இன்னைக்கு ஆபீஸ்ல இருக்கப்போ கௌதம் கால் பண்ணான். கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம் ஒரு வாரம் கழிச்சு என்னோட லீவ் முடிஞ்சு திரும்ப வேலையில ஜாயின் பண்ணிட்டேன்.
இன்னைக்கு ஈவ்னிங் ரெண்டுப் பேரும் சேர்ந்து வீட்டுக்குப் போகலாம்னு சொன்னான். சொன்ன மாதிரியே ஈவ்னிங் எனக்காக வெயிட் பண்ணி என்னைக் கூட்டிட்டு வந்தான்.
கேட்கிட்ட வந்ததும் கார்ல இருந்து என்னை இறங்க சொல்லி அவனும் இறங்கி கேட்டுக்கு வெளில இருக்க நேம் போர்ட்கிட்டப் போனான். “இதுல ’இல்லம்’அப்படிங்குற வார்த்தையத் திற ரேணு”னு சொன்னான்.
நானும் திறந்தேன். இந்த போர்ட் முன்னாடி இப்படி இல்லையேன்னு எனக்கு ஆச்சரியமா இருந்துது. உள்ள ஒரு சுவிட்ச் இருந்துது. அத போட சொன்னான்.
என்ன அதிசயம்? நான் சுவிட்ச் போட்டதும் கேட் தானா நகர்ந்து அந்தப் பக்கம் இருந்த காம்பௌன்ட் வால் உள்ள போயிடிச்சு. நான் திரும்ப சுவிட்ச் ஆப் பண்ணதும் கேட் பழையபடி நகர்ந்து வந்துடுச்சு. என்னால நம்பவே முடியல.
பூட்டின கேட்டத் தள்ளிப் பார்த்தேன். அது அசைய கூட இல்ல.
“ஹே இப்போ உன்னாலத் தள்ள முடியாது… சாவி தொலைச்சா நீ தெருவுல நிக்க வேண்டாம் பாரு. அட்லீஸ்ட் உள்ளயாவது உட்காருவல்ல… அதுக்குத் தான் ரேணு இந்த ஏற்பாடு. எப்படி இருக்கு?”னுக் கேட்டான்.
சாவித் தொலைச்சது என் தப்பு. அதுக்குத் திட்டவும் இல்ல. நேத்து அவ்வளவு பொறுமையா வெயிட் பண்ணான். இப்போ நான் அநாவசியமா தெருவுல நிக்க வேண்டாம்னு இவ்வளவு மெனக்கெட்டு இப்படி ஒரு வேலைய செஞ்சு வெச்சிருக்கான்.
அப்போ எனக்கு இருந்த மனநிலைல தெருன்னு கூடப் பார்க்காம ஓடிப் போய் அவனக் கட்டிப்பிடிச்சுட்டேன். “ஹே ரேணு… என்ன இது? இப்படியா பப்ளிக்கா கட்டிப்பிடிப்பாங்க? எது தரதா இருந்தாலும் உள்ளப் போய் நம்ம ரூம்ல வெச்சு டபிள் மடங்கா தா ரேணு… நான் ரெடி…” னு சொல்லி என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான்.
ஒரே வெட்கமா போச்சு. இப்படியா எல்லார் முன்னாடியும் கட்டிப்பிடிப்பேன்? கேட் திறந்து கார்ல உட்கார சொல்லி உள்ளக் கூட்டிட்டு வந்தான்.
என்னால என் சந்தோஷத்த வேற எப்படியும் வெளிப்படுத்த முடியல. ஆனா அதுக்கப்பறம் கௌதம் நான் குடுத்தத எல்லாம் பல மடங்கா எனக்குத் திருப்பித் தந்தான்.
ஐ லவ் யூ கௌதம்…
-ரேணு கௌதம்
படித்துக் கொண்டிருந்த மீனாவிற்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. வேகமாகக் கைபேசியை எடுத்து கவிதாவை அழைத்தாள்.
“கவி இன்னும் இருவது நிமிஷத்துல நான் அங்க இருப்பேன். நீ கேட்கிட்ட நில்லு”
ராஜேஷை அழைத்துத் தான் கவிதாவின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி காரை எடுத்துச் சென்றாள். சொன்னது போலவே வாயிலில் நின்றவளின் அருகே காரை நிறுத்தி இறங்கிய மீனா “செல்வம் அண்ணா இல்லையா?” என்று கேட்டாள்.
“இல்ல நான் தான் கடைக்கு அனுப்பி இருக்கேன். ஏன்?”
“அதுவும் நல்லது தான்…” டைரியில் தான் படித்தது போலவே செய்து பார்த்தாள் மீனா. அவள் ஒவ்வொன்றும் செய்யச் செய்ய கவிதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
“நீ உள்ள வா… படிச்சுப் பாரு…” அவளையும் காரில் அமர்த்தி உள்ளே சென்றாள்.
“இப்படிக் கூட யாராவது இருப்பாங்களா மீனா? படிக்கும்போதே…”
“எனக்கு ரேணுவ நெனச்சா ஒரு சில நேரம் பொறாமையா கூட இருக்கு கவி. சரி நான் கிளம்புறேன்”
“என்னடி அதுக்குள்ள?”
“இல்லடி… வீட்டுல இருந்தா படிச்சுட்டே வேலையும் முடிச்சுடுவேன். கிளம்புறேன். எதாவது வேணும்னா கால் பண்ணு” என்று கூறி கிளம்பிச் சென்றாள் மீனா.
வீட்டிற்கு வந்தவள் மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
இன்னைக்கு கௌதம் முகத்துல நான் பார்த்த சந்தோஷம்… நான் என் காதல அவன்கிட்ட சொன்ன அன்னைக்கு அவன் முகத்துலத் தெரிஞ்ச சந்தோஷத்த விட அதிகம்.
