Poda podi 1

Poda podi 1

போடா… போடி… – 1

25 வருடங்களுக்கு முன்…

செல்லாத்தா… செல்ல மாரியாத்தா..!
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா..!
கண்ணாத்தா… உன்னைக் காணாட்டா…
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம்? சொல்லாத்தா..!
உந்தன் பெருமையை, இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா…
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி… நீயாத்தா..!
செல்லாத்தா… செல்ல மாரியாத்தா..!
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா..!
புலர்ந்தும் புலராத விடியல் பொழுது. எல். ஆர். ஈஸ்வரியின் குரலில் பாடல் கோவில் ஒலிபெருக்கியில் ஒலித்து, ஊரை நிறைத்துக் கொண்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த இயற்கை எழில் கொஞ்சும் சிந்துபூந்துறை கிராமம்.

எப்பொழுதும் விடியல் பொழுதில் இருக்கும் சோம்பல் இல்லாமல், ஊரே உற்சாகத்துடன் அந்த காலை வேளையை எதிர் கொண்டது.

இன்று அக்கிராமத்தின் உலகநாயகி அம்மன் கோவில் வருடாந்திர, சித்திரை மாத பௌர்ணமி கொடைவிழா (திருவிழா).

திருவிழா என்றால் உற்சாகமே! காரணம் சொல்லவா வேண்டும், ஒரு வீட்டில் விஷேசம் என்றால். அவர்களின் சொந்தபந்தம் மட்டுமே கூடுவர். ஆனால் ஊர் கோவில் திருவிழா ஒட்டு மொத்த ஊரின் கொண்டாட்டம் அல்லவா!

பிழைப்புகாக வேலை நிமித்தமாக ஊரினை விட்டு சென்றவர்கள், தங்கள் மண்ணோடு பிணைத்து வைப்பதே இந்த திருவிழாதானே!

அது மட்டுமா கன்னியரை சுற்றும் காளையரும், காளைகளைக் கண்கள் வட்டமிட்டாலும் அதை வெளிக்காட்டாமல் சுற்றும் கன்னியரின் லொல்லுகளும் அரங்கேறுமே! அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவுகளின் சலுகையில் வம்பிழுப்பவர்களின் கலாட்டாக்கள் களைகட்டுமே!

சொந்தபந்தங்களை வருடம் ஒரு முறையாது பார்த்து அளவளாவவே இது போன்ற விழாக்களை முன்னோர்கள் கொண்டாடினரோ! காலப்போக்கில் தெய்வ நம்பிக்கையாகி போனது!

இந்த ஊரின் திருவிழா சித்திரை மாதம் அதாவது பள்ளிகள், கல்லூரிகளின் விடுமுறை, அலுவல்களின் வருடாந்திர பணி சுமைகள்லாம் சற்று தளர்ந்தக் காலமான ஏப்ரல் மாதத்தில் வருவதால், பெரும்பாலான வெளியூர்வாசிகளும் சொந்தங்களும் வந்துவிடுவர்.

பத்து நாள் முன்னே கொடியேற்றி, காப்பு கட்டி, முளைபாரி விதை போட்டு, விரதமுறைகள் ஆரம்பித்து, தினம் தினம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பதினோராம் நாளனா இன்று தாமிரபரணி நதியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வருவதில் ஆரம்பித்து அன்று இரவு நடுசாமத்தில் அம்மனுக்கு படையல் விருந்து படைத்து வான வேடிக்கையுடன் விழா நிறைவுப்பெறும்.

தலைகட்டு வரியிலும் நன்கொடையிலும் பொது செலவுகள் அதாவது மேளம், பந்தல் தோரணம், சீரியல் செட்டுகள் போன்றவை அடங்கும். பதினோரு நாளும் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு ஒரு ஒரு தலைகட்டு குடும்பம் நிர்ணயிக்கபட்டு, முறைகள் செய்யப்படும்.

அன்றைக்கான பூஜைகான அபிஷேக பொருளிலிருந்து அம்மனின் அலங்காரம், பூ மாலைகள் செலவுகள்அனைத்தும் அந்த குடும்பத்தாரினது.

