Pidi Kaadu_18

Pidi Kaadu_18

பிடி காடு – 18

நிம்மதி. பல நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கும் உணர்வு. இன்று நிச்சயம் உறங்கலாம். வீட்டிற்கு செல்ல நினைத்தவள் “ஒரு நிமிசம் இருய்யா. தோ வந்துடுறேன்” என்று அவசரமாக ஓடினாள். செந்தில் வாசலிலேயே நின்றான். 

“இந்தா… என் மொத சம்பாத்தியம்”

“மொத்த காசையும் எங்கிட்டக் குடுக்குற?”

“மொத்தத்தையும் குடுத்தாலும் எத்தன நாள்ல முடியுமோ தெரில. ஒங்கடன அடச்சுப்புடணும். புடி”

“வியாபாரம் பண்ணுற எல்லாரும் சொந்தக் காசுல பண்ணுறவங்க இல்ல. முக்காவாசிக் கடன் வாங்கி மொதல் போட்டவங்கதா. அதுக்காகக் கடனப் பத்தி மட்டும் யோசிச்சா கையில இருக்க சாமான் எல்லாம் தீந்ததும் திரும்ப வாங்கணுமே… அதுக்கு எங்கப் போவ?”

“ஆமா… ம்ம்ச்ச்… மறுபடியும் கடனா?”

அவள் நீட்டிய கட்டிலிருந்து சில தாள்களை உருவினான்.

“தெனம் எனக்குக் கொஞ்சம் குடு. கணக்கு வெச்சுக்கோ. மீதிய ஒன் செலவுக்கு எடுத்து வை. கடைக்குன்னு மட்டுமில்ல. ஒனக்கு ஒன் பையனுக்கு… நா ஒண்ணும் ஒன் கழுத்துல கத்தி வெச்சு வட்டிக் கேக்கலல்ல? பொழப்பப் பாரு மொதல்ல”

“இதும் நல்லாதா இருக்கு”

“வட்டி இல்லாத கடனா?”

“இல்ல… முன்னல்லாம் நீ வாயே தொறக்க மாட்ட. எரிஞ்சு வுழுவ. என்ன கோவப்பட்டாலும் நீ எம்மேல அக்கற காட்டுறதால கஷ்டமா இருக்காது. இப்போல்லாம் நெறைய பேசுற”

“ஒன்ன மாதிரி வாயாடிக் கூடல்லாம் சேந்தா இப்டிதா”

“நா ஒண்ணும் வாயாடி இல்ல”

“அப்டின்னு நீதா சொல்லிக்கணும். தூங்குப் போ. சும்மா தொனதொனன்னுக்கிட்டு…”

“இவ்ளோ நேரம் நீயும்தான கூட சேந்து பேசுன?”

“காலையில எந்திரிச்சு சமைக்க வேணாமா? எவ்ளோ வேலையிருக்கு…”

“ஒரு ஈடு இட்லி ஊத்தி எடுத்துட்டுப் போறேன். மிச்சத்த அங்க போயி ஊத்திக்குறேன். சாதம் மட்டும் வடிச்சு எடுத்துக்குறேன். காலையிலக் கூட்டம் கொறஞ்சதும் கலந்த சாதம் பண்ணிக்குறேன்”

“ஒனக்கு எது சௌரியப்படுதோ செய்”

அதிகாலை எழுவதும், செந்தில் வீட்டில் சமைப்பதும், மகனை அவனிடமே விட்டுச் செல்வதும் அடுத்த ஒரு வாரத்தில் வாடிக்கையாகிப் போனது. ஓரிரு நாட்கள் அவள் கிளம்பும்போது மகனை அணைத்தபடியோ தன் மீது கிடத்தியபடியோ உறங்குபவனை எழுப்ப மனம் வராமல் வீட்டின் கதவை வெறுமனே மூடிச் சென்றிருக்கிறாள்.

