வீரபாண்டியனின் அலுவலகத்தில் திடீரென பெரும் கூச்சல்.
“இன்னும் எத்தனை நாளைக்கு சார் இப்படி நடையாய் நடக்கனும்? வெளிநாட்டுக்காரன் கிட்ட அடிமையா வேலை பார்க்கிறதை விட சுயமா விவசாயம் பண்ணி பிழைக்கலாம்ன்னு IT வேலையை தூக்கி போட்டுட்டு வந்தா, அந்த ஆசையை வெறுக்க வச்சுடுவீங்க போல!!” என வசை பாடிக் கொண்டிருந்தான் ஒருவன். 
வீரபாண்டியனுக்கு அவனது வேதனை புரிய, நேரில் சந்திக்க நினைத்து அழைப்பு மணியை அழுத்த, உள்ளே வந்த பியூனிடம் என்ன பிரச்சனை என விசாரிக்க,
“அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல சார், சும்மா நாங்களும் விவசாயம் பண்ணுறோம்ன்னு கிளம்பி வந்துடுறானுங்க…!” என அலுத்துக் கொண்டார். 
சில நேரங்களில் வீரபாண்டியனுக்கே இவர்களோடு வேலை பார்ப்பது எரிச்சலாக வரும். இங்கிருப்பவர்கள் அனைவரும் இவனை விட வயதில் முதிர்ந்தவர்கள், பியூன் உட்பட. அதனால் எதிலும் அசைட்டையாய், கடனுக்கு வேலை பார்ப்பார்கள். இவர்களுக்கு ஏற்றது போல் தான் வாடிக்கையாளர்களும் வருவார்கள். தான் சொல்வதே சரியென வம்படிப்பார்கள். புதிய முறை, இயற்கை உரம் இப்படி எதைச் சொன்னாலும், 
“நீங்க சொல்றபடி விவசாயம் பண்ணினா லாபம் பார்க்க முடியாது சார்! ” என்று விடுவார்கள். ஆசைப்பட்டு படித்த பாடமும், விரும்பிய வேலையும் தான் ஆனால் இவர்களது விட்டேற்றியான போக்கும், சோம்பேறித்தனமும் வேலையின் மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டது. தானும் கத்திக் கொண்டிருப்பவனின் நிலையில் தான் இருக்கிறோம் என்பது புரிய, அவனை உள்ளே அனுப்பச் சொன்னான்.
“வணக்கம் சர்!” கடுப்பாகச் சொன்னவனிடம், இதமாய் சிறு முறுவலுடன்,
“வணக்கம், உட்காருங்க!” என இருக்கையை காட்டினான். இவனது அமைதியான பேச்சு அவன் கோபத்தை குறைத்து போலும்,
“பிரச்சனைன்னு புரியுது, என்ன ஏதுன்னு தெளிவா சொன்னீங்கன்னா என்னால ஆன உதவியை செய்வேன். அதுக்கு முன்னாடி எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கும், சிரமத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ” என்றதும் இவன் மீது நன்மதிப்பும், மரியாதையும் உண்டானது அந்த இளைஞனுக்கு.
“என்னையும் மன்னிச்சுடுங்க சர், இவ்வளவு கோபமா கத்தியிருக்கக் கூடாது. ஐ யம் சாரி!” என்றவன் 
“விவசாயம் பண்ணலாம்னு ஆசைப்பட்டு நிலம் வாங்கிட்டேன். எப்படி செய்யனும்? என்ன செய்யனும்ன்னு கேட்டா, ஆளுக்கொன்னு சொல்றாங்க, சிலர் அது கரம்பை, அதுல ஒன்னும் விளையாதுன்னு சொல்றாங்க… சிலர் நெல்லு போடலாம்ன்னும் , சிலர் கடலை தான் வரும்ன்னு சொல்றாங்க . சரி வேளான்துறை ஆட்கள் சரியாய் கைட் பண்ணுவாங்கன்னு இந்த ஒரு மாசமா அலையுறேன் சர்! யாரும் எதுவும் தெளிவா சொல்லமாட்டேங்குறாங்க!” என தன் பிரச்சனையை தெளிவுபடுத்தினான்
பாருங்க Mr…” 
“சிவகுருநாதன்” என அப்பொழுது தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். 
