Poi Poottu 1

Poi Poottu 1

பொய் பூட்டு

1

தெரு முழுவதும் கூட்டமாக இருக்க காரை உள்ளே எடுத்துச் செல்ல முடியாதென்று தெருமுனையிலேயே ஒரு வீட்டின் முன்னிருந்த மர நிழலில் நிறுத்தி இறங்கினான் கார்த்திக்.
அவன் செல்ல வேண்டிய வீட்டிற்கு வழி விசாரிக்க அவசியமிருக்கவில்லை. தூரத்தில் தெரிந்த பந்தல் இழவு வீட்டை அடையாளம் காட்டியது. நேரில் வந்து பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. இருந்தபோதும் அழகானதொரு வீட்டை வாங்க தனக்கு உதவியவனின் சாவு. மனத்திருப்திக்காக வந்துவிட்டான்.
நிறைய கார், அதிகக் கூட்டம், பல பெரிய புள்ளிகள், சில வெள்ளை வேஷ்டிகள், யார் துக்கத்தில் இருக்கிறார்கள் யார் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் என்று கண்டறிய முடியாத வகையில் இறுகிக் கிடந்த முகங்களைக் கடந்து வீட்டினுள்ளே நுழைந்தான்.
ஆஜானுபாகுவான கருத்த உடல் ஐஸ் பெட்டிக்குள் அமைதியாய் அடங்கிக் கிடந்தது. அருகில் சென்று பார்க்க முடியாதளவு நெரிசல். வந்ததற்காக இரண்டு நிமிடம் நின்றுவிட்டு வெளியே வந்தான்.
“சார்… கார்த்திக் தான? வீடு குடி போயிட்டீங்களா?”
வீடு வாங்கிய அன்று இவனைப் பார்த்த நினைவு.
“ஒரு வாரமாச்சு. எப்படி? ”
“ஆக்ஸிடென்ட் சார். ஸ்பாட் அவுட்டு. ஒண்ணுமே பண்ண முடியல. அண்ணன் உங்கள மாதிரி எத்தனையோ பேருக்கு வீடு வாங்கிக் குடுத்துருக்காரு. ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல அண்ணன மாதிரி கொடி கட்டிப் பறந்தவங்க கம்மி. எல்லாம் முடிஞ்சுப் போச்சு”
“சரி. டைம் ஆச்சு”
கார்த்திக் வீதியில் இறங்கி நடந்தான்.
“எத்தன பேரு வயித்துல அடிச்சு சம்பாதிச்சுருப்பான்? இவனுக்கெல்லாம் நல்ல சாவு வந்திருந்தாதா அதிசயம்”
“ஆள போட்டுத் தள்ளுறதுக்குக் கூட அஞ்ச மாட்டானாம்”
“இது ஆக்ஸிடென்ட்டா இல்ல எவனும் ப்ளான் பண்ணி போட்டுத் தள்ளிட்டானான்னு டவுட்டா இருக்குன்னு பேசிக்குறாங்க”
‘இழவு வீட்டில் கேட்ட கருத்துக்கும் தெருவில் கேட்கும் கருத்துக்களுக்கும் எத்தனை வித்தியாசம்? எது உண்மை? எது எப்படியோ, டெல்லி செல்ல வேண்டும். சீக்கிரம் கிளம்ப வேண்டும்’ கார்த்திக் வேகமாக நடக்கத் துவங்கினான்.
வீட்டை அடைந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் குளித்துக் கிளம்பிச் சென்றுவிட்டான். காற்றைப் போல் இரண்டு நாட்களும் ஓடி மறைந்தது.
உச்சி வெயில் பொழுதில் தூக்கம் கண்களைச் சொருக குழந்தையை மடியில் கிடத்தி உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். குக்கரின் விசில் சத்தம் கேட்டதும் குழந்தையின் உறக்கம் கலையாதிருக்க மென்மையாய் இருமுறை தட்டிக் கொடுத்தாள்.
