Ponnoonjal-4A

ஊஞ்சல்-4-a
மாலையில் ஆரம்பித்த மன உளைச்சல்கள், தடுமாறவைத்த தவிப்புகள் எல்லாம் இரவிலும் நீண்டுவிடபொங்கிய உணர்ச்சியில், தன்மடி சாய்ந்தவளை கண்ணிமைக்காமல் பரிவாய் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷபன். அனுபவித்த வலிகளை நினைக்கும்பொழுதே தன்நிலையை மறந்து, பிதற்றி வைக்கிறாள் என்றால் எத்தகைய துன்பத்தை அவள் எதிர்கொண்டிருக்க கூடும்! என்று நினைத்துப் பார்க்கவும் ரிஷபன் விரும்பவில்லை. அத்தனை எளிதில் மீளக்கூடிய வலிகள் அல்ல! அவை என்பது மட்டும் அவன் மனதிற்கு தெளிவாய் புலப்பட்டது.
சரியாக ஒரு மணிநேரம் கடந்த நிலையில் மகளின் அசைவில் ரிஷபன் சுதாரித்துக் கொண்டு, அசலாவை மெதுவாக தட்டி எழுப்பிபொம்மியை கண்ஜாடையில் காட்டிட சரியாக அதே நேரத்தில் மகளும் தாயை நோக்கி கீழே இறங்கி வந்தாள்.
கணவன் மடியில் தலைவைத்து படுத்திருந்தவளுக்கு அவ்வளவு எளிதில் எழுந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை போலும்! அந்த நிலையிலேயே, “அம்மா பக்கத்துல வா பொம்மி!” அயர்ந்து போன குரலில் அவளும் அழைத்தாள்.
தூக்கக் கலக்கத்தில் வந்த சின்னவளுக்கு அசலாவின் உறங்கிய நிலையே தெரிய,தாயின் அருகில் அவளும் படுத்துக் கொள்ளவென ரிஷபன் மடியின் மறுபக்கத்தில் தலைவைத்து அசலாவை அணைத்தவாறே உறங்கிப் போனாள்.
திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் தன்னை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் தன்மடியில் தலைசாய்திருந்த தோற்றம் இருவரும் தன் அன்புக் கூட்டில் வந்து சேர்ந்த நிதர்சனத்தை சொல்லாமல் சொல்லியது. அந்த நினைவிலேயே தத்தளித்தவன் இருவருவரையும் ஒருசேர உச்சிமுகர்ந்து முத்தமிட்டான்.
சற்று அசைந்தாலும் இருவரின் உறக்கமும் கெட்டுவிடுமோ! என்று அஞ்சியே அசையாமல் ரிஷபன் அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் சின்னா தந்தையை தேடிவந்தான்.
“என்ன ஆச்சு நாணா? அம்மாவும், பொம்மியும் எதுக்காக உங்க மடியில படுத்திருக்காங்க?” என்று கேள்விகளை கேட்டவனை வாயில் விரல் வைத்து மகனின் பேச்சிற்கு தடை செய்தான் ரிஷபன்.
“ரெண்டு பேருக்கும் உடம்பு சரியில்லையா நாணா? பொம்மிய நான் மடியில வச்சுக்கவா?” கேட்டுக்கொண்டே ஆசையுடன் தங்கையின் தலையை தடவிக் கொடுத்தான் சின்னா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லரா(டா), நான் பார்த்துக்கறேன்.” இவர்களின் பேச்சில் அசலாவிற்கு முழிப்பு வந்துவிட,
“அம்மா! செல்லிய என் மடியில படுக்க வைங்க, நான் அழாம தட்டிக் கொடுக்கறேன்.” என்று சொல்லும் போதுதான் அசலாவிற்கு தன்நிலை தெரிந்து வேகமாய் எழுந்து, பால்கனிக்கு சென்று விட்டாள்.
“தினமும் பொம்மி உங்க மடியில படுக்குறாளா? இனிமே நானும் படுப்பேன்!” இப்பொழுது தந்தையின் மறுபக்கத்தில் படுப்பது சின்னாவின் முறையாகிப் போனது.
முதன்முறையாக மகனை தன்மடியில் படுக்க வைத்துக் கொண்டவனுக்கு சின்னவனின் ஏக்கம் புரியவர,
“இனிமே நீயும் எங்ககூட படுத்துக்கோ சின்னா!”