“சிவா, முதல்ல உங்க நிலத்தோட மண்ணை பரிசோதனை பண்ணுங்க, எதுவுமே விளையாத நிலம்ன்னு ஒன்னு கிடையாது. பாலைவனத்தில் கூட செடிகள் இருக்கத் தான் செய்யுது. அடுத்தவங்க சொல்றதையெல்லாம் பத்தி யோசிக்காதீங்க. மண் பரிசோதனை மூலமா உங்க நிலத்தோட வீரியத்தை தெரிஞ்சுக்க முடியும், அதாவது எந்தெந்த சத்து எவ்வளவு இருக்குன்னு கண்டுபிடிச்சுடலாம். அதற்கு ஏற்றது போல் பயிர் பண்ணலாம். 
பொதுவா, முதல் சில மாதங்களுக்கு இயற்கை உரமான தழைச் சத்து, சாம்பல் சத்து, இதெல்லாம் போட்டு ஊட்டம் கொடுங்க. ரெண்டு மூணு முறை நவதானியம் விதைச்சு அது பூக்கும் முன்ன அதையே மடக்கி உழுதுவிடுங்க. நுண்ணுயிரிகள் இருக்க மண்ணு தான் சத்தானது. 
முன்ன இயற்கையாவே இருந்ததை இப்போ கடைகள்ல விக்கிறாங்க. அதோட பசுஞ்சாணம், கோமயம் வெல்லக்கரைசல் எல்லாம் சேர்த்து தொழு உரம் தயார் பண்ணி போடுங்க அதிக அளவில் நுண்ணுயிர்கள் வந்துடும் மண்ணும் ஆரோக்கியமா மாறிடும். அதுக்குள்ள பயிர் தொழிலுக்கு அத்தியாவசியமான  தேவைகள் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டீங்கன்னா விவசாயம் பண்ண ஆரம்பிச்சுடலாம். 
நிலத்தோட நீர் வரத்து என்ன? ஏரி பாசனமா இல்ல சொந்தமா கிணறு இருக்கா, இலவச கரண்ட் இருக்கா? அரசு நிறைய மானியம் கொடுக்குது, சொட்டு நீர் பாசனம் கூட போடலாம்” என ஆரம்பித்து, ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களின் உபயோகம், பூச்சி வராமல் தடுக்கும் வழிகள் என பெரிதாய் விளக்கம் கொடுத்தான். 
அரிச்சுவடியே தெரியாமல் வந்தவனுக்கு ஓரளவிற்கு விவசாயத்தையும், அதில் உண்டாகும் லாபநட்டங்களையும் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் அவனோடு பேசியதில், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி இறுதியாய் விற்பனைக்கு அனுப்பும் வரை அடுத்தடுத்து செய்ய வேண்டியவையும் விளங்கின.
“சர், உங்களை மாதிரி நாலு பேர் இருந்தா போதும், என்னைப் போல நிறைய பேர் விவசாயம் நோக்கி திரும்பிடுவாங்க. ரொம்ப நன்றி சர்!” என விடை பெற்றான். 
‘நம் நாட்டில் இது ஒரு சாபக்கேடு, கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு சிறந்த ஆசானோ, வழிகாட்டியோ கிடைப்பதில்லை அதற்காக இதை இப்படியே விட முடியாது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும். 