ஒரு பொண்ணு என்ன தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தாலும்… என்ன தான் ரொம்ப வருஷம் பேசிப் பழகி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு இருந்தாலும்… உன் வாரிசு என் வயித்துக்குள்ள இருக்குன்னு புருஷன்கிட்டப் போய்ச் சொல்லுறது எவ்வளவு கஷ்டம்னு நான் இன்னைக்கு அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.
நாள் தள்ளிப் போனப்போ இருந்த சந்தேகம்… இன்னைக்குக் காலையிலிருந்து லேசாத் தல சுத்தல் இருந்தப்போ வந்த சந்தேகம்… மயக்கம் வர மாதிரி இருந்தப்போ ஆபீஸ் உள்ள இருக்க டாக்டர்கிட்டப் போய்க் கேட்டதும் உறுதி ஆயிடுச்சு.
வெளியில வேற டாக்டர் கன்ஸல்ட் பண்ணி டெஸ்ட் எடுத்துப் பார்க்க சொன்னாங்க. கௌதம் இல்லாம நான் மட்டும் போக எனக்குப் பிடிக்கல.
அவனுக்கு கால் பண்ணேன். ரிங் போன ஒவ்வொரு நொடியும் எனக்குப் பதட்டம் அதிகமாச்சு.
முதல் தடவ அவன் கூடப் பேசுறதுக்காக அவனுக்குக் கால் பண்ணப்போ இருந்த பயம், கூச்சம் எல்லாமே அப்பயும இருந்துது.
இத்தன வருஷம் கழிச்சு என் கௌதம் கூடப் பேச நான் இவ்வளவு யோசிக்குறேனா? எனக்கே என்னைப் புரிஞ்சுக்க முடியல.
கௌதம் எடுத்து ஹலோ சொன்னப்போ அந்தக் குரல் என் உயிர் வரை தீண்டிப் பிரிஞ்சுது. கண்ண இறுக்கி மூடி கைல இருந்த மொபைல கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன்.
“சொல்லு ரேணு”னு அவன் சொன்னப்போ என்னால பேச முடியல. “உன்ன மாதிரியே ஒரு குட்டி உயிர் எனக்குள்ள இருக்கு கௌதம்”னு நெனச்சப்போ எனக்குச் சிலிர்த்து கண்ணுக் கலங்கிடுச்சு.
“ரேணு ஏதாவது பேசு… லைன்ல இருக்கியா? என்னாச்சு ரேணு?”னு அவன் பதறுனான். என்னால இந்த விஷயத்த அப்போதைக்குச் சொல்ல முடியும்னுத் தோணல. ஆனா முதல்ல அவன்கிட்ட தான் சொல்லணும்னு ஆசையா இருந்துது. “என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போ கௌதம்” னு சொன்னேன்.
“ஏன் ரேணு? ஒடம்பு சரி இல்லையா? என்னடா… எதுனாலும் சொல்லு…” னு சொன்னான்.
அவன் பயந்துட்டான்… பின்ன எதுவுமே சொல்லாம அமைதியா இருந்துட்டு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா…”இல்ல கௌதம். எனக்கு உன்னப் பார்க்கணும்”னு சொன்னேன்.
“பைத்தியம்… பயந்துட்டேன் தெரியுமா? இன்னும் அர மணி நேரத்துல வந்துடறேன்… ஒரு சின்ன வேலை இருக்கு”னு சொல்லிட்டு வெச்சுட்டான்.
எனக்கு அதுக்கு மேல வேலை பார்க்க முடியல. எழுந்து ஆபீஸ் வாசல்ல வந்து நின்னுட்டேன். கௌதம் வந்ததும் வீடு வரைக்கும் அமைதியா வந்தேன்.
என் முகத்தைப் பார்த்தே எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லைன்னு அவன் கண்டுப்பிடிச்சிருப்பான். என்கிட்ட வண்டிய நிருத்தினப்போ இருந்த பதட்டம் என்னை ஒரு தடவ மேலேருந்துக் கீழ வரைக்கும் கூர்ந்துப் பார்த்ததுக்கு அப்பறம் இல்லை.
என்னால தான் அவன நிமிர்ந்துப் பார்க்க முடியல.
காலேஜ்ல கூட அவனப் பார்த்தா பே னு அப்படியே பார்த்துட்டே இருப்பேன். ஆனா இன்னைக்கு… வழி முழுக்க ஓரக் கண்ணால அவன் என்னைப் கவனிக்காதப்போ அவனப் பார்த்துட்டே இருந்தேன்.
வீட்டுக்குள்ளப் போனதும் ஆன்ட்டிகிட்ட எதுவும் சொல்லாம நான் மாடிக்கு எங்க ரூமுக்கு போயிட்டேன். “என்னடா ஆச்சு?” னு அவங்க கேட்டதுக்கு “தெரியல மா” னு சொல்லிட்டு கௌதம் என் பின்னாடியே வந்தான்.
அவன் ரூம்குள்ள வந்ததும் கதவத் தாழ் போட்டு அதுலயே சாஞ்சு நின்னேன்.
“என்ன ரேணு ஆச்சு உனக்கு ம்ம்?” னு கேட்டு அவன் என் ரெண்டுப் பக்கமும் கதவுல கை வெச்சு என் முன்னாடி நின்னான்.
அவன் கண்ண நேராப் பார்த்து “ஐ ஆம் ப்ரெக்னன்ட் கௌதம்” னு சொன்னேன்.
வெறும் காத்து தான் வந்துது. ஆனா அது அவனுக்கு நல்லா கேட்டுச்சுன்னு அவன் முகத்துலேருந்து தெரிஞ்சுகிட்டேன்.
