OVS – FINAL
வெகு நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வர, தங்கள் அறை இருள் சூழ்ந்திருந்தது. கூடத்திலோ சமையல் கட்டிலோ மனைவியை காணாததால் மீண்டும் எங்கேனும் சென்றுவிட்டாளோ என்னும் சந்தேகம் தலை தூக்க,
“ஈஸ்வரி…ஈஸ்வரி…!” என அழைக்க
“ரூம்ல தான் இருக்கேன் அத்தான்!” பதட்டமான குரல் கேட்டு விரைந்தவன்,
“இருட்ல என்ன பண்ற…?” அதட்டியபடி விளக்கைப் போட வியர்வைத் துளிகள் அரும்ப மருண்ட விழிகளுடன் அமர்ந்திருந்தவளை கண்டு,
“என்னாச்சு ஈஸ்வரி..?” அருகே அமர்ந்து ஆதரவாய் தலை கோதி தன் கைக்குட்டை கொண்டு முகம் துடைத்து விட
“ஒன்னும் இல்ல அத்தான். சும்மா தான் இருட்ல இருந்து பழக…” அவள் முடிப்பதற்குள்ளாகவே
“லூசாடி நீ? இப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு இருட்டு பழகணும்?” என சிடுசிடுக்க அடங்கியிருந்த சினம் மீண்டும் கொப்பளித்தது.
“இல்ல… லைட் வெளிச்சம் பாப்பாக்கு கஷ்டமா இருக்கும்ல… நீங்க கூட சொன்னீங்களே கண் கூசும்ன்னு… அதான் பாப்பா வரதுக்குள்ள இருட்டுக்கு பழகிடலாம்னு நினைச்சேன். நீங்க முன்ன சொன்ன மாதிரி தினமும் கொஞ்ச நேரம் இப்படி…” பரிதாபமாய் சொல்ல,
குழந்தைக்காக தனது nyctophobia வில் இருந்து மீள வேண்டும் என நினைக்கும் தன் செல்ல பொம்மியின் மீது காதல் பெருக, வந்த கோபம் நிற்கவா போகவா என அனுமதி கேட்க ஆழ்ந்த மூச்சின் மூலம் தன்னை சமன் செய்துகொண்டவன்,
“ஈஸ்வரி… ஈஸ்வரி…! ஆரம்பத்தில் இருந்தே பழகிட்டா பாப்பாக்கு கஷ்டமா இருக்காது. அதுக்காகவெல்லாம் நீ இந்த வேண்டாத வேலையை பார்க்காத” அழுத்தமாகவே சொன்னான்.
“இல்லத்தான் பழகிடுவேன். பாருங்களேன்… அன்னைக்கு மாதிரி அழுது கூப்பாடு போடல… மூச்சு திணறல, மயக்கம் வரல, லேசா படபடன்னு இருக்கு. கொஞ்சமா வேர்க்குது அவ்வளவுதான்.” என விளக்கம் வைக்க தன்னவளை இழுத்து அனைத்து முத்தமிட துடித்த மனதை வெகு சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து,
“சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு முடிவோட இருக்க. நடத்து நடத்து…” இதற்கு மேல் இங்கு இருந்தால் கட்டுப்பாடு காணாமல் போய்விடும் என்னும் பயம் உண்டாக விலகி தன் போக்கில் அவளது ஓவியத்தை கிஃப்ட் ராப் செய்து அன்னையிடம் எடுத்துச் சென்றான்.
“அம்மா, இதை ஈஸ்வரி உங்களுக்குன்னு சிறப்பா வரைஞ்சிருக்கா, பிரிச்சுப் பாருங்க…!” என இதழ்களில் புன்னகை ஏந்தி, அன்னையின் மனநிலை அறிய காத்திருந்தான்.