எதற்காக சம்பளம் வாங்குகிறோமோ அதைக் கூட செய்ய முடியாமல் தான் இன்று அதிகம் பேர் இருக்கிறார்கள். இவர்களை நம்பி பிரயோஜனமில்லை. வேறு எப்படி விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்வது?’ எனும் யோசனையும், விட்டேற்றியான வேலைக்காரர்களின் மீது கோபமுமாய் வீடு வந்து சேர்ந்தான்
‘எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் வயதில் சிறியவன் என்றால் அவனுக்கு கிடைக்கும் மரியாதை குறைவு தான். என்ன சொன்னாலும் அதெல்லாம் சரியாய் வராது, உங்களுக்கு அனுபவம் பத்தாது என தட்டிக்கழிக்கவே பார்ப்பார்கள். கடுமையாக நடந்து கொண்டாலும், கண்கொத்திப் பாம்பாய் இருந்தாலும், கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி விடுவார்கள் பழம் தின்று கொட்டை போட்ட அந்த அதிகாரிகள். 
அதிகபட்சமாய் மெமோ கொடுப்பீர்களா? சந்திக்கத் தயார் என்பார்களே தவிர தன் கடமையை செய்யவும், அதன் மூலம் அடுத்தவர்களுக்கு உதவவும் முன் வரமாட்டார்கள்.’ எனும் சிந்தனையே மனதை அரிக்க, மனைவியின் வீரா என்னும் அழைப்பு எரிச்சலுற செய்தது. அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால்,
“வீரா, காபி கொண்டு வரட்டுமா?” என அவன் தோள் பற்றி உலுக்க,
“ஷட்டப், விரான்னு கூப்பிடாதான்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? அத்தான்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா இருக்கா?” மனைவியும் தன்னை மதிக்கவில்லை என்பது போல் தோன்ற, கத்திவிட்டான்.
“நம்ம ரூம்ல கூப்பிடலாம்னு சொன்னிங்களே…”
“அத்தான்னு கூப்பிடுன்னு கூட தான் ஆயிரம் முறை சொல்லிட்டேன்… அது உன் புத்திக்கு எட்டலைல? மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்குற? வெளிநாட்டுல வளர்ந்திருந்தாலும் இப்போ இந்த கிராமத்தானோட மனைவிங்கிறது நினைப்பு இருக்கட்டும். அதுக்கு ஏத்தது போல உன்னை மாத்திக்கோ. அடிக்கடி சொல்ல வைக்காத! 
ஆபிஸ்ல இருந்து வந்தவனுக்கு முதல்ல தண்ணீர் கொடுக்கப் பழகு! இதை கொண்டு வரவா, அதை கொண்டு வருவான்னு கேட்காத. கெட் லாஸ்ட்!” இருந்த கோபத்தை எல்லாம் அவளிடம் கொட்டிவிட்டான். தன் தந்தை, அன்னையிடம் அப்படியெல்லாம் கோபப்பட்டு பார்த்திராதவளுக்கு இது நாகரீகமற்ற செயலாய் தெரிந்தது. 
‘நான் என்ன இவன் அடிமையா? காபி தரவான்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுக்கு இவ்வளவு கோபமா? போ, உன்னை எல்லாம் அத்தான்னு கொஞ்ச முடியாது.’ முடிவெடுத்தவளாய் தண்ணீர், பலகாரம், காபி அனைத்தையும் கொண்டு வந்து வைத்துவிட்டு போய்விட்டாள். கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டதில் மனம் சமனப்பட,
‘ரொம்பவும் கத்தி விட்டோமோ? (கொஞ்சம் ஓவர் தான்!) வருந்துவாளோ? சாரி சொல்லனுமா… அவசியமில்லை. தப்பு பண்ணினா… நான் திட்டினேன். இதுக்கு எதுக்கு சாரி சொல்லனும்?’ (புத்திக்கார புருஷன் சமாதானம் பண்ணுவான், கெட்டிக்காரன் சாரி கேட்பான்! இப்போ பாப்போம் நீ யாருன்னு?) அமைதியாய் அவள் நடவடிக்கைகளை நோட்டமிட, முகம் வாடி ‘உம்’ என்று இருந்தாள். இயல்புக்கு கொண்டு வரும் முயற்சியில், 
“ஈஸ்வரி, ஈஸ்வரி…!” என அழைத்துவிட்டு காத்திருக்க, கணவன் சொல்லிக் கொடுத்த தமிழ் பாடத்தை எழுதி பழகிக் கொண்டிருந்தவள் அதை அப்படியே விட்டுவிட்டு அவன் முன் வந்து நின்றாள்.
