Priyangaludan Mugilan 16

ப்ரியங்களுடன் முகிலன் 16

படுக்கையில் உறக்கமின்றி படுத்துக்கிடந்தாள் மயூரா. சில மணி நேரங்களுக்கு முன் அப்பாவுடன் நடந்த அந்த விவாதமும், அதனோடு சேர்த்து கண்ணனும் மீராவுமே   அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தனர்..

‘நான் பண்ண அதே தப்பையே நீயும் பண்றே மயூரா’ என்றார் அவர் ஐந்தாவது முறையாக.

இதுவரை அவர் இவள் எடுக்கும் திரைப்படம், கதாநாயகர்கள் விஷயத்தில் எல்லாம் அவர் தலையிட்டதே இல்லை. ஆனால் இதற்கு அவர் ஏதாவது சொல்வார் என்பது அவள் எதிர்ப்பார்த்த ஒன்றுதான்.

‘நானும் உன்னை மாதிரிதான். என்னோட கதாபாத்திரத்துக்கு அவன்தான் பொருத்தமா இருப்பான்னு நினைச்சு அவனை நம்பி என் படத்துக்கு புக் பண்ணேன். கடைசியிலே துரோகி சண்டை போட்டு படத்திலிருந்து விலகிட்டான்.’ என்றார் அவர்.

அவர் அவனை தேர்ந்தெடுத்தற்கு காரணம் அவன் கதாபாத்திரத்துக்கு பொருத்தம் என்பதா? இல்லை முகிலன் வந்து நின்றாலே போதும் படம் எப்படியும் ஓடி விடும் என்பதா? அவளது உள்மனம் ரகசியமாய் கேள்வி கேட்டது.

‘எனக்கு உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே சண்டைன்னு தெரியும் ஆனா என்ன பிரச்சனைன்னு முழுசா தெரியலை. என்ன பிரச்சனை? முகிலன் என்ன துரோகம் பண்ணார்ன்னு சொல்லுங்க.’ என்றாள் மயூரா அவர் முகம் பார்த்தபடியே.

நடந்ததை அப்படியே சொல்லும் தைரியம் அவருக்கு இல்லை என்றே அவரது முகபாவத்திலிருந்து புரிந்தது மயூராவுக்கு.

‘நடிக்கிறேன்ன்னு வாக்கு கொடுத்திட்டு படத்தை விட்டு விலகிப்போறது துரோகம்தானே? அவன் குணத்திலே அப்படியே அவன் சித்தப்பனை கொண்டிருக்கான். அவன் சித்தப்பன் கண்ணனுக்கு உடம்பு முழுக்க திமிரு. அதே திமிரு இவனுக்கு அப்படியே வந்திருக்கு. இவன் கண்ணும் மூக்கும் அப்படியே அவன் சித்தப்பனை உரிச்சு வெச்சிருக்கு’ என்றார் வெங்கட்ராமன்.

மயூராவின் புருவங்கள் மெல்ல முடிச்சிட்டன. ‘எனக்கு மனசுக்குள்ளே எங்க சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும்’ அன்று முகிலன் சொன்னது இவள் நினைவில் ஆட தவறவில்லை.  

‘எங்க அண்ணனுக்கு மீரான்னு ஒரு பொண்ணு இருந்தா. உனக்கு தெரியுமா?’ அவர் கேட்க யோசனையுடன் அவர் முகம் பார்த்தாள் மயூரா. அடிக்கடி இல்லை என்றாலும் அவளுக்கு விவரம் தெரிந்து மீரா என்ற பெயர், அவளை பற்றிய பேச்சுக்கள் ஓரிரு முறை வீட்டில் இடம் பெற்றிருக்கின்றன.

‘அவ பார்க்கிறதுக்கு கிட்டத்தட்ட உன்னை மாதிரியேதான் இருப்பா’ வெங்கட்ராமன் சொல்ல வியப்பில் விரிந்தது அவள் முகம்.

