Paadal thedal – 15(2)

Paadal thedal – 15(2)

 

இரவு தன் பெற்றோரின் அறையில் அம்மாவின் மடியில் தலைசாய்த்து படுத்து கொண்டிருந்தான் செழியன்.

“என்னை விட்டுட்டு போய் நிம்மதியா எல்லா சாமியும் தரிசனம் செஞ்சிட்டு வந்துட்டீங்களா?” என்று அவன் வருத்தமாக பேசி கொண்டிருந்தான்.

அப்போது சந்தானலட்சுமி பின்னோடு கணவன் செய்த செய்கையை பார்த்து ஏதோ கண்ணசைத்து மறித்து பேசினார்.

செழியன் அதை கவனித்துவிட்டு தன் அப்பாவின் புறம் திரும்ப, அவரோ சமாளிக்க வேண்டி காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார்.

உடனடியாக பார்வையை தன் அம்மாவின் புறம் திருப்பியவன், “என்னவாம் அவருக்கு… ஏதோ உன்கிட்ட அக்ஷன்லயே சொல்றாரு?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,

சந்தானலட்சுமி மகனிடம், “உங்க அப்பா ஒரு இடத்தில கூட என்னை நிம்மதியா சாமி கும்பிட விடலடா… பையன் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்… பேத்தி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு புலம்பி தீர்த்துட்டாரு…

ப்பா முடியல… ஏன் டா இந்த மனுஷனோட தனியா போணோம்னு ஆகிடுச்சு” என்று அப்படியே கணவனை போட்டு கொடுத்து கோவிலுக்கு போன தன் அனுபவத்தை அத்தனை கடுப்பாக
கூறினார்.

செழியன் சிரித்து கொண்டே தன் தந்தையை பார்க்க,

“என்ன லட்சு நீ? என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிட்டியே” என்றவர் மனைவியை பார்த்து சொல்ல செழியன் சத்தமாக சிரித்து கொண்டே,

“உங்களுக்கு எதுக்கு இந்த வீணான வீராப்பு… நானும் கூட வரேன்னுதானே சொன்னேன்” என்று சொல்ல,

சந்தானலட்சுமி அப்போது, “அவருக்கும் மட்டும் என்னடா உன்னை விட்டு போகணும்னா… ஏதோ இந்த மூணு நாள் நீயும் ஜானவி ஒண்ணா ஒரே வீட்டில இருக்க போறீங்க… நாங்க இல்லன்னா சங்கடம் இல்லாம நீங்க தனியா பேசிக்கவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும்னுதான்” என்று உரைக்க செழியன் அதிர்ச்சியாய் பார்த்தான்.

சந்தானலட்சுமி மேலும்,

“எப்படியிருந்தாலும் நீயும் ஜானவியும் கண்டிப்பா வேறெந்த சடங்குக்கும் ஒத்துக்கவும் மாட்டீங்க… அதுவும் இந்த கல்யாணத்தை நீங்க இரண்டு பேரும் மனசார ஏத்துக்கிட்டும் பண்ணல” என்று சொல்லி அவர் தயக்கத்தோடு தன் பேச்சை நிறுத்தினார்.

செழியன் மௌனமாக அமர்ந்திருந்தான். ஜானவியும் மீனாவையும் விட்டு கொடுக்க மனமில்லாமல் இந்த திருமணத்தை செய்து கொண்டான். அவ்வளவுதான்.

அதேநேரம் இந்த நொடி வரை ஜானவியிடம் நட்பை தாண்டி வேறு எந்தவித உணர்வும் அவனுக்கு தோன்றவில்லை. தோன்றவும் தோன்றாது.

அப்படியிருக்க இவர்களின் இந்த முயற்சி வீண்தான் என்று அவன் எண்ணி கொண்டிருக்கும் போதே,

“நம்ம நினைச்சது ஓரளவு நடந்திருக்கு” என்றார் பாண்டியன்.

செழியன் அவரை புரியாமல் நிமிர்ந்து பார்க்க அவரோ, “நானே சொல்லணும்னு நினைச்சேன்… பரவாயில்ல ரஞ்சனி போட்டோஸ் எல்லாம் நீயே புரிஞ்சிக்கிட்டு கழடிட்ட” என்றதும் அவனுக்கு கோபமேறியது.

