OVS-19

OVS-19

நிமிடங்கள் யுகமாய் கரைய… மெல்ல இயல்புக்கு வந்தவள்,


“நாம் போய்டலாம் குட்டி, உனக்கு அம்மா இருக்கேன். தாத்தா, பாட்டி, மாமா எல்லோரும் இருக்காங்க… அப்பா வேண்டாம். அவங்க நமக்கு சொந்தமில்ல… ஆமா, அவங்களுக்கும் நமக்கும் இனி எதுவுமே இல்ல… எனக்காக இத்தனை நாள் அவங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்.


பாவம், மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிச்சிருக்காங்க. அதான் காதல் இல்லனா என்ன கெட்டுப்போச்சு உங்கிட்ட நல்ல விதமா தானே நடந்துக்கறேன்னு கேட்டிருக்காங்க. தன்னால ஒருத்தி கல்யாணமே பண்ணிக்காம இருக்காங்கிற போது எவ்வளவு குற்ற உணர்ச்சி இருக்கும்? (குற்ற உணர்ச்சியா… குற்றால அருவியில குளிச்சது போல் ஜாலியா இருக்கான்! ஜில்லு… ஜில்லுனு ஜொள்ளு விடுறான்! ஏம்மா எங்க வைத்தெரிச்சலை கொட்டிக்கிட்டானே பத்தாதா!)


எல்லாத்தையும் தன்னோட புதைச்சுக்கிட்டு எவ்வளவு இயல்பா என் மனம் நோகாம என்னோட குடும்பம் பண்ணியிருக்காங்க. இது எதுவுமே தெரியாம என்னை ஏன் காதலிக்க மாட்டேங்கறீங்கன்னு வம்பு பண்ணிக்கிட்டு காதலை வர வைத்தே ஆகணும்னு வீம்பா அவங்களை ரொம்பவும் படுத்தியிருக்கேன். போதும். இதோட எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துடலாம்.

கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும்… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேறிடுவேன். அதுக்காக தான் கடவுள் இந்த குழந்தையை கொடுத்திருக்கார் போல… நாம போய்டலாம் கண்ணா! இனியாவது அப்பா சந்தோசமா இருக்கட்டும். என்னால் கெட்டுப் போனவங்களோட வாழ்வை நான் தான் சீர் பண்ணனும்.’ திடமாய் முடிவெடுத்து வீடு வந்து சேர்ந்தவள், தந்தை தனக்கு முதன்முதலில் கொடுத்த பணத்தை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டாள்.


என்று இந்த வாழ்கை வீண் என்று தோன்றுகிறதோ அன்று தான் இதை எடுக்க வேண்டும் என கணவன் சொன்னது பலித்துவிட்டதாய் மனம் குமுறியது. தனது பாஸ்போர்ட் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை. நேரே ஏர்போட்டிற்கு சென்று அவசரப்பிரிவில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என அழுது ஓய்ந்தது தெரியாமல் முகத்தில் நீர் அடித்து கழுவி வழக்கமான தனது சிறு ஒப்பனையுடன் கிளம்பிவிட்டாள். கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு,


“அழகா இருக்கடி பொம்மை!” எனக் கணவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டு கொஞ்சுவது நியாபகம் வந்து தொலைத்தது. பொங்கிய அழுகையை அடக்கி தான் வரைந்த ஓவியத்தில் குறு குறு பார்வையுடன் நிற்கும் கணவனை உச்சிமுதல் பாதம் வரை வருடினாள்… கன்னத்தில் முத்தமிட்டாள்… மீசையை தடவிப் பார்த்தாள்… கடைசியாய் மார்பில் தலை வைத்து கண் மூடிக் கொண்டாள்.


மெல்ல தன்னை சமன் செய்து கொண்டு அவனோடான உறவை முறித்துக் கொண்டாள். (உண்மைன்னா அவன் கையை காலை முறி இல்லைன்னா ராணியின் கதையை முடி… அதை விட்டு உறவை முறிக்குறேன்னு கிளம்பிட்ட… என்னது இது சின்னப் புள்ளைத் தனமா…!) கைப்பையுடன் விரையும் மருமகளை கண்ட குணவதி வழக்கம் போல் வெளியே செல்வதாய் எண்ணிக் கொண்டு,


“நேரமாச்சே சாப்பிட்டு போத்தா…” என்கிறார் வாஞ்சையுடன். மறுப்பாக தலையசைத்து,


“அவசரமா போகணும் அத்தை… கிளம்பறேன்” என விடைபெற்றவளுக்கு கூடம் தாண்டி முன்வாசலில் கால் வைக்கும் போது திருமணம் முடிந்து பயமும் பதட்டமுமாய் கணவனின் கரம் பிடித்து உள்ளே வந்தது நியாபகம் வந்தது.


‘அந்த பயமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் தனித்து வாழும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது’ என தன்னையே தேற்றிக் கொண்டவள் அதன் பிறகு அனைத்து நினைவுகளையும் ஒட்டுமொத்தமாய் மூட்டைகட்டி வீட்டு வாசலில் இருக்கும் திண்ணையிலேயே வைத்துவிட்டு போய்விட்டாள்.

