அழைத்தவன் அல்லது அழைத்தவள் மட்டும் முன்னே இருந்தால் அவர்களை கொன்று விடும் ஆத்திரம் கிளம்பியது.
இன்னொருவனின் அந்தரங்கத்தை வெளிச்சமிட்டு காட்டுபவன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியும்?
படத்தை டெலீட் செய்துவிட்டு… சற்றும் யோசிக்காமல் காலை கட் செய்தாள்.
மீண்டும் கால்… மீண்டும் கட்… இப்படியாக சுமார் பத்து முறை நிகழ, அதற்கும் மேல் அவளுக்கு பொறுமை இல்லை!
பேசியை ஆப் செய்துவிட்டு, கல்லூரிக்கு கிளம்பினாள்.
உணவுண்ணவும் பிடிக்காமல் அப்படியே கிளம்ப பார்க்க பைரவி தான் விடாப்பிடியாக அமர வைத்து வாயில் திணித்து விட்டார்.
அவளிருந்த மனநிலையில் உண்பவை எல்லாம் வெளியே வந்துவிடும் போல தோன்றியது. ஒரு பிடி கூட உள்ளே செல்லவில்லை. அவளது வெளரிய முகத்தை பார்த்துக் கொண்டே கார்த்திக் டிபனை உண்டு கொண்டிருந்தான்.
“பேபிம்மா… உன்னோட கார் இன்னைக்கு எனக்கு வேணும்… அண்ணிய வர சொல்லி நீ போய்க்கடா…” என்று கூறிய கார்த்திக்கை புரியாத பார்வை பார்த்தாள். அவன் கூறியது எல்லாம் அவளது மூளைக்குள் சென்றால் தானே?
“ம்ம்ம்… என்ன அண்ணா?” என்று கேட்க, அவனது முகம் யோசனையில் சுருங்கியது.
“பிருந்தாவோட போன்னு சொன்னேன் குட்டி…” என்று சிந்தனையோடு மீண்டும் அவன் கூற,
“ஏன்டா… கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு நீ போலாம்ல… வரும் போது ரெண்டு பேருமா வரட்டும்…” என்று பைரவி கூற,
“சரிம்மா…” என்று முடித்துக் கொண்டவனை புரியாமலேயே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல். அவளது மனநிலையை லேசாக புரிந்து கொண்டவன்,
“குட்டி வர்றியா?” என்று கேட்க, அவள் புரியாமல், “ஹான்ன்ன்…” என்று பார்த்தாள்.
“மஹா…” என்று சற்று அழுத்தி அழைக்க,
“என்னண்ணா?” என்று கேட்டாள்.
“காலேஜுக்கு கிளம்பு… நான் விட்டுட்டு உன் காரை எடுத்துட்டு போறேன்… என்னோடது சர்விஸ்க்கு போயிருக்கு…” என்று கூற,
“இல்லண்ணா… நான் இன்னைக்கு பஸ்ல போறேன்….” என்று மறுத்தாள். இப்போது யாரையுமே பார்க்க பிடிக்கவில்லை. என்னவோ மனதை அழுத்தியது.
“அப்படியா?” என்று யோசித்தவன், சரியென்று கூறிவிட்டு பிருந்தாவை பேசியில் அழைத்துக் கொண்டு அந்த பக்கமாக நகர்ந்தான்.
எதையுமே கண்டுக்கொள்ளாமல் காலேஜுக்கு சென்றவள், அங்கும் யாரிடமும் பேசவில்லை. நிச்சயம் நடந்ததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியை கூறியவள், யாரிடமும் ஒட்டாமல் தனித்து அமர்ந்து கொண்டாள். இதயம் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.
ஷ்யாமை அழைத்து பேசவே இல்லை. கோபம் கனன்று கொண்டிருந்தது. வேறு யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள் என்றாலும் இதை பார்த்தும் ஒப்புக்கொண்டு போக அவளென்ன முற்றும் துறந்த முனிவரா?
மெளனமாக அவளை கவனித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா, அவ்வப்போது கார்த்திக்கு தகவல் தெரிவித்தபடி!
பிருந்தா கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறியவள், பின் மௌனமாகி விட, அவளது அந்த மௌனம் பிருந்தாவுக்கே புதிது. எப்போதும் வெண்கல பானையில் சில்லறையை கொட்டியது போல வளவளத்துக் கொண்டிருப்பவளை இப்படி மௌனியாக, எதையோ பறிகொடுத்தவள் போல பார்ப்பது அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.