செந்தில் வேலைக்குச் செல்லும்போது ராஜாவை சேகர் வீட்டில் விட்டுச் செல்வதாக ஏற்பாடு. மாலை நான்கு மணிக்கெல்லாம் ரத்தினம் ராஜாவை கௌரியின் வீட்டில் வந்து ஒப்படைத்துவிடுவார். ஒருமுறை கூட அவளை அலைய விடக் கூடாதென்பது அவர்களது எண்ணம்.

தானே வந்து மகனை அழைத்துச் செல்வதாக சொல்லிப் பார்த்தாள். யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. கௌரிக்கு மகிழ்ச்சியே. கொஞ்சம் சங்கடமும்.

தலைக்கு மேல் சுள்ளென்றடித்த வெயில் உச்சி வேளை பொழுதை அறிவித்து கொண்டிருந்தது. கௌரி சாதத்தில் தயிராய் ஊற்றிக் கிளறிக் கொண்டிருந்தாள்.

“யாரு கடப்பா இது? ஏம்மா நீ யாரும்மா?”

“யாருங்க?”

“கட யாருது?”

“என்னுதுதா”

“இங்க யாரு கடப் போடுறதுக்கு பெர்மிஷன் குடுத்தது?”

“நீங்க யாருங்க?”

“இங்கல்லாம் கடப் போடக்கூடாதும்மா. மொதல்ல கெளம்பு”

“அத சொல்ல நீங்க யாருங்க?”

“ஏய்… கெளம்புன்னு சொல்லுறேன்… கெளம்பு. எங்கைய்யாகிட்டக் கேக்காம இந்த எடத்துலக் கடையெல்லாம் போட முடியாது. எடத்த காலிப் பண்ணு”

காத்தினான். காட்டுக் கத்தலாகக் கத்தினான். சுற்றி நின்ற சிலர் வேடிக்கைப் பார்த்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. பேச்சோடு மட்டும் நில்லாமல் பத்திரம் கழுவ வைத்திருந்த அண்டா தண்ணீரை சரித்துவிட்டான்.

கௌரி மிரண்டு போனாள். சாப்பிட வருபவர்களில் சிலர் கோபமாக பேசுவதுண்டு. அவர்களையெல்லாம் எப்படிச் சமாளிப்பதென்று தெரிந்து வைத்திருந்தாள். இது அப்படியல்ல என்று உள்ளுணர்வு சொன்னது.

அங்கே நின்றால் உதவ யாரும் வரப் போவதில்லை. தண்ணீரைக் கொட்டியது போல் உணவில் கை வைக்கும் முன் அவன் சொன்னபடி இடத்தை காலி செய்வது நலம். வேகமாக எல்லாவற்றையும் வண்டியில் அடுக்கி அவனைத் திரும்பியும் பாராமல் நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் சென்ற பின்னும் வேகமாகத் துடிக்கும் இதயத்தின் ஓசை காதில் விழுந்து கொண்டேயிருக்க ரோட்டோரம் தள்ளுவண்டியை நிறுத்தி இடுப்பில் சொருகியிருந்த கைபேசியை எடுத்தாள். எப்படி அழைக்க வேண்டுமென்று செந்தில் சொல்லிக் கொடுத்திருந்தான். இதுவரை அவனுக்கு அழைத்துப் பேசும் அவசியம் வந்ததில்லை.

எண்களை அழுத்த முடியாமல் கைகள் நடுங்கின. ஆழ மூச்செடுத்து நிதானிக்க முயன்றாள். நடுக்கம் சற்று மட்டுப்பட்டது. அவன் குரல் கேட்கும் வரை கண்ணீருக்குப் பொறுமையில்லை. கன்னங்களில் வழிந்து கழுத்தில் இறங்கியது.

“ஹலோ”

“நாந்தான்யா… இங்க… கடைய… நா வீட்டுக்குப் போறேன். சத்தம் போட்டு…”

“கௌரி… என்ன பேசுற? என்னாச்சு? மொதல்ல ரெண்டு நிமிஷம் அமைதியா இரு. எதுக்கு இவ்ளோ பதட்டமா பேசுற?”

