ஊஞ்சல் – 2

முன்பனிக்காலத்தின் முன்னிறுதிப் பொழுதில் வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது கனகம்மா – சங்கரய்யா தம்பதிகள். ரிஷபனின் தந்தை வேங்கட ராமைய்யாவும், சங்கரய்யாவும் இளமை காலந்தொட்டே நண்பர்கள். இரு வீட்டுப் பெண்களும், வாரிசுகளும் அதே நட்பில் பழகி வந்தனர். ரிஷபனின் அன்னை கோகிலம்மாவின் உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, இடதுபக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட, வீட்டுப்பொறுப்பை ஏற்று, நண்பன் மகனை வரவேற்றது சங்கரய்யா தம்பதி.

அந்த இடத்தில் அவர்களை பார்த்ததும், அசலாட்சிக்கு மனதின் சங்கடம் முகத்தில் வந்து நின்றது. ஏனெனில் அவளின் சொந்த அத்தையும், முதல் கணவனின் பெற்றோர்களும் இவர்களே! அதைக் கண்டு கொண்ட கனகம்மா

“கோடலு!(மருமகளே) ரிஷபனும் என் கொடுக்கு(பையன்) தான். ரெண்டு குடும்பத்த பத்தி தெரிஞ்சும் இப்படி சங்கடப்படலாமா? நான் எப்போதும் போல உன்னோட அன்பான அத்தையா இருப்பேன்! உள்ளே வந்து விளக்கேத்தி வை!” ஆணையிட, அதை செய்து முடித்தவளை, இந்நாள் மாமியார் முன்பு ஜோடியாக நிறுத்தினர்.

படுத்தப் படுக்கையில், நலிந்த தேகத்தோடு இருந்தாலும், தன் பலத்தை எல்லாம் தன்பார்வையில் தேக்கியே மணமக்களை ஆசிர்வதித்து மகிழ்ந்தார் கோகிலம்மா.

“எங்கே இவன் தனியா நின்னுடுவானோ? என் மனவாடுக்கு(பேரனுக்கு) அம்மாவ கொண்டுவராம போய் சேர்ந்திடுவேனோன்னு கவலபட்டேன் கனகா… கடவுள் என்னை அந்த அளவுக்கு கஷ்டப்படமா, வந்து சேருன்னு வரம் கொடுத்துட்டாரு.” உணர்ச்சிவசப்பட்டுத் திக்கிப் பேச

“நல்ல நாள்ல எதுக்கு இந்த பேச்சு? இந்த வீட்டுக்கு ரெண்டு மகாலட்சமி வந்த சந்தோசத்துல, நீ எழுந்து நடமாடப் போற கோகிலா…” ஆறுதல் அளித்த கனகா, அசலாவையும், பொம்மியையும் அவருக்கு அருகில் நிறுத்தி, மனதை ஆசுவாசப்படுத்தி வைத்தார்.

கிராமத்து மனிதர்களுக்கு தமிழும், தெலுங்கும் தடையில்லாமல் பேச்சில் வர, தமிழ் மட்டுமே பேசும் அசலா, பொம்மி இருவருக்கும் புது அவஸ்தயை கொடுத்தது. அசலாவிற்கு சரளமாக பேச வரவில்லை என்றாலும், தடுமாற்றத்துடன் பேசி, நன்றாய் புரிந்து கொள்வாள்.

ஆனால் பொம்மிக்கு முற்றிலும் தலைகீழ் நிலைமை. புரியாத பாஷை, தெரியாத உறவினர்கள் என மேலும் பயந்து முன்னிலும் அதிகமாய், தன் தாயைக் கட்டிக்கொண்டு இருந்தாள்

“அசலா… இந்த வீட்டு ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண்களும், தன்னை நம்பி வந்தவங்கள ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க… இவங்க பாரம்பரியம் ரொம்ப பெரிசு… இங்கே வாழ்றதுக்கு நீ குடுத்து வைத்திருக்கணும்… பொம்மி நாணாம்மா(அப்பாவின் அம்மா) கூட பேசுடா அம்மு!” என இருவரையும் அருகில் நிறுத்த, கோகிலம்மாவும் பாசத்துடன் பேத்தியைத் தொட்டுத் தழுவ கைகளை உயர்த்தும் போதே, தாயின் பின்னே ஒளிந்து கொண்டாள் பொம்மி. பெரியவர்கள் மனம் வருத்தம் கொள்ளக்கூடும் என்று எண்ணியே
“இன்னைக்கு கொஞ்சம் அலைச்சலா இருக்குறதால ஒதுங்கிப் போறா… இல்லன்னா நல்லா பேசுவா…” மெல்லிய குரலில் அசலா சொல்ல, சலிப்பாய் பார்த்தான் ரிஷபன்.

