Poi Poottu 13

25
    இம்முறை கேனிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்ட கவிதா அருகில் செல்லத் தயங்கியவளாக மெல்ல நடந்து சென்று அதன் மீது கையை வைத்து அதன் ஆட்டத்தை நிறுத்தினாள். அங்கு நிற்கவே என்னவோ போல் இருக்க ஜன்னலை அடைத்துவிட்டு விளக்கை அணைத்து ஹாலிற்கு வந்தாள்.
‘அப்போ நம்ம என்ன பார்த்தோம்? யாரோ அங்க நின்னாங்க தான?’சோபாவில் அமர்ந்து வெகு நேரம் ஏதேதோ யோசித்தவள் ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தின் ஓசையில் திரும்பிப் பார்த்தாள்.
‘இந்த க்ளாக் சத்தம் போடுமா என்ன? இத்தன நாள் நம்மக் கேட்டதே இல்லையே?’
எழுந்துச் சென்று அருகில் நின்று சிறிது நேரம் அதை ஆராய்ச்சி செய்தவள் மணி இரண்டு ஆவதைக் கண்டு இதற்கு மேல் விழித்திருக்க வேண்டாம் என்றெண்ணி மேலே சென்றாள்.
ரோஷன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவன் முகத்தைக் கண்ட நொடி தனக்கிருந்த குழப்பங்கள் மறந்து போகக் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
படுக்கச் செல்லத் திரும்பியபோது அவன் அருகில் தொட்டிலில் இருந்த பொம்மையைக் கவனித்தவள் அவனுக்கு உறுத்துமே என்று அதை எடுத்துப் பொம்மைகள் இருந்த டப்பாவில் போட்டுவிட்டுப் படுத்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளின் வலப் பக்கம் மட்டும் சில்லிட விழிப்புத்தட்டியது. பால்கனி கதவு திறந்திருந்தது.
‘அங்க நம்ம எப்போ போனோம்? படுக்கும்போது இத கவனிக்கவே இல்லையா? ச்ச… இப்படியே எத்தன நாள் தான் கவனம் இல்லாம இருக்குறது?’
உறக்கம் மீண்டும் கலைந்திருந்தது. எழுந்து பால்கனிக்கு சென்றவள் வானில் தெரிந்த வெண்ணிலவை வெறித்தாள்.’நிலா எவ்வளவு அழகு? எத்தன தடவப் பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது…’
தோட்டத்தில் ஒவ்வொரு செடியாகப் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தவள் சிவப்பு ரோஜாச் செடியைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது அங்கே யாரோ நிற்பது போல் தோன்றியது. வேகமாகத் திரும்பி அந்தச் செடியைப் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை.
‘இது என்ன? நம்ம தான் லூசு மாதிரி கற்பனை பண்ணுறோமா? அது எப்படி இங்க யாராவது நிக்க முடியும்? ரொம்ப நேரம் கண்ணு முழிச்சா இப்படித் தான்…’பால்கனி கதவைத் தாழிட்டு வந்து படுத்தாள்.
ரோஷன் சிரிக்கும் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்பது போல் இருக்கவே இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் ஒட்டிக் கொண்ட இமைகளைச் சிரமப்பட்டுத் திறந்தாள்.
அவனுடைய தொட்டிலில் அமர்ந்திருந்தான். “டேய் ரோஷன் குட்டி… அதுக்குள்ள எழுந்துட்டீங்களா? மணி என்னடா ஆச்சு?” அவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே கடிகாரத்தில் மணிப் பார்த்தாள்.
“மணி அஞ்சரை தானடா ஆகுது செல்லக் குட்டி…” எழுந்து வந்து அவனைத் தூக்கிக் கொண்டவள் அவன் கையில் இருந்த பொம்மையைப் பார்த்து “இது எங்கடா இருந்துது? நைட் தான் ஒரு பொம்மைய எடுத்து வெச்சேன்… தொட்டில் பூரா பொம்மையா ஒளிச்சு வெச்சுருக்கியா?” என்று அவன் கன்னத்தைக் கிள்ளி அதை வாங்கி வைத்து விட்டுக் கீழே வந்தாள்.
தன் கையை யாரோ வருடுவது போல் இருக்க மெல்லக் கண்ணைத் திறந்தாள் மீனா. ராஜேஷ் அவன் கையணைப்பில் அவளை வைத்து அவன் மீதிருந்த அவள் கையை வருடிக் கொண்டிருந்தான்.
“தூங்கலையா ராஜேஷ்?”
“ம்ம்” அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “நீங்க டைரில இருந்ததப் படிச்சுட்டீங்க தான?” என்று கேட்டாள்.
அப்போதும் அவள் முகத்தைப் பார்க்காமல் அவள் கையை வருடியபடியே “ம்ம்” என்றான்.
“என்னால அத ஏத்துக்கவே முடியல ராஜேஷ்… எப்படி ரேணு தாங்கி இருப்பா? பாவம் இல்ல?”
அவள் குரலில் இருந்த வேதனையை உணர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி “அது வெறும் ஒரு டைரி தான். அதுலப் படிக்குறத எல்லாம் நீ இப்படி யோசிச்சு வருத்தப்படுறது எனக்குப் பிடிக்கல மீனு” என்றான்.
“அப்போ எதுக்கு நேத்து அதப் படிச்சுட்டு நீங்க எதுவும் பேசாம வந்து படுத்தீங்க? அது உங்களையும் பாதிக்குது தான?”
