Poi poottu 7

Poi poottu 7

13
இன்னைக்குக் காலையிலயும் கௌதம் அதே தான் செஞ்சான். அவன் ஐ லவ் யூ ரேணு சொல்லும்போதெல்லாம் எனக்குச் சிலிர்க்குது.
பதிலுக்கு நானும் சொல்லணும்னு நினைக்குறேன். எது என்னைத் தடுக்குதுன்னு தெரியல. நான் தேவயில்லாம யோசிச்சுக் குழப்பிக்குறேனோன்னுத் தோணுது.
என்னால கௌதம்கிட்ட எத்தன நாளைக்கு என் மனச மறைக்க முடியும்னுத் தெரியல. அவன பார்த்தா அவன் கைப் பிடிச்சு பின்னாடியே போயிடணும்னு ஆசையா இருக்கு.
கிளாஸ் கவனிச்சாலும் ப்ரேக்ல, லஞ்ச்ல இதையே தான் யோசிச்சுட்டு இருந்தேன். சாயந்தரம் எங்க ப்ளாக் பக்கத்துலயே கௌதம் பார்த்தேன். எப்படியும் ஜென்னிக்கு பை சொல்லிட்டு என்கிட்ட ஐ லவ் யூ சொல்லப் போறான்னு யோசிச்சு அவனையே பார்த்துட்டு இருந்தேன்.
அவன் ஜென்னிக்கு பை சொன்னான். ஆனா என்னை அமைதியாப் பார்த்துட்டு அப்படியே போயிட்டான்.
எனக்கு ஒரு நிமிஷம் ரொம்ப ஏமாற்றமா இருந்துது. என்னடா இவன் நம்மக்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையேன்னு யோசிச்சு டக்குன்னு திரும்பிப் பார்த்தேன்.
கௌதம் சிரிச்சுட்டே தலைய ஒரு வாட்டி ஆட்டிட்டு நடந்து போக ஆரம்பிச்சான்.
“ஐயோ ச்ச இப்படியா மாட்டுவேன்… மாட்டுவேன்…”னு என் தலைல நானே ரெண்டு தடவ அடிச்சுக்கிட்டேன்.
ஜென்னி வண்டி எடுக்குற வரைக்கும் தலைல அடிச்சுக்குறதும்… முகத்த தேய்க்குறதும்… தலையைக் குனிஞ்சு கால உதைக்குறதுமா என்னென்னமோ செஞ்சேன்.
வண்டில உட்கார்ந்து காலேஜ் விட்டு வெளில வர வரைக்கும் கௌதம் எங்கயாவதும் இருக்கானான்னு திருட்டுத்தனமாப் பார்த்தேன். அவன் எங்கயும் இல்ல.
பாதித் தூரம் வந்ததுக்கு அப்பறம் வண்டி ஒட்டிக்கிட்டே ஜென்னி திரும்பி என்கிட்ட “நம்ம ஒரு நாலு கிலோமீட்டர் வண்டில வந்திருப்போம் ரேணு… இந்த நாலு கிலோமீட்டர்ல ஒரு நானூறு தடவையாவது நீ தலைல அடிச்சிருந்திருப்ப… என்னடி விஷயம்?”னுக் கேட்டா.
கௌதம் என்கிட்ட ஐ லவ் யூ சொல்லாத ஏமாற்றம்… நான் திரும்பிப் பார்த்தத அவன் பார்த்துட்டானே… என்ன நினைப்பான் அப்படிங்குற பயம்… தலைய ஆட்டி சிரிச்சானே… சரி… அவன் சிரிக்கல… ஆனா அவன் கண்ணு சிரிச்சத நான் பார்த்தேன்… அந்தக் கோவம்… ஐயோ நம்ம இப்படி வசமா மாட்டிக்கிட்டோமே அப்படிங்குற வெட்கம்… எல்லாம் சேர்ந்து ஜென்னிய கத்திட்டேன்.
“சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்காத ஜென்னி. அங்க என்ன நடந்துதுன்னு நீ பார்த்திருப்ப. அப்படியே நீ பார்க்கலன்னாலும் நம்ம ப்ளாக்லேருந்து பார்க்கிங் ஏரியா வரதுக்குள்ள அவன் இந்தப் பாச மலர் தங்கச்சிக்கு மெசேஜ் அனுப்பி இருப்பான். அப்பறம் எதுக்கு இப்படி ஒரு கேள்வி?”னு அவ தலையிலயே அடிச்சேன். ஜென்னி சிரிச்சுட்டே அமைதியா வந்தா.
வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் எத்தனை தடவ முகத்துல தண்ணிய அரஞ்சுக் கழுவினாலும் அய்யோ பார்த்துட்டானே பார்த்துட்டானேன்னு தான் மண்டைல ஓடுது.
தானா சிரிச்சுக்கிட்டு… யாராவது பார்த்தா கஷ்ட்டப்பட்டுச் சிரிப்ப அடக்கி… சொந்த வீட்டுல நடமாடுறதே இவ்வளவு பெரிய கஷ்டமா இருக்கும்னு நான் நெனச்சுக்கூடப் பார்க்கல.