‘நாள்முழுக்க கெஞ்சாத குறையாக நான் அழைத்தும் வராத குழந்தை, எப்படி நாளை சகஜமாவாள்?’ என்று பார்வையாலேயே மனைவியை கேட்டுவைக்க, பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தாள்.
“சின்னபிள்ளைங்க இப்படித்தானே இருக்கும். உன்னோட கதிக்கு(அறைக்கு) போய் பொம்மிய தூங்கவை அசலா! வாசு கூட்டிட்டு போய்யா…” ரிஷபனிடம் சொன்ன கனகம்மா,
“இன்னைக்கு நாள் நல்லா இருக்கு வாசு… உங்க சௌகரியம் பார்த்துக்கோங்க…” மெதுவாய் இருவருக்கும், பொதுவாய் கூறி அனுப்பி வைத்தார்.
கிராமம், இரண்டாம் திருமணம், வீட்டுப் பெரியவரின் உடல் நலம் போன்ற எல்லாம் சேர்ந்து, புதிதாய் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் தம்பதிகளுக்கு என பிரத்யேக ஏற்பாட்டைச் செய்ய முடியாமல் போனது.
அறைக்குள் வந்தததும் அசலா அங்கேயே முடங்கிக் கொள்ள, பொம்மியும் அன்றைய அசதியில் உறங்கிவிட, ரிஷபன் அன்றைய மிச்ச வேலைகளை பார்க்கவென வெளியே சென்று விட்டான்.

தனியறையில் கணவனை எதிர்கொள்ளும் தயக்கம், மனைவிக்கு நிரம்பவே வந்திருந்தது. மகளுக்கு தான் பற்றுதலா? அவள் தனக்கு பற்றுக்கோலா என்று பிரித்தறியா உணர்வில் ஒருவரையொருவர் அணைத்த வண்ணமே உறங்கிப் போனார்கள்.
****************************************************
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது, பட்சிகளும், மலர்களும் தங்கள் விடியலை இன்னும் சற்று நேரம் கழித்தே அறிவிக்கலாம் என்றே சோம்பித்திரியும் பனிக்காலத்திலும், கடமைதவறாத ஆசானாக சிலம்பாட்டம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் ரிஷபன்.
முன்தினத்தின் திருமணக் களைப்பு சற்றும் இல்லாமல் அன்றைய வேலைகளை ஆரம்பித்து இருந்தான். அருகில் உள்ள பள்ளி மைதானத்தில் காலை ஆறுமணி முதல் எட்டுமணி வரை தினமும் நடக்கும் வகுப்பில், சிறுவர் முதல் பெரியவர் வரை சிறுசிறு குழுக்களாக பிரிந்து பயிற்சிகளை மேற்கொள்வர். இந்த வகுப்பை முழுக்க தன் பொறுப்பில் நடத்தி வருவபனின் தினப்படி வேலைகள் அங்கே இருந்து ஆரம்பமாகும்.
சிலம்பப் பயிற்சி முடித்துவிட்டு காலை நீராகாரம் மட்டுமே உணவாக எடுத்துகொள்பவனுக்கு, மதியம் சோளக்களியும் கருவாட்டுக் குழம்பும் இருந்தே ஆகவேண்டும். இரவுநேரம் மட்டுமே நெல்சோறு, அதனுடன் பருப்பும், அசைவமும் எடுத்துக் கொண்டு, அந்த நாளின் நளபாகத்தை முடித்துக் கொள்வான். அசைவம் இன்றி அவனின் உணவுப் பொழுதுகள் நகராது.
அன்றைய வேலைகளை கவனிக்கவென ரிஷபன் வெளியேறியதும், உறங்கும் மகளை அறையில் விட்டுட்டு, வெளியே வந்த அசலாட்சி, வீட்டினை சுற்றி தன் பார்வையை ஓடவிட்டாள்.

இதற்கு முன் இங்கே ஓரிருமுறை வந்திருந்தாலும், விருந்தாளியாய் வரவேற்பறையோடு தன் வருகையை நிறுத்திக் கொண்டவள், இனி தன் இருப்பிடம் இதுதான் என்ற எண்ணத்தை, மனதில் மிகச்சிரமத்துடன் பதித்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு வீட்டை சுற்றிக் காட்டவென பின்னோடு பத்ரியும்(சின்னா) வர, இருவரும் சாதாரணமாகப் பேசத்தொடங்கி இருந்தனர்.