“ம்ம்… கஷ்டமா இருந்துது. ஆனா அதையே யோசிக்காத மீனு. இனி அதப் படிக்காம இருக்குறது நல்லதுன்னு நான் நினைக்குறேன்”
“இல்ல ராஜேஷ்… நான் இனி இப்படிப் பேச மாட்டேன். எனக்கு ரேணு இத எப்படி எடுத்துக்கிட்டான்னுத் தெரியணும். அவளோட சந்தோஷத்தப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட நான் அவளோட துக்கத்தையும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்குறேன்”
“ஹ்ம்ம்… சரி. ஆனா நீ இப்படி பீல் பண்ணக் கூடாது”
“சரி…” அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் “எழுந்துக் குளிங்க. மணி ஏழு ஆகப் போகுது…” என்றாள்.
கவிதா ரோஷனை கொஞ்சிக் கொண்டிருந்தாள். “என்ன கா… இன்னைக்குக் காலையிலயே ரோஷன் குட்டிக்கு ஐஸ் வெக்குறீங்க?”
“என் செல்லக் குட்டிய நான் கொஞ்சுவேன். என்னடா செல்லம்… சொல்லுடா… சொல்லுடா…” அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்தாள்.
“கொஞ்சுங்கக் கொஞ்சுங்க…”
“செண்பா… இந்த க்ளாக் அடிக்குமா செண்பா? ஒரு மணி நேரத்துக்கு ஒரு வாட்டி சத்தம் வருமா?”
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ எல்லாம் சத்தம் வராது கா… ராத்திரி ரெண்டு மணிக்கு மட்டும் அடிக்கும். தெனம் ராத்திரி என் தூக்கம் கெடுறதே இதனால தான் கா” தன் போக்கில் கூறியபடியே அடுக்களைக்குள் சென்றாள்.
“ரெண்டு மணிக்கு மட்டும் அடிக்குமா?”
‘அப்படின்னா மதியானம் ரெண்டு மணிக்கும் அடிக்கணுமே? ஒருவேளை மதியம் நம்மத் தூங்குறதால நமக்குக் கேட்குறதில்லையோ? இன்னைக்குக் கவனிக்கணும்…’
ராஜேஷை வழியனுப்பி வைத்துவிட்டு ஹாலில் சோர்ந்து அமர்ந்த மீனாவின் கண்ணில் டைரி பட்டது. சில நொடிகள் அதை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
‘படிச்சுதான் ஆகணும். என்ன தான் நடந்துதுப் பாப்போம்’
நான் கண்ணு முழிக்காமயே இருந்திருக்கலாம். சுத்தி ஒரே அழுகை சத்தம். அந்த ஓலத்த என்னாலக் கேட்க முடியல. நெஞ்சுக்குள்ள என்னவோ பண்ணுச்சு. மனசுப் பதைக்க ஆரம்பிச்சுது.
கீழ இருந்த ரூம் ஒண்ணுல நான் படுத்திருந்தது தெரிஞ்சுது. எழுந்து மெதுவா வெளில வந்தேன். ஹால் பூரா ஆளுங்க இருந்தாங்க.
எங்கம்மா ஓடி வந்து “ரேணு இப்படி மோசம் போயிட்டியேடி… நான் என்ன பண்ணுவேன்”னு என் கையப் பிடிச்சு அழுதாங்க.
அப்போ தான் நடு ஹால்ல இருந்த கௌதம பார்த்தேன்.
ஆன்ட்டி அவன்கிட்ட இருந்து அழுதுட்டு இருந்தாங்க. அவங்கள சுத்தி நிறையப் பேர் உட்கார்ந்து அவங்களோட சேர்ந்து அழறதும் அவங்கக்கிட்ட ஏதோ பேசுறதுமா இருந்தாங்க.
எங்கம்மா கையிலிருந்து என் கைய உருவி நான் அவன நோக்கி நடந்தேன். என்னைப் பார்த்ததும் ஆன்ட்டி இன்னும் கதற ஆரம்பிச்சாங்க.
கௌதம் தலைய சுத்திக் கட்டுப் போட்டு… முகம் இன்னும் கருத்து… எனக்கு யாரையோ பார்க்குற மாதிரி இருந்துது.
நடுங்குற என் கையத் தூக்கி அவன் முகத்த வருட நெனச்சேன்… என் கை கண்ணாடி பாக்ஸ்ல பட்டு அதுக்கு மேல நகர முடியாம நின்னுடுச்சு.
இனிமே நான் என் கௌதம தொடவே முடியாதுன்னு அந்தக் கண்ணாடி எனக்குச் சொல்லாம சொல்லுற மாதிரி இருந்துது.
இனி அவனப் பார்க்கவும் முடியாதோன்னு நெனச்ச நொடி… என்னைச் சுத்தி நடக்குறது எனக்குப் புரிய ஆரம்பிச்சுது. நிதர்சனம் விளங்குச்சு. அந்தக் கண்ணாடி மேலயே சாஞ்சு கௌதம்னு கத்திக் கதற ஆரம்பிச்சேன்.
சிலர் என்னைத் தூக்க முயற்சி பண்ணாங்க. விடுங்க அவ அழுது முடிக்கட்டும்னு யாரோ சொன்னாங்க. அதுக்கப்பறம் யாரும் என்கிட்ட வரல.