‘.அவ இந்த உலகத்திலே இன்னமும் சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்க வேண்டிய பொண்ணு. அந்த கண்ணனை நம்பி அவனை நினைச்சு நினைச்சே உயிரை விட்டா. அவ போன பிறகு எங்க அண்ணனும் அண்ணியும் கதறின கதறல் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. அந்த கண்ணனுக்கும் முகிலனுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அதனாலேதான் சொல்றேன் அவன் சகவாசம் வேண்டாம்னு’ வெங்கட்ராமன் சொல்லிக்கொண்டே போக இவள் மனம் மீராவிலேயே நின்றது.

‘அந்த மீராக்கா எப்படி இறந்து போனாங்க?’ என்றாள் முகம் நிறைய கேள்விக்குறிகளுடன்.

‘ரொம்ப முக்கியம். நான் என்ன சொல்றேன். நீ எதை பத்தி கேள்வி கேக்குற’ வெடித்தார் வெங்கட்ராமன் ‘அந்த முகிலனோட படம் பண்ணாதே. அவ்வளவுதான்’

‘அடுத்த வாரம் ஊட்டிலே ஷூட்டிங்பா. எல்லாம் முடிவு பண்ணியாச்சு. அதை மாத்துறதுக்கு, நிறுத்தறதுக்கு எந்த நியாயமான காரணமும் இருக்கிறதா எனக்கு தெரியலை’ என்றாள் மயூரா நிதானமாக.

‘அவன் என் மேலே இருக்குற கோபத்திலே உன்னை ஏதாவது பண்ணிடுவான் மயூரா’

‘யாரு முகிலனா. என்னையா?’ இடம் வலமாக அசைந்தது அவள் தலை ‘வாய்ப்பே கிடையாதுபா’ என்றாள் அவள் உறுதியாக. அவன் மீது அப்படி ஒரு நம்பிக்கை எங்கிருந்து வந்தது என்பது அவளுக்கே புரியவில்லைதான்.

‘அய்யோ… உனக்கு புரியலையே. அந்த ஊட்டி ஏரியிலே உன்னை அவன் தள்ளி விட்டாலும் விட்டுடுவான்’ அவர் சொல்லி முடிக்கவில்லை அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது மயூராவுக்கு.

‘யாரு… முகிலன் என்னை தள்ளி விட்டுடுவனா?’ கேட்டுக்கொண்டே விழுந்து விழுந்து சிரித்தாள் மயூரா.. ‘அப்படியே முகிலன் தள்ளி விட்டாலும் நான் நீச்சல் அடிச்சு மேலே வந்திடுவேன் நீங்க கவலை படாதீங்க’  என்றாள் சிரித்து சிரித்து கண்களில் சேர்ந்திருந்த நீரை துடைத்தபடியே. எதற்கு அப்படி ஒரு சிரிப்பு எழுந்தது என்று அவளுக்கே புரியவில்லை.

‘சொல் பேச்சு கேட்க மாட்டே இல்ல நீ. அதுக்கு அப்புறம் எது நடந்தாலும் அப்பான்னு என்கிட்டே வராதே’ என்றார் அவர் கடுமையான குரலில். அவளது அந்த சிரிப்பில் எரிச்சல் மண்டியிருந்தது வெங்கட்ராமனினுள்ளே.

‘எதுவும் தப்பா நடக்காதுபா. நீங்க தைரியமா இருங்க. எனக்கு தூக்கம் வருது குட் நைட்’ புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள் மயூரா. அவள் சென்ற பிறகும் கோபம் உள்ளமெங்கும் கோபம் மண்டிக்கிடக்கவே அமர்ந்திருந்தார்  வெங்கட்ராமன்.

இரவு முழுதும் அவள் பார்த்திராத அந்த கண்ணனும் மீராவும் அவளுக்குள்ளே ஆட்சி புரிந்துக்கொண்டிருந்தனர், காரணம் இல்லாமல் அவர்கள் இருவர் மீதிலும் ஒரு பாசம் வந்திருந்தது அவளுக்கு. அதனாலேயே முகிலனை வைத்து அவள் எடுக்க போகும் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் நாயகிக்கு கண்ணன், மீரா என்றே பெயர் மாற்றி வைத்திருந்தாள் அவள்.

அப்போது வந்தது அந்த அழைப்பு. அவளது காரியதரிசி வித்யாவிடமிருந்து அழைப்பு. அந்த வித்யா அவளது இணை இயக்குனரும் கூட.