இரண்டு, மூன்று குடும்பம் சேர்ந்துக் கூட்டாகவும் பகிர்ந்துச் செய்வர். இதில் மாறுபாடுகளையும் சவுரியங்களையும் விழாகமிட்டி முதலிலேயே கலந்தாலோசித்துத் தகவல் தெரிவித்துவிடும்.

பதினோரம் நாளான இன்று தலைக்கட்டு பூஜைக்கு அம்மையப்பன் மற்றும் முருகேசனின் குடும்பங்களே பல வருடமாக இணைந்துச் செய்து வருகின்றனர். இந்த இரு குடும்பங்களும் அவ்வூரின் பாரம்பரியமான பெரியத் தலைகட்டு குடும்பம் ஆகும். இருவரும் குடும்பத்தின் ஒற்றை வாரிசாகி போனதால் மற்ற உறவினர்கள் இரண்டாம் வட்ட பங்காளிகள் மற்றும் மச்சான் முறை உறவுகளே. இவர்களில் அம்மையப்பன் கோவிலின் தர்மகர்த்தா, முருகேசன் பொருளாளர் ஆவர். அக்கிராமத்தின் பெரிய நிலத்துகாரர்கள்.

கோவில் ஒலிப்பெருக்கில் பாட்டு சத்தம் நின்று, விழா கமிட்டியர் சார்ப்பில் குழு உறுப்பினர் ஒருவர் ஒலிப்பெருக்கியில் பேச ஆரம்பித்தார், “உலகாளும் உலகம்மா தாயே! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! அம்மன் அருளால் இந்த வருடக் கொடை விழா, இனிதே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாமிரபரணி நதிக் கரையிலிருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு விட்டது. இன்னும் சற்று நேரத்தில், அம்மன் சன்னதி வந்துவிடும், அடுத்த சில நிமிடங்களில் பால்குடப் புறப்பாடு இருப்பதால், பால் குடம் எடுக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வருமாறு விழாக் கமிட்டியர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அறிவித்தார்.

அறிவிப்பைக் கேட்டவுடன் பால் குடத்திற்கு நேந்திருந்தவர்கள் அம்மன் சன்னதி வந்தடைந்தனர். சில நிமிடங்களில் தீர்த்தகுடம் வந்திறங்க, பால்குட புறப்படு கால தாமதம் இன்றி மேள தாளத்துடன் செண்டை மேளம் முழங்க வீதி உலா புறப்பட்டது.

வீதி ஊர்வலம் முடிந்துவர மதிய நேரம் நெருங்கிவிடும். அதற்குள் நாம கதைக்கு கால்சீட் கொடுத்தக் குடும்பத்தை பத்தி சுருக்கமா தெரிஞ்சுட்டு வந்திரலாம், வாங்க வாங்க,

அம்மையப்பனின் சகதர்மினி அன்னலெட்சுமி. இவர்களுக்கு இரு மகவுகள், மூத்தவள் அபிராமி, இளையவன் ஆனந்த் குமார்.

முருகேசனின் சகதர்மினி சுந்தரவல்லி. இவர்களுக்கும் இரு மகவுகள், மூத்தவன் அசோகன், இளையவள் தாமரை.

அபிராமிக்கு அன்னலெட்சுமியின் அண்ணன் மகன் பிரபாகரனுடன் திருமணமாகி ஒரு வயதில் மகனும் உள்ளான். அவன் ஹரிகரன் ( ஹீரோ நம்பர் 1, வயசுபடி மூத்ததால 1 ம் நம்பர்) பிரபாகரன் சென்னையில் ஒரு அரசு வங்கியில் பணிபுரிவதால், அபிராமியும் சென்னைவாசியாகி போனார்.

ஆனந்த் குமார், அசோகன் இருவரும் ஒரே வயதினர். ஒரே பள்ளி, கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். தந்தைகளுடன் விவசாயத்தையும் கவனித்தவாறே, மத்திய வருவாய் துறை பணியையும் பெற்று திருநெல்வேலியில் உள்ள அலுவலகத்தில் நான்கு வருடமாக பணியில் உள்ளனர். குடும்பத்தின் நட்புக்கு இவர்களின் நட்பே கூடுதல் பலம்.

