Pidikaadu 14

Pidikaadu 14

பிடி காடு – 14
நேரம் நடு ஜாமத்தைக் கடந்திருக்கும். வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள் கௌரி. ஊர் அடங்கி நிசப்தமாக இருந்தது. மதியம் வந்துபோன நினைவுகளின் தொடர்ச்சியில் மூழ்கியிருந்தாள். செந்தில் சொன்னது சாத்தியமா?
“இந்நேரத்துல இங்க உக்காந்து என்ன பண்ணுற?”
“ஆத்தாடி… ச்ச… திடீருன்னு பேச்சுக் கேட்டதும் தூக்கிவாரிபி போட்டுடுச்சு. இல்ல சும்மா… நீ என்னய்யாப் பண்ணுற இன்னும் தூங்காம?”
“தூக்கம் வரல”
“ஏன்?”
“ஒனக்கு ஏன் தூக்கம் வரல?”
“நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்லிப்புட்ட. இம்புட்டுப் பெரிய விசயமெல்லாம் என்னால முடியுமான்னு யோசிச்சா… தூக்கம் போச்சு”
“இதுல என்ன கஷ்டம்?”
“கேப்பய்யாக் கேப்ப. சொவத்துல ஒய்யாரமா சாஞ்சு நின்னு கேள்விக் கேக்குறது சொலபம்”
“எதுக்கு இவ்வளோ யோசிக்குற? எனக்கு சமச்சுப் போட்டுட்டு தான இருக்க? அத இன்னும் பத்து இருவது பேத்துக்கு சேத்து செய்யுன்னு சொல்லுறேன்”
“நீ என்னைய வியாவாரம் பண்ண சொல்லுற. கணக்கு வழக்கெல்லாம் பா…”
“என்ன படிச்சிருக்க? ஒண்ணு ரெண்டு எண்ணத் தெரியுமா?”
“எல்லாம் தெரியும்”
“கட போடுறதுக்கு என்னென்ன சாமான் வேணும்னு லிஸ்டு போட்டு நாளைக்கு ரெடி பண்ணி வை. சாயங்காலம் வந்து கடைக்குக் கூட்டிட்டுப் போறேன். நேரங்கெட்ட நேரத்துல இங்கல்லாம் உக்காறாத. உள்ள போ”
“கேக்குற ஒரு கேள்விக்கும் பதிலுக் கெடயாது. திருப்பி நம்மக்கிட்டயே கேள்விக் கேக்க வேணடியது. போறதப் பாரு… ஹ்ம்ம்… இதுக்கு மேல இங்க உக்காந்து என்ன பண்ண? யோசிக்கக் கூட நேரங்குடுக்க மாட்டாக போல. என்ன நடக்குதோ நடக்கட்டும். பொலம்பி என்னாகப் போகுது? கண்ணு முழிச்சுத்தே என்னாகப் போகுது? எனக்கு ஆயிரத்தெட்டுக் கவல.. தூக்கம் வரல. இவகளுகென்ன வந்துச்சு? இந்நேரத்துல இங்கெதுக்கு வந்தாக?”
செந்தில் பெட்டியிலிருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்தான். அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கையிருப்பைக் கணக்கிட்டான். இருந்தது. இப்போதைக்கு தாராளமாக இருந்தது. ஆனால் வரும் நாட்களில் அதில் எவ்வளவு மிச்சமிருக்கும்?
புத்தகத்தை உள்ளே வைத்து பெட்டியை மூடி விளக்கை அணைத்துப் படுத்தான்.
காலை எழுந்தது முதல் ஒரு காகிதத்தில் கடைப் போட தேவையான பொருட்களைக் குறித்து வைத்தாள் கௌரி. செந்தில் கவனித்தான். எதுவும் கேட்கவில்லை. இரவிலிருந்து அவன் மனதில் ஒரு கேள்வி மட்டும் எஞ்சியிருந்தது.
‘இவளுக்காக நா எதுக்கு இம்புட்டு செலவுப் பண்ணணும்?’
வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டான். மாற்றிப் பேச மனம் இடம் கொடுக்கவில்லை. எதற்காக அப்படிச் சொன்னான் என்ற ஆராய்ச்சி ஒருபுறம். இத்தனை செலவு போகத் தனக்கென்று எதுவும் மிஞ்சுமா என்ற சந்தேகம் ஒருபுறம்.
அவள் அமைதியாய் இருப்பது செந்திலிற்கு பிடிக்கவில்லை. இத்தனை வருடங்களாய் அவன் வீட்டில் நிலவிய அமைதி இன்று மட்டும் ஏன் பிடிக்காமல் போனது?