விமான நிலையம் செல்ல டாக்ஸிக்கு அழைத்தபடி மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருத்தவளை கண்டு கொண்டான் அவ்வழியே வந்த சிவகுருநாதன். அவளருகே வந்து தன் பைக்கை நிறுத்தியவன்,


“ஈஸ்வரி, என்ன நடந்து போறீங்க…? உங்க ஸ்கூட்டி என்னாச்சு? வாங்க நான் டிராப் பண்றேன்” என்றதும் டாக்ஸி கிடைக்காமல் மருகிக் கொண்டிருந்தவள் இவனோடு தஞ்சாவூர் வரை சென்றுவிட்டால் போதும் அப்புறம் அங்கிருந்து சுலபமாய் திருச்சி போக டாக்ஸி கிடைக்கும் என்ற திட்டத்துடன்,


“என்னை சிட்டில இறக்கிவிட முடியுமா?” என்றதும் முதல் பார்வையிலேயே தன் மனம் கவர்ந்த பெண் உதவி கேட்க, அழைத்துச் சென்றான்.


சுதாகர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான். தான் கட்டிக்க இருந்தவள் ஊரே புகழும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாள் அதற்கு முழுமுதற் காரணமாய் அந்த வீரபாண்டியன் இருந்திருக்கிறான் என்பதை அறிந்து அதை ஏற்க முடியாமல் புழுங்கிக் கொண்டிருந்தவனின் வாய்க்கு அவலாய் இருவரும் செல்லும் காட்சி இருக்கவே குதூகலமாகிவிட்டான். 


“சிட்டில எங்க போகணும் ஈஸ்வரி…?”


“இல்ல நான் ஏர்போர்ட் போகணும்… சோ, டாக்ஸி ஸ்டாண்ட்ல இறக்கிவிடுங்க.” என்றாள் நிதானமாய்.


“சார் இல்லாம நீங்க மட்டும் தனியா…” எங்க போறீங்க என கேட்க முடியாமல் தடுமாற,


“உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? முடிஞ்சா உதவி பண்ணுங்க இல்ல இப்படியே இறக்கி விடுங்க நான் போய்க்கிறேன்.” அதிக உரிமை எடுத்துக் கொள்வதாய் தோன்ற காட்டமாகவே சொன்னாள்.


“நீங்க தப்பா எடுத்துக்கலன்னா நானே ஏர்போர்ட்ல கொண்டு போய் விடறேன். இப்படி போறது கஷ்டமா இருந்துச்சுன்னா வீட்ல கார் இருக்கு எடுத்துக்கிட்டு போகலாம்.” மறுத்துவிடாதே என்பதை அவள் முகம் பார்க்க,


“இப்படியே போகலாம்.” என உத்தரவு கொடுத்துவிட்டாள். 


‘கணவன் மனைவியிடையே ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ…? சாருக்கு தெரிந்து வருகிறாளா இல்லை சொல்லாமல் கிளம்புகிறாளா? நாம் அழைத்து சொல்லிவிடுவோமா…?’ என ஆயிரம் கேள்விகள் மூளை க்குள் சண்டையிட்டாலும் வாயை திறக்காமலேயே பயணித்தான்.


இவர்களை பின்தொடர்ந்து வந்த சுதாகர் இருவரும் தஞ்சாவூரையும் தாண்டிச் செல்லும் வரை பின்தொடர்ந்துவிட்டு புதிய திட்டம் ஒன்றை தீட்டியபடி வீரபாண்டியனுக்காக காத்திருந்தான். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக விரைவிலேயே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவனை வழிமறித்த சுதாகர்,


“என்ன ப்ரோ… உன் பொண்டாட்டி ஓடிப் போனது அதுக்குள்ள உன் காதுக்கு வந்துடுச்சா?” சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஓங்கி அறைவிட பொறிகலங்கிப் போனாலும்,


“கண்ணால பார்த்துட்டு தான்டா சொல்றேன்! என்னைவிட்டு உன்னோட ஓடிப் போனா, இப்போ உன்னையும் விட்டு ஒரு சின்ன பயலப் பிடிச்சிருக்கா. ரெண்டு பேரும் தஞ்சாவூர் ஜில்லாவை தாண்டி ரொம்ப நேரமாச்சு! நான் சொல்றது உண்மையா பொய்யான்னு உன் வீட்ல போய் பார்!” என்றான் நக்கலாக.


“வாயை மூடுடா நாயே! என் பொண்டாட்டியைப் பத்தி எனக்குத் தெரியும். உன் பார்வையோட தெளிவும் தெரியும். அவகூட வாழணும்கிற ஒரே காரணத்துக்காகத் தான் உன்னை உயிரோட விட்டுட்டுப் போறேன் இல்ல இங்கேயே கொன்னு புதைச்சுடுவேன்.

உன்னோட இந்த கோணல் புத்தியால தான் எனக்கு அற்புதமான மனைவி கிடைச்சிருக்கா! ஒழிஞ்சு போய்டு. இதுக்கு மேல என் கண் முன்ன நிக்காத. உன்னால நான் கொலைகாரனாக விரும்பல” என பைக்கை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு வர, எப்பொழுதும் கொஞ்சலுடன் வரவேற்க ஓடிவரும் தன் பொம்மையை காணாது மனம் சுனங்கியது. அன்னையிடம் விசாரிக்க அவசரம் என போனதாகச் சொன்னார்.

