OVS7

OVS7

ஒரு வார்த்தை… சொல்லடா… அத்தியாயம் #7
10831084
சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த சுமதி, 
“பொங்கல் ரெடி ஆகியிருக்கும். வெல்லத்தை போடலாம்” என்றதும், அச்சு வெல்லத்தை அப்படியே போட்டான் அவளது கணவன்.
“அடக் கடவுளே! என்ன அத்தான் இப்படி பண்ணிட்டீங்க? இது எப்போ கரைஞ்சு பொங்கல் ரெடி ஆகுறது? அதுக்குள்ள அண்ணி முந்திப்பாங்க!! வெல்லத்தை தூளாக்கித் தான் போடணும்… போங்க” செல்லமாய் சிணுங்கியவளிடம், 
“சாரி சுமி, எனக்குத் தெரியாதுடா!” என சரண்டர் ஆகிவிட்டான் சசி.
‘இதை எப்படி தூளாக்குறது?’ ஆராய்ச்சியாய்  நின்றவளிடம்,
“கொடு ஜில்லு, நான் நச்சுத் தரேன்!” 
“ஒன்னும் வேண்டாம்! இதையும் நாங்களே  செஞ்சுப்போம்… பெருசா ஹெல்ப் பண்ண வந்துட்டாரு!” நிமிர்ந்தே பார்க்காமல் முணுமுணுத்தாள்.
“ஜில்லுன்னா குளுகுளுன்னு இருக்கனும். இவ்வளவு சூடெல்லாம் தாங்காது. அரிவாள் வச்சு பொடியாக்கணும். நீ கையை காயப்படுத்திக்குவ, ரொம்பப் பண்ணாம கொடுடி!” பறித்துக் கொண்டு போய்விட்டான். 
“டீ யா… பட்டிக்காட்டான்! அக்கறை இருக்க மாதிரி எப்படி நடிக்கிறான்? சரியான இடக்குநாட்டான்!” சிலிர்த்துக் கொண்டு நிற்க, அவன் வந்துவிட்டான். தாமதமாக ஆரம்பித்தாலும் ஈஸ்வரியே முதலில் பொங்கல் வைத்து இறக்க, (லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல… அண்ணேன் இருக்க பயமேன்!)
“அடியே சுமதி, உன் அண்ணி எல்லாத்துலயும் உன்னை முந்திக்கப் போறா! கெட்டிகாரத்தனமா நீ முதல்ல பிள்ளையை பெத்துக்க, அப்போ தான் அவளை தோற்கடிக்க முடியும்”
‘அடக்கிரகமே, இதுக புத்தி ஏன் தான் இப்படி போகுதோ?’ என அலுப்புற்றாலும், 
“அதுக்கெல்லாம் ரொம்ப நாள் காத்திருக்கனும் அத்தை. இன்னும் கொஞ்ச நேரத்திலேயே அண்ணியை நான் முந்திடுவேன் பார்க்குறீங்களா?”
“அது எப்படி?” என ஆச்சரியமாய் கேட்ட அத்தைக்கு,
“சாமிக்கு படைச்சதும், முதல் ஆளா பொங்கல் சாதத்தை சாப்பிட்டுருவேன். அண்ணி, வெட்கப்பட்டு, தயங்கித் தயங்கி மெதுவாத் தான் சாப்பிடுவாங்க! எப்படி என் ஐடியா?” என கண் சிமிட்ட, (நீ எங்க போனாலும் பொழச்சுக்குவ புள்ள!)
“நீ சாப்பிடுறதிலேயே இரு!” என வசை பாட,
“நீங்களெல்லாம் சாப்பிடாம அப்படியே பார்த்துகிட்டு இருக்கப் போறீங்களாக்கும்? நொடிப்புடன் கணவனிடம் சென்றுவிட்டாள். 