‘மேடம்… ‘ என்றாள் அவள் தயக்கத்துடன். சாரி டு டிஸ்டர்ப் யூ’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சொல்லுமா’

‘நம்ம அனுபமா……..’ அவள் நடந்தவைகளை சொல்லிக்கொண்டே போக உடல் கிடுகிடுவென ஆடியது மயூராவுக்கு. ‘அய்யோ….இதை எப்படி தாங்கிக்கொள்வான் வருண்?’

அதே நேரத்தில் அங்கே சிங்கப்பூரில் காலை ஆறு மணி.

ஹோட்டல் மெரினா பே சான்ட்ஸின் ஐம்பத்தி ஏழாவது மாடியில் இருக்கும் அந்த பிரம்மாண்ட ரூஃப் டாப் இன்ஃபினிட்டி பூல் நீச்சல் குளத்தில் சுழன்று சுழன்று நீந்திக்கொண்டிருந்தான் முகிலன்.

பொதுவாக உடற்பயிற்சி, நீச்சல் போன்ற விஷயங்களில் அதிக அக்கறை உண்டு அவனுக்கு. அந்த காலை நேர நீச்சல் அவனுக்கு உடலில் மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்திருந்தாலும் மனதில் கடுகளவு கூட உற்சாகம் இல்லை.  மல்லாந்து படுத்து வானத்தை பார்த்தபடியே மிதந்துக்கொண்டிருந்தான் தண்ணீரில்.

இன்னமும் முழுவதுமாக  விடிந்து விடவில்லை வானம். மெல்ல மெல்ல விடியலின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்த வேளை அது.

வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏதோ ஒரு சஞ்சலம் அவனை சுழற்றிக்கொண்டிருந்தது. நீரில் எத்தனை முறை மூழ்கி மூழ்கி எழுந்தும் இந்த சஞ்சலம் கரைவதாக இல்லை.

‘சொல் நிலவே வருணுக்கு எதுவும் பிரச்சனையோ?’ அவன் மனம் புரிந்ததோ என்னவோ சட்டென மேகங்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டது இன்னமும் ஒரு ஓரத்தில் மங்கலாக ஒளிர்ந்துக்கொண்டிருந்த நிலவு.

இன்னமும் சில நிமிடங்கள் நீந்திவிட்டு இடுப்பில் கட்டிய துண்டுடன் வெளியே வந்து நின்றான் முகிலன். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்த ஐம்பத்தி ஏழாவது மாடியிலிருந்து மெது மெதுவாய் விடிந்துக்கொண்டிருக்கும் சிங்கபூரை கண்களால் அளந்தான் அவன்.

அவன் தலைக்கு மேல் இன்னும் பல மடங்கு பிரம்மாண்டத்துடன் விரிந்து பரவிக்கிடந்தது வானம். அதன் முன்னால், அத்தனை பெரிய இயற்கையின் சக்தியின் முன்னால், அது போடும் கணக்குகளின் முன்னால் மனிதர்களும் அவர்கள் படைப்புகளும் ஒன்றுமே இல்லை என்று ஏனோ தோன்றியது அவனுக்கு.

அந்த உயரத்திலிருந்து தெரியும் சிங்கப்பூரையும், அந்த பிரம்மாண்ட நீச்சல் குளத்தையும் பலர் வியந்து சிலாகித்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க இது எதுவுமே கருத்தில் பதியாமல் நின்றிருந்தவனின் பின்னால் வந்து நின்றான் ஷ்யாம். சட்டென  திரும்பினான் இவன்.

‘குட் மார்னிங் ஷ்யாம்’ முகிலன் புன்னகைத்தான்.

அங்கிருந்து பதிலுக்கு புன்னகை இல்லை. குட் மார்னிங்கும் வரவில்லை. ‘சார்… அது….. வந்து’

‘வருண் நல்லா இருக்கான் இல்லையா ஷ்யாம்’ கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல் கேட்டே விட்டான் முகிலன்.

‘அவன் சொல்ல வந்த செய்தியின் அழுத்தத்தையும் தாண்டி இவனது இந்த அவசர கேள்வி ஷ்யாமுக்கு எதையோ உணர்த்த தவறவில்லை.