‘என்னன்னு கேட்கிறாளா பாரு? கொலு பொம்மை மாதிரி நிக்கிறா?’ தான் அழைத்ததுமே சமாதானமாகி இயல்புக்கு வந்துவிட வேண்டும் என எண்ணியிருந்தவனுக்கு அவளது செயல் கோபமூட்டியது. (நீங்க பேசுனாவே சமாதானம்ன்னு நினைக்கனுமா, சங்கூதுர வயசுல உள்ள சங்கீதாவை கட்டியிருக்கனும் தம்பி!) இருந்தும் அமைதியாகவே,
“என் லேப்டாப் பாக் -ஐ எடு!” ஆணையிட, மறுப்பின்றி எடுத்துக் கொடுத்தாள்.
நல்ல நாளிலேயே முகம் பார்க்க மாட்டாள்… இப்போ சுத்தம். நான் என்ன அவ்வளவு டெரராவா இருக்கேன் ‘ (வயலெண்டா பேசிட்டு இப்போ சைலண்ட்டா யோசிக்குறியா) தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டவன் வாசல் நோக்கி சென்றவளிடம்,
“ஈஸ்வரி, பீரோவுக்குள்ள ப்ளூ கலர் பைல் இருக்கும். எடு!” அதையும் எடுத்துக் கொடுத்தாள். மீண்டும் வெளியே போக எத்தனித்தவளை,
“ஈஸ்வரி சட்டை பையில் இருந்து பேனாவை எடு!”
‘இப்படி வேலை ஏவுறதுக்கு தான் கல்யாணமும், பொண்டாட்டியும் போல!’ என எரிச்சலான எரிச்சலாய் வந்தது அவளுக்கு. 
பேனாவை வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, பட்டென மெத்தையில் வைத்துவிட்டு நகர முயன்றவளின் கரம் பிடித்து நிறுத்தியவன்,
“கையில கொடுக்காம வச்சுட்டு போற, திமிரா? நானும் பார்த்துகிட்டே இருக்கேன், அப்படி என்ன வீம்பு? தப்பு பண்ணினா திட்டாம கொஞ்சுவாங்களா? சொல்றதை மட்டும் செய்யுற ரோபோவாடி நீ…?” முறைப்பாய் கேட்க,
“ஆமா, ரோபோவா தான் இருந்திருக்கனும். ஆளுக்கு ஏத்த மாதிரி பேரும், அழகா இருக்கேன்னு ஆசைப்பட்டு கூப்பிட்டிருக்க கூடாது. தப்பு தான், இனி வாயே திறக்கமாட்டேன். போதுமா?”
“இல்லைன்னாலும் கலகலன்னு பேசிட்டு தான் மறுவேலை பார்ப்ப?” ஆசையாய் கூப்பிட்டேன் என்றதும் திட்டவும் மனம் வராமல், 
“சரி, இந்த பிரச்சனையை இதோடு விடு. உம்ன்னு இருக்காத. பார்க்க சகிக்கலை!” என தோள் குலுக்க,
“அப்போ பாக்காதீங்க!” 
நீ வருந்துவது பார்க்க மனம் தாங்கவில்லை என்பது தான் சொல்ல வந்த செய்தி. நேரடியாக சொல்லிவிட்டால் மனைவிக்கு கொம்பு முளைத்துவிடும் என்னும் பயம் போலும், கிண்டலாய் சொல்ல… அது புரியாமல் சினந்தாள்.
‘என்ன ஒரு திமிர்!’ அவனும் சினந்தான். 
“ஈஸ்வரி, பதிலுக்கு பதில் வாயாடாத!” 