“வந்து… மத்தியான சாப்பாட்டுக்கு எல்லாம் எடுத்து வெச்சிட்டிருந்தேன். யாரோ ஒரு ஆள் வந்து இங்க கடப் போட கூடாதுன்னு சத்தம் போட்டு… தண்ணியெல்லாம் கொட்டி விட்டான்யா. எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. பயந்துட்டேன். வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்”

“யாரு அவன்? என்ன கத்துனான்? சரி நீ வீட்டுக்கே போ. நா சிக்னல்ல இருக்கேன். இப்போ பேச முடியாது. சீக்கிரம் வரப் பாக்குறேன். பத்திரமாப் போயிடுவியா?”

“ம்ம்”

“வெக்கவா?”

“போயிப் புள்ளையத் தூக்கிட்டு வந்துடவா?”

“ஒனக்கு சேகரண்ணன் வீடே தெரியாது. மொத நாள்லேந்து நாந்தானக் கொண்டு போயி விட்டிட்ருக்கேன்… அப்பறம் எப்படி போவ? எப்பயும் போல சாயந்தரம் அவங்க வீட்டுலேந்து கொண்டு வந்து விடுவாங்க. நீ ஒழுங்காப் போய் சேரு. பத்திரமாப் போயிடுவல்ல?”

“பாதி தூரம் வந்துட்டேன். போயிடுவேன்”

“ரோட்ட பாத்து நட. எதையாவது யோசிச்சுட்டே போவாத. சிக்னல் விழுந்துடுச்சு”

“சரி நீ பாத்துப் போ”

கைபேசியை இடுப்பில் சொருகினாள். சுற்றிப் பார்த்தாள். சாலையைக் கவனித்தாள். மெல்ல நடக்க துவங்கினாள். இதயத் துடிப்புச் சீராகியிருந்தது.

பூட்டியிருந்த கேட்டை திறந்துத் தள்ளுவண்டியை உள்ளே நிறுத்தி அதிலிருந்த சாமானையெல்லாம் இறக்கினாள். இரண்டு வீட்டு சாவியும் கையில் இருந்தன. செந்தில் வீட்டைத் திறந்து எல்லாவற்றையும் உள்ளே எடுத்து வைத்தாள்.

குளியலறைக்குள் சென்று முகம் கழுவினாள். சுருட்டி வைத்திருந்த அவனது பாயை எடுத்து விரித்து கைகளை தலைக்கடியில் வைத்துப் படுத்தாள்.

இங்கு வந்ததிலிருந்து தினமும் அவன் வீட்டிற்கு வருகிறாள். இந்த ஒரு வாரமாக காலையில் மகனை அவனருகில் கிடைத்த அவன் அறைக்குள் சென்றிருக்கிறாள். முன்பும் சென்றதுண்டு. ஒருநாளும் அறைக்குள் இருக்கும் குளியலறைக்குச் சென்றதில்லை. ஐந்து நிமிடங்களுக்கு மேல் அந்த அறையில் நின்றதுமில்லை.

“கௌரி…”

செந்திலின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது.

“கௌரி…”

வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

“மெதுவா… போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குற? என்னன்னு நெனைக்குறது? கதவத் தொறந்து வெச்சுட்டே தூங்குற? மணி ஆறாச்சு”

அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்து அறையின் விளக்கைப் போட்டான். கண்கள் கூசின. பரபரவென்று முகத்தைத் தேய்த்து கண்களைக் கசக்கினாள். அவள் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்தான்.

“மத்தியானம் ஏதாவது சாப்டியா?”

மறுப்பாகத் தலையசைத்தாள்.

“நானும் சாப்பிடல. பசிக்குது”

“சாப்பிடலையா? ஏன்யா நீ இப்டியே திங்காமத் திரியுற? இரு… அய்யோ இவ்ளோ நேரமாச்சுன்னா அப்போ ராஜா?”