குழந்தை விழிக்கவில்லை எனவும் மெத்தையின் அருகிலிருந்த தொட்டிலில் கிடத்திவிட்டு எழுந்து அறையிலிருந்து வெளியே வந்தாள்.
கீழே ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. மாடி படிகளில் இறங்கி சமையலறைக்குள் சென்றாள். யாரும் இல்லை. அடுப்பின் அருகில் ஒரு தட்டில் நறுக்கிய காய்கறிகள் இருந்தன.
‘செண்பா பாதிச் சமையல்ல எங்க போனா?’
வாயிலை திரும்பிப் பார்த்தவள் தீயை குறைத்து நிமிர்ந்தபோது செண்பகம் உள்ளே வந்தாள்.
“நீங்க ஏன் கா எந்திரிச்சு வந்தீங்க? வாசல்ல சத்தம் கேட்டுச்சேன்னு போய்ப் பாத்தேன். உங்கள பாக்க ஆள் வந்திருக்கு கா”
பேசியபடியே வாணலியை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
“போய்ப் பாக்குறேன். குட்டிக்கு வெந்நீர் மட்டும் வெச்சுடு. குளிப்பாட்டிடுவோம்” என்றவள் ஹாலிற்கு வந்தாள். சோபாவில் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார்.
“வணக்கம். எம்பேரு சீதா. எல்லாரும் சீத்து மாமின்னு கூப்பிடுவா. நீயும் அப்படியே கூப்பிடுடிம்மா. பக்கத்தாத்துல இருக்கேன். இங்க புதுசா குடி வந்திருக்கேளா?”
“ஆமாங்க. வந்து ஒரு வாரம் தான் ஆச்சு”
இங்குக் குடி வந்ததிலிருந்து வீட்டை விட்டு வெளியே செல்ல நேரமில்லாமல் இருந்தவளுக்குச் சீத்து மாமி இப்படித் தாமாக வந்து அறிமுகம் செய்து கொண்டது பிடித்திருந்தது.
“பேரு சொல்லிக்கவே இல்லையே?”
“கவிதா”
“கவிதா என்னம்மா பண்ணுற? ஆத்துக்காரர் இல்லையா?” வீட்டை அளந்தார் சீத்து மாமி.
“இல்ல அவங்க பிசினஸ் ட்ரிப் டெல்லி போயிருக்காங்க. நான் ஹவுஸ் வைப்”
“நன்னா சிரிச்ச முகமா இருக்கே. ஆனா ஜாஸ்த்தி பேச மாட்டாய் போலருக்கு. தனியாவா இருக்கே?” கேள்வி கேட்டாலும் தானே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மீண்டும் வீட்டை அளந்தார்.
“நானும் என் குழந்தையும் இருக்கோம். பையனுக்கு பத்து மாசம் முடியப் போகுது. துணைக்கு ஆள் இருக்கு. செண்பகம். அம்மா வீட்டுல வேலை செய்யுறவங்களோட பொண்ணு. ஊருலேருந்து கூட்டிட்டு வந்திருக்கோம். என் ஹஸ்பண்ட் வர வரைக்கும் எனக்குத் துணைக்கு இங்கயே தங்கி இருப்பா. காவலுக்கு வாட்ச்மேன் இருக்காரு”
“அப்படியா? ரொம்பச் சந்தோஷம்டிம்மா. இந்த வீட்ட வாங்கிட்டேளா?”
“ஆமாம்” என்றவள் “செண்பகம் ஒரு காபி கொண்டு வாயேன்” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தாள்.
“வரேன் கா” என்ற செண்பகம் அடுத்த இரண்டு நிமிடங்களில் காபியுடன் வந்து சேர்ந்தாள்.
கப்பை வாங்கிப் பருகியவர் “காபி சூப்பர் செண்பகம். ரொம்பத் தேங்க்ஸ்” என்று ஒரே மடக்கில் மொத்தத்தையும் குடித்து முடித்தார்.