அவன் முகத்துல இருந்த சிரிப்பு தேஞ்சு மறஞ்சுது. ஆனா அவன் என்னை விட அதிகமா தடுமாறுறான்னுப் புரிஞ்சுது.
அவன் பேச முடியாம அவஸ்த்தப்படுறதப் பார்க்குறப்போ அவன் கன்னம் ரெண்டையும் பிடிச்சுக் கிள்ளி “சோ ஸ்வீட்”னு சொல்லணும் போல இருந்துது.
மெதுவாக் குனிஞ்சு என் உதட்டுல கிஸ் பண்ணான். என்னை முதல் தடவ கிஸ் பண்ணப்போ இருந்த மென்மை… இன்னைக்கு நான் மறுபடியும் உணர்ந்தேன். அவன் நிமிர்ந்தப்போ அவன் கண்ணுக் கலங்கி இருந்துது.
கௌதம் இவ்வளவு உணர்ச்சிவசப்படுறவனா? நான் அவன ஆச்சரியமாப் பார்த்தேன். என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டான். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. அமைதியா இருந்தேன்.
அதுக்கப்பறம் கீழப் போய் ஆன்ட்டிகிட்ட சொல்லி, டாக்டர்கிட்டப் போய் டெஸ்ட் எடுத்துப் பார்த்து, கன்பார்ம் பண்ணி, வீட்டுக்கு வந்து, எங்க வீட்டுக்கு கால் பண்ணி சொல்லி, கௌதமோட அக்காவுக்குக் கால் பண்ணி சொல்லி… ஏதோ ஒரே நாள்ல என்னைச் சுத்தி இருக்க எல்லாருக்கும் நான் ரொம்ப முக்கியமானவளா ஆயிட்டேனோன்னு எனக்கு ஒரு பீல்.
கௌதம் என் கைய விடவே இல்ல. “உன்ன பத்தரமாப் பார்த்துப்பேன்”னு சொல்லாம சொன்ன மாதிரி இருந்துது. இத விட எனக்கு வேற என்ன வேணும்? நான், என் கௌதம் – இது தான் உலகம்னு இருந்த எனக்கு இப்போ இன்னொரு குட்டி வரவு…
கௌதம் டாக்டர்கிட்டப் பேசிட்டு வீட்டுக்கு வர வழியில “இனிமே வேலைக்குப் போகணுமா ரேணு… வீட்டுலயே இரேன்… அம்மா பார்த்துப்பாங்க… டெலிவரி முடிஞ்சு நீ போறதா இருந்தா அப்போ வேற வேலை தேடிக்கலாம் ரேணு” னு சொன்னான்.
“போகாதயேன்…” னு கெஞ்சுற அவன் குரலை மீறி என்னால என்ன சொல்ல முடியும். எனக்கும் அது தான் விருப்பமா இருந்துது. சரின்னு சொல்லிட்டேன்.
-ரேணு கௌதம்
கவிதா மாடியறைக்குச் சென்றாள். முதல் நாள் இரவு சரியாக உறங்காதது, அன்று காலை கார்த்திக்கை வழியனுப்ப சீக்கிரம் எழுந்தது என்று எல்லாம் சேர்ந்து படுத்ததும் உறங்கிப் போனாள்.
யாரோ தன்னைத் தட்டி எழுப்புவது போல் இருக்க மெல்ல கண் விழித்துப் பார்த்தாள். சுற்றி இருட்டாக இருந்தது. அருகில் ரோஷனை தேடி அவன் இல்லாததைக் கண்டு குழம்பி கைபேசியை எடுத்து மணிப் பார்த்தாள். அது மதியம் மூன்று என்று காட்டியது.
‘மதியம் ஏன் ரூம் இப்படி இருட்டா இருக்கு?’எழுந்து ஜன்னல் கதவைத் திறந்தாள்.
வெயில் சுளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. அப்போதும் அறையில் அதிக வெளிச்சம் இல்லாதது போல் தோன்றவே பால்கனி கதவையும் திறந்தாள்.
அறையில் எந்த மாற்றமும் இல்லை. விளக்கை போட்டு அறையைப் பார்த்தவள் கீழே இறங்கி வந்தாள்.
ரோஷன் உறங்கும் அறை வாசலில் நின்று “செண்பா…” என்றழைக்கவும் செண்பகம் உதட்டின் மேல் கை வைத்து “ஷ்ஷ்ஷ்…” என்று கூறி அவனுக்கு இருமுறை தட்டிக் கொடுத்து மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள்.
“இப்போ தான் கா தூங்கினான்… நீங்க என்ன கா பத்து நிமிஷத்துல எந்திரிச்சு வந்துட்டீங்க?”
“பத்து நிமிஷமா? எனக்கு என்னமோ மணிக் கணக்காத் தூங்கின மாதிரி இருக்கு”
“ரொம்ப அசதியா இருந்து தூங்கினா அப்படித் தான் கா இருக்கும். இங்க ரோஷன் பக்கத்துல படுக்குறீங்களா?”
“ம்ம்… அச்சோ… மொபைல் மேல இருக்கு செண்பா. எடுத்துட்டு வந்துடறேன். நீயும் கொஞ்ச நேரம் போய்ப் படு. நான் இவனப் பாத்துக்குறேன்” என்று கூறி படிகளில் ஏறினாள் கவிதா.
அறை நல்ல வெளிச்சமாக இருக்கக் குழப்பமாக இருந்தது.’தூக்கக் கலக்கத்துல ஒழுங்காப் பாக்கல போல. நேத்து கார்த்திக் பண்ண வேலை… ஒழுங்காத் தூங்கவே விடல’மொபைலை கையில் எடுத்து விளக்கை அணைத்து விட்டுக் கீழே வந்தாள்.