“உன் படத்தையே என்கிட்டே தானே முதல்ல காட்டுச்சு. இதை ஏன் உங்கிட்ட கொடுத்து விட்டுருக்கு…?!” எனும் ஆராய்ச்சியுடன் மகனின் கையில் இருந்து வாங்கிக் கொள்ள,
“தெரியலம்மா, அவளே கொடுக்க ரொம்ப வெட்கப்படுறா” என்றவனின் முகத்தில் பெரும் மகிழ்வும், கூடுதல் பொறுப்பும், பெருமிதமும், இத்தனை நாள் அடுத்தவர் அறியாமல் ரகசியமாய் படித்த பாடம் இன்று அம்பலமானதில் கொஞ்சமே கொஞ்சமாய் கூச்சமும் விரவியிருக்க…
“வெட்கமா…?!” என விழி விரித்தவருக்கு மகனின் கலவையான உணர்வுகளை ஏந்திய முகம் நல்ல செய்தியை காட்டிக்கொடுக்க, வேகவேகமாகப் பிரிக்க, மகனின் வார்ப்பாய் அவன் கையில் இருக்கும் பிஞ்சைப் பார்த்ததும் ஐயம் திரிபுர அனைத்தும் விளங்க,
“என் சாமி…! ரொம்ப சந்தோஷமய்யா!” என மகனின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்,
“சுமதியும், மாப்பிள்ளையும் தள்ளிப் போட்டிருக்க மாதிரி நீங்களும் மனசுல ஏதும் வச்சிருக்கீங்களோன்னு நினைச்சேன், நான் ஒரு கூறு கெட்டவ!” என தன்னையே நொந்துகொண்டாலும், ராணியின் பொறாமையும், வயிற்றெரிச்சலும் கூட பிள்ளை உண்டாவது தள்ளிப் போக காரணமாக இருக்குமோ என்னும் தனது இத்தனை நாள் கவலைக்கு முற்றுப் புள்ளி வைத்து மருமகளிடம் சென்று,
“ஆத்தா…!” என மகிழ்வுடன் வந்தவரை அணைத்துக் கொண்டாள்.
“என் குலம் தழைக்க வச்ச ராசாத்தி! நல்லபடியா பிள்ளையை பெத்தெடுக்கனும்…!” என மருமகளின் நெற்றியில் முத்தமிட, இதையெல்லாம் கணவனிடம் எதிர்பார்த்து ஏமாந்த வலி கண்களில் குளம் கட்ட,
“ஏன் ஆத்தா கண் கலங்குற? உன் அம்மா நினைப்பு வந்துருச்சா? அவுக வரும் போது வரட்டும். தாய்க்கு தாயா உன்னை பார்த்துக்க நான் இருக்கேன், கலங்கக்கூடாது. நல்ல சேதி சொல்லியிருக்கீங்க. உனக்கு என்ன இனிப்பு பிடிக்கும்ன்னு சொல்லு. செஞ்சு தரேன்” என முகம் தாங்க,
கணவனை சரிகட்டும் விதமாய் அவனுக்கு மிகவும் பிடித்த பால் கேசரி வேண்டும் என்றாள். அவளுக்கு பிடிக்காத ஒன்றை தனக்காகவே கேட்கிறாள் என்பது புரிய,
“இதில் ஒன்னும் குறையில்ல…” எனும் முணுமுணுப்புடன்,
“கற்கண்டுவடை பண்ணுங்கம்மா, விருப்பமா சாப்பிடுவா!” என்றான்.
“ஆமா, அன்பு வீட்ல கூட புள்ளை ஆசையா சாப்பிடுச்சு” என்றபடி அடுக்களை நோக்கி விரைய, அவரைப் பின்தொடர எத்தனித்தவனை பின்னின்று அணைத்து முதுகில் முகம் அழுத்தி,
“சாரி அத்தான்!” எனக் குழைய, அவள் உதடுகள் நடத்திய நாடகத்தில் கிளர்ந்த உள்ளத்தை கட்டுப்படுத்தி அவள் கரத்தை விலக்கிவிட்டவன் சிறு முறைப்புடன் சென்றுவிட்டான். (என்ன லுக்கு…?! முறைக்குற மாதிரியே சைட் அடிக்கிறதெல்லாம் எங்களுக்கும் தெரியும் தம்பி!)