“அப்போ நான் வரேன் கவிதா. ஏதாவது உதவின்னா ஒரு குரல் குடு. இந்தா இந்தக் கார்ட வெச்சுக்கோ. என் ஆத்துக்காரரோடது. பெரிய வக்கீலாக்கும். அதுல வீட்டு நம்பரும் இருக்கு. பொழுது போகலைன்னா நம்மாத்துக்கு வா என்ன?” கவிதாவின் கையைப் பற்றிக் கூறியவர் புறப்பட்டுச் சென்றார்.
“யாரு கா இவங்க? ஏதோ ரொம்ப நாள் பழகுனவங்க மாதிரி’காபி ரொம்ப நல்லா இருக்கு செண்பகம்’னு சொல்லிட்டுப் போறாங்க?”
“பக்கத்து வீடாம். சும்மா பாத்துட்டுப் போக வந்திருந்தாங்க”
“அக்கம் பக்கம் பேசி வெச்சுக்குறது நல்லது தான் கா. இவ்வளவு பெரிய வீட்டுல நாள் பூரா தனியாவா இருக்க முடியும்?”
“அதான் நீ இருக்கியே செண்பா. நானும் அதிகம் பேசி பழகுற ஆள் கெடையாது” கையிலிருந்த கார்டை பார்த்தவள் தொலைபேசியின் அருகிலிருந்த கார்ட் ஹோல்டரில் போட்டு வைத்தாள்.
“தண்ணி சுட்டுருச்சு. இப்போ தான் ஹீட்டர் ஆப் பண்ணேன். குட்டி பையன குளிப்பாட்டிடுங்க கா”
“தண்ணி வெலாவி வை. நான் போய் அவன தூக்கிட்டு வரேன்”
“மேலயே குளிக்க வெக்கலாமே கா. தெனம் ஏன் அவன கீழத் தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்துறீங்க?”
“அங்க தான் ஹீட்டர் வேல செய்யலையே. எத்தன தடவ எலக்ட்ரீஷியனுக்கு போன் பண்ணாலும் வர மாட்டேங்குறான். தண்ணிய நீ எதுக்கு மேலத் தூக்கிட்டு வரணும்? குழந்தையையும் ஒரே ரூம்ல அடச்சு வெக்க வேண்டாம்னு தோணுச்சு. கீழன்னா ஹால்ல அவன் ப்ரீயா தவழ்ந்துட்டு இருப்பான்”
ஹாலையொட்டி இருந்த அறையின் குளியலறைக்குள் வந்த செண்பகம் குழாயில் தண்ணீர் திறந்து மிதமான சூட்டில் டப்பில் நிரப்பினாள்.
‘இந்த அக்கா எவ்வளவு அக்கறையா பாத்துக்குறாங்க. நான் தண்ணிய மேல தூக்கிட்டு வர வேண்டாம்னு இவங்க குழந்தைய கீழ தூக்கிட்டு வராங்க. இதனால தான் என்ன இவங்க கூடக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதும் நம்ம வீட்டுல எதுவும் மறுத்து பேசாம அனுப்பி வெச்சாங்க போல’
கவிதா அறையினுள் நுழைந்தபோது தொட்டிலில் குழந்தை தூங்காமல் விழித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
“ரோஷன் குட்டி… என்னடா பண்ணுறீங்க?”
குழந்தையைத் தொட்டிலிலிருந்து தூக்கி தோளில் போட்டு “ரோஷன் தங்கம் புது வீட்டுக்கு வந்ததும் குட் பாய் ஆகிட்டீங்க… இப்போ எல்லாம் அழறதே இல்லையே… ச்சமத்தா இருக்கீங்களே…” என்று அவனுடன் பேசியபடியே படிகளில் இறங்கி கீழே இருந்த அறைகளுள் ஒன்றிற்குள் நுழைந்தாள்.
குழந்தையைக் குளிப்பாட்டி அவனைத் தூக்கி வந்து சுத்தமாகத் துடைத்து மெத்தையில் கிடத்தினாள். செண்பா குளியலறையைச் சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தபோது கவிதா அவனுக்கு உடை அணிவித்துப் பவுடர் பூசிக் கொண்டிருந்தாள்.
