Poi Poottu 15

Poi Poottu 15

29
ராஜேஷும் மீனாவும் வீட்டினுள் நுழைவதை பார்த்த செண்பகம் அவர்கள் அருகில் ஓடி வந்து “நீங்க வந்து பேசுங்க மீனா கா… நான் கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்க…” என்று கூறி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“இப்போ கவிதா எங்க?”
“கீழ தம்பி ரூம்ல இருக்காங்கண்ணா…”
ரோஷனை இரு கைகளாலும் அணைத்து பிடித்து மெத்தையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் கவிதா.
“என்ன ராஜேஷ் இவ இப்படி உக்கார்ந்திருக்கா?”
“போய்ப் பேசு மீனு”
“கவி”
குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தவள் “மீனா…” என்று அழ ஆரம்பித்தாள். ராஜேஷ் அவள் அருகில் சென்று ரோஷனை வாங்கிக் கொண்டான்.
தன்னை நோக்கி வந்தவளை அணைத்து “எனக்கு மட்டும் ஏன்டி இப்படி நடக்குது?” என்று புலம்ப ஆரம்பித்தாள்.
“என்ன நடந்துதுன்னு சொல்லுமா. காலைல எந்திரிச்சுப் பாத்ததுலேருந்து நீ எதுவும் பேசாம இந்த ரூமுக்குள்ளயே உட்கார்ந்திருக்கன்னு செண்பகம் கால் பண்ணி சொன்னதும் நானும் மீனாவும் பயந்து போய்க் கிளம்பி வந்தோம் கவி. அப்படி என்ன நடந்துது?”
“நைட் என் பக்கத்துல… எனக்குப் பின்… பின்னாடி மட்டும் ஜில்லுன்னு ஆச்சு. நான் ரோஷன தூக்கிட்டு வந்து வெளில இருக்க சோபால உக்காந்துட்டேன். அப்போ கீழ… கீழ பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு வந்தேன். தோட்டத்துல யாரோ நிக்குற மாதிரி இருந்துது. பயந்து… பயந்துட்டேன். ஹால்ல இருக்க க்ளாக் வேற நைட் ரெண்டு மணிக்கு மட்டும் அடிக்குது.
அத வந்து பாத்தேனா… மேல ஏதோ விழுந்து உடையுற சத்தம் கேட்டுச்சு. நேத்து மீனா சொன்னா… ஒருவேள இது கௌதமா கூட இருக்கலாம்னு. நான் மேல வர மாட்டேன் கௌதம்னு சொன்னதும்… ரோஷன் சிரிக்குற சத்தம் கேட்டுச்சு. மேல வந்து பார்த்தா அவன சுத்தி பொம்மையா இருந்துது. எனக்குப் பயமா இருக்குண்ணா…”
இரவு முழுவதும் அழுததால் அவள் கண்கள் சிவந்து வீங்கியிருந்தன.
“உன்ன யாரு மீனா இப்போ இப்படி எல்லாம் சொல்ல சொன்னது? பாரு எப்படிப் பயந்திருக்கான்னு…”
“என்னை எதுக்கு ராஜேஷ் திட்டுறீங்க? சரி… அப்போ இவ்வளவு நேரம் கவிதா சொன்னதுக்கெல்லாம் என்ன விளக்கம் சொல்வீங்க?”
“கார்த்திக் அன்னைக்கே சொன்னான்… இந்த வீட்ட வாங்கின ஆளப் பத்தி விசாரிக்கச் சொல்லி”
“அவங்களும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க. நேத்துலேருந்து ஸ்விட்ச்ட் ஆப்னு வருது”
அவனும் நண்பனுக்கு முயன்றுப் பார்த்துவிட்டுப் பயனில்லாமல் போகவே என்ன செய்வதென்று யோசித்தான்.
“சரி… கார்த்திக் அண்ணா சொன்ன மாதிரி இந்த வீட்ட வித்த ஆளப் பத்தி விசாரிச்சுட்டீங்களா?”
“எங்கக்கிட்டப் பேசுனது ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். அந்த ஆளு இறந்துட்டான். நாங்க வீட்ட வாங்குனது ஒரு வயசானவர் கிட்ட. அவரப் பத்தி விசாரிக்கச் சொல்லி சொன்னேன். இரு… எதாவது தெரிஞ்சுதாக் கேட்குறேன்…” ரோஷனுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
தோழியின் அருகில் அமர்ந்தவள் “நீ இப்போ எதுக்கு அழற? அதான் நாங்க வந்துட்டோம்ல? நாங்கப் பாத்துக்குறோம். செண்பா குடிக்கச் சூடா ஏதாவது கொண்டு வா. நீ போய் முகம் கழுவிட்டு வா கவி”
அவ்வளவு நேரமும் கவிதா சொன்னவற்றைக் கேட்டு சிலையென நின்றிருந்த செண்பகம்’இந்த வீட்டுல இவ்வளவு நடந்திருக்கா? இதெல்லாம் கவிதா கா இத்தன நாள் சொல்லவே இல்லையே… பாவம் ரொம்பப் பயந்துப் போய் இருக்காங்க’என்று யோசித்தபடியே காய்ச்சியப் பாலில் காபி கலந்து எடுத்து வந்தாள்.
முகம் கழுவி வந்தவளின் கையில் அதைக் கொடுத்துப் பருகச் செய்தனர். அறையினுள் வந்தவன் யோசனையாக மூவரையும் பார்த்து அமைதியாக இருந்தான்.