இதை பார்த்துக் கொண்டிருந்த விக்னேஸ்வரி,
‘இவளுக்கும் நேற்று தான் திருமணம் நடந்திருக்கு. ஆனால் பல காலம் வாழ்ந்தவங்க போல எவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. இவன் தான் ஒருநேரத்திற்கு ஒரு மாதிரி நடந்துக்கிறான் ‘ மனம் கணவனிடம் சென்றுவிட, சிந்தனையை கலைக்கும் வகையில்,
“அம்மா, நாளைக்கு நானும் அத்தானும் ஊட்டிக்கு போறோம். வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னாங்க. அப்பறம் சென்னைக்கு போகணுமாம். அங்க தான் விசா, அது இது எல்லாம் வாங்கனுமாம். எப்படியும் பதினஞ்சு, இருபது நாட்களில் ஊருக்கு கிளம்பிடுவோம்னு சொல்லச் சொன்னாங்க.” மலர்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்க, 
ஈஸ்வரியோ , ‘இன்னும் 20 நாட்களில் எல்லாரும் போயிடுவாங்களா? அப்பறம் நான் மட்டும் இங்க தனியா தான் இருக்கனுமா? நாமும் இவங்க கூட கிளம்பி போயிட்டா என்ன…? இது என்ன கிறுக்குத்தனமா யோசிக்கிறோம்? கிராமத்தில் வளர்ந்த பொண்ணு தைரியமா வெளிநாட்டுக்கு கிளம்புது. கடல் கடந்து பாஷை தெரியாத ஊருக்கு எல்லோரையும் விட்டு துணிச்சலாய் போகுது.  ( விட்டா பேச்சு வார்த்தை நடத்தி சீனாக்காரனையே கதறடிக்கும் அது வாஸ்து… ச்ச வாய் அப்படி!)
தாய்நாட்டுல சொந்த பந்தங்களோட இருக்க நான் ஏன் இப்படி பயப்படுறேன்? இது ரொம்ப மோசம் விக்கி! இதை கூட சமாளிக்க முடியாத கோழையா நீ? நோ… நோ! இது தான் என் ஊர். இவங்க தான் என் சொந்தம். ஆயுசுக்கும் நான் இங்க தான் இருந்தாகனும்… இருப்பேன்!’ பயத்தை விரட்டி திடமான முடிவெடுத்தவளின் மனமும், முகமும்  தெளிந்திருந்தது. படையலிட்டு சாமி கும்பிட்டதும், 
“புது மருமக கைப்பக்குவம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்…?” என்ற பெரிய அத்தைக்கு, 
“எத்தனை பேர் பொங்கல் வச்சாலும் சாமிக்கே ஒரே படையல் தான். அதிலும் இவங்க ரெண்டு பேருமே என் வீட்டு பொண்ணுங்க! அதனால பிரசாதமும் ஒன்னு தான். உங்க மக கை பக்குவம் பார்க்கணும்னா வீட்ல தடபுடலா விருந்து வச்சுடுவோம் விடுங்க!” என இருவரது பொங்கலையும் ஒன்றாக சேர்த்து கிளறினான் வீரபாண்டியன்.
“இது புது பொண்டாட்டியை காப்பாத்துறதுக்குக்கான திட்டம் தானே மாப்பிள்ளை?” 
“சாப்பிடத்தானே போறீங்க, ருசி மாறுபட்டா சொல்லுங்க!’ என அனைவருக்கும் பரிமாறினான். இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகவே உருமாறியிருந்தன. குறைசொல்ல முடியாதபடி தீஞ்சுவையுடன் இருந்தது பொங்கல். உண்டு முடித்து கிளம்பும் சமயம் மழை வந்துவிட்டது. 
“இது என்னடி, கிளம்புற நேரத்துக்கு மழை வருது?  மழையோட போகக் கூடாது. விட்டதும் மெல்ல போவோம் மண்டபத்திலே நில்லுங்க.” என வயது முதிர்ந்த பெண்மணி கட்டளை இட, வெட்டவெளியில் நனைந்து கொண்டு இருந்தார் அவர்கள் குல தெய்வம் கருப்ப சாமி. இவர்களோ அங்கிருந்த மண்டபத்தில் ஒண்டிக் கொண்டனர். 
