Ponnunjal-13

Ponnunjal-13

ஊஞ்சல் – 13

விடிகாலை ஐந்து மணி… ‘குக்கூ… குக்கூ…’ என்று கூவி, கடிகாரத்தின் உள்ளே இருந்து எட்டிப்பார்த்த பறவை தன்நேரத்தைச் சொல்லிவிட்டுச் சென்றது.

மகளை நினைத்தே பொட்டுத் தூக்கம் இல்லாமல் வெளியே அமர்ந்திருந்த பெற்றோரை, பதற வைக்காமல் எப்பொழுதும் போல் கண்முழித்தாள் பொம்மி. மருத்துவமனையின் சூழல் புரியாமல் வழக்கம்போல் பயத்தை ஏற்படுத்த, கச்சேரியை உச்சஸ்தாயில் ஆரம்பித்தாள்.

ஆம்! அத்தனை கத்தல்! புது இடம் என்ற அச்சம் அவளை திண்டாட வைக்க, கைகளிலும் உடலிலும் சொருகபட்டிருந்த வயர்களையும், ட்ரிப்ஸ் ஏறுவதையும் பார்த்தவள், கத்திக்கொண்டே கட்டிலின் தடுப்பு கம்பியைத் தாண்டி கீழே இறங்க முயற்சியும் செய்தாள். செவிலியர் இருவர் அவள் அருகில் இருந்தாலும், அவர்களின் கைகளுக்குள் அடங்கவில்லைஅவள்.

“பத்மாக்ஷினி அட்டண்டர் இருக்கீங்களா?” என்று வெளியே சென்று அழைக்க, மகளைக்காண பெற்றோர் விரைந்தனர்.

இருவரும் அருகருகே வந்துநிற்க, அழுதுகொண்டே முழித்தவள் நொடி நேரத்தில் தாயை பார்த்து புன்னகை சிந்தி, “ம்மா..” என்றுதன் அம்மாவிடம் செல்ல முயல,

“பங்காரம்! ராரா…” என்று ரிஷபன் அழைத்தது காதில் விழுந்தாலும்,

“ம்ஹும்… அம்மாட்ட…” என பதில் அளித்து தாயின் மடியில் தஞ்சம் அடைந்து விட்டாள்.

“பொம்மிகுட்டி!” என்று அணைத்துக்கொண்ட அசலாவின் கண்களில் அப்படி ஒரு நிம்மதி! அவளது இருசொட்டு கண்ணீரும் அதனை அழகாக வெளிப்படுத்த, கணவனை பார்த்து மெல்லிய முறுவல் பூத்தாள்.

“ம்மா… பெரிய பூண்ணு(புண்) வந்துச்சாமா?” என்று கண்களில் கண்ணீர் வழிய மகள் கேட்க,

“இல்லடா பட்டு!ரொம்ப குட்டியா இருக்கு உன்னோட புண்ணு…”

“வக்கிதும்மா… ரொம்ப வக்கிது(வலிக்குது)…” என்று சிணுங்கிக் கொண்டே தனது தலையை தொட்டுப் பார்க்க,

“அங்கே எல்லாம் தொடக்கூடாது… பாப்பா இனிப்பு சிரப் குடிச்சா சரியாப் போய்டும், அழகூடாது செல்லம்…” என்று அசலாவும் சமாதானப்படுத்தினாள்.

தன் பக்கம் முகத்தை காட்டாமல், அம்மாவிடம் மட்டுமே பேசும் மகளைப் பார்த்து,

“சீனிப்பாட்ட ராரா.. பங்காரம்” என்றே ரிஷபன் அழைக்க,

அசலாவும் “நாணாட்ட போ பொம்மி!” என்று சொன்னாலும், மகள் கேட்டால் தானே?
“ம்ஹும்… அம்மாட்ட மட்டும் இருப்பேன்…” செல்லம் கொஞ்ச,

“உங்கம்மாட்டயே இரு… என் பக்கம் திரும்பி பாருரா அம்மு! சீனிப்பானு கூப்பிடு!” என்று கெஞ்சவும் ஆரம்பித்து விட்டான் ரிஷபன்.