-ரேணு
“அக்கா சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லவா?” என்று செண்பகம் கேட்க தலையை நிமிர்த்தி மணியைப் பார்த்தாள் கவிதா.
“சரி செண்பா. இரு காசு எடுத்துக் குடுக்குறேன். செல்வம் அண்ணாக்கிட்ட என்ன வேணுமோ வாங்கிட்டு வர சொல்லிடு. நான் அப்படியே ரோஷனுக்கு குடுக்க ஏதாவது செய்யுறேன்”
வேலைகளை முடித்த பிறகு “நான் தம்பிய தூங்க வெக்கவா கா?” என்று கேட்டாள் செண்பகம்.
“இல்ல செண்பா… எனக்கும் ரொம்பத் தூக்கம் வருது. நானே தூங்க வெச்சுக்குறேன்” என்றவள் அவனைத் தூக்கி மாடிக்குச் சென்றாள்.
மாலை எழுந்து ரோஷனுடன் தோட்டத்தில் சிறிது நேரம் உலவினாள். பின் அடுத்த நாள் மீனாவின் வீட்டிற்குச் செல்லும்போது எடுத்து செல்ல வேண்டிய அவனது ஆடைகள் மற்றும் இன்னும் தேவையான அனைத்தையும் ஒரு பையினுள் எடுத்து வைத்தாள்.
இரவு ரோஷனை அருகில் படுக்க வைத்துத் தட்டிக் கொடுத்தபடியே டைரி வாசித்தாள் கவிதா.
இன்னையோட கௌதம் என்னைப் பார்க்குறப்போ எல்லாம் ஐ லவ் யூ சொல்ல ஆரம்பிச்சு ரெண்டு வாரம் ஆகுது. திடீர்னு சொல்லுவான்… திடீர்னு சொல்லாம அமைதியாப் போவான்.
நான் இப்போ எல்லாம் உஷார் ஆயிட்டேன். என்ன தான் திரும்பிப் பார்க்கணும்னு தோனினாலும் மறந்துப் போய்… தெரியாம கூட நான் திரும்புறதில்ல. இதுக்கு நான் படுற பாடு இருக்கே… ஷ்ஷ்ஷ்…
இன்னைக்குச் சாயந்தரம் அவனைக் காணும். அவனைப் பார்க்காம காலேஜ்லேருந்து எப்படிக் கிளம்புறது? காலையிலப் பார்த்ததோட சரி.
ஜென்னி வண்டி எடுக்குற வரைக்கும் சுத்தித் தேடுனேன். அவன் எங்கயும் இல்ல. என்னமோ தோணுச்சு… அவக்கிட்ட இப்போ வந்துடுறேன்னு சொல்லிட்டு புட்பால் க்ரௌண்ட்கிட்ட போனேன். அங்கயும் அவன் இல்ல. ஏமாற்றத்தோட வீடு வந்து சேர்ந்தேன். ஆச்சரியம் என்னனா ஜென்னி எதுவுமே பேசல…
-ரேணு
இன்னைக்குக் காலையிலேருந்து கௌதம நான் பார்க்கல. லஞ்ச் வரைக்கும் பொறுத்த என்னால அதுக்கு மேல பொறுக்க முடியல. நேத்து காலையில அவனப் பார்த்தது. எனக்கு அவனைப் பார்த்தே ஆகணும் போல இருந்துது.
ஜென்னி கிட்ட அப்ஸர்வேஷன் நோட்ல சைன் வாங்கிட்டு வந்திடுறேன்னு சொல்லிட்டு கைல கெடச்ச ஒரு நோட்டத் தூக்கிக்கிட்டு கிளம்பினேன்.
“நம்மளோட எல்லா லேப்பும் நம்ம ப்ளாக்ல தான் ரேணு இருக்கு. வழித் தெரியாம வேற எங்கயாவதும் போயிடாத”னு சொன்னா.
கண்டுப்பிடிச்சுட்டா… இதெல்லாம் கரெக்டா கண்டுப்பிடிச்சுடுவாளே… கிளாஸ்ல ஸ்டாப் யாராவது எழுப்பிக் கேள்விக் கேட்குறப்போ ஹெல்ப் பண்ணுடின்னு சொன்னா அப்போ எல்லாம் மூளை வேலைப் பார்க்காது.
நான் கௌதம் ப்ளாக்குக்கு போகப் போறேன்னு மட்டும் கண்டுப்பிடிக்கத் தெரியும். இவளெல்லாம் ஒரு பிரண்ட்…
கௌதம் கிளாஸ்ல அவன் இல்லை. நொந்து போய்த் திரும்பி வந்தா என்னடி சைன் வாங்கிட்டியான்னு நக்கலா ஜென்னி கேட்டா.
உனக்கென்ன வந்துதுன்னு எரிஞ்சு விழுந்தேன். “கௌதம் அண்ணாக்கு பீவர். நேத்து மத்தியானமே வீட்டுக்குப் போயிட்டாங்க. இன்னைக்கு காலேஜ் வரல”னு சொல்லிட்டு எதையோ படிக்க ஆரம்பிச்சுட்டா.
