ஒதுக்க நினைக்கும் உறவுகளும் ஒத்திவைக்க நினைக்கும் சந்திப்புகளும் துரத்திக் கொண்டே இருப்பது சில நேரங்களில் வரம்; சில நேரங்களில் சாபம்! ஓடி ஒளிவதும் நின்று எதிர்கொள்வதும் தனி மனித விருப்பம். முடிவென்பது முன்னெப்பொழுதோ நடந்து முடிந்த நிகழ்வுகளின் நிழாடலால் தீர்மானிக்கப்படலாம். முன் யோசனையின்றியும் எடுக்கப்படலாம்.
செந்திலின் கண் முன் நிழலோவியங்களின் அணிவகுப்பு. இறுதியில் பாஸ்கரிடம் அவன் கேட்டக் கேள்வியே தொக்கி நின்றது. ‘கௌரிக்காக மாமா பேசுவாரா?’
அவள் தன் முகம் பார்க்கிறாள். சங்கடப்படுகிறாள். எல்லாம் தெரிந்தே இருந்தது. அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் சங்கடம் மறைத்தான்.
மாமா உதவியே செய்யாதவர் இல்லை. தாய் தந்தை மறைந்த தினத்திலிருந்து எத்தனையோ செய்திருக்கிறார். எதுவும் அவன் கேட்டதில்லை. அவராகச் செய்தார். ‘போதும்’ என்று சொல்லிப் பழக்கப்பட்டவன். ‘வேண்டும்’ என்று கேட்க விரும்பாதவன்.
பாஸ்கர் கடைக்குச் செல்லவில்லை. செந்திலின் வீட்டில் அமர்ந்திருந்தான். கௌரி அடுக்களையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். செய்வதற்கு எதுவுமில்லை. அடுக்கிய பாத்திரங்களை முப்பதாவது முறையாகக் கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
புறம் கூச்சலும் குழப்பமுமாய் இருப்பினும் அகத்தில் காண்பிக்காதிருந்தான் செந்தில். முடிவெடுக்கும் பொறுப்பை யாரிடமாவது ஒப்படைக்க முடிந்தால்?
“ஒன்னால ஒங்கப்பாவ நேரடியா எதிர்த்து பேசவோ கேள்விக் கேக்கவோ முடியாது பாஸ்கர்”
“அது… சரி அப்போ சேகரண்ணன்?”
“வேணாம். கண்மணிய காலேஜூலேந்து இங்க கூட்டிட்டு வா”
“ஹ்ம்ம்… சின்ன வயசுலேந்து எனக்கு ஒன்ன மாதிரி இருக்கணும்னு ஆச. கொஞ்சம் பொறாம கூட உண்டு. கொஞ்ச நாளா எனக்குத் தோணுச்சு… நீ பயந்து ஒளியுற மாதிரி. தெளிவா யோசிக்காத மாதிரி. எனக்கு நீ புதுசாத் தெரிஞ்ச. இப்போதா நீ நீயா இருக்க. நா கெளம்பவா? வீட்டுக்குப் போயிட்டு வண்டி எடுத்துட்டு கண்மணியக் கூட்டிட்டு வரேன்”
“எப்படி… நா மட்டுமா? இல்ல உங்கத்தையும் கூட்டிட்டு… தாம்பாளத் தட்டுலப் பூ பழம் வெச்சு எடுத்துட்டு வரணுமா?”
“கல்யாணம் பேச வர சொல்லல. அப்படி ஒரு எண்ணம் எனக்கில்ல. பஞ்சாயத்துப் பேசக் கூப்பிடுறேன். கண்மணி, பாஸ்கர் இங்க இருக்காங்கன்னு அத்தகிட்ட சொல்லிடுங்க. வரும்போது கடையிலேந்து ஒரு கிலோ தக்காளி எடுத்துட்டு வாங்க. வெக்குறேன்”
“சும்மா எப்போ பாரு கல்யாணம் கல்யாணம்னா… எப்படியும் வாங்கிதான ஆகணும். கொண்டு வரட்டும். ஏன் இத கூட செய்யமாட்டாரா?”
“ஏன் மாட்டாரு? அவரு ஒனக்குன்னு எவ்வளவோ செய்ய ஆசப்படுறாரு. நீதா விட்டதில்ல”
“வா போலாம்”
பரசுராமன் எழுந்தார். காய் வைத்திருக்கும் அடுக்கருகில் சென்றார். தக்காளியை இரண்டு கைகளிலும் அள்ளினார். அள்ளி என்ன செய்ய? கவர் வேண்டுமே. கண்ணில் படவில்லை.
காலையிலிருந்து எத்தனையோ பேருக்கு எத்தனையோ பொருட்கள் எடுத்துக் கொடுத்தாயிற்று. கண்முன் இருக்கும் யாவையும் காணாமல் போக்குமளவு இருந்தது செந்தில் பேசிய வார்த்தைகளின் தாக்கம்.