“இன்னைக்கு சேகரண்ணன் வீட்டுல எங்கயோ கோவிலுக்குப் போறாங்களாம். ராஜாவையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாங்க. ஒனக்கு சொல்லுறதுக்குக் கூப்பிட்டாங்களாம். எங்க? நீதா கும்பக்கரணி மாதிரித் தூங்குறியே…”

“எப்பத் தூங்குனன்னே தெரியலைய்யா. எம்பொழப்புல மண்ணள்ளிப் போட்டுப் போயிட்டான் ஒருத்தன்… ஆனாலும் எனக்கு தூக்கம் வருது பாரேன். நாலாம் என்ன ஜென்மமோ?”

“எனக்கு நெஜமாவே கொலப் பசி. சோறு போடு. அப்பறம் பேசுவோம்”

“மத்தியானத்துக்கு செஞ்சு வெச்ச எல்லாம் அப்படியே இருக்குது. எல்லாம் வீணாப் போவும் தான? சோத்த அள்ளிக் குப்பையிலக் கொட்டுறதா? எப்பாடுப்பட்டு…”

“ரெண்டு நாள்ல பிரிட்ஜு வாங்கிடுவோம். அது இல்லாமக் கஷ்டம். எவ்ளோ சாப்பாடு இருக்குக் காமி… நா சேகரண்ணன்ட சொல்லி யாருக்காவது குடுக்க முடியுமான்னுக் கேட்டுப் பாக்குறேன்”

மீந்திருந்த சாப்பாட்டின் அளவைக் கணக்கிட்டான். சேகரை அழைத்து விவரம் சொன்னான். ஒரு மணி நேரத்தில் அவன் வீட்டில் இருப்பதாய் சொன்னார்.

“சாப்பாடு சூடு பண்ணவா?”

“எனக்கு தயிர் சாதம் போதும். சூடெல்லாம் பண்ண வேணாம். தக்காளி சாதாம் தான் நெறைய இருக்கு. கெட்டுப் போகாது. குளிக்கப் போறேன். நீயும் போயிக் குளிச்சுட்டு வா. சாப்பிடுவோம்”

அவள் வீட்டிற்குச் சென்று குளித்து அவள் திரும்பி வந்தபோது இரண்டு தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான்.

“இருய்யா நா பண்ணுறேன்”

“ஊறுகா எடு”

எடுத்து வந்து நீட்டினாள். அதையும் பரிமாறி ஒரு தட்டி எடுத்து அவளிடம் கொடுத்தான். சாப்பிட்டு முடிக்கும்வரை இருவரும் தலை நிமிரவில்லை.

“யாரு அவன்?”

“தெரியலையே… எடத்த காலி பன்னுன்னான். அய்யாட்ட கேக்காம இங்க கடப் போட கூடாதுன்னான். பரதேசிப் பய… அவன் யாருன்னும் சொல்லல… அவன் ஐய்யா யாருன்னும் சொல்லல”

“எவனோ வந்து சவுண்டு குடுத்தா… பொட்டி சட்டிய தூக்கிட்டு வீட்டுக்குக் கெளம்பி வந்துடுவியா?”

“எவனோ மாதிரித் தெரியல. அப்படி இருந்தா சுத்தி இருக்கவங்கக் கேள்விக் கேட்டிருப்பாங்கல்ல? கொஞ்சம் தள்ளி அந்தக் கொழாயடி பக்கத்துல ஒரு பாட்டி பழக்கடப் போட்டிருப்பாங்களே… எங்கிட்ட கூட நல்லா பேசுவாங்கன்னு சொன்னனே… அவங்ககூட வாயத் தொறக்கலய்யா. அதா பயம் வந்துடுச்சு. அங்க நிக்க வேணாம்னு… தப்புப் பண்ணிட்டனா?”