‘அந்த தெருபொறுக்கி சொன்னபடி நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்றாலும் இவள் விஷயம் என்னவென்று சொல்லாம எங்கு தான் போனாள்…?’ யோசனையுடன் கைபேசிக்கு அழைக்க ஸ்விட்ச் ஆப் என்றது. தெற்கும் தெரியாமல் வடக்கும் தெரியாமல் திகைத்து விழித்த வன்,


‘நேற்றைய கோபம் கூட இன்று காணாமல் போக நன்றாகத் தானே காலையில் வழியனுப்பி வைத்தாள். கைபேசியை அணைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவசரமாய் யாருடன் எங்கு சென்றிருப்பாள்? இல்லை இயல்பாகவே சார்ஜ் இல்லாமல் கைபேசி மயங்கி விட்டதோ… 

தொழில் தொடர்பாக யாரேனும் அழைத்ததனால் விரைந்து சென்றுவிட்டாளோ? அவளுடைய வண்டியை எடுக்காமல் அடுத்தவருடன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை அவளை வேலை செய்ய விடாமல் செய்கிறேன் என என் மீது கொண்ட கோபம் குறையவே இல்லையோ…?


அதனால் தான் கண் திறந்து கூட பார்க்காமல் போய் வாருங்கள் என்றாளோ…? அப்படி இருந்தாலும் இன்று இந்நேரத்திற்கு தொழில் பயிற்சி கொடுப்பவர்கள் அழைத்திருப்பார்களே… என் மின்னஞ்சலையும் பார்த்திருப்பாளே! அதன் பிறகாவது கோபத்தை கைவிட்டு தானே ஆகவேண்டும்… என்ன தான் நடக்கிறது? எங்கு தான் போனாய் ஈஸ்வரி…?


எனக்கு ஏதேனும் விபத்து என்று கதை சொல்லி ராணியின் திட்டப்படி யாரேனும் கடத்திவிட்டார்களோ…? ச்சே! ராணி அவ்வளவுக்கெல்லாம் மோசமில்லை. உண்மையாகவே எப்பொழுதும் போல் தான் வெளியே கிளம்பியிருப்பாளோ… சாப்பிடாமல் சென்றுவிட்டதால் அம்மா அவசரம் என நினைத்துக் கொண்டார்களோ…?” யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.


சிவகுருநாதனுக்கு வீரபாண்டியனிடம் தெரியப்படுத்தாமல் அழைத்துச் செல்வது தவறெனத் தோன்ற, மெல்ல பைக்கை ஓரம் கட்டி,


“ஒரு நிமிஷம் ஈஸ்வரி. அம்மா எனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்பாங்க. வர லேட்டாகும்ன்னு தகவல் சொல்லிடறேன்.” என விலகி நடந்து வீரபாண்டியனுக்கு அழைத்துவிட்டான். (நண்பேன்டா!)


நிலைகொள்ளாமல் தவித்த மனதை அடக்கி அமைதியாய் யோசிக்க முயன்று கொண்டிருந்தவனை சிவகுருநாதனின் அழைப்பே இயல்புக்கு கொண்டுவந்தது. அவனது எண்களைக் கண்டதுமே,


‘இவனோடு தான் சென்றிருப்பாளோ..?’ லேசாய் மனதில் இதம் பரவ வேகமாய் உயிர்ப்பித்துவிட்டான்.


“சர் ஈஸ்வரி…” அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,


“உங்க கூட தானே இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்லையே..?” படபடப்புடன் கேட்டான்.


“ஆமா சர். நல்லா இருகாங்க.” என ஆரம்பித்து அவளை சந்தித்ததில் இருந்து நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல உடல் வெடவெடக்க,


‘என்ன பிரச்சனை? ஏன் என்னைவிட்டுச் செல்கிறாள்? எதுவாக இருந்தாலும் ஒருவார்த்தை சொல்லாமல் தன் போக்கில் கிளம்பிச் செல்வதா?’ என குழம்பித் தவித்தவன் தனது பைக்கில் மின்னலாய் விமான நிலையம் நோக்கி பறந்துவிட்டான்.


‘என்னை விட்டுப் போற அளவுக்கு உனக்கு என்னடி கோபம்? கொல்லாம கொல்றியேடி…! உன்னை பார்க்காம, பேசாம, என் அழகு பொம்மையை கொஞ்சாம ஒரு நாள் கூட இருக்க முடியாதுடி…! போயிடாத பொம்மை…

நான் உன்னை விரும்பறேன்டி… என் சுயம் காணாமப்போய் ரொம்ப நாளாச்சு… என் காதலை உங்கிட்ட சொல்லவாவது நீ என் பக்கத்தில் இருக்கணும்டி. போயிடாதடி… உன் அத்தான் வந்துட்டே இருக்கேன்…!’ மனதோடு மன்றாடியபடி பறந்துகொண்டிருக்க கைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருக்க, அன்பு தான் அழைத்தார்.

முக்கிய விஷயம் என்றால் மட்டுமே அத்தை இப்படி விடாமல் அழைப்பார்கள் என்பதால் அழைப்பை துண்டிக்க முடியாமல் எடுக்க,


“பாண்டி, உனக்கும் ஈஸ்வரிக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லையே…? காலையில் இருந்து அப்பனும் மகளும் கூடிக் கூடிப் பேசிகிட்டு இருந்தாக. இப்ப ரெண்டு பேரும் ரகசியமா பேசிக்கிட்டாக, முகமெல்லாம் ஒரே சிரிப்பு. 

