“பெரியம்மாவை முதலாளி ஆக்கிடலாமா பெரியப்பா…?” மலர்ந்த சிரிப்புடன் கேட்க,


“இப்பவே அவ தானே இங்க முதலாளி!” என வாய்விட்டு சிரித்தாலும்


“சொல்லு தெய்வானை… புள்ள கேட்குதில்ல…” என்றார்.


“உன் மாமியாவை போல தொழில் பண்ணணும்ணு ஒரு ஆசை இருக்க தான் செய்யுது. அவளுக்கு ஒத்தாசை பண்ண நீ இருக்க, எனக்கு அப்படி யாரும் இல்லையே… அதான் யோசனையா இருக்கு” என மனம் திறக்க,


“உங்களுக்கு கீழே பத்துபேர் வேலை பார்க்கிற மாதிரி தொழில் ஆரம்பிச்சுடலாம் பெரியம்மா. நீங்க தானே சுய உதவிக் குழுவோட தலைவி. அதை வச்சே தொழில் தொடங்கலாம்.


“அது சரி, புருசனுக்கு தெரியாம சிறுவாடு சேர்த்து வட்டிக்கு விடுற வேலையை தான் சுய உதவிக் குழுவில் உன் பெரியம்மா எல்லோருக்கும் கத்துக் கொடுக்குறா. இனியாவது உருப்படியா ஏதாவது செய்யட்டும்” என கேலி செய்தபடியே கூடத்திற்கு சென்றுவிட்டார்.


“இந்த மனுஷனுக்கு குசும்பு கூடிப் போச்சு. எல்லாம் என் நேரம்! நீ சொல்லு ஈஸ்வரி என்ன தொழில் செய்யலாம்?” என ஆர்வமாய் கேட்க,


“ஆர்கானிக் சானிட்டரி நாப்கின் தயாரிக்கலாம் பெரியம்மா. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தொழில். மக்களோட ஆரோக்கியத்தை பாதுகாக்குற, மண்ணுக்கு தீமை தராத பொருளை தயாரிக்கிறதுல கூடுதல் சந்தோஷமும் கிடைக்கும்.” இவள் என்ன சொல்கிறாள் என்பது அந்த படிக்காத பாமர பெண்மணிக்கு புரியவில்லை. 

“நீ எதைச் சொல்றன்னே எனக்கு புரியல ஈஸ்வரி, அது என்ன பொருள்?”


“பீரியட்ஸ் அப்போ நாம யூஸ் பண்றது பெரியம்மா”


“பீரியட்சுனா என்ன?”


“இதை தமிழ்ல எப்படி சொல்றது…?” சில நொடிகள் யோசித்தவள்,


“ஒரு நிமிஷம் பெரியம்மா!” என கைபேசியில் தன் கணவனுக்கு அழைக்க,


“சொல்லுடா ஜில்லுக்குட்டி…!” குழைந்தது குரல். அவனது குழைவு அவளை எட்டவே இல்லை. தன் தேவை ஒன்றே குறியாய்,


“பீரியட்ஸ்சை தமிழ்ல எப்படி சொல்றத்துத்தான்?” என வேகவேகமாய் கேட்க, இப்படிப்பட்ட கேள்வியை எதிர்பார்க்காதவன் ஒன்றும் புரியாமல்,


“ஏன்டா…? மாதவிலக்குன்னு சொல்லனும்”


“தேங்க்ஸ்… தேங்க்ஸ்! நான் ஒரு முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறமா பேசுறேன்!” என்று பட்டென வைத்துவிட்டாள். (அவன் காதலாடும் போது நீ கதை பேசு… அப்புறம் லவ் பண்றியான்னு கேள்வி கேளு!) 


‘பார்டா டிஸ்கஷனாம்… பொம்மை அடுத்த திட்டத்துக்கு பிளான் பண்ணுது போல. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தான் சொல்லுவாங்க மஹாராணி!’ என சிரித்துக் கொண்டான்.


ஈஸ்வரியோ, தெய்வானையிடம் “மாதவிலக்கப்ப நாம பயன்படுத்துறது தான் சானிட்டரி நாப்கின். நீங்களலெல்லாம் துணி யூஸ் பண்ணியிருப்பீங்க. இப்போ இது தான் யூஸ் பண்றோம்!” என்றதும் அதிர்வுடன்,


“ஐய! இதைப் போயா பாண்டிகிட்ட கேட்ட?” (உங்க மகள் தமிழ்ல அவ்ளோ வீக்கு! ஹ்ம்ம்… தமிழ்ல மட்டுமா? காதல்லயும் தான் நீங்க சொல்றது எங்க காதுல விழுகுது…!) என முகம் சுளித்தவரிடம்,


“இதுல என்ன இருக்கு பெரியம்மா? கண்டிப்பா பசங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான். இந்த மாதிரி சமயங்களில் ஏற்படுற ரத்தப்போக்கால உடலும், மனமும் ரொம்ப சோர்ந்து போயிருக்கும். அதனால தான் அந்த காலத்துல பெண்களை மாதவிலக்கப்போ எந்தத் தொந்தரவும் இல்லாம ஓய்வெடுக்கனும்ன்னு தனியா ஒதுங்கி இருக்கச் சொன்னாங்க.


அப்படி ஒரு நல்ல விஷயத்தை தெளிவுபட சொல்லாததால் தான் நிறைய பேர் அப்படி ஒதுங்கி இருக்கிற பெண்களை தீண்டத் தகாதவங்க மாதிரி நடத்துறாங்க. இதுல கூச்சப்படுறதுக்கோ, வெட்கப்படுறதுக்கோ எதுவுமே இல்ல பெரியம்மா.