எனக்கு கௌதம் பார்க்கணும்… அவன் எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்… அவன் கூடப் பேசவாவது செய்யணும்…
என்ன பண்ணுறதுன்னு யோசிச்சேன். ஜென்னி கிட்ட கௌதம் நம்பர் இருக்கு. ஆனா அத அவக்கிட்ட கேட்குறதுக்கு எனக்கு மனசு வரல.
என் நம்பர் வாங்கிப் பேசணும்னு கௌதம் நினைக்கலையே… இப்போ தேவயில்லாம நான் பேசி அவனைக் குழப்ப வேண்டாம்னு தோணுச்சு.
கிளாஸ் நடத்துன ஸ்டாப் எல்லாரையும் உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையான்னு புடிச்சுக் கத்தணும் போல இருந்துது.
ஈவ்னிங் வண்டி எடுக்குறதுக்கு முன்னாடி ஜென்னி என் கைல இருந்த மொபைல பிடுங்கி “கௌதம் அண்ணாக்கிட்ட காலையிலேருந்து நீ டல்லா இருக்கேன்னு சொன்னேன். அவங்க கிளாஸ் வரைக்கும் போய் அவங்களத் தேடுனன்னு சொன்னேன்…
அவள நான் கஷ்ட்டப்படுத்த மாட்டேன். அவளா வந்து உன்கிட்ட என் நம்பர் வாங்க மாட்டா… நீயே அவக்கிட்ட என் நம்பர் குடுன்னு சொன்னாங்க. உன் மொபைல்ல கௌதம்னு சேவ் பண்ணியிருக்கேன்”னு சொல்லி மொபைல திருப்பிக் குடுத்தா.
கௌதம்… எப்படி உன்னால என்னைச் சரியா கணிக்க முடியுது? எப்படி என்னை இந்த அளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்க? எப்பயும் எனக்குள்ள எழுற கேள்விகள் தான்…
அமைதியா வீடு வரைக்கும் வந்தேன்.
இப்போகூட கௌதமோட நம்பர எடுத்து வெச்சு வருடிட்டே தான் இருக்கேன். பேச தைரியம் வர மாட்டேங்குது…
-ரேணு
இன்னைக்கும் கௌதம் வரல. என் வாழ்க்கையே இருண்டு போன மாதிரி இருக்கு. ஜென்னி கிட்ட எதுவும் கேட்கல. ஒருவேளை அவனுக்கு இன்னும் உடம்பு சரி ஆகலையோ? சீக்கிரம் சரியாப் போகணும்…
-ரேணு
காலை சீக்கிரம் எழுந்து கிளம்ப வேண்டும் என்பதால் அதற்கு மேலும் படிக்காமல் டைரியை மூடி எடுத்து வைத்து ரோஷனை அணைத்தபடி படுத்தாள் கவிதா.
நல்ல உறக்கத்தில் இருந்தவள் ரோஷன் அசையவும் விழித்துப் பார்த்தாள். அவன் குப்புறக் கவிழ்ந்துப் படுத்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
“டேய் ஏன்டா இப்படி ராத்திரில முழிச்சுக்குற? தூங்குங்கடா செல்லம்” என்று கூறி அவனைத் தூக்கித் தன் மேல் கிடத்தி தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.
காலை எழுந்து வேகமாகக் கிளம்பினாள். செண்பகமும் தயாராகி விடவும் வெளியே வந்தவள் செல்வத்திடம் “நாங்க சாயந்திரம் வந்துடுவோம்ணா. பார்த்துக்கோங்க” என்று கூறி முன் தினம் பேக் செய்த பையை கார் டிக்கியில் வைத்து வீட்டை பூட்டி காரை எடுத்தாள். ரோஷன் சென்பகத்துடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
மீனாவின் வீட்டில் ராஜேஷும் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
“ஆபீஸ் போகலையா அண்ணா?”
“குட்டி பையன பார்க்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” அவள் கையிலிருந்து ரோஷனை வாங்கி உள்ளே சென்றான்.
அவன் முதுகை வெறித்தபடியே “வந்தவங்கள வாங்கன்னு கூடச் சொல்லாம அவன மட்டும் கொஞ்சிக்கிட்டே போறதப் பார்த்தியா?” என்றாள் மீனா.
“இது என் அண்ணா வீடு… இங்க எனக்கு எந்த வரவேற்பும் தேவ இல்லையாக்கும்” என்று கூறி மிடுக்குடன் உள்ளே நடந்து சென்றாள் கவிதா.
“இவங்களோட சேந்து சேந்து நீயும் கெட்டுப் போறடி… சரி டைரி எங்க?”
“விட மாட்டியே… இந்தா…”
சோபாவில் ரோஷனுடன் அமர்ந்திருந்த ராஜேஷ் வேகமாகத் திரும்பி “ஐயோ அத அவ கையில குடுத்துட்டியா? இவ இம்சை தாங்க முடியல மா… சீக்கிரம் படிச்சு நீயே அவளுக்குச் சொல்லிடு மா” என்றான்.
மீனா அவனை முறைக்க ராஜேஷ் ரோஷனுடன் விளையாடுவதாகப் பாவனைச் செய்து திரும்பிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அவன் அலுவலகம் கிளம்பிச் சென்று விட, செண்பகம் காமாட்சி அம்மாளுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.