பார்க்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்காங்கன்னு தெரியுது. அதான் ஏதும் கலகம் இழுத்து விட்டுடாகளோன்னு உனக்கு போன் அடிச்சேன்…” என பயமும் பதட்டமுமாய் சொல்ல, மனைவி தாய்வீடு நோக்கி செல்ல இருப்பதற்கான காரணத்தை வீரபாண்டியனால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.


“பிரச்சனை இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்… அப்புறம் பேசுறேன் அத்தை.” என இணைப்பை துண்டித்தான்.

“லூசு லூசு…! என்னைவிட்டு போறதுக்கு முன்ன ஒருவார்த்தை கேட்க மாட்டியாடி…? உன்னை மட்டும் தான் நேசிச்சேன். இது தான் உண்மை. என்னை நம்புடி! உன் காதல் ஒன்னு மட்டும் போதும் பொம்மை! என்கிட்ட வந்துடு” தவிப்பும் கவலையுமாய் விமான நிலையம் வந்து சேர அப்பொழுது தான் அவன் மனையாள் போடிங் போட எழுந்தாள். அவளைக் கண்டதும் தான் சீராக மூச்சுவிடவே முடிந்தது அவனுக்கு.


ஆழ்ந்த மூச்சின் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் வெகு இயல்பாய் அவளை நெருங்க, (உள்ளுக்குள்ள உதறல் இருந்தாலும், வெளிய கெத்து காட்டுற நீ உலகநாயகனையே மிஞ்சிடுவ போ!) தனக்கு முன் கம்பீரமாய் வந்து நிற்கும் கணவனை கண்டதும் ஒரு நொடி ஓடிச் சென்று கட்டிக்கொள்ள ஏங்கியது மனது.


‘இவன் எப்படி வந்தான்? ஏன் வந்தான்? சிவாவின் வேலையாக இருக்குமோ…? இப்பொழுதும் வா என அழைத்தால் மறுக்க முடியாமல் மானம் கெட்ட மனம் இவன் பின்னோடு ஓடிவிடுமே…!’ தன் எண்ணம் போன போக்கில் திகைத்து அதை அடக்கி ஆழ்ந்த பார்வையுடன் அமைதியாய் நிற்க… ஒருநொடி அவள் கண்களில் தோன்றிய மின்னல் அவள் மனதை அம்பலப்படுத்த அதைக் கண்டுகொண்டவன்,


‘வீம்புக்காரி! இளகிய மனதை இறுக்கிக் கொண்டு நிற்கிறாள்.’ என கூரிய பார்வையுடன், தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து ஒன்றுமே நடவாதது போல்,


“ஹாய் ஜில்லு! ஊருக்கு கிளம்பிட்டியா? அம்மா, அப்பா ஞாபகம் வந்துடுச்சா? நல்லது. எனக்கு உங்கிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டியதிருக்கு. அதை மட்டும் கேட்டுட்டு தாராளமா கிளம்பு….” என அருகில் வந்தவன், இறுகத் தழுவி


“வோ ஐ நி பேபி!” என இதழோடு இதழ் பொருத்திக் கொள்ள விமான நிலையமே வேடிக்கை பார்த்தது. சிறு தீண்டலுக்கும், சின்ன முத்ததுக்கும் யாரேனும் பார்க்கிறார்களா என சுற்றம் பார்ப்பவன் தன் சுயம் தொலைத்து ஊரே வேடிக்கை பார்க்க இதழ் அமுதம் பருகிக் கொண்டிருந்தான். (இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!)


எப்பொழுதும் தன் உயரம் குறுக்கி முத்தமிடுபவன் இன்று தனக்கு வாகான உயரத்திற்கு தன்னவளை தூக்கி இருந்தான். கணவனின் அன்பிலும் முத்தத்திலும் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தவள் மெல்ல சுயம் பெற்று அவன் மார்பில் கரம் பதித்து விலக்கி நிறுத்தி,

“போதும் அத்தான். என்னை ஏமாத்துறதா நினைச்சு உங்கள நீங்களே ஏமாத்திக்காதீங்க. உங்களால எந்த காலத்திலும் என்னை காதலிக்க முடியாது. தயவு செஞ்சு பொய் சொல்லாதீங்க…!” கரம் குவித்து கெஞ்ச, சிறு முறுவலுடன், (காதலிச்சா சண்டையை போடும்மா… ஒரேடியா ஷட்டரை போடுற!)

“என்னை ப்ரூவ் பண்ணவோ, நியாயப்படுத்தவோ நான் இங்க வரல ஈஸ்வரி. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். என் மனசை உனக்கு தெரியப்படுத்தனும்னு தான் வந்தேன். உனக்கு எப்போ என்னை பார்க்கணும்னு தோணுதோ அப்போ வா… காத்திருப்பேன்! டேக் கேர். 

போனதும் கால் பண்ணு. வ்ஓ ஷாங் நி (wuo hsian ni- I miss you)” என நெற்றியில் முத்தமிட்டு விலகி நடக்க, விமான நிலையம் மெல்ல இயல்புக்கு திருப்பியது. (நாங்க குழப்பிட்டோம்… ஒன்னும் புரியல, சொல்லாத தெரியல பாட்டப் போடுறதா இல்ல சொல்லிட்டானே அவன் காதலைன்னு போடுறதா!?)