உயர்ந்த உத்திரம், லாந்தர் விளக்குகள், தேக்குமரத் தூண்கள், வளைந்து ஏறும் படிக்கட்டுகள், வீட்டிற்கு முன்னே பலவண்ணப் பூக்கள் நிறைந்த பெரியதொரு பூந்தோட்டம், வரவேற்பறையை தாண்டி, கீழே பக்கத்திற்கு மூன்றாக ஆறு அறைகளும், உணவு உண்ணும் அறையும்இருக்க, அதனை ஒட்டிய சமையல் அறை பெரியதாக இருந்தது. மேலே மாடியில் அதே போன்று அறைகள் அமைக்கப்பட்ட பெரியவீடு. வீட்டின் தோரணையே அவளுக்கு மலைப்பை ஏற்படுத்தியது.

“என்ன பின்னி(சித்தி)?? இல்லு(வீடு) உங்களுக்கு பிடிச்சுருக்கா?” – சின்னா

“ம்ம்ம்… அழகா இருக்கு… நல்லா பெருசா இருக்கு பத்ரி!”

“உங்க இல்லு(வீடு) எப்டி இருக்கும்?” கிராமத்திலேயே இருப்பதால் தெலுங்கு மட்டுமே சின்னாவிற்கு சரளமாக வந்தது.

“ஹால், கிச்சன், ஒரு சின்ன ரூம்… அவ்ளோதான்.”– அசலா

“உங்க ஊர் டவுன்ல இருக்கா?”– சின்னா

“நான் பொறந்து வளர்ந்தது, இதுவரைக்கும் இருந்தது எல்லாம் சென்னையில பத்ரி”
“இங்கே வரவே மாட்டீங்களா பின்னி?, என்னை சின்னான்னு கூப்பிடுங்க!” சின்னவன் உத்தரவிட,
“ம்ம்ம்… லீவ்ல வருவேன். எதாவது விசேஷம்னா வந்துட்டு உடனே போய்டுவேன். அப்பாவோட வேலை அப்படி” கேள்விற்குரிய பதில்கள் மட்டுமே அங்கே பரிமாறப்பட்டன.

வீட்டைச் சுற்றிப் பார்த்தவளுக்கு நிச்சயமாய் இங்கே தன்னால் பொருந்திக் கொள்ள முடியாது என்ற வலுவான எண்ணம் மனதில் எழ ஆரம்பித்தது. சமீபகாலமாக தன்மகளின் செய்கைகள், தனக்கே வசப்படாமல் இருக்க, அவளது வீம்பும் பிடிவாதமும் எல்லோரையும் இம்சித்து வருவதைக் கண்கூடாக அறிவாள்.

சிலசமயங்களில் மகளின் வீம்பு தனக்கும் வந்து, மற்றவர்களை ஒதுக்கி வைத்து, தனிமையில் மகளோடு தவிப்பதும் உண்டு. அந்த காரணம் தொட்டே இந்த ஒட்டாத்தன்மை மனதில் வேர்விட, இங்கு உள்ளவர்களை இனிமேல் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் வந்தே அவளை ஆயாசப்படுத்தியது.

இதுவரை இந்த வீட்டு மனிதர்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. குறிப்பாக கணவனிடத்தில் இரவு முழுவதும் ஒரே அறையில் இருந்தாலும், ஒருவரையொருவர் ஏறிட்டு பார்க்காமலேயே இரவைக் கடத்தி இருந்தனர்.

ரிஷபன் வேலையை முடித்து வரும் முன்பே, அசலாட்சி தரையில் மகளுடன் உறங்கிப் போயிருந்தாள். கணவன் வந்த சத்தம் அறிந்து கண்விழித்தாலும், அவன்பக்கம் திரும்பாமல் இவள் முதுகைக் காட்டிக் கொண்டிருக்க, விடியும் முன்பே அவன் கிளம்பிச் சென்றது இவளுக்கு தெரியவில்லை.

தன்னை சார்ந்த பெரியவர்களின் வயோதிகம், வளர்ந்து வரும் பெண்பிள்ளையின் பாதுகாப்பு இவற்றை முன்னிறுத்தியே, அசலாட்சியின் தந்தை சுந்தரராஜுலு இந்த திருமணத்திற்கு அவளை சம்மதிக்க வைத்திருந்தார்.

தனது கடந்தகால நிகழ்வுகளை மறக்கும் வண்ணம், இந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எப்படி? என்று தெரியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன யோசனை பின்னி?”

“ஒண்ணுமில்ல சின்னா… நீ எதுக்கு இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சே?”

“நான் நாணாகூட சிலம்பம் கிளாஸ்க்கு போகணும்னு சீக்கிரம் முழிச்சேன், நேத்து ஊருக்கு போயிட்டு வந்தது அலுப்பா இருக்கும்னு நாணா வரவேண்டாம்னு சொல்லிட்டார்”

“அவருக்கு களைப்பு இருக்காதா சின்னா?”

