Praiyangaludan Mugilan 15

Praiyangaludan Mugilan 15

ப்ரியங்களுடன் முகிலன் 15

மாற்றி மாற்றி முத்தமிட்டுக்கொண்டிருந்த கண்ணனின் மடியிலிருந்து நெருப்பை விட்டு விலகி செல்வதைப்போல் துள்ளி எழுந்தாள் மயக்கத்திலிருந்து சற்றே தெளிந்திருந்த மீரா. சரசரவென கண்ணீர் வழிந்தது அவள் கண்களிலிருந்து. விருட்டென அவனை விட்டு விலகி அமர்ந்தாள் அவள்.

‘ஹேய்… எதுக்குடா அழறே ரஸ்னா? பயப்படாதே நான்தான் இருக்கேன் இல்ல’ பரபரத்தான் கண்ணன்.

‘இல்ல நான் அதுக்கு அழலை. நீங்க இப்படி செய்யறதுக்குதான்.  நீங்க என்னை காப்பாத்தி இப்படி பண்றதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்’ தேம்பிக்கொண்டே சொன்னாள் மீரா. ‘அந்த நிலையில் அவன் தன்னை காப்பாற்றியதற்கு நின்றி கூட சொல்ல தொன்றவில்லை அவளுக்கு.

‘ஹேய்.. லூசு.. என்ன பேசறே நீ?’ வெடித்தான் கண்ணன். அவள் வார்த்தைகளை தாங்கவே இயலவில்லை அவனால்.

‘ஆமாம் அப்படிதான் தோணுது. நீங்க ஐ லவ் யூ சொல்லும் போது எல்லாம் அப்படிதான் இருக்கு’ அவன் தன்னை முத்தமிட்டு விட்டான் என்ற கோபத்தில் சட்டென சொல்லிவிட்டாள்தான் மீரா.

பளாரென்று கன்னத்தில் அறைவாங்கிய உணர்வில் கொஞ்சம் விக்கித்துப் போனான் கண்ணன்.

உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் அவள் மனதில் எப்போதும் எழுந்தது இல்லை. அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் அடி மனதில் சந்தோஷ சாரல் அடிப்பதுதான் உண்மை.

ஆனாலும் பயமும், தாழ்வுமனப்பான்மையும் அவளை உலுக்கிக் கொண்டிருந்தன. அவனை விட்டு விலகி விட வேண்டும் என்று அடி மனதில் அழுத்திக்கொண்டிருந்த எண்ணமே இந்த வார்த்தைகளாக வெடித்து வெளிவந்தது.

ஆடிப்போனான் கண்ணன். ‘என்னடி ரஸ்னா இப்படி சொல்லிட்டே. நீ என் ரஸ்னாடி.. நான் உன் கண்ணன்’ தளர்ந்து உடைந்து ஒலித்தது அவன் குரல். முகம் மொத்தமாக வாடிப்போயிருந்தது. சடக்கென எழுந்து விட்டான் கண்ணன்.

ஒரு பெருமூச்சை எடுத்துக்கொண்டவன் ‘வா போகலாம்’ சொல்லிவிட்டு வேறே எதுவும் பேசாமல் நடந்தான். அவள் கொஞ்சம் இடைவெளிவிட்டே பின் தொடர்ந்தாள்.

அப்போது திடீரென ஒரு பறவை அவள் தலையை உரசிக்கொண்டு பறந்து செல்ல பயந்து திகைத்து போய் தடுமாறி அவன் மீது சரிந்தாள் மீரா

‘பார்த்தியா?’ என்றபடியே சின்ன புன்னகையுடன் அவளை நிமிர்த்தி நிறுத்தினான். நீ வேண்டாம்னு சொன்னாலும் உனக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கு ரஸ்னா. எங்கே போனாலும், எத்தனை வருஷம் ஆனாலும் நீ என்கிட்டேதான் வரணும்’

பதில் பேசாமல் அவள் விலகிக்கொண்டாள் அவனை விட்டு. அவள் முகம் பார்த்து அவள் விழிகளில் கண்ணீர் இருப்பதை கண்டு அதிரந்தவன்

‘ரஸ்னா..’ என்றான் திகைப்புடன்

‘ரொம்ப சாரிம்மா. உன்னை அழவைக்கணும்ன்னு எல்லாம் நான் இப்படி செய்யலை. ஏதோ நீ என் ரஸ்னான்னு கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டேன் அவ்வளவுதான். ஆனால் ஒரு நாள் நீ என் கண்ணன். நீ என் கண்ணன்னு நீ திரும்ப திரும்ப சொல்லுவே அதை நானும் கேட்பேன்’ என்றான் உறுதியாக.. ‘அதுவரைக்கும் நான் உன்கிட்டே இதுமாதிரி நடந்துக்க மாட்டேன். ஐ லவ் யூ சொல்ல மாட்டேன் சரியா?’

அதற்கும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

‘சரி கண்ணை துடைச்சிட்டுவா நாம போகலாம்’ சொல்லிவிட்டு அவளுடனே நடந்தான் கண்ணன்.

மாதவன் உட்பட அனைவரும் அவளை காணாமல் பதறிக்கொண்டிருந்தனர். அவளை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து அவன் சேர்க்க, அத்தனை பேரும் அவனுக்கு நன்றி சொன்ன பிறகுதான் தான் அவனுக்கு நன்றி சொல்லவில்லை என்பதே மீராவுக்கு உறைத்தது.

எல்லாரும் விலகிய பிறகு அவனருகில் வந்து நின்றாள் அவள்.