‘என்னை மிஸ் பண்றானா…? இவன் சொல்றது நிஜமா? என் மீது காதல் கொண்டிருப்பது உண்மை தானோ… இல்ல கட்டிக்கிட்டு வந்தவளை பாதியில் கைகழுவக் கூடாதுன்னு இந்த கதையெல்லாம் சொல்றானா?’ திகைத்து விழித்து உணர்வுபெற்று தூரத்தில் புள்ளியாய் மறையும் கணவனின் உருவம் கண்டவளுக்கு மனதில் பெரும் பாரம் வந்து குடிகொண்டது.


‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்…? அதான் காதல் சொல்லிவிட்டானே… இவனின்றி நிச்சயம் உன்னால் வாழ முடியாது. அவனே வந்த பிறகும் விட்டுச் செல்ல வேண்டிய அவசியமென்ன? ஓடு, போய்விடப் போகிறான்…’ மனதின் மன்றாடலுக்கு மதிப்புக் கொடுத்து, 


அத்தானை பார்க்காமல் அரை நாழிகை கூட இருக்க முடியாது என்பது புரிய, என்னை பார்க்க வேண்டும் போல் இருக்கும் போது வா என்றது மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலிக்க எங்கே தன்னைவிட்டு சென்றுவிடுவானோ என்னும் பயத்தில் தட்டுத்தடுமாறி ஓடிவந்தவள் பைக்கில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு நிற்பவனைக் கண்டாள். 


‘ஏன் போகாமல் நிக்கிறான்? பிளைட் கிளம்பியதும் போகலாமென்றோ…’ சிந்தனையுடனேயே அவனருகில் வர,


‘நிச்சயம் என்னைவிட்டுப் போக முடியாது. வருவாள். வந்து தான் ஆகவேண்டும். இல்லையேல் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்…’ என மனைவியை கணித்தவனாய் காத்திருந்தவனின் செவிகளில் கொலுசொலி கேட்க மெல்ல விழி பிரித்தவன் எதிரில் நிற்பவளைக் கண்டதும்,

“போகலாமா?” உணர்ச்சி துடைத்த முகபாவத்துடன் ஒற்றையாய் கேட்க, தலை தானாக சம்மதம் சொல்லிவிட்டது. மறுவார்த்தை பேசாமல் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். வீட்டிற்கு வந்த பிறகும் ஏன் போனாய் எனக் கேட்காமல் எதுவுமே நடவாதது போல் தன் போக்கில் இருந்தான். 


“சாப்பிடு ஈஸ்வரி… மதியமும் சாப்பிடலன்னு அம்மா சொன்னாங்க… போ…” என விரட்டினான். விமான நிலையத்தில் பலர் பார்க்க பகிரங்கமாய் மனம் திறந்தவன் வீட்டிற்கு வந்ததும் விதவிதமாய் காதல் சொல்லுவான் என எண்ணியவளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. (சொன்னா… அவன் வீரா இல்லையே!)


‘இவனுக்கு காதல் இல்லையோ நான் நினைத்தது போல் பந்தம் நீடிக்க வேண்டும் என்பதற்காக பொய் தான் சொன்னானோ… இவனை விட முடியாமல் கிடைத்த காரணத்தைப் பற்றிக் கொண்டு நான் தான் இவன் பின்னோடு வந்துவிட்டேனோ…’ கலவையான எண்ணங்களுடன் தங்கள் படுக்கை அறையில் குழம்பிக் கொண்டிருக்க,


தான் கொளுத்திப்போட்டது பற்றிக் கொண்டு எரிகிறதா? என பார்க்க விரும்பிய ராணி,


“அப்பா கிளம்புங்க மாமா வீட்டுக்கு போயிட்டு வருவோம். இந்நேரம் அந்த மேனா மினுக்கி பொட்டியை கட்டியிருப்பா இல்ல அத்தானோட சண்டை போட்டிருப்பா. சந்தேகப்படறது அறவே பிடிக்காத அத்தான் பதிலுக்கு கோபப்பட்டிருப்பாங்க! சூழ்நிலை ரொம்ப மோசமா இருக்கும். எதுவானாலும் நமக்கு வெற்றி தான்.” என தந்தையுடன் கிளம்பிவிட்டாள்.


அவனோ, ‘எதுவானாலும் அவளாகத் தான் சொல்ல வேண்டும். என்ன ஒரு தினவு இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியிருப்பாள், பார்க்கிறேன்! எப்பொழுது தான் மனம் திறக்கிறாள் என பார்க்கிறேன்.’ என கூடத்தின் சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.


“ஐயா, பாண்டி… இன்னிக்கு நம்ம சிவன் கோவில்ல அன்னாபிஷேகமாம். நானும் அப்பாவும் போய்ட்டுவாரோம். நீ ஈஸ்வரியை டாக்டர் கிட்ட கூட்டி போயிட்டு வா…” மகனுக்கு கட்டளையிட்டுச் சென்றார் குணவதி. 


“அத்தான்!” என்னும் அழைப்பு வந்திருப்பது யார் என்பதை காட்டிக் கொடுத்தது. 

“வா ராணி! வாங்க மாமா!” கணவனும் உற்சாகமாய் வரவேற்பது கேட்கவே கண்களில் அணை உடைபட்டது. 

‘இவனை நம்பி நான் வந்திருக்கவே கூடாது. எனக்கு தெரியாமல் இருந்தவரை தான் உறுத்தல் இருந்திருக்கும் போலும் இப்பொழுது அது கூட இல்லாமல் எவ்வளவு இயல்பாய் இருக்கிறான் …?’ என அழுது கரைந்தாள்.