“அதெல்லாம் பார்க்க மாட்டார். யார், என்ன சொன்னாலும் கேட்காம வேலைய பார்க்க போய்டுவாரு நாணா!”

“ஏன் அப்படி?”

“தெரியல பின்னி!”
பேசிக்கொண்டே வீட்டுப் பெரியவர்களிடம் தினப்படி வேலைகளை கேட்டுக் கொள்ளவென, அவர்கள் அறைக்குச் செல்ல,

“சமையலுக்கு மட்டும் முன்னாடி நின்னு பார்த்துகிட்டா போதும்மா, எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு” – கனகாம்மா

“இப்போவே நீ வேலைய கையில எடுக்கவேணாம் அசலா, இன்னைக்கு வண்டகதிக்கு(சமையலறை) போய் அரிசி, பருப்பு, உப்பு, புளி, சர்க்கரைன்னு எல்லா பொருளையும் தொட்டுவிட்டுட்டு வந்துடு! என் மனவராலு(பேத்தி) இந்த வீட்டுல நல்லவிதமா பொருந்தி வர்ற வரைக்கும் அவகூடவே இருந்துக்கோ!” கோகிலம்மா சொன்னதில் பேத்தியின் மீதான பெரியவரின் பாசம் தெரிந்தது.

மதியம் வரையில் மகளைக் கைகளில் பிடித்துக் கொண்டே வீட்டினை வலம் வந்திட, புதிய மனிதர்களிடம் ஒட்டாமல் வழக்கம் போல் தாயின் பின்னே இருந்து கொண்டு, மௌனம் சாதித்தாள் பொம்மி. சின்னாவும் வேடிக்கையாக அவளை சீண்டியிழுக்க, முன்தினம் போல் பொம்மியும் அழுகையை ஆரம்பித்து வைத்தாள்.

“இவளுக்கு பேசத் தெரியாதா பின்னி? எப்போவும் ஏன் அழறா?”

“புது இடம் சின்னா! பழக்கபடுத்தினா சரியாகிடுவா!”

“கைக்குழந்தையா என்ன? புதுஇடம், புதுமனுசங்கள பார்த்து அழறதுக்கு?” கேட்டபடியே வந்தான் ரிஷபன்.

“அது… அவளுக்கு புது இடத்துல இருந்து பழக்கம் இல்ல…” கணவனின் முகம் பார்க்காமல் விளக்கம் கொடுத்தாள் அசலா.

“அம்மாவுக்கும், பொண்ணுக்கும் பேச்சுல பஞ்சம் போல?” – ரிஷபன்

“அப்படி இல்ல நாணா! இவ்ளோ நேரம் பின்னி எங்கிட்ட நல்லா பேசினாங்க!”- சின்னா.

“பின்னியா? இது என்ன புதுசா? யார் இப்படி கூப்பிட சொன்னது?” சொன்னவன் மனைவியை முறைத்து வைக்க, அப்பொழுதுதான் அசலாவிற்கும், இத்தனை நேரம் சின்னாவின் விளிப்பை கவனிக்காமல் விட்டது தெரிந்தது.

தன்நிலையைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு இங்கே வளைய வந்தவள், சிறுவனின் மனநிலையை அறிய தவற விட்டிருந்தாள். அவன் தன்னைப் பற்றிக் கேட்டுக்கொண்ட அளவிற்குகூட, தான் அவனை பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என எண்ணும்போது அசலாவிற்கு, தன்மீதே சற்று கோபம் வந்தது.

“அவனுக்கு நீ பின்னின்னா(சித்தி), நான் யாரு? சின்னநாணாவா?(சித்தப்பாவா), பொம்மியும் உன்ன பின்னின்னு கூப்பிடுவாளா?” ரிஷபன் கடும் ஆட்சேபத்துடன் மனைவியைக் கடிந்து கொண்டான்,

“நான் கவனிக்கல… இனிமே இப்படி நடக்காது!” மெல்லிய குரலில் அசலா சொல்ல,
“நீ எததான் கவனிச்ச? நேத்துல இருந்து உன் பொண்ண பார்க்கவே நேரம் பத்தல! இதுல புதுசா வந்த பையனையும், புருசனையுமா கவனிக்க போறா?” இவன் குத்திக்காட்டியே பேச
‘கடவுளே இவருடைய சுபாவமே இப்படித்தானா? எப்படி சமாளிக்க இவரை?’ மனதில் நினைத்துக் கொண்டே, என்ன செய்து இந்த பேச்சை மாற்றுவது என்று தெரியாமல் அசலா விழித்துக் கொண்டு நின்றாள்.