எனக்கு என்ன சொல்லி அழுறதுன்னு கூடத் தெரியல. என் வாய் சொன்னதெல்லாம் “கௌதம்”ன்ற அவன் பேர மட்டும் தான். எத்தன தடவக் கூப்பிட்டாலும் அவன் எழுந்திரிக்கவே இல்லையே… ஏன்?
எவ்வளவு நேரம் அழுதேன்னு எனக்குத் தெரியாது “எல்லாச் சொந்தமும் வந்தாச்சு. ஆக்ஸிடென்ட் ஆகி போஸ்ட் மார்ட்டம் பண்ண உடம்பு… எடுத்துடுவோம்” னு ஆளாளுக்கு என்னெனவோ சொன்னாங்க.
எனக்கு அப்போ புரிஞ்சதெல்லாம் நான் நிரந்தரமா என் கௌதம் விட்டுப் பிரியுற நேரம் நெருங்கிக்கிட்டே இருக்குங்கறது மட்டும் தான்.
அந்தக் கண்ணாடி பாக்ஸ இன்னும் இறுக்கமாக் கட்டிப்பிடிச்சு உன்ன விடவே மாட்டேன் கௌதம்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.
இனி இந்த முகத்த என் ஆயுசுல நான் பார்க்கவே முடியாதான்னு எனக்குள்ள எழுந்த ஏக்கம்… செத்துடணும் போல இருந்துது.
“காலைல ஈவ்னிங் வந்து உன்ன கவனிச்சுக்குறேன்னு சொல்லிட்டுப் போனியே கௌதம்… இப்போ என்ன பார்க்க கூட மாட்டேங்குறியே… ஏன் கௌதம்?” னு அவன் சட்டையப் புடிச்சு உலுக்கணும் போல இருந்துது.
எப்போ யாரு வந்து என் கௌதம்கிட்டேருந்து என்னைப் பிரிப்பாங்களோன்னு பயந்து நடுங்கிக்கிட்டு இருந்தேன்.
காலம் யாருக்காகவும் காத்திருக்குறதில்ல. நான் பயந்த மாதிரியே என்னை நாலு பேரு வந்து பிடிச்சு இழுத்தாங்க.
அவ்வளவு தான். இது தான்… இந்த நிமிஷம் தான் நான் அவனப் பார்க்குறது கடைசின்னு எனக்குத் தோணுனதும் என்னை விடச் சொல்லி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சேன். யாரும் காது குடுத்துக் கேட்கல.
என் கண்ணு முன்னாடியே என் கௌதம தூக்கிட்டுப் போனப்போ என்னால எதுவுமே செய்ய முடியலயே… ஏன் கடவுளே? கடவுள்… அப்படி ஒருத்தன் இருக்கானா? இப்படி என்னை இந்த நிலமைல நிக்க வெக்குறதுக்கா என் கண்ணுல கௌதம காட்டுனான்?
இதெல்லாம் நான் என் கௌதம் கூட இருந்த கடைசி நிமிடங்கள்.
வாழ்க்கையில என்னைக்காவது இந்த டைரி எடுத்துப் படிச்சா நான் இதையும் சேர்த்து தான் படிக்க விரும்புறேன்.
என்னோட சந்தோஷத்துல கௌதம் இருந்தான். என்னோட துக்கத்துலயும் கௌதம் தான் இருக்கான்.
-ரேணு (கௌதம்)?
இனி இந்தப் பேருக்கு அர்த்தம் இருக்கா?
அதற்கு மேல் படிக்க முடியாமல் டைரியை மூடி வைத்தாள் மீனா. தன் கண்ணிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து டைரியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
வீடு வெறிச்சோடி இருந்தது. இன்னும் சிறிது நேரம் இப்படியே தனியாக அமர்ந்திருந்தால் பெரிதாக அழ ஆரம்பித்து விடுவோம் என்று தோன்றியது.
ராஜேஷை அழைத்துப் பேசலாம் என்று கைபேசியை எடுத்தவள் மீட்டிங் இருப்பதாக அவன் காலை கூறிச் சென்றது நினைவு வந்து அந்த எண்ணத்தையும் கை விட்டாள்.
கவிதாவை அழைக்கலாம் என்று நினைத்தவள் பேசாமல் அங்குக் கிளம்பிச் சென்றால் என்ன என்று தோன்றவே ராஜேஷிற்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு காரை எடுத்துக் கிளம்பினாள்.
கார் வந்து நிற்கவும் இந்நேரத்தில் யார் வருவது என்று வெளியே வந்து பார்த்தாள் கவிதா. முகமெல்லாம் வெளுத்துப் போய் அதிலிருந்து இறங்கியவளைக் கண்டதும் பதறி “என்ன மீனா? ஏன் இப்படி இருக்க? என்னடி ஆச்சு?” என்று கேட்டு அவள் அருகில் வந்தாள்.
“உள்ள வா” என்று மட்டும் கூறி காரிலிருந்து டைரியை எடுத்து அவளைத் தாண்டி உள்ளே சென்றாள்.
ஒன்றும் புரியாமல் கவிதா அவளைப் பின் தொடர ஹாலிற்கு வெளியிலேயே கதவின் ஓரம் நின்று உள்ளே வீட்டை வெறித்தாள் மீனா.
‘இங்க தான? இந்த ஹால்ல தான கௌதம் கடைசியா கொண்டு வந்து வெச்சிருப்பாங்க…’நினைக்க நினைக்க அவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கின.
“என்ன மீனா இங்கயே நின்னுட்ட?”
