paadal thedal- 13

13

திருமணம்

அவர்கள் ஏரியாவிலேயே உள்ள பிரசித்தி பெற்ற அந்த பெருமாள் கோவிலில் ரொம்பவும் சாதாரணமாகத்தான் அவர்களின் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவிலின் கருவறைக்கு வலதுபுறத்தில் உள்ள அந்த மண்டப்பதில்தான் ஜானவியும் அன்புச்செழியனும் தம்பதிகளாக மனையில் அமர்ந்திருந்தனர்.

ஜானவி மணமகளுக்கே உரித்தான அலங்காரங்களோடு  ஏகபோகமாக நகைளெல்லாம் ஆடம்பரமாக பூட்டிக் கொண்டு இல்லாமல்  அளவான நகைகளும் ரொம்பவும் இயல்பான ஒப்பனையோடுமே திகழ்ந்தாள். இருப்பினும் அவள் கொண்டிருந்த அந்த மணமகள் கோலமே அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து மெருகேற்றியிருந்தது.

ஆனால் அவள் மனமோ அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை. ஏதோ கோபத்தில் சவாலெல்லாம் விட்டு அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள்.

செழியன் சம்மதம் சொல்லும்வரை அந்த முடிவின் தீவிரம் அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடி அவள் மனம் ஒருவித அச்சவுணர்வை தத்தெடுத்து கொண்டது.

செழியனை நன்றாகவே அவளுக்கு தெரியும் என்றாலும் அப்போதைய அவளின் மனதின் அல்லாட்டம் அது. மீண்டும் ஒரு புது வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்க போகும் பெண்மைக்கே உரித்தான தவிப்பு.

நண்பனாக செழியினிடம் அவள் நன்றாக பேசி பழகியிருந்தாலும் மணமேடையில் அவன் அருகில் அமர்ந்திருப்பதில் கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள்.

அதுவும் இரண்டாவது முறையாக அப்படி மணமேடையில் அமர்ந்திருப்பதே அவளுக்கு கத்திமேல் நிற்பது போல் அத்தனை சங்கடமாக இருந்தது. எப்போது அந்த சடங்குகளெல்லாம் முடியும் என்று அவள் தவிப்பில் கிடந்தாள்.

செழியனுக்கும் ஒருவகையில் அதே மனநிலைதான் என்றாலும் அவன் முகம் அதை காட்டிகொடுத்து கொள்ளவில்லை. வேட்டி சட்டையில் ஆண்மைக்கே உண்டான கம்பீரமும் மிடுக்கும் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்தான்.

சந்தானலட்சுமி பரபரப்பாக திருமண சடங்களுக்கு வேண்டியவற்றை பொறுப்பாக எடுத்து வைத்து கொண்டிருந்தார். பாண்டியனோ அங்கே  வந்தவர்களை வரவேற்பதில் முனைப்பாக இருந்தார்.

செழியனின் தந்தை தாயாக அந்த திருமணம் நடப்பதில் அவர்கள் முகத்தில் கல்யாண பரபரப்போடு சேர்ந்து நினைத்தது நடக்க போகிறது என்ற சொல்லிலடங்கா இன்பமும் பூரிப்பும் இருந்தது.

அதுவும் செழியனே ஜானவியை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன பின் அவர்களுக்கு வேறு என்ன வேண்டாம். அவனின் முடிவை கேட்டு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். அவர்கள் உடனடியாக அடுத்து வந்த மூகூர்த்த தேதியிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து ஏற்பாடுகள் செய்ய தொடங்கிவிட்டனர்.

சாதரணமாகவே நடத்தினாலும் அவர்களின் திருமண ஏற்பாடுகளை பாண்டியனும் சந்தானலட்சுமியும் ரொம்பவும் சிறப்பாகவே செய்தனர். அவர்களுக்கு துணையாக சில முக்கிய சொந்தங்களும் உதவிக்கு இருந்து எல்லாவற்றையும் நடத்தி கொடுத்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது திருமணமாகவே இருந்தாலும் முறைப்படி எல்லாமுமே நிகழ வேண்டும் என்பதில் சந்தானலட்சுமி தீர்க்கமாக இருந்தார். அதோடு திருமணம் செய்விக்கும் புரோகிதரிடம் அனைத்து சடங்குகளையும் ஒரு குறைவும் இல்லாமல் சிறப்பாக நடத்தி கொடுக்கும்படி கேட்டு கொண்டிருந்தார்.

