Poi Poottu 14

Poi Poottu 14

27
“இப்போ எதுக்கு கவி இப்படி முழிச்சிண்டு உக்காண்டிருக்க? கரெக்டா சொல்லு… ஒரு ஆள தானப் பாத்த?”
“ஹான்… ஆமா மாமி… யாரோ… யாரோ தான் அந்தப் பக்கம் போனாங்க…”
‘தேவயில்லாம இவங்கள எதுக்குக் குழப்பணும்? நம்ம முதல்ல தெளிவா யோசிப்போம்…’
“நீங்க எழுந்திரிங்க மாமி…” அவரைக் கையைப் பிடித்து எழுப்பி விட்டாள்.
“அப்பறம் எதுக்கு கவி என்னை இப்படிப் பயமுறுத்தி… மயக்கம் போட வெச்சு… இனி இந்த வீட்டுக்குள்ள வரணும்னு நெனச்சாலே எனக்குப் பீதியாகறது”
‘பாவம் பயந்த சுபாவம் போலருக்கு. இன்னும் நான் எதையும் சொல்லவே ஆரம்பிக்கல… அதுக்குள்ள இப்படி மயங்கி விழுந்துட்டாங்களே…’கவிதாவிற்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது.
அவர் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்ததால் “சூடா ஏதாவது குடிக்குறீங்களா?” என்று கேட்டாள்.
“வேணான்டிமா… நான் கெளம்புறேன். எனக்கு என்னமோ இன்னைக்கு இங்க உக்கார முடியல. செண்பா… என்ன செத்த கேட் வர அழச்சிண்டு போறியாடி… உனக்குப் புண்ணியமாப் போகும்…” அவள் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
செண்பகத்தை பார்த்து கவிதா தலையசைக்கவும் “அதுக்கென்ன மாமி… வாங்க…” என்று கூறி அவருடன் நடந்தாள்.
“வரேன் கவி” சீத்து மாமி நடையின் வேகத்தைக் கூட்டினார்.
அவர்கள் செல்வதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் குனிந்து ரோஷன் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் அங்கு இல்லை என்றதும் மனதில் இத்தனை நேரம் நீங்கியிருந்த பயம் மீண்டும் துளிர்விடத் துவங்கியது.
ஓடிச் சென்று மாடிப் படியின் அருகில் அவள் நின்றபோது அவன் கையில் ஒரு பொம்மையை வைத்து படிகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவனை அவசரமாகத் தூக்கிய கவிதா “ரோஷன் செல்லம்… இங்க பாருங்கடா… இனி மாடிப்படிக்கிட்ட வரக் கூடாது சரியா?” என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் அப்போதும் படிகளைக் கை காட்டி “ம்ம்…” என்று கூறி சிரித்தான்.
முதல் படியிலிருந்து கடைசிப் படி வரை பார்த்தாள்.
‘இனி இவனக் கீழ இறக்கி விடக் கூடாது. தூக்கியே வெச்சிருக்கணும்’
வெளியில் இருட்டத் துவங்கியிருந்தது. வீட்டின் ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் போட்டுவிட்டு ஹாலில் வந்தமர்ந்தாள் கவிதா. ரோஷன் மடியில் அமர்ந்திருக்கத் தினப்படி வழக்கமாக டீவியில் கார்ட்டூன் ஓடியது.
சிறிது நேரத்தில் பாத்திரங்கள் கீழே விழும் சத்தம் கேட்கவே “செண்பா என்னாச்சு?” என்று குரல் கொடுத்தாள்.
சில நொடிகளுக்குப் பின்னும் பதில் வராமல் போகவே அங்குச் சென்று பார்ப்பதற்காக எழுந்து இரண்டடி நடந்தவள் சட்டென்று நின்றாள். யோசனையாகத் திரும்பி ரோஷனை பார்த்தவள் அவனருகில் சென்று அவனையும் தூக்கிக் கொண்டே அடுக்களை நோக்கி நடந்தாள்.
செண்பகம் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு செண்பா?”
“தெரியல கா. தோசை ஊத்திட்டு இருந்தேன். எப்படி விழுந்துதோ? சத்தம் கேட்டுப் பயந்துட்டேன்”
“ஓஹ்ஹ்… அப்போ ஹால்லேருந்துக் குரல் குடுத்தேன். நீ பதிலே சொல்லலையா… அதான் வந்து பாத்தேன்”
“நீங்க போங்கக்கா… நான் பாத்துக்குறேன்…”
ராஜேஷ் அமைதியாக அமர்ந்திருக்கும் மீனாவை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“ஏதாவது பேசு மீனு…”
“எப்பயும் நான் பேசுனா’எப்போடி வாய மூடுவ?’னுக் கேப்பீங்க… இன்னைக்கு என்னாச்சு?”
“அதெல்லாம் சும்மா சொல்லுறது தான் மீனு. அப்பறம்… கவி என்ன சொன்னா?”
“அவ எதுவும் சொல்லல ராஜேஷ். நான் தான் அவளையும் டைரி படிக்க வெச்சு கஷ்டப்படுத்திட்டேன்…”
ராஜேஷின் முகம் மாறுவதைப் பார்த்தவள்’ஐயோ மறுபடியும் டைரி பத்திப் பேசிட்டோமா?’என்று நொந்தாள்.
“ரோஷன் இப்போவே எவ்வளவு சேட்டை செய்யுறான் தெரியுமா?”