அவன் புன்னகையுடன் அவளை ஏற இறங்க பார்க்க ‘ரொம்ப தேங்க்ஸ் கண்ணன்’ என்றாள் தரையை பார்த்தபடியே.

எதுக்கு?’’

‘என்னை காப்பாத்தினத்துக்கு’ அவள் சொல்ல கலகலவென சிரித்தான்.

‘நான் என் உயிரை காப்பாத்திகிட்டு இருக்கேன் ரஸ்னா . இதுக்கு நானே எனக்கு தேங்க்ஸ் சொல்லிக்க முடியுமா? அந்த ஏரிலே நீ கிடைக்கலைன்னா நானும் அப்படியே மூச்சை பிடிச்சு உள்ளே மூழ்கி உன்னோடவே வந்திருப்பேன்’ அவன் சொல்ல கொஞ்சம் திகைத்து பார்த்தாள் அவனை.

‘என்ன அப்படி பார்க்கிறே?’ என்றே சிரித்தான் கண்ணன் ‘நான் உன்கிட்டேர்ந்து எதிர் பார்க்குறது தேங்க்ஸ் இல்லை வேறே ஒரு வார்த்தை நீ’ என் கண்ணன்’ன்னு நீ சொல்ல போற வார்த்தை. அதுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்’

அதற்கு மறுமொழி சொல்ல தோன்றவில்லை அவளுக்கு. பேசாமல் அங்கிருந்து அகன்றாள் மீரா.

அவள் சென்ற பிறகு அங்கு வந்து சேர்ந்தான் மாதவன். ‘என்னடா சொல்றா மீரா?’

‘அவ நிறைய சொல்றா அதெல்லாம் எங்களுக்குள்ளே’ என்றவன் ஆழமாய் பார்த்தான் மாதவனின் கண்களுக்குள்.

‘இப்போ தெரிஞ்சதா சினிமாலே மக்கள் எப்படி இருக்காங்கன்னு? பாதி பேர் இப்படித்தான். ஏதோ ரெண்டு படம் பண்ணிட்டா தான்தான் கடவுள் அப்படின்னு ஒரு நினைப்பு வந்திடுது. அடுத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கறது இல்லை. இனிமேலாவது உன் சினிமா ஆசையை ஒதுக்கி வெச்சிட்டு வேறே உருப்படியா ஏதாவது செய். சும்மா உன் தன்மானத்தை விட்டுக்கொடுத்திட்டு திரியாதே’ என்றான் கண்ணன்.

‘சரிடா. சரிடா. நீ சொன்னா சரிதாண்டா’ அவன் குரலில் தெரிந்த வெப்பத்த்தை தணிக்கும் நோக்கத்துடன் அப்போது சொல்லிவைத்தான் மாதவன், அதை வைத்து அவனுக்கு புத்தி வந்தது என்று நினைத்துக்கொண்டான் கண்ணன்

அதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பும் வரை மீராவுடன் அவன் பேசவில்லை. அவனுடைய கேமராவை கூட அவனிடம் திருப்பி கொடுத்திருந்தாள் அவள். அவள் எடுத்த புகைப்படங்கள் கொண்ட ஃப்லிம்களை எடுக்க மறந்திருந்தாள் அவள்.

அவர்கள் ஊருக்கு திரும்பி பத்து நாட்கள் கடந்திருந்தன. தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்தது.

மிக உற்சாகமாகத்தான் அன்று கல்லூரிக்கு கிளம்பினாள் மீரா. அன்று கல்லூரியில் கலை நிகழ்சிகள் நடக்கும் நாள். காலையில் இருக்கும் உற்சாகம் மாலையில் அப்படியே காணமல் போகும் என அவள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

மாலை ஐந்து மணி ஆகியிருந்தது அவள் வீட்டுக்கு வர. வீட்டில் மற்ற மூவரும் வெளியில் சென்றிருக்க அறையில் வந்து அமர்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மீரா.

நிமிடங்கள் கடக்க கையில் எடுத்திருந்தாள் அம்மாவுக்கென வாங்கி வைத்திருந்த அந்த தூக்க மாத்திரை பாட்டிலை. அதிலிருந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாய் விழுங்க ஆரம்பித்தாள் அவள்,. சில நிமிடங்களில் மெல்ல கண்கள் சொருக ஆரம்பித்தன

‘இனி ஏதாவது பிரச்னைன்னா, இல்ல கவலைன்னா கண்ணானு ஒரு வார்த்தை கூப்பிடு எங்கே இருந்தாலும் ஓடி வந்திடுவேன் சரியா ரஸ்னா?’ அவன் சொன்ன வார்த்தைகள் இப்போது செவிகளில் கேட்டது.

ஒரு முறை வாய்விட்டு அழைத்தாள் ‘கண்ணா’. நான் போறேன் கண்ணா..; அப்படியே அவள் மெல்ல சிந்தை மயங்க ஆரம்பித்த நிலையில் எங்கிருந்து வந்தானோ திடீரென வந்து அவளை தாங்கிக்கொண்டான் கண்ணன்.

‘ர….ஸ்…..னா………’ அவன் குரல் அவளுக்கு தூரத்தில் எதிரொலித்தது.

மறுபடியும் அவள் கண்விழித்த போது மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தாள். அவள் இங்கே வந்து எத்தனை மணி நேரங்கள் ஆகின்றன என்று புரியவில்லை.