கார்த்திக்கை பற்றி நினைவு வந்ததும் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
‘நேர்ல இருந்த வரைக்கும் எப்படிக் கொஞ்சிட்டு… இப்போ ஒரு போன் கூடப் பண்ணல. திருத்தவே முடியாது’அவன் எண்ணிற்கு அழைத்தாள்.
அவன் அழைப்பை ஏற்காமல் துண்டித்ததும் “இவங்கள…” என்று பல்லைக் கடித்தவள் மகன் அருகில் போய்ப் படுத்தாள்.
கவிதா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற நேரம் ரோஷனிடம் அசைவுத் தெரியவும் கண் விழித்துப் பார்த்தாள். “ம்மா…” என்று கூறி அவள் மீதி ஏறிப் படுத்தான். “தூங்குங்கடா செல்லம்…” அவனை நெஞ்சோடு அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தவன் மீண்டும் கீழே மெத்தையில் இறங்கிப் படுக்கத் தட்டிக் கொடுத்து உறங்க வைக்க முயன்றாள். இரண்டு நிமிடத்தில் மீண்டும் அவள் மீது படுத்தான். நான்கைந்து முறை அவன் இவ்வாறே செய்யவும் அவளுக்கு உறக்கம் முழுவதுமாகக் கலைந்தது.
நன்றாகக் கண் விழித்துப் பார்த்தாள். அவள் மீது படுத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் விழித்து விட்டது தெரிந்ததும் எழுந்து அவள் வயிற்றில் அமர்ந்து “மா…” என்று கைத் தட்டி சிரித்தான்.
ஒரு மணி நேரம் கழித்து அங்கே வந்த செண்பகம் “உங்கள அவன் கூடத் தூங்க சொன்னா… நீங்களும் சேந்து விளையாடிட்டு இருக்கீங்களா கா?” என்று கேட்க “இவன் தூங்க விட்டா தான செண்பா?” என்றாள் கவிதா.
“சரி தான்”
“வீட்டுக்குள்ளயே இருக்கீங்களேடா செல்லம்… வாங்கக் கொஞ்ச நேரம் வெளியிலப் போய் நடப்போம்” ரோஷனை தூக்கிக் கொண்டு வீட்டைச் சுற்றி நடக்க ஆரம்பித்தாள் கவிதா.
கையில் டைரியுடன் சோபாவில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டதை அப்போதுதான் கவனித்தாள் மீனா.
“ஆமாம்மா… இருங்க முகம் கழுவிட்டு வரேன்”
காபி குடித்து முடித்துச் சிறிது நேரம் சமையலறையில் நின்று சட்னிக்கு தேங்காய் துருவிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவள் சோபாவில் இருந்த டைரியை எடுத்தாள்.
கௌதமுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. அவன் பண்ணுறதெல்லாம் விநோதமா இருக்கு. எங்க ரூமுக்குள்ள என்னை நடக்கவே விட மாட்டேங்குறான்.
தூக்கிட்டே எவ்வளவு நேரம் சுத்துவன்னுக் கேட்டா “போ ரேணு… கீழ அம்மா இருக்காங்க. அப்பா இருக்காங்க. அவங்க முன்னாடி உன்ன இப்படித் தூக்க முடியுமா? அட்லீஸ்ட் ரூமுக்குள்ளயாவது தூக்கிக்குறேன். ஆசையா இருக்கு ப்ளீஸ்” னு சொல்லி என் நெத்தில கிஸ் பண்ணுவான்.
நான் கொஞ்சம் வேகமா நடந்தாலும் அவன் தான் பதறுவான். ரெண்டு மாசத்துக்கு இந்தப் பாடு. இன்னும் எத்தன மாசம் இருக்கு… இவன் என்னென்ன செய்யப் போறானோ…
இன்னைக்கு இன்னோன்னும் செஞ்சான். எனக்கு நேத்து அவன் ரோஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தான். எனக்கு ரெட் ரோஸ் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னேன். இன்னைக்கு ஒரு ரோஸ் செடி வாங்கிட்டு வந்து அதத் தோட்டத்துல அவனே நட்டு வெச்சுத் தண்ணி ஊத்தி என்னைக் கூப்பிட்டுக் காமிச்சான்.
இவன் கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணேனோ…
எத்தன ஜென்மம் ஆனாலும் நான் இவனுக்கு மனைவியா இருக்கணும்… இவன இப்போ மாதிரியே எப்பயும் லவ் பண்ணணும்…
ஐ லவ் யூ கௌதம்…
-ரேணு கௌதம்
பெரிய ரோஜாச் செடியின் அருகில் வந்த கவிதா அதன் அழகில் மயங்கினாள். “ரோஷன் குட்டிக்கு ரோஸ் வேணுமாடா தங்கம்?”
செடியருகில் சென்று முட்கள் எதுவும் அவனைக் குத்திவிடாத வண்ணம் அவனைத் தள்ளிப் பிடித்து அதிலிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்து அவன் கையில் கொடுத்தாள்.
24
“ம்மா…” கவிதா அளித்த ரோஜாவை அவளுக்குக் காட்டி சிரித்த ரோஷன் அதைக் கையில் வாங்கிக் கொண்டான்.
“இங்க இருக்கீங்களா? உள்ள தேடுனேன். ரொம்ப நேரமா நிக்குறீங்களே கா”
“எவ்வளவு நேரம் தான் உள்ளயே இருக்குறது? காத்து நல்லா அடிக்குது…”
கவிதா ரோஷனை மடியில் அமர வைத்துத் தோட்டத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். குளுமையான காற்று வீசிக் கொண்டிருந்தது.