“என்னாச்சு ராஜேஷ்? ஏதாவது தெரிஞ்சுதா?”
“ம்ம்… தஞ்சாவூர்ல இருக்காறாம். அவரோட பொண்ணு பேரு ரேணு னு சொன்னான்” என்று கவிதாவை பார்த்தபடியே கூறினான்.
சட்டென்று எழுந்து நின்றவள் “அப்போ அவருக்கிட்ட பேசுனா எல்லாம் தெரியும். அவரு நம்பர் இருக்கா அண்ணா?” என்று கேட்டாள்.
“இருக்கு கவி. அவருக்கிட்ட கண்டிப்பா பேசணுமா? பழச எல்லாம் கிளறி அவரக் கஷ்டப்படுத்த வேண்டாமே…”
“ராஜேஷ் நமக்கு அவங்க லைப் பத்தி இந்த டைரி படிச்சு தான் தெரியும். ஆனா ரேணுவோட அப்பாவுக்குக் கண்டிப்பா ரேணு கௌதம் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்குமே… நம்ம சும்மா விசாரிக்குற மாதிரி விசாரிச்சு ரேணு கிட்டப் பேசுவோம்”
“நானே பேசுறேன் அண்ணா. நம்பர் தாங்க”
அரை மனதாகத் தன் மொபைலில் அவர் நம்பரை டயல் செய்து அவளிடம் கொடுத்தான்.
நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டாளே தவிர என்ன பேசுவதென்று கவிதாவிற்கும் தெரியவில்லை.
மூன்று ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ” என்று நைந்த ஆணின் குரல் கேட்க ஒரு நொடித் தயங்கி “ஹலோ என் பேரு கவிதா. ரேணு இல்லம் நாங்க தான் உங்கக்கிட்டேருந்து வாங்கினோம். உங்க வீட்டப் பத்திப் பேச தான் சார் கூப்பிட்டேன்” என்று ஒரு வழியாகக் கூறி முடித்தாள்.
“அந்த வீட்டப் பத்தி என்னம்மா? எவ்வளவோ சந்தோஷமா என் பொண்ணு வாழ்ந்த வீடு. என்னவெல்லாமோ ஆயிடுச்சு. இப்படி எல்லாம் ஆகும்னு நாங்க நினைக்கவே இல்ல”
கவிதா மனதை திடப்படுத்திக் கொண்டு “சார்… உங்க பொண்ணு… ரேணு…” என்று பேச ஆரம்பித்ததும் “இருக்கா மா…” என்று கூறி இணைப்பைத் துண்டித்தார் அந்தப் பெரியவர்.
கைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் மீனா என்னவென்று கேட்க “விடு மீனா. பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்காரு” என்று மட்டும் கூறினாள்.
“சரி விடு கவி. நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்ல மா…” என்று அவன் கூற அடுக்களையில் பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது.
அவன் வேகமாகத் திரும்பிப் பார்க்க கவிதா மீண்டும் அழ ஆரம்பித்தாள். “என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா… நான் என்ன பண்ணுவேன்?” ரோஷனை அவசரமாக அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள்.
“கவிதா நீ முதல்ல அழறத நிறுத்து…” என்று ராஜேஷ் கூறிய நேரம் “யாரு பா என் பொண்டாட்டிய அழ வெக்குறது?” என்று கார்த்திக்கின் குரல் பின்னாலிருந்து கேட்டது.
“கார்த்திக்” ரோஷனுடன் சென்று அவனைத் தாவி அணைத்துக் கொண்டவள் இன்னும் பெரிதாக அழத் துவங்கினாள்.
விஷயம் பெரிது என்று நினைத்தவன் மகனுடன் சேர்த்து மனைவியை அணைத்து இந்த நேரத்தில் ராஜேஷும் மீனாவும் எதற்காகத் தன் வீட்டிற்கு வந்தார்கள் என்று யோசித்தான்.
ராஜேஷ் மீனாவிடம் போ என்று கண்ணைக் காட்டியவுடன் அவள் சென்று “கவி… நீ முதல்ல வந்து சாப்பிடு…” என்று கூறி அவளை கார்த்திக்கிடமிருந்து பிரித்தாள்.
ரோஷனை தூக்க முயன்றபோது “நான் இவன யார்க்கிட்டயும் குடுக்க மாட்டேன்…” என்று கூறி அவனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
“சரி சரி… வா” அவளை டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றாள்.
பெண்கள் அனைவரும் சென்றதும் நடந்தவற்றை நண்பனிடம் கூறினான்.
“நம்ம வீட்ட வாங்கினது ரேணுவோட அப்பாக்கிட்டேருந்தா? இப்படியெல்லாம் நடக்குதுன்னு கவி என்கிட்ட சொல்லவே இல்ல”
“விடு கார்த்திக்… இது எல்லாம் இப்போ ரெண்டு நாளா தான்டா நடக்குது”
ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த இருவரின் எதிரில் வந்தமர்ந்தனர் மீனாவும் கவிதாவும்.
“இதெல்லாம் ரெண்டு நாளா நடக்குது… என்கிட்ட ஏன் கவி சொல்லல?”
“ஆமா எங்கேருந்து சொல்லுறது? போன் ஆ பண்ணி வெச்சிருந்தீங்க. இல்லன்னா மட்டும் எடுக்கவாப் போறீங்க? ஏதாவது ஒரு அவசரம்னா எப்படி உங்களக் கூப்பிடுறது?”
