paadal thedal- 11(1)

11

அவமானம்

 மீனாவின் பள்ளி ஆண்டுவிழா ரொம்பவும் பிரசித்தியாக நடந்து முடிந்தது. முதலாம் வகுப்புகளில் அன்புச்செல்வி கல்வியில் முதலிடம் பெற்று ஒரு கோப்பையை வாங்கி செழியனை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டாள். அவள் தன் தாயை இழந்த துயரத்திலிருந்து மீண்டு இந்த வெற்றியை பெற்றிருப்பது அத்தனை சாதாரணமான விஷயம் அல்லவே.

ஒரு சிறந்த தந்தைக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்ட பெருமைமிகு தருணமாகவே அந்த வெற்றியை கொண்டாடினான் செழியன்.

அதே ஆண்டுவிழாவில் மீனா ஆடிய நடனமும் எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்டது. அவள் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாமல் அத்தனை அசத்தலாக ஆடியிருந்தாள். அங்கே வந்த எல்லோரின் மனதிலும் மீனா ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்தாள். எல்லோரும் மீனாகுட்டியின் திறமையை கண்டு வியந்து ஜானவியை பாராட்டி தள்ளினர்.

ஆனால் அவள் ஆடிய நடனத்திற்கும் இவளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. எல்லாமே அவள் ஆசிரியர் கொடுத்த பயிற்சிதான். சொல்ல போனால் தன் மகளிடம் இப்படி ஒரு திறமை இருப்பதை ஜானவியே இப்போதுதான் கண்டுகொண்டாள் என்று சொல்ல வேண்டும்.

இப்படியாக அந்த ஆண்டுவிழா குதூகலமாக முடிந்து அந்த சின்ன வாண்டுகளுக்கு விடுமுறையும் வந்தது. இந்த நிலையில் ஜானவி சொல்லியும் கூட மீனாவிற்கு தன் அம்மம்மாவின் வீட்டிற்கு போக விருப்பமில்லை.

அன்புச்செல்வியோடு அந்த விடுமுறையை கழிக்கவே அவள் விருப்பப்ட்டாள். இருப்பினும் ஜானவி கட்டாயத்தின் பேரில் மீனாவை ஒரு பத்து நாள் கிரிஜா வீட்டில் தங்கவிட்டு வந்தாள். ஆனால் ஜானவி அப்போதும் கூட அந்த வீட்டின் வாயிலை மிதிக்கவில்லை.

இதற்கிடையில் மும்முரமாக ஜானவியின் தங்கை ஜமுனாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலங்கள் வேறு நிகழ்ந்து கொண்டிருந்தன. ஜானவி அதில் பெரிதாக தலையிட்டு கொள்ளவுமில்லை.

மீனாவும் அன்புச்செல்வியும் இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தனர். ஜானவி அந்த குடியிருப்பிற்கு வந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜானவிக்கு அவள் வேலையை கவனிக்கவும் மகளை கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவளுக்கு கீழாக இரண்டு பேர் அவள் தொடங்கிய பங்குச்சந்தை நிறுவனத்தில் உதவிக்காக அமர்த்தப்பட்டனர். பெரிதாக இல்லாமல் அவள் வீட்டிலேயே அவர்களும் பணிபுரிந்தனர்.

எதிர்ப்பார்த்ததை விடவும் சொந்த முதலீடுகளில் பன்மடங்கு லாபம் பார்த்தாள் ஜானவி. அவளின் இந்த அபிரமிதமான வளர்ச்சியை பார்த்து அவள் குடும்பமும் கூட வியப்பில் ஆழ்ந்தது. அவள் குடும்பத்திற்கு வேண்டிய செலவுகளுக்கு என்றாவது பணம் கொடுப்பாள். அதுவும் அவர்களாக கேட்டால் மட்டுமே.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஜானவி செழியனின் நட்பு… வெறும் ஆண் பெண்ணின் சாரசரியான உணர்வுகளுக்கு அடிபணியாமல் இயல்பாகவும் அழகாகவும் தழைத்து ஓங்கி வளர்ந்திருந்தது. ஆனால் அவர்களின் அந்த  அழகான நட்பு அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ளோர் பலரின் பார்வையிலும் உறுத்தி கொண்டிருந்தது. புரளி பேசுபவர்களுக்கு எல்லை கோடுகளே கிடையாது. அவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் நாம் யாரும் வாழவே முடியாது.