மெல்ல அவள் திரும்பி பார்த்த நேரத்தில் அங்கே சிவந்த கண்களுடன் அமர்ந்திருந்தான் கண்ணன். பார்த்தவுடன் அவன் அழுது அழுது அழுது தீர்த்திருப்பான் என்று தோன்றியது

அவள் விழித்து விட்டதை பார்த்ததும் அவன் முகத்தில் சந்தோஷ கோடுகள் வந்தாலும் அடுத்த சில நொடிகளில் விழிகளில் அப்படி ஒரு கோபப் ப்ராவகம்.

‘அ…ம்..மா?’ அவள் கேட்டாள் அவள். தொண்டை முழுவதும் புண்ணாகி எரிந்துக்கொண்டிருந்தது. அவளுக்கு,

‘அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க ’என்றான் கண்ணன் ‘கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வாங்கன்னு நான்தான் அனுப்பினேன், இப்போ இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். வர நேரம்தான். வந்திடுவாங்க’

‘ஓ…’ என்றாள் அவள் அவன் முகம் பார்த்தபடியே தான் மயங்கி விழ இருந்த நேரத்தில் அவன் ஓடி வந்தது நினைவில் ஆடியது. இந்த முறையும் அவன்தான் காப்பாற்றி இருக்கிறான் என்பது புரிந்தது

‘என்ன வேணும்? குடிக்க ஏதாவது வேணுமா? ‘ என்றான் மனதில் இருந்த கோபத்தை குரலில் காட்டிக்கொள்ளாமல்.

‘இல்ல எதுவும் வேண்டாம்’ அவள் மெல்ல சொல்ல அதற்கு மேல் தாங்கிக்கொள்ள இயலவில்லை போலும் அவனால்

‘முட்டாள். முட்டாள். முட்டாள்’ அவள் அருகில் வந்து அமர்ந்தவன் சூடாக பொரிந்தான். ‘என்னடி? என்னடி பிரச்சனை உனக்கு. இப்படி ஒரு முடிவு எடுக்குற அளவுக்கு என்ன பிரச்சனை உனக்கு? இது எந்த பிரச்சனைக்கும் முடிவில்லைன்னு உனக்கு தெரியுமா?

…………………………………………………………..

‘சரி சொல்லு. இதுக்கு எந்த வகையிலாவது நான் காரணமா? அப்படி இருந்தா தயவு செய்து சொல்லு நான் இங்கிருந்து எங்கேயாவது போயிடுவேன். தாங்க முடியலைடி என்னாலே. உன்னை இப்படியெல்லாம் பார்க்க தைரியம் இல்லை எனக்கு’ கடைசி  வார்த்தைகளில் குரல் கம்மி கரகரத்தது.

‘நீங்க காரணம் இல்லை. அப்படி எல்லாம் நினைச்சுக்காதீங்க’ அவள் குரலில் அவன் மீதிருந்த நேசம் கொஞ்சம் வெளிப்பட்டது போல் இருந்தது.

‘அப்போ வேறே என்னதான் பிரச்சனை. சொன்னா நாங்க தீர்த்து வைக்க மாட்டோமா?’ இவன் தொனியும் இறங்கி வந்தது.

‘காலேஜிலே ரொம்ப மானம் போயிடுச்சு’ சொல்லும்போதே குரல் நடுங்கியது.

‘மானம் போச்சா? என்னாச்சுமா?’

‘எங்க காலேஜ்லே டான்ஸ் ப்ரோக்ராம் நடந்தது. நானும் டான்ஸ் ஆடினேன். எல்லாரும் ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்க. ‘குள்ளச்சி… கரூப்பி… உனக்கெதுக்குடி டான்சுன்னு எல்லாரும் கத்தினாங்க , தக்காளி எல்லாம் எறிஞ்சாங்க மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

நான் குள்ளச்சிதான் கண்ணன். கருப்பிதான் கண்ணன். என்னை யாருக்கும் பிடிக்காது கண்ணன். என்னை எனக்கே பிடிக்காது நான் அழகாவே இல்லை. அடுத்த ஜென்மத்திலேயாவது அழகா பிறக்கணும்னு வேண்டிகிட்டு நான் சாகப்போனேன், நீங்க மறுபடியும் காப்பத்திடீங்க’ அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓட அவன் கரம் அவள் கண்ணீர் துடைத்தது.

‘அய்யோ… அய்யோ… இதுக்காகவாடி ரஸ்னா? இதுக்காகவா? நீ என் தேவதைடி. உனக்குள்ளேயும் நிறைய திறமை இருக்கு அதை உனக்கு எப்படி புரியவைக்க?’ என்றான் கரைந்து போன குரலில்.

அப்போது அவள் அம்மா உள்ளே வர ‘சரி நான் உனக்கு அப்புறமா சொல்றேன் நிறைய விஷயம்.. எல்லாம் சரியா வரும். இப்போ ரெஸ்ட் எடு’ எழுந்து விட்டான் அவன்.

மறுநாள் சற்றே தெளிந்திருந்தாள் அவள். மருத்துவமனையில் அவள்  மட்டும் தனியாய் இருந்த நேரத்தில் அவள் அறைக்கு வந்தான் கண்ணன். அவன் கையில் சில புத்தகங்கள்.

அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் முகத்தை பார்வையால் வருடியவன் ஒரு நிறைவான புன்னகையுடன்

‘கங்ராட்ஸ் ரஸ்னா…’ என்றான். அவள் என்னவென புரியாமல் பார்க்க

‘ஊட்டிலே நீ எடுத்த ஃபோட்டோலே ரெண்டு நான் இந்தியன் எக்ஸ்ரெஸோட  ஃபோட்டோகிராஃபி கண்டெஸ்ட்க்கு அனுப்பியிருந்தேன். உஅக்கு முதல்ப்ரைஸ் கிடைச்சிருக்குடி ரஸ்னா’ அவன் குரலும், முகமும் உள்ளமும் மகிழ்ச்சி கடலில் ஆடிக்கொண்டிருந்தது.