அத்தனை ஏக்கம் இருந்தது அவன் குரலில்! நேற்று வரை தன்னிடம் வந்து ஒட்டிக் கொண்டவள் மீண்டும் தள்ளி வைத்து பார்த்தது, தந்தையவனுக்கு இதுவரை உணராத புதியதொரு மனசஞ்சலத்தை கொடுத்தது.

மகனுக்காகவும் மகளுக்காவும் ஏங்கிப் போவது தனது வாழ்க்கையில் தொடர் கதையாகித்தான் போகுமோ என நினைத்து, அவன் மனதில் பாரம் ஏறிக்கொண்டது.

தந்தையின் அழைப்பு மகளின் காதில் ஏறவில்லை. தனது நிலையே பிரதானமாகப் பட,

“ம்மா… பெரிய்ய ஊசி வேணாம்… வீட்டுக்கு போவோம்” என்று சிணுங்கலை தொடர்ந்து கொண்டே கேட்க,

“இருடா குட்டி! டாக்டர் வந்து சொன்னதும் போவோம் சரியா!”

“வேணாம்மா… பொம்மி அழுவா…” என்றே தன் கச்சேரியை ஆரம்பிக்க,

“பொம்மி அழாமா இருந்தாதான் டாக்டர் வீட்டுக்கு அனுப்புவாராம் பங்காரம்!” என்று பொறுமையுடன் அவளுடன் ஓரிரண்டு வார்த்தைகளை பேசி, அவளது காலை தேவைகளை கவனித்து,உணவைக் கொடுத்து முடிப்பதற்குள் இருவரையும் ஆட்டி வைத்து விட்டாள். அத்தனைக்கும் அடம் பிடித்து இமயமலை சிகரத்தை எட்டிவிட்ட சாதனையை செய்ய வைத்தாள் அன்புமகள்.

அவளை பரிசோதிக்கவென ஆண் மருத்துவர்கள் வந்தாலே, “ஸ்கூல்ல வந்த பேட்அங்கிள் இப்டிதான் இருந்தாங்க…” என்று அந்த நினைவிலேயே உழன்றும் கொண்டிருந்தாள்.

“எல்லாரும் பேட்பீப்பில்ஸ் இல்லரா… இனிமே இப்படி பயப்படக்கூடாது” என்று ரிஷபன் சொன்னாலும், அது செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகிப் போனது. அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தந்தையைத் தள்ளி வைத்துக் கொண்டே இருந்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகே வீட்டிற்கு வந்தனர். அவளின் சிகிச்சை முறைகள் பழையபடி ஆரம்பமாகி இருக்க, பெரும்பாலான பொழுதுகள் தூக்கத்திலேயே கழிந்தது.

“தலையில லேசான சிராய்ப்புதான் ஒன்னும் பயமில்ல, ஒரு வாரத்துல சரியாகிடும்… பதினைந்து நாள் மட்டும் தூக்கத்தில இருப்பாங்க. அடுத்து நார்மல் ஆகிடுவாங்க. நல்ல ஆழ்ந்த தூக்கம்தான் இந்த பிரச்சனைக்கு மருந்து.இதுலயே பாதி குணமாகிடுவாங்க… பிடிவாதம், முரட்டுத்தனம் எல்லாமே கண்ட்ரோலுக்கு வந்துடும். அதே சமயம் இவங்களோட ஆக்டிவிடீஸ் ஜாஸ்தியாகும். அதாவது ரொம்ப சேட்டை, துடுக்குத்தனம் இதெல்லாம் இருக்கும். குழந்தை வளர வளர இதெல்லாம் தானாவே செட் ஆகிடும்” என்ற மருத்துவரின் அறிவுறுத்தலின் படியே பொம்மியின் நாட்கள் நகர்ந்தது.