“ப்பா என்ன நடந்ததுன்னு புரியாம நீங்க பாட்டுக்கு எதாச்சும் கற்பனை பண்ணிக்காதீங்க” என்றவன் நடந்தவற்றை மறைக்காமல் அனைத்தையும் உரைத்தான்.

ஜானவியிடம் கோபப்பட்டதையும் சேர்த்து. அவர்கள் இருவர் முகம் வேதனையாக மாற, “என்ன இருந்தாலும் நான் ஜானவி மேல
யோசிக்காம கோபப்பட்டிருக்க கூடாது” என்று குற்றவுண்ர்வோடு சொல்லி முடித்தான்.

“என்ன காரியம் பண்ணி வைச்சிருக்க அன்பு… பாவம்டா அந்த பொண்ணு” என்று ஜானவிக்காக வருந்தி சந்தானலட்சுமி கண்கள் கலங்கிவிட்டார்.

“அப்போ உன் சுயநலத்துக்காகதான் அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று பாண்டியன் கோபத்தோடு சற்றே அழுத்தமாக மகனிடம் கேட்க,

“என்னப்பா பேசுறீங்க? அப்படி எல்லாம் இல்ல” என்று மறுத்தான் செழியன்.

“பொய் சொல்லாதே அன்பு… ஜானவியும் மீனாவும் அவங்க வீட்டை விட்டு போயிட்டா உன் பொண்ணு மனசொடைஞ்சி போயிடுவா… இன்னொரு இழப்பை நம்ம அன்புக்குட்டியால தாங்கிக்க முடியாது… அதனாலதான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க” என்று சொல்லி மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.

“ஐயோ! சத்தியமா இல்லப்பா… நான் அன்புக்குட்டி மாதிரி மீனாவையும் என்னோட பொண்ணாத்தான் பார்க்கிறேன்… அதேபோல ஜானவியை ஒரு நல்ல ப்ரெண்டாத்தான் பார்க்கிறேன்… அதை தாண்டி” என்றவன் நிறுத்தி கொள்ள பாண்டியன் அவன் முன் வந்து நின்று, “நல்ல நட்போட பார்க்கிறன்னா எப்படிறா அவ ரஞ்சனி போட்டோவை கழட்டி இருப்பேன்னு சந்தேகப்பட்ட” என்றதும் செழியனை அந்த வார்த்தை ஆழமாக குத்தி கிழித்தது. மௌனமாக பதில் பேச முடியாமல் அவன் தலையை கவிழ்ந்து கொள்ள,

செழியனின் தோளை ஆதரவாக தொட்ட சந்தானலட்சுமி, “உனக்கு தெரியுமா அன்பு? ஜானவி அன்னைக்கு ரஞ்சனி போட்டோ பார்த்து என்ன சொன்னானு” என்று ஆரம்பித்து வார்த்தை மாறாமல் ஜானவி அன்று ரஞ்சனியின் புகைப்படம் பார்த்து வேதனையோடு சொன்னவற்றை அப்படியே உரைக்க அவன் அதிர்ந்து தன் அம்மாவின் முகத்தை பார்த்தான்.
அவர் சொன்னவற்றை கேட்டு அவன் விழிகளில் நீர் கோர்த்து நின்றது.

“எந்தளவு மனசு வெறுத்து போயிருந்தா ரஞ்சனி போட்டோ பார்த்து அப்படி ஒரு வார்த்தையை அந்த பொண்ணு சொல்லியிருப்பா… அதுவும் அவ குடும்பமே அந்த பொண்ணுக்கு துணையா நிற்கல… புருஷனும் சரியில்ல… தனியா ஒரு பொம்பள புள்ளையோட… பாவம்டா அந்த பொண்ணு…
இந்த சின்ன வயசுல வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம போராடிட்டே இருக்கா” என்று தன் குரல் இறங்கி அவர் மகனிடம் சொல்லி கொண்டிருக்க தன் தாயின் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மனவேதனையோடு அவர் சொல்வதை கேட்டு கொண்டிருந்தான்.

