Ponnoonjal15

ஊஞ்சல் – 15

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு…

இருள் விலகிய காலை வேளை, மரங்களடர்ந்த பள்ளிமைதானத்தின் பெரிய மரத்தடித் திண்டில் இளம்தென்றலை உள்வாங்கியவாறு ரிஷபன் தோரணையாக அமர்ந்திருந்தான்.

வயதுக்கேற்ற கம்பீரம் மெருகேறியிருக்க, அடங்கியிருந்த சிகைக்குள் அடைபட்ட வெள்ளியிழைகள் தலையிலும், காதோரத்திலும் ஆங்காங்கே தென்பட்டன. முரட்டுத் தோற்றம் மாறாமல் இருந்தாலும், கண்களில் கனிவும், பிறரை அரவணைக்கும் மென்னகையும் ரிஷபனிடம் வெகுவாய் கூடியிருந்தது.

சிறுவயதில் தன்னை விட்டு விலகாமல் சுற்றிக் கொண்டேயிருந்த மகளுக்கு மெல்லமெல்ல சிலம்பாட்டத்தை சொல்லிக் கொடுக்க, அசராமல் கற்றுக் கொண்டாள் பொம்மி. ஒருசெயலை பிடித்துக் கொண்டால், அதை முடிக்கும்வரை ஓயாத குணம் கொண்டவளுக்கு, மனதை ஒருநிலைப்படுத்தி சிலம்பத்தை கற்பது அத்தனை கஷ்டமாக இல்லை.

சரியாக தனது பனிரெண்டாவது வயதில் சிலம்பாட்டத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவள், பள்ளிகளிலும், மாவட்டந்தோறும் நடக்கும் சிலம்பப் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கிக் குவித்திருந்தாள்.

சின்னாவைவிட சிலம்பத்தின் மீது இவளுக்கு இருந்த பற்றுதல் ரிஷபனை பிரமிக்க வைத்தது. அவளது விருப்பம்போல் சிலம்பத்தின் அனைத்து சுழற்றும் முறைகளையும் தானே முன்நின்று கற்றுக் கொடுத்தான்.

வெற்றி தோல்விகளை சமமாகப் பாவிக்கக் கற்றுக் கொடுக்கும் விளையாட்டு சிலம்பம். சிறுவயதில் இருந்தே இதனை விளையாடுவதன் மூலமாக தன்னம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் குணம், நினைவாற்றல் போன்றவற்றை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை தன்மகளின் மூலம் நேரிலேயே கண்டு கொண்டான்.

சிலம்பத்தின் உன்னதத்தை அறிவுறுத்தி குழந்தைகள் அனைவருக்கும் கற்க வைத்தான். அதற்கு பொம்மி மற்றும் சின்னாவை ஆசானாக மாற்றி குழந்தைகளின் மனநிலைக்கேற்ப கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

தங்கத்தோடு கலந்த சிவந்த நிறத்தில், முதுகு வரை படர்ந்த அடர்ந்த கூந்தலை ஹேர்பண்டில் அடக்கியவாறே, நல்ல உயரத்துடன் தனது பெரிய விழிகளை கவனமாக மாணவர்கள் மீது பதித்தவாறு, கம்பினை எப்படி சுழற்றுவது என்று செய்து காட்டிக் கொண்டிருந்தாள் பதினைந்து வயது பொம்மி.

உடலை இறுக்காத டிசர்ட் மற்றும் டிராக் பேண்டுடன், அன்றைய வகுப்பை முடித்துவிட்டு வியர்வையில் வந்தவள் முகத்தை கழுவிக்கொள்ள, வாஞ்சையுடன் அருகே அமர்த்தி முகத்தை துடைத்து விட்டான் ரிஷபன். பின்னோடு வந்த அவளது ரோஸ்குட்டியும் தந்தையின் மடியில் அமர்ந்தவாறே,

“எனக்கு கால்வலிக்குது நாணா!” என்றே சிணுங்கிக் கொண்டாள் எட்டுவயது அனுஜாக்ஷினி. பெரியவர்களுக்கு அஜுகுட்டி… சின்னாவின் முகஜாடையும், பொம்மியின் நிறமும் கண்களும் கலந்த செல்லச்சித்திரம்.

“இந்தக் கேடிய நம்பாதீங்க நாணா! என்னை மாதிரியே இவளும் ஒருவாரம் லீவெடுக்க பிளான் பண்றா” – பொம்மி.