தங்கை எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருக்க, சின்னாவிற்குதான் ஏதோ கையறுந்த நிலையைப்போல் வீட்டை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தான். வீட்டின் அமைதியை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ரிஷபனும் எப்பொழுதும் போல் ஒதுங்கிக் கொள்ள, அவன் சரணடைந்தது அசலாவிடமே!

“என்ன ஆச்சும்மா செல்லிக்கு? இனிமே ஸ்கூல் வரமாட்டாளா?” என்று ஆதங்கத்துடன் கேட்க,

“கொஞ்சநாள் பொறு பாபு! பழையபடி உன்கூட சண்டை போட வந்துருவா!எப்படி அவள பேசி மடக்கனும்னு… இப்போ இருந்தே யோசிச்சு வச்சுக்கோ” என்று இளகிய மனநிலையில்பதிலளித்தாள்.

“அவளோட பேசி ஜெயிக்கிறது நடக்கிற விசயமா?” என்று அங்கலாய்த்தவன்,

“நல்லாவே இல்லம்மா… இவ பேசாம இருக்குறது…” என்று மாலைபொழுது முழுவதும் தங்கையின் அருகிலேயே இருந்து, மெதுவாக தனது சீண்டல்களை தொடங்கினான்.

“பொம்மி என்னை அண்ணயானு கூப்பிடு!” என்று பழைய பல்லவியை பாட ஆரம்பிக்க, பலமுறை அமைதியாக கேட்டுக் கொண்டவள்,

“நீ சின்னையாதான்… அண்ணயா இல்ல…” என்று தனது பழைய பதிலடியை கொடுத்து அசரவைத்தாள்.

“நான் தோட்டத்துக்கு விளையாட போறேன் வர்றியா?” இருவரும் சேர்ந்து தோட்டத்தில் மாலை நேரங்களில் சுற்றி வருவது சிறிது நாட்கள் பழக்கமாகி இருக்க, அதை நினைவில் வைத்தே கேட்டான்.

“நான் வரமாட்டேன்! நீயும் போகாதே! பயமா இருக்கும்” என்று சொல்லவும், மகளின் மனநிலை தெளிவாக உணரவைக்க, எப்படி இதை சரி செய்வது என்று ரிஷபன் குழம்பித் தவித்தான்.

வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் என அவளை பேசிச்சிரிக்க வைத்தாலும் அவளது மீட்சி நிலை குறைவாகவே இருந்தது.

இரண்டு பாட்டிகளுடனும் பாட்டுகளை பாடி ஆட்டம் போட்டாலும், வெளியே செல்வதை அறவே விரும்பவில்லை… அந்த நான்கு சுவற்றுக்குள்ளேயே அவளது தினப்படி செயல்கள் எல்லாவற்றையும் நடத்திக் கொண்டாள்.

பொதுவாக ஆண்களை கண்டால் ஒதுங்கிப் போகின்றவளுக்கு ரிஷபனும் ஆண்மகனாய் தெரிய, அறவே அவனுடன் பேசுவதை தவிர்த்தாள். இருபது நாட்கள் பொறுத்தவனின் பொறுமை எல்லையைக் கடக்க, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று வருவோம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான்.

“இப்போ எதுக்கு பாவா? ஒரு மாசம் கழிச்சு போனா போதும்…” அசலாட்சி தடுக்க வர,

“டாக்டர் ரெண்டு வாரம் இப்படி இருப்பா… அடுத்து பேசுவான்னு சொன்னாங்க தானே சாலா? இன்னும் சரியாகல… ஏன்னு கேட்டு வருவோம்” என்று சிறுபிள்ளையாக அடம் பிடிக்க,

“ஆமா நாணா… என்கூடவும் பேசல! வெளியே போகாம என்னையும் அவ பக்கத்துலயே உக்கார சொல்றா!” என்று சின்னாவும் ஒத்து ஊத,

“அது பரவாயில்லயே… என்னை பார்த்தாலே பயபடுறாரா! இத சும்மா விட முடியுமா?” என்று ஆற்றாமையில் கேட்டு வைக்க, அசலாவிற்கு ‘அய்யோ’ என்றிருந்தது.