கவிதா ரோஷனின் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து விட்டு மீனாவிடம் தான் படித்தது வரை கூறினாள்.
“கவி ப்ளீஸ் ப்ளீஸ்… இப்போ கொஞ்சம் படிச்சு காட்டுடி”
“முடியாதுன்னு சொன்னா விடவா போற? எடு படிக்குறேன்”
மீனா அவள் கையில் டைரியை கொடுக்கவும் விட்ட இடத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்தாள் கவிதா.
இன்னைக்குக் காலையில கௌதம பார்க்கலன்னதும் ஜென்னி கிட்ட அவன பத்தி கேட்டுட்டேன். அவளுக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னா. இவ உண்மைய சொல்லுறாளா? இல்ல பொய் சொல்லுறாளான்னு எனக்குத் தெரியல.
இப்போ வீட்டுக்குத் திரும்பி வர வரைக்கும் ஜென்னி எதுவும் சொல்லல. இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது. அவனுக்கு கால் பண்ணப் போறேன்… அவன் என்ன நெனச்சாலும் சரி… அவன் நல்லா இருக்கானான்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்.
இன்னுமே எனக்குப் படப்படப்பு அடங்கல. இத எழுதுறப்போ கை நடுங்குது… எப்படியோ தைரியத்த வரவழைச்சு அவனுக்கு கால் பண்ணிட்டேன்.
அவன் எடுத்து ஹலோ சொன்னதும் எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. அவன் எப்படி இருக்கான்னுத் தெரிஞ்சுக்காம வெக்கவும் மனசு வரல.
ரெண்டு நிமிஷம் அவனும் பேசல… நானும் பேசல… எனக்கு வேர்க்கவே ஆரம்பிச்சுடுச்சு.
“பேசு ரேணு”னு கௌதம் சொன்னதும் என் இதயம் துடிக்குறது என் காதுக்குக் கேட்டுச்சு.
வாயத் திறந்தேன். ஆனா வார்த்தை வரல.
கௌதமே பேச ஆரம்பிச்சான். அவன் குரல இவ்வளவு மென்மையா நான் கேட்டதில்ல.
“நீ தான் கூப்பிட்டன்னு எனக்கு எப்படித் தெரியும்? அதான? நான் ஜென்னி நம்பர் வாங்குறதுக்கு முன்னாடி அவக்கிட்ட உன் நம்பர் தான் வாங்குனேன்.
அப்போ ஏன் இத்தன நாள் பேசல? அதான? நான் பேசுனா நீ கோவப்படுவியோன்னு யோசிச்சு பேசல.
இப்போ நான் எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குத் தான ரேணு போன் பண்ண? வைரல் பீவர். டையர்டா இருக்கு. பீவர் சரியாப் போச்சு. எனக்கு உன்ன பார்க்காம இருக்குறதுக் கஷ்ட்டமா இருக்கு ரேணு. ஆனா இந்தக் கொஞ்ச நாள்ல உன்ன நீயே புரிஞ்சுப்பன்னு நெனச்சு தான் நான் காலேஜ் வரல”னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்.
எனக்குத் தலையே சுத்திடுச்சு… இவன் எப்படி என் மனசுல இருக்க எல்லாத்தையும் வார்த்த மாறாம அப்படியே சொல்லுறான்?
கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் “நானே உனக்கும் சேர்த்து பேசிட்டு இருக்கேன் ரேணு… ஏதாவது பேசு… இந்த நாலு நாள் உன்ன பார்க்காம எவ்வளவு தவிச்சேன்னு எனக்குத் தான் தெரியும். நீ என்னைப் பத்தி பேச வேண்டாம்… நம்மளப் பத்தி பேச வேண்டாம்… கொஞ்ச நேரம் ஏதாவது பேசு ரேணு ப்ளீஸ்”னு சொன்னான்.
எனக்கு அப்பயும் அழுக தான் வந்துது.
அவனே உடம்பு சரியில்லாம முடியாம இருக்கான். இவ்வளவு கெஞ்சுனதுக்கு அப்பறமும் நான் எதுவும் பேசாம வெச்சா எவ்வளவு பீல் பண்ணுவான். ஏதாவது பேசணும்னு தோணுச்சு.
“மாத்திர சாப்பிட்டியா?”னு கேட்டேன். “சாப்பிட்டேன்”னு சொன்னான்.
“ரெஸ்ட் எடு”ன்னு சொன்னேன். “நாள் பூரா தூங்கிட்டு தான் ரேணு இருக்கேன்”னு சொன்னான்.
அதுக்கப்பறம் என்ன பேசுறதுன்னு எனக்குத் தெரியல. இதுக்கே நாக்கு வறண்டுப் போச்சு…
கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு “உடம்பப் பார்த்துக்கோ கௌதம்”னு சொன்னேன். “ம்ம் பை ரேணு”னு சொல்லிட்டு வெச்சுட்டான்.
பதட்டம் இல்லாம… பயம் இல்லாம… எந்த மேல் பூச்சும் இல்லாம… எப்படி இவனால இவ்வளவு இயல்பா என்கிட்ட பேச முடியுது?