தாமரை மூன்றாமாண்டு இளநிலை பட்டப்படிப்பை திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாள். இறுதி தேர்வுகள் மட்டுமே உள்ளது.

தாமரைக்கும் ஆனந்த் குமாருக்கும் இரு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து போன தை மாதம்தான் திருமணம் முடிவு செய்து சுருக்கமாக வீட்டளவில் மட்டும் பூ வைத்து உறுதி செய்தனர். தாமரை தேர்வுகள் முடிந்ததும் வைகாசி, ஆனியில் (ஜீன், ஜீலை) திருமண தேதி முடிவு செய்யலாம் என்று இருக்கின்றனர்.

அதே போலவே, அசோகனுக்கு அவனது அம்மாவின் தூரத்துறவில் மாமன் மகளை பேசி முடித்திருந்தனர்.

இதுவரை இருந்த ஒரே ஊர்காரர்கள், நண்பர்கள் என்பதை கடந்து இந்த வருடம் கொடைவிழாவில் இரு குடும்பமும் சொந்தமாகக் கலந்துக் கொள்ள உள்ளது.

ஹீம்… முடிஞ்சுது இவங்களாம் சைடு கதாப்பாத்திரங்கள்தான், மெயின் கதாப்பாத்திரங்கள் இன்னும் பிறக்கல சோ, வந்ததும் அறிமுகபடுத்துரேன். அப்ப ஏன் இவங்களுக்கு இம்புட்டு விளக்கமுனு கேட்கீங்களா? இவங்கலாம் இல்லனா மெயின் ஆர்டிஸ்டுகள் வானத்துல இருந்து குதிக்க முடியாதுல அதான். அது மட்டுமில்ல இந்த கதைய நகர்த்த இவங்களோட உதவிலாம் எனக்கு வேணும் அதான் உங்களுக்கும் சின்னதே சின்ன அறிமுகம். அட! அதுக்குள்ள பால் குடம் வீதி உலா முடிஞ்சு வந்துட்டு வாங்க.

பால்குடம் இறங்கியதும் மதியக் கொடைவிழா தீர்த்தகுடங்களின் அபிஷேகத்துடனும் பாலாபிஷேகத்துடன் இனிதே துவங்கியது. பால் குட பால்களின் அபிஷேகம் முடிந்து, அடுத்து அடுத்து வரிசையாக மஞ்சள், திரவியம், அரிசி மாவு, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம்(பழக்கலவை) இளநீர் போன்ற அபிஷேகங்கள் நடைப்பெற்று அம்மன் அலங்காரத்திற்காகத் திரைப் போடப்பட்டது.

அசோக், “என்ன ஆனந்த் சிறப்பு தரிசனம் பலமா இருக்கு” என்று அருகில் நின்றிருந்த நண்பனின் பார்வை, தங்கையை வட்டமிடுவதைப் பார்த்தவாறேக் கேட்க,

“ஏலேய்! உனக்கு பொறாமைல, என் தங்கச்சி கொடைக்கு வரல. அதனால சாருக்கு சிறப்பு தரிசனம் இல்லனு. ஹா.. ஹா.. ”

“ம்ப்ச்! ஆமா… ஆமா… பொறாமை பொங்குது போவீயா… நீ மட்டும் தான் பாக்குற அங்க இருந்து அம்மன் அருள் வந்தாப்புல தெரிலயே? மாப்பிள… ”

“உனக்கு கண்ணு நல்லா தெரிதுனு நானும் ஒத்துக்குறேன். சரிதான், நானும் படிக்குற புள்ளைய தொந்தரவு பண்ண வேணாம்னு, அமைதியா இருந்துட்டேன் மச்சான். ஆமா, தாமரைட இந்த கல்யாணத்துல விருப்பமானு கேட்டுடீங்க தான”

“ஏன் மாப்பிள? இப்புடி கேட்குற”