“தூங்கும் போது அழகு பார்த்தா இப்படிதான்! முழிச்சிருக்கும் போது பக்கத்துல இருந்து பேசுங்க பாவா!உங்க வேலைய ஒதுக்கி வச்சாதான், உங்க பொண்ணு உங்க கையில சிக்குவா!” என்று சிரித்துக் கொண்டே கேலி பேச,

“நீ அவள கீழே விட்டா தானே?! எப்போவும் இடுப்புல கட்டிட்டு சுத்துனா எப்படி என்கிட்டே வருவா? எதுக்கும் ஒருதடவ போயிட்டு வந்துடுவோம்” என்று இவனும் வீம்பாக இருக்க, கணவனின் அக்கப்போரை அசலாட்சியால் தாங்க முடியவில்லை.

இரவு நேரம் லாலி பாட்டுக்காக பாட்டிகளுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தவளை அப்படியே தூக்கி அவன் மடியில் உட்கார வைத்து விட்டாள்.

“இன்னையில இருந்து இவள, உங்க முதுகுல கட்டிக்கோங்க… அழுதாலும் அதமறக்க வச்சு சமாதானம் செய்யப் பாருங்க… அதுக்கும் அடங்கலன்னா ஹாஸ்பிடலுக்கு போவோம்” என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள். இரண்டு நாட்களாக பொம்மிக்கு அழுகை சற்று மட்டுப்பட்டிருந்தது.

“ம்மா… மாட்டேன்… என்னை கூட்டிப் போ…” என்று பொம்மியும் கீழே இறங்க, அவளை கோபத்துடன் அடித்தவள்,

“போய் உங்க நாணா கூடவே இரு! உன்னை அவர்கூட பேச விடலன்னு என்னை குத்தம் சொல்லிட்டு இருக்காரு” என்று மகளிடமும் தன் கடுப்பை காட்டினாள்.

தனது மனபாரங்களை எல்லாம் இறக்கி வைத்தவள் இலகு மனநிலையில் கணவனுடன் செல்லச் சண்டை பிடிக்க, மனைவியின் பாரங்களை ஏற்றுக் கொண்டவனோ அவள் விளையாட்டை அறியாமல் தவித்துப் போனான்.

‘மனசுல தோனுறத சொல்ல விடுறாளா இவ’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவன், அழுகையில் கரையத் தொடங்கியவளை தோளில் போட்டுக் கொள்ள, அடங்காமல் கீழே இறங்கினாள்.

“பொம்மி… இப்போ போனா அம்மா உன்னை திரும்பவும் அடிப்பாங்க! வா… தோட்டத்துல போய் விளையாடுவோம்… நான் சைக்கிள் ஓட்டறேன், நீ பின்னாடி உக்கார்றியா?” என சின்னா ஆசைகாட்ட, இது பொம்மிக்கு புதிய தகவல்.

“சைக்கிள் இருக்கா? உனக்குத் தெரியுமா?” கரைந்த கண்களை அகல விரித்துக் கேட்க, அங்கே பேச்சு சூடு பிடித்துக் கொண்டது. ஒரு வாரத்திற்கு முன்புதான் ராமைய்யா பேரனுக்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்.

“நீ வாயேன்! நான் காட்றேன்”– சின்னா.

“வேணாம்! பயமா இருக்கு…” – பொம்மி.

“நாணா இருக்கேன்ரா பங்காரம்… நிம்மதியா நீ விளையாடு!” என்று இருவரையும் தோட்டத்திற்கு அழைத்து சென்றவன் ஒரு மணிநேரம் அவர்களுடன் மல்லுகட்டினான்.

அழுகையை நிறுத்தி விட்டாலும் பிடிவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்தாள் பொம்மி. அண்ணன் ஓட்டிய சைக்கிளை தானும் ஓட்ட வேண்டும் என்று அடம்பிடிக்க, அங்கே ஆரம்பமானது இருவருக்கும் சண்டை!