நாற்பது ஐம்பது பேருக்கு அந்த சிறிய மண்டபம் தாராளமாய் இல்லாது போகவே இடித்து பிடித்துக் கொண்டு தான் நிற்க வேண்டியதிருந்தது. பெரும்பாலும் ஆண்கள் மண்டபத்தின் ஓரத்தில் நின்று கொண்டு பெண்களை உட்புறமாய் நிற்க வைத்திருந்தனர். 
மழையில் நனைவதென்றால் விக்கிக்கு கொண்டாட்டம் தான். ஆனால் இன்று கணவன் அவளுக்கு முன் பெரும் அரணாக நின்று கொண்டிருக்க அடிக்கும் சாரல் கூட அவனை தாண்டி வரவேயில்லை. 
‘ஹல்க்! சுவர் மாதிரி துளி தண்ணீர் கூட படாமல் சுத்தமா மறைச்சுட்டானே…’ உதடு சுளித்து மறுபுறம் பார்க்க சுமதி தன் முந்தானை கொண்டு கணவனின் முதுகு சுற்றி சாரல் கூட பட்டுவிடாமல் காத்தாள்.
‘பார்டா! செம லவ்ஸ் போல…’ என உதடு பிதிக்கினாலும் விக்கிக்கு அந்த ஐடியாவெல்லாம் வரவேயில்லை. கிடைத்த சிறு இடைவெளியில் கைவிட்டு மலைச்சாரலில் நனைத்து விளையாடிக் கொண்டிருக்க அவ்வப்போது தன்னை உரசி செல்லும் மனையாளின் கை செய்யும் வேலையை கண்டு கொண்டவன், அவள் கரம் பற்றி முதுகோடு சேர்த்து மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு,
“என்ன பண்ணற ஈஸ்வரி? புது தண்ணி உடம்புக்கு ஒத்துக்காதுன்னு உன்னை பொத்தி வச்சுக்கிட்டு இருக்கேன். நீ ரொம்ப நேரமா விளையாடற தானே…? கை ஜில்லுன்னு இருக்கு.” என காதோரம் குனிந்து அர்ச்சனை வைத்தான். அவளோ,
“புது தண்ணின்னா என்ன?” என அவன் முகம் பார்த்தாள்.
“ரொம்ப நாளைக்கு பிறகு வரும் மழை தண்ணி தான் புது தண்ணி. பூமி வறண்டு போய் கிடக்க மழை பெய்ததும் மண்ணில் இருந்து சூடு கிளம்பும். இது உடம்புக்கு ஆகாது.” என விளக்கம் கொடுத்தாலும் மடக்கி பிடித்த கையை விடவேயில்லை அவள் கணவன். (வீரா, ரொமான்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல ரெய்ன் பத்தி லெக்சர் எடுக்கிற… உன் பொண்டாட்டி உன் கூட விளையாடுறதை விட்டு மழை கூட விளையாடுறா… இதுங்க ரெண்டையும் வச்சுக்கிட்டு உங்களுக்கு ரொமான்ஸ் கேக்குதா மக்களே?)
பெரும் மழை பேய் மழை பெய்தது. (பொங்கல் வச்சது யாரு?!) எங்கும் இருள் சூழ்ந்தது. இடியும் மின்னலும் நடுங்கச் செய்ய மிரண்டு போனவள் கணவனின் மார்பில் முகம் புதைத்து சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டாள். புடவையின் முந்தியை எடுத்து அவள் முதுகோடு போர்த்திவிட நடுக்கம் குறைந்தது. 
நீர் பெருகி தன் பாதங்களில் படுவதை உணர்ந்தவன் தன்னுள் புதைந்திருப்பவளின் இடை பற்றி அழுத்த மிரண்டு நிமிர்ந்து முகம் பாரத்தாள்.
‘என் கால் மேல ஏறி நில்லு.” கிசுகிசுப்பாய் ஆணையிட்டான். இதை சொல்லத்தான் இடை அழுத்தினானா?’ என சிந்தித்தவளுக்கு 
‘ஆமா, நீ சுகமா அவன் மார்புசூட்டில் குளிர் காஞ்சுகிட்டு இருந்தா எப்படி எழுப்புவான்?’ அவள் மனமே அவனுக்கு வக்காலத்து வாங்கியது. 