செழியனுக்கு இந்த வாழ்வாவது நிலைக்க வேண்டுமே என்ற ஒரு தாயின் பரிதவிப்போடு சேர்த்து இந்த திருமணத்தின் மூலம் தங்கள் வாழ்வில் அவர்கள் இருவரும் சகல இன்பங்களும் பெற்று சிறப்பாக வாழ வேண்டுமே என்ற அவாவும் அதில் அடங்கியிருந்தது.

திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் என்று ஒரு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர்.

அந்த விடியற் காலை பொழுதில் ரம்மியான கோவிலின் சூழ்நிலையோடு கெட்டி மேள சத்தம் மங்களாமாக ஒலித்து கொண்டிருந்தது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அந்த திருமண வைபவத்தின் தனித்துவமாக தெரிந்தது மீனா அன்புக்குட்டியின் குதூகல கொண்டாட்டங்கள்தான்.

அந்த சின்ன வாண்டுகளின் அதகளம்தான் அந்த திருமணத்தின் அழகான சூழ்நிலையை  இன்னும் அழகாக மாற்றியிருந்தது என்று சொல்ல வேண்டும். அங்கே வந்திருந்த எல்லோரின் கவனத்தையும் அவர்களின் சேட்டை வெகுவாக கவர்ந்திழுக்க, ஜானவி மட்டும் அச்ச உணர்வோடே அவர்கள் சுற்றி திரிவதை பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவள் மணமேடையில் மட்டும் அமர்ந்திருக்காமல் இருந்திருந்தால் மகளுக்கு பல அதட்டல்களும் அதோடு ஒரு அடியாவது நிச்சயம் விழுந்திருக்கும். மீனா தன்னோடு அன்புவையும் சேர்த்து கொண்டு அந்தளவு அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.

சந்தானலட்சுமி எல்லா பொறுப்புகளையும் சேர்த்து அந்த வாண்டுகளையும் கவனமாக பார்த்து கொள்வது நிச்சயம் சிரமம்தான். பாண்டியனும் கூட வந்தவர்களை பார்பாரா இல்லை இவர்களை பார்த்து கொண்டிருப்பாரா?

புரோகிதர் சொல்லும் சடங்குகளையும் மந்திரங்களையும் செழியன் முனைப்பாக செய்து கொண்டிருக்க,  ஜானவியின் கவனம் கொஞ்சமும் அந்த சடங்குகளை செய்வதில் முனைப்பு காட்டவில்லை. பெயருக்குத்தான் அவள் மணமேடையில் அமர்ந்திருந்தாளே ஒழிய அவள் கண்ணிலும் கருத்திலும் அன்புவும் மீனாவும் மட்டும்தான் நிறைந்திருந்தனர்.

“இங்கே கொஞ்சம் கவனிங்கோ” என்று புரோகிதர் ஜானவியிடம் சொல்ல,

செழியன் அவள் காதொரம் நெருங்கி, “கவலைபடாதீங்க ஜானவி… அம்மா குழந்தைகளை பார்த்துப்பாங்க” என்றான்.

“ஹ்ம்ம்” என்று பெயருக்கு தலையசைத்து வைத்தாலும் அவள் கவனத்தை அங்கு இழுத்துவர ரொம்பவும் பிரயாத்தனப்பட்டாள்.

அதற்குள் மீனா ஓடி விளையாடுகிறேன் பேர்வழி என்று விழுந்து வைத்துவிட்டாள். அவ்வளவுதான். ஜானவி உள்ளம் படபடக்க அப்போது அவள் நினைப்பில் மகள் விழுந்துவிட்டால் என்ற எண்ணம் மட்டுமே. தான் மணமேடையில் மணகோலத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து அவள் எழுந்து கொள்ள பார்க்க,

அவள்  எண்ணத்தை முன்கூட்டியே உணர்ந்தவனாய்  செழியன் அவளை எழுந்திருக்கவிடாமல் தன் கரத்தால் அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டான். சட்டென்று அவனின் அந்த பிடி அவளை என்னவோ செய்தது.

அப்போதே அவள் தான் செய்ய நினைத்த காரியத்தின் முட்டாள்தனத்தை உணர்ந்தாள்.