இதை பசங்ககிட்டயும் எடுத்துச் சொல்லனும். அவங்களுக்கும் நம்மோட கஷ்டங்களும், உடல் மாற்றங்களும் தெரிஞ்சா தான் நம்மகிட்ட இன்னும் அன்பாவும், அனுசரணையாவும் நடந்துக்குவாங்க” (விக்கிக்கு தமிழும் வீராவும் தான் வீக்கு… மத்தபடி ஷார்ப் தாங்க!) 

“அது சரி தான். எனக்குத் தெரிய என் அப்பா என் ஆத்தாவுக்கு சமைச்சு கொடுத்துருக்காக. ஆனா உங்க பெரியப்பா அப்படியெல்லாம் ஒன்னும் செஞ்சதில்ல… இப்பவெல்லாம் தனியா கூட ஒதுங்கி இருக்கிறதில்ல. எல்லாரும் ஒன்னாத் தான் இருக்காக. என் பேத்தி கூட நீ சொல்ற மாதிரி கடையில விக்கிறதைத் தான் வாங்கி வச்சுக்கிறா. துணியெல்லாம் வைக்கிறதில்ல.”

“கரெக்ட் பெரியம்மா. ஆனா கடையில கிடைக்கிற நாப்கின்ல வசதிகள் நிறைய இருந்தாலும் நிறைய பிரச்சனைகளும் இருக்கு. அந்த நாப்கின்ல இருக்கிற காட்டன்ல… பருத்தி செடியில் உபயோகப்படுத்துற பூச்சிக்கொல்லி மருந்தோட தாக்கம் பல வருஷத்துக்கு அதுலேயே இருக்குமாம். அதோட அந்த பஞ்சு நல்ல வெள்ளையா இருக்கனும்ங்கிறதுக்காக ப்ளீச் பண்றாங்க. 

இது எல்லாம் நம்ம உடம்போட நேரடித் தொடர்புல பல மணி நேரம் இருக்கிறதால காலப்போக்கில் இனவிருத்தி தொடர்பான பிரச்சனை, ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்சனை, சர்க்கரை நோய், கர்ப்பப்பை புற்றுநோய் கூட வர வாய்ப்பிருக்குன்னு ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சிருக்காங்க.


லீக் ஃப்ரூப் அதாவது கசிவு ஏற்படாம தடுக்கிறதுக்காக பஞ்சு மேல பிளாஸ்டிக் யூஸ் பண்றாங்க, அது உடம்பில் வெப்பத்தை அதிகப்படுத்துது. ஈரப்பதம் அப்படியே இருக்கிறதுனால கிருமி தொற்று உண்டாக நிறைய வாய்ப்பு இருக்காம்.


சிலர் ரேயான்ங்கிற செயற்கை இழையில உறிஞ்சும் திறன் அதிகமா இருக்குறதாலையும், குறைவான விலையில கிடைக்கிறதாலையும் பஞ்சுக்கு பதிலா அதை உபயோகப்படுத்துறாங்க. இந்த ரேயானால PID (பெல்விக் இன்ஃபிளமேட்டரி டிசீஸ்) அதாவது இடுப்பு வலி வரவும் வாய்ப்பிருக்கு. அதை பத்தின விழிப்புணர்வு நம்மகிட்ட இன்னும் பெரிய அளவுல வளரல.


இதுக்கு மாற்றா பழையபடியே துணியை உபயோகப்படுத்தலாம். ஆனா இந்த காலத்துல சின்ன வயசுலேயே வயசுக்கு வந்துடுறதால அவங்களுக்கு அதை சுத்தமா வச்சுக்கிறதும், உபயோகிக்கிறதும் அத்தனை சுலபமில்லை.


அதனால நம்ம உடம்புக்கும், சுற்றுப்புறத்துக்கும் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கிறது நல்ல மாற்றா இருக்கும். அதைத் தான் நாம செய்யப் போறோம்”


“ஆத்தாடி! இதால இவ்வளவு வியாதி வருமா!? இது தெரியாம என் பேத்திக்கும்ல வாங்கிக் கொடுக்கிறோம்!” என அரண்டு போனவர்,


“நீ சொல்றது நல்ல யோசனை தான், நம்ம பிள்ளைகளுக்காகவாவது கண்டிப்பா நாம செய்யத் தான் வேணும்! பஞ்சும் பாதுகாப்பில்லைன்னு சொல்றியே, அப்பறம் எதை வச்சு செய்யுறது?”


“மரக்கூழையே (wood pulp) பஞ்சு மாதிரி தயாரிக்குறாங்க பெரியம்மா. அதைத் தான் நாம உபயோகிக்கப் போறோம். சாதாரணமா கடைகள்ல கிடைக்கும் நாப்கின்களை அப்புறப்படுத்துறதுக்காக அதை மண்ணில் புதைச்சோம்ன்னா அது மக்குறதுக்கு பல வருஷங்கள் ஆகும். எரிச்சோம்ன்னா காத்துல கார்பனை அதிகப்படுத்தும். அதனால காற்று தூய்மைக்கேடு உண்டாகும். அதுவே நாம தயாரிக்கும் நாப்கின்கள் சுற்றுச்சூழலை பாதிக்காம சீக்கிரம் மக்கிடும், எரிச்சாலும் காற்றை அசுத்தமாக்காது. இதை தயாரிக்க ஆகுற செலவும் ரொம்ப குறைச்சல்.”


“ஓ! இதுல இம்புட்டு விஷயம் இருக்கா?”


‘இவள ஒன்னும் தெரியாதவன்னு நினைச்சோமே, இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காளே!’ என ஆச்சரியமாய் விழி விரித்தாலும், மேற்கொண்டு அதன் செய்முறை விளக்கம் பற்றி அறியும் ஆவலில்,


“இதை கையில பண்ணனுமா, இல்ல மிசின் எதுவும் இருக்கா?”