அந்த பத்திரிக்கையிலிருந்து வந்த கடிதத்தை அவளிடம் நீட்டினான்

‘இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ஸா?’ என்றாள் வியப்பின் உச்சிக்கு போனவளாக.

‘எஸ் மை டியர் ரஸ்னா…’ என்றான் அவன் ‘எத்தனை பெரிய பத்திரிக்கைன்னு உனக்கு தெரியுமா? உனக்கு சும்மா கொடுத்திடுவாங்களா பரிசை. நீ சாதரணமா விளையாட்டுத்தனமா எடுத்த ஃபோட்டோதானே?

‘நான் சும்மா அங்கே கண்ணிலே பட்ட பறவைகளையும், பூச்சிகளையும் எடுத்தேன்’

‘ஆனா அதை அத்தனை அழகா ரசனையோட எடுத்திருக்கே. அதுக்குத்தான் ப்ரைஸ்’ என்றான் அவன்  ‘உன்னை கூப்பிட்டு ஒரு பெரிய விழாலே ப்ரைஸ் கொடுக்க போறாங்க தெரியுமா? உங்க காலேஜ் மேடை எல்லாம் படிக்காதவன்லே ரஜினிகாந்த் சொல்றா மாதிரி ஜுஜுபி’

‘அது என்ன படம் என’ அவள் அவனை கேள்வியுடன் பார்க்க

‘தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகுது இந்த படம். ரெண்டு நாள் முன்னாடிதான் ப்ரிவியூ போயிட்டு வந்தேன். கண் சிமிட்டினான் அவன்’

‘இப்போது கொஞ்சம் புன்னகை அவள் முகத்தில்

‘.அப்பாடா அப்படி சிரி’ என்றவன் ‘இனி பாருடி. ஊரே உனக்கு கை தட்டும்டி ரஸ்னா’ சொன்னவனின் குரலில் அத்தனை பெருமை.

விழிகள் மின்ன மின்ன அவனை பார்த்தாள் மீரா ‘தேங்க்ஸ் கண்ணன்’

‘எவ்வளவு பெரிய கெளரவம். இது தெரியாம சாக போனியேடி ரஸ்னா.’ என்றான் ஆதங்கமான குரலில்.

‘இப்போ சொல்லு. உன் காலேஜ்லே உன்னை கேலி பண்ணவங்க கிட்டே போய் சொல்லு இதை.

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடி கிழப்பருவமெய்தி – கொடும்

கூற்றுக் கிரையென பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரை போலே – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

அப்படின்னு சொல்லு அவன் கம்பீர குரலில் உறும சற்றே ஆச்சரியமாக பார்த்தாள் மீரா.

‘இது பாரதியார் பாட்டுத்தானே? கேட்டாள் அவள் ஒரு வித ரசனை சேர்ந்திருந்த குரலில்.

‘ஆமாம். இந்தா உனக்கு பாரதியார் சம்மந்தபட்ட மூணு புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். எல்லாத்தையும் படி. தன்னாலே தன்னம்பிக்கை வரும்’

வாங்கி அதை பிரித்தவளின் விழிகளில் சந்தோஷ கோடுகள் ‘ப்ரியங்களுடன் கண்ணன்’ என்று மூன்று புத்தகங்களிலும் கையெழுத்து போட்டிருந்தான் கண்ணன்.

‘அழகு அப்படிங்கிறது நம்ம பார்வையிலே இருக்கு, உயரமோ நிறமோ நம்மை பெத்தவங்க நமக்கு கொடுக்குற விஷயம். அது நிறைய இருக்குங்கிறதுலே  என்ன பெருமை? நம்ம திறமையை வெச்சு நாம ஜெயிக்குரோம் பார்த்தியா அதுதாண்டி ரஸ்னா பெருமை’ என்றான் அவள் கண்களுக்குள் பார்த்தபடியே.

‘சொல்றேன் எழுதி வெச்சுக்கோ. ஜெயிப்பேடி ரஸ்னா. நீ வாழ்க்கையிலே பெருசா ஜெயிப்பே. அப்போ நானே உனக்கு ஏதாவது ஒரு அவார்ட் கொடுப்பேன் மேடையிலே.’ அவன் உறுதியாக சொல்ல அப்போது மேலிருந்து ஒரு தேவதை சொன்னது ‘ததாஸ்து’.

அவள் சந்தோஷ புன்னகையுடன் தலை அசைக்க ‘நீ கையை குடு’ என அவள் அனுமதி இல்லாமலே அவள் கரம் பிடித்து குலுக்கினான்.

அதை இரண்டு கைகளுக்குள் வைத்து பொத்திக்கொண்டான். அப்படியே அதை இதழ்களுக்கு கொண்டு சென்று புறங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்துவிடத்தான் தோன்றியது அவனுக்கு,

முத்தமிட மாட்டானா என அவன் மனதின் ரகசியமான ஒரு பிரதேசம் எதிர்ப்பார்க்கவும் செய்தது.

;முத்தமெல்லாம் கிடையாது’ என்றான் அவள் மனம் படித்தவனாக ‘நீ முதல்லே என்னை உன் கண்ணன்னு சொல்லு. அப்புறம் கொடுக்கிறேன் முத்தம்’

என்ன தோன்றியதோ அவளுக்கு ‘வேண்டாம் கண்ணன்’ என அவனிடமிருந்து கையை விலக்கிக்கொண்டாள்.