“அதுக்கு ஊமைப் பெண்ணா பார்த்து கட்டிருக்கனும். “
“வாயை மூடு! கொஞ்சம் கூட பொறுமையும் கிடையாது. பொறுப்பும் கிடையாது. என் தங்கச்சிக்காக தான் உன்னை கட்டிக்கிட்டேன். இல்லைன்னா உன்னை எல்லாம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டேன்!” சொல்லிவிட்டான்.  (கேட்காமலே வரம் கிடைச்சா, நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ!)
பொருத்தமில்லாத ஜோடி என்னும் நெருடல், இது வரை இவள் அறியாத உண்மை இன்று வார்த்தையாக வந்துவிட்டது. 
‘இதுக்கு நீ என்னை கட்டாமலேயே இருந்திருக்கலாம். நின்ற திருமணம் நின்றதாகவே போயிருக்கும். விருப்பமில்லாமல் இந்த பந்தத்தில் இணைந்ததால் தான் தொட்டதற்கெல்லாம் குற்றம் சாட்டுகிறாய். நம் இருவரையும் இணைத்து பேசியதால் தான் மணந்தேன் என்று சொல்லியிருந்தால் கூட மனம் ஏற்றுக் கொண்டிருக்கும்.
உன் தங்கையின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக மணந்து நம் இருவர் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டாயே? என் அண்ணன் உன்னைப் பற்றி சொன்னதை எல்லாம் வைத்து தப்புக் கணக்கு போட்டுவிட்டேன்!’ பெரும் வலியை அவள் கண்களில் கண்டவனுக்கு தன் தவறு புரிந்தது
ச்சே!… அவளுக்கு பொறுமை இல்லைன்னு சொல்லிட்டு, இப்போ நானே உளறிட்டேனே!’ நொந்தவன் ,
“ஈஸ்வரி…” என அவள் அருகே வர, (வார்த்தையை கொட்டிட்டு, இப்போ என்ன ஈஸ்வரி… say ஐம் சாரி)
“போதும்” கரம் குவித்து, உணர்ச்சிகளற்ற வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு வெளியேறிவிட்டாள்.
‘எனக்கு என்ன ஆச்சு? வந்ததில் இருந்து ஏன் இப்படி அவள்கிட்ட நடத்துகிறேன்… திட்டினதோட விட்டுத் தொலைச்சிருக்கலாம். சீர் செய்யப் போய் விரிசல் இன்னும் அதிகமானது தான் மிச்சம். ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டோமோ? அந்த சுதாகர் வேண்டாம்ன்னு சொன்னதால தான் இந்த உறவே. இல்லைன்னா, அவள் ரேஞ்சுக்கு என்னையும் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டா தான்! சொல்லிக் காமிச்சிட்டேன்… தப்பு பண்ணிட்டேன்!!’ என மறுகினாலும் சரி செய்யும் வகை தெரியாமல் அமர்ந்துவிட்டான். 
“குணவதி…” என்னும் அழைப்புடன் நாத்தனார் கூட்டமும், அண்டை வீட்டுப் பெண்களும் வர,
“எல்லோரையும் வாங்கன்னு கூப்பிட்டு, உன் நகையெல்லாம் கொண்டு வந்து காட்டுத்தா! அதுக்குத் தான் வந்திருக்காங்க. ”  என குறிப்பு காட்டிவிட்டு வரவேற்க சென்றுவிட்டார். 
“இது வேறயா?” என முணுமுணுத்தாலும், அத்தை சொன்னபடி நடுப்பத்தியில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி பொதுவாக, “வாங்க” என வரவேற்க,
“நான் உன் பெரியம்மா முறை ஆகனும். இவ அயித்த, அவ நாத்தனா… இப்படி மொட்டையா வாங்கன்னு சொல்லக் கூடாது. வாங்க பெரியம்மா, வாங்க அண்ணி, வாங்க அத்தைன்னு பாசமா கூப்பிடனும். இதெல்லாம் உன் மாமியா சொல்லிக் கொடுக்கலையா? எங்க… அவளுக்கே சமத்து பத்தாது! நீயும் அவளைப் போல தான்” பேசிக் கொண்டிருந்தவர், வாயை இறுக மூடிக் கொண்டார்.