“போடா வில்லேஜ் விருமாண்டி! ரொம்பத் தான் பண்ற…!” என முகம் திருப்பிக் கொண்டாலும் அதை இழுத்துப் பிடிக்க முடியாமல் தூங்கும் நேரத்தில் கணவனின் சதி கலவரப்படுத்த,
“இப்போ எதுக்கு குறுக்க தலையணையை வைக்குறீங்க அத்தான்?” சுள்ளென கேட்க,
“இதை தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வராத…” என்றபடி படுக்க, (கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோட்டைக் கிழிடி மொமென்ட்! விசு காலத்துல வீட்டுக்கு நடுவுல கிழிச்சாங்க, நீங்க கட்டிலுக்கு நடுவுல…. இந்த ஐடியாவெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ)
“ஆமா, இது பெரிய சீனப் பெருஞ்சுவர்… இதைத் தாண்டி வரக்கூடாது. ரொம்ப பண்ணாதீங்க அத்தான்” என கடுப்படிக்க,
“சைனாவுக்கு போயிருந்தா இந்நேரம் தலையணையைத் தானே கட்டிப்பிடிச்சுக்கிட்டு படுத்திருப்ப!? இப்படியே தூங்கு”
“அதான் போகலையே”
“நான் வந்ததால போகல… இல்லைன்னா போயிருப்ப தானே… திருட்டுத்தனமா!” என அழுத்தம் கொடுத்து சொன்னவன் முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
‘நியாயம் தான், இவன் வரலைன்னா போயிருப்போம் தான்!’ என்பதால் அவனிடம் மறுத்துப் பேச முடியாமல் அமைதியாகப் படுத்துவிட்டாலும் தூக்கம் தான் வந்து தொலைக்காமல் சதி செய்தது கணவனைப் போலவே. இருபது நிமிடங்களுக்கு மேலாகிவிட்டதால் நிச்சயம் தூங்கியிருப்பான் எனும் நினைவில்,
“எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் ஒய்யாரமாய் படுக்கை ஒரு கேடா உனக்கு?” என மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி தலையணையை தூக்கி வீச, அது ட்ரெஸிங் டேபிளின் அருகே போய் விழுந்தது. இப்பொழுது நிம்மதியாய் படுத்தவளுக்கு சந்தேகம் கிளம்பியது.
‘காலையில் எழுந்து இது எப்படி அங்க போச்சுன்னு கேட்டா என்ன பதில் சொல்றது மக்கு?’ என மனம் கை கொட்டி சிரிக்க,
“லூசு, லூசு!’ என தன்னையே கடிந்து கொண்டவள், மீண்டும் அதை எடுத்து வந்து கால் வைக்கும் இடத்தில் போட்டு,
“ரெண்டு பேருக்கும் குறுக்க வந்த… கொன்னுடுவேன்!” எனும் மிரட்டலுடன் தன் குட்டி பாதங்களை வைத்து நச்சென ஒரு மிதி கொடுத்து, (ராணியை விட்டுடு… தலையனையை திட்டு!)
“கடவுளே, என் தொடுகையை அத்தான் உணரவே கூடாது!” என வேண்டிக்கொண்டு பட்டும் படாமலும் தன்னவனை நெருங்கிப் படுத்து, மென்கரம் கொண்டு அவன் இடை தழுவ, இவ்வளவு நேரமும் இவளது சேட்டைகளையெல்லாம் சிறு சிரிப்புடன் கண்ணாடியின் வழி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது வேண்டுதலை பயனற்றதாக்க மனம் வராமல், அமைதி காத்தான்.
