவளைப் பார்த்து,

“போ!” என வாயசைத்து சொன்னான்.

யார் முகத்தையும் பார்த்துப் பேச இவளுக்கும் மனதில்லாததால், உள்ளே சென்று படுத்துக் கொண்டாள். உடல் சோர்வு, இரவெல்லாம் தூங்காமல் இருந்தது என தூக்கம் கண்ணை சுழட்டினாலும் மனம் தூங்காமல் நடந்ததையே நினைத்து உழன்றுக் கொண்டிருந்தது. கதிரிடம் பேசினால் மனல் ஆறுதல் அடையும் போல இருக்க, கைத்தொலைபேசி தொலைந்துப் போனது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. வீட்டுப் பேசியில் பேசலாம் என்றால், இவர்கள் முன்னே பேசி கதிரிடம் ஆறுதல் பெறுவது பிடிக்காததால் பிறகு பேசலாம் என படுத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் அவள் அசந்துவிட, இவர்களிடையே பேச்சு வார்த்தை ஆரம்பித்திருந்தது.

“அம்மா, நான் அடிக்கடி சொல்வேனே என் ப்ரேண்டோட அண்ணா பிரதாப்னு! அது இவர்தான்மா.” என அறிமுகப்படுத்தி வைத்தான் கண்ணன்.

“நீங்கதான் பிரதாப்பா? இவன் மூச்சுக்கு முன்னூரு தரம் உங்கள பத்திதான் பேசுவான் தம்பி. நீங்க தான் இவன் படிப்புக்கு காசு கட்டறீங்களாமே! ரொம்ப நன்றி தம்பி” என கையெடுத்து கும்பிட்டார் மீனாட்சி.

பட்டென அவர் கையைப் பற்றிக் கொண்டான் பிரதாப்.

“என்னம்மா இதெல்லாம்! நீங்க பெரியவங்க, என்னைப் போய் வணங்கிகிட்டு! கண்ணாவும் என் தம்பியும் கோர்ஸ்மேட். கண்ணா சொல்லிக் குடுத்துத்தான் அவன் பாஸ் ஆகறதே! அதுக்காக நான் செய்யற சின்ன உதவிதான் பணம் கட்டறது. கடவுள் புண்ணியத்துல எங்களுக்குப் பணத்துக்கு குறைவு இல்ல. உங்க புள்ள செய்யற நல்ல காரியத்துக்கு அள்ளி வைக்கற இடத்துல நான் கிள்ளி வைக்கறேன். அவ்வளவுதான்”

அதற்குள் கண்ணன் அவர்களுக்கு காபி போட்டு எடுத்து வந்திருந்தான்.

“எடுத்துக்குங்க பிரதாப்!”

கண்ணன் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டான் பிரதாப். அவன் காபியை குடித்து முடிக்கும் வரை அங்கே அமைதியே வியாபித்திருந்தது.

“அம்மா, நடந்தது எல்லாம் கண்ணா சொன்னான்! இதுக்கும் மேல பொறுக்க முடியாதுன்னு தான் நான் இவன் கூடவே கிளம்பி வந்தேன்” என சொல்லியவன் மீனாட்சியின் முகம் பார்த்தான்.

“தம்பி என்ன சொல்ல வரீங்க?”

“அம்மா! என்னைத் தம்பி, தம்பின்னு வாய் நிறைய கூப்பிடறது நிஜம்னா, உங்கப் பொண்ண எனக்குக் கட்டிக் குடுபீங்களா?” என பட்டென விஷயத்தை உடைத்தான் பிரதாப்.

மீனாட்சி அவன் கேட்ட விஷயத்தை நம்ப முடியாமல், மகனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

“அம்மா! என்னடா பட்டுன்னு கேட்டுட்டாருன்னு பார்க்கறியா? நான் அடிக்கடி நம்ம குடும்ப விஷயத்தைப் பத்திப் பேசுவேன். அதுல அக்காவ பத்தி மட்டும் நெறைய கேட்டு தெரிஞ்சுக்குவாரு பிரதாப். நான் அதப் பெருசா எடுத்துக்கல அப்போ. இன்னிக்கு அக்காவுக்கு இப்படி ஆச்சுன்னு நான் கலங்கிப் போய் நிக்க, இவரும் கலங்கிட்டாரும்மா! அங்கயே என் கிட்ட கேட்டுட்டாரு அக்காவ கல்யாணம் செஞ்சிக்கறேன்னு! எனக்கு இருந்த பதட்டத்துல எல்லாம் இங்க வந்து பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என சொன்னான் கண்ணன்.