கையில் இருந்த டைரியைப் புரட்டியவள் “இந்த பேஜ்லேருந்து இது வர படி கவி” என்று கூறி அதை அவள் கையில் கொடுத்தாள்.
சோபாவில் அமர்ந்து டைரியை வாசித்த தோழியின் எதிரில் அமைதியாக அமர்ந்து அவளுடைய முகப் பாவங்களைக் கவனிக்கத் துவங்கினாள்.
முதலில் அடித்து அடித்து எழுதியிருந்த பக்கத்தைப் பார்த்ததும் குழம்பி நிமிர்ந்துப் பார்த்தாள்.
“படி”
பக்கங்களைத் திருப்பத் திருப்ப அவள் முகம் வேதனையில் சுருங்கியது. ரேணு மயங்கி விழுந்ததைப் படித்ததும் “மீனா… ரேணு… இப்படி… கௌதம்…” என்று திக்கித் திணறினாள்.
“என்னாலையும் நம்ப முடியல கவி” தலையைப் பிடித்து அமர்ந்தாள் மீனா.
அதன் பின் எழுதி இருந்தவற்றை வாசித்த கவிதா ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் “மீனா… என்னால இதப் படிக்க முடியலடி…” என்று கூறி டைரியை சோபாவில் வைத்தாள்.
“வீட்டுல இதப் படிச்சுட்டுத் தனியா இருக்க முடியாமதான் டி இங்க கிளம்பி வந்தேன். ராஜேஷ் நேத்து முழுக்கப் படிச்சு முடிச்சுட்டாங்க. இதுக்கு மேல படிக்காதன்னு வேற சொன்னாங்க. நான் தான் படிக்குறேன்னு சொன்னேன்”
கவிதா அப்போதும் அமைதியாக இருக்கவே அவளை மேலும் வறுத்த விரும்பாமல் “ரோஷன் இப்போ தூங்குறானேடி… மதியம் சாப்பாடு ஊட்டலையா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்… இல்லடி… இப்போ எழுப்பணும்…”
அவள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை உணர்ந்து “சரி வா கவி… நானும் உன்கூடவே சாப்பிடுறேன். அப்பறம் ரோஷன் எழுப்புவோம்” என்று கூறி அவளைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் அமர வைத்து உணவருந்த செய்தாள்.
“இரு நான் போய் ரோஷன் எழுப்பித் தூக்கிட்டு வரேன்…” என்று கூறி அவன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்றாள் மீனா.
“செல்லம் மம்மு சாப்புடுறீங்களா?” அவனுடன் பேசியபடியே அவள் டைனிங் ஹாலிற்குள் நுழைந்தபோது கை காய்வது கூடத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் கவிதா.
“கவி கை கழுவு… எந்திரி…”
“இவன் எப்போ தூங்குறான்… எப்போ முழிக்குறான்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குது மீனா…” கை கழுவி தண்ணீர் குடிக்கும்போது அவளையும் அறியாமல் ஜன்னல் வழியே சிவப்பு ரோஜாச் செடியைப் பார்த்தாள் கவிதா.
“உனக்குத் தனியா இருக்குறதுல வேற ஏதும் பிரச்சன இல்லையே? பேசாம கார்த்திக் அண்ணா வர வரைக்கும் எங்க வீட்டுல வந்து தங்கிடேன் கவி…”
“அதெல்லாம் வேண்டாம் மீனா…”
மீனா கிளம்பிச் சென்றதும் உள்ளே வந்து கைபேசியை எடுத்து கார்த்திக்கிற்கு அழைத்தாள் கவிதா. அவன் அழைப்பை ஏற்பதற்காய்க் காத்திருந்த நேரம் அவள் படித்தவை அனைத்தும் நினைவு வந்தது. அவன் இருமுறை ஹலோ சொன்னது கூடக் கேட்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.
“கௌதம் இறந்தது தெரிஞ்சுடுச்சா கவி?”.
“ம்ம்… உங்களுக்கு எப்படி கார்த்திக் தெரியும்? ஏற்கனவே படிச்சுட்டீங்களா?”
“அன்னைக்கு ராஜேஷ் வீட்டுல படிச்சுட்டேன். இதுக்கப்பறம் அதப் படிக்காத கவி”
“ராஜேஷ் அண்ணாவும் இதே தான் சொன்னாங்களாம். மீனா சொன்னா. இப்போ இங்க வந்திருந்தா. நீங்களும் ஏங்க அதையே சொல்லுறீங்க?”
“இதுக்கப்பறம் ரேணு புலம்பினது தான் கவி அதுல இருக்கு. அதப் படிச்சு நீ என்ன பண்ணப் போற? மீனா கிட்ட சொல்லு. படிச்ச வரைக்கும் போதும். ரெண்டுப் பேரும் அத மூடி வைங்க”
“ம்ம்…”
இரண்டு நிமிடம் இருவருமே பேசாமல் அமைதியாக இருந்தனர்.
“பை கவி…”
“ஐ லவ் யூ கார்த்திக்”
“ஐ லவ் யூ”
கைபேசியை அருகில் வைத்தவளின் மனம் முழுக்க கார்த்திக்கே நிறைந்திருந்தான். ரோஷனின் சிரிப்புச் சத்தம் கேட்டு அருகில் பார்த்தவள் அவன் இல்லாததைக் கண்டு எழுந்துத் தேட ஆரம்பித்தாள்.
அவன் ஹாலில் எங்கும் இல்லையெனவும் ஹாலின் மூலையில் இருந்த திருப்பத்தில் சென்று பார்த்தாள். கையிலிருந்த பொம்மையைப் படியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான்.