“இவன பாத்துக்கோ. இதோ வரேன்” என்றவள் செண்பகம் ஏற்கனவே மசித்து வைத்திருந்த காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வந்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
எப்படியோ கதை சொல்லி விளையாட்டுக் காட்டி அவனுக்கு ஊட்டி முடிக்க அரை மணி நேரம் ஆனது.
“குட்டி பையா… வா விளையாடலாம்”
“நீயும் வா செண்பா சாப்பிடலாம். இருக்குறது ரெண்டு பேரு. ஆனா எப்பயும் தனித் தனியா தான் சாப்பிடுறோம்”
“பரவாயில்ல கா. எப்படியும் இவன ஒருத்தர் பாத்துக்கணுமே”
“என்னவோ போ. நீ கேக்க மாட்ட”
தட்டில் சாப்பாட்டைப் போட்டு எடுத்து வந்து டைனிங் ஹாலில் அமர்ந்ததும் அவ்வளவு பெரிய அறையில் தனியாக அமர்ந்து சாப்பிட என்னவோ போல் இருந்தது.
அந்த நாளில் பத்தாவது முறையாகத் தன் கணவனுக்குக் கால் செய்ய மொபைலை எடுத்து முயற்சித்தாள். இந்த முறையும் அடித்துக் கொண்டே இருந்தது. “எடுங்க கார்த்திக்” மீண்டும் முயற்சித்தாள்.

*********************************************************************

2

வெளியூர் சென்ற கணவன் தன்னிடம் சரியாகப் பேசாதது வருத்தத்தைத் தர மீண்டும் மீண்டும் அவன் எண்ணிற்கு முயற்சித்தாள் கவிதா.
கார்த்திக் அவளை அதிகம் சோதிக்காமல் இம்முறை இரண்டு ரிங்கிலேயே எடுத்தான்.
“கவிதா நான் பிஸியா இருப்பேன்னு நேத்தே உன்கிட்ட சொன்னேன். காலையிலேருந்து எத்தன தடவ போன் பண்ணுவ? வேலைல கான்சென்ட்ரேட் பண்ண விடு ப்ளீஸ்”
அவன் பேச பேச கையிலிருந்த சாத பருக்கைகளை நசுக்கி பிதுக்கினாள்.
“நேத்து காலைல போன் பண்ணீங்க. அதுக்கப்பறம் எதுவுமே சொல்லல. புது வீட்டுக்கு மாறி வந்து என்னையும் குழந்தையையும் தனியா விட்டுட்டுப் போனீங்களே… எப்படி இருக்கோம்னு கேக்க மாட்டீங்களா கார்த்திக்?”
அவளுடைய “கார்த்திக்” என்ற அழைப்பில் அவன் அமைதியானான். கவிதா எப்போதும் அவனைப் பெயர் சொல்லி அழைப்பது வழக்கமில்லை. சந்தோஷமோ, கோபமோ, வருத்தமோ… எந்த ஒரு உணர்ச்சியும் அதிகமாக அவளிடமிருந்து வெளிப்படும் நேரங்களில் அவளையும் அறியாமல் வருவதே இந்த அழைப்பு.
“சாரி கவி. வேல ஜாஸ்த்தி. அதான்… சொல்லு என்ன பண்ணுற?”
கணவன் தணிந்து பேசுகிறான், மன்னிப்புக் கேட்கிறான், அக்கறையாக விசாரிக்கிறான் என்றதும் அவளுக்கும் கோபம் குறைந்தது.
“சாப்பிடுறேன். நீங்க சாப்பிட்டீங்களா?”
“இல்ல. அதுக்குதா போறேன். ரோஷன் என்ன பண்ணுறான்?”