மேலும் செழியன் அவள் புறம் திரும்பி இமைகளைமூடி அவளை மௌன மொழியில் அமைதியாக இருக்க சொன்னான். அந்த சமயத்தில் மீனாவும் விழுந்து அவளாகவே எழுந்து கொண்டுவிட்டாள். அதேநேரம்  பாண்டியனும் மீனா அருகில் வந்து தூக்கி கொண்டார்.

ஜானவி மனம் ஆசுவாசப்பட செழியன் தன் தந்தையிடம் செய்கையால் ஏதோ சொல்ல, அவர் மீனாவை மணமேடை அருகில் அழைத்துவந்தார்.

செழியன் மீனாவிடம், “அப்பா பக்கத்தில் உட்காருங்க வாங்க” என்று சொல்ல அவளும் உற்சாகமாகி அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“கொஞ்ச நேரம் கூட உன்னால சும்மா இருக்க முடியாதா?” என்று ஜானவி மகளிடம் கடிந்து கொள்ள,

“சும்மா இருந்தா அவ என்  மீனு குட்டியே இல்லயே” என்று செழியன் சொல்லி முறுவலித்தான். அந்த வார்த்தைகளை கேட்டு ஜானவி முகத்திலும் புன்னகை அரும்பியது.

அதற்குள் அன்புச்செல்வி இந்த காட்சியை பார்த்துவிட்டு, “நானும் நானும்… ஜானும்மா பக்கத்தில” என்று அவள் ஓடி வந்து ஜானவியின் அருகில் அமர்ந்து கொள்ள மனையில் வேறு வழியில்லாமல் ஜானவி செழியனை இடித்து கொண்டு அமரவேண்டியதாக போயிற்று.

ஆனாலும் ஜானவியின் மனதில் அத்தனை நேரம் இருந்த தவிப்பு இப்போது நீங்கியிருந்தது. அவர்கள் குழந்தைகளோடு மணமேடையில் அமர்ந்திருக்க, முற்று பெற்றதாக அவர்கள் எண்ணி கொண்ட அவர்கள் வாழ்வின் சந்தோஷங்கள் யாவும் மீண்டும் புதிதாக மலர போகிறது.

வேத மந்திரங்கள் ஓத இறைவனின் ஆசியோடு அங்கு வந்திருந்த நல்ல உள்ளங்களின் ஆசிர்வதமும் ஒருசேர, செழியன் ஜானவியின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி அவள் வகுட்டில் குங்குமமும் இட்டுவிட்டான்.  விதியின் வசத்தால் அவர்கள் இருவரும் தம்பதிகளாக மாறிய அதேநேரம் ஓர் அழகான குடும்பமாகவும் ஒன்றிணைந்தனர்.

அதன் பின் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் ஜானவியையும் செழியனையும்  வாழ்த்திவிட்டு செல்ல, அங்கே ஜானவியின் சொந்தம் என்று யாருமில்லை. பாண்டியனும் சந்தானலட்சுமியும் தாங்கள் சென்று அவளின் பெற்றோரை அழைப்பதாக ஜானவியிடம் எவ்வளவோ முறை கேட்டு பார்த்தனர். ஆனால் அவள் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாள். அவள் பட்ட அவமானம் அத்தகையது.

ஜானவியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று செழியனும் சொல்லிவிட அதற்கு மேல் அவள் வீட்டாரை அழைக்கும் எண்ணத்தை அவர்கள் விடுத்தனர்.

அதேநேரம் ஜானவி சார்பாக அங்கே வந்தவர்கள் என்றால் அவளிடம் வேலை செய்யும் சரவணனும் ரேஷ்மாவும் மட்டும்தான். சமீபமாகத்தான் அவர்கள் அவளுக்கு அறிமுகம் என்றாலும் அவர்கள் அவளிடம் ரொம்பவும் நெருக்கமாக பழகியிருந்தனர்.

ஜானவியை வாழ்த்தும் பொருட்டு சின்ன பரிசு பொருளோடு வந்தவர்கள் அதனை தந்துவிட்டு, “இன்னும் ஒரு வாரத்துக்கு லீவ்தானே க்கா” என்று கேட்க,

“உதைதான் இரண்டு பேருக்கும்… நாளைக்கு வந்து சேருங்க” என்றாள் ஜானவி கண்டிப்போடு.