கவரை எடுத்து, அது கொள்ளுமளவு தக்காளியை அள்ளிப் போட்டு மூட்டைக் கட்டிக் கல்லாப் பெட்டியின் மேல் வைத்த தடவிக் கொடுத்தார்.
ஆறு மணி வரை பொறுக்க முடியவில்லை. ஐந்தரை மணிக்கே ஷட்டரை மூடயாயிற்று. ஓட்டமும் நடையுமாக தக்காளி மூட்டையுடன் செந்திலின் வீட்டை எட்டியிருந்தார். அவர் கேட்டைத் திறந்தபோது செந்தில் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
“உள்ள வாங்க”
“இந்தாக் கேட்டியே… கண்மணி வந்துடுச்சா?”
“கூட்டிட்டு வந்துட்டேன். கௌரி வீட்டுல இருக்கு”
“சாப்பிட்டியா?”
“இப்போவா?”
“நேராமாவலல்ல… சரி சரி… மத்தியானம் சாப்பிட்டியா?”
“அதெல்லா சாப்டாச்சு… இப்படி ஒக்காருங்க. பாஸ்கர்… போயி அவங்க ரெண்டுப் பேரையும் கூப்பிடு”
“கவர் கைலயே வெச்சுட்டு நிக்குறியே… உள்ள வெக்கலையா?”
“ம்ம்… தண்ணிக் குடிக்குறீங்களா?”
“குடுப்பாக் குடிக்குறேன்”
அவன் தந்த சொம்பு நீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தார். கண்மணி, பாஸ்கர், கௌரி வீட்டினுள் வந்தனர். அவர் நீட்டிய சொம்பை வாங்க கௌரி கை நீட்டினாள்.
“நல்லாயிருக்கியாம்மா?”
தன்னிடம் தான் கேட்டாரா என்ற சந்தேகம். திரும்பிப் பார்த்தாள். செந்தில் பதில் சொல்லுமாறு தலையசைத்தான்.
“இருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா?”
“இருக்கேம்மா. என்னப்பாப் பேசணும்னு சொன்ன?”
“சண்முகம்னு ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா?”
“சண்முகம்… ரெண்டு மூணுப் பேரு இருக்காங்க. யாரு?”
“தள்ளுவண்டியிலக் கடப் போடணும்னாக் கூட அவருக்கிட்டக் கேக்கணும்னு ஒருத்தன் ரெண்டு நாளா பிரச்சனப் பண்ணுறான். இன்னைக்கு பாஸ்கரப் பாத்ததும் அவனுக்கு அடையாளம் தெரிஞ்சுது. ஒங்களப் பேச சொல்லுறான்”
“செய்வேன்டா… நீ என்டக் கேக்குறப் பத்தியா? எத்தன வருஷம் கழிச்சு… அப்பனாத்தாளத் தொலச்சுப்புட்டு எழவு வீட்டுல அமைதியா நின்னயே… அன்னைக்கு ஒங்க வீட்டுக்கே கூட்டிட்டுப் போங்க மாமான்னு ஒரு வாத்த சொல்லிருந்தீன்னா எம்பொஞ்ஜாதிய ஒதுக்கிட்டு ஒன்னக் கூட்டிட்டுப் போயி தங்கமாப் பாத்திருப்பேன்டா. ஆனா நீ எதுவுமே கேக்கலையே… வீட்டுக்கு வான்னுக் கூப்பிட்டதுக்கு எனக்குத் தனி வீடு பாத்துத் தாங்கன்னுக் கேட்டப் பாரு… போய் சேந்த என் அக்கா மாமாவுக்காக அழுவுறதா ஒன்ன நெனச்சு அழுவுறதான்னுத் தெரியாம… அப்பா… அந்த நாளெல்லாம் திரும்பி வந்துடவே கூடாதுடா சாமி.
படிக்க வையுன்னாவது கேட்டிருக்கலாமேடா. பத்தாப்பு வரைக்கும் நல்லாப் படிச்சுட்ட… மேலப் படிக்க வெக்குறேன்னு கேட்டதுக்கு வேலைக்கு சேத்துவிட சொன்ன. வீடு, குடும்பம், ஊருன்னு யோசிச்சு ஒன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போற தைரியம் இல்லாம… மொத நாள் வேலைக்குக் கொண்டு போயி விட்டப்போ… இந்தப் பொழப்புக்கு செத்துடலாம்னுத் தோணுச்சுய்யா.
பசிக்குது சோறு போடுன்னு கூடக் கேட்டதில்லயேடா பாவி… இப்போ எனக்குக் குடுத்தயே… இந்த ஒரு வாய் தண்ணிய கூட நா ஒனக்குக் குடுக்க விட்டதில்லடா நீ. எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுத் திருப்பிக் குடுத்துட்ட. என் வைத்திய செலவுக்கு எம்புள்ளயால செய்ய முடியல. நீ செஞ்ச…
இருக்க ஒரு சொந்தத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு அனாத மாதிரி இந்த வீட்டுல இருந்துக்கிட்டு… எந்த வயசுலேந்து? மாமான்னாவதுக் கூப்பிடுறியா?