‘அவருக்கு ஒண்ணுமில்லை சார். அவர் நல்லா இருக்கார்’

‘அப்பா?’

‘அவரும் நல்லாத்தான் சார் இருக்கார்’

‘தேங்க் காட்’ என்றான் ஒரு ஆழ் மூச்சு எடுத்தபடியே. ‘சொல்லு வேறே என்ன விஷயம்’ என்றான் முகிலன்.

‘சார்… நம்ம அனுபமா மேடம்…’ அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் விரிந்தன அவன் கண்கள். முகம் அப்படியே இறுகிப்போனது.

‘மை… கா….ட்….’ என்றான் காற்றாய் வெளியேறிய குரலில். அங்கே இருந்த அந்த பனை மரத்தின் அடியில் இருந்த அந்த சன்பாத் லாஞ்சரில் கைகளில் நெற்றியை தாங்கியபடியே அப்படியே அமர்ந்துவிட்டான் முகிலன்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னுடன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண் இப்போது இந்த பூமியில் இல்லையா? உடல் லேசாக அதிர்வது போல் ஒரு உணர்வு. கேசத்தை அழுந்த கோதிக்கொண்டான் முகிலன்.

‘வாழ்க்கையில் தவறு செய்து இருக்கிறாள்தான் அனுபமா. ஆனால் அவளுக்கு இத்தனை பெரிய தண்டனை தேவை இல்லையே?

அன்று விருது வழங்கும் விழாவில் அவளாடிய நடனம் இப்போது கண் முன்னே வந்தது போல் இருந்தது. அவள் கண்கள் சிந்திய கண்ணீரின் ஈரம் இன்னமும் அவன் கையில் காயாமல் இருந்தது போல் இருந்தது. அவனே எதிரே பார்த்திராத இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட முடியாமல் கண் முன்னே விரிந்து கிடந்த வானத்தையே வெறித்திருந்தான் முகிலன்.

‘இனியாவது கண்ணீர் இன்றி நிம்மதியாக உறங்கு பெண்ணே’ சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.

மெல்ல அவன் அருகில் வந்தான் ஷ்யாம். ‘இந்த ஆக்ஸிடென்ட் நடக்கும் போது தலைவரும் கூடவே இருந்திருக்கார் சார். அவருக்கு பெருசா எந்த காயமும் இல்லை. அவங்க அவர் மடியிலேயே……’ ஷ்யாம் தளர்ந்த தொனியில் சொல்ல சொல்ல உயிர் கிடுகிடுத்தது முகிலனுக்கு.

‘அய்யோ… இதை எப்படி தாங்கிக்கொள்வான் வருண்? நியாயப்படி இந்த நேரத்தில் அவர்கள் திருமணம் முடிந்து அவன் தேன் நிலவில் இருக்க வேண்டும். இடையில் என்னென்னவோ நடந்து அவன் வாழ்கை எப்படி எப்படியோ திரும்பி நிற்கிறதே?’ அங்கலாய்த்து பொங்கியது முகிலனின் உள்ளம்.

‘என்ன செய்துக்கொண்டிருப்பான் அவன்? கதறிக்கொண்டு இருப்பானோ? என்னதான் இருந்தாலும் அவளை உயிராய் நினைத்து பழகியவன் அவன். துடித்து துவண்டு போய்விடுவானே?

அவள் செய்ததை அவன் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. சொல்லி இருக்க மாட்டாள் அவள். அப்படியே அவன் அறிந்திருந்தாலும் அவனது மடியிலேயே நிகழ்ந்த அவள் மரணம் அவனை உலுக்கிப்போடாதா?

‘வந்துவிடு. திரும்ப என்னிடமே வந்துவிடு. வந்துவிடு. புதிதாய் எல்லாவற்றையும் துவங்கலாம் என கதற மாட்டானா?’  யோசித்தபடியே சிலையாகி விட்டிருந்தான் முகிலன். ஓடிச்சென்று அவனுக்கு தோள் கொடுத்துவிட துடித்தது முகிலனின் மனம்.