“இல்லடா, இதுக்கு முன்ன முகத்த பார்த்து பேசலனாலும் பேசவாது செய்வா! ஆனா, கல்யாணம் பேசினதுல இருந்து நா வந்தாலே அந்த இடத்துலயே நிக்கிறது இல்ல. இப்ப கூட கோவில் பூஜைங்கிறதாலதான் நிக்குறாளோனு தோணுது”

“ச்சே.. ச்சே… அவளுக்கு விருப்பம் இல்லனா சொல்லிருப்பாலே.. நம்ம வீட்டு புள்ளைக்கு அந்த அளவு சுதந்திரம் குடுத்துதானலே வளக்குறோம். அதுக்கும் இந்த அச்சம்,மடம், நாணம்லாம் இருக்கும்ல”

“ம்கூம்! ஏதோ இம்புட்டு நாளா எதும் தோணல இப்ப ஏதோ உதைக்குது. சரி, எல்லாம் நல்லா நடந்தா… சரி” என்று ஆனந்தன் கூறி முடிக்கவும் அலங்காரங்கள் முடிந்து அம்மன் திரை விலகவும் சரியாக இருந்தது.

இவர்கள் இவ்வளவு நேரம் பேசிய தாமரையோ, ஒரு வயது ஹரிகரனை கையில் வைத்துக் கொண்டு தனது பதட்டத்தை மறைத்து அம்மனிடம் மனமுருக, பிராத்தித்துக் கொண்டிருந்தாள்.என்ன வேண்டினாளோ! அம்மன் சிரித்த முகமாகவே காட்சியளித்தார் அந்த கற்பூர ஒளியில்.

பூஜை முடியவும் அபிஷேக பால், பஞ்சாமிருதம் பிரசாதமாக வழங்கப்பட்டு, மதியக் கொடை இனிதே நிறைவுற்றது.

கோவிலை விட்டு வெளிவந்த தாமரை அவசரமாக கூட்டத்தை ஆராய்ந்தது, தேடியது கண்ணில்பட்டதும் கையில் இருந்த ஹரிகரனை பக்கத்தில் நின்றிருந்த அபிராமியிடம் கொடுத்தவாறே, “அக்கா, நா வீட்டுக்குப் போறேன் க்கா. அம்மா கேட்டா சொல்லுங்க”

அபிராமி, ” இன்னும் என்ன அக்கானு கூப்பிடுறவ, மதினி சொல்லு தாமரை”

“சட்டுனு வரமாட்டக்கு க்கா… பழகிக்குறேன்” என்றாள் கண்ணகளில் தான் தேடியதின் அசைவை நோட்டமிட்டவாறே!

” சரி, ஒத்தைல போகத இரு. அசோக் வெளிய வாரான். அவன கொணர்ந்து விடச் சொல்லுறேன்”

” வேணாம் க்கா. அவனுக்கு சாயிந்திரம் பூம்பல்லாக்கு ஏற்பாடு பண்ணுற வேளை இருக்கும். நா சந்துவழியா போயிருறேன்.வாரேன்” என்றவாறே அடுத்து பெரியவள் பேசும் முன் கூட்டத்தில் புகுந்திருந்தாள்.

தனியே நின்று கூட்டத்தை பார்த்திருந்த அபிராமியிடம் வந்த நண்பர்கள், ” என்னக்கா, தனியா நிக்குற? தாமரை எங்கே? ” என்றான் அசோக்.

“இப்பதான் வீட்டுக்கு போனாடா. உன்னையும் மாத்தனுமா… நீயும் மதினி கூப்பிட்டு பழகுடா என்னைய… உன் தங்கச்சிக்கு இப்பதான் சொன்னேன்” என்றவாரு தம்பியிடம் திரும்பி,

“ஆனந்த், ஹரிக்கு தூக்கம் வருது இவன வச்சுகிட்டு கூட்டத்த விலக்கி போக முடியாது இவன கொஞ்சம் வீடுவர கொண்டுவாரியா… உன் மாமா, உள்ள அப்பா கூடவே நின்னுடாக”

“ம்ம் வாக்கா போகலாம்… மச்சான், நீ பிரசாதம் குடுக்குற இடத்த ஒரு தடவ பார்த்துட்டு பூம்பல்லாக்கு அலங்காரம் பண்ணுற இடத்துக்கு வா. நா அதுக்குள்ள அக்காவ விட்டுட்டு வரேன்.” என்றவாறுக் கிளம்பினான்.