“என்னத்தான், ஈஸ்வரி எங்க…?”


“அதானே தங்கச்சி, மச்சான் அப்புறம் மக எல்லோரும் எங்க?” மாமாவும் தன் பங்கிற்கு கேட்க,


‘செய்றதையும் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளை மாதிரி நல்லாவே நடிக்கிறீங்க. அந்த மக்கு மண்ணாந்தை, நீ என்னவோ பெரிய உண்மை விளம்பின்னு நினைச்சுக்கிட்டு ஊரைவிட்டே ஓடுது. இப்போ கிழிக்கிறேன் உங்க முகத்திரையை! அப்பவாவது சைனா செட்டுக்கு என் காதல் புரியுதான்னு பார்க்கலாம்.’ என கருவியபடி,


“அவ இங்க இல்ல ராணி. சொல்லாம கொள்ளாம சைனாக்கு கிளம்பி போயிட்டா…!” வருத்தம் போலும் சொல்ல


‘அடப்பாவி கல்லு மாதிரி உள்ள தானே உட்கார்ந்திருக்கேன். ஏன் பொய் சொல்றான்?’ எனக் குழம்பினாலும் குறையையும் கேட்க வேண்டும் என தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்.


“தெரிஞ்சுக்கங்க அத்தான், வெளிநாட்ல வளர்ந்த புள்ளைங்கிறதால தான் சட்டுன்னு பிடிக்கலன்னு உங்கள தூக்கி எறிஞ்சுட்டு போயிடுச்சு.”


“அதுவும் சரிதான் உன்னைக் கட்டியிருந்தா இந்நேரம் என்னை கொண்டாடியிருப்ப, அவ ஒரு வார்த்தைகூட சொல்லாம போயிட்டா… ஏன் போனான்னு கூட தெரியாது ராணி. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு”. காரணம் சொல்லாமல் கிளம்பிச் சென்றது எத்தனை பெரிய தவறு என மனைவியையும் குத்தினான்.


“நான் சொல்லச்சொல்ல கேட்காம அவளைத் தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்தீங்கள்ல அதான் பாதியிலேயே விட்டு போயிட்டா…” இது தான் சமயமென ராணியின் தந்தையும் ஏற்றிவிட, 


“இத்தனைக்கும் நான் தப்பா எதுவும் சொல்லலை. நாம ரெண்டு பேரும் விரும்பினதா ஒரு பொய் சொல்லி அவ வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தி உங்களுக்கு புரியவச்சேன்.


‘சரி தான்! நீ சொன்னது உண்மையா பொய்யான்னு கூட யோசிக்காம என்னிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கனும்னு கூட இல்லாம கிளம்பி போனாள்ல என்னோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அவ கொடுத்த மரியாதை இது தான்.” கணவனின் குமுறல் அதிர வைத்தது. ராணியின் வாக்குமூலம் மயக்கத்தையே உண்டாக்கியது.


‘என்னது பொய் சொன்னாளா? அடிப்பாவி, உன் காதல் உண்மைனு நம்பி எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். அத்தான்கிட்ட கேட்டிருக்கனும்… உண்மையாவே விரும்பியிருந்தாக் கூட எனக்காக மறுத்துடுவாங்கன்னு நினச்சு தான் கேட்கல. 

அவங்களுக்கு தெரிஞ்சா என்னை போகவிடமாட்டாங்கன்னு நம்பினேன். அப்புறம் நீ அவங்களோட சேர்ந்து வாழ முடியாதுன்னு தான் சொல்லாமல் போனேன். ஆனால் நீ… திட்டம் போட்டு காய் நகர்த்தியிருக்க’ வெகுண்டாள்.


“நான் சொன்னதை நம்பி உங்கள சந்தேகப்பட்டு போயிருக்காளே, இப்பவாவது அவ அன்பின் ஆழம் உங்களுக்க புரியுதா அத்தான்?” எகத்தாளமாக கேட்க,


அவ்வளவு தான், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வெளியே வந்தவளைக் கண்டு ராணி அதிர்ந்து நிற்க, அத்தானோ கண்ணோர கள்ளச்சிரிப்பும், குறுகுறு பார்வையுமாய் அவளை ஊடுருவ,


“நான் ஒன்னும் அத்தான் மேல சந்தேகப்பட்டு விட்டுட்டு போகல, உன் காதல் உண்மைன்னு நம்பினதால இனியாவது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னு தான் போனேன்! காதல் வயப்பட்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறேனோ, அது மாதிரி தான் அத்தானும் உன்னை மறக்க முடியாம கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சேன். அவங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் விலகிப் போனேன்.

இப்போ அத்தான் மனசு மட்டுமில்ல, என் மனசும் தெளிவா விளங்கிடுச்சு. இனி எங்க ரெண்டு பேரையும் யாராலயும் பிரிக்க முடியாது. நீங்க கிளம்பலாம்.” ராணியை மட்டுமல்ல அவளது தந்தையையும் சேர்த்தே சொன்னாள்.

“இப்போ உனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கணும். இனியாவது எங்க வாழ்க்கையை விட்டு விலகி இரு!” என்றதும் தான், இவன் வேண்டுமென்றே திட்டமிட்டு தன் மூலமாகவே மனைவிக்கு தெளிவுபடுத்தியிருக்கிறான் என்பதை உணர்ந்தவள் அதன் பின் ஒரு நொடி கூட அங்கு நிற்கவில்லை.