அழுதே அந்த சைக்கிளில் ஏறி, அவனைப் போன்றே தனியாக ஓட்டுவேன் என்று அடம் பிடித்து கீழே விழுந்தாள். இப்பொழுது கை கால்களில் சிராய்ப்பு. இதனைப் பார்த்த ரிஷபனும் தலையில் கையை வைத்து உட்கார்ந்தே விட்டான்.

தாத்தா பாட்டிகளின் சமாதானம் எதுவும் அங்கே செல்லுபடியாகவில்லை. அந்த வாகனத்தைதான் கையாண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் ஒன்றே மனதில் நிற்க, பொம்மி அழுதாலும் முயற்சியை கைவிடவில்லை. புதியதாக ஒன்றை வாங்கி கொடுக்கிறேன் என்றாலும், அந்த வார்த்தையை கருத்தில் கொள்ளவில்லை. இறுதியில் அசலாட்சி வந்துதான் அவளை அதட்ட வேண்டியிருந்தது.

“உனக்கு மட்டும் எப்படிடி ஒண்ணு மாத்தி ஒண்ணு வரிசை கட்டி வருது! மாத்திரை குடுத்த அரைமணிநேரத்துல தூங்குறவ, இங்கே வந்து அடம் பிடிச்சிட்டு நிக்கிற! கண்ணு தூக்கத்த குத்தகை எடுத்தாலும் உனக்கு வீம்பு பெருசா போயிடுச்சு” என்று சொல்லியபடியே அந்த நாளின் இரண்டாம் முறையாக முதுகில் அடிபோட்டே அவளைக் கூட்டிச்சென்று உறங்க வைத்தாள்.

“என் மேல இருக்குற கோபத்தை அம்மு மேல காட்டாதே சாலா!” என்று மகளின் சிராய்ப்பிற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தவளை பார்த்து ரிஷபன் சொல்ல,

“உங்க மேல கோபம்னு நான் சொன்னேனா பாவா!” சிரிக்காமல் அசலாவும் கேட்டாள்.

“இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் பேசினதில்ல! இது என்ன புதுசா சண்டைக்கு நிக்கிற?”

“என் பாவாகூட வார்த்தைக்கு வார்த்தை பேசணும்னு எனக்கு ஆசை… கேட்க பிடிக்கலன்னா காதை பொத்திக்கோங்க!” என்றவள் அவன் கைகளை தூக்கி காதுகளை பொத்த வைக்க, மனைவியின் மனநிலையை நொடிபொழுதில் அறிந்தவனும் உல்லாசத்திற்கு தாவி விட்டான்.

“நானும் என் பொண்டாட்டி சண்டைய நிப்பாட்ட எனக்கு தெரிஞ்சத செய்றேன்!” என்றவன் மனைவியின் வாய்பூட்டிற்கு முயற்சி செய்ய,

“சும்மா இருந்தவர நான்தான் உசுப்பி விட்டேனா? வேண்டாம் பாவா!” என்று போக்கு காட்ட,

“நீ எப்போதான் வேணும்னு சொல்லிருக்க சாலா!” என்றவனின் சரசக்குரலில் அசலாதான் தடுமாறினாள்.
இத்தனை நேரம் மனைவியின் கோபத்தில் தவித்தவன் இப்பொழுது காதலில் சிக்கித் தவித்தான். ‘சாலா’ என்றவனின் கிறக்கத்தில் மனைவி முழுதாய் தொலைந்து போனாள்.
மறுநாள் மகளைத் தன்னோடு இருத்திக் கொள்ளவென்று ரிஷபன் செய்த அலட்டல்களை பார்க்கப் பார்க்க அசலாட்சிக்கு கோபமும் சிரிப்பும் ஒன்றாய் வந்தது. அவனது சிலம்பாட்ட வகுப்பிற்கு கிளம்பும் போதே மகளை எழுப்பி உட்கார வைக்க,

“இப்ப இவள எழுப்பி என்ன செய்றதா உத்தேசம் பாவா?”