“அலகாது(அப்படியில்ல) நாணா! நிஜங்கா செப்தானு! தோ… பாருங்க, இங்கேதான் வலிக்குது” தன்பாதத்தை காண்பித்து முகத்தை சுருக்கியபடியே வலதுகாலினை தனது அக்காவின் மடியில் வைக்க,

“ஒழுங்கா பேசுடி! நீ என்ன சொல்றேன்னே புரியல? எல்லாத்தையும் கலந்து கட்டி தள்ற” – பொம்மி.

“அம்மாட்ட மருந்து போட்டுவிட சொல்லலாம் அஜுகுட்டி!” என்று சிறிய பெண்ணை கொஞ்சியவன், அவள் கால்களை பிடித்துவிட,

“இவசீன் போட்றா நாணா! வீட்டுக்கு போனதும் சைக்கிள் எடுத்துட்டு ரவுண்டடிப்பா பாருங்க! இவளுக்கு இந்த கிளாஸ் பிடிக்கல, அப்படித்தானே ரோஸ்குட்டி” – பொம்மி.

“நீ மட்டும் லீவ் எடுக்குற!” – அஜூ

“எனக்கு மன்ந்த்லி டெஸ்ட் இருக்குரா. டெய்லி கொஞ்சநேரம் பிராக்டிஸ் பண்ணுடி” என்று சமாதானம் கூறினாலும் சுருக்கிய முகத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

“அம்மா ரொம்ப செல்லம் குடுத்து, இவ எல்லாத்துக்கும் மொகத்தை தூக்கி வைக்கிறா நாணா!” என பெரியவள் தந்தையை பார்க்க, அவனும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்னாச்சு? எங்க நாணாக்கு!” பொம்மி விழிவிரிக்க

“உன்னோட சீனிப்பா என்னாச்சு?” கடிந்துகொண்டே ரிஷபன் கேட்க,

“ஓ… அதுவா, உங்க சாலாம்மாதான் நாணானு கூப்பிட சொல்லி ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டாங்களே! பேர்சொல்லி கூப்பிட கூடாதாம். அதுக்கு உங்க ஆசைபொண்ணும் அருமைமகனும் டிரம்ஸ் வாசிச்சு மசோதாவ அமுல்படுத்திட்டாங்க” என்று முகத்தை தூக்கிவைத்து குறைபட்டுக் கொண்டாள்.

“மத்தவங்க முன்னாடி அப்படி கூப்பிடச் சொல்லியிருப்பா பங்காரம்! மத்தபடி எப்போவும் உன்னோட சீனிப்பாதான் எனக்கு பிடிக்கும்” – ரிஷபன்.

“அதானே! அம்மா சொன்னதுக்கு நீங்க என்னைக்குத்தான் மறுப்பு சொல்லியிருக்கீங்க! போங்க சீனிப்பா… உங்கமேல கோபம் வருது” என்று செல்லமாய் முறுக்கிக்கொள்ள,

“ஹஹா… உனக்கு என்ன தோணுதோ அதசெய்ரா அம்மு! வீட்டுல உன்னோட இஷ்டத்துக்கு இருக்க எந்த தடையும் சொல்றதில்லையே? வளர்ந்த பொண்ணுக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்றவள நான் கேள்விகேக்க முடியுமாரா?”

“சாலாம்மா சரணம்னு சொல்லாததுதான் பாக்கி! அவங்க பேச்ச நான் கேக்க போறதில்ல… கிளம்புங்க” சிங்கமாக சிலிர்த்துக் கொண்டு புறப்பட,

“ரொம்ப கோபப்படாதே பாப்கார்ன், பொரிஞ்சு கருகிடப் போற!” என்று வாரிவிட்டது ரோஸ்குட்டி.

“அடிங்க… அந்த சின்னா சொல்லிக் குடுத்து பேசுறடி! இன்னைக்கு அவன் வரட்டும், உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு” – பொம்மி.

“வெவ்வே… அண்ணயா உன்கிட்ட சிக்க மாட்டாங்களே!” என்று வக்கனையாய் பேசிவிட்டு துள்ளிக் குதித்து ஓடினாள்.

“கால்வலின்னு அழுதவ ஓடுறத பாருங்க சீனிப்பா!” என்று மேலும் பல வம்பு பேச்சுக்களுடன் வீட்டை அடைந்த சகோதரிகள் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டனர்.

“அச்சும்மா பசிக்குது டிபன் ரெடியா?

“ஏய் ரோஸ்குட்டி! உன்னோட புக்ஸ் எல்லாம் எடுத்து பேக்ல அடுக்கி வைச்சியா?”

“அவ்வா எனக்கு ஜடை பின்னி விடுங்க… அவளுக்கு அம்மா குடுமி போடுவாங்க, சீக்கிரம் வாங்க” என்று குரலை உயர்த்தியபடியே வீட்டை ஆட்டங்காண வைத்தாள் பொம்மி.

