Poovanam 9

Poovanam 9

பூவனம்-9

தான் கேட்டது கனவா? இல்லை நிஜமா? என்று தலையை உலுக்கிக் கொண்டவள்,
“இதென்னடா வம்பா போச்சு? ஒரு மூணு தடவ பார்த்து பேசியிருப்போமோ?
அதுக்குள்ள இப்படி லவ் சொல்லி வால் பிடிச்சிட்டு வர்றானே? நெஜமாவே அரலூசு
தானோ?” என மனதோடு நினைத்து, அதை மறுப்பதற்க்காய் கிரிதரன் முகம் பார்க்க,
அவனோ அவளை இமைக்காமல் பார்த்த பார்வையில் வீழ்வது இவளின் முறையாயிற்று.

கிரிதரனின் பார்வையும், வார்த்தையும் ஜாலம் செய்ய, பேச்சு வரவில்லை
ரம்யாவிற்கு. அமைதியாய் கடந்த அந்த சில மணித்துளிகளை இருவரின் மௌனம் தான்
ஆட்சி செய்தது.

காண்டீனை காலி செய்ய சென்ற கூட்டமும் ஒரு வழியாய் வந்து சேர்ந்தும்
தன்னிலைக்கு வரவில்லை ரம்யா.

“ஏண்டி ரம்யா, என்ன ஒரு ரம்யமா இருக்க?”

“ம்… என்ன?”, தோழியின் கேலி புரியாமல் பார்க்க

“என்னடி இப்படி ஷாக்காயி உக்காந்துருக்கே?”

“நத்திங்க்”

“அப்ப சம்திங்க்னு சொல்லு”

“இல்லடி”

“உனக்கு ஒண்ணும் வேணாமா? ஏன் எங்க கூட வரல?“

என்ன சொல்வது என அறியாமல் விழிக்க…

“உங்களுக்கு சீனியர், நீங்களும் ஏதும் எடுத்துக்கலையா?” என கிரிதரனையும்
பார்த்து கேட்க

“அது ஒண்ணும் இல்ல சிஸ்டர்ஸ். உங்க பிரின்ட்க்கு கொஞ்சம் உடம்பு
சரியில்லையாம், அதான் எதுவும் வேண்டாம்னு என்கிட்டே சொல்லிட்டு
இருந்தாங்க.

நீங்க போகும் போது அவங்கள பத்திரமா கூட்டிட்டு போயிருங்க, ரம்யா… இவங்க
சாப்பிட்டதுக்கு பில் கட்டிடும்மா, பாய்ய்ய்ய்யய்…”” அவளைப் போலவே
இழுத்துக் கூறினான்.

அவனின் இந்த வார்த்தை தோழிகளை உசுப்பி விட்டது…

“என்ன ப்ரோ… நீங்க தானே ட்ரீட் குடுக்கப்போறதா ரம்யா சொன்னா, ஆனா இப்ப
பில்ல அவ தலையில கட்டிறீங்க, என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஏதும்
கலாட்டா பண்ணற ஐடியா இருந்தா மறந்துருங்க””

“கலாட்டாவா? எனக்கா? உங்க குட்டையில விழுந்து மட்டையாகுற மாஸ்டர் பீஸ்
நான் கிடையாது? நானா வந்து உங்கள கூப்பிட்டேன்?

உங்கள யார் கூப்பிட்டாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் நான் ட்ரீட்
குடுக்கறேன்னு சொல்லிருந்தேன். யாரு கூப்பிடுறானு கூட தெரியாம கூட்டமா
வந்தா, அதுக்கு நான் ஆளில்ல”” என்று சிரித்தபடி கூறியவனை கோரஸாக

“ஏய்!”” என்று கத்திவிட்டு ஒவ்வொருவராக பேச தொடங்கினர்….

“ரம்யா சொல்லி வந்தோம்னு பாக்குறோம்””

“என்னடி சீனியர் பேசிகிட்டே இருக்கார், நீயும் கேட்டுகிட்டே இருக்கே”?”

“எங்கள இப்படி கோர்த்து விடத்தான் பிளான் பண்ணி கூட்டிகிட்டு வந்தியாடி”
என்று மாறிமாறி கேட்ட தோழிகளிடம்

“ஐயோ… கொஞ்சம் சும்மா இருங்களேன்டி… நானே இத டீல் பண்ணிக்கிறேன்,
கொஞ்சம் அமைதியா இருங்க”

“என்னடி வரும்போது நல்லா தான வந்த?”