காற்றில் ரோஜாவின் மனம் வீசி அவளை அந்தச் செடியைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்குச் சிறிது தொலைவில் இன்னும் வேறு வண்ண ரோஜா மலர்களும் இருந்தன.
சிறிது நேரம் கழித்துக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்த கவிதா சோபாவில் அமர அவளுடைய கைப்பேசி சிணுங்கியது.
“சொல்லு மீனா”
“கவி… ரேணு ப்ரெகனன்ட்டா இருக்காடி”
“நெஜமாவாடி?”
“ஆமாடி…”
“ரெண்டுப் பேரும் தயவு செஞ்சுக் கொஞ்சம் கத்தாம இருங்க. என்னை வேலைப் பார்க்க விடுங்க. ஊருல எவளோ ப்ரெக்னன்ட்டா இருக்குறதுக்கு இந்த ஆர்ப்பாட்டமா? கவி உன் குரல் போனுக்கு வெளிலக் கேட்குது. நீயும் இவ கூடச் சேர்ந்துட்டு ஏன் இப்படிப் பண்ணுற?”
“ராஜேஷ் அண்ணா இருக்காங்களா?”
“ம்ம் ம்ம்… பக்கத்துல தான் உட்கார்ந்திருக்காங்க. இன்னைக்கு ஏதோ கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டாங்க. அதுக்கு இந்த சீன் போட்டுட்டு இருக்காங்க”
“நிஜமாவே வேலை இருக்கு மீனு. உன் கூட இருக்கத் தான் சீக்கிரம் வந்தேன்”
வேகமாகக் கைபேசியை எடுத்து மடியில் வைத்து அழுத்தியவள் “இப்போ உங்ககிட்ட ரொம்ப முக்கியமா இத சொல்ல சொன்னாங்களா? போச்சு…” என்று கூறி அவசரமாக அதை எடுத்து மீண்டும் காதில் வைத்தாள்.
“மீனா… இப்போ அண்ணா ஏதோ சொன்னாங்களே…”
“கேட்டுட்டா… இங்க பாரு கவி… நீ இப்படியெல்லாம் பேசுறதா இருந்தா நான் அப்பறம் விஷயத்த சொல்ல மாட்டேன்…” பேசியபடியே எழுந்து டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள்.
“சரி சரி சொல்லு” என்றவளிடம் தான் படித்தவற்றைக் கூறினாள்.
“உண்மையிலயே அந்த ரோஸ் செடி எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா? இப்போ கூட அதுக்கிட்ட நின்னு தான் ரோஷனுக்கு அதுலேருந்து ஒரு பூ பறிச்சுக் குடுத்தேன்” என்றவள் அவன் இன்னுமும் அந்தப் பூவை கையில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தாள்.
“சரிடி அப்பறம் கூப்பிடுறேன்”
“சரி மீனா. அண்ணா வேற உன் கூடவே… இருக்கணும்னு சீக்கிரமா வந்திருக்காங்க. நீ போ”
“இரு மகளே… இன்னும் ஒரு வாரம் தான். கார்த்திக் அண்ணா வந்துடுவாங்கல்ல… அப்பறம் இருக்கு உனக்கு”
அழைப்பை துண்டித்து டைனிங் ஹாலிலிருந்து வெளியே வந்து “எல்லாம் உங்களால வந்தது” என்றாள்.
“நான் என்ன மீனு பண்ணேன்? எனக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னுத் தோணுச்சு. சீக்கிரம் வந்தேன். இது தப்பா?” அவள் கை பற்றித் தன் அருகில் அமர வைத்தான்.
கவிதா கைபேசியைச் சோபாவில் தன்னருகில் வைத்து “ரோஷன் குட்டி இன்னும் இத கையில வெச்சிருக்கீங்களா? கார்ட்டூன் பார்ப்போமா?” என்று கேட்டு எழுந்துச் சென்று ஒரு ரைம்ஸ் சீடியை போட்டுவிட்டாள்.
இருவரும் அதில் மூழ்கியிருந்த நேரம் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு எழுந்துச் சென்று பார்த்தாள் கவிதா.
அங்கே செண்பகம் இல்லை. சில பாத்திரங்கள் கீழே கிடந்தன. அதில் ஒன்று இன்னுமும் சுற்றிக் கொண்டிருந்தது. அவள் சமையலறை வாயிலுக்கு வரவும் அந்தத் தட்டு சுற்றியபடியே கீழே விழுந்தது.
“ச்ச இந்தப் பூனை தொல்லைத் தாங்க முடியல. நாளைக்கு முதல் வேலையா செல்வம் அண்ணாக்கிட்ட சொல்லி அதத் தேடணும். இந்த செண்பகத்த சாயந்தரத்துல ஜன்னல மூடி வெக்க சொன்னா அவளும் கேட்குறது கிடையாது” புலம்பியபடியே பாத்திரங்களைக் கையில் எடுத்து ஷெல்பில் அடுக்கி திரும்பியவள் ஜன்னல் கதவுகள் அனைத்தும் மூடி தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு குழம்பினாள். எந்த ஜன்னலோ கதவோ திறந்திருக்கவில்லை.
அடுக்களைக்கு ஹாலிலிருந்து டைனிங் ஹாலை கடந்து வரும் ஒரு வழி தான் இருந்தது. அவள் அந்த வழியாகத் தான் இப்போது நடந்து வந்தாள்.
எப்படிப் பாத்திரம் கீழே விழுந்தது? வரும் வழியிலும் பூனை எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லையே… பிறகு எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தவள் “என்ன கா?” என்ற செண்பகத்தின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
கவிதா திரும்பிய வேகத்தில் அவளும் திடுக்கிட்டு “நான் தான் கா… என்னாச்சு?” என்று கேட்டாள்.