“பார்க்கவே சகிக்கலங்க… ஏன் இப்படி இருக்கா?” என்று கார்த்திக்கை கேட்க,
“அதுதான்டா எனக்கும் தெரியல… நேத்து நைட்ல இருந்தே இப்படித்தான் இருக்கா… ஒரு வேளை ஷ்யாமுக்கும் இவளுக்கும் ஏதாவது சண்டையான்னு மச்சான் கிட்ட நூல் விட்டும் பார்த்துட்டேன்… அப்படி எதுவுமே தெரியல… அவர் ரொம்ப கேசுவலா தான் நைட் ப்ளைட்ல ஹைதராபாத் போனார்… போறதுக்கு முன்னாடி இந்தம்மா கிட்ட பேசனும்ன்னு அத்தனை தடவை கால் பண்ணி இருக்கார்… ஆனா இது போனை ஆப் பண்ணி வெச்சுருச்சு… என்னன்னே எனக்கு தெரியல பிருந்தா…” என்று கார்த்திக் ஒரு பக்கம் புலம்பினான்.
“அந்த கத்தரிக்காயை விடு… நம்ம மேட்டருக்கு வா…” எனவும்,
“அதென்ன நம்ம மேட்டர்?” என்று கேட்டாள் பிருந்தா.
“மாமா வந்து பேசறேன்னு சொன்னங்கல்ல… விட்டு இருந்தா இந்நேரம் நமக்கும் எங்கேஜ்மென்ட் பண்ணிருக்கலாம்…” என்று கார்த்திக் குறைபட,
“ஆஹா… நீயா பேசியது அன்பே… நீயா பேசியது?” என்று வேண்டுமென்றே அவனை கிண்டலடித்தாள்.
“அடியே… என்ன? லொள்ளா?” என்று குதிக்க,
“ம்ம்ம்… தங்கச்சிய விட்டுட்டு உங்களுக்கு என்னை நினைக்கக் கூட நேரமிருக்கா பாஸ்?” என்று நக்கலாக கேட்டாலும் உள்ளுக்குள் அவளுக்கு அந்த குறை உண்டு.
அது பெரிய குறை இல்லைதான். ஆனாலும் தான் விரும்புபவன், தனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்று விரும்பாத பெண்ணும் உண்டா? இவனானால் பேசும் நேரம் கூட மஹா ஜெபம் புரிகிறானே என்ற எரிச்சலே வந்துவிட்டிருந்தது அவளுக்கு. மஹா அவளுக்கு மிகவும் பிரியமானவள் தான். அவளோடு நட்பை கார்த்திக் மூலமாக வாழ்நாளைக்கும் தொடரலாம் என்ற ஆசையில் தான் கார்த்திக்கின் மேல் ஆசை கொண்டதும். ஆனால் காதலித்த பின், அவன் தன்னையும் நினைக்க வேண்டும் என்று எண்ணுவது தவறா? இல்லையே… ஆனால் கார்த்திக்கு மகாவை தவிர, அவனது குடும்பத்தை தவிர வேறு நினைவே இல்லை என்று குறைபட்டுக் கொண்டாள்.
அதோடு அவனது படமும் ஷ்யாமின் முயற்சியினால் அப்போதுதான் வெளியாகி, நல்ல ஹிட்டாகி இருந்தது.
கார்த்திக்கை பொறுத்தவரை அப்போது அவன் பார்த்துக் கொண்டிருந்த பிரச்சனைகள், மஹா, அப்பா, ஷ்யாம் என கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் பிருந்தாவுக்கு அவன் நேரம் ஒதுக்கவில்லை என்றாலும் அவளை காதலிக்கவில்லை என்றாகி விடாது என்பது அவனது வாதம்.
மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தவன்,
“பிருந்தா, பெட்டர் ஹாஃப்க்கு என்ன அர்த்தம் தெரியுமா?” என்று கேட்க,
“என்ன சொல்லுங்க?” என்று சிறு சிரிப்போடு கேட்டாள்.