“நாளைக்கேவா?” என்று சரவணன் அதிர்ச்சியாக,

“ஆமா நாளைகேத்தான்… ஒழுங்கா ரெண்டு பேரும் வரீங்க” என்றாள்.

“இருந்தாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசரா இருக்க கூடாது க்கா நீங்க” என்று சரவணன் சொல்ல செழியன் சத்தமாக சிரித்துவிட்டாள்.  ஜானவி  அவர்களை முறைத்து பார்க்க எண்ணி தோற்று போய் அவளும் புன்னகையை உதிர்த்துவிட்டாள்.

அத்தனை நேரம் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்து ஒருவித இலகுத்தன்மை வந்தது.

அப்பொழுது ஒரு பெரியவர் தன் குடும்பத்தோடு வந்து செழியனை வாழ்த்தி அவன் கையில் ஒரு மோதிரத்தை கொடுத்து ஜானவி கரத்தில் அணிவித்துவிட சொன்னார்.

அந்த மோதிரத்தை பெற்று கொண்ட செழியனன் அவர் முகத்தை விழிகளில் நீர் நிரம்ப பார்த்தான்.

“முடிவுன்னு நாம நினைக்கிறதெல்லாம் முடிவாகிடாது செழியன்… அதை தாண்டி வேற ஒரு அழகான தொடக்கம் இருக்கும்… உனக்கு இன்னும் ரொம்ப கால வாழ்க்கை இருக்கு… வயசு இருக்கு… உன்னை நான் என் மருகமகனா பார்க்கல… மகனாத்தான் பார்க்கிறேன்… உங்க அப்பா நடந்த எல்லா விஷயத்தையும் உன் சூழ்நிலையும் பத்தி என்கிட்ட சொன்னாரு… எல்லாம் நல்லதுக்கே… உன்னோட இந்த புது வாழ்கையில் எல்லா சந்தோஷமும் நிறைவா கிடைக்கணும்… ஹேப்பி மேரிட் லைஃப்” என்று அவர் செழியனிடம் சொல்ல, அவன் கண்ணீர் பெருக அவரை அணைத்து கொண்டு, “தேங்க்ஸ் ப்பா” என்றான்.

அவர்களின் உரையாடலை ஜானவி திகைப்பாக பார்த்து கொண்டிருந்தாள்.

“மோதிரத்தை போட்டு விடு செழியன்” என்றதும் செழியன் ஜானவியின் புறம் பார்வையை திருப்பி அவள் கரத்தை நீட்ட சொல்லி சமிஞ்சை செய்தான்.

அவள் தயக்கமாக அவனை பார்த்து கொண்டே அவள் விரல்களை நீட்ட செழியன் அந்த மோதிரத்தை அவள் விரல்களுக்கு ஏதுவாக பொருத்தினான்.

“நீயும் என் மக மாறிதான் ம்மா…. உனக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்லி அவளிடமும் அவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு அகன்றுவிட ஜானவி, “யாரு செழியன் இவரு?” என்று வினவினாள்.

“ரஞ்சனியோட அப்பா” என்று அவன் சொன்ன கணம் அவள் வியப்போடு விழிகள் ஸ்தம்பிக்க அவனை பார்த்து, “இப்படியும் கூட மனுஷங்க இருப்பாங்களா?” என்று கேட்டாள்.

“ஏன்இருக்க மாட்டாங்க? நம்ம பார்த்த சிலரை மட்டுமே வைச்சுக்கிட்டு உலகமே இப்படிதான்னு ஒரு முடிவுக்கு வந்திர கூடாது… நம்மல சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க… எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவனை கடுப்பாக பார்த்தவள்,

“இருநூற்றி முப்பத்தி ஏழு” என்றாள்.

“என்ன நம்பர் இது?” என்று அவன் அவளை புரியாமல் பார்த்து கேட்கவும், “அது நீங்க இதுவரை சொன்ன பிலாஃசபியோட எண்ணிக்கை” என்றாள்.

“ஏ! இதெல்லாம் போங்கு… அவ்வளவெல்லாம் கிடையாது” என்று செழியன் சொல்ல,

“உண்மையாத்தான் சொல்றேன்” என்று அழுத்தமாக கூறி அவனை பார்த்தவள் பெருமிதத்தோடு, “நான் கணக்குல கரெக்டா இருப்பேன்… தெரியுமா? ” என்றாள்.