“அன்னைக்கு ஒரு நாள் அவன் நம்ம வீட்டுல இருந்தது எவ்வளவு நல்லா இருந்துதுல்ல…”
“ஆமாமா… விட்டா அவன நீங்க தூக்கிட்டு வந்து உங்கக்கூடயே வெச்சுப்பீங்க”
“வெச்சுப்பனே…”
“கார்த்திக் அண்ணா விட்டுடுவாங்கப் பாருங்க”
“நீ வேணாப் பாரு மீனு… ரோஷன் என் செல்லம். கார்த்திக் எல்லாம் எதுவும் சொல்ல முடியாது. சரி வா… இன்னைக்கே டைரி படிச்சுக் காட்டிடுறேன். இன்னையோட அத முடிச்சுடலாம். ஆனா அதுக்கப்பறம் நான் எடுத்துட்டுப் போயிடுவேன்”
அவள் தலையாட்டவும் ராஜேஷ் சென்று டைரியை எடுத்து வந்தான்.
கைப்பேசி சிணுங்க ரோஷனை செண்பகத்திடம் கொடுத்துவிட்டு எழுந்துச் சென்று அதை எடுத்தாள் கவிதா. கார்த்திக் அழைத்திருந்தான்.
“சொல்லுங்க…”
“கவி ஒரு குட் நியூஸ்… நான் நாளான்னைக்கு நைட் வந்திடுவேன்”
“நிஜமாவா?”
வெளியே போர்ட்டிகோவிற்கு வந்தாள்.
“வேலை எல்லாம் முடிஞ்சுதா கார்த்திக்?”
“எல்லாமே முடிஞ்சுது கவி. ரோஷன் என்ன செய்யுறான்?”
“செண்பகத்தோட விளையாடுறான். பையனப் பத்தி மட்டும் தான் விசாரிப்பீங்களா?” போர்ட்டிகோவின் படிகளை மெதுவாக இறங்கத் துவங்கினாள்.
“ஓஹ்ஹ்…” இரண்டு நொடி அமைதியாக இருந்த கார்த்திக் “ராஜேஷ்கிட்டப் பேசுனியா? மீனா வந்தாளா? அவங்க ரெண்டுப் பேரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டான்.
“ம்ம்… எல்லாம் இருக்காங்க…” என்றவள் தோட்டத்தின் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
“அப்பறம் செல்வம், செண்பகம் நல்லா இருக்காங்களா?”
கவிதா அமைதியாக மல்லிகைப் பந்தலை நோக்கி நடந்தாள்.
“ஹலோ கவி…”
“ம்ம்”
“என்ன கவி பேசவே மாட்டேங்குற?”
“நீங்களே பேசுங்க” என்றவள் மல்லிகை பந்தல் அருகில் வந்திருந்தாள். நிலவொளியில் மிளிர்ந்த மல்லிகை மலர்களின் அழகை ரசித்தபடியே ஒரு மலரைப் பறித்தாள்.
“சரி சரி… மேடம் என்ன பண்ணீங்க இன்னைக்கு?”
“மீனா வீட்டுக்கு வந்திருந்தா. கார்த்திக்…”
“இதுக்கு மேல அதப் படிக்க வேண்டாம்னு சொன்னா ரெண்டுப் பேரும் கேக்கப் போறதில்ல. சொல்லு என்ன சொன்னா?”
“எப்படிக் கார்த்திக் ரேணு தாங்கியிருப்பா? மீனா டைரி எடுத்துட்டு வந்து படிக்கச் சொன்னா. என்னால அவ சொன்ன ரெண்டுப் பக்கத்த முழுசா படிக்கக் கூட முடியல கார்த்திக்”
“அது அவ வாழ்க்கை கவி. அத நெனச்சு நம்ம வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது சொல்லு. அத சும்மா மேலோட்டமா கொஞ்சம் படிச்ச எனக்கே கஷ்டமா தான் இருந்துது. அதான் படிக்க வேண்டாம்னு சொன்னேன். விடு கவி… அதுக்கு நம்ம ஒண்ணும் பண்ண முடியாது”
“ம்ம்…” மல்லிகை பந்தலைத் தாண்டி மெதுவாக நடக்கத் துவங்கினாள்.
“இதெல்லாம் நெனச்சு நீ மனசப் போட்டுக் குழப்பிக்காத கவி. நிம்மதியா தூங்கு. ரெண்டு நாள் தான… நான் வந்திடுவேன்”
“சரி கார்த்திக். நான் எதுவும் யோசிக்கல. வெச்சுடட்டுமா?”
“சரி கவி… ரோஷன் பார்த்துக்கோ. நான் சீக்கிரம் வந்திடுறேன்”
கைபேசியை அணைத்து விட்டு நிமிர்ந்தவளின் கண்களில் சிவப்பு ரோஜாச் செடிப் பட்டது.
எப்போதும் போல் அந்தச் செடிப் பெரிய பெரிய அழகிய சிவப்பு ரோஜாக்களுடன் அழகாகத் தான் இருந்தது. ஆனால் அதை ஏனோ கவிதாவால் ரசிக்க முடியவில்லை.
பெருமூச்சொன்றை வெளியேற்றித் திரும்ப எத்தனித்தபோது செடியின் மறு பக்கம் யாரோ நிற்பது போல் தோன்றியது.
திடுக்கிட்டு அவள் திரும்பி உற்று கவனித்த நேரம் அங்கு எதுவும் புலப்படவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்கத் தோன்றாமல் வேகமாக நடந்தாள்.
திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தவளுக்கு அந்தச் செடி அச்சத்தைக் கொடுத்தது. அதிலிருந்த ரோஜாக்கள் எல்லாம் அச்சுருத்துவதாகத் தோன்றியது.
வீட்டிற்குள் வந்தவளுக்கு நாக்கு வறண்டிருந்தது. டைனிங் ஹாலிற்கு சென்றவள் இரண்டு கிளாஸ் தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்தாள். மனதைத் திசைத் திருப்ப ஹாலில் சென்று அமர்ந்தாள்.