“நம்ம வார்த்தைகளை போல நம்ம மௌனத்தையும் பெட்டரா புரிஞ்சுக்குவாங்கன்னு யாரை நம்பறோமோ அவங்க தான் நம்ம பெட்டர் ஹாஃப்…” என்று நிறுத்தியவன், “இப்ப சொல்லு… நீ என்னோட பெட்டர் ஹாஃப்பா(better half) பிட்டர் ஹாஃப்பா(bitter half)?” என்று கேட்க, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவள்,
“ஏன் இந்த பட்டர்(butter) ஹாஃப்பெல்லாம் நீங்க சேர்த்துக்க மாட்டீங்களா பாஸ்?” என்று சிரிக்க,
“சியூர்… அதையும் ஒரு நாள் பார்த்துடுவோம்…” என்று சிரிக்க, முகம் சிவக்க, பேசியை வைத்தாள்.
பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, மஹாவை காணவில்லை. அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீராமை பார்த்து,
“டேய் எங்கடா மஹா?” என்று கேட்க,
“இப்ப தான் எழுந்து போனா…” என்று கூறியவன், “ஏன் அந்த பக்கி ஒரு மார்கமா இருக்கு?” என்று கேட்க, “அதான்டா எனக்கும் தெரியல…” என்று புரியாமல் பார்த்தாள்.
முந்தைய தினம் இவர்கள் அனைவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷ்யாம் மஹா இருவரையுமே ஒருவழியாக்கி இருந்தனர்.
மகாவோ தான் எங்கு போகிறோம் என்பதை உணராமலே கேண்டீனுக்கு சென்று அமர்ந்திருந்தாள்.
அதற்கு முன் தான் மீண்டும் பேசியை உயிர்பித்து இருந்தாள்.
வாட்ஸ்அப்பில் மீண்டும் புகைப்படங்கள்… கிட்டத்தட்ட ஏழெட்டு புகைப்படங்கள்… விரல்கள் தானாக டவுன்லோட் செய்தது…
உலகம் தட்டாமாலை சுற்றியது…
அத்தனையிலும் சௌஜன்யா உடைகளை துறந்திருந்தாள்.
இன்னமும் நெருக்கமாக ஷ்யாம்… காணவே முடியாதபடி இருந்தது…
சட்டென பேசியை கீழே வைத்துவிட்டாள்.
சுற்றிலும் பார்த்தாள்.
பிருந்தா பேசியில் பிசியாக இருந்தாள். நண்பர்கள் அவர்களது வேலைகளில்…
கண்கள் அருவியை கொட்ட தயார் நிலையில் இருந்தது. தொண்டையை அடைக்க, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.
துக்கத்தை தண்ணீர் அருந்தி விழுங்கி விடலாம் என்பது போல இருந்தது அவளது செய்கை…
தன்னையுமறியாமல் எழுந்தவள், திக்கு தெரியாமல் நடக்கத் துவங்கினாள்.
கேண்டீன் சேரில் வந்து தானாக அமர்ந்த பின் தான் அங்கு வந்ததே புரிந்தது.
மீண்டும் அதே எண்ணிலிருந்து கால்…
சைலேன்ட்டில் போட்டாலும், விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தது…
தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணீரை அடக்க நினைத்தாள்.
முடியவில்லை…
“கடவுளே… என்னை ஏன்ப்பா இப்படி சோதிக்கற?” அவளறியாமல் அவள் வாய் புலம்பியது.
ஒருவாறாக தன்னை சுதாரித்துக் கொண்டவள், இனியும் இப்படி புலம்பக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
மீண்டும் மெசேஜ் டோன்!
“நீ இப்போது காலை எடுக்கவில்லை என்றால் இந்த படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வேன்… வசதி எப்படி?” என்று கேட்டு மெசேஜை அனுப்பியிருந்தது அந்த பெயர் தெரியாத யாரோ!
பகீரென்றது!
சோஷியல் மீடியாவிலா?
ஷ்யாமின் மரியாதை என்னாவது? அந்த நேரத்திலும் அப்படித்தான் எண்ணத் தோன்றியது. காதலி என்பது அவளை பொறுத்தவரை அடுத்தது தான். அவன் தன்னுடைய தோழன். அனைத்தையும் தாண்டி மனதை புரிந்து கொண்ட தோழன். அவனது மரியாதையை தானே விட்டுக் கொடுக்கவும் முடியாதே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அந்த வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் வர, அதை திறந்தாள்.
டிவிட்டரில் ஏதோவொரு பிரபல பெயரில் அந்த புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது…
ஷ்யாமின் முகம் தெரியாமல், சௌஜன்யா மட்டும் தெளிவாக இருக்கும் படி இருந்த அந்த புகைப்படத்தில் சௌஜன்யா முழுக்க உடைகளை துறந்து இருந்த நிலையில் ஷ்யாம் அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்த புகைப்படம்.