“இப்பவும் அப்டியே தாண்டி இருக்கேன், நீங்க கிளம்புங்க?”

“என்னடி, கழட்டி விடுற?”

“கழட்டலடி, நானே மர கழண்ட மாதிரி இருக்கேன்”

“இப்போ சொன்னியே… அது நூத்துல ஒரு வார்த்தை”

“நா… நா… நான்… இவர் கூட பேசிட்டு வர்றேன்“

“அப்டி சொல்லு… எலி ஏன் அன்ராயர் போடனும்னு என் மனசு கேட்டிச்சு.. நீ சொல்லிட்ட”

“வாங்கடி நாம கிளம்புவோம்” எனத் தோழிகள் அவளின் மனநிலையை யூகித்தவாறு
சிரித்தபடி கிளம்ப

“கிரி சார்… உங்க மேல நம்பிக்கை இல்லாம அவங்களோட வந்தது உங்களுக்கு
தப்பா தெரியலாம்… ஆனா எனக்கு இப்படியெல்லாம் தனியா யார்கூடயும் வந்து
பேசி பழக்கம் இல்ல.”

“என்னோட பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ அதுப்படி தான் நான் கேப்பேன், உங்க
விசயத்துலேயும் அப்படித்தான். என் வீட்டுல உள்ளவங்களுக்கு எதிரா எதுவும்
செய்ய எனக்கு இஷ்டமில்ல. எனக்கு அதுல பிடித்தமும் இல்ல.

அதனாலே உங்க மனசுல வீணா ஆசைய வளத்துகிட்டு ஏமாந்துராதீங்க, இதான் என்னோட
முடிவு“ வார்த்தைகள் திக்கினாலும் தெளிவாய் தன் நிலையைச் சொல்லி, பணம்
கட்ட விரைந்தாள்…

அவளின் பின்னே வந்தவன் “நான் பில் பே பண்ணறேன் ரமி… எவ்ளோ ஷார்ப்பா
பேசிட்டே, உன் மனசு இதுதான்னு தெளிவா சொல்லிட்டே, உனக்கு என்னை பிடிக்க
வைக்குறதுக்கு நான் ரொம்பவே கஷ்டப்படனும் போல, அத நான்
பார்த்துக்குறேன்.”

“எனிவே தேங்க்ஸ்… நீ வந்ததுக்கும் உன்னோட முடிவ சொன்னதுக்கும். நல்லா
படி… முறைப்படி உங்க வீட்டுல உள்ளவங்களோட சம்மதத்தோட தான் நம்ம
கல்யாணம் நடக்கும். அதுல ஒரு சந்தேகமும் வேணாம். அது வரைக்கும் நான்
உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், வர்றேன்” என்று மென்மையாய் கூறி விடை
பெற்றான்….

கிரிதரனின் பக்குவப்பட்ட பேச்சு ரம்யாவின் மனதை குழப்பத்தில் ஆழ்த்தியது.
”என்னடா இவன் இப்படி இருக்கான்… எல்லோரும் லவ் பண்ணற பொண்ணுகிட்ட
சம்மதம் வாங்குற வரைக்கும் அவ பின்னாடி சுத்தி திரிவாங்க…

இவன் என்னடான்னா நான் முடியாதுன்னு சொல்லவும் உன்ன டிஸ்டர்ப் பண்ண
மாட்டேன்னு போயிட்டான், நிஜமாவே அரலூசோ?” என்று அவனைப் பற்றி தினமும்
நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை…

“இவன் நல்லவனா? கெட்டவனா? ஒருவேள என்னை, அவன் பக்கம் இழுக்க இப்படி
எல்லாம் சீன் போட்றானோ?

“சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது. அவன் முகம் அப்படி ஏமாத்துற மாதிரியா இருக்கு?“

“நல்லா மூக்கும் முழியுமா அழகா… பளிச்சுன்னு சிரிச்சாலே அவ்ளோ ப்ரைட்
ஆகுது அவனோட முகம். கண்ணு மட்டும் என்ன சும்மாவா? சதா எப்போ பாரு உத்து
உத்து பார்த்து, அப்படியே அவன் பக்கம் இழுக்க வைக்குது… செம்ம ஹன்ட்சம்
பிகர்னு அவனை சொல்லலாம், தலை முடிய சிலிர்த்துகிட்டு அவன் பேசுற ஸ்டைல்
இருக்கே” என்ற அவளின் நினைவை தடை செய்ய அவள் மனசாட்சி அவள் முன் வந்து
நின்றது.

“ஏய் நிறுத்து! நிறுத்து! போற போக்க பார்த்தா… நீயே அவன்கிட்ட போய் லவ்
பண்ணறேன்னு சொல்லிடுவ போலேயே? கொஞ்சம் மிச்சம் மீதி வை மா.
பிடிக்காதுன்னு சொல்லிட்டே இவ்ளோ கவனிச்சிருக்கியே, இன்னும் பிடிச்சு
பார்த்திருந்தா எப்படி எல்லாம் சொல்லுவே? எம்மாடி.. இதத்தான் உலகமகா
நடிப்புன்னு சொல்றாங்களா?“ கேலி பேசியதை தலை தட்டி உட்கார வைத்தாள்…

பக்கம் வந்து பேசாமல், பார்வையாலேயே எப்பொழுதும் போல் பேசி சென்றான்
கிரிதரன். பெண்ணவளின் முறைக்கும் பார்வை தான் சற்றே மாறி விளங்காத
பார்வையும், ஆராய்ச்சி பார்வையுமாய் பார்த்து அவனை பற்றி நினைத்துக்
கொண்டே இருந்தது…

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்து செல்ல இருவரின்
படிப்பும் முடிந்ததும், இருவருக்கும் வெவ்வேறு நல்லதொரு கம்பெனியில்
உத்தியோகமும் அமைந்தது.

கணிசமான சம்பளத்துடன் வேலையில் அமர்ந்தவன், தன் மனம் கவர்ந்தவளை இனியும்
தள்ளி நின்று பார்க்கும் எண்ணமின்றி ரம்யாவின் தந்தையை சந்தித்து தன்
விருப்பத்தை வெளியிட்டு அவரின் உத்தரவிற்காக காத்திருந்தான்.

“உங்க பொண்ணு மேல விருப்பப்பட்டது நாந்தான் சார்… இப்போ நான்
சொல்றதுக்கும், அவங்களுக்கும் எந்த சமந்தமுமில்லை. உங்க சம்மதத்தோட
என்னோட ஆசைய அவங்ககிட்ட சொல்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீங்க
தான் சொல்லணும்” என்று கூறியவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்து வைத்தார்
பெண்ணை பெற்றவர்.

கிரிதரனின் பேச்சும், அவனைப் பற்றி விசாரித்து அறிந்தவையும்
திருப்தியளிக்க, முழு மனதுடன் தன் சம்மத்தைதை தெரிவித்து விட்டார்
ரம்யாவின் தந்தை சண்முகம்.

“காலேஜ்ல இருந்தே உன்மேல விருப்பமாம் பாப்பா, அத உன்கிட்ட கூட சொல்லாம
என்கிட்டே வந்து நின்னுட்டார். உங்க பொண்ண கட்டிக்குடுங்கனு,

இந்த காலத்தில இப்படி ஒரு பிள்ளைய பாக்குறது சந்தோசமாத்தான் இருக்கு.
எனக்கு சாதி பத்தின கவலை எல்லாம் கிடையாது பாப்பா, உனக்கு சம்மதம்னா பேசி
முடிக்கலாம்டா” தந்தையின் பேச்சில் பெண்ணவளின் மனம் துள்ளிக் குதிக்கத்
தான் செய்தது.

ஏற்கனவே அவனை நினைத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளின் மனதில் சிம்மாசனம்
இட்டு அமர்ந்து விட்டான் அவன் காதலன்.