“எப்படி கூப்பிடனும்னு உன் பையனுக்கு நீ சொன்னியா? எப்போவும் போல உன்னோட வேலையே பெரிசுன்னு போயிட்டு இப்போ வந்து குதிக்காதே வாசு! அவ எப்படி பின்னின்னு கூப்பிட சொல்லுவா? சின்னாவா கூப்பிட்டு இருப்பான், நீ அவன்கிட்ட கேளு!” மருமகளுக்கு பக்கபலமாய் ரிஷபனின் தந்தை பேசிவிட்டு, இருவருக்கும் இடையூறாக நிற்காமல் சென்று விட, ரிஷபனும் தந்தையின் பேச்சில் மகனை பார்க்க,
“புதுசா வர்ற அம்மாவ, சித்தின்னு கூப்பிட சொல்லி,என் ஃப்ரண்ட்ஸ் சொன்னாங்க… அதான் கூப்பிட்டேன்!” தயக்கத்துடன் சின்னா சொல்லி வைத்தான்.

சின்னாவிற்கு தன் தந்தையிடம் பாசம் இருந்தாலும் ஒட்டுதல் என்பது குறைவே! தன்னை சுற்றி இருக்கும் பெரியவர்களிடம் பேசும் பேச்சுக்கள் எல்லாம், ரிஷபனிடம் காணாமல் போய் விடும்.

தொழில் மற்றும் ஊர்க்காவல் நிமித்தம் எப்பொழுதும் நேரம் கழித்தே தந்தை வீட்டிற்கு வரும்போது மகன் உறங்கி இருப்பான். சிறிய வயதில் மகனை பார்த்து பேசும் பேச்சுக்களை எண்ணி விடலாம்.

இப்பொழுது சிலம்ப வகுப்பினை முன்னிட்டே இருவரும் தினந்தோறும் பார்க்கவும், பேசவும் வாய்ப்புகள் அமைந்தாலும், நெருக்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இவனது இந்த தயங்கிய பேச்சினை கேட்டு அசலாவிற்கும் தன் கவனமின்மையால், சிறியவனுக்கு கண்டனங்கள் வருகிறது என மனதிற்குள் குற்ற உணர்வு தோன்ற,

“அவன் சொன்னத கவனிக்காம விட்டது நாந்தான்.. இனிமே நடக்காது!” சொல்லிவிட்டு பொம்மியுடன் உள்ளே செல்ல முயல,

“சாலா! நான் இங்கே இருக்கும் போது எங்கே போற?” அவளை நிற்க வைத்தான்.

இன்னும் என்ன? என்ற ரீதியில் கணவனை இப்பொழுது நேராக பார்க்க, அவனோ தாயையும் மகளையும் ஒருசேர தன் பார்வையால் சிறைபிடிப்பவனைப் போல் உறுத்துப் பார்த்தவன், பொம்மியின் முன் குனிந்து,
“நாணா செப்பு பங்காரம்! புஜ்ஜிம்மா, ஒக்க சாரி நாணா செப்பு!(ஒரு தடவை அப்பா சொல்லு)” நேற்றில் இருந்து இவன் கெஞ்சிக்கொண்டே இருக்கிறான். அதை கேட்டு சின்னப்பெண்ணும் பயந்து பின்னடைந்து கொண்டே இருக்கிறாள். அதிலும் அவளுக்கு புரியாத பாஷையில் இவன் பேசிடவும், நொடிப்பொழுதில் அரண்டு அசலாவின் கால்களை கட்டிக்கொண்டாள்.
மகளின் வாயால் ‘நாணா(அப்பா)’ என்ற அழைப்பை கேட்க அத்தனை ஆவலுடன் இவன் எதிர்பார்த்திருக்க, இப்பொழுதும் மகள் ஏமாற்றி வைக்க, மனைவியிடம் கோபம் கொண்டான்.
“நீ சரியில்ல சாலா! நீ சாதாரணமா என்னை கூப்பிட்டு பேசினா, பொம்மியும் என்னை நாணானு கூப்பிடுவா?” இருவருக்கும் திருமணம் முடிந்து வருடங்கள் ஆனதைப் போல் ரிஷபன் பேசி வைக்க, இவள்தான் முழிக்க வேண்டி இருந்தது.

“இன்னும் நாம பேசவே செய்யலயே? இதுல எப்படி உங்கள கூப்பிட்டு வைக்க?” மெதுவான குரலில் கேட்டேவிட்டாள். அடுத்தடுத்த குற்றசாட்டுகளை எதிர்கொள்ள அசலாவிற்கு சற்றும் விருப்பம் இல்லை.