இதுக்கு அப்படியே நேர்மாறா என்னால ஏன் அவன்கிட்ட பேசவே முடியல?
-ரேணு
“ம்ம்” என்ற ரோஷனின் குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்தாள் கவிதா. அப்போது தான் மீனாவும் கவனித்தாள்.
ரோஷன் தன் கையில் இருந்த பொம்மையைக் கீழே வைத்து விட்டு மிகுந்த ஆர்வத்துடன் தாயின் முகத்தையும் அவள் கையிலிருந்த டைரியையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“டேய் அவ்வளவு இண்டரெஸ்டிங்கா கதை கேட்டுட்டு உட்கார்ந்திருக்கியா நீ? தங்கத்துக்கு என்னடா புரிஞ்சுது?” என்று கேட்டு அவனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் மீனா.
அவள் மடியில் அமர்ந்ததும் தன் வலது கையை நீட்டி கவிதாவின் கையில் இருந்த டைரியை பிடித்து “ம்ம்” என்றான்.
“என்னடி இவன்? நமக்கு மேல ஆர்வமா இருக்கான்… இது உங்க ரைம்ஸ் புக் இல்லடா செல்லம்… இதுல என்னடா புரிஞ்சுது உனக்கு?”
“நம்ம கூடச் சேர்ந்தா இப்படித் தான் ஆவான்… இத மட்டும் ராஜேஷ் பார்க்கணும்… நீங்க படுத்துறது பத்தாதுன்னு புதுசா ஒரு ஆள ரெடி பண்ணுறீங்களான்னு கேப்பாங்க…”
14
  டைரியை மூடி வைத்து விட்டு ரோஷன் கீழே போட்டிருந்த பொம்மையை எடுத்து கவிதாவும் மீனாவும் அவனுடன் விளையாட ஆரம்பித்தனர். அவனோ அது எதையும் கவனிக்காமல் சிணுங்கி அழ ஆரம்பித்தான்.
மீனாவின் மடியிலிருந்து இறங்கித் தவழ்ந்துச் சென்று கவிதாவின் மடியிலிருந்த டைரியைப் பிடித்து அவள் முகத்தையே பார்த்துத் தேம்ப ஆரம்பித்தான்.
“காரியத்துல கண்ணா இருக்கான் பாரு உன் பையன்…”
“இப்போ என்ன மீனா பண்ணுறது?”
“ஆமாடி… அப்படியே உன் பதினோரு மாச பையனுக்கு இதெல்லாம் புரிஞ்சுடப் போகுது… படி படி… அவன் அமைதியா இருந்தாப் பத்தாதா?”
“ஹ்ம்ம்… என்னவோ போ…” டைரியை கையில் எடுத்துப் பிரித்தாள். அதைக் கண்ட ரோஷன் மீண்டும் தவழ்ந்துச் சென்று மீனாவின் மடியில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தான்.
“பாத்தியா உன் புத்திரன? என்ன ஒய்யாரமா சாஞ்சு உக்காந்து கதை கேட்க ரெடி ஆயிட்டான்?”
ஐயோ இன்னைக்கு சனிக்கிழமை. எந்த வாரமும் இல்லாம இந்த சனிக்கிழமையா காலேஜ் லீவ் விடணும்? நேத்து கௌதம் கிட்ட பேசுனதுலேருந்து நான் நானாகவே இல்ல… அவனப் பார்த்ததுலேருந்தே நான் நானா இல்ல தான். இப்போ பைத்தியம் பிடிக்குது. காலேஜ் இருந்திருந்தாலாவது அவனப் பார்த்திருப்பேன்.
நேத்து அவன் கூட போன்ல பேசுனதுல கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. இன்னைக்கும் கால் பண்ணா ஏதாவது நினைப்பானா? ச்ச இல்ல… அது எப்படி என் கௌதம் என்னைத் தப்பா நினைப்பான்?
சரி இப்படிப் பண்ணலாம்… மூனு ரிங் குள்ள அவன் எடுத்துட்டா பேசுவேன்… இல்லன்னா திரும்ப கால் பண்ண மாட்டேன்.
முதல் ரிங்குலயே எடுத்துட்டான். அவன் குரல்ல அவ்வளவு சந்தோஷம் இருந்துது. “சொல்லு ரேணு. இப்போ தான் குளிச்சுட்டு வந்து நீ கால் பண்ணியிருக்கியான்னுப் பார்க்க போன் எடுத்தேன். கரக்டா நீ கூப்பிடுற. நான் ஒண்ணுக் கேக்கவா?”னுக் கேட்டான்.
போன் எடுத்ததுலேருந்து அவன் குரல கேட்டு மெய் மறந்து உட்கார்ந்திருந்த என்னை அவனோட கேள்வி நினைவுலகத்துக்குக் கொண்டு வந்துச்சு.
“ம்ம்”னு மட்டும் சொன்னேன். “உனக்கு மேட் பார் ஈச் அதர் அப்படிங்குறதுல நம்பிக்கை இருக்கா?”னு கேட்டான்.