தன்னை தெரியும் என்று எந்த இடத்திலும் காண்பித்துகொள்ளாதவனின் பேச்சு
இன்னும் அவனை உயரத்தில் வைத்து பார்த்தது, ஆனாலும் மனதில் ஒரு குழப்பம்
நீடிக்க

“அவங்க வீட்டுல சம்மதம் வாங்கிட்டாராப்பா, கேட்டீங்களா?” சந்தேகத்துடன்
கேட்ட மகளிடம் “அதத்தான்ம்மா நானும் கேட்டேன், அவங்க வீட்டுல இவர்
பேச்சுக்கு மறு பேச்சு இல்லையாம். அவங்கிட்ட சம்மதம் வாங்குறது என்
பொறுப்புனு சொல்லி பேச்சை முடிச்சாட்டார்.

எங்ககிட்ட பேசி சம்மதம் வாங்குறவர் அவங்க வீட்டுல பேசாம இருப்பாரா என்ன?
நீ சரின்னு சொன்னா பெத்தவங்களோட அவர வரச் சொல்லுவேன்” என்று தீர்வை
அவளிடம் நிறுத்தி வைத்தார்…

அங்கே கிரிதரனின் வீட்டில் சில பல சலசலப்புகள். ஊரிலிருந்த நாலைந்து
பெரிய தனக்காரார் குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது, பசி பட்டினியாய்
கிடந்தாலும் கௌரவத்தை உயிர் மூச்சாய் கொண்டவர்கள்.

தங்களுக்குரிய மதிப்பையும் மரியாதையும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க
தயங்காதவர்கள். தங்கள் இனத்தின் மீதான பற்று அவர்களின் ஒவ்வொரு செயலிலும்
வெளிப்படும்.

இப்பேற்பட்டவர்களிடம் தன் மன விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்டவனை
பார்த்து சற்றே கண்டிப்பான குரலில்

“என்ன பெரியதம்பி விளையாடுறியா? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி
படிக்கட்டும்… ரொம்ப இழுத்து பிடிச்சு வைச்சுக்க வேணாமேன்னு கொஞ்சம்
உங்க இஷ்டப்படி இருக்கட்டும்னு விட்டா, இப்படி காதல் கருமாதி சொல்லிட்டு
வந்து நிக்குற. நீ விரும்புன படிப்ப படிக்க வைச்ச மாதிரி பிடிச்ச
பொண்ணையும் கட்டி வச்சுர முடியுமா?”

“முடியாது… முடியாது… இதென்ன பழக்கம்… நம்ம இனத்துல யாரும் இப்படி
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதில்ல” என்று மகனிடம் பொரிந்து
கொண்டிருந்தார் மீனாட்சி அம்மாள் கிரிதரனின் தாயார்.

“எந்த காலத்திலம்மா இருக்கீங்க? இப்ப எல்லாம் யாரும் சாதி பாக்குறதில்ல,
அந்த பொண்ணு பார்த்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்கம்மா, நிச்சயமா
உங்களுக்கு பிடிக்கும்” என மகன் சொல்ல

“பிடிக்கும்… பிடிக்காது… இதெல்லாம் முக்கியம் இல்ல இங்கே, நம்ம
கௌரவம் என்ன? நம்ம மதிப்பென்ன? உங்க அப்பாருக்கு வெளியே குடுக்குற
மரியாதை என்ன? இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்திருந்தா இப்படி
சொல்லமாட்டே.

நம்ம குடும்பத்துக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு, அதுப்படி தான் இங்கே
எல்லோரும் வாழ்ந்துகிட்டு இருக்கோம். இத மாத்த நினைக்காதே. நீங்க
நினைக்கிறது எந்த காலத்துலயும் நடக்காது. இந்த பேச்ச இத்தோட விட்டரு
பெரியதம்பி” என்று தன் மறுப்பை சொன்னவரிடம்

“அப்போ நானும் ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க, இந்த ஜென்மத்துல
கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது என் ரம்யா கூட தான், எந்த காலத்திலேயும் என்
முடிவுல மாற்றம் இல்ல.