“ஏன்? நேத்து பேசி இருக்கலாமே? ராத்திரி நான் உன்னை எதிர்பார்த்துட்டு இருந்தேன்.” இருவரையும் தன்னிடம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்ற வேகமோ, இல்லை தன்னைப் பற்றி இவள் அறிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயமோ, ரிஷபனை உரிமையாய் பேசவைத்துக் கொண்டே இருந்தது.

வளர்ந்தமகன் முன்னிலையில் கணவனின் உரிமைப்பேச்சு அசலாவை நெளிய வைத்திட, ஓரப்பார்வையில் சின்னாவை பார்த்துக் கொண்டே கணவனை நோக்க, மனைவியின் ஒற்றைப் பார்வையிலேயே, அவள் மனநிலையை அறிந்து கொண்டவன்.
“சின்னா! தோட்டத்துல களை எடுக்க ஆள் வரச்சொல்லி இருந்தேன், வந்தாச்சான்னு பார்த்துட்டு வா!” அனுப்பி வைத்து விட்டு,

“இப்போ பதில் சொல்லு சாலா!” கேட்டிட,

“என்ன சொல்ல? ஹாங்… நேத்து அசதியில தூங்கிட்டேன்!” கேள்வி கேட்பதை விடமாட்டாரோ என்ற ரீதியில் பதில் அளித்தாள்.

“ஆனா, நான் உன்கூட நிறைய பேசனும்னு நினச்சுட்டு இருந்தேன்!”

“எதுக்கு?” தயக்கங்கள் விடுத்து, தொடர்ச்சியாக பேச வார்த்தைகள் சிக்கவில்லை அசலாவிற்கு.

“ம்ப்ச்… நான் என்ன வெளியாளா சாலா? என்ன சொல்லி என்னைக் கூப்பிடபோற? இப்படி மொட்டையா பேசுறது எனக்கு பிடிக்கல!”
“எப்படி கூப்பிடனும்?” கண்களை சுற்றிலும் அலைபாயவிட்டே அவள் பேச,
“ஏன் உனக்கு தெரியாதா? நீ மனசுல எப்படி நினைக்கிறியோ அப்படி கூப்பிடு!”

“நான் அப்படி எதுவும் இது வரைக்கும் நினைக்கல!” அவள் அவசரமாகச் சொல்லியதும், ரிஷபனுக்கு சப்பென்று ஆகிப்போனது

இவர்களுக்காக வழக்கத்தை மாற்றிக்கொண்டு, மாலைநேரத்தில் வீட்டிற்கு வரும் நேரத்தையும் விடுத்து, மதிய நேரத்திலேயே வந்தவனுக்கு, தன்னை பற்றிய சிறுநினைவு கூட இவளுக்கு இல்லையே என்று மனம் ஏங்கத் தொடங்க, ஏதோ ஒரு புதுவித அவஸ்தையில் தவித்து வைத்தான்

“என்னை பத்தின நெனைப்பே உனக்கு இல்லையா?” மெல்லிய குரலில் ரிஷபன் கேட்க

“அப்டி இல்ல… எனக்கு தோணல…”
“சரி அத விடு… எதுக்காக நேத்து, உன்கூட பேச நெனைச்சேன் தெரியுமா?”

“தெரியல!”

“தெரியல பாவா… அப்படிச் சொல்லிப் பழகு சாலா!” மனைவியின் ஒற்றை பதிலில் கடுப்பானவன், ஆதங்கமாய் சொல்லி வைத்தான்.

“எப்படி? எனக்கு பழக்கம் இல்லையே?” சிறுபெண்ணைப்போல் கையை விரித்துக்கொண்டு, கணவனிடமே கேட்க, அதை மனதோடு ரசித்தவன், மெல்லிய புன்னகையுடன்,

“ரெண்டு தடவைசொல்லிப் பார்த்தா தானா வரும். அப்படியே பொம்மிகிட்டயும் நாணா சொல்லிப் பழக்கப்படுத்து.”
“ம்ம்ம்… சரி! நான் உள்ளே போகட்டுமா?” இவனிடம் இருந்து விடுபட்டு சென்று விடவேண்டும் என்பதே அவளது குறிக்கோளாய் இருக்க, அவள் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல், ரிஷபன் பேச்சினை தொடர்ந்தான்.