“நாள் முழுக்க வேலை பாக்குறதுகூட கஷ்டமில்லடி, உங்க ரெண்டுபேரையும் ஸ்கூல் அனுப்புறதுலதான் நான் முழிபிதுங்கி நிக்கிறேன்” என்றபடியே அங்கே வந்து நின்றாள் அசலாட்சி.

சற்றேபூசிய உடல்வாகு, மஞ்சளை குழைத்த முகம்… முன்னைவிட திருத்தமான பேச்சுக்களும், அதிகாரமான, அன்பான அதட்டல்களுடன் கடிந்துகொண்டே சிறியவளை தயார் செய்தாள்.

“உன் ஆசைபொண்ணை குளிக்கவைக்கிற பெரிய வேலையகூட நான்தான் செய்றேன். ரெடி பண்ணி அனுப்புறது உனக்கு வேலையா அச்சும்மா?”

“அடங்குடி! பதினைஞ்சு வயசு கழுத ஒருஜடை பின்னிக்க மாட்டியா? அவ்வாவ டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்” – அசலா.

இடைப்பட்ட வருடங்களில் உடல்நிலை சரியில்லாமல் கோகிலம்மா இறைவனடி சேர்ந்திருக்க, அவரை பின்பற்றியே அதற்கடுத்த ஆறே மாதங்களில் வேங்கடராமைய்யா தீவிர இதயவலியில் தூக்கத்திலேயே மனைவியை தேடிச் சென்றிருந்தார்.

இதிலிருந்து சற்றே ஆசுவாசபடுத்திக் கொண்டவர்களை உலுக்கி போட்டது அசலாட்சியின் தந்தை சுந்தரராஜுலுவின் மரணம். முன்தினம் பெய்த மழைநீரில் கவனமின்றி கால்களை வைக்க, அதுவோ நொடியில் அவரை வழுக்கிவிட்டு தலையில் அடிபட, அந்த இடத்திலேயே மேலோகத்திற்கு பயணச்சீட்டு எடுத்திருந்தார்.

கனகம்மா மற்றும் சங்கரய்யா இவர்களுடனேயே தங்கிக்கொள்ள, இப்பொழுது அவர்களும் தங்கள் தேகஆரோக்கியத்தில் சற்று பின்னடைந்திருக்க, அதன் காரணமே அசலாட்சி மகளைக் கடிந்து கொண்டது.

“இருக்கட்டும் அசலா! அவளும் என்ன செய்வா? காலையிலேயே சிலம்பம் கத்துக்குடுக்க போயிட்றா… பெரியகிளாஸ் படிக்கிறான்னு லேட்டாதானே வர்றா!” என்று காலை உணவை பேத்திகளுக்கு ஊட்டிவிட்டவாறே பொம்மியை அரவணைத்துக் கொண்டவர் கனகம்மா பாட்டி.

“ஸ்வீட் அவ்வா…” என்று பாட்டியை கொஞ்சிக்கொண்ட பொம்மி,

“உங்களுக்கு தெரியுறது அச்சும்மாக்கு தெரியல பாருங்களேன்” தாயை சீண்டிவிட, இது என்றும் நடக்கும் வேலைதானே என்று அறிந்துகொண்டவள்,

“உன்ன திருத்த முடியாதுடி… அஜுமா ஷூ போட்டு விடவா?”

“இல்ல, அக்காட்ட போட்டுக்குறேன்”

“ஏண்டி என்கிட்டே போட்டுகிட்டா என்னவாம்?”

“நீ லெப்ட், ரைட் பார்த்து போடமாட்டம்மா! ஸ்கூல்ல மாத்தி போட்டுட்டு வந்தேன்னு சொல்லியே மிஸ், என்னை டென்ஷன் பண்ணுவாங்க. ஃப்ரண்ட்ஸ் முன்னாடி எனக்கு ஷேம் ஆகிடும்” சீரியசாக கிண்டலடித்தாள் அஜு.

“செம்ம பல்ப்டி என் ரோஸ்குட்டி! அச்சோ… என் அச்சும்மா முகம் சுருங்கிப் போச்சே! விடும்மா சின்னக்குட்டி தானே!” – பொம்மி.

“ஆமா அசலா! பொம்மிய விடவா, அஜுகுட்டி உன்ன கஷ்டப்படுத்துறா?” என்று பாட்டி சொல்லவும் பொம்மியை தவிர மற்ற இருவரும் சிரித்தனர்.