“இந்த வீட்டுக்கு ஒரு வாட்ச்மேன் இல்ல… இன்னும் அஞ்சு பேரு இருக்காங்க. உனக்கே தெரியாம வீட்ட சுத்தி ஆள் இருக்கு. அவங்கள மீறி காத்துக் கூட உள்ள வர முடியாது.
அன்னைக்கு உள்ள ஒரு பூனை வந்ததா செல்வம் சொன்னானே… இப்போ எங்க அது?” என்று அவன் கேட்கவும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் கவிதா.
“பூனை வந்துதுன்னு நீ சொன்னியா? இல்லையே… எனக்குத் தெரியும் கவி. வீட்டுக்குள்ள யாரு வரா போறான்னு…
நீ எங்கப் போனாலும் அவங்கள்ல ரெண்டுப் பேரு உன் பின்னாடி தான் வருவாங்க. இல்லன்னா டிரைவர் இல்லாம நீ தனியா கார் எடுக்க நான் விட்டிருக்க மாட்டேன். அது ராஜேஷ் வீட்டுக்காவே இருந்தாலும்.
அப்பறம் என்ன கேட்ட? அவசரம்னா எப்படிக் கூப்பிடறதுன்னா? நீ என்னைத் தான் கூப்பிடணும்னு இல்ல. இந்த வீட்டுலேருந்துப் போற ஒவ்வொரு காலும் என் மொபைல் வழியாதான் போகுதுன்னு உனக்குத் தெரியுமா?
நடுவுல ஒரு நாள் நீ மீனாகிட்டப் பேசுனதுல பதட்டம் தெரிஞ்சதால தான் வேலைய சீக்கிரமா முடிச்சுட்டு நாளான்னைக்கு வரேன்னு சொன்னேன். சொன்ன மாதிரியே வந்துட்டேன்.
இதெல்லாம் உன்ன வேவுப் பாக்க ஒண்ணும் செய்யல… நீ யாருக்கு கால் பண்ணுறன்னு மட்டும் தான் பாப்பேன். என்ன பேசுறன்னுக் கேக்க மாட்டேன். ஆனா என்னைக்கு இந்த டைரி பத்தி நீ நிறையச் சொல்ல ஆரம்பிச்சியோ அப்போலேருந்து நீயும் மீனாவும் பேசுறதக் கேட்டுட்டு தான் இருந்தேன்”
கவிதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனை நாளும் தன்னைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்காமல் தன்னைத் தனியாகத் தவிக்கவிட்டு வாரக்கணக்கில் வெளியூர் சென்றுவிட்டானே என்று வருத்தப்பட்டவளுக்கு இப்போது கணவன் பேசியதைக் கேட்டதும் இவனை இன்னும் நாம் முழுதாகப் புரிந்துக் கொள்ளவில்லையோ என்று தோன்றியது.
“இப்படிப் பக்கத்துல ரெண்டு பேரு இருக்கும்போது என்னையே வெறிச்சுப் பாத்தா என்னம்மா அர்த்தம்?”
அவன் கவிதாவை சகஜமாக்க நினைக்கிறான் என்று புரிந்து கொண்ட மீனா “நீ மட்டும் தான் பாப்பியா? நானும் பாப்பேன்…” என்று கூறி கன்னத்தில் கை வைத்து கணவனைப் பார்த்தாள்.
“உனக்கு வேற வேலையே இல்லையாடி?”
கவிதாவின் முகம் வாடியே இருந்தது.
“சரி நீங்க ரெண்டுப் பேரும் பேசிட்டு இருங்க. நாங்க வீட்ட ஒரு வாட்டி சுத்திப் பாத்துட்டு வரோம்”
கார்த்திக் எழ ராஜேஷும் அவனுடன் சென்றான். இருவரும் வீட்டின் ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தனர்.
மாடியில் புத்தக அலமாரி இருந்த அறையில் ஒரு சிறிய பீங்கான் பொம்மை விழுந்து உடைந்திருந்தது. நேற்று இரவு கவிதாவிற்கு இந்தச் சத்தம் தான் கேட்டிருக்கும் என்று முடிவு செய்தனர்.
பின் வீட்டின் வெளியே வந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தனர். எங்கும் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.
ஹாலில் வந்தமர்ந்த இருவரையும் பார்த்து “என்னாச்சு?” என்றாள் மீனா.
“எல்லாம் நார்மலா தான் மீனா இருக்கு…”
“எங்களுக்கு எதுவும் புரிய மாட்டேங்குது மீனு”
செண்பகம் வந்து அனைவரையும் சாப்பிட அழைக்கவும் மதிய உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
முடிக்க வேண்டிய அலுவலக வேலை சிலவற்றை ராஜேஷும் கார்த்திக்கும் கீழே இருந்த மற்றொரு அறையில் அமர்ந்து செய்து கொண்டிருந்தனர். மீனா கவிதாவை உறங்கச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை. ரோஷனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
“பேசாம போலீஸ் கம்ப்ளைன்ட் ஏதாவது குடுப்போமா? ஒருவேள இது யாரவது வேண்டாதவங்க செய்யுற வேலையா கூட இருக்கலாம்” கார்த்திக்கிடம் கூறியபடியே ரோஷனின் அறை உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.