மீனாவை தீர்க்கமாகப் பார்த்த ராஜேஷ் “நீ அழறதப் பாத்தா படிக்குறத நிறுத்திடுவேன்” என்றான்.
“அழ மாட்டேன்”
ஒவ்வொரு முறை வயித்துல கைய வெச்சுப் பார்க்குறப்பவும் எனக்கு கௌதம் கடைசியா என் வயித்த வருடினது தான் ஞாபகம் வருது.
அந்த நொடி நான் இந்தக் கருவை வெறுக்க ஆரம்பிக்குறேன்.
ஆனா கொஞ்ச நேரத்துலயே நான் ப்ரெக்னன்ட்டா இருக்குறத முதல் தடவ கௌதம்கிட்ட சொன்னபோ அவன் எப்படி ரியாக்ட் பண்ணானோ அது ஞாபகம் வந்துடுது.
இப்படி வயித்துல வளருற என் குழந்தைய வெறுக்கவும் முடியாம முழுசா ஏத்துக்கவும் முடியாம தினம் தினம் என் மனசுக்குள்ள நடக்குறப் போராட்டம்… எனக்குப் பைத்தியம் பிடிக்க வெக்குது.
-ரேணு
என்னால இந்த ரூம்ல இருக்க முடியல. எங்கத் திரும்பினாலும் கௌதம் தான் தெரியுறான். அவன் என் கூட இல்லங்குறத என்னால இன்னும் நம்ப முடியல. எப்பவும் அவன் குரல் கேட்டுக்கிட்டே இருக்க மாதிரி ஒரு பிரம்மை.
இதனாலயே நான் இந்த ரூம்ல இருக்குறதத் தவிர்க்குறேன்.
பகல் நேரம் எல்லாம் ஆன்ட்டி கூடப் பேசிட்டு வேலை செஞ்சுட்டு கீழயே இருக்குற என்னால என் ரூம கீழ மாத்திக்க முடியல.
என்ன இருந்தாலும் அது நானும் என் கௌதமும் வாழ்ந்த ரூம். அத விட்டு என்னால எப்படிக் கீழ வர முடியும்?
ராத்திரி அந்த ரூம்குள்ள போறப்போ ஒரு வெறுமை இருக்கும். எல்லாமே தொலைஞ்சுப் போன மாதிரி.
அதனால தான் டைரி கூட இப்போ எல்லாம் நான் அங்க உட்கார்ந்து எழுதுறதில்ல. மேலயே இருக்க புக்ஸ் வெக்குற இன்னொரு ரூம்ல உட்கார்ந்து எழுதுறேன்.
எங்க உட்கார்ந்து எழுதினாலும் கௌதம் பத்தியே எழுதுறேன். என்கிட்டத் திரும்பி வந்துடு கௌதம்…
-ரேணு
இன்னும் எத்தன நாள் ராத்திரி நான் இப்படித் தனியா உட்கார்ந்து அழணுமோ தெரியல… இந்த பெட்ல வந்து படுத்தாலே பக்கத்துல கௌதம் இல்லையேன்னு தான் தோணுது.
அவன் எப்பயும் படுக்குற இடத்த தடவிப் பார்க்குறேன். எவ்வளவு தேடியும் அவனோட ஸ்பரிசம் கிடைக்கலையே…
எப்படிக் கௌதம் என்ன விட்டுட்டுப் போக உனக்கு மனசு வந்துது? உன்ன என்னைக்கும் கஷ்டப்படுத்த மாட்டேன்னு சொல்லுவியே… காலேஜ்ல நான் அழுதாலே தாங்க மாட்டியே… இப்போ நான் எப்படி அழுதுட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா கௌதம்?
எவ்வளவு அழுதாலும் கதறுனாலும் என் துக்கம் ஏன் குறையவே மாட்டேங்குது? எவ்வளவு கூப்பிட்டாலும் நீ ஏன் கௌதம் வர மாட்டேங்குற? வந்துடு கௌதம்…
-ரேணு
நான் இப்போ எல்லாம் அடிக்கடி டைரி எழுதுறதே இல்ல. இப்போ கூட ரெண்டு மாசம் கழிச்சு எழுதுறேன். வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாத மாதிரி இருக்கு.
இன்னைக்கு என் டைரிய முதல்லேருந்துப் படிச்சுப் பார்த்தேன். முதல் பக்கத்துல நான் எழுதி இருக்க விஷயங்கள் எல்லாம் உண்மை. ஆனா இப்போ அதுக்கான அர்த்தம் தான் மாறிப் போச்சு.
வாழ்க்கையில் நாம் கடந்து வரும் சில அழகிய தருணங்கள் நம்மை எழுதத் தூண்டுகின்றன…
சில நேரங்கள்ல நெஞ்சை அடைக்கும் துக்கம் கூட டைரி எழுதத் தூண்டுமோன்னு இப்போ தோணுது.
தென்றலாய் வந்தான்…
என் வாழ்வை புரட்டிப் போட்டான்…
அப்போ இனிமையாத் தெரிஞ்ச இந்த வரி இப்போ கோரமாத் தெரியுது. உண்மையில என் வாழ்க்கையே தலைகீழா புரண்டு தான் போச்சு.
நான் இதுவரை அறிந்திடாத உணர்வை
என்னை உணரச் செய்தான்…
இது வரைக்கும் நான் இவ்வளவு மனக் கஷ்டத்த அனுபவிச்சதில்ல. வாழ்க்கையே இருண்டு… எதுலயுமே பிடிப்பு இல்லாம… ஏன்டா வாழுறோம்னு எனக்கு வர இந்த உணர்வும் உன்னால தான் கௌதம்.