“அவ்வா! நீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்களா? இல்ல இவங்களுக்கா? ஸ்கூல் போயிட்டு வந்ததும் பேசிக்கிறேன் வாடிகுட்டி போகலாம்” என்றவள் இருவரின் கனத்த புத்தகபைகளை தூக்கி கொள்ள, மதிய சாப்பிட்டு பைகளை எடுத்துகொண்டு அசலாட்சி வந்தாள்.

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா பிளஸ் ரெடியாக துடைக்கப்பட்டு நின்றிருக்க, அவர்களது பைகளை எல்லாம் வண்டியில் வைத்தான் ரிஷபன்.

“அஜுபங்காரம்! இது நீகோஷம்(இது உனக்காக)” என்று சொல்லியபடியே சாக்லேட் ஒன்றை கொடுக்க, ஆசையுடன் வாங்கிகொண்டு முத்தம் பதிக்கவும் மறக்கவில்லை.

“இன்னைக்கு ஈவனிங் பாருங்க சீனிப்பா! இதே குட்டி என்ன அவதாரம் எடுக்கிறானு? நீங்க என்ன செஞ்சாலும் சின்னையாவ சுத்திட்டு வந்து நம்மள கண்டுக்க மாட்டா அப்படிதானே ரோஸ்குட்டி” என்று அவளும் கொஞ்ச,

“அவுனு நாணா!” என்று தன்பிள்ளைகுணம் மாறாமல் பதில் சொன்னாள் சின்னச்சிட்டு.

“ஹஹா… பத்திரமா போங்க! மூனுமணிக்கு நாணா வர்றேன்ரா அஜுகுட்டி!”

“வேணாம் நாணா, அண்ணயா வரட்டும்” என்று சின்னவள் சொல்லும்போதே சின்னாவின் இடத்தில் அவளுக்கு உண்டான பிடிப்பு நன்றாக வெளிப்பட்டது.

“எஜமானியம்மா நீங்களும் இன்னைக்கு ரைஸ்மில்லுக்கு லீவா?” மனைவியை பார்வையால் தழுவிக்கொண்டே ரிஷபன் கேட்க,

“தெரிஞ்சே கேப்பீங்களா பாவா?” சிரிப்போடு அசலாட்சி பதில் சொல்ல,

“உம்பையன் என்ன போருக்கா போயிட்டு வர்றான்? இங்கே இருக்குற சித்தூர்ல அஞ்சரை வருஷ டாக்டர் படிப்பு படிக்க போயிருக்கான். மூணு மாசத்துக்கு ஒருதடவ இங்கே வந்து எட்டிப் பார்த்துட்டும் போறான். நாலுவருஷ படிப்பு முடிஞ்சாலும் இன்னும் அம்மா… அம்மானு சொல்றது மட்டும் மாறல” சிரித்துக்கொண்டே மனைவியை சீண்டினான்.

“போதுமே பாவா! இப்ப இவன் வர்றத குத்தம்னு சொல்றீங்களா? இல்ல என்னை சுத்தி வர்றத தப்புனு சொல்றீங்களா?” முறைப்புடன் கேட்க,

“நான் எதுவும் சொல்லல சாலா! கண்ணு கூசுது, முறைக்குறத நிப்பாட்டு”,

“இடக்கு மடக்கா பேசுறத எப்போதான் நிப்பாட்ட போறீங்களோ?” என அலுத்துக் கொண்டவள் பிள்ளையை வரவேற்க தயாரானாள்.

மதியம் பள்ளி முடிந்து அரைமணி நேரம் கடந்தும், தன் அண்ணன் வராத கோபத்தில் பள்ளிகேட் அருகிலேயே அமர்ந்திருந்தவள், முகத்தை ஏகத்திற்கும் தூக்கி வைத்துக்கொண்டு, கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதி காத்தாள் அஜுக்குட்டி.

வாட்ச்மேன் மேலும் சற்றுநேரம் பார்த்துவிட்டு பள்ளி அலுவலகத்தில் தெரிவித்துவிட, அங்கே வந்தாள் பொம்மி.

“நாணாவ வரச் சொல்லவா? ஃபோன் பண்ணவாரா?”

“வேணாம்க்கா அண்ணயா வருவாங்க! நேத்து என்கிட்டே சொன்னாங்க!” என்று சோகத்தில் சொல்ல,

“அண்ணாக்கு டயர்டா இருக்கும்ரா! நாணாவ வரச் சொல்றேன்”

“வேணாம், அண்ணயாதான் வேணும்…” என்று அழ ஆரம்பிக்க,

“அச்சோ! என் ரோஸ்குட்டி ரொம்ப நல்ல பொண்ணாம். வீட்டுக்கு போனதும் அந்த சின்னையாவ ஏன் அஜுகுட்டிய கூப்பிட வரலன்னு கேட்டு, ரெண்டு பேரும் பனிஷ் பண்ணுவோம் சரியா? இப்போ சிரிப்பியாம்” என்று சமாதானப்படுத்தியவள் கேண்டீன் அழைத்துச் சென்று, அவளுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கிக் கொடுத்து தன்வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் வேளையில் வந்து நின்றான் சின்னா.