*****

அபிராமிக்கு முறையாய் கூட பதில் கூறாமல், கூட்டத்தை விலக்கி அவசரமாக வந்தவள், கண்ணாலயே சேதி பேசியபடி பக்கத்தில் இருந்த சந்தில் தன் வீட்டிற்கு போக திரும்பினாள்.

சந்தை கடந்தவள் தங்கள் வீடிருக்கும் தெருவில் நுழைந்தவள் தனது அறையில் நுழைந்து கதறலானாள்.

*****

கோவிலில் அந்தி சாயும் வேளையில், முழுவதும் பூக்களாலயே அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லாக்கில், அம்மனின் உற்சவ சிலை சர்வ அலங்காரத்துடன் ஜொலிக்க, அந்த சப்பரத்தின் முன்னே முதல் நாள் கொடியேற்றத்தின் போது போட்ட முளைபாரியை வித விதமாக அலங்கரித்து, அதனை தலையிலோ இடுப்பிலோ ஏந்தியவாறு ஆண்களும், பெண்களும் தனித்தனியாக அணிவகுத்து நிற்க, அதற்கு முன்னே அலங்கரிக்கபட்ட கிரக குடங்களை தலையில் ஏந்தியவாரும், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் காளி வேடமிட்டும், கருப்பர் வேடமிட்டும் பக்தர்கள் தங்கள் நேத்திகடன் செலுத்தியிருக்க அதற்கும் முன்னே கரகாட்டகாரர்கள் மேளதாளம் முழங்க முன்னே ஆடிச்செல்ல வீதி உலா ஆரம்பமாக தயாராக இருந்தது.

கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்யபட்டு, அம்மையப்பனுக்கும் முருகேசனுக்கும் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டு, முன்னே செல்ல அவர்களின் மனைவிகளும் கையில் பூஜைபொருள் பழம் நிறைந்த தாம்பாழத்தட்டுடன் பின்னே சென்றனர்.

இரு குடும்பத்தாரும் சப்பரத்தின் அருகே வந்ததும் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அம்மையப்பனும் முருகேசனும் சிதறு தேங்காய் உடைத்ததும் வீதி உலா ஆரம்பமாகியது.

தங்கள் வீட்டு வாசலுக்கே வரும் அம்மனுக்கு, ஒவ்வொரு வீட்டிலும் தேங்காய், பழம் சாத்தி பூஜை செய்வர். இதனால் அம்மன் உலா முடிந்து கோவில்வர நள்ளிரவை நெருங்கிவிடும்.

இங்கே சப்பரம் புறப்பட்டதும் அம்மையப்பனும் முருகேசனும் சப்பரத்துடன் செல்ல, பெண்கள் வீடு திரும்பினர்.

ஆனந்தனும் அசோகனும் கோவில் அருகே மேடையமைத்து ஏற்பாடு செய்யப்பட்ட வில்லுபாட்டு கச்சேரியில் அமர்ந்தனர்.

வில்லுபாட்டுகாரி அழகான ராகத்துடன் கச்சேரி செய்துக் கொண்டிருக்க, ஆனந்தனோ யோசனையிலேயே இருந்தான். அவனது யோசனை முழுவதும் மதியம் அக்காவினை வீட்டில் விட்டு விட்டு, திரும்பி வரும் போது கண்ட காட்சியிலேயே இருந்தது.

அசோக், “என்ன மாப்பிள யோசனையாவே இருக்க”

“நா தாமரைட பேச போறேன்டா… ஏதோ சரியில்லை” என்று மட்டும் கூறினான். அவனுக்கே உறுதியாக தெரியாததை, நண்பனே ஆனாலும் சொல்ல போவது அவனது தங்கையை பற்றி எனும்போது தயக்கம்வர விட்டுவிட்டான். தான் பார்த்தக் காட்சியை தெளிவுபடுத்தியிருந்தால், பின்னால் வரவிருக்கும் பிரச்சனைகளை இப்போதே களைந்திருக்கலாம்.