“எப்போ பாரு படிக்கிட்டயே வந்துக்கிட்டு… வாடா…” அவனைத் தூக்கிக் கொண்டாள். படியை கை காட்டியவன் பின் கை தட்டி சிரிக்க ஆரம்பித்தான்.
அவனையும் படியையும் மாறி மாறிப் பார்த்தவள் “அங்க என்ன ரோஷன்?” என்று கேட்கவும் “ம்ம்…” என்று கூறி மீண்டும் படியை கைக் காட்டி சிரித்தான். கவிதா இப்போது படியைப் பார்த்த பார்வையில் புதியதாய் பயம் தோன்றியிருந்தது.
26
  கவிதா ரோஷனிடம் பேச அவன் படியைப் பார்த்தே சிரித்துக் கொண்டிருந்தான்.
“குட்டி இங்க பாருங்கடா… ரோஷன் ப்ளீஸ்… என் தங்கம்ல… அம்மாவ பாருடா…” அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள். படிகட்டைத் திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கு ஒன்றும் புலப்படவில்லை.
வேகமாக ஹாலிற்கு வந்தவள் அங்கும் நிற்கத் தோன்றாமல் வெளியேறி போர்டிகோவை அடைந்து படியில் அமர்ந்தாள். மகனைத் தன்னுடன் சேர்த்தணைத்துப் பிடித்திருந்தவளின் இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது.
ரோஷன் அவள் மடியிலிருந்து திமிறி இறங்கி படியில் இரண்டு கைகளையும் ஊன்றி அதைப் பிடித்தபடியே நான்கடி நடந்தான். பின் தரையில் அமர்ந்து மேல் படியை நிமிர்ந்துப் பார்த்துக் கைக் கொட்டி சிரிக்க ஆரம்பித்தான்.
“ரோஷன் என்ன பண்ணுற?”
அவனைத் தூக்கிக் கொண்டு வேகமாக உள்ளே ஓடினாள். மாடிக்கு செல்லவும் யோசனையாக இருக்க அப்படியே சரிந்து சோபாவில் அமர்ந்தாள்.
அவள் மடி மீது நின்றவன் அவள் கன்னத்தை வருடினான்.
அவன் வருடலிலும் கள்ளமில்லா சிரிப்பிலும் அனைத்தையும் மறந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவள் கண்களில் பட்டது சுவற்றில் தொங்கிய கடிகாரம். அது மணி நான்கு என்று காட்டியது.
‘மணி நாலு ஆயிடுச்சா? ரெண்டு மணிக்கு இன்னைக்கு முழிச்சு தான இருந்தோம்? மீனா கூட இருந்தாளே… இங்க தான உட்கார்ந்துப் பேசிட்டு இருந்தோம். இது அடிச்ச மாதிரியே தெரியலயே…’
“என்னக்கா? தலைல கை வெச்சு உக்காந்திருக்கீங்க?”
“ஏன் செண்பா… இந்த க்ளாக் மதியம் ரெண்டு மணிக்கு அடிச்ச மாதிரியே தெரியலயே”
“அதெல்லாம் அடிக்காது கா. ராத்திரி ரெண்டு மணிக்கு மட்டும் தான் அடிக்கும். என்னக்கா அப்படிப் பார்க்குறீங்க? இது ராத்திரி மட்டும் அடிக்குற கடிகாரம்னு இல்ல நான் நெனச்சேன்”
இவளிடம் எதையும் கூறிக் குழப்ப வேண்டாம் என்றெண்ணியவள் “ம்ம்… அப்படித் தான் போலருக்கு…” என்றாள்.
‘நம்ம நேத்துப் பாத்த நிழல்… அது… நான் பாத்தேன். எனக்கு நல்லாத் தெரியும். ஆனா செண்பகம் தூங்கிட்டு இருந்தாளே… செல்வம் அண்ணா என் பின்னாடி வந்து நின்னப்போ உண்மையிலயே பயந்துட்டேன். வேற யாரா இருக்கும்?
இன்னைக்கு ரோஷன் நடந்துக்குறது எல்லாமே வித்தியாசமாத் தெரியுதே… சின்னக் குழந்தைங்க இப்படித் தானா சிரிச்சு விளையாடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்… ஆனாலும் இவன் ஏன் படிக்கட்டு கிட்டயே நின்னு விளையாடுறான்?
இவன் எப்பயுமே இப்படித் தான் விளையாடுறானா? எப்படிக் கண்டுப்பிடிக்குறது? ஹான்… அன்னைக்கு மீனா வீட்டுக்குப் போயிருந்தோமே… அன்னைக்கு இவன் எப்படி விளையாடினான்?
எப்படி யோசிச்சுப் பாத்தாலும் அன்னைக்கு இவன் எங்க யாரோட மடியிலாவது தான் உட்கார்ந்து எங்க கூட விளையாடினான். இந்த வீட்டுல மட்டும் ஏன் இப்படி?’
அருகில் அமர்ந்திருந்த ரோஷனை பார்த்தாள். கையில் இருந்த பொம்மையை மும்முரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
‘முகத்த வெச்சுருக்குறதப் பாரு… ஏதோ பெரிய அறிவியல் ஆராய்ச்சிப் பண்ணுற மாதிரி…’அவள் சத்தமாகச் சிரிக்கவும் தானும் சிரித்துவிட்டு மீண்டும் பொம்மையை ஆராயத் துவங்கினான். “என் அழகு செல்லம்டா நீ…” அவன் கன்னத்தில் குனிந்து அழுந்த முத்தமிட்டாள்.