அவன் பேசாமல் சாப்பிடுவது அவளுக்கும் பிடிக்கவில்லை. எப்போதும் அவன் அமைதியாகச் சாப்பிடுவது வழக்கம். தெரியும். இருந்தாலும் இன்று அவன் ஏதாவது பேசினால் ஆறுதலாக இருக்குமென்று நினைத்தாள். கிளம்பும்போதும் தலையை மட்டும் அசைத்துச் சென்றுவிட்டான்.
‘சாயங்காலம் எத்தன மணிக்கு வருவாக? இன்னைக்கே எல்லாத்தையும் வாங்கணுமா? என்னைக்கு வண்டிக் கெடைக்கும்? என்னையிலேந்துக் கடப் போடணும்? எங்கப் போடணும்? என்ன சமைக்கணும்? ஒரு மண்ணும் சொல்லாம லிஸ்டு எழுதுன்னு மட்டும் சொல்லிட்டு… என்னன்னு எழுத? நானும் காலையிலேந்து நாலு சாமான் எழுதி வெச்சுக்கிட்டு முழிக்குறேன். ஒக்காந்து எதுனாப் பேசுனா என்ன? வாயத் தொறந்தா முத்து உதுந்துடும்னு இறுக்கி மூடி வெச்சுக்கிட்டே திரியுறது. எனக்கென்ன போச்சு? கடுகு, சீரகம்னு என்னத்தையாவது எழுதி நீட்டுறேன். அவகளே பாத்துக்கட்டும்’
மாலை அவன் கையில் காகிதத்தைக் கொடுக்கும்போது இந்த வீராப்பெல்லாம் காணாமல் போயிருந்தது.
“இன்னும் கெளம்பலையா? எம்மூஞ்சிய பாத்துட்டு நிக்குற?”
“எத்தன மணிக்கு வருவேன்னு நீ சொல்லவே இல்ல. இவ்வளோ சீக்கிரம் வந்து நிப்பன்னு எனக்கென்ன தெரியும்? நீயே போயி வாங்கிட்டு வந்துடுறியா?”
“கையெழுத்து கன்றாவியா இருக்கு. எனக்கொண்ணும் புரியல”
“நா வேணா இப்போ சொல்லுறேன்”
“மறந்துடும்”
“வேற புதுசா வேணா எழுதித் தரேன்”
“நேரமில்ல”
“எப்படியும் நா கெளம்ப நேரமாகுமில்ல. அந்த நேரத்துல வேற எழுதிக் குடுக்குறேன். நீயே…”
“கெளம்புறியா என்ன?”
“நா புடிச்ச மொயலுக்கு மூணே காலு”
“மொனகாதன்னு சொல்லிக்கிட்டே இருக்க மாட்டேன். என்னைக்காவது ஒரு நாள் செவுலு மேலயே விழும்”
“சீக்கிரமாக் கெளம்புறேன்னு சொன்னேன். புள்ளைக்கு ட்ரெஸ் மாத்தி விடுறியா?”
“அதெல்லா எனக்குத் தெரியாது. ஒனக்கு இன்னும் பத்து நிமிஷம் தரேன். ஓடு”
“நல்லாத்தான்யா அதிகாரம் பண்ணுற”
“நா காருல ஒக்காந்திருக்கேன். சீக்கிரம்”
“சரி சரி”
கௌரி தயாராகி மகனை தூக்கிக் கொண்டு வந்தபோது அவன் காரின் முன்புறம் நின்று செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான்.
“போலாம்”
“எங்கப் போகணும்?”
“எங்கயா? நீதானக் கடைக்குப் போவோம்ன?”
“எந்தக் கடைக்கு?”
“எனக்கிந்த ஊருல எந்தக் கடைய தெரியும்?”
“என்ன வாங்கணும்?”
“அதா லிஸ்டு குடுத்தேன்ல?”
“அது ஒனக்குதாத் தெரியும். எங்கப் போகணும்?”
“பத்துக் கேள்விக் கேட்டு எரிஞ்சு வுழுந்தாலும் வுழுவ… ஒத்த கேள்விய உருப்படியாக் கேக்க மாட்ட அப்படித்தான? மொத எத வாங்கணும்னுக் கேக்குறியா? அதுக்கு நா என்ன கட போடணும்னு நீ சொல்லணும். அதவே சொல்லாம…”
“வண்டியில ஏறு. தெருவுல வெச்சுக் கத்த வேணான்னுப் பாக்குறேன்”
“என்னத்துக்குக் கத்த…”
“முன்னாடி ஒக்காரு”
“இந்தா ஒக்காந்துட்டேன். போதுமா?”