“நீதானே என் முதுகுல கட்டிக்க சொன்ன! அதான் என்னோட கூட்டிட்டு போகப்போறேன்” என்று சொன்னவனை தலையில் தட்டி உட்கார வைக்க வேண்டும் என்ற எண்ணம் அசலாட்சிக்கு வந்தே விட்டது.

“வினயத்தை விலை கொடுத்து வாங்குறதும், உங்க பொண்ண பாதி தூக்கத்துல எழுப்புறதும் ஒன்னுதான்… இன்னைக்கு பொழுது இவள சமாதனபடுத்தியே கழிஞ்சு போய்டும்… எனக்கு வேலை ஓடாது பாவா. மதியம் கூட்டிட்டு போங்க!”

“நீ உன் வீட்டையே பாரு. நான் என் பொண்ண பாக்குறேன்” என்று அந்நியனாக அவன் பேசிய பேச்சில், அவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர,

“வில்லங்கத்துக்கு ஆமாஞ்சாமி போட என்ன ஒரு அவசரம்? என்னோட வீடாம்! இவர் இங்கே யாருன்னு தெரியல?!” என்று நொடித்துக்கொண்டே வேலைகளைப் பார்க்க சென்று விட்டாள்.

முதல்நாள் இரவில் மகளின் மனபோக்கை கணித்திருந்தவன்,அவளது வழியில் சென்றே தாஜா செய்த ஆரம்பித்தான்.

“பங்காரம்! உங்கம்மாவ பார்த்தியா? நீ அழுதுகிட்டே இருக்குற பேட்கேர்ள்னு சொல்லிட்டு போறா! நீ நாணா கூட ராரா! குட்கேர்ள் ஆகிடலாம்”,

“பயமா இருக்கு சீனிப்பா… வேணாம்” என்று முகத்தை சுருக்கிக்கொள்ள,

“நாணா, உனக்கு பயம் வந்தா எப்படி விரட்டி விடறதுன்னு சொல்லிக் குடுக்குறேன்ரா! அப்போதான் சின்னா மாதிரி கீழே விழாம சைக்கிள் ஓட்டலாம்”.

“நெஜமாவாப்பா….ஆனா எனக்கு சின்னாது வேணாம்” என்று கண்களும் குரலும் மலர மகள் பேசிட,

“வேற என்ன வேணும் என் அம்முக்கு?”

“அத விட பெருசா… உங்க பெரிய வண்டி வேணும்” என்று ரிஷபனின் ராயல் என்ஃபில்டை நினைவு கூற

“அட போக்கிரி! அப்போ சீக்கிரம் நாம வெளியே போய் பயத்தை விரட்டி ஆகணுமே! ராரா!” என்று கிளப்பி விட்டான். தந்தை மகள் இருவரும் கிளம்பி கீழேவர ஆச்சரிய பார்வை பார்த்து,

“எங்கடி போற இந்த நேரத்துல?” மகளிடம் அசலா கேட்க,

“நான் சீனிப்பா கூட பயப்படாம இருக்க கத்துக்க போறேன்!”

“அது எப்படியாம்?”

“அதெல்லாம் உனக்கு சொல்ல முடியாது… வேணும்னா அங்கே வந்து நீயும் கத்துக்கோ!” என்று ரிஷபனும் மகளை உப்புமூட்டை தூக்கிக் கொண்டு வெளியேறி விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னாவிற்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

“நாணாக்கு என்ன ஆச்சும்மா?”

“தெரியலேயேரா பாபு! நீயும் அவங்க கூட போறதானே? பொம்மி அங்கே எப்படி இருக்கானு மட்டும் வந்து சொல்லுரா” என்று அனுப்பி வைத்தாள்.

‘ஒரு பேச்சுக்கு சொன்னத இப்படி தொங்கிட்டு நிக்கிறாரே! இது எங்கே போய் முடியுமோ?’ என்று மனதிற்குள் புலம்பவும் தவறவில்லை.