ஆச்சரியமாக மீனாட்சி பார்க்க, லேசாய் முகம் சிவந்த பிரதாப் அவரிடம் தன் மனம் திறந்தான்.

“அம்மா! பெரியவங்க உங்க கிட்ட எப்படி சொல்லறதுன்னு தெரியல! அது வந்து, ப்ரியாவோட போட்டோவ இவன் அறையில பார்த்ததுல இருந்தே எனக்கு அவ மேல லேசா ப்ரியம் வந்துருச்சு! அக்காவ பத்தி கண்ணா பேச பேச, அவளோட பாசம், குடும்பத்துக்காக உழைக்கற குணம், கண்ணா மேல கொண்ட நேசம்னு ரொம்பப் பிடிச்சிருச்சு! என் வீட்டுல ரொம்ப அந்தஸ்து எல்லாம் பார்ப்பாங்க! அதனால ரொம்பவே யோசிச்சேன். இப்போ இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு சொன்னதும் நான் துடிச்சுப் போயிட்டேன்மா! ப்ரியாவாவுக்கு மட்டும் எதாச்சும் ஆகியிருந்ததுனா என்னால தாங்கிருக்கவே முடியாது. அந்தஸ்து, பணம், கௌரவம் எல்லாம் ப்ரியாவுக்கு அப்புறம்தான்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு. தயவு செஞ்சு உங்க மக சண்முகப்ரியாவ, என்னோட ப்ரியாவா எனக்கு குடுங்கம்மா!”

பிரதாப் பேசியதைக் கேட்டு அசந்துப் போய் விட்டார் மீனாட்சி. கண்ணன் சொல்லியிருந்த விஷயங்களை வைத்துப் பார்த்தால், இந்த பிரதாப் பெரும் பணக்காரன் என புரிந்தது. ஆஸ்திரேலியாவில் வேலை பார்ப்பவன், வருடம் ஒரு முறை இந்தியா வந்துப் போவான் என கண்ணன் சொல்லியிருந்தான். முப்பது வயதாகியும் கல்யாணத்திற்கு பிடி கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறான் எனவும் தெரியும். மகன் சொல்லவதை வைத்துப் பார்த்தால் பிரதாப் அப்பழுக்கில்லாத, அழகான, வசதிப்படைத்த மாப்பிள்ளை. தாங்களே தேடினால் கூட இப்படிப்பட்டவன் கிடைப்பானா? மகளுக்கு வந்திருப்பது அதிர்ஷ்டமல்லவா! இப்போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு இந்த பிரதாப் பணம் இல்லாமல் இருந்தாலும், அம்ஜிக்கரையில் வேலை செய்தாலும், ஒடிந்துப் போவது போல தேகம் இருந்தாலும் கூட மகளைக் கல்யாணம் செய்துக் கொடுத்து விடும் அவசரத்தில் இருந்தார் மீனாட்சி. ஆனாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

“தம்பி, சண்முவ விரும்பறேன்னு சொல்லறீங்க! என் கண்ணா உங்களப்பத்தி ரொம்ப நல்லதா தான் சொல்லிருக்கான். அதனால எனக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்ல. ஆனாலும் ஒரு தயக்கம்ப்பா! நீங்க பெரிய இடம்! நாங்க…” என இழுத்தார்.

“அம்மா…இல்லல்ல! இனிமே அத்தை! அப்படி கூப்பிடலாம்தானே?”

அப்படி சொன்னதிலேயே முகம் மலர்ந்துவிட்டது மீனாட்சிக்கு.

“கூப்பிடுங்க தம்பி! வாயார கூப்புடுங்க”

“அத்தை! எங்க அம்மாவும் அப்பாவும் இதெல்லாம் பார்ப்பாங்கத்தான். அவங்களுக்கு நல்ல அந்தஸ்த்துல, பணத்தோட மருமக வரனும்னு பெரிய ஆசைலாம் இருக்கு. ஆனா வாழப்போற எனக்கு மனசுக்குப் பிடிக்கனும் இல்லையா! இத்தனை வருசமா என் மனச எவரும் உங்க மகள மாதிரி அசைச்சுப் பார்க்கல! போன வருஷமே ப்ரியாவப் பத்தி தெரியும், ஆனாலும் இதுவும் கடந்து போகும்னு ஆஸ்திரேலியா கிளம்பிட்டேன். ஆனா அவள மறக்க முடியல. இதைப்பத்தி பேசிடலாம்னு தான் இந்தியா வந்தேன். அதுக்குள்ள இப்படியாகிருச்சு. இனிமே அவள விட்டுட்டு, அவளுக்கு என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்க முடியாது அத்தை. ப்ளிஸ், புரிஞ்சுக்குங்க! என்னோட பெத்தவங்கள சமாளிக்கறது என் பொறுப்பு” கண்களில் ஒரு கெஞ்சுதலுடன் யாசகம் கேட்பது போல கைகளை நீட்டி நின்றிருந்தவனைப் பார்த்ததும் உருகிப் போய் விட்டது மீனாட்சிக்கு.

“கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம் மாப்பிள்ளை?”

சட்டென எழுந்து வந்து மீனாட்சியின் கைகளைப் பற்றிக் கொண்டான் பிரதாப்.

“தேங்க்ஸ் அத்தை! ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ்! இனிமே உங்க மகள பத்தி நீன்க கவலையேப் பட வேணாம்! என் கண்ணுக்குள்ள வச்சி அவளப் பாத்துப்பேன். நம்ம கண்ணாவையும் படிக்க வச்சு, நல்ல வேலை வாங்கித் தரேன். பேரன் பேத்தின்னு ஆனதும் நீங்களும் எங்களோட ஆஸ்திரேலிய வந்துருங்க அத்தை!”

மீனாட்சியின் சம்மதம் கிடைத்ததும் தனது திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான் பிரதாப். தனக்கு இன்னும் இரண்டு வாரம் தான் விடுமுறை இருப்பதால், கூடிய சீக்கிரமே திருமணம் வைக்க வேண்டும் என சொன்னவன், அன்றே கிளம்பி அவனுக்கு என்று தனியாக இருக்கும் வீட்டுக்கு சென்று விடலாம் என சொல்லி விட்டான்.

“என் பக்கத்துலயே இருந்துட்டா, எனக்கு கல்யாண வேலைகளைப் பார்க்க சுலபமா இருக்கும் அத்தை. கல்யாணத்த முடிச்சுட்டு, ப்ரியாவுக்கு வேண்டிய ஆவணம்லாம் நான் ரெடி பண்ணனும். அதுக்கு கொஞ்ச நாளாகும். எப்படியும் அவள நான் ஆஸ்திரேலியா கூப்டுக்க ஆறு மாசமாகலாம். அது வரைக்கும் சென்னையில என் ப்ளாட்ல கண்ணாவும் ப்ரியாவும் இருக்கட்டும். இவன் படிப்பையும் சென்னைக்கு மாத்திக்கலாம். படிச்சு முடிச்சதும் என் கூட இவனையும் ஆஸ்திரேலியா அழைச்சிக்கிறேன்”

மடமடவேன ப்ளான் பண்ண ஆரம்பித்தான் பிரதாப். ஒரு வாரத்தில் திருமணம், அதன் பிறகு மகள் ஆஸ்திரேலியா பயணம் என மீனாட்சிக்கு கொஞ்சம் திகிலாகவே இருந்தது. மகனை கலக்கமாகப் பார்த்தார்.

“அம்மா! என்னம்மா? எல்லாமே சட்டு சட்டுன்னு நடக்குதுன்னு பயமா இருக்கா? எதுக்கும்மா பயம்? பிரதாப் சாரால நமக்கு ஒரு விடிவு வந்துருச்சுன்னு நினைச்சுக்கம்மா! இந்த மாதிரி வாய்ப்ப்பெல்லாம் அக்காவுக்கு வரும்னு கனவுலயாச்சும் நீ நினைச்சுருப்பியா? நம்மல இந்த ஊரும், நம்ம சொந்தங்களும் எப்படிலாம் தூத்திருக்காங்க? அப்பன் ஓடிப்போனவன்னு எவ்ளோ கேவலப் படுத்திருக்காங்க! அப்படி இருக்க இந்த மாதிரி வாழ்க்கைலாம் அக்காவுக்கு வாய்க்குமாம்மா? உன்னை மாதிரியே அவளும் வாக்கப்பட்டு ஓடா தேயனுமாம்மா? விரும்பி வந்து கேக்கறாரும்மா! அவங்க வீட்டுக்கு மருமகளா போக மாட்டோமான்னு எத்தனைப் பொண்ணுங்க ஏங்கறாங்க தெரியுமா? உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்மா! “ என தன் தாயை தனியாக அழைத்து வந்து எடுத்து சொன்னான் கண்ணன்.

ஒரு மூளையில் கண்களில் கண்ணீர் தடத்தோடு தூங்கும் தன் மகளைப் பார்த்தார் மீனாட்சி.

“சரிடா, நடத்திடலாம்! நமக்காக ஓடி ஓடி உழைச்சவ இவ. நல்ல துணியோ, வயித்துக்கு நல்ல சாப்பாடோ நான் போட்டது இல்ல! படிக்கவும் வைக்கல! பொறந்த வீட்டுல நாய் படாதபாடு பட்டுட்டா, புகுந்த வீட்டுலயாச்சும் ராசாத்தியா இருக்கட்டும்டா என் மக! ஆனா சொந்த பந்தத்துகிட்ட என்னடா சொல்ல?”