அதே நேரத்தில் ஆயிரம் நடந்திருந்தாலும் தற்போது அனுபமாவின் குடும்பமும், பெற்றோர்களும் இருக்கக்கூடிய மனநிலையை உணர முடியாதவன் இல்லை முகிலன். இவன்  அங்கே சென்றால் தேவை இல்லாத குழப்பங்களும், பேச்சுக்களும், தகராறுகளும் வெடிக்கும்.

இத்தனை நாட்கள் அனுபமா செய்த தவறுகளை இவனாக வெளியில் சொல்லவில்லை. இனியும் எந்த நிலையிலும் அவை வெளிவருவதை அவன் விரும்பவும் இல்லை. ஏன் வருணிடம் கூட சொல்வதாக இல்லைதான் முகிலன்.

இப்போது இவன் அங்கே சென்றால் யாரவது இவனை வார்த்தைகளால் உரசும் வேளையில் தன்னையும் அறியாமல் அவை வெளி வந்துவிடுமோ என்ற எண்ணமும் அவனை கொஞ்சம் பயமுறுத்தியது.

ஒருவர் இறந்து விட்டால் அவர்கள் செய்த தவறுகள் இல்லை என்று ஆகிவிடாது என்ற போதிலும் இந்த உலகத்தில் இல்லாமல் போன அந்த பெண்ணின் பெயருக்கு தன்னால் எந்த களங்கமும் வருவதை இவனது மனம் கொஞ்சம் ஏற்கவில்லை.

‘யார் இருக்கிறார்கள்? இப்போது அங்கே வருணுக்கென யார் துணை இருப்பார்கள் அங்கே?’ இந்த கேள்விக்கு பதில் தேடக்கூட மூளை ஒத்துழைக்க ஏனோ மறுத்தது. ‘வருண் கதறிக்கொண்டிருப்பானோ?’ என்ற எண்ணமே அவனை வறுத்தெடுத்தது.

‘சென்னைக்கு போயிடலாமா? சார்?’ மொத்தமாக இல்லா விட்டாலும் அவன் மனநிலையை ஓரளவு படித்தவனாக கேட்டான் ஷ்யாம்.

‘ஆங்.. சென்னைக்கா? போய் என்ன செய்துட முடியும் ஷ்யாம்? அனுபமாவை எழுப்பி வருண் கையிலே கொடுத்திட முடியுமா என்ன?. ‘நடந்தது எதையுமே நம்மாலே மாத்திட முடியாது ஷ்யாம்’ என்றான் ஒரு தீர்கமான பார்வையுடன் ‘இனி நடக்கப்போறதை வேணும்னா கொஞ்சம் நமக்கு சாதகமா மாத்த முடியுமான்னு பார்க்கலாம்’ அவன் சொன்னதின் பொருள் பாதிதான் புரிந்தது ஷ்யாமுக்கு

‘அதுக்கு இல்லை சார்..’ என்ன சொல்வது என்று புரியாதவனாக ஷ்யாம் கொஞ்சம் தடுமாறிய நேரத்தில்

‘வருணை  அழைத்து பேசிவிடலாமா?’ தவித்துக்கொண்டிருந்தது முகிலனின் உள்ளம்.

இந்த நொடி வரை யாருக்காகவும், எதற்காகவும், ஏன் பெற்ற தந்தைக்காக கூட தன்னிலை விட்டு இறங்கியவன் இல்லை முகிலன். ஆனால் இன்று?

இதுவரை அவன் நேருக்கு நேராக முகம் கூட பார்த்திராத, அவனுக்கும் தனக்கும் எந்த வகை பந்தம் என்று கூட முகிலன் அறிந்திராத வருண் என்னும் மனிதன் அவனை உள்ளுக்குள்ளிருந்து ஆட்டி வைத்துக்கொண்டிருந்தான்.

கண் முன்னே அகன்று பரந்து விரிந்த வானத்தையே சற்று நேரம் வெறித்திருந்தவன்

‘ஷ்யாம் என் மொபைல் உன்கிட்டே இருக்கா?’ என்றான் வானத்தை விட்டு விழி அகற்றாமல்.