“விளையாடுறான்”
“சரி கவி. அப்பறம் பேசுறேன்”
“என்னங்க…”
‘கோவம் சுத்தமா போயிடுச்சு போல. என்னங்கன்னு சொல்லுறா’
“சொல்லு”
“இன்னைக்குப் பக்கத்து வீட்டுலேருந்து வந்து பேசிட்டு போனாங்க. அவங்க ஹஸ்பண்ட் லாயராம். அவங்க…”
“கவி ப்ளீஸ். இதெல்லாம் நீயே பேசி தெரிஞ்சு வெச்சுக்கோ. க்ளையன்ட் வெயிட் பண்ணுறாங்க. பை”
“ரெண்டு நிமிஷம் பேசுனா தான் என்னவாம்?” மொபைலை மேஜை மீது நங்கென்று வைத்தவள் செண்பகம் இன்னும் சாப்பிடாமல் இருப்பதால் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.
“நீ போய்ச் சாப்பிடு செண்பா” என்ற கவிதா ரோஷனை கார்பெட் இட்ட தரையில் அமர்த்திப் பொம்மைகள் அடங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து வந்து அவனைச் சுற்றி பொம்மைகளைப் பரப்பினாள். அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
சில நிமிடங்களுக்கு ஒரு முறை “ம்மா… ம்மா…” என்று அவள் புடவையைப் பிடித்து இழுத்துக் கையில் இருந்த பொம்மையை அவளுக்குக் காட்டினான். பின் முட்டியிட்டு தவழ்ந்துச் சென்று வேறொரு பொம்மையை எடுத்து வருவான்.
கவிதா அவன் தன்னை அழைக்கும்போதெல்லாம் “சூப்பரா இருக்குடா தங்கம்” என்றாள்.
ஒரு கட்டத்தில் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கியவள் மகன் தன்னைச் சில நிமிடங்களாக அழைக்கவில்லையே என்று யோசித்துக் கீழே பார்த்தாள். ரோஷன் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் அவனைக் காணவில்லை.
புத்தகத்தைச் சோபாவில் வைத்துவிட்டு எழுந்து அவனைத் தேடினாள். ஹாலின் ஒரு மூலையில் இருந்த திருப்பத்தின் மறுபக்கம் மாடிக்குச் செல்லும் படிகள் இருந்தன. அதன் கடைசிப் படியில் கையால் தட்டி தட்டி சிரித்துக் கொண்டிருந்தான்.
“ஹேய் வாலு… இவ்வளவு தூரம் வந்துட்டியா? சத்தமே காணும்னு பாத்தேன். நம்ம அங்க விளையாடலாம்டா குட்டி” அவனைத் தூக்கி வந்து ஹாலில் பொம்மைகளுக்கு நடுவில் அமர வைத்தாள்.
சிறிது நேரத்தில் மீண்டும் மாடிப்படி அருகில் இருந்தான். இப்படியே ஐந்து, ஆறு முறை அவனைத் தூக்கி வந்து தன் அருகில் அமர வைத்து சோர்ந்துப் போனாள் கவிதா. அதற்குள் செண்பகம் சாப்பிட்டு முடித்துச் சமையலறையை ஒழித்து வைத்துவிட்டு வந்து சேர்ந்தாள்.
“முடியல செண்பா. இவன கொஞ்சம் பாத்துக்கோயேன்… நான் போய்ப் படுக்குறேன். நைட் புல்லா முழிச்சுட்டே இருந்தான். தூங்கவே முடியல. இப்பயும் இப்படி விளையாடுறான். எப்படியாவதும் தூங்க வை செண்பா”
“போய்ப் படுங்க கா. குட்டி… ஈ… வாங்க வாங்க…”
அவனைத் தூக்கி கீழே இருந்த அறைக்குச் சென்றாள். மாடிக்கு சென்று படுத்த கவிதா உடனேயே உறங்கிப் போனாள்.
மாலை அவள் கண் விழித்தபோது அறை முழுவதும் இருட்டாக இருந்தது. அவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமா என்று பதறி எழுந்து ஜன்னல் திரையை விளக்கினாள். வெளியே மாலை சூரியனின் வெளிச்சம் பளிச்சென்றிருந்தது. ஆனால் அப்போதும் அறையில் வெளிச்சம் போதவில்லை.