“முதன்முதல்ல இந்த மாதிரி நாப்கினையும், அதை குடிசைத் தொழிலா செய்யுறதுக்கான குறைச்ச விலை மெஷினையும் உருவாக்கினவரு ஒரு ஆண் தான்! அதுவும் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்ங்கிறவர் தான்” என பெருமை பொங்கச் சொல்ல,


“ஆம்பளையா இதைச் செஞ்சாரு…?!” என அதிர்வும், ஆச்சர்யமுமாய் நம்ப முடியாத் தன்மையுடன் கேட்டார் தெய்வானை.


“ஆமா பெரியம்மா, நாமெல்லாம் சுகாதாரனமான, உடலுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாத நாப்கின்களை உபயோகிச்சு ஆரோக்கியமும் தன்னிறைவும் பெற்ற சமூகமா மாறணும்ங்கிறதுக்காக அந்த மனுஷன் காசு பணத்தை மட்டுமில்ல குடும்பத்தையும் இழந்திருக்காரு. அவரோட சிரமங்களை அர்த்தப்படுத்தவும், நம்மோட நல்வாழ்வுக்காகவும் தான் இதை செய்யப் போறோம் பெரியம்மா!” சம்மதம் சொல்வாரா என ஆர்வமாய் அவர் முகம் பார்க்க,


“நீ அந்த முருகானந்தத்துக்கு போனை போடு! அந்த தம்பிகிட்ட நானே பேசுறேன். மிசினை வாங்குறோம். நம்ம சுயஉதவிக் குழு பொண்ணுங்களை வச்சே நாப்பின் பண்றோம்! நம்ம ஊர் பிள்ளைக நல்லா இருக்க இதை கண்டிப்பா நாமளே செய்யுறோம்!” என உற்சாகமாய் சொல்ல,


“தேங்க்ஸ் பெரியம்மா. வோ ஐ நி!” என முகம் மலரச் சொன்னபடி அவரை அணைத்துக் கொண்டாள்.

“அதென்ன ஈஸ்வரி, ஒ… நீ?” என நீட்டி முழக்க,

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சைனீஸ்ல சொன்னேன் பெரியம்மா! அத்தான்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆரம்பிச்சுடுவோம்.” என சொன்னவளுக்கு, இந்த திட்டம் நிச்சயம் கணவனை காதலில் விழ வைக்கும் எனும் பெரும் நம்பிக்கை உண்டாக குதூகலமாக வீட்டிற்கு வந்தவள்,

தனது திட்டத்தை செயல்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என மூளையை கசக்கி ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, அப்படி என்ன தான் புதிய திட்டம் வைத்திருப்பாள் என அறிந்து கொள்ளும் ஆவலில் இருப்புக் கொள்ளாமல் சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்தான் அவள் கணவன்.

தகவல் திரட்டுவதில் மும்முரமாய் இருந்ததால் கணவனின் வருகையை அறியாமல் தன் போக்கில் வேலையில் மூழ்கியிருக்க,

“பொம்மை நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன தான் பண்ணறா” இதழோர கள்ளச் சிரிப்புடன், 

“ஜில்லுக்குட்டி!” என கொஞ்சியபடி பின்னிருந்து அணைக்க (அட, ஜில்லு மாதிரி இவன் செய்ய ஆரம்பிச்சுட்டான்ப்பா… விக்கி உனக்கு புரியுதா?)

‘அதற்குள் வந்துவிட்டானா…?’ அதிர்வும், மகிழ்வுமாய்

“அத்தான்! என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க…?” என கணவனின் கன்னம் கிள்ள,

“என்ன செய்றது…? நீ தான் வேலை பார்க்க விடாம கட்டி இழுக்கிறியே பொம்மை… ஆபிஸ்ல இருக்கவனுக்கு போன் பண்ணி பெரிய அப்பாடக்கர் மாதிரி உனக்கு வேண்டிய தகவலை மட்டும் வாங்கிகிட்டு அப்புறம் பேசறேன்னு கட் பண்ணற..? அப்படி என்னடி டிஸ்கஷன்…?” செல்லமாய் மிரட்ட, விலாவரியாக தன் அடுத்த திட்டத்தை விளக்கி கணவன் தலைகுப்புற விழப் போவதை காண ஆவலாய் காத்திருக்க, (ஒரு மனுஷன் எத்தனை தடவை தான் தலை குப்புற விழுகிறது?)

‘பார்டா, பொம்மை பயங்கரமா அசத்துதே…’ மெச்சுதலாய் பார்த்தாலும்,

“வெரி குட், நல்ல விஷயம் தான். இனி பெரியத்தை ஊர்க் கதை பேசுறதை விட்டுருவாங்கன்னு சொல்லு” என முகம் மலர சிரித்தாலும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், ஃப்ரெஷ்-அப்பாகி வந்தவன் காபி மற்றும் சிற்றுண்டியை உண்டு முடிக்க, இனி வேலையை தொடரலாம் என நகரமுற்பட்டவளின் கரம் பிடித்து நிறுத்தி,

“எங்க போற ஜில்லு? உன்னோட இருக்கனும்ங்கிறதுக்காக தான் சீக்கிரமே வந்தேன். இப்படி உட்கார். உங்க பிஸ்னஸ் எப்படி போயிட்டு இருக்கு? கணக்கு வழக்கு புத்தகத்தை எடுத்துட்டு வா பார்க்கலாம்” எனவும்,

‘இவன் வேலையே செய்யவிடமாட்டான்…’ எரிச்சலுற்ற மனதை அடக்கி, அவன் பணித்ததைச் செய்ய, அவளை அருகே வைத்துக் கொண்டு ஆயிரம் விசாரணை மேற்கொண்டு, இனி யார் யாரோடு தொழில் முறை உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், 