இதுவரைக்கும் அப்படி மத்தவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா உன் கிட்ட என்னைக்குப் பேச ஆரம்பிச்சனோ… என்னைக்கு நான் உன் கண்ணு முன்னாடி இல்லன்னாக் கூட என் மனசுல இருக்குறத உன்னாலக் கண்டுப்பிடிக்க முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேனோ… அன்னைக்கு அந்த வாக்கியத்துக்கான முழு அர்த்தம் விளங்குச்சு. எனக்கு நம்பிக்கை இருக்கு கௌதம்.
என்னால மனசுக்குள்ள அவன் கூடப் பக்கம் பக்கமா பேச முடியுது. ஆனா ஏன் வாயத் திறந்து ஒரு வார்த்தைக் கூடப் பேச முடியலன்னு தான் தெரியல. வழக்கம் போல அமைதியா இருந்தேன்.
“இந்தக் கேள்விக்கு உன்னோட பதில் என்னன்னு எனக்குத் தெரியும் ரேணு. நீ இப்போ சொல்ல மாட்டன்னும் தெரியும். என்னைக்கு உன் காதல என் கிட்ட சொல்லுறியோ அன்னைக்கு நீயே என் கிட்ட இதுக்கான பதில் சொல்லணும். சொல்லுவியா ரேணு?”னு கேட்டான்.
அவன் குரல்ல இருந்த ஏக்கம்… என்னால பதில் சொல்லாம இருக்க முடியல. ஆனா அப்போ நான் பதில் சொல்லியிருந்தா ஒண்ணு என் காதல சொன்னதுக்கப்பறம் சொல்லுவேன்னு சொல்லியிருக்கணும்… இல்ல கண்டிப்பா அது நடக்காதுன்னு சொல்லியிருக்கணும்…
ஒருவேளை இந்தக் கேள்விக்கான பதில் ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சொல்ல வேண்டி வந்திருந்தா தெளிவா ரெண்டுல ஒண்ணு சொல்லியிருப்பேன். இப்போ எனக்குத் தெரியல…
“என்னோட கேள்விக்கு நீ பதில சொல்ல யோசிக்குறதுலயே தெரியுது ரேணு… நீ கூடிய சீக்கிரம் சொல்லிடுவன்னு…” இப்படிச் சொல்லி நக்கலா ஒரு சிரிப்பு வேற சிரிச்சான்.
எனக்கு வந்த கோவத்துக்கு… அவன் மண்டைலயே அடிக்கணும் போல இருந்துது.
“நான் வெக்குறேன்” னு சொன்னேன். “ஏய் ரேணு… விளையாட்டுக்கு தான சொன்னேன். அதுக்குள்ள வெக்கணுமா? ஏதாவது பேசேன்… நான் மட்டுமே தான் பேசிட்டு இருக்கேன்”னு சொன்னான்.
“சாப்பிட்டியா?”னு கேட்டேன். கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு “உனக்கு என்கிட்ட பேசுறதுக்கு நிறைய விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரியும்… அத விடக் கேக்குறதுக்கு நிறையக் கேள்வி இருக்குன்னும் எனக்குத் தெரியும் ரேணு… என்கிட்ட எதுக்கு இவ்வளவு தயங்குற? எதுவா இருந்தாலும் வாயத் திறந்து பேசு ரேணு”னு சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னதாலையா இல்ல எனக்கே கௌதம்கிட்ட இருந்த தயக்கம் கொஞ்சம் குறைந்ததாலயா தெரியல…”எத்தன ரேணு சொல்லுற நீ?”னு வாய்விட்டுக் கேட்டுட்டேன்.
“அப்பாடா நான் எதிர்ப்பார்த்த முதல் கேள்வியும் இதான். எனக்கு உன் பேரு ரொம்பப் பிடிச்சுருக்கு. ரேணு… அழகா குட்டியா… உன் பேர விட உன்ன ரொம்பப் பிடிச்சுருக்கு…” இவன் இப்படிப் பதில் சொன்னா நான் என்ன தான் பேசுறது…
“ஓகே ஓகே நான் இப்படியெல்லாம் பேசல. நீ அடுத்தக் கேள்விக் கேளு… மறுபடியும் மௌன சாமியார் ஆயிடாதம்மா…”னு சொன்னான். எனக்குச் சிரிப்பு வந்துடுச்சு. வாயப் பொத்தி கஷ்ட்டப்பட்டு அடக்கிட்டேன்.
“ஏன் ரேணு… என் முன்னாடி அழதான் மாட்டேங்குற… எப்போ பாரு ஓடி போயிடுற… அட்லீஸ்ட் சிரிக்கவாவது செய்யலாம்ல? அதையும் ஏன் இப்படி வாயப் பொத்தி அடக்குற? அந்த அளவுக்குக் கூட நீ என்னை க்ளோஸா நினைக்கலையா ரேணு…
நமக்கு ரொம்ப க்ளோசா இருக்கவங்கள்ட தான் நம்மளோட துக்கத்த ஷேர் பண்ணிப்போம். ஆனா சந்தோஷம்… தெரிஞ்சவங்ககிட்டக்கூட ஷேர் பண்ணிப்போம்… என்னை உனக்குத் தெரிஞ்சவனா கூட நீ நினைக்கலையா ரேணு?”னு கேட்டான்.