மணி ஐந்தாகியிருக்க முகம் கழுவிக் கீழே வந்தாள். ரோஷன் உறங்கிய அறை வாசலில் ஒரு சேரில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தாள் செண்பகம். எதிரில் ஒரு சிறிய டீப்பாயும் அதிலிருந்த பூக் கூடையில் மல்லிகை மலர்களும் இருந்தன.
“எந்திரிச்சுட்டீங்களா கா? எனக்குத் தூக்கமே வரல. ரோஷனும் அப்போவே தூங்கிட்டான். கொஞ்ச நேரம் டி. வி. பாத்தேன். அப்பறம் தோட்டத்துல போய்ப் பூ பரிச்சேன் கா. இந்த வாசனை தம்பிக்கு ஒத்துக்குமோ ஒத்துக்காதோ… அதான் உள்ள உக்காந்து கட்ட வேண்டாம்னு இங்க உக்காந்து அவனப் பாத்துக்கிட்டே கட்டுறேன்”
“சரி நீ கட்டி முடி செண்பா”
சமையலறையுள் சென்ற கவிதா அடுப்பில் பாலை கொதிக்க வைத்தாள். மனமோ கார்த்திக்கை குறித்தும் அந்த வீட்டை குறித்தும் எண்ணமிட்டது.
‘எவ்வளவு பெரிய வீடு. பாக்க அழகா இருக்கு. வெளிய பெரிய போர்ட்டிகோ. சுத்தி அழகான தோட்டம். அதுலையும் அந்த மல்லிகை பந்தல்… என்ன அழகா வளத்து வெச்சிருந்தாங்க.
வீடும் பெருசு தான். கீழயே மூணு ரூம். செண்பாவ கீழ தங்க வெச்சது தான் சரி. அப்படியே ரோஷன் தூங்க ஒரு ரூமும் ஒதுக்கிக் குடுத்தது நல்ல ஐடியா. கார்த்திக் இந்த மாதிரி விஷயமெல்லாம் கரெக்டா செய்வாங்க.
இன்னொரு ரூம் கெஸ்ட் ரூமா இருக்கட்டும்னு சொன்னப்போ உடனே சரின்னு சொன்னாங்களே… அதிசியம் தான். நா ஒண்ணு சொல்லி அவங்க அத உடனே கேட்டது.
மாடியிலையும் மூன்று ரூம் இருக்குறது தான் வேஸ்ட். ஒரு ரூம் எங்களுக்கு. ஒரு ரூம்ல புக்ஸ் எல்லாம் வெச்சுட்டு இன்னொரு ரூம் சும்மா பூட்டி கெடக்கு. இப்படிப் பூட்டி வெக்க எதுக்கு இவ்வளவு பெரிய வீடுன்னு கேட்டா கோவம் வருது அவங்களுக்கு.
ஹ்ம்ம்… என்ன இருந்து என்ன? வருஷத்துல பாதி நாள் பிஸினஸ் பிஸினஸ்னு என்னை இப்படித் தனியா விட்டுட்டு போயிடுறாங்க’தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவள் பால் கொதித்ததும் டீ தூளை அதில் போட்டாள்.
டீ தயாரானதும் தனக்கும் செண்பகத்துக்கும் எடுத்து வந்து அவளிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு ரோஷன் அருகில் போய் அமர்ந்தாள்.
‘அவங்கள மாதிரியே அமைதியா தூங்குறான்’மகனின் அழகை ரசித்தபடியே தேநீர் அருந்தியவள் அவனை மெல்ல எழுப்பினாள்.
கட்டிய பூச்சரத்தை கூடையில் வைப்பதற்காகச் சுற்ற ஆரம்பித்தாள் செண்பகம். “தூங்கட்டுமே கா. ஏன் எழுப்புறீங்க?”