கண்ணாளனை கட்டிப்பிடித்த கணநேரத்தில் கண்ணயர்ந்து விட்டவளின் தூக்கம் கலையாதவாறு மெல்ல அவள் புறம் திரும்பி,
“பொம்மை, நான் வேண்டாம்னு விட்டுட்டு கிளம்பினேல்ல, உனக்கு என் இருப்பை உணர்த்தியே ஆகனும். அத்தான் இல்லாம அரை மணி நேரம் கூட உன்னால இருக்க முடியாதுன்னு நீ உணரனும். என்ன தைரியத்தில் கிளம்பினோம்ன்னு யோசிக்கனும், நான் வர்றதுக்குள்ள பிளேன் ஏறியிருந்தா அங்க உன் நிலை என்னங்கிறதை புரிய வைக்கிறேன். அதுக்காக தான் இந்த விலகல்.
இனி கனவுல கூட என்னை விட்டுப் போகனும்னு நினைக்கக் கூடாது. ஒருவேளை நீ போயிருந்தா அப்படியே விட்டிருக்கமாட்டேன். அங்கேயே வந்து நாலு அறைவிட்டு கூட்டி வந்திருப்பேன்கிறது வேற விஷயம்.
விசா ப்ராசஸ் எல்லாம் முடிஞ்சு வர பத்து பதினஞ்சு நாட்கள் ஆகாது. அதுவரை எத்தனை தவிப்பும், கஷ்டமுமா இருந்திருப்போம். அதை நீ உணர்ற வரை உன் மன்னிப்பை ஏற்கப் போறதில்லை!” என காட்டமாகச் சொன்னாலும் கரங்களென்னவோ அவளை இறுக அணைத்து விடுவித்தன.
“என் பொம்மை அம்மா ஆகப்போகுதுன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருந்தாலும், வலி தாங்குவியான்னு பயமாவும் இருக்கு” என நெற்றியில் இதழ் ஒற்றி மார்போடு அணைத்துக் கொண்டு,
“என்னை தீண்டாம தூங்க முடியல, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை? அவ கதை சொன்னாளாம்… இவ வாழ்க வளமுடன்னு கிளம்பிட்டாளாம்… இருடீ! எல்லாத்தையும் உணர வைக்கிறேன்” என வலிக்காமல் கன்னம் கிள்ளி சிரித்தான்.
ஐயோ பாவம் ஆண்டவன் வரத்தை மாற்றிக் கொடுத்துவிட்டான் போல, அத்தானின் தொடுகையை அவள் தான் உணரவேயில்லை.
காலையில் வழக்கத்திற்கு மாறாய் கணவன் எழுப்புவதற்கு முன் எழுந்தவள் அவன் குளிக்கிறான் என்பதை கண்டு கொண்டு வேக வேகமாய் டிரசிங் டேபிள் கண்ணாடியில் தன் லிப்ஸ்டிக் கொண்டு டொய் பு ச்சி (dui bu qi) அதாவது சாரி என எழுதி உதடு மடித்து அழும் முகம் வரைந்து விட்டு ஓடிப் போய் படுக்கையில் பதுங்கி போர்வை கொண்டு உச்சி முதல் பாதம் வரை இழுத்துப் போர்த்திக் தூங்குவது போல் பாசாங்கு செய்ய,
குளித்து முடித்து வந்தவன் தன் போக்கில் உடை மாற்றி அலுவலகம் கிளம்பி, அதே கண்ணாடியின் முன் நின்று அடங்கா கேசத்தை படிய வார, இவளோ மெல்ல போர்வையை விலக்கி பார்க்கிறானா இல்லையா என நோட்டம் விட, தன் திருட்டு பூனையை கண்ணாடியின் வழி அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அது தெரியாமல்,