“மா…” அவளைப் பலம் கொண்டு தள்ளியவன் மீண்டும் பொம்மையில் மூழ்கினான்.
“ம்ம்கும்ம்… இப்பயே இப்படியா?” அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
“அப்பா மாதிரி வேலையில இப்படி மூழ்கிப் போகாதடா… வரவ என்னை மாதிரி பொறுமையா இருக்க மாட்டா…”
“ம்ம்…”
அவன் முகப் பாவத்தைப் பார்த்தவள் அவனைத் தூக்கி “என் சமத்துக் குட்டி தான…” என்று அவன் முகம் முழுதும் முத்தமிட்டாள். ரோஷனும் கையில் இருந்த பொம்மையைக் கீழே போட்டுவிட்டு அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
கேட் அருகில் வந்ததும் “செல்வம் நன்னா இருக்கியா?” என்று கேட்டார் சீத்து மாமி. “இருக்கேன் மாமி… உள்ளப் போங்க…” என்று கூறி தலையசைத்தான்.
செல்வத்திற்கும் அவர் அடிக்கடி இங்கு வந்து போவதால் நல்ல பரிச்சயம் ஆகிவிட்டார். அவ்வபோது அவனையும் இப்படி ஏதாவது விசாரிக்கவும் அவர் தவறுவதில்லை.
சீத்து மாமி போர்ட்டிகோ அருகில் வரும்போது தோட்டத்தின் பக்கம் யாரோ செல்வது போலத் தோன்ற வீட்டினுள் செல்லாமல் தோட்டத்துப் பக்கம் சென்றார்.
முதலில் இருந்த மல்லிகை பந்தலைத் தாண்டி, பெரிய சிகப்பு ரோஜா செடியைத் தாண்டி, அதன் எதிர் திசையில் இருந்த பல வண்ண ரோஜா மலர்களை ரசித்தபடியே சென்றவர் அதனடுத்துத் தோட்டம் முழுவதும் இருந்த அழகிய மலர்களைப் பார்த்தார்.
‘எவ்வளவு பெரிய தோட்டம்? எத்தன கலர்ல பூ வெச்சிருக்கா… இத்தனையும் பார்த்துக்கணும்னா எவ்வளவு பொறுமை வேணும்? ஹ்ம்ம்… அந்தப் பொண்ணு கவிதாவும் ரொம்பப் பதவிசு தான். ஒண்டியாக் கொழந்தைய வெச்சுண்டு சமாளிக்குறாளே… சமத்து தான்’
கவிதாவை மெச்சியபடியே வீட்டின் பின்புறத்தை அடைந்தார் சீத்து மாமி.
முன்புறம் இருந்தது போல் மலர் செடிகள் இல்லாமல் சில பழ வகைகளும், காய் வகைகளும் இருந்தன.
‘என்ன யாரையும் காணும்?’சுற்றித் தேடியவர் ஒருவரும் இல்லை என்று நினைத்து திரும்பிய நேரம் வீட்டின் பின்புற கதவுத் திறக்கும் ஒலியில் அப்படியே நின்றார்.
கையில் ஒரு வாலியுடன் செண்பகம் வெளியே வந்தாள். சீத்து மாமியை அங்கே அந்த நேரத்தில் சற்றும் எதிர்ப்பார்க்காததால் திடுக்கிட்டு “மாமி நீங்களா? என்ன மாமி இந்த நேரத்துல இங்க…” என்று கேட்டு வெளியே வந்தாள்.
“யாரோ பின்னாடி பக்கம் போன மாதிரி இருந்துது. அதான் செண்பா வந்து பார்த்தேன். ஒருத்தரையும் காணோமேன்னு திரும்புன நேரம் நீ வந்துட்ட” அவளுடன் பேசியபடியே வீட்டினுள் சென்றார்.
வீட்டின் பின் பக்கத்திலிருந்து வந்தவர்களை “வாங்க மாமி… என்ன பின் பக்கமா வரீங்க? நீங்க உள்ள வந்தத நான் பாக்கவே இல்லையே?” என்று கேட்டு சோபாவிலிருந்து எழுந்தாள்.
“அதுவா? யாரோ வீட்டுக்குப் பின்னாடிப் போற மாதிரி இருந்துது கவி. நான் போய்ப் பார்க்கறச்சே செண்பா வந்துட்டா. சரி என்னத்துக்குத் திரும்ப முன்னாடி வரைக்கும் நடக்கணும்னு அவளோடயே நானும் பின்னாடி கதவு வழியா உள்ள வந்துட்டேன்”
முந்தைய நாள் இரவிலிருந்து தான் மட்டும் யாரையோ பார்த்ததாக எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்த கவிதாவிற்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பரவசம் தொற்றிக் கொண்டது.
“அப்போ நீங்களும் ஒரு உருவத்தப் பாத்தீங்களா?”
சீத்து மாமியின் முகம் மாறியது.
“உருவமா? என்ன கவி சொல்லுற?”
“நேத்து நைட் எனக்கு அந்த ரெட் ரோஸ் செடிப் பக்கத்துல யாரோ நிக்குற மாதிரி இருந்துது மாமி. போய்ப் பார்த்தா யாரையும் காணும். எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் தெரிஞ்சுதோன்னு நான் நெனச்சேன்… அப்போ நிஜமாவே யாரோ இருக்காங்களா?”