இரண்டு மணிநேரம் கழித்து வந்தவர்களுக்கு உணவு மற்றும் சத்துமாவு கஞ்சி கொடுத்து அன்றைய வேலைகளை கவனிக்கவென அசலாட்சியின் நேரங்கள் அவளை உள்வாங்கிக் கொள்ள, மகள் எப்படி இருந்தாள் என்று மகன் மற்றும் கணவனிடம் கேட்க மறந்தே போனாள்.

“இன்னைக்கு நாணா என்னடா சொல்லி குடுத்தாங்க?” மகளிடமே நடந்ததை கேட்க,

“நா… பயந்ததால தானே நேத்து சைக்கிள்ல இருந்து தொம்னு விழுந்தேன்? அத ச்சீ… போ… னு தொரத்தி விடத்தான் வெளியே போனோம்”

“உனக்கு கால் எட்டலடி அதான் நீ கீழே விழுந்துட்ட…”

“இல்ல… எனக்கு பயம் போனா போதும்! பெரிய வண்டி ஓட்டலாம்னு நாணாசொல்லி இருக்காரு!கம்பு சுத்துரத பார்த்தா பயம் போயிரும்னு அங்கே கூட்டிட்டு போனார்” என்று தலையை ஆட்டி பாவனையோடு, தந்தை புராணம் படிக்க ஆரம்பித்தாள்.

“இப்படியே ஸ்கூலுக்கு போகணும் செல்லம்! பயம் போய்டும்!”

“ம்ஹும்… அங்கே போனா ரொம்ப பயம் ஆகும், நான் கீழே விழுந்துடுவேன்” தன் மனதில் பதிந்து விட்ட வடுவை மறக்காமல், அதையே சொல்லி மறுத்தாள்.

இது அத்தனை எளிதில் மாற்ற வைக்கும் காரியம் அல்ல என்று அசலாவிற்கும் தோன்றிட, இப்போதைய மகளின் மன நிலையை மாற்ற விரும்பவில்லை.

அன்று மாலைவேளையில் மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு வெளியே கிளம்பி விட,

“நாணாகூட நடந்து போ பொம்மி! இன்னும் சின்ன பிள்ளையா நீ?” என்று சொல்லியபடியே மகளை கீழே இறக்க முயற்சிக்க,

“ம்ஹும்… மாட்டேன்” என்று அடம்பிடித்து சலுகையாக தந்தையின் தோளில் இறுக்கமாய் ஒட்டிக்கொண்டாள்.

“எங்க ரெண்டு பேருக்கும் இடையில வராதே சாலா! நீவா பங்காரம்! உங்கம்மாக்கு அவள தூக்கிக்கலனு பொறாமை” என்று மனைவியை சீண்டியபடியே நடையைக் கட்டினான்.

“அம்மா! நாணா, பொம்மியகீழே இறங்க விடாம மடியிலேயே வச்சிப்பாரு. இன்னொருத்தர கம்பு சுத்த சொல்லிட்டு, பொம்மி கூட பேசிட்டே வேடிக்கை பார்த்தாரும்மா…” என காலையில் நடந்த சங்கதிகளை சின்னா சொல்ல, இப்பொழுதுகுழம்பித் தவிப்பது அசலாட்சியின் முறையானது. இப்படியே கைகளில் வைத்திருந்தால் எப்படி மகளை இயல்பு நிலைக்கு மாற்றுவது என்ற பெரிய சந்தேகம் தோன்றியது.

பத்து நாட்கள் இப்படியே தந்தையும் மகளும் ஊர் சுற்றிக் கொண்டிருக்க, இரவு நேரமும் தன் ஊர் வேலைகளை பார்க்கும் பொழுதும் அவளை உடன் அழைத்துச் சென்று வீட்டுப் பெரியவர்களின் கண்டனத்திற்கு ஆளானான்.