‘ஏன்டா?’ என்றான் இதமாக

‘ஏனோ எனக்கு சொல்லணும்னு தோணலை. உங்களுக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை கண்ணன் ’

‘பச். மீரா’ என்றான் கண்ணன் நீ மறுபடியும் பழைய இடத்துக்கே போறியே.

‘இல்ல நீங்க சொன்னா மாதிரி நான் ஜெயிப்பேன். ஜெயிச்ச பிறகு உங்ககிட்டே கண்டிப்பா சொல்லுவேன்’

‘சரிடா. சரிடா’ நான் காத்திருக்கேன் சொன்னான் கண்ணன் ஆனால் அதற்காக அவன் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற கணக்கு அவனுக்கு அப்போது தெரியவில்லை.

அன்று மாலை மருத்துவமனையில்ருந்து வீடு திரும்பியிருந்தாள் அவள்.

மறுநாள் இவளுக்கு பரிசு கிடைத்த விவரம் இவளது கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தும் போனாள் மீரா.

இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் விடிந்தால் தீபாவளி. ஊரெங்கும் வெடி சதம் கேட்க துவங்கி இருந்தது.  மருத்துவமனையிலிருந்து வந்தவுடனேயே ரஜினிகாந்த கமலஹாசன் என பலர் படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி தோழிகளுக்கு தபாலில் அனுப்பி இருந்தாள் மீரா.

கையில் மருதாணி தொப்பிகளுடன் வலம் வந்து கொண்டிருந்தாள் மீரா. இப்போது தன்னை கண்ணடியில் பார்த்துக்கொள்ள கூட அவளுக்கு பிடிக்க ஆரம்பித்திருந்தது. பாரதி கொஞ்சம் கொஞ்சமாக அவளை நிமிர்த்திக்கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டும்

அம்மா முல்லை பூக்களை தொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். எல்லா புது உடைகளுக்கும் மஞ்சள் தடவை வைத்தாகிவிட்டது. நல்லெண்ணெய் காய்ச்சி வைத்தாகி விட்டது. வீட்டில் செய்து முடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகாரங்களின் வாசனை எச்சில் ஊற வைத்துக்கொண்டே இருந்தது.

அப்பாவுக்கு அலுவலகத்தில் இரண்டு  அட்டை பெட்டி பட்டாசுகள் இலவசமாக கிடைத்திருந்தன. அதிலிருந்த பட்ட்சுகளை எல்லாம் வெய்யிலில் காயவைத்து எடுத்தாகி விட்டது. இதை செய்யவில்லை என்றால் சில நேரங்களில் வெடிக்காமல் போய்விடும் அவை.

அது என்னவோ இந்த முறை அவளுக்கு தீபாவளி படு உற்சாகமான தீபாவளியாக இருந்த்து. எப்போதும் கண்ணனும் மாதவனும் சேர்ந்து தௌசண்டு வாலா டூ தௌசண்டு வாலா என பட்டாசுகள் வெடித்து தூள் கிளப்புவார்கள். இந்த முறை அவர்களுடன் சேர்ந்து இவளும் போட்டி போட்டுக்கொண்டு வெடிக்க வேண்டுமென தோன்றியது.

யார் வீட்டின் வெளியில் அதிக பட்டாசு குப்பை இருக்கிறதோ அவர்களை வீட்டை மக்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டு சென்ற காலம் அது. பல நூறு டி.வி சேனல்களின் ஆதிக்கம் இல்லாமல் சந்தோஷமாக வெளி வீதியில் தீபாவளி கொண்டாடிய காலமது.

‘அப்பா இந்த பட்டாசு எல்லாம் தீர்ந்த பிறகு. இன்னும் இருநூறு மூந்நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி தரீங்களாபா?’ எந்த வருடமும் இல்லமால் இந்த வருடம் கேட்கும் மகளை வியப்புடன் பார்த்து சந்தோஷமாக தலை அசைத்தார் தந்தை.

எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருக்க மாதவன் மட்டும் வீட்டில் இல்லை.

‘மாதவன் எங்கே மீரா?’ அப்பா கேட்க

‘யாரோ ஆபிஸ் ஃப்ரெண்ட். டெல்லிலேர்ந்து வந்திருக்காராம், அவரை பார்க்க போயிருக்கான்’ என்றாள் மீரா. இதுதான் அவன் அவளிடம் சொல்லிவிட்டு போன பொய்.

‘அதே பொய்யைத்தான் கண்ணனிடமும் சொல்லிவிட்டு போயிருந்தான் மாதவன். அவன்  போகுமிடம் தெரிந்திருந்தால் அனுப்பி இருப்பானா என்ன கண்ணன்?

அமுதன் என்ற நடிகன் மீதிருந்த பைத்தியக்காரத்தனமான அபிமானத்தினால் அருகில் இருக்கும் எல்லா சின்ன ஊர்களுக்கும் சென்று நாளை வெளியாகப்போகும் அமுதனின் புது திரைப்படத்திற்கு போஸ்டர் ஓட்டிக்கொண்டிருந்தான் மாதவன். ஒரு அரசு பதவியில் இருக்கும் மாதவன்.