‘இவ்வளவு நாள் அம்மாவை சொன்னது பத்தாதுன்னு இப்போ இவளையுமா?!’ என்பது போல் முறைப்புடன் வந்து கொண்டிருந்தான் வீரபாண்டியன்.
“ஐயா பாண்டி, நீ எப்போ வந்த?”
‘ஆத்தாகாரிய சொன்னாவே தாண்டி குதிப்பான்… ஒரு வாரத்துக்கு வீட்டுப் பக்கம் வரவிடாம துரத்துவான். இவன் இருக்கிறது தெரியாம இவன் பொண்டாட்டியை வேற சொல்லிட்டேனே… என்ன செய்வானோ?’ என்பது போல் பேந்த விழிக்க
“வாங்க பெரியத்தை… நாங்க எல்லோரும் குடும்பத்தோட கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கோம். இன்னொரு நாளைக்கு வாங்களேன்… சாவகாசமா பாக்கலாம். அம்மா, சீக்கிரம் கிளம்புங்க!”
‘இவன் ஆத்தாகாரியை சொல்றானா இல்ல நம்மளைத் தான் சொல்றானா…?’ என யோசித்தாலும்,
‘எதுவாக இருந்தாலும் சரி தான். இன்னைக்கு பார்க்காம போகக் கூடாது.’ என கங்கணம் கட்டிக் கொண்டவர் போல்,
“அதுக்கென்ன பாண்டி, நல்லா போய்ட்டு வாங்க. உன் ஆத்தா தயார் ஆகுறதுக்குள்ள நாங்க பார்த்து முடிச்சிருவோம். நீ வெரசா போய் எடுத்தா ஆத்தா!” என கட்டளையிட,
‘உள்ள பிரச்சனை போதாதுன்னு இவங்க வேற, நாசூக்கா சொன்னா தெரியாதோ… என்னையே பட்டிக்காட்டான்னு சொல்லுவா, இவங்க எல்லாம் கிராமத்து மானத்தை வாங்காம விட மாட்டாங்க போல!’ என அவளை பின் தொடர்ந்தவன், அலமாரியின் கதவை விரியத் திறந்து வைத்து, நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டிருந்தவளை அப்படியே சிறை செய்து, மிக நெருக்கத்தில் நின்றபடி,
“சாரி ஈஸ்வரி…” அவனை கண்டுகொள்ளாது தன் போக்கில் நகைகளை எடுத்துக் கொண்டிருந்தாள்
“கோபத்துல சொல்லிட்டேன்… சாரிடா!” உண்மையாகவே வருந்தித் தான் மன்னிப்பு வேண்டினான். அவளோ, 
“பரவாயில்லை! உண்மையைத் தானே சொன்னீங்க…” என்றாள் திரும்பி பார்க்காமலேயே, சண்டை போட்டிருந்தாலோ அன்றி வழக்கம் போல் பேசாமல் இருந்திருந்தால் கூட அவனை அதிகம் பாதித்திருக்காது போலும். உணர்வுகளை துடைத்து அவனுக்கு சாதகமாய் உண்மை தானே என்றதும்,
‘ரொம்பவும் வருத்தி விட்டோம்!’ எனத் தவித்தவன்,
“ப்ளீஸ் ஈஸ்வரி… கோபத்தில் சொன்னது தானே? மறந்துடேன்!” 
“எனக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளல் நீங்க, உங்களுக்கு இல்லாத உரிமையா? கோபத்திலன்னு இல்ல… சும்மாவே கூட சொல்லிக் காட்டலாம்!” என்றவளுக்கு எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் மளுக்கென கன்னம் தொட்டுவிட்டது கண்ணீர்!