யோசனையாக கவிதாவைப் பார்த்தவன் “உனக்கு நம்பிக்கை இருக்குன்னா வேணா ஏதாவது சாமியார் கூப்பிட்டுப் பார்க்க சொல்லலாமா கவி” என்று கேட்டான்.
சில நிமிடங்கள் அங்கே கனத்த அமைதி நிலவியது. யாரும் பேசவில்லையே தவிர மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
“நம்ம எதுக்கு யார்கிட்டயோ உதவிக் கேட்டுப் போகணும்? பேசாம கௌதம்கிட்டயே பேசிப் பாத்தா என்ன? என்ன எல்லாரும் இப்படிப் பாக்குறீங்க? நிஜமா தான் சொல்லுறேன்… ஓஜா போர்ட் கேள்விப்பட்டதில்லையா? ஆவி கூடப் பேசுறது?”
“இனம் இனத்தோட தான் சேரும்… பார்த்தியா கவி… உன் பிரண்ட்டுக்கு பேய் கூடப் பேசணுமாம்…”
“நான் சீரியஸா சொல்றேன்…”
“செய்யலாம்” சம்மதம் கூறி மனைவியின் புறம் திரும்பிய கார்த்திக் “நீ என்ன கவி சொல்லுற?” என்று கேட்டான். அவள் பயத்துடன் அவன் கை பற்றி அவன் தோளில் சாய்ந்து “ம்ம்” என்றாள்.
“அப்போ சரி. நான் ரெடி பண்ணுறேன். எனக்கு ஷார்ட் ஹான்ட் தெரியும். ஸ்பீடா எழுதுவேன். சோ நான் காயின் நகர நகர எழுதிக்குறேன். கார்த்திக் அண்ணா ராஜேஷ் நீங்க ரெண்டு பேரும் காயின்ல கை வைங்க. கவிதா நம்ம கூட உக்காந்துப் பாக்கட்டும். இதெல்லாம் செய்யுறப்போ ரோஷன் அந்த ரூம்ல இருக்க வேண்டாம். சோ அவன செண்பா கிட்ட…”
“நான் ரோஷன யாருக்கிட்டயும் குடுக்க மாட்டேன்”
“என்கிட்ட குடுக்க மாட்டியா கவி?”
அவள் அமைதியாக இருக்கவும் “ரோஷன் என்கூட இருக்கட்டும். நீங்க மாடில எங்க ரூம்ல எல்லாம் செய்யுங்க. நான் கீழ ரோஷன் பார்த்துக்குறேன். கவிதா காயின்ல கை வெப்பா…” என்றான் கார்த்திக். அவளும் சரியென்று தலையசைத்தாள்.
மீனா சென்று ஒரு பேப்பரில் ஏ பி சி டி … 123… எல்லாவற்றையும் கட்டங்களுக்குள் எழுதி நடுவில் இரண்டு வட்டங்கள் வரைந்து அதில் எஸ் மற்றும் நோ என்று எழுதி ஓஜா போர்ட் தயார் செய்தாள். மற்ற மூவரும் பார்வையாளர்களாகச் சுற்றி அமர்ந்து வேடிக்கைப் பார்த்தனர்.
செண்பகம் அவ்வபோது வந்து எட்டிப் பார்ப்பதும் அடுக்களைக்குள் சென்று வேலை செய்வதுமாக இருந்தாள். அவளுக்கும் பதட்டமாக இருந்தது.
‘இவங்க பாட்டுக்கு இப்படி ஆவி கூடப் பேசுறேன்னு சாதரணமா சொல்லிட்டு எல்லாம் செய்யுறாங்களே… ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா என்ன செய்வாங்க? கடவுளே… இவங்களுக்கு எதுவும் ஆகாம காப்பாத்துப்பா…’
“ஓகே எல்லாம் ரெடி”
“எல்லாம் சரி தான். ஆனா நாளைக்குக் காலைல முதல் வேலையா அந்த டைரி எரிச்சிடணும்… இனி அது நமக்குத் தேவையில்ல” என்றான் ராஜேஷ்.
“எது…” என்று பேசத் துவங்கிய மீனாவை இடையிட்டு “ராஜேஷ் சொல்லுறது தான் சரி. அது யாரோ ஒருத்தரோட வாழ்க்கை. நமக்குத் தேவ இல்லாதது. இன்னைக்கு ராத்திரியோட எல்லாம் முடியட்டும்” என்றான் கார்த்திக். அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானாள் மீனா.
“சரி கொஞ்ச நேரம் வெளில போய் உக்காரலாம் வாங்க. எதுக்கு இதப் பத்தியே பேசிட்டு இருக்கணும்?” அனைவரையும் தோட்டத்திற்கு அழைத்து வந்தான் ராஜேஷ்.
இன்று இரவு என்ன நடக்கும் எதை எதிர்ப்பார்த்து இதையெல்லாம் செய்கிறோம் என்று புரியாமல் அனைவரும் அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
இரவு உணவின்போதும் அந்த வீட்டில் அமைதியே நிலவியது. இனி தாமதிக்க வேண்டாம் என்று மேலே செல்ல முடிவெடுத்தபோது “நாங்க மேல இருக்கோம் கவி” என்று கூறி மீனாவுடன் மேலே சென்றான் ராஜேஷ்.
“சாரி கார்த்திக்… இத்தன நாள் உங்கள நான் சரியாப் புரிஞ்சுக்கவே இல்ல”
“நான் உன்னக் கண்டுக்கவே இல்லன்னு நெனச்சியா? போடி… நான் எப்படி கவி உன்னை மறந்துட்டு வேலைப் பார்ப்பேன்?” அவளை அணைத்துக் கொண்டான்.