இன்னும் எப்படி விரிவு படுத்தவேண்டும் என்னும் விஷயங்கள் எல்லாம் விவாதித்து தொழில் லாபகரமாகவே நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு அவளை பாராட்ட, (அப்டியே எல்லாரும் பக்கத்துல இருக்கிற சுவத்தில் முட்டவும். நம்மால வேற ஒன்னும் பண்ண முடியாது)

“டெலிவரியும், கலக்ஷனும் மட்டும் தான் அத்தான் நான் பார்த்துக்குறேன். மத்தபடி எல்லாமே அத்தை தான் செய்றாங்க” என பெருமைபட உண்மையை உறைத்து தன் கணினியை உயிர்ப்பிக்க, வேகமாய் அதை பறித்து வைத்தவன் அதன் இடத்தை தான் ஆக்கிரமிக்க,

“என்னத்தான்…?” வீம்புக்கார குழந்தையாய் மடியில் படுத்திருப்பவனின் கேசம் கலைத்து சிறு கோபம் எட்டிப்பார்க்க கேட்டாள்.

“அது எப்படி பொம்மக்குட்டி… இவ்வளவு அழகா இருக்க!” கண் சிமிட்டி சிரிக்க

‘இவன் வேண்டுமென்றே வேலையை கெடுக்கிறான்’ என காண்டாகியவள்,

“பாருங்கத்தான் உங்களை என்ன பண்ணாலும் இம்ப்ரஸ் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். தயவு செஞ்சு எங்க இவகிட்ட மயங்கிடுவோமோன்னு யோசிச்சு என்னை வேலை செய்யவிடாம இம்சை பண்ணாதீங்க.

பெரியம்மாகிட்ட ஜம்பமா சீக்கிரம் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். கொடுத்த வாக்கை காப்பாத்தியே ஆகனும். அதுக்காக தான் இவ்வளவு மெனக்கெடுறேன். இப்போ உங்களை இம்ப்ரஸ் பண்ணற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. விடுங்கத்தான்!” என மடியில் படுத்திருப்பவனை விலக்க முயற்சிக்க, மனையாளின் எண்ணமும், கோபமும் சிரிப்பைத் தூண்ட,


“சோ, என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக நீ இதை செய்யல…?!” கண்களில் குறும்பு மின்னக் கேட்டான்.


“எனக்கு பொய் சொல்லத் தெரியாது. உங்களை இம்ப்ரஸ் பண்ணத் தான் ஆரம்பிச்சேன். பட் உங்க ரியாக்ஷனைப் பார்த்ததுமே இதுவும் ஊத்திக்கும்னு தெரிஞ்சு போச்சு. இப்போ அந்த எண்ணம் இல்லை போதுமா?” என பட்டாசாய் வெடிக்க,


“பார்டா, என்னமா கோபம் வருது?” என கேலி செய்ய, இன்னும் வெகுண்டவள்,


“உங்க நினைப்பெல்லாம் எனக்கு தெரியும். வீம்புக்காகவே தான் இப்படி நடந்துக்கறீங்க. இந்த ஜென்மத்தில் நீங்க என்கிட்ட காதல் வயப்படப் போறதேயில்லை. உங்களுக்காக பண்றதெல்லாம் வெட்டி வேலைங்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன். இப்போ பெரியம்மாவுக்காகவும் நம்ம சமுதாயத்துக்காகவும் மட்டும் தான் செய்யப் போறேன். என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க, ப்ளீஸ்…!”


‘இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் ஜில்லுக்குட்டி! நீ எனக்காகன்னு இல்லாம அடுத்தவங்க நலனுக்காகவே விரும்பி செய்யணும்கிறதுக்காக தான் எல்லாம்’ என எண்ணினாலும்,


“முதல்ல கணவனைக் கவனி அப்புறம் சமுதாயத்தைப் பார்க்கலாம்” என வம்பிழுக்க,


“இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”


“எனக்கு தூங்கனும். நீ என்னை தூங்க வை பார்ப்போம்!” என்றான் சவால் போலும்.


“எதையாவது யோசிச்சுகிட்டே செய்யக்கூடாது. முழு கவனத்தோடு செய்யனும். உன்னால முடியுமா?”


“உங்க கூட இருக்கும் போது வேறு எதை பத்தியும் முழுசா சிந்திக்கவே முடியாதுன்னு உங்களுக்கு தெரியாதா? தூங்குங்க…” என்றாலும், 


‘இவன் என்ன குழந்தையா? தூங்க வைக்கணுமாம் படுத்தியெடுக்கறான்.’ சிறு முறைப்புடன் தட்டிக் கொடுக்க விழிகளைக் கூட மூடாமல் கள்ளச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். (சிரிக்கறவனை எல்லாம் தூங்க வைக்க முடியாது மாப்பு!)


“தூங்குங்க அத்தான்!” கோபமாய்ச் சொல்ல,


“இப்படியில்ல, பொம்மை…” என அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டு படுத்தவன், முதுகை நீவி இதமாய் தோளில் தட்டிக் கொடுக்க,


‘இப்போ நான் இவனை தூங்க வைக்கனுமா? இல்ல இவன் என்னை தூங்க வைக்கிறானா?’ புரியாத போதும் அவளும் தட்டிக் கொடுப்பதை நிறுத்தவில்லை. நிமிடங்கள் கரைந்துகொண்டிருக்க


‘இன்னும் தூங்காமல் சதி செய்கிறானே’ என எரிச்சல் வேறு வந்தது.


அவனோ ‘ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க ஜில்லுக்குட்டி. உன்னை ரிலாக்ஸ் பண்ணனும்னு தான் தூங்க வைக்கிறேன். நான் இருக்கும் போது நீ ஏன் எல்லாத்தையும் இழுத்து போட்டுக்குற… தூங்குடா…’ என வாய் திறந்து சொல்லாத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தான்.