பார்ப்பதற்கே கண்டிப்பாக கண்கள் கூசும்!
மகாவின் உடல் தடதடவென நடுங்கியது… உள்ளிருந்து கேவல் வெடித்து எழ, சுற்றிலும் இருந்தவர்களை கருத்தில் கொண்டு வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அதற்கும் மேல் அவளால் தாங்க முடியவில்லை.
இது அவன் தான் என்று யாரும் அறிய மாட்டார்கள் என்றாலும், அவள் அறிவாளே… அவளது ஷ்யாமை அவள் அறிவாளே!
அவன் தான் என்பதை அவள் அறிவாளே!
அத்தனையும் பாழ்!
உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டான், அந்த மனநிலை பிறழ்ந்தவன். பிறழ்ந்தவனா? இல்லை பிறழ்ந்தவளா?
இன்னும் புகைப்படங்கள் வந்தால் ஷ்யாமின் மானம் கப்பலேறுவது திண்ணம். யாரை எதிர்நோக்க முடியும்?
மொத்தமாக நிலைகுலைந்து போனாள். நிற்கதியாக நிற்பதாக தோன்றிவிட்டிருந்தது.
உயிரோடு சமாதியாகிக் கொண்டிருந்தாள் மஹா!
செல்பேசி அழைத்தது!
வெறித்துப் பார்த்தவள், கைகள் நடுங்க எடுத்தாள்.
“ஹலோ…” என்றாள் ஹீனமாக!
மறுபுறத்தில் கனத்த மௌனம்!
“ஹலோ…” மீண்டும் அழைத்தாள்… குரல் கனமாகிக் கொண்டிருந்தது.
மறுபுறம் இன்னமும் மௌனத்தை கலைக்கவில்லை!
“யாருங்க நீங்க? ஏன் இப்படி பண்ணீங்க? உங்களுக்கே இதெல்லாம் நல்லா இருக்கா?” தன்னை மீட்டுக் கொண்டவள், சரமாரியாக கேட்க,
“என்ன பிரச்சனையா இருந்தாலும் இப்படி நீங்க பண்ணலாமா?” என்ற அவளது கேள்வியில் அவன் மெல்ல சிரித்தான்.
“பண்ணக் கூடாது தான்… ஆனா ஷ்யாம் உன்னை என்கிட்டே இருந்து வம்படியா பிடுங்கிட்டானே… உன்னை நான் பறிகொடுத்துட்டு இருக்கேனே மஹா…” என்றவனின் வார்த்தைகள் அவளுக்கு புரியவே இல்லை.
“என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது புரியல… ஆனா நீங்க செய்றது பச்சை நம்பிக்கை துரோகம்… தயவு செஞ்சு அந்த பிக்ஸ டெலீட் பண்ணுங்க….” என்று வேதனை நெஞ்சை அடைக்க அவனிடம் கெஞ்சினாள் மகா.
“அவன் இப்படிபட்டவன்னு தெரிஞ்சும் அவனுக்காக பரிஞ்சு பேசறியே மஹா….” வலியோடு அவன் கேட்டான்.
“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்…” அவனிடம் ஷ்யாமை விட்டுக் கொடுக்க முடியாது. விட்டுக் கொடுக்கவும் மாட்டாள்.
“சரி… இன்னும் ஹெச்டி வீடியோஸ் இருக்கு… அதையும் அப்லோட் பண்ணி விடறேன்… பார்த்துட்டு இன்னும் பரிஞ்சுட்டு வா…” அவன் வெகு சாதரணமாக கூற, அவள் தவித்துப் போனாள்.
வெறும் படங்களே அவளை உயிரோடு கொன்று விட்டிருந்தது. இதில் வீடியோ என்றதும் மொத்தமாக செத்து விட்டிருந்தாள்.
“வேண்டாம் விஜய்… ப்ளீஸ்… ஐ பெக் யூ… அப்லோட் பண்ணிடாதீங்க…” என்று கெஞ்ச,
“அப்படீன்னா நான் சொல்றதை கேக்கணும் மகா…” என்று அவன் நிபந்தனை வைக்க,
“என்ன சொல்லுங்க…” என்று கேட்க தயாரானாள்!
“கால் ஆஃப் தி மேரேஜ்…” என்க,
“வாட்?”
“மேரேஜை நிறுத்துன்னு சொல்றேன்…” என்ற விஜய்யின் உத்தரவில் அதிர்ந்து போனாள்.