ரோஷன் கார்த்திக்கின் கன்னத்தைக் கிள்ளினான். “நீங்க வாங்கடா செல்லம்…” என்று அவனைத் தூக்கிக் கொண்டான்.
ரோஷனின் கன்னத்தில் முத்தமிட்டவள் தயங்கி நிற்பதைப் பார்த்து “ஒண்ணும் ஆகாது. போ கவி” என்று தைரியம் சொல்லி மேலே அனுப்பி வைத்தான்.
அவர்கள் அறையில் கீழே அமர்ந்திருந்தனர் ராஜேஷும் மீனாவும். அவன் எதிரில் அமர்ந்து காயினில் கை வைத்தாள் கவிதா. மீனா ஒரு நோட்டும் பென்னும் வைத்து எழுதுவதற்கு ஆயத்தமாக அமர்ந்திருந்தாள்.
முதலில் தங்களின் இந்தச் செயலால் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மனதார வேண்டினர். பின் “இந்த வீட்டுல இருக்குறது யாரா இருந்தாலும் எங்க கூடப் பேச வாங்க… எங்கக்கூடப் பேசத் தயாரா இருந்தா காயின் நகத்துங்க” என்று மீனா கூறவும் சில நொடிகளில் அவர்கள் கை வைத்திருந்த காயின் நகர்ந்தது.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கவிதாவிற்கு அப்போதும் பயம் குறையவில்லை.
“உங்க பேரு என்ன?” என்று மீனா அடுத்தக் கேள்வியைக் கேட்டாள். காயின் நகரத் துவங்கியது.
ஆர்-ஈ-என்-யூ
முதலில் அதிர்ந்தது கவிதா தான். மீனாவை திரும்பிப் பார்த்தாள். அவளும் குழம்பி ராஜேஷை பார்த்தாள்.
அவன் “உங்க பேரு என்ன?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். காயின் மீண்டும் நகரத் துவங்கியது.
ஆர்-ஈ-என்-யூ
30
“ரேணு செத்துட்டாளா?”
கவிதா மெலிதாக முனுமுனுக்க மற்ற இருவரின் மனத்திலும் இதே கேள்வியே எழுந்தது. அடுத்து என்ன கேட்பதென்று தெரியாமல் ஓஜா போர்டை வெறித்தபடி அமர்ந்திருந்தனர்.
முதலில் சுதாரித்தது ராஜேஷ் தான். “நீங்க எப்படி இறந்தீங்கன்னு சொல்ல முடியுமா ரேணு”
காயின் நகர நகர மீனா எழுதத் துவங்கினாள். ராஜேஷிற்கும் கவிதாவிற்கும் இடையில் அமர்ந்திருந்தவள் எழுதுவதையே பார்த்தனர் மற்ற இருவரும்.
கௌதம் போனதுக்கு அப்பறம் இரண்டு மாசம் நரக வேதனை அனுபவிச்சேன். அதுக்கப்பறம் ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு மூன்று பேரு வந்தாங்க. இந்த வீட்ட விக்கப் போறீங்களான்னு கேட்டாங்க. அங்கிள் அப்படி எந்த ஐடியாவும் இல்லன்னு சொல்லி அவங்கள அனுப்பிட்டாங்க.
அந்தக் கேள்வியே எனக்குப் பயத்தக் கொடுத்துது. இந்த வீட்ட எப்படி விக்க முடியும்? இது என் கௌதம் உருவாக்கின வீடு. அவன் வாழ்ந்த வீடு. அவன் கடைசியா உயிர் போனதுக்கு அப்பறமும் இந்த வீட்டுக்கு தான் கொண்டு வந்தாங்க.
ஒரு வாரத்துக்குள்ள இப்படி நிறையப் பேரு வந்து கேட்க ஆரம்பிச்சாங்க. ஏற்கனவே கௌதம் போன துக்கத்துலேருந்து வெளி வராத நாங்க இந்தப் புதுத் தொல்லையால இன்னும் மனசொடிஞ்சுப் போயிட்டோம்.
அங்கிள் ஆன்ட்டி ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டி வந்துது. என்னை எப்படித் தனியா விட்டுட்டுப் போகுறதுன்னு யோசிச்சாங்க. முதல் நாள் மத்தியானம் கிளம்பிப் போயிட்டு அடுத்த நாள் காலையில வரதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்னு சொல்லி நான் தான் வற்புறுத்தி அனுப்பி வெச்சேன்.
அவங்களும் கிளம்பிப் போனதும் முதல் தடவையா இந்த வீட்டுல தனிமையை அனுபவிச்சேன். கௌதம் போட்டோவப் பார்த்துட்டே ஹால்ல உட்கார்ந்திருந்தேன்.
அப்போ வீட்டுக்குள்ள கும்பலா சிலர் நுழையுறதுத் தெரிஞ்சுது. யாருன்னு வெளிலப் போய்ப் பார்க்குறதுக்குள்ள அவங்கள்ல ரெண்டுப் பேரு வந்து என் தலையில கட்டையால அடிச்சாங்க. நான் மயங்கிட்டேன்.
முழிச்சுப் பார்த்தப்போ நான் எங்களோட இந்த ரூம்ல பெட்ல படுத்திருந்தது தெரிஞ்சுது.