அவனை உறங்க வைக்க ஒத்துக்கொண்டவள், மெல்ல உறங்கிப் போனாள். (சண்டை போட்டப்பறம் எப்படிம்மா தூக்கம் வருது… hack சொல்லித் தரவும்!)


அவனோ சானிட்டரி நாப்கின் தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு நடத்துபவர்களை தொடர்பு கொண்டு, தங்கள் கிராமத்திற்கே வந்து சொல்லிக் கொடுக்கும் ஏற்பாட்டை செய்து முடித்தான்.


அடுத்து, இதற்கான மூலப் பொருட்கள் எங்கு தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் என கண்டறிந்தது மட்டுமல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் இணையதளம் வாயிலாகவும், அந்த துறை சார்ந்தவர்களிடமும் விசாரித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மனைவியின் அனைத்து முயற்சிகளுக்கும் அவளுக்கு பின்னே உறுதுணையாய் நின்று கைகொடுத்தான் வீரபாண்டியன்.

அவளோ இரவு உணவிற்காகக் கூட விழிக்காமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். வேலைக்குச் செல்ல தயாராகி வந்த மகனுக்கு காலை உணவை பரிமாறியபடி,


“ஐயா பாண்டி! இந்த ரெண்டு மூணு நாளா புள்ளை ரொம்ப சோர்ந்து போய் இருக்கு. சுருண்டு சுருண்டு படுத்துக்குது. ஆஸ்பத்திரிக்கு கூட்டி போய்யா.” என்றார் அன்னை.


“இந்த 8 10 மாசமா ஒரே அலைச்சல்… தன்னை மீறி வருத்திக்கிறா உங்க மருமக. ஒருவழியா இப்போ தான் அவளோட திட்டமெல்லாம் நிறைவேறியிருக்கு. அதான் இத்தனை நாள் தெரியாத சோர்வு இப்போ தெரியுது போல…”

“புள்ளைக்கு தன்னர முடியாம தான் படுத்துக்குது… அது புரியாம பிரசிடெண்ட் அண்ணன் வேற வரச் சொல்லி போன் பண்றாரு. உடனே மறுக்க முடியாம கிளம்பி ஓடுது. பூ போல வீட்ல இருக்கிறதைவிட்டு நீ தான்யா அந்த புள்ளைய பாடாப்படுத்துற…” அங்கு சுற்றி இங்கு சுற்ற மகனில் வந்து நின்றார்.


“நானா? என்னமா பண்ணேன்…?” என இதழோர கள்ள சிரிப்புடன் கேட்டாலும் தானே அனைத்திற்கும் காரணம் என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. (என்ன ஒரு நடிப்பு! ஆஸ்காருக்கு சொல்லி விட்ருக்கு… its on the way)


“நீ தானே சும்மாயிருந்தவள தொழில் பண்ணச் சொன்ன…?”


“நல்ல கதையா இருக்கே? உங்க மருமக சொன்னதைத் தான் நான் செஞ்சேன். ஊரே உங்க மருமக புகழ் தான் பாடுது. நியாயத்துக்கு இதுக்கு நீங்க என்னை பாராட்டனும்மா…”


“ஊர் கண்ணு பொல்லாத கண்ணு! எனக்கு அது தான் பயமா இருக்கு. அதனால தான் உடம்புக்கு முடியலையோன்னு மனசுக்குள்ள ஓடுது.”


“இன்னைக்கு சாயங்காலம் சீக்கிரம் வந்து ஹாஸ்பிட்டல் கூட்டி போறேன்மா…” என்றவன் அயர்ந்து உறங்கும் மனையாளிடம் வந்து


“ஓய்! ஜில்லுக்குட்டி… எழுந்துக்கல…? அத்தான் ஆபீஸ் கிளம்பப் போறேன்…” என தலை கோத மனம் விழித்துக்கொள்ள இமை தட்டி எழ முயற்சித்தாலும் உடல் ஒத்துழைக்காமல் போக,


“பை அத்தான்… பத்திரமா போயிட்டு வாங்க!” கண்களை திறக்காமலேயே சொன்னாள்.


‘இவளுக்கு என்னவோ செய்கிறது. இந்த ஒரு வாரமாக ரொம்பவும் சோர்ந்து போய் தான் இருக்கா. சின்ன சின்ன விசயத்துக்குக் கூட ரொம்ப உணர்ச்சிவசப்படுறா… அம்மா சொன்னது போல டாக்டரை பார்க்கணும். பொம்மை ரொம்ப வருத்திக்குது…’ என கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பிவிட்டான். 


தாய் அறியாத சூளா…? சிறு பெண் என்றாலும் தான் கருவுற்றிருப்பதை அறிந்து தான் இருந்தாள் அதை கணவனிடம் சிறப்பாக சொல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்ததனால், அதற்கான தருணத்திற்காக காத்திருந்தாள். அதற்குள் அனைவரும் ஆளுக்கொன்றை கற்பனை செய்துகொண்டனர்.


இன்னும் இரண்டு நாட்களில் வர இருக்கும் காதலர் தினத்தன்று காதல் பரிசாய் குழந்தையை கை காட்ட வேண்டும் என எண்ணியவள், தன்னை தோளோடு அனைத்து, மறு கையில் பூந்துவாலையில் சுற்றப்பட்டிருந்தாலும் வண்டு விழிகளுடன் தந்தையின் முகம் பார்க்கும் தங்கள் வாரிசை ஏந்தியிருக்கும் கணவனையும் ஓவியமாய் தீட்டிக் கொண்டிருந்தாள்.