“என்ன கவி சொல்லுற?”
“ஆமா மாமி. நேத்து நைட் பார்த்தேன்”
சீத்து மாமி இடது கையால் தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் மயங்கி சரிந்தார்.
தூங்கி எழுந்த மீனாவின் மனம் லேசானது. கவிதாவின் வீட்டிலிருந்து வந்தவள் வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் நேரே சென்று படுத்துவிட்டாள். அசதியில் உடனே தூங்கியும் போனாள்.
கைபேசியை எடுத்துப் பார்த்தவள் ராஜேஷ் இருமுறை அழைத்திருப்பதைக் கண்டு அவன் எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹே மீனு… எதுக்குத் திடீர்னு கவிதா வீட்டுக்குப் போன? உன் மெசேஜ் பாத்துட்டு கால் பண்ணேன். ஆர் யூ ஆல்ரைட்?”
“சும்மா தான் ராஜேஷ். டைரி படிச்சதும் மனசு என்னவோ போல இருந்துது. அதான். அவளப் பாத்துப் பேசுனா நல்லா இருக்குமேன்னு போனேன். உங்களுக்கும் மீட்டிங் இருந்திருக்கும்”
“தூங்கிட்டு இருந்தியா? எழுப்பிட்டேனா?”
“இல்ல எந்திரிச்சு உங்க கால் பார்த்துட்டு தான் கூப்பிட்டேன். மீட்டிங் முடிஞ்சுதா?”
“ம்ம்… இப்போ கிளம்பிடுவேன். வீட்டுக்கு வந்து பேசுறேன்”
“சரி”
“மீனா”
“என்ன”
“போதும் மீனா. அந்த டைரிய இதுக்கு மேல படிக்காத. அதான் எல்லாம் தெரிஞ்சிடுச்சே. இப்படிக் கஷ்டப்பட்டு அத படிக்கணுமா?”
“அதெல்லாம் இனி இப்படி மூட் அவுட் ஆக மாட்டேன் ராஜேஷ். நீங்க சீக்கிரமா வாங்க”
எழுந்து முகம் கழுவி வந்தவளுக்குச் சூடான காபி கொடுத்தார் காமாட்சி. அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தவளின் கண்களில் டைரி பட்டது.
அதைக் கையில் எடுத்தவள் படிக்காமல் வருடியபடியே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
‘எப்படி இருந்த உன் லைப் இப்படி ஆயிடுச்சு ரேணு. நீ யாருன்னே தெரியாது. சும்மா படிக்குற எங்களுக்கே இப்படி இருக்கே… நீ எப்படி இத எல்லாம் தாங்குன? இது தான் விதியோ?’
பெருமூச்சுடன் பக்கங்களைப் புரட்டினாள்.’உன் கையெழுத்து மாதிரியே ஆரம்பத்துல எவ்வளவு அழகா இருந்த உன் வாழ்க்கை இப்படிச் சிதஞ்சுப் போச்சே…’மனதிலிருந்து இறங்கிய பாரம் மீண்டும் கூடியது.
அன்னைக்குத் தான் அவனப் பார்க்குறது கடைசின்னுத் தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லாப் பார்த்திருப்பேனோ? பிடிச்சத சமச்சுப் போட்டிருப்பேனோ? கண்டிப்பா ஊட்டி விட்டிருப்பேன்.
ஒரு தடவ அவனப் பார்க்கணும் போல இருக்கே… கௌதம் நீ எங்க இருக்க? ஏன் என்ன விட்டுப் போன? என்கிட்டத் திரும்பி வந்துடு கௌதம். என்னால நீ இல்லாம இருக்க முடியல. -ரேணு
இன்னைக்கு ஆன்ட்டி என்னைக் கட்டாயப்படுத்தி ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனாங்க. போன மாசம் நான் செக்கப் பண்ணப் போகவே இல்ல.
இனி இந்தக் குழந்தைய நான் எப்படித் தனியா வளர்க்கப் போறேன்ற பயம் தான் மனசுல நிக்குதே தவிர எனக்குள்ள ஒரு உயிர் இருக்குன்னு நெனச்சு என்னால சந்தோஷப்படவே முடியல.
ஆனா காலையில ஆன்ட்டி என்கிட்ட வந்து “அவனும் போயிட்டான்… நீயும் இப்படி இருந்தா நாங்க என்ன பண்ணுறது? குழந்தையவாவது நீ கவனமாப் பார்த்துக்கக் கூடாதா ரேணு?” னு சொல்லி அழுதாங்க.
எனக்கு அவங்களப் பார்க்கவும் பாவமா இருந்துது. நேத்து நைட் கௌதமோட அக்காவும் இத தான் கால் பண்ணி சொன்னாங்க.
இப்படி எல்லாரையும் தவிக்க விட்டுட்டு ஏன் போன கௌதம்?
எனக்காக இல்லன்னாலும் அவங்களுக்காக ஹாஸ்பிடல் போனேன். குழந்தை நல்லா இருக்காம். நான் தான் வீக்கா இருக்கேனாம். நல்லா சாப்பிட சொன்னாங்க.
என் கூட ரத்தமும் சதையுமா நடமாடிட்டு சிரிச்சுப் பேசிட்டு இருந்த ஒருத்தன் ஹால்ல போட்டோவா தொங்கிட்டு இருக்கான். அதப் பார்த்துக்கிட்டே எப்படிச் சாப்பிட முடியும்?