ஆறடி உயரம்… நல்ல சிவந்த நிறம், அலையலையான கேசம் சரியாக வாரப்படாமல் நெற்றியில் புரள, குழந்தை முகத்தை மறக்கடிக்காத வாலிபனாக தனது இரண்டு தங்கைகளின் முன் மூச்சு வாங்கியபடியே வந்து நின்றான், இருபத்தியொரு வயது பத்ரிசீனிவாசன் என்னும் சின்னா.

“ரோஸ்குட்டி! அண்ணயா வச்சானுரா!(வந்திட்டேன்டா)” என்றவனின் பேச்சே, அவன் அவசரகதியில் வந்து நின்றதை சொன்னது.

“லேட் ஆச்சுரா பங்காரம்! சாரிரா அம்மு” இருவரிடமிருந்தும் பதிலில்லை.

“அண்ணயா தோப்புக்கரணம் போடவா?” என்று அடுத்தடுத்து பெரியவன் கெஞ்ச, சின்னக்குட்டியின் நெஞ்சம் ஆட்டம் கண்டது.

“வேண்டாம் சின்னையா! இங்கேயே ரெண்டு தடவை குரங்கு பல்டிஅடி, அதுபோதும்” என்று நக்கல் செய்தாள் பொம்மி.

“அவுனு அண்ணயா! இங்கேயே செஞ்சுமுடி, இல்லன்னா வீட்டுக்கு போய் உனக்கு பெரிய பனிஷ்மெண்ட் குடுக்கலாம்னு அக்கா சொன்னா!” – அஜு.

“அடிப்பாவி! இவ்ளோ நேரம் அழுதியேனு சமாதானப்படுத்த வந்த, என்னையவே மாட்டி விட்றியா? போடி… போ… இனி உன்னை என்கூட சேர்த்துக்க மாட்டேன்”

“அப்டி சொல்லாதே பொம்மிக்கா… நான், உன் செல்லிதானே?”

“இந்த பாசத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல, போய்ட்டு வாடி, நான் கிளாஸ்க்கு போறேன்” – பொம்மி.

“உன் கிளாஸ்ல வந்து பர்மிஷன் கேட்கவா பொம்மி? எல்லாரும் ஒன்னா போலாம்” – சின்னா.

“வேண்டாம் சின்னையா! நாளைக்கு டெஸ்ட் இருக்கு, இங்கே இருந்தே போர்ஷன் முடிச்சிட்டா, வீட்டுக்கு வந்து ரோஸ்குட்டிக்கு ஹோம்வொர்க் செய்ய வைக்க எனக்கு சரியா இருக்கும்.” – பொம்மி.

விளையாட்டுத் தனங்கள், அடவாடி பேச்சுக்கள் என்று இருந்தாலும், பொறுப்பு மற்றும் பாசம் மூவரையும் அழகாய் பிணைத்து வைத்திருந்தது.

சின்னா வீட்டில் இருக்கும் இரண்டு நாட்களும் அசலாட்சி மற்றும் அஜுவின் அருகிலேயே இருப்பான். எப்பொழுதும் மூவர் கூட்டணியாகவே இருப்பர்.

தோட்டத்தில் அஜுகுட்டி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்க, சின்னாவும், அசலாட்சியும் அவளை பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தனர். அங்கே சின்னாவின் அலைபேசியை கொண்டுவந்த பொம்மி,

“உன்னோட மொபைலையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ சின்னையா!” என அவன் கைகளில் அதை திணிக்க,

“ஃபோன் வந்ததா பொம்மி! அட்டென்ட் பண்ணியா?” என்று அலைபேசியை பார்த்தபடியே வந்த அழைப்புகளை யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தான். அதனை பார்த்தவள் சீண்டலுடன்,

“உன்னோட மன்கிபாத் என்ன சொல்லுது சின்னையா?”

“ம்ம்ம்…. இந்த சைத்தான விட்டு தள்ளியே நிக்க சொல்லுது பொம்மி” என்றவனின் மனம், தங்கை வம்பிழுக்க போகிறாள் என்று அலாரம் அடிக்க தொடங்கி இருந்தது. பிள்ளைகளின் பேச்சில் பெருமளவு தலையிடாமல் இருப்பாள் அசலாட்சி.