ஒருவழியாய் இன்று தான் அது முற்றுப்பெற்றது. படத்தை பார்த்தவளுக்கு திருப்தி. குழந்தை என்னவோ கணவனின் சாயலில் இருப்பது போல் வேறு தோன்றி இனம் புரியா மகிழ்வை உண்டாக்கியது. அதன் விளைவாய் சுறுசுறுப்பு தானாய் வந்து ஒட்டிக்கொள்ள, தெய்வானையை சந்திக்க வந்துவிட்டாள்.


அவரோ அப்பொழுது தான் தனது சுயஉதவிக் குழு அங்கத்தினரிடம் சானிட்டரி நாப்கின் தயாரிப்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். தானும் அந்த கூட்டத்தில் இணைத்து அவர்கள் கேட்கும் சிறு சிறு சந்தேகங்களுக்கு கூட பொறுமையாய், விரிவாய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க கைபேசி சிணுங்கியது.


“ஒரு நிமிஷம் பெரியம்மா…” என்றபடி விலகிச் சென்று பேச, அவள் முகத்தில் நொடிக்கொருதரம் தோன்றிய உணர்வுகளை படிக்க முயன்றவாராய் அவளையே பார்த்துக் கொண்டிருந்த தெய்வானை,


‘என்னடா இது? இம்புட்டு சந்தோசமா பேசுது…? ஆத்தா அப்பன் பேசுறாங்க போல…’ எண்ணமிட்டபடியே மீண்டும் தன் குழுவினருடன் பேச்சைத் தொடங்க,


“பெரியம்மா! நாப்கின் தயாரிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுக்கறவங்க தான் பேசினாங்க. நம்மகிட்ட தேதி கேட்கறாங்க.” தனக்குத் தெரியாமல் கணவன் செய்த வேலையால் இன்ப அதிர்வில் இருந்தவள் மகிழ்வுடனேயே பகிர்ந்து கொண்டாள்.


“நேத்துதான் பேசினோம்… அதுக்குள்ள இதெல்லாம் பண்ணிட்டியே கெட்டிக்காரி தான்.” என பாராட்டு பத்திரம் வாசிக்க

“எனக்கே தெரியாது பெரியம்மா. அத்தான் தான் இவங்க கூட பேசி இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்காங்க…” கணவனின் கரிசனத்தில் பெருமை பிடிபடாமல் சொன்னாள். தெய்வானையோ வீரபாண்டியன் ஈஸ்வரியிடம் கொண்டிருக்கும் காதல் புரிந்தவராய் சிரித்துக் கொண்டார்.

அனைவரும் சேர்ந்து பேசி பயிற்சிக்கான நாளை குறித்தனர். அதை தெரியப்படுத்துவதற்காக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப் போக கணவனிடம் இருந்து வந்திருக்கும் மின்னஞ்சலைக் கண்டவள் ஆர்வமாய் பார்க்க, நாப்கின் தயாரிக்கும் தொழில் தொடர்பாக அவன் திரட்டிய அனைத்து தகவல்களையும் ஒன்றிணைத்து அனுப்பியிருக்க,

‘கள்ளன் என் மீது காதல் இல்லாமலா இத்தனை விரைவாய் அனைத்தையும் செய்திருக்கிறான்? சிறு தகவல் அறிய எனக்கு வெகு நேரம் பிடித்தது. இவனோ ஒரே இரவில் அனைத்தையும் திறம்பட செய்து முடித்திருக்கிறான். இதற்காக தான் தூங்க வைத்தான் போலும். அது புரியாமல் கோபம் கொண்டுவிட்டோமே’ என வருந்தியவள் இன்று நேரடியாகவே,

‘இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை MR. வீரபாண்டியன் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். வாய் திறந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள். உங்கள் கிரீடம் இறங்கிவிடாமல் நான் வேண்டுமானாலும் தாங்கிப் பிடித்துக் கொள்கிறேன்.’ எனச் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுடன் அவனது அலுவலகம் நோக்கி விரைய,

ராணியின் தந்தை ஈஸ்வரியின் நடமாட்டத்தை கண்டறிந்து மகளுக்கு தெரியப்படுத்தியிருந்ததால் இந்நேரம் சாண எரிவாயுக் கூடத்தின் கட்டிடப் பணியை மேற்பார்வையிட செல்வாள் என்பதால் அப்பொழுது வழிமறித்து கொழுத்திப் போட்டுவிட வேண்டுமென்று ராணியும் காத்திருக்க, மனம் துள்ளாட்டம் போட தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தவள் ரோட்டோரம் நிற்கும் ராணியை கண்டுகொண்டாள். 

‘ராணியக்கா…! வீட்டுக்கு வராம இங்க ஏன் நிக்கிறாங்க…?’ யோசனையுடனேயே அருகில் வந்தவள்,

“வாங்க அக்கா! வீட்டுக்கு வராம ஏன் இங்க…? அன்பு அம்மா, அப்பா எல்லோரும் நல்லா இருக்காங்களா…?” என இன்முகத்துடன் வரவேற்று விசாரிக்க,

“உன்னைப் பார்த்து பேசணும்னு தான் வந்தேன்.” 

“வாங்க அக்கா வீட்டுக்குப் போகலாம்…”

“உரிமையா வீட்டுக்கு வர்றதுக்கு தான் எனக்கு கொடுப்பினை இல்லாமல் போச்சே, என் இடத்தில தான் நீ இருக்கியே, காலத்தோட எல்லாம் நடந்திருந்தா இந்நேரம் அத்தானோட மனைவியா மட்டுமில்ல அவரோட பிள்ளைகளுக்கும் அம்மாவாகியிருப்பேன். முடிஞ்ச கதையைப் பேசி இனி ஆகப்போறது ஒன்னும் இல்லைனாலும் மனசு கேட்கமாட்டேங்குது. நீ நல்லா இருக்கியா?”