ஜானவியின் நிலைமை அவனுக்கு தெரியும். அவள் வாழ்க்கையையும் அதன் வலியையும் அவன் அறிந்ததுதான். ஆனால் அதெல்லாம் தாண்டி நம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் உதாரணமாகத்தான் அவளை பார்க்கிறான். ஆனால் தன் தாய் சொல்லும் போதுதான் அவளின் மனவலி புரிந்தது. மனதளவில் அவள் ரொம்பவும் உடைந்திருக்கிறாள் என்று உணர்ந்தான்.

அந்த நொடியும் அவள் மீது அவனுக்கு வந்தது கரிசனம் மட்டுமே. மனைவி என்ற ஸ்தானத்திற்கு கரிசனம் மட்டும் போதாதே. இன்னும் கேட்டால் அந்த கரிசனம் கொண்டு அவளை ஏற்று கொள்வது நியாமான ஒன்றாகவும் இருக்காது.

செழியன் குழம்ப சந்தானலட்சுமி மகனின் கன்னங்களை தாங்கி, “ஜானவிகிட்ட நீ அவளை நல்லா பார்த்துப்பன்னு அவகிட்ட நம்பிகையா சொல்லி இருக்கேன் டா” என்று சொல்ல,

“கண்டிப்பா நான் ஜானவியை நல்லா பார்த்துப்பேன் ம்மா… அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று உறுதி கூறினான். ஆனால் அப்போதும் ஜானவியை மனைவியாக ஏற்க முடியுமா என்ற மனதில் கேள்வியும் குழப்பமும் எழுந்தது.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தடதடவென கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அத்தனை சுவாரசியமாக வெளியே விளையாடி கொண்டிருந்த மீனாவும் அன்புவும்,

ஜானவி அதட்டி தூங்க வேண்டுமென்று அழைக்கவும் அவளிடமிருந்து தப்பிக்க வேண்டி அவர்கள் ஓடி வந்து தன் தாத்தா பாட்டியின் அறையை தட்டினர்.

பாண்டியன் கதவை திறந்துவிட்டு, “இப்பதான் நினைச்சேன் எங்கடான்னு…. என் பேத்திங்களுக்கு
ஆயுசு நூறு” என்றார்.

அவர்கள் இருவரும் துள்ளி குதித்து தன் தாத்தா பாட்டியின் படுக்கையில் வந்து படுத்து கொள்ள, “நாளைக்கு காலையில ஸ்கூல் இருக்கு… தூங்கனும்… பாட்டி தாத்தாவோட நாளைக்கு ஈவனிங் வந்து விளையாடலாம்” என்று அவள் சொல்ல,

“நாங்க இங்கதான் படுத்துக்க போறோம்” என்று கோரஸாக பதிலளித்தனர் இருவரும்!

இதனை கேட்டு ஜானவிக்கு தூக்கிவாரிப்போட்டது.

“ஒன்னும் வேண்டாம்… நீங்க அவங்கள தொந்தரவு பண்ணுவீங்க… அதுவும் இன்னிக்குத்தான் அவங்களே பாவம் ஊர்ல இருந்து வந்திருக்காங்க… ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவள் குரல் படபடக்க அழைக்க அவர்களா கேட்பார்கள்.

முயலுக்கு மூன்று கால் என்று தாங்கள் பிடித்த பிடியில் அழுத்தமாக நிற்க ஜானவியின் கெஞ்சலும் மிஞ்சலும் அங்கே ஒன்றும் பலிக்கவில்லை. இதற்கிடையில் சந்தானலட்சுமி வேறு, “படுத்துக்கட்டுமே ம்மா… எங்களுக்கு என்ன தொந்தரவு… என்னங்க?” என்று அவர் கணவனை பார்க்க,

“எங்களுக்கு பேத்திங்களை கூட படுக்க வைசுக்கணும்னு ஆசையா இருக்கு” என்று பாண்டியன் இறக்கமாக கேட்க ஜானவியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போனது.