“இல்ல… நீ ஏதோ தேவையில்லாம பயந்துட்டியோன்னு நெனச்சேன். நீ சொல்லுறதப் பாத்தா… கெளம்பி வந்தது தான் சரி”

“இப்ப என்ன பண்ணுறது?”

ஆட்டோ சத்தம் கேட்டது. செந்தில் வேகமாக எழுந்து வெளியே சென்றான்.

“ரத்தினம்… நீ புள்ளைய தூக்கிட்டு வாசவியும் கூட்டிட்டு உள்ளப் போ. மொதல்ல சாப்பாட்டக் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுவோம் செந்திலு. எடு…”

எந்த சூழ்நிலையிலும் தெளிவாக யோசிக்கும் சேகரை கண்டு செந்தில் வியந்ததுண்டு. இதுவும் அதுபோல ஒரு தருணம். இரண்டு கிலோமீட்டர் சென்று வேறொரு ஆட்டோவில் சாப்பாட்டை வைத்தனர்.

“பாத்திரமெல்லாம் நாளைக்கு வாங்கிக்குறேன் சோமு. நீ கெளம்பு”

வீடு திரும்பும் வழியில் சிறிது தூரம் அமைதியாக வந்தார் சேகர்.

“சாப்பாடு யாருக்குக் குடுத்தீங்க?”

“ஒரு முதியோர் இல்லத்துக்கு செந்திலு… நம்ம திருச்சியில முதியோர் இல்லமெல்லாம் பெருகிப் போச்சுன்னா நம்ப முடியுதா?”

“எல்லா ஊர்லயும் ஆரம்பிக்குறாங்க”

“அத வுடு. ஆள் யாருன்னு எதுனாத் தெரிஞ்சுதா?”

“அவ சொல்லுறத வெச்சு எனக்கு ஒண்ணும் புடிப்படல. நாளைக்கு என்ன பண்ணுறது?”

“அந்தப் புள்ளையத் தனியா அனுப்ப வேணாம். ஒன்னால ஒரு நாள் லீவு எடுக்க முடியுமா?”

“ம்ம்… நானும் கூடப் போறேன்”

“கூட போறதுப் பெருசில்ல. கோவப்படாம விசாரிக்கணும்”

“பாக்கலாம்”

“செந்திலு… அந்தப் பொண்ணுக்குத் தொழில் வெச்சுக் கொடுத்திருக்க. இவ்வளோவும் பண்ணி நாளைக்கு நீ தேவையில்லாத வாய வுட்டன்னா… அந்தப் பொண்ண ஒரு நிமிஷம் நெனச்சுப் பாத்துப் பேசு செந்திலு”

“சரிண்ணே”

வீடு வந்திருந்தது. வாசவியையும் ரத்தினத்தையும் கூட்டிக் கொண்டு சேகர் கிளம்பிச் சென்றார்.

“அந்தப் பொண்ணு வாசவி நல்லாப் படிக்குமா? வாசவி பேசுறது கண்மணி பேசுறதெல்லாம் கேக்குறப்போ நானும் ஸ்கூலு காலேஜு போயிப் படிச்சிருந்தா எனக்கு இப்படி ஒரு நெலம வந்திருக்காதில்லன்னுத் தோணுது”

“இப்ப என்ன ஆயிப் போச்சு? நல்லாத் தூங்குன… இப்போ வயிறு முட்ட சாப்பிட்டிருக்க. மறுபடியும் தூங்கு. காலையில நானும் கூட வரேன்”

“நீயும் வரியா? எனக்கு எப்படித்தா தூக்கம் வந்துச்சோ?”

“இப்பயும் வரும்”

“வருமா இருக்கும்… எந்தப் பிரச்சன வந்தாலும் எம்பக்கத்துல நிக்க நீ இருக்கல்ல… பொறவென்ன? எந்த கவலையும் இல்லாமத் தூங்குவேன். எத்தனையோ நாளு… ஏன் வருஷக்கணக்காச்சு இப்படி எதையும் யோசிக்காமத் தூங்கி. வரேன்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!