“அரே சைத்தான் கி பைஃயா! உன் ஃப்ரண்டிகிட்ட ரெட்டைவால்னு சொல்லி யாரடா பிராண்டி வச்ச??” பொம்மி முறைத்தே கேட்க,

“யார் பேசினா பொம்மி?”.

“நீ யார்கிட்ட என்னை ரெட்டைவால்னு சொன்னியோ, அந்த மதி மேடம்தான்”

“மஹதிகிட்ட பேசினியா?”

“நான் எங்கே பேசினேன்? ஏதோ நோட்ஸ் வேணுமாம்! எடுத்ததும் படபடனு பேசிட்டு, பதில் வராமா இருக்கவும்தான் யார் என்னனு கேக்குது அந்த அரைலூசு”

“அடிப்பாவி கொஞ்சம் மரியாதை குடுடி, செகண்ட் இயர் படிக்கிற ஜூனியர் அவ”

“அதுக்கு, அவகிட்ட என்னை ரெட்டைவால்னு சொல்வியா? அச்சும்மா! உன் பையன் ஏதோ ஃபிராடுதனம் பண்றான், என்னன்னு கேட்டுவை?” – பொம்மி.

“உன்னை தவிர வீட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்கனு கேட்டா பொம்மி! நானும் ரெட்டைவால் ஒன்னும், அதுக்கு கூஜா தூக்குற அரைடிக்கெட் ஒன்னும் இருக்குனு சொல்லி வச்சேன்” – சின்னா.

“ஆனாலும் ரொம்ப நல்லவடா உன் ஃப்ரண்டி! நல்லா பேசுறா. உன்ன வாலுன்னு சொன்னா, இங்கே கொட்டமடிக்கிற உங்க அண்ணாவ எந்த லிஸ்ட்ல சேர்க்கனு என்கிட்டேயே கேக்குது” என்று அடக்க முடியாமல் பொம்மி சிரிக்க, உடன் அஜுகுட்டியும் சேர்ந்து கொண்டாள்.

“அண்ணயா! தொப்பி தொப்பி” – அஜு.

“அடிப்பாவி சேம்சைட் கோல் போட்றாளா அவ? யூ டூ ரோஸ்குட்டி” – சின்னா.

“எந்த சைட்னாலும் கோல் போடட்டும்… எதுக்கு நம்ம வீட்டு சென்சஸ் அவ்ளோ கிளியரா கேட்டு வச்சுருக்கா? சொல்லு ப்ரோ… இந்த மங்கியோட மன்கிபாத் என்ன சொல்லுது?” என்று சின்னாவின் தலையையும் நெஞ்சையும் சுட்டிக்காட்டியபடியே பொம்மி கேட்க,

“ஜஸ்ட் ஃப்ரண்ட்தான் பொம்மி! வேற எதுவுமில்ல. எங்க காலேஜ் சேர்மன் பொண்ணு அவ, அப்பப்ப வந்து டவுட்ஸ் கேப்பா! பிலீவ் மீமா” என்று தங்கையிடம் தொடங்கி அன்னையிடம் பேசி முடித்தான்.

“எதுக்குரா இத்தன விளக்கம் குடுக்குற? அவ விளையாடுறான்னு உனக்கு தெரியலையா?” என்ற அசலா மகளிடம் திரும்பி, “சின்னபொண்ணா படிக்கிற வேலைய மட்டும் பாரு” என கடிந்துகொள்ள,

“அதானே என்னை விரட்டி விடத்தான் நீங்க எல்லோரும் ரெடியா இருப்பீங்களே? இந்த டென்த் வந்தாலும் வந்தேன் படிபடின்னு வேற எதுவும் யோசிக்க வைக்காம மூளைய ஃப்ரிஜட்குள்ள வைக்க சொல்றாங்க, டூ பேட்” என்று அலுத்துக் கொண்டாள்.

“அடுத்த வருஷம் எந்த குரூப் எடுக்கப்போற பொம்மி? நீட்கோச்சிங் போறியா? உன்னோட டேலேண்ட்க்கு ஈசியா பாஸ் பண்ணிரலாம்”,

“நீ மனுஷங்கள பாரு! நான் மண்ணை காப்பாத்துற வேலைய பாக்குறேன்”

“புரியல பொம்மி? மெடிக்கல் ஏன் வேண்டாம்னு சொல்ற?” – சின்னா.

“வீட்டுக்கு ஒரு டாக்டர் போதும், எனக்கு அக்ரீலதான் இன்ட்ரெஸ்ட் இருக்கு. நாணா வேலைய நான் தொடர்ந்து பாக்கப் போறேன்” – பொம்மி.