நவம்பர் 11

காலையில் பட்டு பாவாடை தாவணி சகிதம் இவள் வெடி வெடிக்க ஆரம்பித்த நேரத்தில் அவளை புன்னகையுடன் ரசித்த கண்ணனின் விழிகள் மாதவனையும் தேடிக்கொண்டிருக்க அதில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

தனது உற்றார் உறவினர்களுடன் பண்டிகை கொண்டாடுவதையும் மறந்தவன் அங்கே அமுதனின் புதுப்படம் வெளியாகும் தியேட்டரில் அமுதனின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்துக்கொண்டிருந்தான்.

எப்போதும் அவனுடன் உற்சாகமாக தீபாவளி கொண்டாடும் மாதவன் இந்த வருடம் அவனை விட்டு எங்கோ சென்றிருக்கிறான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. புத்தாடை கூட அணியாமல் வலம் வந்துக்கொண்டிருந்தான் கண்ணன். நேரம் நகர நகர மாதவன் பொய் சொல்லிவிட்டு எங்கோ சென்றிருக்கிறான் என்ற சந்தேகம் மெல்ல உருவெடுத்தது கண்ணனின்னுள்ளே.                           

இங்கே மாதவன் பைத்தியக்காரனை போல் முதல் நாள் முதல் காட்சியில் அமுதனுக்கு விசில் அடித்து பேப்பர் பூக்களை எரிந்துக்கொண்டிருந்தான் அந்த தியேட்டரின் திரை மீது.

தியேட்டரில்தான் இருப்பான் மாதவன் என்ற சந்தேகம் உருவெடுத்த அடுத்த நொடியிலிருந்து பற்றி எரிந்துக்கொண்டிருந்தது  கண்ணனின் உள்ளம். அங்கே போய் அவனை இரண்டு அடிகள் அடித்து இழுத்து வந்து விடக்கூட தோன்றியது கண்ணனுக்கு.

நேரம் மதியம் பன்னிரெண்டை தொட்டிருக்க இன்னமும் மாதவன் வீடு வந்து சேராமல் இருந்தான். செல்போன் வசதி இல்லாத காலம் எனும்படியால் மீரா வீட்டிலேயும் கொஞ்சம் கவலை சேர ஆரம்பித்திருக்க முதல் நாள் முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் கூட்டத்தோடு மாதவன் அமுதன் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான்.  

உற்சாக கோஷங்களுடன் வீட்டு வாசலில் வந்து துள்ளி குதித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அமுதன் கையசைத்துக்கொண்டிருக்க அங்கே இன்னொரு ஜன்னலின் வழியே அந்த கூட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூட்டத்தில் கூட்டமாக நின்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தான் சட்டென அவன் விழிகளில் கோப தாண்டவம்.

கீழே இறங்கி வந்தவன் வீட்டை விட்டு வெளியே வந்தவன் கொத்தாக பிடித்து தனியாக  இழுத்துகொண்டு வந்தான் கண்ணன். ருத்திர மூர்த்தியாய்தான் நின்றிருந்தான் அவன்.

கண்ணனிடம் இப்படி ஒரு கோபத்தை இதுவரை மாதவன் பார்த்ததில்லை. அவனே எதிர்பார்க்காத நிலையில் பளார் என்ற ஒரு அடி விழுத்தது மாதவனின் கன்னத்தில். மாதவன் அதிர்ந்து தடுமாறி நிற்க

‘அறிவு கெட்டவனே அறிவு கெட்டவனே ஏன்டா இப்படி அவனுக்கு அடிமை மாதிரி நிக்கறே? பதிலுக்கு அவன் உனக்கு என்ன செய்யறான்? நீ அப்படி நிக்கறது என்னாலே தாங்கவே முடியலை.’ கத்தினான் கண்ணன். அப்போதே திருந்தி இருக்க வேண்டாமா மாதவன். அந்த அடியுடன் தான் செய்யும் முட்டாள்த்தனம் புரிந்திருக்க வேண்டாமா?

‘எனக்கு உங்க அண்ணன்னா ரொம்ப பிடிக்கும்டா. அவர் படம் ரலீஸ்தான் எனக்கு தீபாவளி’ என்றான் மாதவன் தளர்ந்து விழுந்த குரலில்.

அதற்கு மேல் என்ன பேச என்ன செய்ய?’ தோற்றுத்தான் போய் நின்றான் கண்ணன்..

‘போடா எக்கேடோ கெட்டுப்போ.’ அவனை தள்ளிவிட்டு நகர்ந்தான் கண்ணன் ‘இனி இந்த ஜென்மத்திலே என்னோட பேசாதே’

அவன் போகும் திசையிலேயே இருந்தது மாதவனின் பார்வை. எப்படியும் அவனது கோபம் மூன்று மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது என்று நன்றாகவே தெரியும் மாதவனுக்கு. அவன் நினைத்தபடியே இரவு எட்டு மணிக்கு கண்ணனே அவனை தேடி அவன் வீட்டுக்கு வந்தான்.  

‘சாரிடா. உன்னை கைநீட்டி அடிச்சிட்டேன்’

‘என்னை அடிக்கிறதுக்கு உனக்கு இல்லாத உரிமையாடா கண்ணா?’’ என்றான் மாதவன் நிதானமாக ‘இன்னும் ரெண்டு அடி வேணும்னாலும் அடி’

‘டேய்… டேய்…. இதைத்தாண்டா வேண்டாங்கிறேன். நானகவே இருந்தாலும் நீ உன்னை இத்தனை தாழ்த்திக்காதே. தவிப்புடன் சொன்னவன் ‘சரி வா இன்னைக்கு ராத்திரி எங்க வீட்டிலே சாப்பிடு வா. எங்க அண்ணனோட சரி சமமா உட்கார்ந்து நீ சாப்பிடுற இன்னைக்கு’ என்றான் ஒரு முடிவுடன்.