ஆதலால் ஜானவியும் செழியனும் அரத்தமற்ற அவர்களின் அவதூறான பேச்சுக்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பவில்லை. இந்த அல்ப காரணங்களுக்காக  அவர்கள் தங்கள் நட்பை விட்டு கொடுக்கவும் விழையவில்லை.

ஆனால் விதி அவர்களை உறவாக இணைத்தே தீருவேன் என கங்கணம்கட்டி கொண்டிருக்கும் போது யார்தான் என்ன செய்ய முடியும்?

அன்று அவர்களின் விதி ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டை தொடங்கியது

காலையிலேயே குளித்து முடித்து ஜானவி அழகான சிவப்பு நிற சரிகை புடவை அணிந்து கொண்டாள். எப்போதும் அவள் அணியும் கண்ணாடி இப்போது கொஞ்ச நாட்களாக இல்லை. கண்டெக்ட் லென்சுக்கு மாறியிருந்தாள். அவள் முகத்தில் அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்த போதும் அழகாகவும் இருந்தது.

அவளின் அடர்த்தியான புருவங்களின் கீழ் அந்த விழகள் இயல்பை விடவும் கொஞ்சம் அழகாக புலப்பட, என்றுமில்லாமல் அன்று அவள் கொள்ளை அழகாக இருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

ஜானவி மீனாவிற்கும் அதே வண்ணத்தில் ஒரு பட்டுபாவடையை உடுத்திவிட்டாள். மீனாவோ எப்போது அந்த சாக்லேட் பாக்ஸை கையிலேந்துவோம் என்று அதேயே குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தாள்.

ஏனெனில் அன்று மீனாவின் பிறந்த நாள். “ம்மா ஸ்கூலுக்கு போய் குடுக்கலாம்… பிரேயர்ல பர்த்டே சாங் எல்லாம் பாடுவாங்க” என்று ஆசையாக சொன்ன மகளிடம், “இன்னைக்கு உனக்கு ஸ்கூல் லீவ் மீனு” என்றாள் ஜானவி!

“இன்னைக்கு ஏன் லீவ் விட்டாங்க?” என்று அந்த குழந்தை தன் சின்னஞ்சிறு ஆசைகள் நடக்காத ஏமாற்றத்தில் ஆழாத குறையாக கேட்க,

“இன்னைக்கு சேட்டர் டே மீனு… நான் என்ன பண்ணட்டும்… வேணா நீ மண்டே ஸ்கூலுக்கு போய் உன் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் சாக்லேட்ஸ் கொடு” என்று ஜானவி நிதானமாக சொல்ல, மீனா முகம் வாடி போனது. கண்ணீரும் அருவி போல் கொட்ட ஆரம்பித்தது.

“பிறந்த நாள் அதுவும் அழ கூடாது செல்லம்… அம்மா உனக்காக ஒரு பெரிய கிஃப்ட் வாங்கி வைச்சிருக்கேன் தெரியுமா?” என்று ஜானவி அவளிடம்சொன்னதுதான் தாமதம்.

“என்ன கிப்ட்? என்ன கிப்ட்? இப்பவே வேணும்” என்று அவள் ட்ரேக் மாறி இப்போது கிஃப்டிற்காக் அடம் பிடித்து அழ ஆரம்பித்தாள். ஜானவி கடுப்பாகி, “ஐயோ முடியலடி உன் கூட… முதல நாம அன்பு வீட்டுக்கு போய் சாக்லேட் கொடுத்துட்டு வரலாம்” என்றாள்.