அவள் பாவமாகவும் தவிப்பாகவும் செழியன் முகம் பார்க்க அவனோ தான் என்ன செய்வது என்பது போல் அசட்டையாக ஒரு பார்வை பார்த்தான். அந்த நொடி அவன் மீதுதான் அவளின் மொத்த கோபமும் திரும்பியது. விடுவிடுவென எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி தன் அறையினுள்ளே நுழைந்துவிட்டாள்.

செழியன் அவள் பின்னோடு நுழைந்தான். ஜானவியின் மனமோ குழந்தைகள் இல்லாத வெறுமையாக இருந்த படுக்கையை தவிப்போடு பார்த்தது.

“பசங்க இல்லாம இந்த ரூமே என்னவோ போல இருக்கு இல்ல… சத்தம் போடாதீங்கன்னு அதட்டுவேன்… ஆனா இப்ப அவங்களோட அந்த கலாட்டாவும் சத்தமும் இல்லாம” என்றவள் வருத்தப்பட்டு கொண்டிருக்க அவன் அவள் தவிப்பை பார்த்து லேசாக நகைத்து கொண்டான்.

அதுவும் அவர்கள் பக்கத்து அறையில்தான் இருக்கிறார்கள். எனினும் அவள் இந்தளவு சஞ்சலப்படுகிறாள். தன்னுடைய வேதனை வலி என எல்லாவற்றையும் மனதில் புதைத்து கொள்ளும் ஜானவி குழந்தைங்கள் என்று வந்துவிட்டால் மட்டும் ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்கிறாள்.

இப்படி அவன் ஜானவியை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் செழியனை தயக்கமாக பார்த்து, “இப்போ எப்படி படுத்துக்கிறது?” என்று கேட்க, அவன் முகம் மலர்ந்தான்.

“இத்தனை நாளா எப்படி படுத்தோமோ அப்படித்தான்… நான் அந்தப்பக்கம் நீங்க இந்தப்பக்கம்… நடுவுல இந்த தலகாணியை வைச்சிடுவோம்” என்றான் இயல்பாக!

தயங்கியபடி அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும், “நம்பிக்கை இல்லன்னா நான் வேணா கீழ படுத்துக்கிறேன்” என்றான்.

“நம்பிக்கை இல்லன்னு நான் சொன்னேனா… கொஞ்சம் அன் ஈசியா இருக்கும்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, “அதனாலதான் நான் கீழே படுத்துக்கிறேன்” என்றான்.

“நீங்க மேல படுங்க… நான் கீழ படுத்துக்கிறேன்”

“இல்ல ஜானவி… நான் கீழ படுத்துக்கிறேன்”

“உங்களுக்கு கஷ்டமா இருக்கும் வேண்டாம் நான் கீழ படுத்துக்கிறேன்”

“அதெல்லாம் ஒரு கஷ்டமா இல்ல… நான் கீழ படுத்துக்கிறேன்”

“செழியன் ப்ளீஸ்”

“நீங்க மேலே படுங்க ஜானவி” என்றவன் மிரட்டலாக கூற,

“யாரும் கீழ படுத்துக்க வேண்டாம்… நீங்க முதல சொன்ன மாறியே இரண்டு பேரும் படுத்துக்கலாம்”

“உங்களுக்கு அன் ஈசியா” என்றவன் ஆரம்பிக்க,

“இப்ப நீங்க படுக்க போறீங்களா இல்லையா?” என்று அவள் கண்டிப்பாக கூற, அதற்கு பின் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கவில்லை.

இருவரும் அவரவர்கள் இடத்தில் மௌனமாக படுத்து கொண்டனர்.

செழியனுக்கு ஏனோ உறக்கமே வரவில்லை. அவன் புரண்டு புரண்டு படுக்க ஜானவியோ சில நிமிடங்களில் சத்தமில்லாமல் உறங்கி போனாள்.

அவன் திரும்பி படுக்கும் போதே உறக்கத்திலேயே அவள் அவன் புறம் திரும்பி படுத்திருக்க, அவளை இறக்க உணர்வோடு பார்த்தான்.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்க கூடாதா என்று உறங்குபளை பார்த்து அவன் பரிதாபமாகப்பட்டு கொண்டிருக்க,

அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகமும் அவன் கட்டிய தாலியும் அவளின் கழுத்தில் சரிந்து தொங்கி கொண்டிருந்தது.