“அம்மா, திடீர்னு கல்யாணம் செய்யறோம்னு சொன்னா, என்ன கசமுசாவோன்னு பேசுவாங்கம்மா! அதோட நமக்கு மட்டும் தெரிஞ்ச இந்த ரேப் அட்டேம்ப்ட் ஊருக்கே தெரிஞ்சிடும்மா! எல்லார்கிட்டயும் போய் ஒன்னும் நடக்கலன்னு விளக்க முடியுமா? அதனால கல்யாணத்த முடிப்போம்! அப்புறம் சொல்லிக்கலாம்” என தன் சகோதரியின் மேல் உள்ள அக்கறையில் கல்யாண விசயத்தை ஊரில் யாருக்கும் சொல்லவிடவில்லை இவன். ஆனாலும் மனது கேட்காமல் பக்கத்து வீட்டில் மட்டும் சொல்லி விட்டு, மூட்டை முடிச்சைக் கட்ட ஆரம்பித்தார் மீனாட்சி.

இந்த கல்யாணத்துக்கு சம்மதமா என யாருமே சண்முவிடம் கேட்கவில்லை. இந்தக் கல்யாணமே அவள் பாதுகாப்புக்கும், அவள் நிம்மதிக்கும் தான் என அம்மாவும் மகனும் முடிவெடுத்து விட்டனர். அடித்துப் போட்டது போல சண்மு நான்கு மணி நேரம் தூங்கி எழ, அது வரைக்கும் அவளை எழுப்பவிடவில்லை பிரதாப். தூங்கி எழுந்தவள் கண்டது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டி படுக்கையைத்தான்.

“என்னம்மா? எங்க போறோம்?”

“நீ போய் குளிச்சுட்டு வாம்மா! போற வழியில பேசிக்கலாம்”

பிரதாப்பின் பார்வை வேறு இவள் மேலேயே இருக்க, சட்டென எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் சண்மு. அவள் குளித்து வர, கார் ரெடியாக இருந்தது. கதிருக்குப் போன் பேசக் கூட சந்தர்ப்பம் கொடுக்காமல், கண்ணன் அவள் கைப்பற்றி அழைத்துப் போய் காரில் அமர்த்திவிட்டான்.

அசதியிலும், பயத்திலும் சோர்ந்து போய் இருந்தவள்,

“கதிருக்குப் போன் பேசனும்டா கண்ணா” என மெல்லிய குரலில் கேட்டாள்.

“அங்க போய் பேசிக்கலாம்கா!” என முடித்து விட்டான் கண்ணன்.

பிரதாப் குடும்பத்துக்கு சொந்தமான ஒரு வீட்டில் இவர்களை தங்க வைத்தவன் தன் பெற்றவர்களையும் கூட்டி வந்தான்.

“என் மகன் கல்யாணம் ஆஹாஓஹோன்னு இருக்கனும்னு எவ்வளவோ ஆசைப்பட்டோம்! இவன் அஞ்சாரு வருஷமா பிடி கொடுக்கவேயில்லை. இப்ப தீடீர்னு வந்து ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்கறான். அப்படி என்ன சொக்குப்…”என அவன் அம்மா ஆரம்பிக்க, பிரதாப்பின் குரல் இடைவெட்டியது.

“ம்மா! நம்ம வீட்டுக்கு வர போற மகாலெட்சுமிய பத்தி பேசிட்டு இருக்கீங்க! ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்மா! இப்போ நீங்க பேசற பேச்சுத்தான் காலம் காலமா தொடறப்போற மாமியார் மருமக உறவுக்குப் பாலமா இருக்கும். அதனால உங்க சம்பந்திகிட்ட அதுக்கு உரிய மரியாதையோட பேசுங்கம்மா”

“அதான் பையன் சொல்றான்ல! கல்யாணம் செஞ்சிக்கலன்னு சொன்னப்போவும் கண்ண கசக்கன! இப்போ கட்டிக்கறேன், நடத்தி வைங்கன்னு சொல்றப்போவும் கசக்கற! சப்புபுட்டுன்னு பேசி சம்பந்தி வீட்டு சாங்கியம் சமாச்சாரம்லாம் கேட்டுக்க. இப்பவே ஆரம்பிச்சாத்தான் பாதி ஜாதி ஜனத்தையாச்சும் கூப்புட முடியும்” என மனைவியை அடக்கினார் பிரதாப்பின் அப்பா.