“ஹ்ம்ம் அப்படியா? இனிமே வாழ்க்கை பூரா இப்படி நிறைய கேட்க வேண்டியிருக்கும்” என்று எகத்தாளமாக சொல்லி அவன் சிரித்தான்.

“உஹும்… என்னால முடியாதுடா சாமி” என்றவள் அதிர்ச்சியான பார்வையோடு அவனை பார்த்தாள். அந்த நொடி இருவருக்குமே அவர்கள் சம்பாஷணையில் அவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

திருமண பந்தத்தை நட்போடு வழிநடத்தி செல்வது ஒரு கலை.

அதுவும் நட்பு என்ற நூல் காதல் என்ற நூலோடு பிணையும் போது அந்த உறவு இன்னும் பலமானதாக மாறிவிடும்.

********

திருமண சடங்குகள் முடிவுற்று அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்தனர்.  மதிய உணவு முடித்த பின் எல்லோருமே கிட்டத்தட்ட திருமண களைப்பில் இருந்தனர்.

அப்போது செழியன் ஜானவியிடம், “குழந்தைகளும்  நீங்களும் உள்ளே  படுத்துக்கோங்க” என்று அவளிடம் அவன் அறையை சுட்டிக்காட்டினான்.

ஜானவி மீனாவையும் அன்புவையும் அழைத்துவந்து அவன் அறையில் படுக்க வைத்தாள். அவர்கள் இருவரும் விளையாடி கொண்டே சில நிமிடங்களில் உறங்கி போயினர். ஆனால் ஜானவியின் விழிகளை உறக்கம் தழுவவில்லை.

அதுதான் முதல் முறை. செழியன் அறையில் அவள் நுழைந்திருப்பது. பார்க்க அத்தனை அழகோடும் நேர்த்தியோடும் இருந்தது. அவன் மனம் போல!

அந்த அறையே சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு அலமாரி முழுக்க அவன் வாங்கிய கப் ட்ராஃபிகள் நிரம்பி இருந்தது. வியப்பாக அவற்றை எல்லாம் பார்த்தவள் ரசனையாகவும் அழகாகவும் சுவற்றில் மாட்டியிருந்த ரஞ்சனியின் பலவிதமான புகைப்படங்களையும் பார்த்து அதிசயித்து கொண்டிருந்தாள்.

அவையெல்லாம் செழியன் ரஞ்சனி மீது கொண்ட ஆழமான காதலை சொல்லாமல் சொல்லிற்று.

அவற்றை எல்லாம் பார்க்க பார்க்க மனம் என்னவோ செய்தது.. அதுவும் ஜானவிக்கு தன் முன்னாள் கணவன் தான் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்து கொண்ட நினைவு வந்து விழிகளில் நீர் எட்டி பார்த்தது

அந்த நாட்களை எண்ணி தனக்குள் அசூயையாக உணர்ந்த அதேநேரம் செழியன் ரஞ்சனி மீது கொண்ட காதலை பார்க்க அவளுக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது. சில வருடங்களே வாழ்ந்தாலும் ரஞ்சனி போல் ஓர் உண்மையான காதலோடு தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவனோடு வாழ்வதல்லவா வாழ்க்கை. வாழ்ந்தால் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டவள்,

“நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி ரஞ்சனி… அந்த கடவுள் உங்களுக்கு பதிலா என்னை கொண்டு போயிருக்கலாம்… எனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்காம வாழ வைச்சி… எல்லா சந்தோஷத்தையும் குடுத்து அதை உங்களை அனுபவிக்கவிடாம உங்க உயிரை பறிச்சி… அந்த கடவுளை என்னன்னு சொல்ல… சரியான சேடிஸ்ட்” என்று அவள் மனநொந்து ரஞ்சனியின் புகைப்படத்திடம் தன் வேதனையை கொட்டி தீர்த்து கொண்டிருக்கும் போதே  சந்தானலட்சமி உள்ளே வந்திருந்தார்.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது ஜானவி… கடவுள் எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் காரியம் இருக்கும்” என்றார்.

ஜானவி மெளனமாக அவரை பார்க்க, “ரஞ்சனி விதி முடிஞ்சு போச்சு … அது பத்தி இனி பேசி என்ன செய்ய… உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு ஜானவி… நீ இப்படியெல்லாம் பேச கூடாது… அதுவும் முத்து முத்தா குழந்ததைங்க இருக்கு… செழியன் உன்னை இனிமே நல்லா பார்த்துப்பான்” என்று சொல்லி அவள் தோளை தட்டி கொடுத்தார்.