இன்னமும் மெலிதான வெளிச்சத்துடன் வானத்தில் இருந்த, எல்லாவற்றுக்கும் சாட்சியான அந்த நிலவு ஒரு ரகசிய புன்னகையுடன் மெல்ல மெல்ல கண்களை விட்டு மறைய சூரிய ஒளி அங்கே பரவிக்கொண்டிருந்தது.

அவசரமாக தன்னிடமிருந்த அவனது கைப்பேசியை எடுத்து முகிலனிடம் நீட்டினான் ஷ்யாம் அனுபமாவின் செய்தியை தாங்கிய பல குறுஞ்செய்திகள் அவன் மொபைலை தொட்டிருந்தன. அதனோடு சில ஏற்கப்படாத அழைப்புகளும்..

அவற்றை எல்லாம் ஒரு முறை ஆராய்ந்துவிட்டு மிக நிதானமாக தன்னிடமிருந்த வருணின் எண்ணை அழைத்தான் முகிலன். கைப்பேசியை காதுக்கு கொடுத்து கண்களை மூடிக்கொண்டான்.

‘முகிலன் பேசறேன்டா’ 

இப்படிதான் துவங்க வேண்டுமென்று ஒரு எண்ணம் முகிலனுக்கு.

இத்தனை நாட்கள் இருவரும் நிறையவே மோதிக்கொண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் முன்னால் நிறையவே உரசிக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே பேசிக்கொள்வதை தவிர்த்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று முகிலனின் உள்ளம் எல்லாம் மறந்து போய் துடைத்துவைத்த கண்ணாடியாய் இருந்தது. அதில் வருண் என்னும் பிம்பம் மட்டுமே பதிந்து இருந்தது. அவன் என் வருண் என்று மட்டுமே தவித்துக்கொண்டிருந்தது மனம் தன்னுடைய குரலை கேட்டால் கண்டிப்பாய் வருணுக்கும் ஒரு வித அமைதி பிறக்கும் என்று ஒரு அழுத்தமான நம்பிக்கையும் இருந்தது முகிலனுக்கு.

.அங்கே சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுபமாவின்  உடலை அனுப்பிவிட்டு அமர்ந்திருந்தான் வருண்.

அனுபமா குடும்பத்தார்கள் கூடி இருந்தார்கள் அங்கே. வெளியில் பத்திரிகையாளர்கள் கூட்டமும் கூடி இருந்தது. அவள் அப்பா அம்மா வெளிநாட்டில் இருக்கும் அவளது அண்ணன் குடும்பம் என அனைவரும் அங்கே இருந்த போதிலும், அவள் பெற்றோர்கள் கதறிக்கொண்டிருந்த போதிலும் யாரும் வருணுக்கு எதிராக ஒற்றை பார்வை கூட பார்க்கவில்லை அங்கே.

சொல்லப்போனால் அனுபமா செய்த காரியத்தை அறிந்தவர்கள் ஒரு வகையில் அதற்கு துணை போனவர்கள்  என்ற ரீதியில் அவள் பெற்றோர்களால் வருணை நிமிர்ந்துக்கூட பார்க்க இயலவில்லை என்பதுதான் உண்மை.

காலையிலிருந்தே மருத்துவர்கள், போலிஸ்காரக்கள் தவிர அவனை தேடி வந்த வேறே யாரிடமும் ஒற்றை வார்த்தைக்கூட பேசவில்லை அவன். அவனை சந்திக்க வருபவர்கள் எல்லோரையும் தனாவே சமாளித்துக்கொண்டிருந்தான்.

விஷயத்தை கேள்விப்பட்டு பதறிக்கொண்டு உடனே ஓடி வந்த மயூராவிடம் கூட எதையுமே பகிர்ந்துகொள்ளவில்லை வருண். இறுகிய கருங்கல்லாய்தான் அமர்ந்திருந்தான் அவன்.