“நீயா? இல்ல செண்பா… தட்டு எல்லாம் கீழ விழுந்துக் கிடந்துது. அதான் சத்தம் கேட்டு வந்து பாத்தேன். ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்கு. அப்பறம் எப்படிக் கீழ விழுந்துதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நீ எங்கப் போன?”
“செல்வம் அண்ணாகிட்ட கடைக்குப் போய்க் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வர சொல்லி சொல்லப் போனேன் கா” அடுக்களையை ஒரு முறை சுற்றி வந்தவள் “எதுவும் இல்லையே… கழுவி கவிழ்த்து வெச்சது… மேடையில இருந்த தண்ணில வழுக்கி விழுந்திருக்கும் கா…” என்று விளக்கமளித்தாள்.
“இருக்கலாம் செண்பா”
ஹாலிற்கு வந்த கவிதா சோபாவில் ரோஷன் இல்லாததைக் கண்டு முதலில் சோபாவை சுற்றித் தேடி அவனின் சிரிப்புச் சத்தத்தில் மாடிப்படி அருகே சென்று பார்த்தாள். படிகளின் கீழே அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“டேய் ஆரம்பிச்சுட்டியா நீ? எப்படிச் சோபாலேருந்து இறங்கி இவ்வளவு தூரம் வந்த? இனி உன்ன கேர்புல்லா பார்த்துக்கணும் போலயே…” அவனைத் தூக்கி வந்து சோபாவில் அமர்ந்து மீண்டும் ரைம்ஸ் பார்க்க ஆரம்பித்தாள்.
காமாட்சி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அவரது அறையில் ஓய்வெடுக்கச் சொல்லி மீனா இரவு உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
அவள் அந்தப் பக்கம் சென்றதும் டைரியை கையிலெடுத்தான் ராஜேஷ்.’கார்த்திக் அன்னைக்கு இத புல்லா ஒரு வாட்டித் திருப்பிப் பார்த்தானே… என்னோட கெஸ் கரக்ட்னா அவன் இதுல இருக்க எல்லாத்தையும் படிச்சுட்டான். படிச்சுட்டு எதுக்கு யோசனையாவே இருந்தான்?’
சிறிது நேரத்தில் அங்கு வந்த மீனா அவன் கையில் டைரியைப் பார்த்ததும் “என்னை விட்டுட்டுப் படிக்காதீங்கன்னு எத்தன தடவ ராஜேஷ் சொல்லுறது?” என்று கேட்டு அவனருகில் அமர்ந்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மீனு… வா சாப்பிடலாம்”
‘என்னாச்சு இவங்களுக்கு? நான் கேட்டுட்டே இருக்கேன்… இவங்க பாட்டுக்கு எந்திரிச்சுப் போறாங்க’
சாப்பிட்டதும் “நான் போய்ப் படுக்குறேன் மீனு. தல வலிக்குது…” அவள் பதிலையும் எதிர்ப்பாராமல் மேலே செல்பவனை விநோதமாகப் பார்த்தாள்.
‘டைரி படிச்சுட்டு இருந்தாங்களே… இப்போ எதுக்கு இப்படி அவசரமாப் போய்ப் படுக்குறாங்க?’டைரியை கையில் எடுத்தாள்.
நான் எனக்கு இந்த இப்படியெல்லாம்
என்ன எழுதன்னே தெரியலயே கடவுளே…
‘என்ன ஆச்சு இந்த ரேணுக்கு? இது என்ன அடிச்சு அடிச்சு இப்படி எழுதியிருக்கா? கையெழுத்து வேற கன்றாவியா இருக்கு… இவ டைரி தொறந்ததும் இவளோட ஹான்ட் ரைட்டிங் தான் முதல்ல இம்ப்ரெஸ் பண்ணுச்சு. இப்போ என்னடான்னா…’
வேகமாக இன்னும் இரண்டு பக்கங்களைப் புரட்டினாள். அதிலும் கையெழுத்துச் சரியில்லாமல் தான் இருந்தது. இதில் சில இடங்களில் தண்ணீர் பட்டு எழுத்துக்கள் சில அழிந்தும் இருந்தன.
அவள் இன்னொன்றையும் கவனித்தாள். இதுவரை தேதிக் குறிப்பிட்டே எழுதியிருந்த ரேணு அந்தப் பக்கத்திற்குத் தேதிக் குறிப்பிடவில்லை. பின்னால் இருந்த எந்தப் பக்கங்களிலும் தேதி இல்லை.
இதற்கு முன் படித்த பக்கத்தை மீண்டும் வாசித்துப் பார்த்தாள்.’சரி எதுக்கு இவ்வளவு குழம்பணும்? படிச்சுப் பார்த்தாத் தெரிஞ்சுடப் போகுது…’என்று முடிவெடுத்து மேலேப் வாசிக்க ஆரம்பித்தாள்.
ரெண்டு நாள்ல ஒருத்தரோட வாழ்க்கையே மாறுமா? சொல்லப் போனா ஒரு போன் கால் தான்…
என் வாழ்க்கைல நான் கௌதம் சந்திச்சதுக்கு அப்பறம் எல்லாமே அவன் தான்னு இருந்தேன். என் உலகமே அவனா தான் இருந்தான். அவனைத் தவிர நான் வேற எதையும் யோசிச்சதும் இல்ல. அதுக்கு அவசியமும் வரல.
ரெண்டு நாள் முன்னாடி அன்னைக்குக் காலையிலயும் கௌதம் என் கூட வம்பு வளர்த்து… என் முன்னாடி முட்டிப் போட்டு நின்னு “உன் மம்மி சரியே இல்ல செல்லம்…” னு என் இடுப்ப சுத்தி கையப் போட்டு என் வயத்துல கிஸ் பண்ணிட்டு “லவ் யூ ரேணு” னு சொல்லி எனக்கு கிஸ் குடுக்க வந்த நேரம் ஆன்ட்டி கூப்பிட்டதால “ஈவ்னிங் வந்து கவனிச்சுக்குறேன்”னு சொல்லிட்டுக் கீழப் போனான்.