அவனோட குரல்ல இருந்த வருத்தம்… அவன் கேட்ட விஷயம்… கேட்ட விதம்… என்னை உலுக்கிடுச்சு.
“ஏன் கௌதம் இப்படியெல்லாம் கேட்குற?”னு கேட்டேன். என் குரல் நடுங்குனது அவனுக்குத் தெளிவாக் கேட்டிருக்கும்.
“என்னால உன்னை யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாது ரேணு. எனக்கு உன்னனப் பத்தித் தெரிஞ்சுக்கணும் ரேணு. உன்னப் புரிஞ்சுக்கணும்”னு சொன்னான்.
ஏதோ ஒரு வேகத்துல “இப்போவே நான் மனசுல நினைக்குறத எல்லாம் ஒரு வார்த்த மாறாம நீ சொல்லிட்டு தான இருக்க… இன்னும் என்ன புரிஞ்சுக்கணும் உனக்கு?”னுக் கேட்டுட்டேன்.
கேட்டதுக்கு அப்பறம் தான் அதை உணர்ந்தேன். நாக்க கடிச்சு தலைல அடிச்சுக்கிட்டேன்.
“அப்போ உனக்கு என்னைப் புரிஞ்சுக்க வேணாமா ரேணு?”னு கேட்டான். “ஒண்ணும் வேணாம். நீ ஒழுங்கா சாப்பிடு. ஒழுங்கா மாத்திரைப் போட்டுத் தூங்கு”னு வேகமா சொன்னேன்.
அதே வேகத்துல “இப்போவே இவ்வளவு அதிகாரம் பண்ணுறியே… கல்யாணத்துக்கு அப்பறம் என்னென்ன பண்ணுவ?”னு கேட்டான். ஏதோ ஒரு ப்ளோல “அப்போ நானே ஊட்டி விட்டு சாப்பிட வெச்சு மாத்திரை போட வெச்சு தூங்க வெப்பேன்”னு சொல்லிட்டேன்.
இன்னைக்கு எனக்கு என்ன தான் ஆச்சோ? ஏன் அப்படி என்னென்னமோ பேசுனேன்னு எனக்கே தெரியல… தலைல கைய வெச்சு உட்காந்திருந்தேன்.
“எனக்கு இப்போ நீ இதெல்லாம் செய்யணும் போல இருக்கு ரேணு”னு சொன்னான். எனக்கு உடம்பு ஒரு தடவ சிலிர்த்து அடங்குச்சு.
“கௌதம் நான்…”னு நான் பேச ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி “ப்ளீஸ் ரேணு… எதுவும் சொல்லாத. நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். பை”னு சொன்னான்.
“பை”னு சொல்லி நான் வெக்கப் போன நேரம் “ஐ லவ் யூ ரேணு”னு சொல்லி அவனே கட் பண்ணிட்டான்.
போன் வெச்சு அர மணி நேரம் என்ன பேசினோம்னு யோசிச்சுப் பார்த்தேன். இனி எப்படி கௌதம பேஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியல. குழப்பமாவே இருக்கு. இது எல்லாத்தையும் இப்போ எழுதுனதுக்கு அப்பறம் தப்பு எல்லாம் என் பேருல தான் இருக்குன்னு புரியுது.
-ரேணு
“நீ என்ன மீனா நெனைக்குற? எதுக்கு ரேணு இவ்வளவு யோசிக்குறா? கௌதம் எப்படிடி ரேணு நினைக்குற எல்லாத்தையும் சொல்லுறான்?” என்று மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“நிறையப் பொண்ணுங்க லவ் அக்ஸப்ட் பண்ணிடுவாங்க… அப்பறமா வீட்டுல பிரச்சன வரும்போது யோசிப்பாங்க. ரேணு முதல்லயே யோசிக்கணும்னு நெனைக்குறா அவ்வளவு தான்.
நம்மளே யாரையாவது பத்தி யோசிச்சுட்டே இருந்தா அவங்க எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நம்மளாலையும் சொல்ல முடியும் கவி. அப்போ கௌதம் எந்த அளவுக்கு ரேணுவ நெனச்சுட்டே இருந்திருப்பான்னு யோசிச்சுப் பாரு… இவங்க ரெண்டுப் பேரும் எப்படியாவது சேரணும்டி…”
ரோஷன் கை தட்டி சிரிக்க ஆரம்பித்தான். “ரொம்ப நேரமாச்சு மீனா. அப்பறம் பசில அழ ஆரம்பிச்சுடுவான். இரு வரேன்” என்று கூறி எழ மீனாவும் அவனைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள்.
“இன்னைக்கு நீங்க இருக்குறதால ராஜேஷ் மதியம் வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்கடி. எவ்வளவு நாள் ஆச்சுத் தெரியுமா அவங்க மத்தியானம் வீட்டுக்கு வந்து…
கார்த்திக் அண்ணா ஊர் ஊரா சுத்துறாங்கன்னா… இவங்க ஆபீஸ் விட்டு நகருறது இல்ல. ஆக மொத்தம் ரெண்டு பேரும் நம்மள கண்டுக்குறதில்ல. வரட்டும் கார்த்திக் அண்ணா… இதுக்கு ஒரு முடிவுக் கட்டுறேன்…”
சரியாக அவள் பேச ஆரம்பித்த நேரம் ராஜேஷ் வீட்டினுள் வந்தான். “என்ன மா? கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு இருக்காளா?”