‘அத்தான் இவர்களுக்கிடையே இருந்தது வெறும் ஈர்ப்புன்னு தானே சொன்னாங்க… இவங்க மனைவி, அம்மான்னு என்னென்னவோ சொல்றாங்களே… இனி எப்படி நல்லா இருக்க முடியும்?’ பெரும் படபடப்பும், பயமும் வந்து ஆட்கொள்ள, கைப்பொருள் களவு போய் விடுமோ எனும் இனம் புரியாத பயம் உண்டாக, மரியாதைக்காகவேனும் பதில் சொல்ல வேண்டுமே என,

“ம்… நல்லா இருக்கேன்” எனத் தயக்கத்துடன் சொல்ல, ஈஸ்வரின் கண்களில் தெரிந்த பயமே ராணியின் முதல் வெற்றியாய்த் தோன்ற,

‘இவளுக்காக ரொம்ப மெனக்கெட்டு பொய்க்காரி ஆகவேண்டாம் போலவே, இன்னும் ஆரம்பிக்கவேயில்லை அதுக்குள்ள அரண்டு போயிட்டாளே, அத்தான் மேல அம்புட்டு பாசம்…?’ என பற்றிக்கொண்டு எரிய,

“உனக்கென்ன ஆத்தா, பிடிக்குதோ, பிடிக்கலயோ கட்டிக்கிட்டு வந்துட்டோமே, நம்மை நம்பி வந்துட்டாளேன்னு கடமை தவறாத புருஷனா உன்னை உள்ளங்கையில் வச்சுத் தாங்க அத்தான் இருக்கும் போது உன் நலத்துக்கு என்ன குறை இருக்கப் போகுது? நீ நல்லா தான் இருப்ப…” அழகாய் அடுத்த காயை ஈஸ்வரிக்கு எதிராய் நகர்த்தினாள்.

அவள் எதிர்பார்த்தது போல் கடமைக்காக எனும் வார்த்தை ஆதியோடு அந்தமாய் ஈஸ்வரியை உலுக்க, நா உலர்ந்து, கால்கள் வெடவெடக்க, கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல் உடல் தொய்ந்து போக,

“அக்கா ப்ளீஸ் எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படியெல்லாம் பேசாதீங்க. அத்தானும் நானும் அன்பும், அன்யோன்யமுமா தான் இருக்கோம். அவங்களும் நிம்மதியும், சந்தோஷமுமா தான் இருக்காங்க. அத்தானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எவ்வளவு அன்பும், அக்கறையும் நடத்துவாங்க தெரியுமா?” தன் கணவன் தன்மீது அன்பு கொண்டுள்ளான் என்பதை இவளிடம் நிரூபித்தே ஆகா வேண்டும் என்பது போல் விளக்கம் வைக்க,

“அத்தான் ரொம்ப பாவம், உன்கிட்ட அவ்வளவு தத்ரூபமா நடிச்சுக்கிட்டு இருக்காங்க.”

“அவங்க எதுக்கு நடிக்கணும்?” சிறுகோபம் எட்டிப் பார்த்தது ஈஸ்வரியிடம்.

“ஒருத்தியை மனசில் இருத்திக்கிட்டு வேறொருத்தியோடு இசைந்து எப்படி இணக்கமாக குடும்பம் நடத்த முடியும்? நிச்சயம் நடிப்பு தான். அதுவும் சின்ன வயசுலயே ஒருத்தருக்கு ஒருத்தர்ன்னு முடிவு பண்ணி பல வருஷமா வளர்ந்த காதலை படக்குன்னு எப்படி முறிச்சுக்க முடியும்? நீயே சொல்லு!” என பரிதாப முகம் காட்டி கலங்காத கண்களை முந்தானை கொண்டு ஒற்றியெடுக்க

“காதலா? அதுவும் சிறுவயதில் இருந்தேவா?’ மூச்சுவிட மறந்த ஈஸ்வரிக்கு உயிர் பறவை சுருண்டுவிட்டது.

‘உண்மையோ…? இத்தனை மாதங்களாய் நான் மட்டுமே காதலாகி கசிந்து உருகியிருக்கிறேன். இந்நேரம் வரை அத்தானுக்கு என் மேல் காதல் வரவில்லை. அவங்க விரும்பியபடியே இசைஞ்சு குடும்பம் நடத்தினாலும் என்னிடம் காதல் வராததற்கு காரணம் ராணியை காதலித்தது தானோ?” ஊமையாய் பேச்சிழந்து, கண்களில் உயிர் தேக்கி நிற்பவளைக் கண்டு துள்ளாட்டம் போட்ட மனதை அடக்கி, சோகமே உருவாய், 

“மனச ஒருத்திகிட்ட கொடுத்துட்டு இன்னொருத்தியோட எப்படி மனம் ஒத்து வாழ முடியும்? கட்டிக்கிட்டோமேங்கிறதுக்காக குடும்பம் பண்றாக போல… கல்யாணத்துக்கு மொத நாள் எனக்கு துரோகம் பண்ணிட்டு உன்னை கட்டிக்க முடியாதுன்னு பிரச்சனை பண்ணிட்டாங்க.

நான் தான் நம்மளால உங்க தங்கச்சி கல்யாணம் நின்னுடக் கூடாது, நீங்க கட்டிக்கத் தான் வேணும். அந்த பொண்ணோட நல்ல விதமா குடும்பம் பண்ணத்தான் வேணும்னு சொன்னேன். அத்தான் எனக்கும் மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்க அதுக்காக நானும் அவுகள மாதிரி நடந்ததையெல்லாம் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ண முடியுமா? நீயே சொல்லு… அதான் அவங்க நினைப்போடவே வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இதுல அத்தானுக்கு ரொம்ப வருத்தம், அதான் எங்க வீட்டுக்கு கூட வர்ரதில்ல. அந்த வீட்டு மருமகளா என் அத்தானுக்கு மனைவியா வலய வர வேண்டியவ மூணாவது மனிஷியா வரப்பிடிக்கல… அதான் இப்படி தெருவுல பார்த்து நலம் விசாரிக்கிற மாதிரி ஆயிடுச்சு.