அவர்கள் வந்துப் பேசவும் தான் தனக்கும் பிரதாப்புக்கும் திருமணம் வரை பேச்சு வார்த்தை செல்லுகிறது என சண்முவுக்கே தெரியும். அதிர்ச்சியில் தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அங்கோ ஆனந்தம் தாண்டவமாடியது. பிரதாப் பிடித்திருக்கிறது என சொன்னாலும், அவன் குடும்பம் எப்படி இருக்குமோ என கலங்கியவருக்கு சம்பந்தியின் பேச்சு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது. தாங்கள் ஏழையாக இருந்தாலும் தங்களது சாங்கியம், சம்பிரதாயத்தை மதிக்கிறார்களே என புல்லரித்துப் போனது மீனாட்சிக்கு.

அதன் பிறகு மடமடவென காரியங்கள் நடந்தேறின. சண்முவுக்குத்தான் நிலைக் கொள்ளவில்லை.

“கண்ணா! எதுக்குடா இப்படி அவசரமா ஒரு கல்யாணம்? கொஞ்ச நா போகட்டுமேடா”

“ஏன்? ஏன் கொஞ்ச நாள் போகட்டும்? அதுக்குள்ள இன்னொருத்தன் வந்து உன் கையப் புடுச்சு இழுக்கவா?” பொங்கிவிட்டார் மீனாட்சி.

“பேசாம இருங்கம்மா! நான் அக்காட்ட பேசறேன்! அக்கா, உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா?” எப்பொழுதுமே கண்ணன் மென்மையாகத்தான் பேசுவான். இப்பொழுது அக்காவின் எதிர்காலம் பற்றி பேசும் போது இன்னும் குரல் மென்மையாகி இருந்தது.

“உங்கள நம்பாம, நான் வேர யாரைடா நம்பப் போறேன்!”

“நாங்க உனக்கு எப்பவுமே நல்லததான்கா செய்வோம்! பிரதாப் மாமா, ரொம்ப நல்லவருக்கா! எனக்கு படிப்புக்கு ஸ்பாண்சர் பண்ணறாருன்றதுனால நான் சொல்லல! எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வாருக்கா! இப்போ கூட பார்த்தியா, உனக்காக அவங்க அம்மா கிட்ட எப்படி பேசனாருன்னு. ஹீ லவ்ஸ் யூக்கா! அடிக்கடி இண்டைரக்டா உன்னப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்குவாருக்கா. உன் போட்டோவ பார்த்ததில இருந்தே உன் மேல பைத்தியமா சுத்திட்டு இருக்காரு. அவரே இத என் கிட்ட சொன்னாருக்கா! அப்படிப்பட்டவரு உன்னை எப்படி பார்த்துப்பாரு! உன்னை தேடி வர சீதேவிய உதைச்சித் தள்ளிடாத! அவ்ளோதான் சொல்லுவேன் நான்.”

“எனக்கு… எனக்கு கதிர் கிட்ட பேசனும்டா! எல்லாம் சொல்லனும் அவன் கிட்ட! அவன் என்ன செய்யறதுன்னு அழகா சொல்லுவான். போன் குடு! அவன் சரின்னா இப்பவே நான் கல்யாணத்துக்கு ரெடி!”

தன் கைத்தொலஒபேசியைக் கொடுத்தான் கண்ணன். ஆனால் கதிரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஓய்ந்து அமர்ந்து விட்டாள் பெண்.

அவள் அருகில் வந்து அமர்ந்த மீனாட்சி,

“என்னை மாதிரி அஞ்சிக்கும் பத்துக்கும் லோல்படாம இருக்கற மாதிரி வாழ்க்கை அமைஞ்சுக்குடி உனக்கு! உங்கப்பன பத்தி தூண்டு துருவாத நல்ல குடும்பமா இருக்காங்க! என் சாமியில்ல, ஒத்துக்கடி சண்மு” மகள் மறுத்துவிடுவாளோ எனும் பயத்தைக் கண்களில் தேக்கி கேட்ட தன் தாயைப் பார்த்து கண்களில் நீர் வழிய சரியென தலையாட்டினாள் சண்மு. அதன் பிறகு மடமடவென கல்யாண காரியங்கள் நடக்க ஆரம்பித்தன.

விடிந்தால் திருமணம். கதிர் வருவானா????

 

இன்று

 

கடம்பூவனம் அஃபிசியலாக தன் பிஸ்னசை ஆரம்பித்து இரு வாரங்கள் ஓடி இருந்தன. வியாபாரம் மெல்லத்தான் நகர்ந்தது. பொக்கே டோர் டெலிவரி அறிவிக்கவும், கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்தது வியாபாரம். ஏற்கவனே இரு பெண்கள் வேலைக்கு இருக்க, டெலிவரி சர்விஸ் எப்படி போகிறது எனப் பார்த்து விட்டே அதற்கு ஆள் நியமிக்கலாம் என சொல்லி விட்டாள் சண்மு.