“ஜில்லு, ப்ளீஸ் அழாத… ரியலி சாரி! மன்னிச்சுடும்மா. முதல் முறை உன்னைப் பார்த்தப்பவே நீ என்னைவிட ரொம்பவும் சின்னப் பெண்ணா… குட்டியா தெரிஞ்ச… நீயே பாரு ரொம்ப குட்டியா சின்னதா தானே இருக்க…? என் தங்கச்சி வாழ்க்கை மட்டும் கேள்விக்குறியாகாம இருந்திருந்தா நிச்சயமா நான் உன்னை கட்டியிருக்க மாட்டேன் தான் ஜில்லு. அதுக்கு அர்த்தம் நீ என்னைவிட மட்டம்ங்கிறது இல்லடா. எனக்கும் உனக்கும் பொருத்தம் இல்லைங்கிறது தான்.” 
பீரோவில் பதித்திருக்கும் கண்ணாடியின் முன் நிறுத்தி அவளுக்கு வெகு அருகில் பட்டும் படாமலும் பின்னால் நின்றபடி சொல்ல அவன் சொல்வது உண்மை என்று தான் தோன்றியது அவனோடு ஒத்து பார்க்கும் போது குறைவான உயரத்துடன் பொருத்தம் இல்லாமல் இருப்பதாய் தோன்ற, கோபம் காணாமல் போனது.  
“ஈஸ்வரி, இன்னும் என்னத்தா பண்ற?”
“விடுங்க, கூப்பிட்றாங்க! எனக்கு உங்க மேல கோபமோ, வருத்தமோ இல்ல… நகருங்க ப்ளீஸ்!” வாய் தான் சொன்னதே தவிர வருத்தமான வருத்தம் என்பதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.
“உன்னை ஹர்ட் பண்ணிட்டேன், உண்மையாவே தப்புன்னு உணர்றேன்… மன்னிச்சுடு கண்ணம்மா!” கன்னத்தில் முத்தமிட்டு விலகிக் கொண்டான். ஏனோ அதற்கு மேல் வருந்துவதும் அபத்தமாய் தோன்றிவிட, சிறு சிரிப்புடன் கன்னம் துடைத்து விலகிச் சென்றாள். 
அலுவலகத்தில் நடந்த நிகழ்வின் தாக்கம் தான் இன்றைய மோசமான மனநிலைக்கு காரணம் என்பது புரிய, ஏதேனும் மாற்று கண்டுபிடித்தே ஆக வேண்டுமென தந்தையுடன் பேசச் சென்றுவிட்டான். 
நகைகளை பார்வையிட்டு, எல்லாம் புது மாதிரியாகத் தான் இருக்கிறதென அரைமனதாய் பாராட்டிவிட்டு அனைவரும் வீடு நோக்கி கிளம்ப, நகைப்பெட்டி வைப்பதற்காக தங்கள் அறைக்குள் சென்றதும் பவர் கட்டாகிவிட்டது. சுற்றிலும் ஒரே இருட்டு, இந்த திடீர் நிகழ்வால் திடுக்கிட்டு,
“வீரா… வீரா… ப்ளீஸ், வேகமா வாங்க..!” என பயந்து நடுங்க, வாசல் நோக்கி சென்றவர்களின் காதிலும் அது விழுந்து தொலைக்க,
“என்னய்யா, உன் பொண்டாட்டி உன்னை பேர் சொல்லித் தான் கூப்பிடுவாளா? நல்லாத் தான் போ!” என நொடித்துக் கொண்டனர்.
“இந்த மண்ணாங்கட்டிக்கு தான் வீரான்னு சொல்லாதேன்னு தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன். மானத்தை வாங்கிட்டா! இது தான் இன்னும் ஒரு வாரத்துக்கு பேச்சா இருக்கும். ச்சை! இவளைக் கட்டிக்கிட்டு…!” கோபமும், எரிச்சலுமாய் தங்கள் அறை நோக்கிச்  சென்றான்.
நடந்ததென்ன நாளை சொல்லுவான்….  

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!