“அப்பா நல்லா படிச்சு வெளிநாட்ல வேலை பார்க்கிற மாப்பிள்ளையை பாருங்கப்பா!'” ச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல் கண நேரத்தில் வீரபாண்டியனை தூக்கி எரிந்து கல்யாணத்திற்கு தயாராகிவிட்டாள் ராணி. (வெளக்கெண்ணெய்க்கு விவரம் புரிஞ்சுடுச்சு!)


ஈஸ்வரியோ, ராணி சொன்னதை மட்டுமே நம்பி முடிவெடுத்தது எவ்வளவு பெரிய பிசகு என்பது புரிய, கணவனிடம் மன்னிப்புக் கேட்க எண்ணி, இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்கும் கணவனின் அருகே வந்து,


“சாரி அத்தான்…” என கன்னம் தாங்க, அவளை பார்ப்பதை தவிர்த்து கண்களை மூடிக் கொண்டவன்,


“சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஈஸ்வரி. தெரிஞ்சே… திட்டமிட்டு தானே என்னை விட்டு விலகிப் போன… தெரியாம பண்ற தப்புக்கு தான் சாரி சொல்லணும்.” வெகு நிதானமான வார்த்தை பிரயோகம் உள்ளூர குளிர் பரவச் செய்தது. இருந்தும் தன்னிலை விளக்கம் கொடுக்க எண்ணியவள்,


“நீங்க சந்தோசமா இருக்கனும்னு தான்…” அவனது உக்கிர பார்வையை காண முடியாமல் வாய்மூடிக் கொண்டாள்.


“இத்தனை மாச குடுத்தனத்தில் என்னோட சந்தோசம் எதுன்னு தெளிவா புரிஞ்சு வச்சிருக்கன்னு நினைக்கும் போது மனசு நிறைஞ்சு போகுது. உங்க தியாகத்துக்கு தண்டனிடறேன்…” என எழுந்து நின்று,


“இப்படி ஒரு தியாக செம்மலை பொண்டாட்டியா அடைய பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்கனும்…” என்ற படி தண்டனிட, (கரெக்ட் கரெக்ட்… நீ மெரட்டு மெரட்டு!)


“அத்தான் ப்ளீஸ்… என் இடத்தில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க…” என அவன் கரம் பிடித்து கெஞ்ச,


“உங்க அளவுக்கெல்லாம் என்னால யோசிக்க முடியாது. நானென்னலாம் சராசரி மனுஷன். என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்னு ரொம்ப சுயநலமே யோசிக்கிறவன். நீங்க தியாகத்தின் திருவுரு.


ராணிக்கு மட்டுமில்ல வேறு எவளாவது கையில குழந்தையோட வந்து நான் தான் அப்பான்னு சொன்னாலும் அவளுக்கும் என்னை பங்கு வச்சு கொடுப்பிங்க. இப்படி எத்தனை பேருக்கு என்னை கூறு போடுறதா உத்தேசம்…?” அவன் வேதனை புரிய


‘நான் ஒன்று நினைத்து செய்ய அது வேறு ஒன்றாய் திரிந்து போனதே இதை எப்படி சரி செய்ய…?’ புரியா குழந்தையாய் விழிநீர் பெருக,


“சாரி அத்தான்…” மென் கரங்கள் கொண்டு அவன் கன்னங்கள் தாங்கி கெஞ்ச, பட்டென தட்டிவிட்டான். கணவனை சரிசெய்யும் உபாயமாய் தன் கடைசி ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்தவள், தான் வரைந்த ஓவியத்தை கொண்டு வந்து,


“அத்தான் ப்ளீஸ் உங்க கோபத்தையெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கி வச்சுட்டு இதைக் கொஞ்சம் பாருங்களேன்…” என அவன் முன் நின்று தன் முகம் மறைத்து ஓவியத்தை காட்ட, 

மனைவியை தோளோடு அனைத்து ஒருகையில் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி பெரும் மகிழ்வுடன் நிற்கும் தன்னை ஓவியமாய் கண்டவனுக்கு அவள் சொல்ல வந்த செய்தி விளங்கியது. இருந்தும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு,


“இதுக்கு என்ன அர்த்தம் ஈஸ்வரி?” உணர்ச்சிகள் துடைத்த குரல் என்பதால் அவனது மனநிலையை அவளால் கணிக்க முடியவில்லை. கண்களில் மட்டும் சிறு மின்னல் தோன்றியது போல் தெரிந்தது அதுவும் ஒருநொடி தான். 