‘அத்தானுக்கு அர்த்தம் தெரியல போல… லூசு, சாரின்னே எழுதி தொலைச்சிருக்கலாம். உன்னை யார் சைனீஸ்ல எழுதச் சொல்றது? இதுல அழுமூஞ்சி பாப்பா வேற… அடக் கொடுமையே! ஒருவேளை இவன் பார்க்கவேயில்லையோ…? இருக்கலாம் ஆறடி உயர படமே இவன் கண்ணனுக்கு தெரியல நீ தம்மாத்துண்டு எழுதி வச்சுட்டு வந்திருக்க, எப்படி தெரியும்?’ என தன்னையே நொந்து கொண்டது தான் மிச்சம். (அவன் தெரிஞ்சாலும் தெரியலன்னு தானே சொல்லுவான்)
‘எப்பொழுதும் கிளம்புவதற்கு முன் எழுப்புவானே இன்னிக்கு என்ன பண்றான்னு பார்ப்போம்’ என மீண்டும் நாடகத்தை தொடர,
“குட் மார்னிங் குட்டி பேபி. அப்பா ஆஃபீஸ் கிளம்பிட்டேன். நல்லா ரெஸ்ட் எடுங்க பைடா!” என்றதும்
‘எனக்கு குட் மார்னிங் இல்ல… என்னை எழுப்பவே இல்லை… பிள்ளைக்கு தான் எல்லாமே…’ ஏங்கியவளுக்கு அழுகை வந்துவிடும் போல் இருந்தது. பட்டென அவளது போர்வையை விலக்க எதிர்பாராத நிகழ்வால் அதிர்ந்து விழித்தவளைக் கண்டு,
“எவ்வளவு நேரத்துக்கு தான் முகத்தை மூடிக்கிட்டு இருப்ப மூச்சு திணறப் போகுது” என்றதும்
“நீங்க ஏன் என்னை எழுப்பல…?” என முறைக்க
“ஏற்கனவே முழிச்சு இருப்பவளை எதுக்கு எழுப்பனும்? அதோட இந்நேரம் சைனா போயிருந்தா இது தானே நிகழ்ந்திருக்கும்!” என தோள்களை குலுக்கியபடி சென்றுவிட்டான். (என்ன நீ… சந்தைக்கு போகனும், ஆத்தா வையும் காசு கொடு மாதிரி சீனா போயிருந்தான்னு…சொன்னதே திரும்பத் திரும்ப சொல்ற!)
‘உண்மை, உண்மை… மறுக்க முடியாத உண்மை தான். கடவுளே, இப்படி அவஸ்தைபடுறதுக்கு சைனாக்கே போயிருக்கலாம். நேரில் வந்து கன்னத்தில் படம் வரைந்ததோடு கூட்டி வந்திருப்பான். அதோடு எல்லாம் முடிவுக்கு வந்திருக்கும்’ திக்கு தெரியாமல் வெகு நேரம் அமர்ந்திருந்தவள்,
‘இப்படியே முடங்கிக் கிடக்காமல் சாண எரிவாயு கூடத்தின் திறப்பு விழா ஏற்பாடெல்லாம் எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு வருவோம்…’ என கிளம்பிவிட்டாள்.
ஆம், அவர்கள் திட்டமிட்டபடி அனைத்து செயல்களும் ஒவ்வொன்றாய் வெற்றி பெற சிறந்த சுகாதார வசதி, தூய்மையான சுற்றுப்புற சூழல், குடி நீர், சோலார் தெருவிளக்கு, பள்ளம் படுகுழி இல்லாத பிளாஸ்டிக் துகள் கலந்த சாலை, பெண்களுக்கு வேலை வாய்ப்பு எல்லாம் சிறந்த முறையில் அமைய கடைசியாய் சாண எரிவாயுக் கூடமும் தயாராகிவிட்டது.