“வேணாம் நாணா! தாத்தயா கூட யார் படுப்பா? அவர் தனியா இருப்பாரே? நான் கொஞ்ச நேரம் இங்கே வந்துட்டுஅப்புறம் அங்கே போய் படுக்குறேன்.”
சின்னாவின் பேச்சும், செயலும் ரிஷபனை சிலிர்க்க செய்ய மகனின் இத்தனை நாட்கள் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் இருந்ததை நினைத்து மனதோடு நொந்து கொண்டான்.
“பரவாயில்ல பாபு! வேற யாரையாவது தாத்தயா பக்கத்துல இருக்கச் சொல்லலாம், நீ இங்கேயே பழக்கப்படுத்திக்கோ.”
“அது சரி வராது நாணா! அவ்வா(பாட்டி) கூட கொஞ்சநேரம் பேசிட்டு வந்து படுப்போம். அவங்களும் என்னை தேடுவாங்க”
“அடடா! இன்த பாக்யதவிஹிதாடா நா கொடுக்கு? (இத்தனை பொறுப்பானவனா என் மகன்)” உணர்ச்சிவசப்பட்டு உச்சி முகர்ந்து முத்திட்டான்.
முதல்முறையாக மகனை ஆசையாய் அணைத்து கொடுக்கும் முத்தம்! இதற்கு முன்னர் முத்தமிட்டு இருந்தாலும் இப்படி சிலிர்த்துக் கொண்டு அன்பாய் கொடுத்த நினைவில்லை.
இத்தனை வருடங்கள் தன்போக்கில் வேலை பார்த்து வந்தவனுக்கு, மகனை கவனிக்காமல் ஏங்கவைக்க விட்டோமே என்ற எண்ணம் பேரிடியாய் தாக்க, ‘இனிமேல் இரு பிள்ளைகளையும் பொறுப்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும்.’என மனதில் உறுதி கொண்டான்.
அசலாட்சிக்கு விவரிக்க இயலாத தயக்கம் வந்து ரிஷபனை ஏறேடுத்தும் பார்க்க முடியாமல் தடுமாற வைக்க, அதை தவிர்க்க எண்ணியே அங்கிருந்து வெளியேறி இருந்தாள். கணவனின் அரவணைப்பில் தன்னை மறந்து உறங்கிப் போனதும்,தன்னுடைய பிதற்றல்களுக்கும் காரணம் கேட்டால் என்ன செய்வது? என்ற யோசனையில் சற்று நேரம் உழன்று கொண்டிருந்தாள்.
உணவு நேரம் கடந்திருந்தது. அதை மனதில் கொண்டே அறைக்கு வந்தவள், “பொம்மிய கட்டில்ல படுக்க வைக்கிறேன், சாப்பிட்டு வந்திரலாம் பாவா!” இரவு உணவை எப்பொழுதும் சிறப்பாய் எடுத்துக் கொள்பவன் ரிஷபன். அதை முன்னிட்டே அழைக்க,
“எங்கிட்டயே இருக்கட்டும் சாலா, பால் மட்டும் கொண்டு வா! இப்போ நான் அசைஞ்சா அம்மு முழிச்சுப்பா, சின்னா கொஞ்ச நேரம் என் மடியில தூங்கட்டும்.”
“தெனமும் நாங்க படுத்த பிறகு, அவள உங்ககிட்ட படுக்க வைச்சுப்பீங்களே! அது போல இன்னைக்கு சாப்பிட்டதும் வந்துஅவ பக்கத்துல படுத்துக்கலாம்!” மெல்லிய குரலில் அரும்பிய புன்னகையுடன் அசலாட்சி சொல்ல,
“உனக்கு தெரியுமா சாலா?” தனது கள்ளத்தனம் வெளிப்பட்ட விதத்தில் அதே சிரிப்புடன் ரிஷபன் கேட்க,
“அதெப்படி தெரியாம போகும்? என் கை எப்போவும் அவமேலே தான் இருக்கும். கல்யாணம் முடிஞ்சா மறுநாளே, நீங்க பாப்பவ பக்கத்துல தூக்கி வச்சுகிட்டது எனக்கு தெரியும் பாவா! ஆரம்பத்துல வேணாம்னு சொல்ல நினைச்சேன். இப்படியாவது பழக்கமாகட்டுமேன்னு நானும் தெரிஞ்ச மாதிரி காமிக்கல!”