“ஈஸ்வரி மண்டபத்துக்குள்ள தண்ணி வரப் போகுது சீக்கிரம் ஏறி நில்லு!” என்றவனின் கை முந்தானைக்குள் பதுங்கி யாரும் அறியா வண்ணம் இடை சுற்றி பற்றியிருந்தது. வேகமாய் அவனது காலில் தன் குட்டி பாதங்களை அழுத்தி நின்றுகொண்டாள். 
இதை கண்ட சுமதி கணவனுக்கு கண் ஜாடை காட்ட முதுகு சுற்றியிருந்த முந்தானை நனைந்து குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்தவன்,
“பாரு! உன் அண்ணன் எவ்வளவு கேரிங்கா இருக்கார். அவர் உடன்பிறப்பு நீ இப்படி இருக்கியே… நான் உன் கால்ல ஏறி நிக்கட்டுமா?” என குறும்பு கொப்பளிக்க கேட்க, அறிவிப்பின்றி அவன் காலில் தன் பாதம் ஊன்றி நின்றுகொண்டாள் சுமதி. (என்ன பண்ணுவ… நீ என்ன பண்ணுவ? நீ ஒன்னும் பண்ணலைல அதுக்கு தான் இது )
“ஐயோ! அம்மா!” அவன் கத்திய கத்தலில் அனைவரும் “என்னாச்சு” என பதற, 
“யாராச்சும் காலை மிதிச்சிருப்பாங்க. கூட்டத்தில் இதெல்லாம் சகஜம் அத்தான். சரியாப்போயிடும் விடுங்க…” என சூழலை சரி செய்தாள் சுமதி. 
‘அடிப்பாவி! நீயே மிதிச்சிட்டு சமாதானமும் சொல்வியா?” இறுடி உன்னை வீட்டுக்கு போய் கவனிச்சுக்கிறேன்.’ செல்லக் கோபம் காட்டினான் சசி. (எங்களுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!)
“ஒருத்திக்கு ரெண்டு பேரு பொங்கல் வச்சதால மழை இப்படி பெய்யுது. இது எப்போ விட்டு, எப்போ வீட்டுக்குப் போறது?”
“நல்லா பெய்யட்டும் அத்தை. தண்ணீர் இல்லாம எவ்வளவோ பேர் கஷ்டப்படறாங்க. அதோடு பார்க்கும் போது இப்படி நிக்கிறதெல்லாம் கஷ்டமேயில்லை.” என்ற வீரபாண்டியனை பார்த்து மந்தகாசமாய் சிரித்த அவனது பெரிய அத்தை தெய்வானை, 
“புதுப் பொண்டாட்டியை கால்ல தாங்கி நிக்கிற உங்களுக்கு எத்தனை மணி நேரம்னாலும் கஷ்டமா இருக்காது தான் மாப்பிள்ளை. வயசான காலத்துல நாங்க இப்படி எவ்வளவு நேரத்துக்கு நிக்க முடியும்? ஏன்டி குணவதி, நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுச்சு அதுக்குள்ள உன் மகன் பொண்டாட்டிய இந்த தாங்கு தாங்குறானே… நாளப்பின்ன உன்னை திரும்பிப் பார்ப்பான்னு நினைக்கிற…? பார்த்து சூதானமா இருந்துக்க.” (ஆளுக்கொரு கட்டையை எடுத்து உன்னை மட்டையாக்குறோம் பாரு, எங்கிருந்துடா கிளம்புறீங்க?)
“நல்லா தாங்கட்டும் அண்ணி. என் மகன் இப்படி சந்தோசமா குடுத்தனம் பண்ணனும் நான் வேண்டாத தெய்வம் இல்ல. என் புள்ளை சந்தோசத்தை தவிர வேறென்ன வேணும் எனக்கு?” என கலங்கிய விழிகளை முந்தானை கொண்டு ஒற்றிக் கொண்டார். (சிறந்த மாமியார் பட்டம் ஒன்னு பார்சேல்!)  