அந்த வார்த்தைகளை கேட்ட மீனா ஒருவாறு சமாதானமாகி அந்த சாக்லேட் பாக்ஸை கையில் வாங்கி கொள்ள ஜானவி மகளிடம்,

“அங்கே  போய் யார்கிட்டயாச்சும் கிஃப்ட் கேட்டியோ… அப்புறம் அம்மா வாங்கி வைச்சிருக்க கிஃப்டை உனக்கு தரவே மாட்டேன்” என்று கண்டிப்பாக சொல்லி அவளை செழியன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

மூடியிருந்த கதவை திறக்கும் வரை கூட மீனாவிற்கு பொறுமையில்லை. செழியன் கதவை திறந்ததும் தடலாடியாக உள்ளே நுழைந்து தன் தோழியை பார்க்க பாய்ந்து ஓடிவிட்டாள்.

“மீனு” என்று செழியன் குரல் கொடுத்து கொண்டே எதிரே நின்ற ஜானவியை பார்த்து, அவனையும் அறியாமல் அவளின் தோற்றத்தில் அசந்து போனது உண்மை.

பின் அவன் முகம் குழப்பமாக மாற, “இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஜானவி? வித்தியாசமா இருக்கீங்க?” என்று அவன் அவளின் உடை மாற்றத்தையும் முகமாற்றத்தையும் ஆராய்வாக பார்த்து கொண்டே கேட்டான்.

“இன்னைக்கு மீனாவுக்கு பர்த்டே” என்று அவள் சொல்ல,

“மீனாவுக்குத்தானே பர்த்டே” என்றவன் அழுத்தி கேட்டு புருவத்தை நெறிக்க அவள் முறைத்து பார்க்கவும், “சரி சரி… சும்மா சொன்னேன்… உள்ளே வாங்க” என்று அவளை உள்ளே அழைத்தான்.

“இருக்கட்டும் செழியன்” என்றவள் தேடலாய் பார்த்து கொண்டே, “மீனா… சாக்லேட் கொடுக்காம எங்க போன?” என்று கேட்க,

அவன் புன்னகைத்து, “முதல அவங்க பிரெண்டுக்குத்தான்… நம்ம எல்லோருக்கும் அப்புறம்தான் ” என்றான்.

“நீங்க உள்ளே வாங்க ஜானவி… அவங்க பொறுமையா வரட்டும்… வந்து உட்காருங்க” என்றான் செழியன்.

ஜானவி தயக்கத்தோடு உள்ளே வர சோபாவில் அமர்ந்து செய்திதாளில் மூழ்கியிருந்த பாண்டியன்  ஜானவியை பார்த்துவிட்டு, “வா ம்மா… வா… என்னம்மா விசேஷம்?” என்று அவரும் அதே கேள்வியை கேட்கவும்,

செழியன் உடனே, “மீனுவுக்குத்தான் பர்த்டே… ஆனா” என்று அவன் ஏதோ சொல்ல வாய் திறக்க, “செழியன்” என்று ஜானவி முறைத்து பார்த்தாள்.

பாண்டியன் அப்போது, “மீனாவுக்கு பர்த்டே வா? சூப்பர் சூப்பர்” என்று வியப்பாகி விட்டு, “நீ வாம்மா… வந்து உட்காரு” என்றார்.

ஜானவி அங்கே அமர்ந்து கொண்டு மகள் வெளியே வருவாளா என்று பார்க்க பாண்டியன், “லட்சு.. ஜானவி வந்திருக்கா பாரு… ஒரு காபி எடுத்துட்டு வா” என்றார்.

“ஐயோ! அங்கிள் நான் சாப்பிட்டேன்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சந்தானலட்சுமி சமையலறைவிட்டு வெளியே வந்து, “வா ம்மா” என்று அழைத்தவர்,

“என்னம்மா… எதாச்சும் விசேஷமா?” என்று அதே கேள்வியை அச்சு பிசகமால் கேட்டார்.