ஜானவி முறுவலிக்க சந்தானலட்சுமி, “குழந்தைங்க நல்லா தூங்கிட்டாங்க போல” என்றவர் கேட்க, “அவங்க எப்பவவோ தூங்கிட்டாங்க ஆன்ட்டி” என்றாள்.

“இன்னும் என்ன ஆன்ட்டி… அத்தைன்னு கூப்பிடு” என்றார்.

ஜானவி முகம் மலர்ந்து தலையசைக்க அவர் அப்போது, “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்தான் வந்தேன்” என்று ஆரம்பிக்க,

“சொல்லுங்க ஆன்ட்டி” என்றதும் நாக்கை கடித்து கொண்டு, “சாரி சொல்லுங்க அத்தை” என்று கேட்டாள்.

“அது வந்து ஜானவி… நானும் அவரும் திருப்பதி கிளம்பறோம்…  வர இரண்டு நாள் ஆகும்” என்று உரைக்க,

“இன்னைகேவா?” என்றவள்அதிர்ச்சியாக கேட்க, “ஆமாம்மா… சாமியை பார்த்துட்டு ரெண்டு மூணு நாளில வந்திருவோம்” என்றார்.

ஜானவியால் மேலே எதுவும் பேச முடியவில்லை. இந்த விஷயத்தை கேட்டு செழியன்தான் வெளியே தன் தந்தையோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.

“இப்ப என்ன நீங்க மட்டும் தனியா போகணும்… போறதுன்னா எல்லோரும் ஒண்ணா போகலாம் இல்ல” என்றவன் தன் தந்தையிடம் கோபமாக சொல்ல,

“ஏன்டா…  புருஷன் பொண்டாட்டியா தனியா இப்போதான் போறோம்… அது பொருக்கலயா உனக்கு… இருபது இருபத்தைந்து வருஷமா எங்க போனாலும் உன்னையும் கூட கூட்டிட்டுத்தானே சுத்திறோம்… இப்பயாச்சும் எங்களை தனியா நிம்மதியா போக விடேன்” என்று பாண்டியன் உரைக்க ஜானவி இதை கேட்டு சிரித்துவிட்டாள்.

அப்போது சந்தானலட்சுமி அங்கே வந்து, “உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்ல… பையன்கிட்ட இப்படியா பேசுவாங்க” என்று கேட்டு தலையிலடித்து கொள்ள,

“உண்மையைதானே லட்சு சொன்னேன்” என்றான் பாண்டியன் இறங்கிய குரலோடு!

“ம்ம்கும் நல்லா சொன்னீங்க” என்று சந்தானலட்சுமி நொடித்து கொண்டு அவர்களின் பையை புறப்பட ஆயுத்தமாக எடுத்து வைக்க,

“வர ஒரு நாலைஞ்சு நாள் கூட ஆகும் டா… பக்கத்தில திருத்தணி பழனி எல்லாம் போயிட்டுதான் வருவோம்… நீ பாட்டுக்கு போஃன் பண்ணி போஃன் பண்ணி எப்போ வருவீங்கன்னு… கேட்டு எங்களை தொல்லை பண்ணாதே சொல்லிட்டேன்” என்றார் பாண்டியன் கண்டிப்பாக.

“முடியலடா சாமி… ஒழுங்கா கிளம்பிடுங்க… என் தொல்லை இல்லாம  இரண்டு பேரும் தனியா நிம்மதியா போய் எல்லா சாமியையும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க… நான் போஃனே பண்ண மாட்டேன்” என்றான்.

ஜானவிக்கு  அவர்களின் உரையாடல்களை கேட்டு சிரிப்பு தாங்கவில்லை. ஒரு வழியாக அவர்கள் புறப்பட, “பார்த்து போயிட்டு வாங்க ப்பா… பை ம்மா” என்று அனுப்பிவிட்டான்.

“சரி… அன்பு பார்த்துக்கோ… போயிட்டு வரேன் ம்மா” என்று அவர்கள் ஜானவியிடமும் சொல்லி விடைபெற்று கொண்டு புறப்பட்டனர்.

 

 

error: Content is protected !!