‘கழுகு கண்ணு எப்படி தான் பார்த்தாங்களோ… அதுவும் நல்லதுக்கு தான். உங்க சந்தோசம் என்னன்னு எனக்கு தெரியாதாம்மா…? அதான் கூடலுக்கு தயங்கியவளை சமாதானம் பண்ணி ஆத்மார்த்தமான பந்தமாக்கும் முயற்சியை நேற்றே ஆரம்பிச்சுட்டேன். 
அவளுக்காக தள்ளிப்போட்டிருந்தாக் கூட நீங்க கண்டதையும் நினைச்சு வருந்துவீங்க… ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ராணி விஷயத்தில் நாம நடந்துக்கிட்டது தப்பு தான். நான் சுயநலவாதி தான். அதுக்காக என்னை நம்பி வந்தவளை தவிக்க விடமாட்டேன். மனம் ஒத்து இணக்கமாய் குடும்பம் பண்ணுவேன். நீங்க நம்பலாம்மா. இனி முழுசா நம்புவீங்க…’  இதழோர சிரிப்புடன் மகன் நிற்பதைக் கண்ட அன்னைக்கு மனம் நிறைந்துவிட்டது. அவன் மனமும் தெளிவாய் விளங்கிவிட்டது.    
மழை நின்று வீட்டிற்கு கிளம்ப 3 மணி ஆகிவிட்டது. சிரித்த முகமாகவே பெற்றோரை வழியனுப்பி வைத்துவிட்டு தன் குடும்பத்தாருடன் கிளம்பிவிட்டாள். சுந்தரியும் தன் மாமனார், மாமியாரோடு தன் இல்லம் நோக்கி பயணப்பட, மற்ற அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். 
வரும் வழியிலேயே சொந்தங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடு வாசலில் இறங்கிக் கொள்ள மாமனார், மாமியார், கணவன் ஆகியோருடன் வீடு வந்து சேர்ந்தவளுக்கு இதுவரை இருந்த தைரியம் காணாமல் போய் மீண்டும் பயம் வந்துவிட்டது. 
மாமனார் திண்ணையில் நீட்டி நிமிர்ந்து படுத்துவிட, கணவனோ தன் அறைக்குள் புகுந்து கொண்டான். குணவதி மட்டும் வேனில் இருந்து இறக்கி வைத்த சாமான்களை எடுத்து வைக்க, இவளும் சேர்ந்து கொண்டாள் .
“இதெல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் சத்த படு! “
“இல்ல அத்தை, நானும் ஹெல்ப் பண்றேன்” என வேலையில் பங்கு போட மகிழ்ந்து போனார் குணவதி.
“நம்ம காத்தாயியை வரச் சொல்லியிருக்கேன், அவ சாயங்காலமா வந்து சாமானெல்லாம் விளக்கி போட்டுடுவா, ராத்திரிக்கு மெல்ல சமைச்சுக்கலாம். தம்பி படுக்கப் போய் ரொம்ப நேரமாச்சு. நீ போத்தா! நானும் சத்த படுத்துட்டு காபி போடுறேன்!” என நடு பத்தியில் முடங்கிவிட்டார். வீடே பேரமைதியாய் இருந்தது. 
‘சுந்தரி இருந்த போது கூடுதல் கலகலப்பாக இருந்தததோ !’ எனும் நினைவில் இனம் புரியா கவலை மனதை ஆட்கொள்ள தங்கள் அறைக்கு வந்தாள். தலையணையை கட்டிக்கொண்டு தூங்குபவனைக் கண்டதும்,
” சரியான தூங்குமூஞ்சி, எப்போ படுத்தாலும் தூங்குவான் போல… என்னால இப்படி கண்ட நேரத்திலெல்லாம் தூங்க முடியாது! போர் அடிக்குது, என்ன செய்ய?” புலம்பியபடி கட்டிலில் அமர, சட்டென அவள் மடி சாய்ந்து கொண்டவன்,
“போரடிச்சா அம்மா, அப்பா விளையாட்டு விளையாடலாமா ஜில்லு குட்டி?!” என குழைய,
“நகருங்க, ரூமில் தான் இந்த கொஞ்சலெல்லாம். வெளியே போனா எல்லோர் முன்னையும் திட்டுறது, எந்த உதவியும் பண்ணாம வேடிக்கை பார்க்கிறது, இல்ல நீயே கத்துக்கன்னு யாரோ எவரோன்னு இருக்க வேண்டியது. ரெட்டை வேஷம் போட்டுக்கிட்டு கொஞ்சல் என்ன வேண்டிக்கிடக்கு? 