வண்டித் தெரு முனையைத் தாண்டிப் பிரதான சாலைக்கு வரும்வரை அமைதியாக இருந்தான் செந்தில். அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மனதிற்குள் பட்டியலிட்டாள் கௌரி.
“எனக்கு…”
“ட்ராபிக் தாண்டட்டும். ரெண்டு நிமிஷம்”
அவனுடன் காரில் செல்வது இது முதல்முறை இல்லையென்றாலும் அவன் எப்படி ஓட்டுகிறான், சாலையை எப்படி கவனிக்கிறான், எப்போது எரிச்சலடைகிறான், எப்போது நிதானிக்கிறான் என்று சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“இப்போ சொல்லு”
“எங்கப் போறோம்?”
“ஏதோ கேக்கணும்னல்ல? கேளு. இப்படியே கொஞ்ச தூரம் போறேன். ஒன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொன்னதுக்கப்பறமா பஜாருக்கு போவோம்” “என்னத்துக்கு கோவிக்குற? எனக்கென்னயாத் தெரியும்? கடப் போடுங்குற. தள்ளு வண்டி வாங்கித் தரேங்குற. என்ன…”
“இதுக்கு மேல வேற என்ன சொல்லணும்? தள்ளு வண்டி வெச்சு ஒன்னால என்ன கடப் போட முடியும்? நல்லா சமைக்குற. சாப்பாட்டு கடப் போடுன்னும் சொல்லிட்டேன்”
“நல்லா சமைக்குறேனா? இத எப்போ சொன்ன?”
“மதியம் வீட்டுக்கு வர நேரம் கெடைக்க மாட்டேங்குது சோத்த கட்டிக் குடுன்னு டப்பா கட்டி எடுத்துட்டுப் போறனே. எதுக்கு?”
“காசு மிச்சம் புடிக்குறேன்னு நெனச்சேன்”
தலையில் அடித்துக் கொண்டான் செந்தில்.
“இத்தன வருஷமா வெளில தான சாப்பிட்டுட்டு இருந்தேன். மிச்சம் புடிக்கணும்னா நானே செஞ்சு சாப்பிட்டிருக்க மாட்டேனா? நீ என் வீட்டுக்கு வந்தன்னைக்கு வீட்டுல சமைக்க ஏதாவது இருந்துதா? டீ தூள் இருந்துதா?”
“ஆமா… எதுவும் இல்ல. ஆனாலும் நீ சொல்லாம சாப்பாடு ஒனக்குப் புடிக்குதுன்னு…”
“ம்ம்ச்ச்… எல்லாத்தையும் சொல்லிட்ருக்க முடியாது”
“சரி நா சாப்பாட்டு கடப் போடுறேன்னே வெச்சுக்கோ. எடம் பாக்கணும்ல? இந்த ஊருல…”
“பாத்து வெச்சிருக்கேன். வேற”
“எங்க?”
“சொன்னா ஒனக்குத் தெரியுமா?”
“சரி சொல்லாத. என்ன சாப்பாடுப் போட?”
“ஒனக்கு எது நல்லா செய்ய வரும்னு ஒனக்குதாத் தெரியும்”
“நீதா தெனம் சாப்பிடுறல்ல? எது ரொம்பப் புடிச்சிருக்குன்னு சொல்லு. அதையே…”
“எல்லாமே புடிச்சிருக்கு”
“எல்… அது… இப்படி சொன்னா?”
“வேற எப்படி சொல்லுறது?”
“எது நல்லாருக்கு எது நல்லாலன்னு சொல்லு”
“வர வர எனக்கு வெளில டீ குடிக்கிறது கூடப் புடிக்கல. முன்னல்லாம் பத்து மணிக்கு ஒரு வாட்டி, மதியம் சாப்பிட்டு ஒரு வாட்டி, அஞ்சு மணிக்கு ஒரு வாட்டி டீ குடிப்பேன். இப்போல்லாம் ரொம்ப தல வலிச்சா சாயந்தரம் ஒண்ணுக் குடிக்குறேன். இல்லன்னா காலையில வீட்டுல நீ தரதக் குடிக்குறதோட சரி”
“…”
“வேற என்ன?”
“எப்பக் கடப் போடுறதுன்னு சொல்லு. அதுக்கேத்த மாதிரி ஏதாவது யோசிக்குறே”
“நா சொல்லுற எடத்துல காலையில ஆறு மணியிலேந்துக் கூட்டம் இருக்கும். எல்லாம் கூலி வேலைக்குப் போறவங்க”
“அப்போ அஞ்சற மணியிலேந்து ஆரம்பிக்கலாம். காலையில அதிகமா செஞ்சுட்டு, மதியத்துக்குக் கொஞ்சம் கம்மிப் பண்ணிட்டு ராத்திரிக்குத் திரும்ப அதிகமாப் போட்டுக்கலாம்”
“ராத்திரிக்கு வேணாம்”
“ஏன்?”