அவன் பார்வை மீனாவிடமே இருந்தது. கவிதா அவளிடமிருந்து ரோஷனை வாங்கிக் கொண்டாள்.
“நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன்” என்ற ராஜேஷ் ரோஷனின் கன்னத்தைக் கிள்ளி மீனாவை தன்னுடன் வருமாறு கண்களால் சைகை செய்து மாடியில் இருக்கும் தங்களின் அறைக்குச் சென்றான்.
“கவி நான்…”
“ஆமாமா போ போ… அண்ணாக்குத் துண்டு எடுத்துக் குடுத்துட்டு வா”
“இருடி… கார்த்திக் அண்ணா வரட்டும்… எனக்கும் சான்ஸ் கெடைக்காமயா போயிடும்… மாட்டாமயாப் போயிடுவ?”
மீனா அறையினுள் வருவதைக் கண்ட ராஜேஷ் கட்டிலின் அருகில் சுவற்றில் சாய்ந்து அமைதியாகக் கையைக் கட்டி நின்றான்.
“என்ன?”
“உன்னை நான் கண்டுக்குறதே இல்லையா மீனு? மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வரலன்னாலும் பிசினஸ் லஞ்ச்சுன்னு வெளில சாப்பிடுற நேரம் தவிர மத்த எல்லா நாளும் உன் சமையல் தான சாப்பிடுறேன்?”
“தெரியும்”
அவள் இடையைச் சுற்றி கை போட்டு அருகிலிழுத்து அணைத்தவன் “என்ன தெரியும்?” என்று கேட்டான்.
அவன் கழுத்தைச் சுற்றி கை போட்டு “உங்களுக்கு என் சமையல் தான் பிடிக்கும்னுத் தெரியும் ராஜேஷ்” என்று அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள்.
“ஹ்ம்ம்… நீ தான் வர வர என்ன கவனிக்கவே மாட்டேங்குற… எப்ப…” என்று அவன் சொல்லும்போதே அவனை இறுக்கி அணைத்து அவன் இதழில் அழுந்த முத்தமிட்டாள் மீனா.
தான் எதிர்ப்பார்த்ததை அவள் செய்த மகிழ்ச்சியில் அவளை இறுக்கி அணைத்து அந்த முத்தத்தைத் தொடர்ந்தவன் விலக எண்ணியவளை விடாமல் மேலும் இறுக்கி சில நொடிகளுக்குப் பிறகே அவள் இதழை விடுவித்தான்.
அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தவன் கன்னத்தில் முத்தமிட்டு “கீழ போ. வரேன்” என்று கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
கீழே வந்த மீனா சாப்பிடுவதற்கு அனைத்தையும் எடுத்து வைப்பதில் உதவினாள். டைனிங் ஹாலிற்கு வந்த ராஜேஷ் ரோஷனை வாங்கித் தன் மடியில் அமர வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மீனா குனிந்து அருகில் அமர்ந்திருந்த தோழியிடம் “நிமிர்ந்தாவது பார்க்குறாங்களா பார்த்தியா? கையில ரோஷன் இருந்தா வேற யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குறாங்க. நாளைக்கு இவங்களுக்குப் புள்ள பொறந்தா இவங்களத் தொரத்தித் தொரத்தி அடிக்கப் போகுதுப் பாரு…” என்றாள்.
நிமிர்ந்து அவர்களைப் பார்த்த ராஜேஷ் “ஆரம்பிச்சுட்டீங்களா ரகசியம் பேச?” என்று அலுத்துக் கொண்டான்.
“உங்களுக்குக் குழந்தைப் பிறந்தா ரோஷன கொஞ்சுறதப் பார்த்து உங்க புள்ள கோச்சுக்கும்னு சொல்லுறா… அப்போ நீங்க உங்க குழந்தைய தான கொஞ்சுவீங்க?”
“என்னைக்கா இருந்தாலும் இவன் தான் எனக்கு பர்ஸ்ட் செல்லம்” மடியில் அமர்ந்திருந்தவனை ஒரு கையால் அணைத்து அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொண்டான் ராஜேஷ்.
ரோஷன் தலையைத் திருப்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
ரோஷனை கீழே விடாமல் தூக்கிச் சென்று கை கழுவி விட்டு அவனுடன் அமர்ந்து சிறிது நேரம் விளையாடினான். பின் நேரம் ஆகி விட்டதாகக் கூறி அவன் கிளம்பிச் செல்ல மீனா அவனைத் தூக்கிக் கொண்டாள்.
கவிதா பாத்திரங்களைக் கழுவி முடித்த நேரம் கார்த்திக் அவள் எண்ணிற்கு அழைத்தான்.
அதிசயமாகப் பகல் நேரத்தில் அழைக்கிறானே என்றெண்ணி கையிலிருந்த மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தவள் அது தொடர்ந்து அடிக்கவே யோசனையிலிருந்து கலைந்து அழைப்பை ஏற்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!