அவன் ஆபீஸ் கிளம்பிப் போய் முக்கால் மணி நேரத்துல என் மொபைலுக்கு அவன் நம்பர்லேருந்து கால் வந்துது.
“இந்த நம்பருக்குதாங்க இவரு கடைசியாப் பேசி இருக்காரு… நீங்க கொஞ்சம் ஹாஸ்பிட்டலுக்கு சீக்கிரம் வாங்க”ன்னு யாரோ ஹாஸ்பிட்டல் பேர சொல்லிட்டு வெச்சுட்டாங்க…
எனக்கு ஒண்ணுமே புரியல. ஒரு நிமிஷம் சிலை மாதிரி நின்னுட்டேன்.
ஆன்ட்டி வந்து என்னன்னுக் கேட்டதுக்கு அப்பறம் தான் யோசிக்க ஆரம்பிச்சேன். போன்ல சொன்னதச் சொன்னேன். அவங்களும் பதறி மறுபடியும் கௌதம் நம்பருக்கே திரும்பக் கூப்பிட சொன்னாங்க.
கூப்பிட்டேன். யாரும் எடுக்கல.
முதல்ல ஹாஸ்பிட்டல் போவோம்னு சொல்லி அங்கிளுக்கு கால் பண்ணி சொல்லிட்டு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க.
“அவனுக்கு எதுவும் ஆயிருக்கக் கூடாது கடவுளே…” னு அழுதுக்கிட்டே அவங்க சொன்னப்போ கூட எனக்குக் கடவுள்கிட்ட வேண்டணும்னுத் தோணல.
“என்ன வேண்டுறது? எதுக்கு வேண்டுறது? ஏதாவது ஆகுமா? என் கௌதமுக்கா? அவன் தான் என் கூடவே இருக்கானே…” னு தான் தோணுச்சு.
ரிஸப்ஷன்ல அவன் பேரு சொல்லி ஏதேதோ விசாரிச்சு என் கையப் பிடிச்சு ரெண்டாவது மாடிக்குக் கூட்டிட்டுப் போனாங்க.
போற வழி எல்லாம் என்னென்னவோ சொல்லி புலம்புனாங்க. எதுக்கு இப்படிப் பதறுறாங்கன்னு எனக்குப் புரியல. அவனுக்கு எதுவோ ஆயிடுச்சுன்னு மட்டும் மண்டையில உரைச்சுது. ஆனா அதுக்கு எதுக்கு இப்படிப் புலம்பணும்?
ஐசியூ முன்னாடி நின்னு “ரேணு…” னு சொல்லி என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டாங்க.
அந்த நொடி… அந்தத் தொடுகை… அவங்க கையில இருந்த நடுக்கம்… எனக்குள்ள பயத்த உண்டாக்குச்சு.
மெதுவா கதவத் திறந்து உள்ள எட்டிப் பார்த்தப்போ எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுது.
கௌதம்… காலேஜூல என்னை முதல் முதல்ல பார்த்தப்போ அழகா சிரிச்ச என் கௌதம்… என் மனசுல ஆழமாப் பதிஞ்ச அந்த முகமா இதுன்னு எனக்கே சந்தேகமா இருந்துது.
“அடி பலமா பட்டிருக்கு…”
“டாக்டர் பார்த்துட்டாங்க…”
“லாரி வந்து மோதிடுச்சு மா…”
“ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க…”
“வீட்டுல ஆம்பளைங்க யாரும் வரலையா மா…”
இப்படி எத்தனையோ குரல் கேட்டுச்சு. ஆனா எதுவும் முக்கியமா படல.
“இது என்னோட கௌதம் இல்ல… இருக்கவே முடியாது…” இத மட்டும் தான் என் மனசு சொல்லிக்கிட்டே இருந்துது.
சுத்தி ஆயிரம் வயர் தொங்க… உடம்பு முழுக்க வயர் சொருகி… முகம் கருத்து… ஐயோ… இதெல்லாம் எதுக்கு என் கண்ணு முன்னாடித் தெரியுது? என் கௌதம் எங்கே? ஒருவேள கண்ண மூடித் திறந்தா இந்தக் கொடூரமான காட்சி மறஞ்சு என் கௌதம் என் முன்னாடி நின்னு சிரிப்பானோன்ற ஏக்கம்.
நான் கண்ண இறுக்கி மூடித் திறந்தேன். கௌதம் கஷ்டப்பட்டுக் கைய அசச்சான்.
என்னைத் தான் கூப்பிடுறான்னு மூளைக்குத் தெரிஞ்சுது. ஆனா அவன்கிட்டப் போகப் பயமா இருந்துது.
ஆன்ட்டி என்கிட்ட வந்து “போ ரேணு” னு சொல்லி என் கையப் பிடிச்சு அவன் கிட்ட கொண்டு வந்து நிறுத்தினாங்க.
நான் எடுத்து வெச்ச ஒவ்வொரு அடியிலயும் பூமி அதிறுற மாதிரி இருந்துது. சுத்தி இருக்க எல்லாமே கலங்கலாத் தெரிய ஆரம்பிச்சுது.
கௌதம் முகத்த கிட்டப் பார்த்தப்போ என் கண்ண என்னாலயே நம்ப முடியல. முகத்துல அத்தனை காயம். எப்படி வலித் தாங்கினான்?
ஆன்ட்டி வாயப் பொத்தி அழ ஆரம்பிச்சாங்க. அப்போ அங்கிள் உள்ள வந்தாங்க.