-ரேணு
இன்னைக்கு பீரோலேருந்துப் புடவை எடுக்கும்போது அதுக்கு நடுவுல வெச்சிருந்த தாலி கீழ விழுந்துடுச்சு.
தாலிய இப்படி வீட்டுல வெச்சிருக்கக் கூடாதாம். அத மாத்தி வேற நகையா செய்யணும் இல்ல கோவில் உண்டியல்ல போடணும்னு அம்மாவும் ஆன்ட்டியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.
எனக்கும் கௌதம்குமான உறவுக்கு இது தான் ஆதாரம். என்னவோ இந்தத் தாலிய தூக்கிப் போட்டுட்டா அப்பறம் அவனுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமப் போயிடுமோன்னு ஒரு பயம்.
இதப் பார்க்குறப்போ எல்லாம் கௌதம் என்கிட்ட “எத்தன ஜென்மம் ஆனாலும் உன்னத் தேடி வந்து தூக்கிட்டுப் போயாவது நான் தான் உன் கழுத்துல தாலிக் கட்டுவேன்…” னு சொன்னது தான் ஞாபகம் வருது.
அழகா சிரிச்சுட்டே சொல்லுவான். அந்தச் சிரிப்ப இனி வாழ்க்கைப் பூராப் பார்க்கவே முடியாதுன்னு நெனச்சா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு. எத்தன ஜென்மம் ஆனாலும் நான் தான் உன் கழுத்துல தாலிக் கட்டுவேன்னு சொல்லிட்டு இந்த ஜென்மத்துல இந்தத் தாலிய என் கழுத்துலப் போட முடியாமப் பண்ணிட்டியே கௌதம்…
“மீனா” ராஜேஷின் குரலில் சட்டென்று நிமிர்ந்தாள் மீனா. கையில் சில பைல்களுடன் அவள் முன் நின்றவனைக் கண்டதும் டைரியை மூடி வைத்து விட்டு எழுந்தாள்.
“இதப் படிக்காத போதும்னு சொன்னாக் கேக்க மாட்டியா? என்னமோ மூட் அவுட் ஆக மாட்டேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல பெருசா சொன்ன?”
அவன் எப்போதும் கோபப்படுபவன் அல்ல. எப்போதாவது வெளிப்படும் அவன் கோபத்தின் அளவையும் மீனா அறிவாள்.
“இல்ல ராஜேஷ்… சும்மா தான்…”
“சும்மா தான்னா… அப்பறம் எதுக்கு அழற?”
கன்னத்தில் கை வைத்துப் பார்த்தவளுக்குத் தான் அழுதிருப்பது தெரிந்தது. கண்ணீரைத் துடைத்தாள். இன்னும் அதிகமாகப் பெருகியது.
அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல் இழுத்தணைத்தான் ராஜேஷ்.
“போதும் மீனு. அதுல இனிமே ரேணுவோட புலம்பல் தான் இருக்கு. சொன்னாக் கேளு. அதப் படிச்சு எதுக்கு இப்படி அழணும்?”
அவனை இறுக்கிப் பிடித்திருந்தவளுக்கு அவனுள் புதைந்துவிட வேண்டும் போல் இருந்தது.
“ஆனா எனக்கு அத முழுசாப் படிச்சு முடிக்கணும்னுத் தோணுது ராஜேஷ்…”
அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவன் “சரி… நானே படிச்சுக் காட்டுறேன். ஆனா அதுவரைக்கும் இந்த டைரி என்கிட்ட தான் இருக்கும்” என்று கூறி அவளைத் தன் அணைப்பிலிருந்து விளக்கி டைரியை கையில் எடுத்து “சும்மா இத தர சொல்லி என்கிட்ட நீ கேக்கக் கூடாது” என்று கூறினான்.
அவள் தலையசைத்து சரி என்று கூறியதும் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “பசிக்குது. ஏதாவது சாப்பிட எடுத்து வை. நான் குளிச்சுட்டு வந்துடறேன் மீனு” என்று கூறி மாடிக்குச் சென்றான்.
‘ராஜேஷ் சொல்லுறதும் சரி தான். இனி அந்த டைரிய தனியா உக்காந்துப் படிக்க வேண்டாம். அவங்களே படிச்சு சொல்லட்டும். அவங்க பக்கத்துல இருந்தாலே இப்படி எல்லாம் நான் அழாம இருப்பேன்’
அவசரமாகத் தண்ணீர் எடுத்து வந்து சீத்து மாமியின் முகத்தில் தெளித்த் செண்பா அவர் கன்னத்தை லேசாகத் தட்டியதும் கண்களை மெல்லத் திறந்தார். அப்போது தான் கவிதாவிற்கு நிம்மதியானது.
அவர் எழ சிரமப்படுவதைப் பார்த்த பிறகே தான் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கைப் பார்ப்பது உரைத்தது. ரோஷனை தரையில் இறக்கிவிட்டு அவருக்கு உதவினாள்.
“இப்படியாடி பயமுறுத்துவ?”
“நான் என்ன மாமி பண்ணேன்?”
“ஆமா… யாரையோ பாத்தேன்னு சொல்லுறதுக்கும்… ஏதோ ஒரு உருவத்தப் பாத்தேன்னு சொல்லுறதுக்கும் வித்தியாசமே இல்ல பாரு…”
வித்தியாசம் இருக்கிறதோ என்று முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள் கவிதா.