அவனுக்காக…
அவனைப் பற்றிய குறிப்புகள்…
என் டைரி…
இப்பயும் என் டைரி முழுக்க அவன் தான் நெறஞ்சு இருக்கான். முன்னாடி அவன் கூட நானும் இருந்தேன். இப்போ அவன் தனியா நான் தனியா இருக்கோம்.
-ரேணு
இப்போ எல்லாம் என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியல. வீட்டுக்கு திடீர்னு யார் யாரோ வராங்க. அவங்கப் பேசுறது எதுவும் எங்களுக்குப் புரிய மாட்டேங்குது. இனம் புரியாத பயம்.
– ரேணு
ராஜேஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மீனா அவன் டைரியை மூடுவதைக் கண்டு “முழுசாப் படிச்சு முடிச்சுடுங்க ராஜேஷ்” என்று அவசரமாகக் கூறினாள்.
“அவ்வளவு தான் மீனு இருக்கு” டைரியை அருகில் வைத்தான்.
அவனைப் புரியாமல் பார்த்தவள் டைரியை எடுத்துப் பக்கங்களைப் புரட்டினாள். அவன் கூறியது போல் டைரி அத்துடன் முடிந்திருந்தது.
“ஆனா இது ஏதோ பாதில நிக்குற மாதிரி இருக்கே”
“ம்ம்… ஆனா இதுல அதுக்கு மேல எதுவும் எழுதல மீனு… சொன்ன மாதிரியே முழுசாப் படிச்சுக் காமிச்சுட்டேன். இனி இதப் பத்தி எதுவும் பேசாத. யோசிக்காத. இது என்கிட்டயே இருக்கட்டும்” டைரியுடன் மாடிக்கு எழுந்துச் சென்றுவிட்டான்.
கட்டிலில் வந்து படுத்த கவிதாவிற்கு உறக்கம் வரவில்லை. தெரு விளக்கின் வெளிச்சம் ஜன்னல் வழியே அறையை நிறைத்திருந்தது.
ஜன்னலில் மாட்டியிருந்த ஸ்க்ரீன் துணி காற்றில் ஆடும்போதெல்லாம் வெளிச்சம் கூடிக் கூடிக் குறைந்து கொண்டிருந்தது. அவள் மனநிலையும் அப்படித் தான் இருந்தது.
‘யாரோ நிக்குற மாதிரி இருந்துதே… நான் பார்த்தேனே… ஒருவேளை பிரம்மையா கூட இருக்கலாம்.
ஆனா சீத்து மாமியும் பார்த்தேன்னு சொன்னாங்களே…
அவங்களுக்குக் கண்ணாடிப் போடலன்னா தூணுக்கும் ஆளுக்குமே வித்தியாசம் தெரியாதுன்னு அவங்களே சொல்லியிருக்காங்க. செண்பகம் அன்னைக்குச் சொல்லி எப்படிச் சிரிச்சா… அந்தக் கிண்டலக் கூட சீத்து மாமி பெருசா நினைக்கல. ரொம்ப நல்லவங்க.
அதுக்காக நான் பாத்தது பொய்னு ஆயிடுமா? ஒரு தடவ இல்ல… பல தடவப் பாத்தேனே…”
அவள் சிந்தனையைக் கலைத்தது ரோஷனின் சிரிப்பு சத்தம்.       
28
தொட்டிலைத் திரும்பிப் பார்த்தாள் கவிதா. ரோஷன் கையில் ஒரு பொம்மையுடன் அமர்ந்திருந்தான்.
‘இன்னைக்குக் காலைல தானே இவன் தொட்டில் முழுக்கப் பொம்மையா இருக்கு… இவன் தூங்கும்போது உறுத்தும்னு எல்லாத்தையும் எடுத்து வெச்சோம்.
தொட்டில்ல இருக்க பெட், அதுக்கு மேல விரிக்குற ஷீட் முதற்கொண்டு எல்லாத்தையும் மாத்தி தொட்டிலயே சுத்தம் செஞ்சோமே… இவன் கையில இந்தப் பொம்மை எப்படி வந்துது?’
மீண்டும் அவன் சிரிப்பொலி கேட்கவே அவனைப் பார்த்தபடியே தொட்டில் அருகில் எழுந்து வந்து “ரோஷன்… இது எங்கேந்துடா எடுத்தீங்க? தூங்கலையா நீங்க?” என்று கேட்டு அவன் கையிலிருந்து பொம்மையை வாங்கி அட்டைப் பெட்டியில் வைத்தாள்.
அவனைத் தூக்கி அவனுடன் பேசியவாறே சிறிது நேரம் அறையில் நடந்தவள் அவன் கண்கள் சொருகி உறங்க ஆரம்பிக்கவும் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
அவன் நன்கு உறங்கியதும் தொட்டிலில் கிடத்த நினைத்து மறுப்பாகத் தலையை ஆட்டி மெத்தையில் தன் அருகில் படுக்க வைத்தாள். சில நிமிடங்கள் அவனுக்குத் தட்டிக் கொடுத்தவள் தானும் தூங்கிப் போனாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளால் தன் வலப்பக்கம் மட்டும் சில்லிடுவதை உணர முடிந்தது. தூக்கம் கலையாததால் போர்வையை இன்னும் இழுத்து கழுத்து வரை போர்த்தினாள்.
சிறிது நேரத்தில் போர்வையையும் தாண்டி கை சில்லிடுவதை உணர்ந்து தூக்கக் கலக்கத்தில் கண்களைத் திறவாமல் கையால் துழாவி ஏ ஸி ரிமோட்டை எடுத்து அதை அணைத்தாள்.