அத்தான் கிட்ட நல்லவிதமா நடந்துக்க, கொஞ்சம் கொஞ்சமா என்னை மறந்து உன்னை முழுமனசோட ஏத்துக்க இன்னும் காலம் கடக்கணும். அதுவரை நீ தான் அனுசரிச்சுப் போகணும்.

நான் சொல்லக்கூடாது தான் காதலிச்சு தொலைச்சுட்டேனே மனசு கேட்கமாட்டேங்குது. அவங்க சுகப்படலையோன்னு வருத்தமா இருக்கு. அத்தான் நல்லவிதமா வாழறது உன் கையில தான் இருக்கு. பத்திரமா பார்த்துக்க… நான் கிளம்பறேன்!” என தன் முதலை கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றாள் ராணி.

கொஞ்ச நேரத்திற்கு என்ன நடக்கிறது என அரிய முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள் ஈஸ்வரி. 

‘இவள் சொல்வது போல இருவரும் உயிராய் விரும்பியிருப்பார்களோ…? அதனால் தான் என்னிடம் காதல் வசப்பட முடியவில்லையோ…?” எண்ணும் போதே நெஞ்சை அடைத்துக் கொண்டு வர அங்கிருந்த சுமை தாங்கிக் கல்லில் அமர்ந்துவிட்டாள்.

ஒரு நிமிடம் நிதானமாய் யோசித்திருந்தால் உண்மை விளங்கியிருக்கும். நொடிப்பொழுதில் தோன்றிய சந்தேகத்திற்கு உயிர் கொடுத்து தன் வாழ்வு திசைமாற தானே வழிவகுத்துக் கொண்டாள்.

‘தன் மனமே தன்னிடம் இல்லாதவனிடம் போய் மனதைக் கேட்டிருக்கிறோமே… பாவம் அவன்.

சிறந்த கணவனாய் நடந்து கொண்டவனால் காதலனாய் மாற முடியாத போதும் எனக்காக கொஞ்சமும் முகம் மாறாமல் எல்லாம் செய்தானே… என் ஒருத்திக்காக இருவர் வாழ்வை பலி கொடுத்திருக்கிறார்கள்.

பதினோரு மாதமாக தான் எனக்கு அத்தானை தெரியும் அதன் பிறகு தான் காதலிக்க தொடங்கினேன்… என்னால் சில மணி நேரங்கள் கூட பிரிந்து இருக்க முடியவில்லை பாவம் இவள் சிறுவயதில் இருந்து கணவனாய் நெஞ்சில் இருத்திக் கொண்டவனை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு நடை பிணமாய் அழைகிறாள்…

எத்தனையோ விதமாக முயன்றும் என்னால் அத்தானை கவர முடியாமல் போனதற்கான காரணம் இப்பொழுது தான் புரிகிறது. வேறொருத்தியிடம் காதல் வயப்பட்டு அதுவும் கை கூடாமல் போக நொந்து போய் இருப்பவனிடம் காதல் வரம் கேட்டிருக்கிறேன் நான் எத்தனை பெரிய சுயநலவாதி?


போதும் இனியும் இது தொடரக் கூடாது. சரி செய்தே ஆக வேண்டும்… என்ன செய்ய…? விழிகளில் நீர் பெறுக அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெரிந்தாலும் சிலையாய் அமர்ந்திருந்தாள். மெல்ல சுயம் பெற்று,


‘நான் இங்கிருக்கும் வரை இருவரும் சந்தோசமாக இருக்கப் போவதில்லை. அவனோ தன் கஷ்டத்தை மறைத்துக் கொண்டு எனக்காகவே வாழப் போகிறான். இவளோ அவனை நினைத்துக் கொண்டு திருமணமே செய்துகொள்ளாமல் தவிக்கப் போகிறாள். ஆகக் கூடி இருவரின் வாழ்வையும் அழித்துவிட்டு நான் மட்டும் இத்தனை நாள் இன்பக் கடலில் மூழ்கி திளைத்திருக்கிறேன்.


இனியும் இது தொடர என் மனம் இடம் கொடுக்காது. போய்விட வேண்டியது தான் அத்தானையும், இந்த நன்னிலத்தையும், இங்கிருக்கும் மக்களையும் விட்டு ஒரேயடியாய் சைனாவிற்கே போய் விட வேண்டியது தான். இத்தனை மாதங்களும் நிறைவான குடும்ப வாழ்வை வாழ்ந்துவிட்டேன். போதும் இனியேனும் அவர்கள் வாழட்டும். போய்விடலாம்!’ எண்ணும் போதே,


‘முடியுமா? அத்தானை பார்க்காமல், பேசாமல், கையணைப்பில் அடங்காமல் வாழ முடியுமா? துக்கம் தாங்கமுடியாது போக அழுது ஓய்வதற்கு நீர் இன்றி விழிகள் கூட வறண்டு போயின… சட்டென கருவுற்றிருப்பது நினைவு வர,


‘ஐயோ இந்த பிஞ்சை எப்படி மறந்தேன்…? இத்தனை நாளும் இல்லாமல் இப்பொழுது தான் என்னில் வந்து உதிக்க வேண்டுமா…?’ வயிற்றில் கைவைத்துக் கொண்டு செய்வதறியாது அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தாள்.

நாளை சொல்லுவான்…

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!