தமிழ் எழுத, படிக்க தெரியாதுன்னு கிண்டல் வேற… எங்க, சைனீஸ்ல ஒரு வார்த்தை சொல்லுங்க பார்ப்போம் ? பிடிக்கலை… உங்களை, உங்க பிஹேவியரை… எனக்கு சுத்தமா பிடிக்கலை!” மடி சாய்ந்திருப்பவனை தள்ள முயற்சித்து புஸ்… புஸ் எனும் கோப மூச்சுக்களை விட்டபடி பொரிந்து கொட்டிவிட்டாள்
சிறு முறைப்புடன், அமர்ந்திருப்பவளை சாய்த்து அவள் மீது படர்ந்து செல்லமாய் தாடை கடிக்க, கோபம் நிற்கவா போகவா என உத்தரவு கேட்க மானம் கெட்ட மனதை அடக்கி வராத கோபத்தை இழுத்து பிடித்து,
“என்ன?” என்றாள் கூடலுக்கு தயாராகிவிட்டானோ என்னும் அதிர்வுடன், அவள் நினைப்பு புரிந்தவானாய்,
“ஒன்னும் இல்லை!” வெடுக்கென மொழிந்தவன், 
“நான் கோவிச்சுக்கலைன்னா அங்கிருந்த வேறு யாராவது திட்டி இருப்பாங்க. புருஷன் திட்டலாம், தப்பில்லை.  அடுத்தவங்களை திட்டவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. அது தான் தப்பு!”
‘சரி தானோ? மற்றவர்கள் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக தான் முந்திக் கொண்டானா ? மாமாவும் இதே நினைப்பில் தான் சொல்லியிருப்பார்களோ? அதனால் தான் அத்தைக்கு வருத்தமோ, கோபமோ இல்லையோ?’ (வீரா ஒரு வார்த்தை சொன்னா, சரி தானோ நான் தான் தப்போன்னு அடங்கி போகுது இந்த பொண்ணு… இதை வச்சுக்கிட்டு சண்டை போடவும் முடியல, சரண்டர் ஆகவும் முடியல… அம்மு யோகா பாவம்ப்பா!)
“ஓய்! என்ன அப்பப்போ இப்படி கனவுலகத்துக்கு போயிடுற இல்ல காணாததை கண்ட மாதிரி வேடிக்கை பார்க்கிற, அதுவும் இல்லைனா டாமை திறந்து விட்டுடுற!? அதென்ன பொசுக்கு பொசுக்குன்னு அழுது வைக்கிற? தன்னம்பிக்கையே இல்லாதவங்களுக்குத் தான் அழுகை வரும்னு எதிலேயோ படிச்சிருக்கேன். உன்னை பார்க்கும் போது அப்படித் தான் தோணுது. 
நான் ஹெல்ப் பண்ணாததால தான் இன்னைக்கு எல்லோரும் உன்னை பாராட்டினாங்க, சுந்தரியோ, நானோ தண்ணீர் இறைச்சு கொடுத்திருந்தா கோவில்ல எப்படி சுலபமா தண்ணி எடுத்திருப்ப? தடுக்கி விழ தருணம் பார்த்துகிட்டு இருந்தவளுக்கு புடவையை சொருகி, குடத்தை தூக்கிக் கொடுத்து எத்தனை உதவி பண்ணியிருக்கேன். மணிக்கணக்கா உன் பாரம் தாங்கி நின்றிருக்கேன். உனக்கு மனசாட்சியே இல்லடி. பிராடு ! ஒண்ணுமே பண்ணலைங்கிற… அநியாயம் ஜில்லு! “
“அப்புறம் ஏன் என்னையே அடுப்பு பத்த வைக்க சொன்னீங்க? பிலீஸ்ன்னு கெஞ்சினேன்ல, ராட்சசன், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம நின்னீங்க!”