அங்க இருந்ததுலயே குண்டா நிறையச் செயின் போட்டுட்டு இருந்தவன் என் எதிர்ல வந்து நின்னான். அவனைத் தவிரச் சுத்தி இன்னும் அஞ்சு பேரு இருந்தாங்க.
இந்த வீட்ட விக்கறீங்களான்னுக் கேட்டா இல்லன்னா சொல்லுவீங்கன்னுக் கேட்டு என்கிட்ட வந்தான். நான் பயந்துப் பின்னாடி நகர்ந்ததும் எனக்குத் தேவ நீ இல்ல. இந்த வீடுன்னு சொன்னான்.
இந்த வீடு என் கௌதம் கட்டுனது. குடுக்க முடியாதுன்னு கத்தினேன். இதே மாதிரி தான் அவனும் பேசுனான். இந்த வீடு என் ரேணுக்காக கட்டுனது. குடுக்க முடியாதுன்னு. அநியாயமாப் போய்ச் சேர்ந்துட்டான்னு அவன் சொன்னப்போ எனக்கு யாரோ ஆயிரம் ஊசி எடுத்து என் நெஞ்சுலக் குத்தின மாதிரி இருந்துது.
என் கௌதம் இந்த வீட்டால தான் உயிர விட்டானா? எனக்காகத் தான் உயிரை விட்டானான்னு நெனைக்க நெனைக்க என்னோட ஒவ்வொரு செல்லையும் நான் வெறுத்தேன்.
அவன் போனதுக்கு அப்பறம் இந்த வீட்ட எழுதி வாங்கலாம்னு ட்ரை பண்ணப்போ தான் தெரிஞ்சுது வீடு உன் பேருல இருக்குன்னு. அவனுக்குப் பதிலா உன்னப் போட்டிருக்கணும்னு சொன்னான்.
சாக வேண்டியது நான் தான்னு தோணுச்சு. இந்த வீடு என் பேருல இருக்குன்னு எனக்கு அப்போ தான் தெரிஞ்சுது.
இந்த வீட்ட விக்க முடியாதுன்னு சொல்லி என் கௌதம் உயிரையே விட்டான். நான் எப்படி இந்த வீட்டக் குடுக்க முடியும்? அவன் எவ்வளவு மிரட்டியும் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.
இதுக்கு மேலயும் இவக்கிட்டப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல. மாட்டி விட்டுடுங்கடான்னு சொன்னான். ரெண்டு பேர் சேர்ந்து ஒரு டேபிள் தூக்கிட்டு வந்து போட்டாங்க. ஒருத்தன் அதுக்கு மேல ஒரு சேர் எடுத்துட்டு வந்து வெச்சான். ஒருத்தன் அதுல ஏறி நின்னு மேல இருக்க வளையத்துலக் கயறு கட்டினான்.
என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சுது. என் கண்ணு முன்னாடி என் சாவுக்கான ஏற்பாடு செஞ்சாங்க. எனக்கு எதிர்த்து எதுவும் செய்யத் தோணல.
என் மனசுல இருந்ததெல்லாம் என்னால தான் என் கௌதம் செத்தான்.
ரெண்டு பேர் சேர்ந்து என்னை அந்த சேர் மேல ஏத்தி நிக்க வெச்சாங்க. கடைசியா ஒரு தடவ என்கிட்டக் கேட்டுப் பாத்தாங்க. நான் மறுத்துட்டேன். எனக்குச் சாகுறதப் பத்தி எந்த வருத்தமும் இல்ல.
என் வயித்துக்குள்ள தெரிஞ்ச அசைவுல தான் என் குழந்தை ஞாபகம் வந்துது. கௌதமோட உயிர். ஆனா அப்போ என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு தெரியும்.
நான் நின்னுக்கிட்டு இருந்த சேர அவன் எடுத்தப்போ என் வயித்த பிடிச்சுக்கிட்டே கௌதம் பத்தி தான் நெனச்சேன்.
என் உயிர் பிரிய எவ்வளவு நேரம் ஆச்சோ தெரியாது. காலைல வீட்டுக்கு வந்த அங்கிள் ஆன்ட்டி நான் கௌதம் போனதால தற்கொலை செஞ்சுக்கிட்டதா நெனைச்சாங்க.
என்னோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் அப்படித் தான் சொல்லுச்சு.
என் பொணத்தக் கொண்டு வந்து நடு ஹால்ல வெச்சிப்போ எங்கம்மா ரெண்டு நிமிஷம் அமைதியா அசையாம என் முகத்தைப் பாத்தாங்க. அப்பறம் “ஐயோ”னு பெருசா அழ ஆரம்பிச்சாங்க.
ரெண்டு  நாளைக்கு அந்த அழுக நிக்கவே இல்ல. நான் பிறந்ததுலேருந்து நடந்ததெல்லாம் சொல்லிப் புலம்பி அழுதாங்க.
ஒருவேளை நான் அழுதப்போல்லாம் கௌதம்கு இப்படிதான் கஷ்டமா இருந்துருக்கும்னுத் தோணுச்சு.
கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி இல்லாம வெரிச்சப் பார்வையோட எங்கப்பா என் பொணத்துக்குக் கொல்லி வெச்சாங்க.
அங்கேருந்து இந்த வீட்டுக்கு வந்துட்டேன். என்னால இங்கேருந்துப் போக முடியல. ஒவ்வொரு இடத்துலயும் என்னோட கௌதம் தான் தெரிஞ்சான்.