இனி அவள் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்லி காட்டி கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி!

அதனை பார்த்த நொடி குற்றவுணர்வு பற்றி கொள்ள தன் சுயநலத்திற்காக அவளை பயன்படுத்தி கொண்டுவிட்டோமோ என்ற அவன் அப்பாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தது.

ஆனால் எந்தவித சலனமுமின்றி அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன் அறையில் தன் படுக்கையில் அதுவும் தன் அருகாமையில் அவளால் எப்படி இத்தனை இயல்பாக உறங்க முடிகிறது. வெறும் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் நட்பும் மட்டும்தான் காரணமா?

பதில் தெரியாத கேள்வியோடு அவள் முகம் பார்த்தான்.

கணவனிடம் ஒரு பெண் உணரும் பாதுக்காப்பு உணர்வு! அது அவனிடம் அவளுக்கு நிரம்ப இருந்தது. ஆதலாலேயே அவனருகில் அவள் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள். அது போதாதா?

மனதளவில் அவளை கணவனாக அவள் ஏற்று கொண்டால் என்பதற்கு!

ஆனால் அந்த விஷயம் ஜானவிக்கே புரியாத போது செழியனுக்கு எங்கனம் புரியும்?

அவள் உறங்குவதை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் முகம் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது.

அவனேயே அறியாமல் ஜானவியின் உதட்டின் மீதிருந்த மச்சத்தை ரஞ்சனியின் மச்சதோடு ஒப்பிட்டு பார்த்தான். கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே அச்சிட்டு வைத்தார் போல அதே அளவில் இருந்தது.

ரஞ்சனியின் அந்த மச்சத்தின் மீது அவனுக்கு தனிப்பட்ட ஓர் ஈர்ப்பு. அந்த அழகை கண்கொட்டாமல் ரசித்திருக்கிறான். பல முறை அவள் உறங்கும் போது தொட்டு பார்த்திருக்கிறான். கணக்கில் அடங்கா முறை அந்த மச்சத்தை தம் இதழ்களால் ரசித்து ருசித்தும் இருக்கிறான்.

இந்த எண்ணமெல்லாம் வரிசையாக தோன்ற அவன் அப்போதே உணர்ந்தான். ரஞ்சனியை எண்ணி கொண்டே ஜானவியின் இதழின் மீதான மச்சத்தை தன் கரம் கொண்டு தீண்ட பார்க்க விழைந்ததை.

அந்த நொடியே பதறி துடித்து எழுந்து கொண்டவன் ஜானவியை ரஞ்சனியாக எண்ணி கொண்ட தன் அறிவீனத்தை எண்ணி அசூயையாக உணர்ந்தான்.

ஒரு நொடி ஜானவியின் நம்பிக்கையை உடைக்க பார்த்தோமே என்று தவிப்புற்றவன் அதற்கு பிறகாக அவளருகில் படுக்கவில்லை. தன்னைதானே ஆசுவாசப்படுத்தி கொள்ள அறைக்குள் நடந்தவன் பின் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து படிக்கும் மேஜை மீது தன் தலையை தாங்கி பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டான்.

உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவன் நடுநிசி கடந்த பின்னே அந்த மேஜை மீது தலை சாய்த்து உறங்கியும் போனான்.

நட்பு என்ற பிணைப்பு லேசாக அறந்து போன உணர்வு. ஆனால் அதற்கு பதிலாக வேறொரு பிணைப்பு அவளிடத்தில் அவனுக்கு உருவாகியிருந்தது.

காதலும் அல்லாது காமமும் அல்லாது ஒரு ஆணாக ஒரு பெண்ணின் மீது உண்டாகும் ஈர்ப்பு. அதுவும் ஜானவியை ரஞ்சனியாக பார்த்த பிறகு அவனால் இனி இயல்பாக வெறும் நட்புணர்வோடு ஜானவியை பார்க்க முடியுமா?

error: Content is protected !!