அதன் திறப்பு விழாவிற்கு அந்த தொகுதியின் MLA சிறப்பு விருந்தினராக வர இருப்பதால் ஏற்பாடுகள் எல்லாம் பாதுகாப்பாகவும், பலமானதாகவும் இருந்தன. அதை பார்வையிட்டபடி பெரியண்ணனிடம்,
“பெரியப்பா… சிறப்பு விருந்தினர், தலைமை ஏற்பவர் எல்லோருக்கும் நினைவு பரிசு, மாலை எல்லாம் வாங்கணும். நாளைக்கு அத்தானோட போயிட்டு வந்துடுங்க” என நினைவுப்படுத்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
“ஏன் ஆத்தா வயிற்றுப் பிள்ளைக் காரி வேகாத வெயில்ல அலையிற…” என கரிசனமாய் மோர் கொண்டு வந்து கொடுத்த குணவதி,
“போதும் பொறுப்பை பாண்டிகிட்ட கொடுத்துட்டு நீ ஓய்வா இரு” என்றதும் மறுப்பின்றி ஆமோதிப்பாய் தலையை ஆட்டி வைத்தவளுக்கு அத்தை சொன்னது போல் அயர்ந்து போய் தான் வந்தது. படுத்தால் தூங்கிவிடக் கூடும் கணவனுக்கு உணவு பரிமாற முடியாமல் போய்விடும் என அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
கணவனைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக்கொள்ள முடியாமல் தலை சுற்றுவது போல் தோன்ற நிதானமாய் அவனருகே வர அதற்குள் கைகழுவிவிட்டு உணவு மேசையில் அமர்ந்துவிட்டிருந்தான்.
“சாரி…” என்னும் வார்த்தையை தாங்கி இருக்கும் தன் உள்ளங்கையை அவன் முன் நீட்ட,
‘உன் சாரியை நீயே வச்சுக்கோ எனக்கு சாதத்தை போடு போதும்.” என்றான் கண்ணோர சிரிப்புடன் (சாதத்தை தட்டுல போட்டு, அவன் தலையில… ச்சு அது தலையில சாம்பாரை ஊத்து!). அதை கவனிக்காதவள்,
“இன்னும் என்ன தான் எதிர்பார்க்கறீங்க அத்தான்? இதுக்கு மேல எப்படி சாரி சொல்றதுன்னு எனக்கு தெரியல…” என் கண்களில் குளம் கட்ட உணவு பரிமாற,
“இப்போ சாப்பிடவா வேண்டாமா?” வெடுக்கென கேட்க கன்னம் தொட்ட விழி நீர் துடைத்து இயல்பாகவே பரிமாறினாள். மனைவி அழுதது தாங்காமல்,
“நான் உன்னை சாரி சொல்லச் சொன்னேனா ஈஸ்வரி…? இந்நேரம் சைனால இருந்திருந்தா இப்படி தானே ரெண்டு பேரும் விலகி இருந்திருக்கனும்… அப்படியே நினைச்சுக்கோ நமக்கு நடுவுல விரிசல் விழுந்தாச்சு. அது அப்படியே இருக்கட்டும் சரி பண்றேன்னு இன்னும் அதிகப்படுத்தாத.” என்றதும் கையில் இருந்த கரண்டியால் அவன் தலையில் ஓங்கி ஒன்று வைக்க வேண்டும் போல் வந்த கோபத்தை அடக்கி,
“சும்மா அதையே சொல்லாதீங்க அத்தான். நீங்க வேணும்னு தான் திரும்பி வந்தேன்னும் யோசிங்க. தப்பு தான்! உங்கள விட்டுப் போனது தப்பு தான். அதுக்காக மன்னிப்பும் கேட்டுட்டேன். என் பக்கத்துக்கு நியாயத்தையும் எடுத்து சொல்லிட்டேன். இன்னும் அதையே பிடிச்சுக்கிட்டு தொங்கினா எப்படி? இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீ ங்க திரும்பவும் சைனாவுக்கே போய்டுவேன்.” என்றதும் அவனுக்கு பொங்கிக் கொண்டு வந்துவிட்டது.