‘இல்லைடா. அண்ணனோட நான் எப்படிடா உட்கார்ந்து சாப்பிட முடியும் வேண்டாம்டா’ மறுத்தான் மாதவன்.

‘இல்ல இன்னைக்கு தீபாவளி. நீ எங்க வீட்டிலே சாப்பிடுற கட்டாயப்படுத்தி  வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தான் கண்ணன். அங்கே உணவு மேஜையில் அமுதன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

‘வேண்டாம் கண்ணா. அவங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் சாப்பிட்டுக்கறேன்’ தவிர்க்கவே பார்த்தான் மாதவன். விடவில்லை கண்ணன்’ மாதவனையும் பிடித்து இழுத்துக்கொண்டு  உணவு மேஜையில் சென்று அமர்ந்தான் கண்ணன்.

மாதவன் வந்து அமர்ந்தவுடனேயே அமுதன் பார்த்த ஒற்றை பார்வையில் அரண்டு எழுந்திருந்தான் அவன்.

‘உட்காரு மாதவா’ ஆணையிடும் குரலில் சொல்லிவிட்டு அண்ணா எங்களுக்கும் இல்லை போடுங்கண்ணா’ என்றான் கண்ணன் அவர்கள் வீட்டு சமையல்காரரை பார்த்து.

அவர்கள் இருவருக்கும் இரண்டு இலைகள் போடப்பட அங்கே உட்கார்ந்திருந்தன பணக்கார பிரபலங்களின் முகங்களில் மாற்றம். மாதவனின் சாதரண தோற்றம் அவர்களில் ஒரு சிலரை முகம் சுளிக்கக்கூட வைத்தது.

‘என்ன அமுதன் இது? யார் இவன்? நமக்கு சரி சமமா வந்து உட்கார்ந்து இருக்கான்’ அமுதனின் அருகில் இருந்தவன் அவன் காதில் கிசுகிசுக்க 

அதை புரிந்துக்கொண்டதை போலவே சொன்னான் கண்ணன் ‘இவன் என் ஃப்ரெண்ட். இவன் என் கூடத்தான் உட்கார்ந்து சாப்பிடுவான். பிடிக்காதவங்க இங்கிருந்து எழுந்து போகலாம்’ அந்த வார்த்தைகளில் இரண்டு மூன்று பேர் சட்டென எழுந்திருந்தனர்.

‘டேய்… என்னடா இப்படி பேசறே? மாதவன் கொஞ்சம் படபடக்க

‘நீ சும்மா இரு. இது நம்ம வீடு. நம்மை பிடிக்காதவங்கதான் இங்கிருந்து போகணும்’ என்றான் அழுத்தமாக.

பாதி சாப்பாட்டில் அவர்கள் எழுந்தது அமுதனுக்கு பெரிய அவமானமாக இருந்தது.

‘நீங்க உட்காருங்க ப்ளீஸ்..’ அவர்களை பார்த்து கெஞ்சலாக சொன்ன அமுதன் மாதவனின்  முகம் பார்த்தான் டேய்… இங்கிருந்து போ நீ வெடித்தான் அமுதன்.

இலையில் உணவுகள் பரிமாற பட்டிருக்க எதையுமே தொடாமல் எழுந்துவிட்டான் மாதவன் ‘சரிங்க அண்ணா

‘அண்ணனா ? நீ என் படுத்துக்கு போஸ்டர் ஓட்டுற பையன். சார் ன்னு கூப்பிடு ’

‘டே.ய்…’ இப்போது கண்ணன் உறுமினான் அமுதனை பார்த்து. ‘இவன் என் ஃப்ரெண்ட். இவனை அவமான படுத்தறது என்னை அவமான படுத்துறா மாதிரி’

‘வேண்டாம் கண்ணா. சார் கூட சண்டை வேண்டாம். நான் போயிடறேன் சார்’ மாதவன் நகரப்போக கண்ணனும் எழுந்தே விட்டான்

‘அமுதன் உனக்கு  நான் முக்கியமா? இவங்க முக்கியமான்னு முடிவு பண்ணு. மாதவன் இன்னைக்கு இங்கே சாப்பிடலைன்னா நான் என்னைக்குமே இந்த வீட்டிலே சாப்பிட மாட்டேன்’

அதற்கு அமுதனிடம் எந்த பெரிய பிரதிபலிப்பும் இல்லை. மாதவன் அங்கிருந்து நகர மற்றவர்கள் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்க கையை இலையிலேயே கழுவிவிட்டு மாதவனின் தோளில் கைப்போட்டுக்கொண்டு அவனுடன் நடந்தான் கண்ணன்.

இருவரும் மாதவன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தனர். அங்கங்கே இன்னமும் மிச்சமிருந்த தீபாவளி வெடி சத்தம் காதை தொட்டுக்கொண்டிருக்க அவ்வபோது சில பூவாணங்கள் கண்ணில் தெரிந்து தெரிந்து மறைந்துக்கொண்டிருக்க

‘சாரிடா’ என்றான் கண்ணன் வருத்தத்தில் ஊறிக்கிடந்த குரலில். ‘என்னாலேதான் உனக்கு தேவை இல்லாத அவமானம்’

‘இதிலென்னடா இருக்கு? என்றான் மாதவன் ‘எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்க அண்ணன் சொன்னது கரெக்ட்தான். நான் அங்கே இருக்கிறது அவருக்கு அவமானம்தான். அவர் எத்தனை பெரிய நடிகர் அவருக்கு சரி சமமா நான் எப்படிடா?’