“இல்ல செண்பா. அப்பறம் நைட் தூங்க மாட்டேங்குறான்” மகனை அவள் தூக்க அதிலேயே விழித்துக் கொண்டான்.
இரவு உறங்க செல்லும் முன் வெளியே சென்று போர்ட்டிகோவில் நின்று வீட்டின் கேட் அருகில் அமர்ந்திருந்த காவலாளியிடம் “செல்வம் அண்ணா… சாப்பிட்டீங்களா?” என்று கத்தி கேட்டாள்.
“ஆச்சு மா. செண்பகம் குடுத்துச்சு”
செல்வம் தங்குவதற்காக வெளி கேட் அருகில் ஒரு சிறிய அறை இருந்தது. ஒவ்வொரு வேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுத்து விடுவார்கள். அவர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பவர் பகலில் சில மணி நேரங்கள் தூங்கி இரவு முழுவதும் காவலுக்கு அமர்ந்திருப்பார். இது கார்த்திக்கின் ஏற்பாடு.
உள்ளே வந்து கதவை மூடித் தாழிட்டாள்.
“சரி செண்பா… தூங்கு. காலையில எழுப்பி விடு. இவன் எங்க?”
“இங்க தான் கா இருந்தான்”
கவிதாவிற்கு சந்தேகம் தோன்றவே படிக்கட்டின் அருகில் சென்று பார்த்தாள்.
“டேய்… ஒளிஞ்சு விளையாட இதுதான் நேரமா? வாங்க தங்கம் தூங்கலாம்” அவனைத் தூக்கிக் கொண்டு மாடியறைக்கு வந்தவள் அருகில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து ஏதேதோ கதை சொல்லி தூங்க வைத்தாள்.
அவன் உறங்கியதும் அருகிலிருந்த தொட்டிலில் அவன் உறக்கம் கலையாதவாறு தூக்கிப் படுக்க வைத்து விட்டு வந்து தானும் படுத்தாள். மதியம் உறங்கியதால் இப்போது தூக்கம் வராதோ என்று பயந்தவளுக்கு உடனே உறக்கம் வந்தது.
நள்ளிரவில் விழிப்புத்தட்ட தன் வலது புறம் மட்டும் சில்லிடுவதை உணர்ந்தாள். கை விறைக்கும் அளவிற்குப் போர்வையையும் தாண்டி சில்லுப்பை உணர முடிந்தது.
இடதுபுறம் திரும்பி ரோஷனின் தொட்டிலைப் பார்த்தாள். அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனைத் தாண்டி அறை கதவைப் பார்த்தாள். அது பூட்டி இருந்தது.
தூக்கத்தில் ஒன்றும் புரியாமல் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவள் அறையைச் சுற்றிப் பார்த்தபோது ஏஸி மிகக் குறைவான வெப்பநிலையில் இருந்ததைக் கவனித்தாள். உடனே ரிமோட்டை எடுத்து அதை அணைத்து வைத்தாள்.
உறங்கப் போனவளுக்குத் திடீரென்று தனக்கே இவ்வளவு சில்லிட்டிருக்கிறதே ரோஷனிற்கு என்னவாயிருக்கும்? என்று தோன்றவே பதறி எழுந்துச் சென்று அவனைத் தொட்டுப் பார்த்தாள்.
அவன் உடல் ஜில்லிடாமல் சாதரணமாக இருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஏனோ உடனே படுக்கத் தோன்றாமல் அவனின் துணியை மாற்றிச் சிறிது நேரம் அவனைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.
‘கார்த்திக் எப்போதான் திரும்பி வருவாங்களோ?’அவன் கிளம்பிச் சென்றதிலிருந்து எத்தனை ஆயிரம் முறை இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.
மனம் சோர்ந்து போயிருக்க நடந்து நடந்து கால்களும் வலியெடுக்க ரோஷனை தொட்டிலில் கிடத்தி விட்டு மீண்டும் வந்து போர்வையைப் போர்த்திப் படுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!