“நிஜமாவே புரியலையா அத்தான்?” எச்சில் விழுங்கி கேட்க,


“கர்ப்பமா இருக்கியா ஈஸ்வரி…” என்றவனிடம் பெரும் எதிர்பார்ப்பும் அதற்கு இணையாய் வேதனையும் இருப்பது போல் தோன்ற, 


‘எதிர்பார்ப்பும் மகிழ்வும் இருக்க வேண்டிய இடத்தில் வேதனைக்கு என்ன வேலை..?’ இனம் புரியா பதைப்புடன்,


“ம்…” என்று அவன் முகம் பார்க்க, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சின் மூலம் தன்னை சமன் செய்துகொண்டவன், தனக்கு முன் நின்று கொண்டிருப்பவளை இடையோடு அனைத்து வயிற்றில் முகம் புதைத்து முத்தமிட, பயம் பதைப்பு அத்தனையும் காணாமல் போக தாய்மை உணர்வு பெறுக மலர்ந்த சிரிப்புடன் அலைஅலையாய் விரவியிருக்கும் கணவனின் கேசத்தில் விரல்கள் நுழைத்து விளையாட,


“வாங்க, வாங்க குட்டி பேபி. உங்களுக்காக அப்பா ரொம்ப நாளா காத்துட்டு இருக்கேன்.” என இதழோர சிரிப்புடன் கன்னம் அழுத்தி மகிழ ஒரு வழியாய் குழந்தை என்றதும் கணவனின் கோபம் குறைந்துவிட்டதாய் எண்ணி மனம் துள்ளாட்டம் போட,


“பாப்பாக்கு பிரமாதமான வரவேற்புக் கொடுத்த அப்பா அதை சுமக்கற அம்மாக்கும் கொடுக்க வேண்டியதை கொடுங்க…” என அவனது பாணியில் நெற்றி முட்டி கள்ளப்பார்வை பார்க்க,

“கொடுக்கனும் தான். ஒரு அறைக்கே பொத்துன்னு கீழ விழுந்தியே இப்ப என் குழந்தையை வேற சுமக்கறியேன்னு தான் யோசிக்கிறேன்.” என்றவனிடம் அத்தனை கடுமை.

New
‘ஐயோ! இன்னும் சமாதானம் ஆகலையா…? முன்னைவிட கோபம் கூடியிருக்கும் போலவே… செத்தடி ஜில்லு!’ என தன்னையே நொந்து கொண்டவள், அவனை சமன் செய்யும் வழி தெரியாமல்,


‘மன்னிப்பு கேட்டதுக்குப் பிறகும் என்ன தான் எதிர்பார்க்கிறான்?’ சுயபச்சாதாபம் பெறுக அவன் முகம் பார்த்து,


“மன்னிச்சுடுங்க அத்தான் எல்லாத்தையும் மறந்துடுங்க… ப்ளீஸ்!” என மன்றாட


“தயவு செஞ்சு வாயை திறக்காத ஈஸ்வரி. என்னை கட்டுப்படுத்திக்கிட்டு ரொம்ப பொறுமையா இருக்கேன். நீ செஞ்சிருக்க காரியத்துக்கு உன்னையெல்லாம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாது. இருந்தும் மனசு கேக்காம தான் என்னை வருத்திக்கிட்டு உன்னோட இருக்கேன்.” அவன் முடிப்பதற்குள்ளாகவே பொங்கிக் கொண்டு வந்துவிட்டது அவளுக்கு,


“நானும் தான் பொறுமையா கெஞ்சிக்கிட்டு இருக்கேன் அத்தான். என்னை பார்க்கவே கூடாதுங்கிற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். நானும் உங்க சந்தோஷத்துக்காக தான் பண்ணேன்னு சொல்றேன் அதைக் கொஞ்சமும் நினைக்காம நீங்க பிடிச்ச முயலுக்கு மூனே காலுன்னு திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”


“ஈஸ்வரி!” இவ்வளவு நேரமும் இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறக்க அவளை நோக்கி உயர்ந்த கையை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தாலும் அடங்கா கோபத்தின் வெளிப்பாடாய் அவள் தா தாடையை இறுகப்பற்றி,


“பேசாதடி! உன் வாயை திறந்து என்னை முரடனாக்காத. பொண்ணாடி நீ? மனசுல என்னையும், வயிற்றில் என் குழந்தையையும் சுமந்துக்கிட்டு எப்படி உன்னால போக முடிஞ்சுது? இத்தனை மாசமும் உனக்கு உண்மையா குடும்பம் நடத்தின என்னை அசிங்கப்படுத்திட்ட. 


முதன் முதலா உனக்கு ராணியை பத்தி தெரிய வரும் போதே எல்லா உண்மையையும் சொல்லிட்டேன் இருந்தும் நீ என்னை நம்பலன்னு நினைக்கும் போது இப்படி ஒரு அடி முட்டாள்கிட்ட மனசை பறிகொடுத்திருக்கேன்னு வருத்தமா இருக்கு.


என் பிள்ளையை சுமக்கிறன்னு தெரிஞ்சுக்கிட்டே என்னை விட்டு போக நினைச்ச உன்னை என்னால மன்னிக்க முடியாது” பட்டாசாய் பொரிந்துவிட்டே அவள் தாடையில் இருந்து தன் கரம் விடுவித்துக் கொண்டான்.


தனது முரட்டு தனத்தில் கன்றி சிவந்திருந்த கன்னக்கதுப்புகளும் தாடையும் அவளது வேதனை சொன்னாலும் அதை இம்மியும் வெளிப்படுத்தாத மனைவியிடம் இரக்கம் சுரக்க, தன் மானங்கெட்ட மனதின் மீதே கோபம் வர முகம் திரும்பியபடி வெளியே சென்றுவிட்டான்.

அவளோ செய்வதறியாது கடைசி ஆயுதமும் பயனற்றுப் போக கணவனின் மனம் மாற்றும் உபாயம் யாதெனத் தெரியாமல் கட்டிலில் சுருண்டுவிட்டாள்.

தோழமைகளே… கதையின் இறுதிப் பகுதிக்கு நாளை வரை காத்திருங்கள்.

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!