செழியன் மீண்டும், “அது மீனாவுகுத்தான் பர்த்டே… ஆனா ஜானவி” என்றதும் அவள் கடுப்பாகி, “செழியன் போதும்” அவள் அவனை முறைக்க பார்த்தாலும் அந்த நொடி அவளையும் மீறி கொண்டு சிரிப்பு எட்டி பார்த்துவிட்டது.

சந்தானலட்சுமி, “என்னடா அன்பு?… மாப்பிள்ளை இவர்தான்… ஆனா இவர் போட்டிருக்க ட்ரெஸ் என்னுது இல்ல ங்கற மாறி சொல்லிட்டு இருக்க” என்றான்.

“அதேதான்… எங்கம்மா செம ஷார்ப்… பார்த்தீங்க இல்ல” என்று செழியன் சொல்லி சத்தமாக சிரிக்க ஜானவியின் பார்வை உண்மையிலேயே தீவிரமாக அவனை படையெடுத்தது.

செழியன் உடனே தன் தோரனையை மாற்றி, “இப்ப எதுக்கு ம்மா ஜானவியை கலாய்கிறீங்க… பொண்ணுக்கு பர்த்டேன்னா அம்மா ட்ரெஸ் பண்ணிக்க கூடாதா?” என்று அவள் பேச வேண்டிய வசனத்தை மீண்டும் அவனே பேச,

“அங்கிள் அந்த ப்ளவர் வாஷ்ஷை எடுங்களேன்” என்று பாண்டியனிடம் செழியனை முறைத்து கொண்டே கேட்டாள் ஜானவி.

“வேண்டாம்மா… ப்ளவர் வாஷ் உடைஞ்சிடும்… வேற எதாச்சும் பெருசா” என்று பாண்டியன் தேட,

“அப்பா… யு டூ” என்று செழியன் அஞ்சுவது போல் பாவனை செய்தான்.

சந்தானலட்சுமியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த காட்சியை பார்க்கும் போது அவர் மனம் வேறு சில கற்பனைகளுக்குள் சென்றது. என்று அந்த நாள் வரும் என்று ஏக்கமாக மாறியது.

ஜானவி இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் ஒருத்தியாகவே மாறியிருந்தாள். ஆனாலும் அவள் என்று செழியன் வாழ்வில் முழுமையாக நுழைய போகிறாள் என்ற எதிர்பார்ப்பு சந்தானலட்சுமி பாண்டியன் இருவருக்கும் பெரிய கனவாகவே மாறியிருந்தது.

செழியன் ஜானவியின் உரையாடல்களை பார்த்து கொண்டு சந்தானலட்சுமி அப்படியே நின்றுவிட, “லட்சு பாட்டி” என்று மீனா அவர் முன்னே வந்து நின்றார்.

சந்தானலட்சுமி அவள் கன்னத்தை கிள்ளி, “என் குட்டி வாயடிக்கு… ஹேப்பி பர்த்டே” என்று வாழ்த்தி அவள்  தந்த இனிப்பை எடுத்து கொண்டு அவசரமாக உள்ளே சென்று மீனுவிடம் கொடுக்க ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்துவந்தார்.

“ஐயோ ஆன்ட்டி காசெல்லாம் வேண்டாம்” என்று ஜானவி சொல்ல,

“ம்மா குழந்தைக்கு காசெல்லாம் கொடுக்காதீங்க” என்று செழியனும் உரைத்தான்.

“அப்ப என்னடா குடுக்கிறது” என்று சந்தானலட்சுமி யோசிக்க மீனா அவர் புடவையை பிடித்து இழுத்து, “கட்டி புடிச்சி உம்மா கொடுங்க பாட்டி… எங்க அம்மம்மா அப்படிதான் கொடுப்பாங்க” என்றாள்.

சந்தானலட்சுமி அவளை அணைத்து கொண்டு முத்தமிட எல்லோர் முகத்திலும் அத்தனை மலர்ச்சி!

அதன் பின் மீனா பாண்டியனுக்கும் செழியனுக்கும் இனிப்பு வழங்க அவன் மீனாவிடம், “சரி என் மீனா குட்டி என்ன கிஃப்ட் வேணும்?” என்று கேட்டான்.