“அதெல்லாம் பொண்ணுகளுக்கு சரிவராது பொம்மி” என்று அசலாட்சி கூற,

“தொடர்ந்து இங்கேயே இருக்க முடியுமா உன்னால?” என்று தாயின் சேர்ந்து கொண்டான் சின்னா.

“இப்படி சொல்லியே பொண்ணுங்கள வீட்டுல பூட்டி வைக்கறீங்க சின்னையா! எனக்கு எது பிடிக்குதோ அததான் நான் செய்யப் போறேன்” – அசலா.

“டெய்லியும் மண்ணுல விளையாடுவியாக்கா…” – அஜு.

“மண்ணுல மட்டுமில்ல… சேறு சகதியிலயும் விழுந்து புரளப்போறேன், நீயும் வர்றியா?” – பொம்மி.

“ஓ… வர்றேனே! டன்… டன்” என்று குதூகலித்து தனது இரண்டு கட்டை விரல்களையும் அஜு உயர்த்திக்காட்ட, பொம்மியும் தனது விரல்களை உயர்த்தினாள்.

“அண்ணயா நீயும் செய்! அக்கா வின் பண்ணுவா, அம்மா நீயும்…” என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தாள்.

பொம்மியின் இந்த முடிவு இருவருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அவளது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து ரிஷபனிடத்திலும் சொல்லி வைத்தனர்.
*************************************************

“இவங்க என்னோட வொய்ஃப் வாணி, இவன் என் பையன் விஸ்வேந்தர்” என்று தன்குடும்பத்தை ரிஷபனிடம் அறிமுகப்படுத்தினார் அந்த கிராமத்தின் ஏசிபி ஸ்ரீதரன்.

ஊருக்கு பெரியமனிதர் என்ற முறையில், தனது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தவர், தன் மகனுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“அதுக்கென்ன சார்… டெய்லி காலையில ஸ்கூல் கிரவுண்ட்ல கிளாஸ் நடக்குது, வரட்டும் பார்த்துக்கிறேன்” என்று சொன்ன ரிஷபனும் மனைவி மகள்களை, அறிமுகபடுத்தி வைத்தான்.

வீட்டிற்கு காவல்துறை அதிகாரியின் வருகை அசலாட்சியை கலக்கம் கொள்ள வைத்தது. அதை வெளிக்காட்டாமல் தள்ளி நின்றே நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, பொம்மி பேச்சு நடக்கும் இடத்தில் நின்று கொண்டாள்.

“என் பையனுக்கு வெளியே பழக்கவழக்கம் அவ்வளவா இல்ல… இன்னும் ரெண்டு மாசத்துல ரிசல்ட் வந்துட்டா காலேஜ் சேர்க்கணும், தைரியமா வெளியிடத்துல பேசணும். அதுக்கு தயார் பண்ணதான் உங்ககிட்ட இவனை விடபோறேன் ரிஷபன்…”

“நீங்க கவலைப்படாதீங்க சார்… ரெண்டு மாசம் முடிஞ்ச அளவுக்கு இவனை தேத்தி விட்றலாம்” என்று சொன்னபடியே அந்த பதினேழு வயது இளைஞனைப் பார்க்க, அவனோ அங்கு நடக்கும் பேச்சுக்களை கவனத்தில் கொள்ளாமல் அலைபேசியில் அலைந்து கொண்டிருந்தான்

“விச்சு கண்ணா! வந்த இடத்துல என்ன செஞ்சுட்டு இருக்க?” தாய் வாணி கடிந்து கொள்ள, மகனை அழைத்த அந்த விளிப்பு பொம்மிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“போர் அடிக்குதும்மா… சீக்கிரம் இங்கிருந்து போவோம்” என்று தன்தாயின் காதிற்குள் அவனும் கிசுகிசுத்தான்.

அசலாவிற்கு மனதில் ஏற்பட்ட தடுமாற்றம் உடலிலும் வர, வந்தவர்களுக்கு பழச்சாறையும் மகளிடமே கொடுத்து விட்டாள். அனைவருக்கும் கொடுத்தவள் எப்பொழுதும் பேசும் துடுக்குத்தனத்துடன், அவனை சிறுவனாக பாவித்து,

“விச்சு கண்ணா! ஆரஞ்ச்கலர் ஜூஸ் உனக்கு பிடிக்குமா?” என்று கேட்க, அவனும் திருதிருவென முழித்தான்.

“இவன்கிட்ட இருக்குற குறையே, இதுதான் ரிஷபன்! கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டான்” என்று பொம்மியின் செய்கையை ரசித்த ஸ்ரீதரன், மகனின் செய்கையில் வெகுவாக குறைபட்டுக் கொள்ள,

“பழகபழக சரியாகிடும் சார்! நாளையில இருந்து அனுப்பி வைங்க” என்று மேலும் சிறிதுநேரம் பேசிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தான் ரிஷபன்.