“எனக்கும் அதே எண்ணந்தான் சாலா, சொன்னா நீ தப்பா எடுத்துகிட்டா என்ன செய்றதுன்னுசொல்லாம தூக்கி வச்சுகிட்டேன்.”
“நேரமாகுது. சாப்பிடுற ஒருவேளை சாப்பாட்டையும் தள்ளி வைக்காதீங்க! நான் போய் கொண்டு வரேன்” என பரிவாய் சொன்னவள் உணவைக் கொண்டுவர, அப்பொழுது சின்னாவும் தந்தையின் மடியில் உறங்கி இருந்தான்.
“சாப்பிட்டா கை கழுவ எழுந்திரிக்கனும், ரெண்டு பேரும் முழிச்சுப்பாங்க. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம இருந்தா ஒன்னும் ஆகாது.” தன் பிள்ளைகளை விட்டு நகர மாட்டேன் என்று ரிஷபனும் அடம் பிடிக்க, அவன் பேச்சை காதில் வாங்காமல்உணவை தட்டில் போட்டுக் கொண்டவள்,
“என் கை சுத்தமா இருக்கு, நான் ஊட்டி விடறேன் மறுக்காம சாப்பிடுங்க!”
அடுத்தடுத்த நிகழ்வுகளால் உணர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்தவனுக்கு, உரிமையுடன் தன்மேல் அக்கறையோடு மனைவி செய்த செயல் நெஞ்சை நெகிழ்த்தியது.
கீழே சென்று அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள் மாமனாரிடம் சின்னா தங்கள் அறையில் தங்கி கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு மேலே வரும் பொழுது, ரிஷபன் இருவரையும் கட்டிலில் படுக்க வைத்து கீழே விழாமல் இருக்க தலையணையில் அணைகட்டிக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு நானும் கீழே படுக்கப்போறேன்!”
“நான் அத்தம்மா ரூம்ல படுத்துக்கவா பாவா? நீங்க இங்கே இருங்க!”
“பொம்மி உன்னை தேடினா அந்த நேரத்துல தூக்கிட்டு வந்துபெரியவங்களையும் இடைஞ்சல் பண்ணனுமா? என்னாலஉனக்கு ஒரு தொந்தரவும் இருக்காதுன்னு நான் சொன்னாதான் நீ நம்புவியா?” என்று ஆணித்தரமாய் அவன் கேட்ட கேள்வியில் பதில் சொல்ல வார்த்தை வராமல், அவளிடத்தில் உறங்கபோக ரிஷபன் பால்கனிக்கு சென்று விட்டான்.
“இங்கே வந்து உட்காரு சாலா!” என்று அழைத்தவன் தோரணையே, இன்று உன்னுடன் பேசியே ஆகவேண்டும் என்ற கட்டளை இருந்ததோ?
“எனக்கு தூக்கம் வருது பாவா!”
“ரொம்ப நல்லது. என் மடியில படுத்துக்கோ சாலா, நிமிசத்துல தூங்கிடலாம்.” சிறிய புன்னகையுடன் விடாமல் அழைக்க,
“அ… து இல்ல… ஏதோ ஒரு படபடப்புல உங்கமேல சாய்ஞ்சுட்டேன்.” என தடுமாறி பேசியவளைதன்னருகே இழுத்து கொண்டு வந்தமர்ந்தான் ரிஷபன்.
“உன்னோட கஷ்டமான நேரத்துல சாய்ஞ்சுக்க என் தோள் இருக்குங்குற நினைப்பு இருந்தாலே போதும் சாலா!” என மனைவியின் முகத்தை பார்த்தே சொல்ல,
“இனி இது மாதிரி உணர்ச்சிவசப் படமாட்டேன்!” சொல்லிக்கொண்டே தலைகுனிந்து கொண்டாள்.
“ம்ப்ச்… சாலா என்னைப் பாரு, நான் உன்னை இப்பவும் தப்பா நினைக்கல. நீ வீட்டுல அடைஞ்சு கிடக்கும் போதே எனக்கு புரிஞ்சுருக்கணும், உன்னோட நிலைமை என்னனுநான் கேட்டுருக்கனும். என்னோட மனசுக்கு பிடிச்சு, உங்கள ஏத்துகிட்டேன்னு சொன்னதுல இப்ப அர்த்தமே இல்லாம போச்சு நான் தப்பு பண்ணிட்டேன்.”