“கிஃப்ட் கேட்க கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க அன்பப்பா… அதனால நான் கேட்க மாட்டேன்… வேணா நீங்களே பெரிய பார்பி டாலா வாங்கி தாங்க… ஓகே வா” என்று கேட்ட மகளை பார்த்து ஜானவிக்கு ஒரு பக்கம் சிரிப்பும் வந்ததும். கோபமும் பெருகியது.

‘நீ வீட்டுக்கு வாயேன்’ என்று ஜானவி மகளிடம் கண்ஜாடையிலேயே முறைக்க செழியன் அதை கவனித்துவிட்டு,

“இந்த கண்ணால மிரட்டிர வேலை எல்லாம் வேண்டாம் ஜானவி… என் மீனா குட்டி கேட்டிருக்கா… நான் வாங்கி தருவேன்” என்று அழுத்தி கூறினான்.

“அப்போ எனக்கு” என்று அன்புச்செல்வி இடைபுகுந்து கேட்க, “நான் வாங்கி தரேன்டி செல்லம்… பெரிய டாலா?” என்றாள் ஜானவி அன்புச்செல்வியை மடியில் அமர்த்தி கொண்டு!

“நாம அதை விட பெருசா வந்குவோம் மீனு” என்று செழியன் சொல்ல,

“ஓ! நாங்க இன்னும் பெருசா வாங்குவோம்” என்று ஜானவி ஏட்டிக்கு போட்டியாக சொல்ல,

பாண்டியன் சத்தமாக சிரித்து, “ஆமா… அவங்க குழந்தைகளா இல்ல நீங்க  இரண்டு பேரும்குழந்தைகளா?” என்று கேட்க சந்தானலட்சுமி அவர்களின் உரையாடல்களை பார்த்து ரசித்து கொண்டே காபியை கொண்டு வந்து ஜானவியிடம் கொடுத்தார்.

அந்த வாண்டுகளின் மழலை சிரிப்பு சத்தத்தோடு அவர்கள் எல்லோரின் சிரிப்பு சத்தமும் கலந்து  அந்த வீடே நிறைந்தது.

அன்புச்செல்வியும் மீனாவும் விளையாடி கொண்டே உள்ளே சென்றுவிட ஜானவி செழியனை பார்த்து, “ஒரு நிமிஷம் வெளியே வாங்களேன்” என்ற அழைத்தாள்.

அவன் புரியாமல், “எங்கே?” என்று கேட்க, “வாங்க சொல்றேன்” என்று அவனை அந்த குடியிருப்பின் கீழ்த்தளத்திற்கு அழைத்து சென்றாள்.

செழியன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, “நல்ல இருக்கா செழியன்? நேத்துதான் டெலிவரி எடுத்தேன்” என்றாள்.

“ஏ! சூப்பர் ஜானவி… ப்ரென்ட் நியூ கார்… கங்கிராட்ஸ்” என்று சொல்லி கொண்டே அந்த புது காரை சுற்றி பார்த்தவன்,

“செம மாடல்… ஸீட்டிங்… கலர்… எல்லாமே நல்லா இருக்கு… வாவ்! ஆட்டோ மேட்டிக் கியரா?” என்று அவன் வியந்து பார்த்துகொண்டே ஜானவியிடம், “இதுதான் மீனாவோட பர்த்டே சர்ப்ரைஸா?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்… லாஸ்ட் மந்த் ரோடுல பார்த்துட்டு… என்கிட்ட

ம்மா இந்த மாதிரி ஒரு கார் வாங்கி அதுல போலாமான்னு கேட்டா” என்று ஜானவி முகம் மலர சொல்ல,

“சத்தியமா முடியலங்க… செகண்ட் ஸ்டேண்டர்ட் பிள்ளைக்கு பொம்மை கார் வாங்கிதான் தருவாங்க… நீங்க என்னடான்னா உண்மை காரே வாங்கி தந்திருக்கீங்க…  என்டைர்லி டிஃப்பிரென்ட் மதர் ங்க நீங்க” என்று சொல்லி சிரித்தான்.