“என்ன பொம்மி இது? உன்னவிட வயசுல பெரியவன், முன்னபின்ன தெரியாதவங்கள இப்படிதான் கூப்பிட்டு சங்கடப்படுத்துவியா?” என்று ரிஷபன் கடிந்து கொள்ள,

“அவங்கம்மா கூப்பிட்டது நல்லா இருந்தது சீனிப்பா! அதான் ஒருதடவ சொல்லிப் பாக்கலாமேன்னு கூப்பிட்டேன். இனிமே செய்யல!” என்றபடியே தன்னறைக்கு சென்று விட்டாள்.

ஏனோ அந்த பெயர் பிடித்து போனதுபோல் ஒருபிரமை அவளுக்கு. அவ்வளவே! அதற்கு தந்தையிடமிருந்து கண்டனம் வருமென்று சற்றும் அவள் நினைக்கவில்லை.

“இதையே நான் செஞ்சா என்னை திட்டாதே, கண்டிக்காதேனு சொல்லி இருப்பீங்க” என்றும் போல் அசலாட்சி சலித்துக் கொள்ள,

“டிபார்ட்மெண்ட்ல இருந்து வந்தா, உள்ளே போய் உட்காருவியா சாலா? இன்னும் இந்த பயம் உன்னை விட்டு போகலயா?”

“அப்படியில்ல… ஒரு தடுமாற்றம் எப்படியும் வரச்செய்யுது பாவா! நான் என்ன பண்ண?”

“மாத்திக்க பாரு! இன்னொரு தடவ இப்படி நடக்க கூடாது” என்று கண்டிப்புடன் கூறிவிட்டான்.

முதல் வாரம் ரிஷபன் தனியாகவே விச்சுவிற்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்து ஊர் வேலைகள், சொந்த வேலைகள் அவனை சூழ்ந்து கொண்டதில் பத்து நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட, சிலம்ப வகுப்பை பொம்மி மற்றும் தனது சகாக்களிடம் கவனிக்க சொல்லிவிட்டு சென்றான்.

தனியாக வகுப்புக்கள் எடுத்ததால், விச்சுவை எந்த குழுவிலும் இணைத்து கொள்ளாமல் தனியே விட்டிருக்க, அவனும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“என்ன விஸ்வா? தனியா உக்காந்திருக்க!” – பொம்மி,

“இல்ல… எனக்கு யார் சொல்லிக் குடுக்க போறாங்கன்னு தெரியல? அதான் தனியா இருக்கேன்” – விஸ்வா.

“உன்னை மாதிரி புதுசா யாரும் வந்திருந்தா அவங்ககூட ஜாயின்ட் பண்ணி விடறேன்” என்று சொல்லிவிட்டு சென்றவள் சற்று நேரத்தில் வந்து,

“இப்போதைக்கு நியூகம்மர் யாருமில்ல விஸ்வா, நாணா வந்தபிறகு வர்றியா?”

“அதுக்குள்ள நாள் எல்லாம் வேஸ்டா போயிருமே? அடுத்து காலேஜ்க்கு போகன்னு இங்கே வரமாட்டேன், என்ன செய்ய?”

“நான் சின்ன பசங்களுக்கு மட்டுமே கிளாஸ் எடுப்பேன் என்கிட்டே கத்துக்கிறியா? உன்னைவிட எனக்கு சின்ன வயசுன்னு நீ ஃபீல் பண்ணினா வேணாம்” என்று தனக்கு தோன்றியதை பொம்மி கூற,

“அதெல்லாம் நினைக்க மாட்டேன். அன்னைக்கு நீ விச்சுகண்ணானு கூப்பிட்டது அழகாதான் இருந்துச்சு. எங்கம்மா மட்டுமே அப்படி கூப்பிடுவாங்க. திடீர்னு நீ கூப்பிடவும் நான்தான் முழிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று சகஜமாக பேசி சிரிக்க, அன்றிலிருந்து அவனது வகுப்புகள் பொம்மியிடம் தொடங்கியது.

ரிஷபன் ஊரிலிருந்து வந்த பிறகும், தந்தையின் மேற்பார்வையில் அவர்களின் வகுப்புகள் நல்ல முறையில் தொடர்ந்திட, இரண்டு மாதங்களில் முடிந்த வரையில் அடிப்படை மட்டுமே கற்றுக்கொண்டு, படிப்பிற்கென்று விடுதியில் சேர்வதற்கென, அவர்களிடமிருந்து விடைபெற்றான் விஸ்வேந்தர்.