“யாரும் நம்ம குழந்தைகளைப் பிரிச்சு பேசக்கூடாது சாலா! ரெண்டு பேரையும் எந்த வித்தியாசமும் இல்லாம வளர்க்கணும்… புரிஞ்சதா!” உணர்வுபூர்வமாய் சொல்லியவன் அவள் தோளை தொட்டு அணைக்கப் போக, பொம்மி கத்தி வைத்தாள்

“அம்மா… வெளியே போயிடுவோம் வா! இங்கே வேணாம்… இங்கே நிறைய பாட்பீப்பிள்ஷ்(bad people’s) இருக்காங்க!!” சம்மந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே அழுகையை ஆரம்பித்து வைக்க,

“இவளுக்கு என்னதான் வேண்டி இருக்கு சாலா? எப்போவும் இப்ப்டியே அழுதிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” ஒருவித சலிப்புடன் ரிஷபன் கேட்க,
“புதுஇடம் பழகினா சரியாகிடும்” எப்போழுதும் சொல்லும் பதிலை சொல்லியபடியே, பொம்மியை இடுப்பில் தூக்கி வைத்திருந்தாள்

“என்ன புதுஇடமோ தெரியல? நேத்துல இருந்து ஒரே மனுசங்கள தானே பார்த்து வைக்கிறா? இன்னுமா இவளுக்கு புரியல? வளர்ந்த பொண்ணா தெரியுறா… ஆனா ஏன் புரிஞ்சுக்காம அடம் பிடிக்கிறா?”

“——–“

“சென்னையில இதே மாதிரி இருந்தாளா? இல்லயே! ஸ்கூல் போறான்னு மாமா சொன்னாங்க! அப்போ நல்லா புரியனுமே!” அடுக்கடுக்காய் கேள்விகள் ரிஷபன் கேட்டு வைக்க,

“ரெண்டு நாள் போனா புரிஞ்சுப்பா!” ஏதோ ஒரு விடுபடாத உணர்வில் திக்கித் திணறிப் பேசினாள்.

“என்னவாவது செஞ்சு இவளுக்கு புரிய வை! நாளைக்கு பொம்மிய ஸ்கூல்ல சேர்க்கிறதப் பத்தி பேசிட்டு வந்திருக்கேன். எங்கூட வர்றதுக்கு ரெண்டுபேரும் ரெடியா இருங்க!” மனைவியின் திணறிய பேச்சை, கூச்ச சுபாவம் என்று நினைத்து, தனது எண்ணங்களை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தான்.
“கொஞ்சநாள் போகட்டுமே! எதுக்கு இந்த அவசரம்?” – அசலா

“இப்போ சேர்த்து விட்டா, இந்த வருஷம் பாடத்தைச் சொல்லிக்கொடுத்து, பரீட்சை எழுத வச்சிடலாம். எல்லாம் பேசி வச்சுட்டேன், வருஷம் வீணாபோகாது சாலா!”

“இல்ல… புது இடம்…” அசலா இழுக்க
“சும்மா பழைய பல்லவிய பாடாதே சாலா! அவ வயசு குழந்தைங்ககூட சேரும்போது, எல்லாமே அவளுக்கு பழகிடும், புதுஇடம்ங்கிறதே மறந்து போயிடும்.” அசராமல் இவனும் விளக்கம் சொல்ல

“அதுக்கில்ல பாவா! அவளுக்கு ஒத்துக்காம போச்சுன்னா?” மகளின் நிலையை நன்கு தெரிந்தவள், எப்படியாவது இந்த ஏற்பாட்டினை தடுத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் தடைதகர்த்தி வேகமாக கணவனுடன் பேசிவிட்டாள்.

மகளை வெளியே அனுப்பிவைத்தால், இப்பொழுது சற்றே அமைதியாய் கழிந்து கொண்டிருக்கும் பொழுதுகள் எல்லாம், மேலும் சிக்கலாகிப் போகும் என்பதை கணவனிடம் எப்படி சொல்வது என்றே மனதிற்குள் தவித்தாள்.

“என்ன சொன்ன இப்ப?” அவளது மனப்போராட்டங்கள் தெரியாமல் புன்முறுவலுடன் ரிஷபன் கேட்க,
“என்ன சொன்னேன்?” அப்போது தான் அவனை அழைத்த முறை நினைவில் வந்திட, கணவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் அசலாவிற்கு தடுமாற்றம் வந்து விட்டிருந்தது.
அவளை ரசித்தபடியே “வாடா பொம்மி! நாணாகிட்ட வா!” சொல்லியபடியே இன்னும் பக்கம் வந்திட, பொம்மியோ தன் வேலையை கச்சிதமாய் செய்பவளாய் அடக்கிய அழுகையை தொடர்ந்தாள்.
இதற்கும் மேல் இருந்தால், தன்மகளை கோபத்துடன் கடிந்து கொள்ள நேரிடுமோ என அஞ்சியே அவன் நகர்ந்திட, அசலா மகளை சமாதானப்படுத்தினாள்.
***************************
மறுநாள் விடாப்பிடியாய் மனைவியோடு சென்று பள்ளியில் மகளை சேர்த்தவன், அவள் அழுகையைக் கண்டுகொள்ளாமல் வகுப்பில் அமரவைத்து வந்துவிட, அசலாட்சி திண்டாடிப் போனாள். எக்காரணம் கொண்டும் தங்களது நிலையை கணவனிடம் சொல்ல விரும்பவில்லை.