“உங்களுக்கு தெரிஞ்சு இருந்தாலும் எங்களோட நிலைமை இதுதான்”
“இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு இருப்ப சாலா?”
“தெரியல! எனக்கு வெளியுலகத்தை பார்க்க இஷ்டம் இல்ல.”
“மீளமுடியாத வலின்னு எதுவுமே இல்ல சாலா. உனக்கு கிடைச்ச வாழ்க்கை மேல நம்பிக்கை வை, உன் வலிகளை அது மறக்க வைக்கும்.”
“என்னால முடியாத விஷயத்த செய்யச் சொல்றீங்க பாவா!”
“பிரச்சனை என்னனு சொல்லாம, கோழைத்தனமா பேசினா எனக்குப் பிடிக்காது சாலா.”
“என்னோட பிரச்சனை முடிஞ்சு போனது, இந்த வலி எப்போவும் எனக்கு தீராது.”
“உன் பிரச்சனைய மறைக்க பார்த்தே என்கிட்டே இருந்து நீ தள்ளிப் போற, நான் அதே பிரச்சனைய தீர்த்து வைக்கவே உன் பக்கத்துல வர நினைக்கிறேன்.” பொறுமையின் விளிம்பில் நின்று ரிஷபன் பேசிக் கொண்டிருந்தான்.
“என்னை கட்டாயப்படுத்தீங்க!” அசலாவின் பிடிவாதம் இது.
“என்னை நம்பி வந்த பொண்ண சந்தோசமா வாழவைக்கிற கடமை, அக்கறை எனக்கு இருக்குஇதுதான் நான்.” விடாக் கண்டனாய் பேசினான் அவன்.
“நாங்க இப்படித்தான். இதுல மாற்றம் இல்ல!” – அசலா
“உன்னோட முதல் கல்யாண வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டியா? சேது(அசலாவின் முதல் கணவன்) கொடுமை படுத்தினானா?”
“அப்படியெல்லாம் இல்ல! நாங்க ரொம்ப சந்தோசமா இருந்தோம்” முன்னாள் கணவனைபற்றி, இந்நாள் சரிபாதியிடம் சொல்லும் போது சங்கோஜம் வந்தது.
“வேலை பார்த்த இடத்துல யாரும் தப்பா நடந்தாங்களா? யார்னு சொல்லு வெட்டிப் போட்டு வர்றேன்.” பல்லைக் கடித்துக் கொண்டு ரிஷபன் சொல்லும் போதே கண்களில் ரௌத்திரம் குடிகொண்டது.
“இல்ல பாவா.”
“அப்புறம் என்ன பிரச்சனை? இன்னைக்கு சொல்லியே ஆகணும்.”
நிமிட நேர அமைதிக்கு பிறகும் கணவனின் கண்டிப்பான பாவனையும், உறுத்து விழிக்கும் பார்வையும் கட்டிப் போட கடந்த காலத்தை பற்றி பேச ஆரம்பித்தாள் அசலாட்சி.
“நம்ம மூணு பேர் அப்பாக்களும்(வேங்கட ராமைய்யா, சுந்தர ராஜுலு, சங்கரய்யா ) விவசாயம் பார்த்துட்டு, அடுத்தடுத்த கிராமத்துல தங்கி இருந்தாலும், அவங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது எனக்கு தெரியும். கவர்மென்ட் உத்தியோகம் கிடைச்ச ஒரே காரணத்துல எங்க அப்பா தமிழ்நாட்டுல தங்க வேண்டிய கட்டாயம்.
எங்க அத்தை கனகம்மாவ, சங்கரய்யா மாமாக்கு கட்டிக்கொடுத்த கையோட தமிழ்நாட்டுல அப்பா செட்டில் ஆயிட்டார். கிராமத்துல வளர்ந்த எங்கம்மா அன்னலட்சுமியும், அப்பாவோட சௌகரியத்துக்காக சென்னைக்கே வந்து குடித்தனம் ஆரம்பிச்சாங்க.