“கிண்டல் பண்ணாதீங்க செழியன்”

“ஐயோ! நான் உங்களை பாராட்டினேங்க”

“நீங்க பாராட்டினா கூட கிண்டல் பண்ற மாரிதான் இருக்கு” என்றதும் செழியன் சிரிக்க, “வண்டியை எடுத்துட்டு பக்கத்தில இருக்க பெருமாள் கோவில் போகலாம்னு இருக்கேன்… நீங்களும் அன்புவும் வரீங்களா… ஆன்டியும் அங்கிளையும் கூட கூப்பிடலாம்” என்றாள்.

“எல்லாரையும் கூப்பிடலாம்… ஆனா மேடம் டிரைவ் பண்ணுவீங்களா?” என்று அவன் சந்தேகமாக கேட்க,

“அதெல்லாம் பண்ணுவேன்… டிரைவிங் கிளேஸ் போய் கத்துகிட்டேன்” என்றாள்.

“அப்படின்னா ஓகே” என்று செழியன் சொல்லிவிட்டு வீட்டிற்கு வர,

பாண்டியனிடமும் சந்தானலட்சுமியிடமும் ஜானவி விஷயத்தை உரைத்து அவர்களையும் அழைத்தாள்.

அவர்கள்இருவரும் மகிழ்ந்து ஜானவியை வாழ்த்திய அதேநேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, “இல்லம்மா நாங்க வரல…  நீயும் செழியனும் குழந்தைகளை அழைச்சிட்டு போயிட்டு வாங்களேன்” என்றார்.

“அதில்ல அங்கிள்” என்று ஜானவி ஏதோ சொல்ல எத்தனிக்கவும்,

“கண்டிப்பா அடுத்த தடவை வரோம்மா… இன்னைக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்றார் பாண்டியனும் மனைவியோடு சேர்ந்து கொண்டு!

ஜானவி செழியனை பார்க்க தன் தோழிக்காக அவன் சம்மதமாக தலையசைத்தான். அதன் பின் செழியன் அன்புச்செல்விக்கு பட்டு பாவாடை எல்லாம் உடுத்திவிட்டு தான் மாற்றி கொள்ள படுக்கை மீதிருந்த தன் உடைகளை பார்த்து, “ஏன் ம்மா வேட்டி சட்டை எடுத்து வைச்சிருக்கீங்க… இங்க பக்கத்தில இருக்க கோவிலுக்குத்தானே” என்றான்.

“பக்கத்தில இருக்க கோவிலுக்கு வேட்டி சட்டை போட கூடாதா என்ன?” சந்தானலட்சமி விதாண்டவாதமாக கேட்க,

“அதெல்லாம் வேண்டாம்… நான் பேன்ட் ஷர்ட் போட்டுக்கிறேன்” என்றதும் அன்புச்செல்வி, “அப்பா… இதையே போட்டுகோங்க… நல்லா இருக்கு” என்றாள்.  தன் பாட்டி கண்ஜாடையில் சொன்னதை அவள் தெளிவாக புரிந்து கொண்டு அப்படியே தன் தந்தையிடம் உரைத்தாள்.

மகள் சொன்னதும் செழியன் சில நொடிகள் யோசித்துவிட்டு, “சரி என் அன்புகுட்டிக்காக போட்டுக்கிறேன்” என்றான்.

சந்தானலட்சுமி தன சமார்த்தியத்தை தானே மெச்சி கொண்டு வெளியே வந்துவிட்டார்.

செழியன் வேட்டி சட்டை அணிந்து கொண்டு தயாராகி இருந்தான். அவனின் கம்பீரத்தையும் மிடுக்கையும் அந்த உடை உயர்த்தி காட்டி கொண்டிருந்தது. சந்தானலட்சுமிக்கும் பாண்டியனுக்கும் மகனை அப்படி பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இருவரும் மகனை மனதார ரசித்து கொண்டனர்.

error: Content is protected !!