‘டேய்… டேய்,….. உன்னை என்னனு சொல்லி திட்டறதுன்னு எனக்கு தெரியலை. இவ்வளவு பைத்தியமா இருக்கியேடா அவன் மேலே. என்கிட்டே அடி வாங்கியும் புத்தி வரலையா உனக்கு? எப்போடா எப்போடா திருந்துவே நீ?’ கண்ணன் ஆற்ற மாட்டாமல் பொரிந்தான் .

‘நான் திருந்துற அளவுக்கு எந்த தப்பும் செய்யலை கண்ணன்’ என்றான் அவன் விடாமல். இதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்லி புரியவைக்க என்று தெரியவில்லை கண்ணனுக்கு.

சில்லென்ற காற்று வீட்டின் பின்னால் இருந்த தென்னை மரங்களுக்கிடையில் ஊடுருவி சலசலத்தது. சென்னையில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்க காற்று சற்று பலமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். பட்டென பறிபோனது மின்சாரம் மழை வரும் அறிகுறிகள் தென்பட்டுக்கொண்டிருந்தன அமுதன் வீட்டில் மட்டும் ஜெனரேட்டர் இயங்க ஆரம்பித்திருந்தது.

அங்கங்கே வீடுகளில் சின்ன சின்ன சிம்னி விளக்குகளும் ஹரிகேன் விளக்குகளும் ஏற்றி வைக்கப் பட்டுக்கொண்டிருந்தன தீபாவளி பட்டாசு வெளிச்சமும் அங்கங்கே தெரிந்துக்கொண்டிருந்தது. தெருவில் அவ்வப்போது கடந்து செல்லும் சைக்கிள்களின் மணி ஓசைகளும் காதில் விழுந்துக்கொண்டிருந்தன.

சில நிமிடங்களில் கையில் ஒரு ஹர்ரிகேன் விளக்குடனும் இன்னொரு கையில் ஒரு தட்டுடனும் அவர்கள் அருகில் வந்து நின்றாள் மீரா. அந்த தட்டு நிறைய பிசைந்து வைத்த சாதம் இருந்தது.

அவர்கள் இருவரும் கண்ணன் வீட்டுக்கு போன வேகத்தில் த்ரயும்பி வந்ததால் அங்கே ஏதோ ஒரு பிரச்சனை இருக்ககூடும் என ஊகித்திருந்தாள் மீரா.

‘நாம் கொஞ்சம் சாப்பிடலாமா? வாங்க வாங்க ரெண்டு பேரும் ‘ குழந்தைகளை அழைப்பது போல் சொல்லிக்கொண்டே விளக்கை அங்கே அருகில் வைத்து விட்டு அமர்ந்தாள் மீரா.

மீராவை பார்த்தவுடனேயே இருவர் முகமும் உள்ளமும் மலர்ந்து போனது உண்மைதான். மாதவன் கண்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

இருவரும் அவள் எதிரே அமர்ந்துக்கொள்ள சாத்தை பிசைந்து அவள் உருட்டிக்கொண்டிருந்த வேளையில்

அந்த இருட்டில் கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பூனை. திடீரென அந்த பூனை அங்கே அமர்ந்திருந்த மீராவின் மீது பாய்ந்தது. அலறிக்கொண்டு அப்படியே அவள் அருகில் அமர்ந்திருந்த கண்ணன் மீது சாய்ந்தாள் அவள்.

‘பூனைடா. பூனை வேறே ஒண்ணுமில்லை. அவன் கரம் அவளை இதமாக அணைத்தது. சடக்கென சுதாரித்து விலகிக்கொண்டாள் அவனை விட்டு. மீரா கண்ணன் மாதவன் என மூவருக்கும் இடையில் இப்போது ஒரு இனிமையான மௌனம் குடி வந்திருந்தது.

சாதத்தை உருட்டி முதலில் மாதவன் கையில் கொடுத்தாள் மீரா ‘இது எங்க மாதவனுக்கு’

அடுத்து அவளை தவிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான் ‘என் கண்ணனுக்கு’ என்று சொல்லாவிட்டாலும் ‘எங்க கண்ணனுக்கு’ என்று சொல்வாளோ என.

‘இது கண்ணனுக்கு’ என்று உருட்டி கொடுத்தாள் அவனுக்கு.

‘அது என்னது அவனுக்கு மட்டும் எங்க மாதவன் எனக்கு மட்டும் வெறும் கண்ணன்?’ கண்ணன் கேட்டே விட பதில் பேசாமல் சின்ன புன்னகையுடன் அவள் தலை குனிந்துக்கொண்டாள்.

‘நீ எப்பவுமே எங்க கண்ணன்தாண்டா சொன்னான் மாதவன்.

‘நீ சொல்றேடா. ஆனா சொல்ல வேண்டியவங்க வாயிலே இருந்து வர மாட்டேங்குதே.’ சொல்லிக்கொண்டே மீராவை ஒரு வித ஏக்க பார்வை பார்த்தான் கண்ணன்.

‘சொல்வேன் நேரம் வரும்போது கண்டிப்பா சொல்வேன்’ சொன்னாள் மீரா இருவருக்கும் இன்னொரு உருண்டை உருட்டிக் கொடுத்துக்கொண்டே.

அன்று அமாவசை வானில் நிலவு இல்லை. ஆனாலும் மழைமேகங்களும், குளிர் காற்றும் இயற்கையும் அவர்கள் அன்பிற்கும் அவளது வார்த்தைக்கும் சாட்சியாக இருந்தன.

                             தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!