இந்த காரணமோ, என்னவோ உங்க அப்பாவுக்கும், எங்க அப்பாவுக்கும் சில வருஷம் எந்த தொடர்பும் இல்லாம இருந்தது. சொந்த தங்கை குடும்பங்கிற முறையில சங்கரய்யா மாமா குடும்பம் கூட ரொம்ப நெருக்கம்னு சொல்றதவிட, நான் அவங்க வீட்டுக்கும் செல்லப் பொண்ணாத்தான் வளர்ந்தேன்.”
“——“
“போஸ்ட் ஆபிஸ் உத்தியோகம், டவுன்ல மாத்தி மாத்தி போஸ்டிங் போட்டதால நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையிலதான். ஸ்கூல்லீவ், அப்பாவோடலீவ் எல்லாம் பிளான் பண்ணிதான் கிராமத்துக்கு வந்துட்டு போவேன். அதனால எனக்கு கிராமத்து பழக்க வழக்கம் அவ்வளவா தெரியாது. அடுத்தடுத்து ஸ்பெஷல் கிளாஸ், காலேஜ் போகனும்னு இடையில கிராமத்துக்கு வர்றதும் எனக்கு விட்டுப் போச்சு. அம்மா மட்டும் திருவிழா சமயத்துல வந்துட்டு போவாங்க.”
“——“
“சங்கரய்யா மாமா பையன் சேது மாதவன் படிப்பு முடிச்சதும், சென்னையிலேயே வேலை கிடைச்சது. எங்க வீட்டுலயே தங்கி வேலைக்குப் போனார். கிராமத்துக்கு வழக்கப்படி, சின்ன வயசுலேயே எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சதாலே பெரிய வித்தியாசம் இல்லாம ரெண்டு பேரும் பழகினோம்.
சேது உங்கள பத்தி நிறைய பேசுவார். உங்க தைரியமும், பக்குவமான பேச்சும் எல்லாரையும், உங்ககிட்ட கட்டிபோடும்னு சொல்லுவார்.”
“அவன் ரொம்ப நல்லவன் சாலா! எல்லார் மேலயும் ரொம்ப பாசமா இருப்பான்.” நண்பனின் நினைவில் ரிஷபனுக்கும் நெஞ்சம் கனத்தது.
“ஆமாம் பாவா! எந்த காரணத்துக்காகவும் கோபப்பட மாட்டார். என்னை பி.காம்முடிச்சதும், மேற்கொண்டு படிக்கச் சொல்லி ரொம்பவே கட்டாயபடுத்தினார். எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல, வீட்டுலயும் கல்யாணம் பண்ணிவைக்க ஆசைப்பட்டதால அந்த பேச்சை அதோட விட்டுட்டோம்.”
“கல்யாணம் முடிச்சதும் படிச்சிருக்கலாமே சாலா.”
“ஏனோ எனக்கு அது தோணல பாவா! கல்யாணம் முடிஞ்சு சேது கூட இங்கே வரும் போதுதான், உங்கள எனக்கு அறிமுகபடுத்தி வச்சார். அவரோட நலம் விரும்பியா எப்போவும் உங்கள சொல்லிட்டே இருப்பார். அப்போ எல்லாம் நான் உங்ககூட பேசினதில்ல. ரெண்டு, மூணு தடவை உங்க வீட்டுக்கும் வந்திருக்கேன்.”
“—–“
“சேதுகூட நான் வாழ்ந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமானது. எந்த ஒரு கட்டாயமோ, கண்டிப்போ இல்லாத புகுந்தவீடு. அன்பை மட்டுமே கொட்டிக் கொடுக்கிற பெரியவங்க, என்னை ரொம்ப அக்கறையா பார்த்துக்கிற புருஷன்.ஒரு பொண்ணுக்கு இதவிட வேறன்ன பாக்கியம் வேணும், அத்தனைக்கும் சொந்தக்காரியா இருந்தேன்.”
“—–“
“மூணு வருஷம் கழிச்சு பொம்மி பொறந்தா, எங்க எல்லாரையும் தன்னோட சிரிப்பால கட்டிப் போட்டா பத்மாக்ஷினி!” பெருமூச்சு விட்டபடியே சொன்னவளின் உள்ளம் அன்றைய நாட்களை நினைத்துப் பார்த்தது.