“சரி, நா முதல்ல கேட்குறேன் மாப்பிள” – அசோக்

” ம்ம்… பரீட்சை முடியட்டும் முகூர்த்தம் தேதி, முடிவு பண்ணு முன்ன கேட்கலாம் மச்சான். ”

“ம்ம்” என்றவாரு வில்லுபாட்டில் லயிக்க ஆரம்பித்தான் அசோக். ஆனந்தனும் குழப்பத்தை ஒதுக்கி சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்தான்.

*****
நள்ளிரவு நெருங்கும் நேரம், சப்பரம் வீதி உலா முடிந்திருக்க, கிராமமே கோவிலில்தான் இருந்தது. சப்பரத்தில் இருந்த உற்சவ சிலையை அங்கிருந்த மண்டப ஊஞ்சலில் வைத்து, முன்னே இருந்த இடத்தில் படையல் போட ஆரம்பித்தனர். சைவ படையல்தான் பெரிய அளவில் சாதத்தை பரப்பி அதன் மேலே சாம்பார் ஊற்றி, மற்ற காய்களான அவியல், பொரியல், பச்சடியும் அதன் மேலே போட்டு, அப்பளம், மோர் வத்தல்களும் போட்டு விட்டு தீபாரதனை காட்டிவிட்டு அதனை அங்கேயே வைத்துவிட்டு, திரையை கட்டிவிடுவர் அந்த தீபம் அடங்கும் வரை நிசப்தமே சூழ்ந்திருக்கும். அம்மன் படையலை சாப்பிடுவதாக ஐதீகம். அதன்பின் பகிர்ந்தளிக்கப்படும் அந்த படையல் கூட்டுச்சோறு ருசியற்று உப்பற்றே இருக்கும். அதனை அம்மன் ஏற்றுக் கொண்டதக கூறுவர் கற்பூரம் அடங்கியதும், திரை விலக்கி மறுபடியும் பூஜை செய்ய, வெளியே வான வேடிக்கை ஏற்றப்பட்டது. கொடைவிழா இனிதே நிறைவுற்றது.

****

மறுநாளில் இருந்து பொழுதுகள், எல்லாருக்கும் இயல்பாக அவரவர் வேலைகளுடன் நகர ஆரம்பித்தது. தாமரைக்கும் தேர்வுகள் தொடங்கிவிட, பெரிதாக எந்த மாற்றமும் இன்றி நகர்ந்தது.

அசோக், ” மாப்பிள இன்னையோட தாமரைக்கு பரீட்சை முடியுதுடா! வாரியா, அவா காலேஜ்ல போய்ட்டு அவள கூட்டிட்டு, நெல்லையப்பர் கோவில் போகலாம். அப்படியே அவள்ட பேச வேண்டியத பேசிக்கோ”

“ஏலே! மதிய நேரம் யாருல உனக்கு கோவில் நடைத்திறந்து வச்சிருக்கா? ”

“நாம நடைத்திறக்குற வரை அங்கேயே இருந்துக்கலாம்”

“ஆமா, பொம்பள புள்ளய கோவில் நடைல காக்க வச்சிக்கிட்டு. அதுலாம் வேணாம். நாளைக்கு உங்க வீட்டுல வச்சே பேசலாம்”

“ம்ம் சரி, வேலைய பார்ப்போம். அவ எப்போதும் போல பஸ்ல வீட்டுக்கு போகட்டும்.” என்றவாறு தனது கேபினுக்கு சென்றான் அசோக்.

*****

இங்கே தேர்வு முடிந்து வெளியே வந்த தாமரை தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறாமல், யாருக்கோ காத்து நின்றாள்.

அலைபாய்ந்த விழிகளின் முன்னே வந்து நின்றான், அவன் தனபால்.

“போலாமா” – தனபால்

“ம்ம்” என்று மண்டையை உருட்டியவள் அவன் வந்த ஆட்டோவிலேயே ஏறி பேருந்து நிலையம் வந்து, மதுரை செல்லும் பேருந்தில் ஏறினர்.

*****

தொடரும்…

error: Content is protected !!