ஒரு சில நிமிடங்களில் வலப்பக்கம் உடல் விறைக்கும் அளவிற்குக் குளிர் எடுக்கவே திடுக்கிட்டு விழித்தெழுந்து தன் அருகில் இருந்த ஏ ஸி ரிமோட்டை எடுத்து அதை அணைக்கத் திரும்பினாள். ஏ ஸி ஓடவில்லை.
புரியாமல் குழம்பியவள் கழுத்தை வளைத்து சோம்பல் முறிக்கும்போது மேலே பேனும் ஓடவில்லை என்பதைக் கவனித்தாள். கட்டிலின் அருகில் இருந்த ஸ்விட்சைப் போட்டபோது விளக்கும் எரியவில்லை.
“கரண்ட் இல்லையா? அப்பறம் எப்படிக் குளிருச்சு?” பால்கனி கதவைப் பார்த்தாள். அது தாழிடப்பட்டிருந்தது.
ரோஷனின் உடலும் மிதமான சூட்டிலேயே இருந்தது.’நமக்குத் தான் தூக்கக் கலக்கத்துல அப்படித் தோணுச்சோ?’போர்வையைப் போர்த்திப் படுத்தாள் கவிதா.
மீண்டும் தன் வலப்பக்கம் மட்டும் விறைக்கும் அளவிற்குச் சில்லிடவும் வேகமாக எழுந்தமர்ந்தாள். அந்தப் பக்கம் சுற்றிப் பார்த்தும் எதுவும் புலப்படவில்லை.
அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு மின் விசிறி ஓடாததால் லேசாக வியர்க்க ஆரம்பித்தது. ஒரு கையால் முகத்தைத் தேய்த்து மறு கையால் கண்ணைக் கசக்கியபடியே எழுந்து அறை கதவைத் திறந்தாள்.
‘கரண்ட் இல்ல. ஏ ஸி ஓடல. எப்படி நமக்கு ஜில்லுன்னு ஆச்சு?’தெருவிளக்கின் வெளிச்சம் கூட இல்லாமல் அறையில் இருந்த டேபிலும் மெத்தையும் கரேலெனத் தெரிந்தன.
தலையை உலுக்கி மெத்தை அருகில் சென்று ரோஷனை எழுப்பி விடாமல் கவனமாகத் துழாவி கைப்பேசியை எடுத்து டார்ச்சை எரியவிட்டாள்.
கடிகாரம் அடிக்கும் ஓசைக் கேட்டது. மின்சாரமும் இல்லாமல் அமைதியான சூழலில் அதன் ஒலி பெரிதாகக் கேட்கவே இதைச் சற்றும் எதிர்ப்பாராதவள் திடுக்கிட்டு கைபேசியைக் கீழே போட்டாள்.
‘மணி ரெண்டாச்சா?’அவள் குனிந்து கைபேசியை எடுத்த நேரம் பாத்திரங்கள் உருளும் ஓசைக் கேட்க அவள் மனதில் பயம் கூடியது.
“இது என்ன தெனம் இப்படியே கிச்சன்ல பாத்திரம் எல்லாம் விழுது? கதவு ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்கப்போ பூனை வரவும் வாய்ப்பில்லையே…” ரோஷனை திரும்பிப் பார்த்துவிட்டு மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள்.
முதல் படியின் விளிம்பில் நின்றுக் கீழே எட்டிப்பார்க்க மொபைலின் வெளிச்சத்தில் செண்பகம் டைனிங் ஹாலிற்குள் நுழைவது தெரிந்தது. வேகமாகப் படிகளில் இறங்கினாள்.
அவள் அடுக்களைக்குள் நுழைந்த நேரம் செண்பகம் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“நீங்களும் முழுச்சுட்டீங்களா கா? கரண்ட் வேற போயிடுச்சு… இது என்ன இம்சையோ? தினம் இப்படிப் பாத்திரம் உருளுது… தூக்கம் கலஞ்சுப் போயிடுது…”
அவளுக்கு உதவி எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் “நீ போய்ப் படு செண்பா…” என்றாள்.
“சரி கா” அவள் பின்னால் சென்ற கவிதா ஹால் சோபாவில் அமர்ந்தாள். மனதில் சிறிதும் அமைதி இல்லை.
‘என்ன தான் நடக்குது இந்த வீட்டுல? ஏன் இப்படி எல்லாம் ஆகுது? நான் யாரையோ பாத்தேனே… அது உண்மையா? இல்ல நான் கற்பனை செஞ்சுக்குறேனா? இதே வீட்டுல தான் செண்பா இருக்கா… அவ இதுவரைக்கும் இப்படி எதுவும் சொன்னதில்லையே…
ஒருவேளை என்னை மாதிரியே எதுக்குச் சொல்லிக் குழப்பணும்னு நெனச்சு சொல்லலையோ? நாளைக்குப் பேச்சு வாக்குலக் கேட்டுப் பாக்கணும்… ஒருவேளை அவ அப்படி எதுவும் இல்லன்னு சொல்லிட்டா?