ஆகையால் பொக்கே டெலிவரிக்கு கதிர் செல்ல ஆரம்பித்தான். போலீசை, பொக்கேமேனாய் மாற்றிய பெருமை எல்லாம் சண்முவையே சேரும். அவன் இல்லாத வேளைகளில் சண்மு அந்த வேலையை செய்வாள்.

அன்று இரவு நடந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பிறகு இவர்களின் உறவு வேறு மாதிரி பயணித்தது. எதற்கு கட்டிப்பிடிக்க வேண்டும், பின் எதற்கு ஏங்கி ஏங்கி தவிக்க வேண்டும் என முடிவெடுத்த போலீஸ்கார், டச்சிங் டச்சிங்கை அறவே விட்டொழித்து தன் தாரத்திடம் தூரம் நின்று பேச ஆரம்பித்தார். மீண்டும் கதிரின் அன்பான கவனிப்பின் பேரில் கொஞ்சமாக சதைப்பிடித்து, பனியில் நனைந்த ரோஜா போல கன்னம் பளபளவென மாறி இருக்க, பாதுகாப்பான சூழலில் அமைந்த அருமையான தூக்கம் கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையங்களைப் போக்கியிருக்க அன்றலர்ந்த மலர் போல வளைய வரும் மனைவியோ அவனை நெருங்கி வர ஆரம்பித்திருந்தாள்.

“கதிரு! டின்னர் சாப்பிடலாம் வாடா”

காலை, பகல் உணவை இருவரும் அவர்கள் இஸ்டம் போல சாப்பிட்டுக் கொள்வார்கள். இரவு உணவு மட்டும் சேர்ந்துதான் உண்பார்கள் இருவரும். சில நாள் இவள் சமைத்தால், பல நாள் கதிர் சமைப்பான். நர்சரியை ஒட்டி, சின்ன இடத்தை சமைக்கப் பயன்படுத்தினார்கள். அங்கேயே குட்டியாக மேசை போட்டு, இரு நாற்காலி வைத்து சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டே டின்னர் சாப்பிடுவது வழக்கமாகி இருந்தது.

“அப்போத்தான் ப்ரெண்டு, வாடா போடான்னு கூப்ட! இப்போ ஹஸ்பெண்டு. இனியாச்சும் மரியாதையா கூப்டலாம்ல சம்மு”

அவள் முறைத்துப் பார்க்க,

“இல்ல சம்மு!!! எனக்காக இல்லைனாலும் என் ஏ.சி.பி போஸ்டுக்கு கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் மரியாதை தரலாம்ல” என பம்மினான் கதிர்.

“மரியாதைலாம் தானா வரனும் ஏசிபி சார்! இப்படி கெஞ்சிக் கதறிக் கேக்கக் கூடாது! மனைவிக்கு மரியாதைன்னு தான் படம் வந்திருக்கே தவிர புருஷனுக்கு மரியாதைன்னு வரல. ஏன் வரல?”

“ஏன் வரல?”

“ஏன்னா நாங்க உங்களாம் மனுஷனா மதிச்சு கட்டிக்கறதே உங்களுக்குப் பெரிய மரியாதை! அதுக்கும் மேல மரியாதை கேட்டா, முதல் மரியாதை சிவாஜி மாதிரி சளி சிந்தின கையில தான் சோறு கிடைக்கும்! வசதி எப்படி?”

“யாருக்கு வேணும் மரியாதை! நீ சாப்பாட்ட போடு சம்மு”

தட்டில் வந்து விழுந்த உணவைப் பார்த்தவன்,

“என் டெர்ன்ல உனக்கு எப்படி வகை வகையா, ருசி ருசியா சமைச்சுப் போடறேன். நீ மட்டும் ஏன் சம்மு உப்புமாவ போட்டுக் கொல்லுற? ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவ கிண்டி வைன்ற கணக்கா, என்னைப் பிடிக்கலன்னு சிம்போலிக்கா சொல்லறியா?” என பாவமாக கேட்டான் கதிர்.

“அட லூசே! உப்புமால எவ்ளோ மேட்டர் இருக்குத்தெரியுமா?”