நீங்க இந்த வீட்டுக்கு வந்தப்போ உங்க கையில குழந்தையப் பார்த்ததும் எனக்கு என்னோட குழந்தை ஞாபகம் வந்துடுச்சு. அதான் அவனோட விளையாடுவேன்.
வெகு நேரம் ஆகி விட்டதால் “நம்ம போய் அம்மாவ பார்ப்போமா செல்லம்?” என்று ரோஷனிடம் கேட்டு மேலே தங்களறைக்கு வந்தான் கார்த்திக்.
அங்கு இன்னும் அவர்கள் முடிக்கவில்லை என்று தெரிந்துத் திரும்பிப் போக எத்தனித்தவனை “வாங்க கார்த்திக்” என்றழைத்தாள் கவிதா.
இவ்வளவு நேரம் ஆர்ப்பாட்டம் செய்தவளாத் தன்னை உள்ளே அழைக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு உள்ளே வந்து மீனாவின் எதிரில் அமர்ந்து ரோஷனை மடியில் அமர்த்திக் கொண்டான்.
மீனா கண்களைத் துடைத்து தான் எழுதிக் கொண்டிருந்த நோட்டை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கியவன் முதலில் ரேணு என்று எழுதி இருந்ததைப் பார்த்து அதிர்ந்து நிமிர்ந்தான்.
ராஜேஷ் ஆம் என்று தலை அசைக்கவும் முழுவதையும் வேகமாக வாசித்து முடித்ததும் “அப்போ பழி வாங்க தான் நீங்க இங்க இருக்கீங்களா ரேணு?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.
இல்ல. நான் எப்படிச் செத்தேன்னு யாருக்கும் தெரியாது. அது ஒருத்தருக்காவது தெரியணும்னு நெனச்சேன். எனக்கு நான் நினைக்குறத யார்கிட்டயாவது சொல்லணும். எப்பவும்.
எனக்குப் பழி வாங்கணும்னு ஒரு எண்ணம் எப்பவும் வரல. என்னை மிரட்டின அந்த ஆள் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். அவன் ஒரு கார் அக்ஸிடென்ட்ல செத்துட்டான்.
சிறிது நேரம் அமைதியாக எழுதுவதை நிறுத்தி யோசித்த மீனா “நீ கௌதம தேடலையா?” என்று கேட்டாள்.
கௌதம் கூடத் தான் நான் இத்தனை நாள் இருந்தேன். ரோஷன் தான் என் கௌதம்.
அனைவரும் ரோஷனை பார்த்தனர்.’என் பையனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?’கவிதாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கார்த்திக் ரோஷனை இறுக்கி அணைத்தான். இப்போது ராஜேஷின் கண்களும் கலங்கத் துவங்கின.
காயின் நகரத் துவங்கவே எல்லோரின் கவனமும் அதன் பக்கம் திரும்பியது.
நான் இத எல்லாம் சொல்ல தான் இத்தன நாள் முயற்சி செஞ்சேன். இப்போ சொல்லிட்டேன். இனி நான் இங்க இருக்க மாட்டேன். உங்க யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது.
மீனா இன்னும் பெரிதாக அழத் துவங்கினாள். “என்னால தான் இதெல்லாம். நான் தான் அந்த டைரி எடுத்தேன். அதப் படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம் தான இப்படி எல்லாம் ஆச்சு. பாவம் ரேணு… எப்படி எல்லாம் துடிச்சிருப்பா… இதெல்லாம் நான் டைரி படிக்காம இருந்திருந்தா நம்மக் கேட்டிருக்கவே வேண்டாம்”
கார்த்திக் ராஜேஷின் தோளில் கை வைத்து போ என்று கண்ணசைத்தான். அவன் எழுந்து அவளையும் எழுப்பி வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
ரோஷனை கவிதா வாங்கிக் கொள்ளவும் கார்த்திக் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு அவள் அருகில் வந்தான்.
“என் குழந்தைக்கு இவ்வளவு பெரிய அக்ஸிடெண்டா?” மகனை அணைத்து இன்னும் பெரிதாக அழுதாள் கவிதா.
“தப்புப் பண்ணுற கவி. நம்ம எல்லாருக்கும் ஒரு பாஸ்ட் இருக்கும். அது போன ஜென்மமா கூட இருக்கலாம். அதுக்காக அத யோசிச்சுட்டே இந்த வாழ்க்கைய வாழ முடியுமா?
முதல்ல இவன கௌதமா பாக்குறத நிறுத்து கவி. இவன் நம்ம பையன். ரோஷன். லைப்ல எந்த ஒரு தருணத்துலயும் ரேணு கௌதம் பத்தி நீ இவன்கிட்டப் பேசக் கூடாது. இவன் ரோஷனா மட்டும் தான் வளறணும்”
“பேச மாட்டேன் கார்த்திக்” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.
“இந்த அலமாரில இருந்து தான் ராஜேஷ் அந்த டைரி எடுத்தேன்” அந்த அறைக்குள் வந்ததும் மீண்டும் பெரிதாக அழ ஆரம்பித்தாள் மீனா.
ராஜேஷ் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு “லூசு மாதிரிப் பேசாத மீனு. நீ டைரி எடுக்கலன்னாலும் இதெல்லாம் நடந்திருக்கும். இதுக்கு எதுக்கு நீ இப்படி பீல் பண்ணுற?” என்று கேட்டான்.