எனக்கு சொத்து பத்து முக்கியம் இல்ல, என் மனசுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை
தான் வாழ ஆசைப்படறேன். இந்த வீட்டுப் பெரியவங்க சம்மதிக்காம அவங்க
வீட்டுலேயும் சரி, அந்த பொண்ணும் சரி, எந்த காலத்திலேயும் கல்யாணத்துக்கு
சம்மதிக்க மாட்டாங்க. நான் வாழ்றதும், வீணாப்போறதும் உங்க கைல தான்
இருக்கு” என்று ஆணித்தரமாய் தன் நிலையை விளக்கி விட்டான்…

“என்னடா! என்ன வார்த்தை பேசுறோம்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறியா,
போனபோகுது சின்ன பையனாச்சே… பேசட்டும்னு விட்டா ரொம்பத்தான் ஆட்றே”
என்று ஆதங்கத்துடன் பேசிய மீனாட்சி அம்மாளை தடுத்து நிறுத்திய அவனின்
தந்தை சுப்பையா…

“அவன ஒண்ணும் சொல்லாதே மீனா… துரை சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டார்ல…
அந்த தைரியம் தான் பேச வைக்குது, பேசட்டும். அப்ப தானே என் பசங்களும்
வளர்ந்துட்டாங்கனு எனக்கும் தெரியும்.

எப்போ நீ எங்ககிட்ட அனுமதி கேக்காம உன்னோட முடிவ சொல்ல வந்தியோ, அப்பவே
நீ எங்க கைமீறி போயிட்டே. இப்போ நாங்க என்ன சொன்னாலும் அது உனக்கு
கெட்டதா தான் தெரியும்”

“நாங்க சாதிய பாக்குற ஆளுங்க இல்லைய்யா, குடும்ப பாரம்பர்யத்தை காப்பத்த
வேண்டிய காட்டயம் இந்த கிராமத்தானுக்கு இருக்கு. எங்கே அது தப்பிப்
போயிருமோன்னு தான் நானும் உங்க அம்மாவும் நினைக்கிறோம்.

வேற எந்த உள்நோக்கமும் இல்ல. உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம். நீங்க
சந்தோசமா இருந்தா தான், இங்கே எங்களுக்கு ஒரு வாய் கஞ்சி நிம்மதியா
இறங்கும்” மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் தன் சம்மதத்தை கூற

“தேங்க்ஸ்ப்பா… நீங்களாவது என்னை புரிஞ்சுகிட்டு சம்மதம் சொன்னீங்களே!
ரொம்ப சந்தோசம். அம்மாவை எப்படியாவது பேசி வழிக்கு கொண்டு
வந்துருங்கப்பா. நான் இந்த விஷயத்தை ரம்யா அப்பாகிட்ட சொல்லிட்டு
வர்றேன்” மகிழ்ச்சியுடன் தன் காரியமே கண்ணாய் சென்று விட்டான்.

“ஏன் இப்படி சொன்னீங்க… நாளபின்னே இதே மாதிரி தானே எந்த ஒரு
விசயத்தையும் அலசி ஆராயாம இஷ்டத்துக்கு முடிவெடுக்க ஆரம்பிச்சுருவாங்க”
ஆதங்கப்பட்ட மனைவியிடம்

“அது அப்படி இல்ல மீனாட்சி… இன்னும் கொஞ்சம் பொறுப்பு வரும்
அவங்களுக்கு. எதையும் மேலோட்டமா மட்டுமே பாக்குற ஆள் கிடையாது நம்ம
பையன், நல்லா யோசிச்சு தான் முடிவேடுத்துருக்கான்னு தோணுது.

ஒரு விஷயம் நல்லா கவனிச்சியா, நம்ம சம்மதம் இல்லாம அந்த பக்கமும் சம்மதம்
கிடைக்காதுன்னு தானே சொன்னான். அதுலேயே தெரியலையா அவங்களோட நல்ல குணம்.
எனக்கு என்னமோ அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு பொருந்தி வருவான்னு தோணுது,
பாக்கத்தானே போறோம்.

இனிமே கல்யாண வேலைய ஆரம்பிப்போம். இல்லேன்னா உன் பையன் அந்த வேலைய கூட
நமக்கு வைக்காம தானா செஞ்சாலும் ஆச்சரியபப்பட்றதுகில்லை” என்று அந்த
பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியாய் பல பேச்சிற்கு நடுவில், மகனின் ஆசைக்கு செவி சாய்த்து
திருமணத்திற்கு சம்மத்தித்தனர். எளிமையான முறையில் மணமகனின் கிராமத்திலே
திருமணம் நடைபெற வரவேற்பு சென்னையில் நடத்திட முன்வந்தனர்.

error: Content is protected !!