பகல் பொழுதில் மகளை உறங்க வைத்து விட்டே தனது வயல் வரப்புகளையும் ரைஸ்மில் வேலைகளையும் கவனிக்க ஆரம்பித்தான். இதனால் கணக்குவழக்குகள் பார்க்கும் வேலைகளில் தேக்கம் ஏற்பட, அதனை சுந்தரராஜுலுவிடம் ஒப்படைத்து கொஞ்சம் மூச்சு விட்டான்.

ஒரு மாதம் கடந்திருக்க… இவர்களின் நகர்வலம் தொடர்கதையாகி இருந்தது.மனசோர்வு அகன்றவளுக்கு உடல் சோர்வு இம்சை கொடுக்க முதலில் கவனிக்க மறந்தவள் நாள்காட்டியை பார்த்து கணக்கிட்டு கொள்ள, முதலில் கணவனிடம் சொல்லவே ஆவல் கொண்டாள். அதோடு மகளை எப்படி பள்ளிக்கு அனுப்பி வைப்பது என்ற பெரிய யோசனை மனதிலே ஓடிக்கொண்டே இருக்க,அதைப் பற்றி முதலில் கேட்டாள்.

“இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டுவர்றா… திரும்பவும் அங்கே போய் எல்லாமே தலைகீழ் ஆகிபோச்சுன்னா என்ன செய்றது?”அவர்கள் வீட்டு பால்கனியில், எப்பொழுதும் போல் மனைவியின் மடியில் தலை வைத்து ரிஷபன் பேசிக்கொண்டு இருக்க,

“ரொம்பவும் வெளியே சுத்த வைக்கிறதும் நல்லதில்ல பாவா!”

“அப்படி சொல்லாதே சாலா! இப்போ எல்லாம் பின்னாடி போய் ஒளிஞ்சுகிரதில்ல! யார் வந்தாலும் என் பக்கத்துலயே தைரியமா உக்காந்து நான் பேசுறத கேட்டுகிட்டு இருக்கா! கொஞ்சம் என்மேலயும் நம்பிக்கை வைங்க எஜமானியம்மா”

“அதெல்லாம் நிறையவே இருக்கு காவல்காரரே! உங்க சிப்பாய் வேலைக்கு அவள இழுத்துட்டு போறது தான் எனக்கு பிடிக்கல!”என்று சொன்னவள் அவன் கேசத்தை கலைத்து விட,

“இதுக்கு நான் பொறுப்பில்ல… பொண்டாட்டி சொன்னா தட்டாம கேக்குற அப்பாவி புருஷன் நான்! அவ முதுகுல கட்டிக்க சொன்னா… அததான் செஞ்சுட்டு இருக்கேன்!” என்று அவள் இடையோடு தன் கையை உறவாட விட்டான்.

“இன்னும் எத்தன தடவ இதையே சொல்லி என்னை மடக்குவீங்களோ?” கணவனின் கைகளை அகற்றி விட,

“நீ மடங்கி என்கிட்டே மயங்கிட்டாலும்…”சிரித்தபடியே பொய்யாய் ரிஷபன் சலித்துக் கொள்ள,

“மயங்கினதுக்கு சாட்சி வந்தாதான் நம்புவீங்களா பாவா?”

“புரியல சாலா?”

“நம்ம வாழ்க்கைய இன்னும் அழகானதா, அர்த்தமுள்ளதா மாத்த இன்னொரு புது ஜீவன் நம்மளோட சேரப்போகுது பாவா!நாள் தள்ளிபோயிருக்கு… இன்னைக்கு காலையிலதான் மெடிக்கல் கிட்வாங்கி செக் பண்ணேன். எனக்கு ரொம்ப சந்தோசம். ஒருதடவ ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோம் பாவா!” என்று அவள் உற்சாகத்துடன் பேசிக்கொண்டே போக,

“நமக்கு இந்த குழந்தை வேண்டாம் சாலா!” என்று அமைதியாக தனது விருப்பமின்மையை வெளிபடுத்தினான் ரிஷபன்.

error: Content is protected !!