கௌதம் என்னையே தான் பார்த்தான். எப்பயும் என்னை ஈர்க்குற அந்தப் பார்வை அன்னைக்கு மட்டும் ஏன் அவ்வளவு வேதனைய காட்டுச்சு? அவன் கண்ணுல அந்தத் தவிப்பு… எதனால?
ஏதோ என்னை அவன் கண்ணுக்குள்ளயே நிறைச்சுக்குற மாதிரி… எங்க கண்ண சிமிட்டினா நான் மறஞ்சுடுவனோங்குற மாதிரி… அப்படி ஒரு பார்வை…
ரொம்பக் கஷ்டப்பட்டு அவனோட கையத் தூக்கினான். அவன் முகம் வேதனைல சுருங்குறத என்னால பார்க்க சகிக்கல… நான் அவன் கை கிட்ட தான் நின்னுட்டு இருந்தேன்.
என் வயத்துக்கிட்ட அவன் கையக் கொண்டு வந்து மெதுவா ஒரு வாட்டி வருடினான்.
அப்பறம் அவன் கை கீழ இறங்க ஆரம்பிச்சுது. அவன் கண்ணு மெதுவா மூட ஆரம்பிச்சுது.
பக்கத்துல நின்ன ஆன்ட்டி “கௌதம்”னுப் பெருசாக் கத்தி அழ ஆரம்பிச்சாங்க. எனக்கு அது மட்டும் தான் கேட்டுச்சு. உலகமே இருட்டின மாதிரி இருந்துது.
நான் மயங்கி விழுந்துட்டேன்னு ரெண்டு மணி நேரம் கழிச்சு முழிச்சப்போ சுத்தி இருக்கவங்க சொல்லி தான் எனக்குத் தெரிஞ்சுது. நான் எங்க வீட்டுல இருந்தேன்.
படித்துக் கொண்டிருந்த மீனா நடுங்கும் தன் கரங்களால் டைரியை மூடினாள். ஏனோ அவளுக்குப் படபடப்பாக இருந்தது.
‘ச்ச சும்மா படிக்குற நமக்கே இப்படி இருக்கே… ரேணு மனசு எப்படிப் பதறியிருக்கும்?’நெஞ்சில் கை வைத்து அழுத்தினாள்.
ஒருமுறை ஹாலை சுற்றி நடந்தும் பதட்டம் குறைவதாய் இல்லை. உடனே கவிதாவிடம் பேச வேண்டும் என்று தோன்றவே அவள் எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படாமல் நின்றது.
மாடிக்குச் சென்றாள். நல்ல உறக்கத்தில் இருந்த ராஜேஷை நெருங்கி படுத்து அவன் கழுத்தைச் சுற்றி கைபோட்டுக் கண்களை இறுக மூடினாள்.
ஹாலைத் தாண்டி டைனிங் ஹாலிற்குள் நுழைந்த கவிதா’இனி தெனம் மேல போகும் போதே தண்ணி எடுத்துட்டுப் போயிடணும். பாதி ராத்திரில தண்ணி தாகம் எடுத்தாக் கீழ இறங்கி வர வேண்டியதா இருக்கு’சலிப்புடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.
கேனில் இருந்து நீர் பிடித்துக் குடித்தவள் ஜன்னல் வழியே பார்த்தபோது பெரிய சிகப்பு ரோஜா செடியின் முன் ஒரு உருவம் நிற்பது தெரிந்தது.
கையிலிருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு விளக்கை அணைத்து வெளியே வந்து செண்பகத்தின் அறையைப் பார்த்தாள்.
பின் ஹாலைத் தாண்டிச் சென்று வெளி கதவைத் திறந்து வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
“செண்பகம் நிக்குறாளா? இல்லையே அவ ரூம் சாத்தி இருக்கே… தூங்கிட்டு இருப்பா. செல்வம் அண்ணாவா இருக்குமோ? இந்த நேரத்துல வேற யாரு இருக்கப் போறா?
அந்தப் பூனைய இன்னும் கண்டுப்பிடிக்கல போல… தினம் தேடியுமா மாட்டாமப் போகும்? அப்படி என்ன புத்திசாலி பூனையா? ஒருவேளை அத தான் தேடுறாரோ?”
தோட்டத்து விளக்கைப் போட்டாள். அது எரியாமல் போகவே “இதுக்கு என்னாச்சு?” என்று யோசித்து இரண்டு மூன்று முறை சுவிட்சைப் போட்டு அணைத்தாள். பலனில்லை.
தெரு விளக்கின் வெளிச்சம் சிறிது இருக்கவே போர்ட்டிகோவைத் தாண்டி தோட்டத்திற்குச் சென்றாள்.
தூரத்தில் இருந்த ரோஜாச் செடியைப் பார்த்து “யாரு?” என்று கேட்டாள். பதில் இல்லை.
‘எதுக்கு இப்படி அசையாம நிக்குறாரு?’
மெதுவாக நடந்தவள் “உங்கள தான் செல்வம் அண்ணா கேக்குறேன்” என்று சற்று உரக்கக் கூறினாள்.
“எதுக்கு கவிதாம்மா இந்த நேரத்துல வெளியில வந்தீங்க?” பின்னாலிருந்து கேட்ட செல்வத்தின் குரலில் தூக்கிவாரிப் போட திரும்பிப் பார்த்தாள்.
“நான் தான் மா… செல்வம்…”
“இல்ல இங்க…” என்று கூறித் திரும்பியவளின் கண்களுக்கு அங்கே யாரும் புலப்படவில்லை.
“நான் இப்போ தான் மா வீட்ட சுத்திட்டு வரேன். என்னாச்சும்மா?”