“மேட்டரா!! சொல்லு, சொல்லு”

“உன் தலை! உப்புமா நம்ம உடல் நரம்புக்கும், எலும்புக்கும் அதிக சக்தி கொடுக்குமாம். அதோட இதய நலத்துக்கும் நல்லதுடா! உன்னை மாதிரி சும்மா ஒரு இடத்துல உட்காராம எதாச்சும் வேலை செஞ்சிட்டே இருக்கறவங்களுக்கு ஏத்த சாப்பாடு. இழந்த இனர்ச்ஜிய மீட்டு குடுக்கும். அதனால தான் செஞ்சு குடுக்கறேன். ஒழுங்கா மிச்சம் வைக்காம சாப்பிடு”

“ஹ்கும். ராத்திரியாச்சு! இனிமே எனர்ஜியா இருந்து என்னத்த கிழிக்கப் போறேன்! எனர்ஜியோட எதுவும் செய்ய வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!” வாய்க்குள்ளயே முனகினான்.

“என்னடா?”

“ஒன்னும் இல்ல! உப்புமாவ கேவலமா பேசுனா தப்பும்மான்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.”

அவனுக்கு பரிமாறியவள், தனக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள். அதற்கு பிறகு இருவரும் அமைதியாக உணவருந்தினர். உண்டதும் அவனது மருந்து மாத்திரையைக் கொண்டு வந்துக் கொடுத்தாள் சண்மு. பின் அவனுக்கு மெத்தையைத் தட்டி விரித்துப் போட்டவள், குடிக்க ஒரு வாட்டர் பாட்டிலையும் அவன் அருகே வைத்தாள். இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் குட் நைட் சொல்லி விட்டுப் படுத்துக் கொண்டனர்.

நடு சாமத்தில், கால் வலி இதமாய் இருக்க மெல்ல கண்ணைத் திறந்துப் பார்த்தான் கதிர். கீழே அவன் காலடியில் அமர்ந்து பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள் சண்மு.

“என்னடி செய்யற?”

“உங்கப்பன்தன்னால! ஏன்டா நடுராத்திரில திடீர்னு பேசி பயம் காட்டுற?”

“யாரு? நான் பயம் காட்டுறேன்? கால் வலிக்கு இதமா இருக்கேன்னு முழிச்சுப் பார்த்தா, தலைவிரிக்கோலமா என் காலடியில ஒரு உருவம்! எந்த மோகினிப் பிசாசு அய்யா மேல வெறிக் கொண்டு என் கற்ப சூறையாட வந்து உட்கார்ந்துருக்கோன்னு ஓன் நிமிட் ஜெர்க் ஆகிட்டேன் தெரியுமா?”

வாய் விட்டு சிரித்தவள்,

“இன்னிக்கு முழுக்க ரொம்ப டெலிவரி இருந்துச்சல்ல! நீயும் உட்கார நேரம் இல்லாம அலைஞ்சியா, அதான் கால் வலிச்சிருக்குமேன்னு பிடிச்சு விட்டேன்.” என பதிலையும் சொன்னாள்.

“வலிக்குதுதான்! முழிச்சிருக்கும் போது பிடிச்சு விட்டா எங்க வலிக்குது, எங்க வலிக்கலன்னு சொல்வேன்ல.” தள்ளி இருக்க வேண்டும் என முடிவெடுத்தவன், அந்த எண்ணத்தைக் கிடப்பில் போட்டு விட்டு வெட்கமே இல்லாமல், உட்கார்ந்திருந்தவள் மடியில் தன் காலை தூக்கி வைத்தான்.

“இப்போ பிடிச்சு விடு சம்மு!” என காலை வேறு ஆட்டினான்.

“இதுக்குப் பேருதான் இருக்க இடம் குடுத்தா இங்கிலாந்தையே கேக்கறதா? பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லனும்” என சலித்துக் கொண்டவள். இதமாய் பிடித்து விட ஆரம்பித்தாள்.

“அங்கில்ல, இன்னும் கொஞ்சம் தள்ளி பிடி சம்மு! ஆங் அங்கதான்! ஆ, ஆ வலிக்குது! மெதுவா!” என அவளைப் பாடாய் படுத்தினான் கதிர்.

“அடேய் போடா!” என கடுப்பாகி அவன் காலை கீழே தள்ளிவிட்டாள் சண்மு.

“சம்மு!”

“ஹ்ம்ம்”

“கொஞ்ச நாளா என்னை ஓவரா கேர் எடுத்துக் கவனிக்கறியே, என்ன விஷயம்?”