அது எப்படி ஒரு க்ளாக் நைட் ரெண்டு மணிக்கு மட்டும் அடிக்கும்? இது ஒண்ணும் ட்வென்டி போர் ஹவர்ஸ் காட்டுற க்ளாக் இல்லையே… அப்பறம் எப்படி? ஏன் இது மதியம் அடிக்குறதில்ல? ஹ்ம்ம்ம்…
ரோஷன்… ரோஷனும் இப்போ எல்லாம் வித்தியாசமா ஏதேதோ செய்யுறான். இன்னைக்கு அவன் தொட்டில்ல அந்தப் பொம்மை எப்படி வந்துது? அவனைத் தூங்க வெக்குறப்போ எந்தப் பொம்மையும் இருந்த மாதிரித் தெரியலயே…
அவன் எப்போ பாரு படிக்கிட்டயே வேற போறான். அத ஆரம்பத்துல நான் தான் கவனிக்காம விட்டுட்டேனோ? இப்படி இன்னும் எத்தன விஷயம் நம்ம கவனிக்கலையோ? நமக்கு ஏன் ரைட் சைட் மட்டும் இப்படி ஜில்லுன்னு ஆகுது?”
ஒவ்வொன்றாக யோசித்தவளுக்குத் தலை வலித்தது.
‘ம்ச்ச்… இதுக்கு மேல முழிச்சிருந்து மட்டும் என்ன ஆகப் போகுது?’பெருமூச்சுடன் எழுந்து மாடியறைக்குச் சென்றாள்.
அவள் அறை வாயிலில் கால் வைக்கவும் கரண்ட் வரவும் சரியாக இருந்தது.’அப்பா… நிம்மதியாத் தூங்கலாம்…’வேகமாகச் சென்று மகன் அருகில் படுத்தாள்.
தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்துப் பார்த்த கவிதா விடிந்துவிட்டதை உணர்ந்தாள்.
ரோஷன் கவிழ்ந்துப் படுத்துக் கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டிருந்தான். அவளிடம் அசைவுத் தெரியவும் அவள்புறம் திரும்பி கன்னம் வருடினான்.
அவன் வருடலில் புன்னகைத்தவள் அவன் கையிலிருந்த பொம்மையைப் பார்த்தவுடன்’நைட் எல்லாப் பொம்மையையும் எடுத்து வெச்சுட்டு தானப் படுத்தோம்…’என்று யோசித்து அவசரமாக அங்கிருந்த அட்டைப் பெட்டியைப் பார்த்தாள். அது முந்தைய இரவு அவள் வைத்த இடத்திலேயே இருந்தது.
சட்டென்று எழுந்து பொம்மையை வாங்கி மெத்தையில் வைத்து விட்டு அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். அறையில் இருந்த ஒவ்வொரு பொருளாகப் பார்த்தவள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்க மெத்தையை விட்டு இறங்கிக் கீழே வந்தாள்.
“செண்பா இவனுக்குத் தண்ணி வை… குளிக்க வெச்சுடுவோம்…”
“இப்போவே குளிக்க வைக்கப் போறீங்களா கா? எப்பயும் சாப்பாடு ஊட்டிட்டு பதினோரு மணிக்கு தான குளிப்பான்? நீங்க இந்த டீ குடிங்க முதல்ல”
கப்பை வாங்கியவள் ரோஷனை அவளிடம் கொடுத்து விட்டு “நான் இன்னும் பிரஷ் பண்ணல செண்பா…” என்றாள்.
“என்ன கா ஆச்சு இன்னைக்கு? ஏன் எதையோ யோசிச்சுட்டே இருக்கீங்க?”
“ம்ம்… ஒண்ணும் இல்லை” என்று கூறி அப்போதும் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தவளின் காதில் மேலே ஒலிக்கும் தன் மொபைலின் ஓசைக் கேட்டது.
“போன் அடிக்குது செண்பா… இரு வரேன்…” மாடிபடிகளை இரண்டிரண்டாகத் தாண்டி ஏறிச் சென்று அறையை அடைந்தாள்.
“சொல்லு மீனா… நானே உனக்குக் கூப்பிடணும்னு நெனச்சேன்டி” என்று லேசாக மூச்சு வாங்கக் கூறினாள்.
“ஏன் கவி? ஏதாவது பிரச்சனையா?”
“முதல்ல நீ எதுக்கு கால் பண்ண? அத சொல்லு…”
“நேத்து நைட் ராஜேஷ் அந்த டைரி புல்லா படிச்சு சொல்லிட்டாங்க கவி. ரொம்பக் கஷ்டமா இருந்துது. அதான் உன்கிட்டக் கொஞ்ச நேரம் பேசலாமேன்னு கூப்பிட்டேன்”
“கடைசியா என்னடி இருந்துது?”
“ரேணுவோட புலம்பல் மட்டும் தான்டி இருந்துது. வேற எதுவும் இல்ல. நீ சொல்லு என்ன விஷயம்?”
“மீனா… எப்படிச் சொல்லுறதுன்னு தெரியலடி. எனக்கு என்னவோ எல்லாமே வித்தியாசமா இருக்குடி. நான் சொல்லுறத முழுசாக் கேளு. அப்பறம் நீயே என்ன பண்ணலாம்னு சொல்லு.
எனக்கு இப்போ கொஞ்ச நாளா எங்க வீட்டுத் தோட்டத்துல ஒரு ரெட் ரோஸ் செடி இருக்கே… அதுக்கிட்ட யாரோ நிக்குற மாதிரி இருக்கு மீனா. நான் ஏதோ நினைச்சுக் குழம்புறேன்னு நெனச்சா… நேத்து சீத்து மாமி வந்தப்போ யாரோ வீட்டுப் பின்புறம் போற மாதிரி இருந்துதுன்னு அவங்களும் போய்ப் பார்த்திருக்காங்க. அங்க யாரும் இல்லையாம்.
அவங்க தான் இன்னொரு சந்தேகத்தையும் கிளப்பி விட்டுட்டாங்க. யாரோ இருக்காங்கன்னு சொல்லுறதுக்கும், ஏதோ ஒரு உருவம் தெரியுதுன்னு சொல்லுறதுக்கும் வித்தியாசம் இருக்குன்னு சொன்னாங்க.