“பொம்மி எந்த ஒரு புது விஷயத்தையும் சீக்கிரமா ஏத்துக்கமாட்டா பாவா!” தவிப்பை மறைத்தே சொல்ல,

“ஆறு வயசு கொழந்தையரொம்ப பொத்தி வைக்கிற சாலா!”

“அவ சுபாவம் அப்டி! நான் என்ன பண்ண?”

“ஸ்கூல்ல இருக்குறவங்க எல்லாரும், நமக்கு வேண்டப்பட்டவங்க… சின்னாவும் அங்கேதான் படிக்கிறான்… ஒரு பயமும் வேணாம். இன்னும் ஒரு மணிநேரத்துல நானே போய் மதிய சாப்பாட்டுக்கு கூட்டிட்டு வரேன்!” நம்பிக்கை அளித்தான்.

பொறுப்பான பெற்றோராய் இருவரும் சகஜமாய் பேசிக் கொண்டனர்.

அலைபாய்ந்த மனதை அடக்க வழிதெரியாமல், அசலா தவித்திருக்க, அடுத்த அரைமணிநேரத்தில் பொம்மி மயக்கமடைந்து விட்டாள் என்று பள்ளியில் இருந்து அழைப்பு வர, பதறிக்கொண்டே கணவனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டாள்.

மகளைப் பார்த்து, தந்தையாய் ரிஷபன் பரிதவித்து நிற்க, அசலாட்சி எப்பொழுதும் நடப்பது இது என்ற ரீதியில்,
“வீட்டுக்கு போய்டுவோம் பாவா! ரெண்டு மணிநேரத்துல கண்ணு முழிச்சுடுவா!” இப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்றுதானே தான் தடுத்தது என்று நினைத்தவள், உணர்ச்சியற்ற முகத்துடன் பேசினாள்.
“எப்படி சாலா? தண்ணி தெளிச்சு எழுப்பினாலும் அசைய மாட்டேங்குறாளே பொம்மி! சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம் வா!” பதட்டம் வந்திருந்தது ரிஷபனுக்கு.

“அதுக்கு அவசியமில்ல… இது இவளுக்கு அடிக்கடி வர்றதுதான்!” இறுக்கத்துடனே பதில் சொன்னாள்.

“உயிரோட விளையாடக் கூடாது சாலா! இப்போ வரப் போறியா இல்லையா?” கணவன் அதட்டி வைக்க,

“ஒண்ணும் பயமில்ல பாவா! புது இடத்துல மனசு ஒட்டாதப்போ பாப்பாவுக்கு இப்படி ஆகும்” – அசலா

“உன் சமாதானத்தை நீயே கட்டிட்டு அழு! நான் தூக்கிட்டு போறேன்!” என்றவன் அங்கிருந்த தெரிந்த நண்பரை வண்டியை ஓட்டச் சொல்லி, பிள்ளையை தோளில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மனம் முழுவதும் பொங்கிய அன்போடு, குதூகலமாய் தூக்கிக் கொஞ்சவேண்டும் என்று ஆசைப்பட்டவன், இன்று சுயநினைவு இல்லாத நிலையில், குழந்தையை தோளில் சாய்த்துக்கொள்ள வேண்டிவந்ததே என்ற நினைவே நெஞ்சை அறுக்க, சொல்லத் தெரியாத துக்கம் வந்து, அந்த காவல்காரனை பரிதவிக்க வைத்தது.
அந்த நேரத்தில் இருவரில் தன்னை ஈர்ப்பது மகள் மட்டுமே! மனைவி அல்ல என்று அவன் மனம் தெளிவாக சொல்லியது.
‘அப்படி என்ன பிரச்சனை அம்மு உனக்கு? அம்மா உன்மேல அக்கறை இல்லாம பேசுறாளே? போயிட்டு வந்ததும் அவள என்ன ஏதுன்னு கேட்டு வைக்கிறேன். ராட்சஸி!! பெத்த புள்ள மேலேயே இப்படி பாசம் இல்லாம இருக்கிறவ, சின்னா மேல எப்படி அக்கறையா இருக்கப்போறா தெரியலையே?’ ரிஷபனின் மனம் பொல்லாத எண்ணங்களை எல்லாம் தன்னுள் நிறுத்தி, மனைவியை வெறுப்பாய் பார்த்து வைத்தது.

error: Content is protected !!