“அப்படிலாம் ஒன்னும் இல்லடா கதிரு”

“என்ன ஒன்னும் இல்ல? மருந்து எடுத்துத் தர! குளிக்க ஹீட்டர் இல்லாததனால சுடுதண்ணி வச்சிக் குடுக்கற! காலையில என்னை விட சீக்கிரம் எழுந்து வேலைய பார்க்க போனாலும், காபி போட்டு ப்ளாஸ்க்ல வைக்கிற! என் துணிலாம் துவைச்சு, மடிச்சும் வைக்கற! இப்போ கால் அமுக்கி விடற! என்னாச்சு சம்மு?”

“அது..அது வந்துடா!” அவள் தடுமாற,

“அதாவது மத்த விஷயத்துல தான் மனைவியா இருக்க முடியல! இப்படியாச்சும் மனைவின்ற கடைமைய ஆத்தோ ஆத்துன்னு ஆத்தலாம்னு தானே இதெல்லாம் செய்யற?” என முடித்து வைத்தான் கதிர்.

“ஆமா, அப்படித்தான்! இப்போ அதுக்கு என்னான்ற?”

“என்னாம்மா சவுண்டு விடற! அதுவும் என் கிட்டயே! ஐ எம் எ பேட் காப்! தெரியுமா?”

“விட்டா

‘கறுப்பு தோலோட

சிங்கம் வரும் சீனோட

இடமே பத்திக்கும் அந்தமாரி

சும்மா கிழின்னு’ பாடுவ போல! உனக்கு தலைவர் அளவுக்கு சீன் இல்ல. எனக்கு என்னிக்குமே நீ சிரிப்பு போலீஸ்தான். கம்முன்னு கிட”

“கிரேட் இன்சல்ட்! சரி விடு! நீ ஏன்டி இன்னும் தூங்கல”

“தூக்கம் வரலடா”

“பால் சூடாக்கி எடுத்துட்டு வரேன் இரு! அதுல கொஞ்சம் மஞ்சள கலந்தா நல்லா தூக்கம் வருமாம்”

“அதெல்லாம் வேணா! நீ படு கதிரு” என சொன்னவள், அவன் பெட்டியின் மேல் இருந்த புல்லாங்குழலைப் பார்த்து, எக்கி அதை எடுத்தாள். அதை கையில் வைத்து திருப்பி திருப்பிப் பார்த்தவள்,

“நான் வாசிக்கறேன் கேக்கறியா?” என கேட்டாள்.

“உனக்கு வாசிக்க தெரியுமா சம்மு?” ஆச்சரியமாக கேட்டான்.

“யூ டியூப்ல இல்லாத விஷயமா? அங்கப் பார்த்து கொஞ்சமா கத்துக்கிட்டேன்” என்றவள் அதை தன் உதட்டில் வைத்து மெல்ல ஊத ஆரம்பித்தாள். அவள் வாசித்தது என்னவோ கர்ண கொடூரமாகத்தான் இருந்தது.

அவள் வாசிப்பை யார் கேட்டது! தான் மட்டுமே உதடு வைத்த குழலை தன் இனியவள் வாசிப்பதில் மயங்கியவன், அவளையே கண் எடுக்காமல் பார்த்திருந்தான்.

கலைந்திருந்த கேசம், குழல் ஊதுவதால் உப்பி இருந்த கன்னம், டியூனில் கவனம் வைத்ததால் மூடி இருந்த விழிகள் என அறையின் மெல்லிய வெளிச்சத்தில் தேவதையென ஜொலித்தாள் சண்மு.

தான் வாசிப்பது தனக்கே கேவலமாக கேட்க, மெல்லிய சிரிப்புடன் கதிரைப் பார்த்தாள் அவள்.

“சம்மு!”

“என்னடா? கேவலமா இருந்துச்சா?” என புன்னகைத்தாள் சண்மு.

“நான் வாய் வச்ச என் புல்லாங்குழல் மேல வாய் வச்ச உன் வாய் மேல என் வாய் வச்சா என்னாகும்?” என வேகவேகமாக அவன் கேட்க, என்ன கேட்கிறான் இவன் என பேய் முழி முழித்தாள் சண்மு.

“என்னடா கதிரு? ஒரு மண்ணும் புரியல எனக்கு”

மெல்ல உட்கார்ந்த வாக்கிலே அவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கியவன்,

“அதாவது என் புல்லாங்குழல் மேல உதட்ட வச்ச உன் உதட்டு மேல நான் என் உதட்ட வச்சா என்னாகும்னு கேட்டேன்!” என சொல்லியவன், அவள் சுதாரிப்பதற்குள் தன் அழுந்த முத்தமிட்டிருந்தான்.

முத்தமிட்டு, முத்தமிட்டு முக்தி அடைந்தவனுக்கு மோட்சம் கிடைத்ததா? இல்லை கோப சொரூபினியின் கடாட்சம் கிடைத்ததா?

(உயிர் போகும்…)