இத எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியல மீனா. நான் பேய், ஆவி இதெல்லாம் நம்புற ஆள் கிடையாதுன்னு உனக்கே தெரியுமே…
ஆனா எனக்கே இப்போ கொஞ்சம் பயமா இருக்குடி. அதுக்கு முக்கியமான காரணம் ரோஷன்.
அவன் எப்போ பாரு படிக்கிட்டயே போறான்னு நீ வீட்டுக்கு வந்தப்போ கூடச் சொன்னேன் ஞாபகம் இருக்கா? அன்னைக்கு ஒரு நாள் நான் எவ்வளவு கூப்பிட்டும் என்னைத் திரும்பிப் பார்க்காம படியப் பாத்தே சிரிச்சுட்டு இருந்தான்டி. என்னமோ அங்க யாரோ உக்காந்து அவனுக்கு விளையாட்டுக் காட்டுற மாதிரி…
நேத்து நைட் கரண்ட் போனதுக்கு அப்பறம் எனக்கு எப்படிக் குளூருச்சுத் தெரியுமா? நைட் ரோஷனோட எல்லாப் பொம்மையையும் எடுத்து வெச்சுட்டுப் படுத்தது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மீனா. காலைல அவன் கையில ஒரு பொம்மை இருந்துதுடி”
“இதெல்லாம் கார்த்திக் அண்ணா கிட்ட சொன்னியா கவி?”
“இல்லடி. உன்கிட்ட தான் முதல்ல சொல்லுறேன்”
“ஒரு விஷயமா இருந்தா நம்மளா ஏதோ யோசிச்சுக் குழம்புறோம்னு விட்டுடலாம் கவி. ஆனா நீ சொல்லுறதப் பாத்தா… அப்படி ஒதுக்கிட முடியாது”
“ம்ம்… எனக்கும் அப்…”
“கவி… ஒருவேளை இப்படி இருக்குமோ? கௌதம் இறந்தப்போ ரேணு ப்ரெக்னன்ட்டா இருந்தா. கடைசியா அவன் சாகுறப்போ கூட அவ வயித்துல கை வெச்சுப் பாத்தான். ஒருவேளை… ஒருவேளை இது கௌதமா இருந்தா? கவி… ரோஷன் பத்திரம் கவி”
“ச்ச… அப்படி எல்லாம் இருக்காது மீனா…” என்று கூறியவளால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அப்படி இருந்தால் என்ற பயமே அதிகமாக இருந்தது.
“இல்ல கவி… எதுக்கும் பாத்துக்கோ…”
“சரிடி… ஏதாவது வேணும்னா கால் பண்ணுறேன். வெக்குறேன்”
உடனேயே கார்த்திக்கை அழைக்க முயன்றாள். அவன் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
யோசனையோடே குளியலறையுள் சென்று ரெப்ரெஷ் செய்து கீழே வந்தாள்.
‘கிச்சன்ல பாத்திரம் உருளறதையும் அந்த க்ளாக் ராத்திரி ரெண்டு மணிக்கு மட்டும் அடிக்குறதையும் மீனா கிட்ட சொல்லவே இல்லையே… ஆமா இத சொன்னதுக்கே அவ பயந்துட்டா.
அவ சொன்ன மாதிரி இது கௌதமா இருந்தா? ரோஷனுக்கு எதுவும் ஆகுமா? ச்ச இருக்காது. அப்படி ஏதாவது ஆச்சுன்னா? நான் இப்போ என்ன செய்யுறது? எப்படி இத சமாளிப்பேன்?’
அன்று முழுவதும் மகனை கீழே விடாமல் தூக்கி வைத்துக் கொண்டு யோசனையிலேயே வீட்டை சுற்றி சுற்றி வந்தவளுக்கு மாலை தலை வலி எடுத்ததால் தோட்டத்தில் நடப்பதற்காக வந்தாள்.
சிறிது நேரம் மலர்களுக்கு நடுவில் நடந்தபோதும் அவள் கண்கள் அவளையும் அறியாமல் சிவப்பு ரோஜாச் செடி இருந்த திசைப் பக்கமே சென்று கொண்டிருந்தது.
‘ச்ச… உள்ள இருந்தா தல வலிக்குதுன்னு இங்க வந்தா… இங்கயும் நிம்மதியா இருக்க முடியல’
வீட்டினுள் வந்துவிட்டாள் கவிதா. சிறிது நேரம் அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனம் அங்கிருந்த கடிகாரத்தின் மீதே இருந்தது.
‘இது என்ன இன்னைக்கு எனக்கு இப்படித் தோணுது? ஏன் நிம்மதியே இல்ல? ஏன் என்னால நார்மலா இருக்க முடியல?’
செண்பகம் சாப்பிட அழைக்கச் சாப்பிடும்போதும் தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளிடம் “என்ன கா? சாப்பிடாம என்ன செய்யுறீங்க? ஏன் காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு ஏதாவது சரி இல்லையா?” என்று கேட்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“அதெல்லாம் இல்ல செண்பா. எனக்குப் போதும். நீ சாப்பிட்டுப் படு” என்று கூறி எழுந்துக் கைக் கழுவினாள்.
“நான் போய்ப் படுக்குறேன். நேத்தும் சரியாத் தூங்கல…” ரோஷனை தூக்கிக் கொண்டு மாடியறைக்கு வந்தவள் கைபேசியை எடுத்து கார்த்திக்கை அழைத்தாள்.