“நீ பட்ட கஷ்டமெல்லாம் என்னோட ஒத்த செயல்ல வீணாயிடக் கூடாதுன்னு கையை கட்டிக்கிட்டு நின்னேன்ல… நான் ராட்சசன் தான். உனக்கு உதவி செஞ்சிருந்தா, வீரபாண்டி பொண்டாட்டிக்கு அடுப்புக் கூட பத்த வைக்கத் தெரியலைன்னு ஊரே சொல்லி வந்திருப்பாங்க. நியாயத்துக்கு, இதுக்கெல்லாம் நீ தேங்க்ஸ் சொல்லியிருக்கனும். அதைவிட்டுட்டு சிலிர்த்துக்கிட்டு சண்டைக்கு வர, சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன், அதுக்கு ஒரே அழுகாச்சி. எழுத படிக்கத் தெரியலைன்னா அத்தான்கிட்ட  கத்துக்க வேண்டியது தானே, அதை விட்டுட்டு சொல்லிக் காண்பிச்சுட்டேன்னு அழுகுற… சரியான லூசுடி நீ! “
கணவனின் விளக்கம் நியாயமாய் பட தயக்கமின்றி
“இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? சாரி வீரா ! உங்களை தப்பா நினைச்சுட்டேன். எனக்கு தமிழ்  கத்துத் தருவீங்களா?” ஆர்வமாய் கேட்டாள். 
“நீயே கேட்கும் போது மாட்டேன்னா சொல்வேன்? கேட்கிற  குரு தட்சணையை கொடுக்கிறதா இருந்தா இப்பவே சொல்லித் தரேன்” கண்கள் சிமிட்டி சிரித்தான்.
“தரேன், சொல்லிக் கொடுங்க வீரா!” என அவள் இறைஞ்சியதும் பேப்பரும், பேனாவும் எடுத்து வந்தவன்,
“சொல்லு, நீ கத்துக்க ஆசைப்படுற முதல் வார்த்தை என்ன? “
“விக்னேஸ்வரி!” துள்ளலும், மகிழ்வுமாய் சொன்னாள். தன் பெயரை தாய் மொழியில் எழுதத் தெரியா அவலம் கண்டு பரிதாபப்பட்டவன் மறுப்பின்றி எழுதி காண்பித்தான். எந்த எழுத்தை எப்படி எழுத வேண்டும் என்பது தெரியாமல் பேந்த விழித்தவளைக் மடியில் அமர்த்திக் கொண்டு,
“இது கொஞ்சம் கஷ்டமானது தான். ஈஸியா இருப்பதை எழுது” என கரம்பிடித்து,
“அ…” என சொல்லியபடியே எழுத கற்றுக் கொடுத்தவன்,
“சொல்லு ஜில்லு” என்றதும், அவளும் “அ ” என்றாள். 
“சமத்து! த்….தா…ன்! அத்தான்!” என சொல்லி, கன்னத்தோடு கன்னம் உரசினான். அவள் கரம் பிடித்து எழுத கற்றுக்கொடுத்தாலும், தானே எழுதியது போல் பெரும் மகிழ்வு உண்டாக, அடுத்ததாக இதே போல் அம்மா, அப்பா, அண்ணன், கடைசியாக விக்னேஸ்வரியையும் எழுதிவிட்டாள். 
“இப்படி டெய்லி ஐந்து வார்த்தைகள் கத்துக்கிட்டா போதும் ஜில்லு, சீக்கிரம் நீயும் பிரமாதமா எழுத படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒன்னு ஞாபகம் வச்சுக்க, குரு கேட்குற தட்சணையை கொடுத்திடனும் இல்ல படிச்சதெல்லாம் மறந்து போயிடும்!” என்றான் உண்மை  போலும். 
“தேங்க்ஸ் வீரா! என்ன வேணும் கேளுங்க, தரேன்!” என உண்மையான நன்றி உணர்வுடன் சொல்ல,
“புதுசா உன்கிட்ட என்னடி கேட்கப் போறேன்?” என தன் தேவையை அவள் காதில் கிசுகிசுக்க,
“கெட்ட பையன்! இப்போவா?” என்றாள் மறுக்க முடியாமல்.