“நீ திருந்தவே மாட்ட. போ, இப்பவே கிளம்பி போ… உனக்காக இங்க யாரும் ஏங்கி நிற்கல.” என பாதி சாப்பாடோடு எழுந்து விட்டான். (ஏங்கி நிக்கலன்னா… ஏங்கி ஏங்கி நிக்கிறேன்னு தான் அர்த்தம். பிலீவ் மீ! நாங்க பாக்காத சண்டையா, செய்யாத சமாதானமா… இதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பா!) அவ்வளவு தான் கோபமெல்லாம் காற்றுப் போன பலூனாய் காணாமல் போக,
“ப்ளீஸ், அத்தான் சாப்பிடாம போகாதீங்க… நீங்க என்னை விட்டு விலகி விலகி போறதை ஏற்க முடியாம தான் சண்டை போட்டுட்டேன். மன்னிச்சுடுங்க. ப்ளீஸ்… நாம இப்படியே இருப்போம். சாப்பிடுங்க அத்தான்.” கரம் பிடித்துக் கெஞ்ச போகவும் மனம் வராமல் மனைவியின் மன்றாடலை தவிர்க்கவும் முடியாமல் மீண்டும் அமர்ந்துவிட்டான்.
இரண்டு கவளங்களை விழுங்கியவன் பரிதாபமாய் பார்த்தபடி நிற்பவளை இழுத்து மடிமீது அமர்த்திக் கொண்டு உணவை ஊட்ட,
“தேங்க்ஸ் அத்தான்…” அழுகையும், கண்ணீருமாய் வாங்கிக் கொண்டவளுக்கு நல்ல பசி போலும் அனைத்தையும் உண்டு முடித்துவிட மீண்டும் தானே பரிமாறி தன்னவளுக்கு ஊட்டிவிட்டவன் அலுவலகத்திற்கு கிளம்பாமல் தங்கள் அறைக்குள் போக, இது தான் சமயம் காலில் விழுந்தேனும் சமாதானம் செய்துவிட வேண்டும் என்னும் முடிவுடன் அவளும் வர, கட்டிலில் அமர்ந்தவன் அவள் முகம் பார்த்து முதலிரவில் சொன்னது போல் தன்னருகே தட்டி,
“உட்கார்!” என்றான் நிதானமாய். மறுப்பின்றி அமர்ந்தவள் அறியா பிள்ளையாய் அவன் முகம் பார்க்க
“ஏன் ஈஸ்வரி என்னைவிட்டு போக நினைச்ச?” வெகு நிதானமாய் கேட்டான்.
‘தெரியாம நினைச்சுட்டேன்…’ எண்ணியதை சொல்ல தைரியமற்று
“அதான் சொன்னேனே… நீங்க சந்தோஷமா, நிம்மதியா வாழணும்னு நினைச்சு தான் போனேன்.” மீண்டும் உண்மை சொல்ல
“உனக்கே இது லூசுத் தனமா இல்லையா ஈஸ்வரி…? கண்ணை வித்து யாராவது சித்திரம் வாங்குவாங்களா? நீ என்னோட இல்லைனா எனக்கு ஏதுடி சந்தோஷம்? உன்னை பார்க்காம நான் எப்படி நிம்மதியா இருப்பேன்? என் அன்பும், காதலும் உனக்கு புரியவே இல்லையா?” அத்தனை வேதனை அவனிடம். தனது தவறு புரிய,
“நான் உங்கள இம்ப்ரஸ் பண்றதுக்காக செஞ்ச ஒரு விஷயத்துல கூட நீங்க இம்ப்ரஸ் ஆகலையே!” ரொம்பவும் தயங்கி,
“அது… ராணியை விரும்பினதாலையோன்னு…” அவனது பார்வையின் சங்கதி புரிய பாதியோடு நிறுத்திக் கொண்டாள்.