‘காலையிலிருந்து ட்ரை பண்ணுறேன். இவங்க எதுக்கு ஸ்விட்ச் ஆப் பண்ணி வெச்சிருக்காங்க? ஏதாவது முக்கியமான விஷயம்னா எப்படிச் சொல்லுறது? எப்போ பாத்தாலும் இப்படியே தான் செய்யுறாங்க… அப்படி என்ன வேலை ரொம்ப முக்கியம்?’
ரோஷன் வாயில் ஆல் காட்டி விரலை வைத்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கும் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் கால் வலிக்கவும் சோர்ந்து மெத்தையில் அமர்ந்தாள்.
அருகில் அமைந்து அவளை ஆச்சரியமாக நிமிர்ந்துப் பார்த்தவனைக் கண்டதும் மனம் லேசாக அவனைத் தூக்கி “தூங்கலாமாடா தங்கம்?” என்று கேட்டாள்.
அவனை மெத்தையில் கிடத்தி அருகில் படுத்துத் தட்டிக் கொடுக்க ரோஷன் சீக்கிரமே உறங்கிப் போனான். கவிதாவிற்கும் முந்தைய நாள் இரவு சரியாக உறங்காததால் கண்கள் சொருகின. ஒரு கையைத் தலைக்கடியில் வைத்து மறு கையால் அவனை அணைத்து அறை கதவைப் பார்த்தபடியே படுத்தாள்.
கண்கள் சொருகத் துவங்கிய நொடி தன் பின் புறம் மட்டும் ஜில்லிட திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கு எதுவும் புலப்படாததால் எழுந்தமர்ந்தாள்.
‘ஏ ஸி போடவே இல்லையே… பால்கனி கதவு சாத்தி இருக்கு…’அவளின் வலப் பக்கம் விறைப்பதை உணர்ந்தாள்.
பயந்து பின்னால் நகர்ந்துச் சென்றவளின் கையில் ரோஷன் தட்டுப்படவும் கவனமாக மெத்தையைவிட்டு இறங்கி விளக்கைப் போட்டு மெத்தையின் ஒவ்வொரு அங்குலமாக அளந்தாள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
இது பிரம்மை இல்லை. அதற்கு மேல் அந்த அறையில் இருக்க விரும்பாமல் மகனை தூக்கிக் கொண்டு வெளியே வந்து அங்கிருந்த சோபாவில் சாய்ந்தமர்ந்து அவனைத் தன் மீது கிடத்தி உறங்க முயன்றாள்.
அவள் கண்ணயர்ந்த நேரம் பாத்திரங்கள் உருளும் ஓசைக் கேட்டது. தூக்கிவாரிப் போட்டு எழுந்தவள் ரோஷன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவனை சோபாவில் கிடைத்தி அவன் விழாமல் இருக்க அருகில் ஒரு திண்டை வைத்து விட்டுப் படியருகில் சென்று தயங்கி நின்றாள்.
தினம் நடப்பது தான். ஆனால் இன்று ஏதோ நெருடலாக இருந்தது. ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவளின் இதயத் துடிப்பு ஏறிக் கொண்டே சென்றது.
ஹாலிற்கு வந்து அங்கிருந்த விளக்கைப் போட்டாள்.
‘செண்பா எந்திரிக்கலயே… ஏன்?’
டைனிங் ஹாலிற்குச் சென்று அங்கிருந்த விளக்கையும் போட்டு விட்டு அடுக்களை வாயிலை வெறித்தாள். உள்ளே செல்ல தைரியம் வரவில்லை.
மீண்டும் உள்ளே பாத்திரங்கள் உருளும் சத்தத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்து அடுக்களைக்குள் எட்டி விளக்கைப் போட்டாள்.
கீழே கிடந்த பாத்திரங்களை ஆராய்ந்தவள் நிமிர்ந்தபோது ஜன்னலுக்கு வெளியே கலங்கலான உருவம் ஒன்று தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது அங்கு எதுவும் இல்லை.
முதுகுத் தண்டு சில்லிடத் துவங்க அவள் உறைந்து நின்ற நேரம் கடிகாரத்தின் ஒலி அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கேட்டது.
கவிதா அவசரமாக ஹாலிற்கு வந்த நேரம் மேலே எதுவோ விழுந்து உடையும் சத்தம் கேட்டது.
சட்டென்று திரும்பி இரண்டடி நடந்தவள் “இல்ல… நான் மேல வர மாட்டேன். கௌதம் நீ இங்க தான் இருக்கியா? மேலேருந்துக் கீழ வர வெச்ச… அப்பறம் கிச்சன்… இப்போ ஹால்… நீ நினைக்குற இடத்துக்கெல்லாம் என்னை வர வைக்க முடியாது. ” என்று சத்தமாகவே கூறினாள்.
மேலே ரோஷனின் சிரிப்புச் சத்தம் கேட்கவே “ரோஷன்… ரோஷன்…” என்று அலறியவள் மாடிபடிகளில் தலை தெறிக்க ஓடினாள்.
ரோஷன் சோபாவில் அமர்ந்து சுற்றி இருந்த பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.’பொம்ம எப்படி இங்க?’அவனைப் பாய்ந்துச் சென்று வாரி அணைத்தவள் படிகளில் விரைந்து இறங்கினாள்.
கீழே வந்தவளின் கண்களில் கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. மூச்சு வாங்க நெஞ்சடைக்க ரோஷனை இறுக அணைத்துக் கொண்டாள். கவிதாவின் செயலால் பயந்துப் போனவன் அழ ஆரம்பித்தான்.
தன் சக்தி எல்லாம் வடிந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் “இது உன் குழந்த இல்ல கௌதம்… இவன ஒண்ணும் பண்ணிடாத… எங்கள விட்டுடு ப்ளீஸ்…” என்று கதறத் துவங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!