“இரவை பளிச்சிடும் பகலாக்குகிறவளுக்கு நேரம் காலம் ஒரு மேட்டரா? ” கண்சிமிட்டி,
“இப்போவே… எல்லாமே வேணும்!”  அவள் புறம் சாய,
“சரியான பட்டிக்காட்டான்!” விலக்க முடியா செல்லக் கோபத்தில் முணுமுணுக்க,
“ஆமாடி, பட்டிக்காட்டான் தான்! நீ மிட்டாய் கடை தான், அதுக்கென்ன இப்போ?” மிரட்டலுடன் தன் வலிவு காட்ட, அவன் ஆண்மையின் தினவில் மயங்கிக் கிடந்தவளுக்கு வார்த்தைகள் மறந்து போயின… தன்னிடம் கட்டுண்டு இருப்பவளிடம் தன் தேவைகளை மிச்சமின்றி கேட்டுப் பெற்றுக்கொண்ட பிறகே விலகினான். இரவு உணவின் போது,
“ஐயா பாண்டி, நாளைக்கு உன் தங்கச்சியும் மாப்பிள்ளையும் ஊட்டிக்கு போறாங்களாம். நீயும் மருமகளை அப்படி எங்காவது கூடி போயிட்டு வாயேன்!” 
‘மாமனாரா சொன்னது?’ எனும் அதிர்வில் தோசை தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“இல்லப்பா, இப்போ முடியாது. சுமதி கல்யாணத்துக்கு இருபது நாளைக்கு மேல லீவ் போட்டாச்சு. நாளைக்கு வேலைக்கு போகனும்!”
“நாளைக்கே போகனுமாய்யா? ஒரு வாரம் இல்லைன்னாலும் ரெண்டு மூணு நாளாவது போயிட்டு வாங்களேன்” என்றார் குணவதி.
“பார்க்கலாம்மா…” என்றதோடு முடித்துக் கொண்டான். காலை 8:30 க்கு எல்லாம் கணவன் அலுவலகம் கிளம்பிவிட அதற்கு முன்னதாகவே மாமனார் வயலுக்கு கிளம்பிவிட்டார். வீட்டை கூட்ட, பாத்திரம் கழுவ பதினோரு மணிக்கு காத்தாயி வந்து விடுவதால் அதற்குள் சமையல் வேலை முடிந்துவிடும். மாமனாரும், கணவனும்  மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கே வந்துவிடுவார்கள். துணி துவைப்பதையும், தண்ணீர் இறைப்பதையும் தவிர இவள் செய்வதற்கென்று பெரிதாக வேலைகள் எதுவுமில்லை. 
அதிலும் ஆண்களின் துணி சலவைக்கு போய்விடும். தன் உடைகளை கைகளால் துவைப்பதே அவளுக்கு பெருங்கஷ்டமாக இருந்தது. இவளது சிரமம் கண்டு குணவதியே துவைத்து போடுவதாக சொன்னதும், பெரியவர்களிடம் அதுவும் மாமியாரிடம் துவைக்க கொடுப்பதா என்று தயங்கி, தானே மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். 
துணிச் சோப்பு கைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. தோள் உரிந்து ஆங்காங்கே கைகளில் சிறு தடிப்புகள் உண்டாகி வலியை ஏற்படுத்தின. அதோடு நீர் இறைப்பதற்குள் உயிர் போகும் வலி வந்து போனது. அதைத் தவிர கஷ்டம் என்று எதுவுமே இல்லாமல் அடுத்த இரண்டு நாட்களும் கடந்தது. இதை கணவனிடம் சொல்லலாம் தான்… ஒரே வார்த்தையில் போகப் போக பழகிவிடும்! என்று சொல்லிவிடுவான். இதற்கு சொல்ல வேண்டியதே இல்லை என தன் கஷ்டங்களை அவனிடம் காட்டிக் கொள்ளாமலேயே இருந்தாள். 
மீதம் திங்கள் சொல்லுவான்…
                                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!