“தனி பொம்பளையா கையில கொழந்தையோட காலையில அஞ்சர மணியிலேந்து கடையில நிக்குறேன்ற. பகல்ல ஏதாவது பிரச்சனன்னாப் பரவாயில்ல. ராத்திரியில ரிஸ்கு. அதோட விடிஞ்சதுலேந்து நடு ராத்திரி வரைக்கும் கடையிலயே நின்னுட்டிருந்தா அடுத்த நாள் சாப்பாட்டுக்கு யாரு ரெடி பண்ணுவா?”
“ஆமால்ல… அத நா யோசிக்கவே இல்ல. சரி அப்போ இட்லி போடலாம். மதியத்துக்குக் கலந்த சாதம். போதும்”
“ம்ம்”
“இத மொதவே எங்கூட ஒக்காந்து பேசியிருக்கலாம்ல? நீ ஆம்பள… நாளெடத்துக்குப் போற வர…”
“என்ன நாளெடம்? எந்தக் காலத்துல இருக்க நீ? ஏன் நீ என்ன வூட்டுள்ள அடைஞ்சுக் கெடக்குறியா? ஒரு தள்ளு வண்டி வாங்கித் தரேன் சாப்பாட்டு கடப் போடுன்னா… உடனே பீதி ஆகுறது.
இப்போ எல்லாமே நீதான சொன்ன? காலையில எத்தன மணிக்கு கட ஆரம்பிக்கணும், என்ன சமைக்கணும் எல்லாம். ஒக்காந்து நெதானமா யோசிச்சாத் தெரியப் போகுது.
ஊரு தெரியாது ஏரியா தெரியாது ஒத்துக்குறேன். அத எங்கிட்டக் கேட்டா சொல்லப் போறேன். இதெல்லாம் யோசிக்காமையா இவ்வளோ மொதல் போட்டு வியாவாரம் பண்ணுன்னு சொல்லுறேன்?
ஒண்டியாத்  தெரியாத ஊருக்குக் கெளம்பி வந்திருக்க. அதும் கையில கொழந்தையோட. அவ்வளோ தைரியம் இருக்குதுல்ல? தனியா தெரியாத ஊருல சமாளிக்குற அளவுக்கு. அது போதாதா?
இப்போ ஏதாவது ஒதவின்னா செய்யுறதுக்கு நா இருக்கேன். இன்னுமும் நீ என்ன யோசிக்குற எதுக்கு யோசிக்குறன்னு எனக்குப் புரியவே இல்ல.
அப்பப்போ மார்க்கெட் போயி மொத்தமா சாமான் வாங்கிட்டு வரலாம். அவசரத்துக்கு வேணும்னா மாமா கடையில வாங்கிக்கோ. கையில காசு இல்லன்னாலும் கணக்கு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துக்கலாம். வேற என்ன வேணாலும் எப்ப வேணாலும் எனக்குக் கூப்பிடு”
“எப்படி?”
“என்ன எப்படி?”
“நா எப்படிக் கூப்புட?”
“போன் இல்லல்ல? மொத ஒனக்கு ஒரு செல்போன் வாங்குவோம்”
“மொத எங்கப் போவணும்னு எங்கிட்டக் கேட்ட… இப்போ நீயே சொல்லிப்புட்டப் பாத்தியா?”
“இந்த நக்கலுக்கொண்ணும் கொறச்சலில்ல. சொன்னதெல்லாம் மண்டையில ஏறுச்சா?”
“என்னால முடியும்னு நீ நம்புற. அதுவே எனக்கு தைரியத்தக் குடுக்குது. தெனம் நாலு எடம் போலன்னா என்ன? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு இல்லையே. நீ சொல்லுற மாதிரிக் கொஞ்சம் பீதி ஆயிட்டேன்”
“ஆளும் மண்டையும்… போடுற மொதலுக்கு ஒழுங்கா தெனம் கணக்கு சொல்லுற. ஒண்ணு ரெண்டு எண்ணத் தெரியுமா?”
“இன்னைக்கு நீ வாங்கி தரதுலேந்து எல்லாத்துக்கும் பில்லு குடு. நோட்டு போட்டு எழுதி வெச்சுக்குறேன். நோட்டுக்கும் பேனாவுக்கும் கூடக் கணக்கு வெச்சுக்குறேன்”
“பாருடா…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!