அவன் கூறுவது எதையும் காதில் வாங்காமல் தன் போக்கில் புலம்பிக் கொண்டே இருந்தாள். அவன் குரலை உயர்த்தி அதட்டியும் எந்தப் பயனும் இல்லை.
ஒரு நொடி அமைதியாக இருந்தவன் அவள் தோளைப் பற்றி அருகில் இழுத்து அவள் இதழை தனதால் மூடினான்.
நீண்ட நேரத்திற்குப் பின்னே அவளை விடுவித்தவன் “எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணு மீனு. இனி ரேணு கௌதம் பத்தி நீ எப்பயும் பேசக் கூடாது. முக்கியமா ரோஷன் கிட்ட. நடந்த எதுக்கும் நீ கரணம் இல்ல” என்று கூறவும் அவளும் “ப்ராமிஸ் ராஜேஷ்” என்று கூறி அவனை அணைத்துக் கொண்டாள்.
செண்பகம் நீண்ட நேரமாக அடுக்களைக்குள் நடைப் பழகிக் கொண்டிருந்தாள். கார்த்திக் கீழேயிருந்தவரை ஓரளவு அமைதியாக இருந்தவள் அவனும் மேலே சென்று இவ்வளவு நேரமாகிவிடப் பதறத் துவங்கினாள். என்ன ஆயிற்று என்று எதுவும் தெரியாமல் மண்டை வெடித்தது.
கார்த்திக்கும் கவிதாவும் ரோஷனுடன் அறைக்குள் நுழைந்தபோது மீனா ராஜேஷின் நெஞ்சில் தலை வைத்து அவனைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
“அம்மா தாயே… உள்ள ஆள் வரது கூடத் தெரியாம இப்படியாக் கொஞ்சிக்குவீங்க?”
“போங்கண்ணா… என் புருஷன் நான் கொஞ்சுவேன்…” அவனை மேலும் இறுக அணைத்தாள் மீனா.
“உனக்குப் பொறாமைடா…”
“அப்படியா? இந்தா பிடி…” ரோஷனை அவன் கையில் திணித்து கவிதாவை அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
“ரோஷன் என் செல்லம்டா… இல்லடா குட்டி?” என்று அவனிடம் ராஜேஷ் கேட்கவும் “பா…” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
“சரி சரி வாங்க கீழப் போகலாம். பாவம் செண்பகம் தனியா இருப்பா” என்று கவிதா கூறியதும் தான் மற்றவர்களுக்கு அவளின் நினைவு வந்தது.
அவர்கள் அனைவரும் கீழே இறங்கி வருவதைக் கண்ட செண்பகம் வேகமாக ஓடி வந்தாள். ஹாலில் அமர்ந்து மேலே நடந்தவற்றைச் சுருக்கமாக விளக்கினர்.
அவள் அதில் ஏகப்பட்ட சந்தேகம் கேட்கவே “உனக்கு ஏதாவது டௌட் இருந்தா வா… திரும்ப ரேணுவ கூப்பிட்டுப் பேசுவோம்” என்று ராஜேஷ் கூற “ஐயோ வேணாம். என்க்கு எந்தச் சந்தேகமும் இல்லையே…” என்று பல்டி அடித்தாள்.
“ரொம்ப லேட் ஆகிடுச்சு. இதுக்கு மேல நீங்க கிளம்பிப் போக வேண்டாம் ராஜேஷ். இங்கயே தூங்குங்க”
“கீழ ரோஷன் ரூம்ல படுத்துக்குறோம்டா…” மீனாவுடன் எழுந்து சென்றான் ராஜேஷ்.
“நீ போய்த் தூங்கு செண்பா” என்று கூறி கார்த்திக்குடன் மேலே சென்றாள் கவிதா.
“ரேணுவோட அப்பாக்கிட்ட அவள பத்தி கேட்டப்போ இருக்காம்மான்னு சொன்னாரு கார்த்திக். நான் இத எதிர்ப்பார்க்கல…”
“பொண்ணு இறந்துட்டான்னு சொல்ல மனசு வராம எங்களோடதான் இருக்கான்னு சொல்லியிருப்பாரு கவி. நானும் இத எதிர்ப்பார்க்கல”
ரோஷனை அருகில் படுக்க வைத்து உறங்க வைத்த கவிதாவை அவளுக்கு மறு பக்கம் படுத்து அணைத்துக் கொண்டான் கார்த்திக்.
“இப்போ மட்டும் என்ன பாசம் பொங்குது?”
“போடி என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான். கொஞ்ச நாள் விட்டுட்டுப் போனா யார் யாரோ வந்து பக்கத்துலப் படுத்துக்குறாங்க” அவளை மேலும் நெருங்கிப் படுத்தான்.
“ரேணு எங்க இருந்தாலும் அவள தேடிக் கண்டுப்பிடிச்சு நான் என் பையனுக்குக் கட்டி வெப்பேன் கார்த்திக். நான் மானசீகமா ரேணுக்கு வாக்குக் குடுத்துட்டேன்”
“நீ மட்டும் இப்படி வாக்குக் குடுத்திருக்கன்னுத் தெரிஞ்சுது… உன் பையன் உன்ன அடிக்கப் போறான்டி… அவன் வளர்ந்து அவனே அவனோட ரேணுவ கண்டுப்பிடிச்சுடுவான்… நீ தூங்கு” மனைவி மகனுடன் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான் கார்த்திக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!