அதையும் மீறி அவனிடம் வந்து பேசுபவர்களுக்கு பதிலாக வெற்று தலையசைப்பு மட்டுமே வந்தது அவனிடமிருந்து. அதே நேரத்தில் அவன் விழிகளிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் துளி கூட விழாதது  அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் உற்சாகமாக வளைய வரும் வருணை அப்படி பார்க்க மனம் வலித்ததுதான் அவன் தோழிக்கு

முகிலனின் அழைப்பு வருணை அழைத்துக்கொண்டே இருந்தது. கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு அதையே வெறித்துக்கொண்டிருந்தான் வருண். ஒரு வகையில் மனதிற்குள்ளாக இந்த அழைப்பை அவன் எதிர்ப்பார்த்துக்கொண்டேதான் இருந்தான் என்று சொல்ல வேண்டும்.

‘அழைக்கிறாயாடா? என்னை அழைக்கிறாயாடா முகிலா? அதற்கும் காலம் வந்தே விட்டதாடா முகிலா? வார்த்தைகளில் வடித்துவிட முடியாத ஏதேதோ உணர்வுகள் அவனுக்குள் பரவுவதை வருணால் நன்றாக உணர முடிந்தது.

திரை ‘முகிலன்’ ‘முகிலன்’ என ஒளிர்ந்துக்கொண்டே இருந்தது. விழி அகற்றாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான் வருண். அவனுக்கு இரு பக்கமும் இருந்த இரு ஜோடி கண்களும் அந்த மொபைலையே பார்த்திருந்தன. அதில் ஒரு ஜோடி கண்கள் நம் மயூராவினுடையது.

அவன் முகத்தையும் கைப்பேசியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தாள் மயூரா. அது ஒலித்து ஓயும் வரை அழைப்பை ஏற்கவே இல்லை வருண்.

அங்கேயும் கைப்பேசியை பார்த்தபடியேதான் அமர்ந்திருந்தான் முகிலன். ‘ஏன்? ஏன்? என் அழைப்பை ஏற்க முடியாத சூழ்நிலையா அங்கே? இல்லை அத்தனை  மன அழுத்தமா? இரண்டாவது காரணம் என்றால் அந்த அழுத்தத்தை கையாளும் மனப்பக்குவம் அவனுக்கு இருக்கிறதா இல்லையா?

சில நிமிட இடைவெளி விட்டு மனம் பொறுக்க மாட்டாமல் அவன் விரல்கள் இன்னொரு முறை கூட அவன் எண்ணை அழுத்தி இருந்தன. மறுபடியும் ‘முகிலன்’ என்று ஒளிர்ந்தது வருணின் கைப்பேசி. இப்போது வருணின் விழிகளில் சலனமற்ற ஒரு பார்வை,

ஒன்று, இரண்டு மூன்றாவது ரிங்கில் ‘கட்’.

இங்கே வருண் துண்டித்திருந்தான் அழைப்பை. அங்கே கொஞ்சமாக அதிர்ந்திருந்தான் முகிலன்.

‘வாட் இஸ் திஸ் வருண்?’ சற்றே வெடித்தாள் அவன் அருகில் இருந்த மயூரா ‘முகிலன் மறுபடி மறுபடி கூப்பிடறார் நீ கட் பண்றே. அவர் உன் மேலே எவ்வளவு பாசம்….’ அவள் சொல்லி முடிப்பதற்குள் சரேலென திரும்பிய வருணின் கத்தி முனை பார்வை அவளை ஏற இறங்க பார்த்தது.

‘திடீரென எதற்கு அவனுக்கு சாமரம் வீசுகிறாய் என்றதோ அது? இல்லை இதிலெல்லாம் தலையிட நீ யார் என்றதா?’ அவளுக்கு அதன் அர்த்தம் சரியாக புரியவில்லைதான். ஆனால் அவளை விட்டு நகர்ந்த நொடியில் அந்த விழிகள் நீர் கொண்டதை மட்டும் அவளால் நன்றாக உணர முடிந்தது.

‘ஏன்டா? ஏன்டா வருண்?’ கைப்பேசியை பார்த்தபடியே முகிலன் அமர்ந்திருந்தான்.

‘ஆஹான்..’ என்றபடி எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் படு அலட்சியமாக கையாளும் முகிலன் இப்படி அமர்ந்து பார்த்ததில்லை ஷ்யாம். அவனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த போது கூட படபடவென இயங்கினானே தவிர சோர்ந்து அமர்ந்துவிடவில்லை முகிலன்.

‘சார்..’ அவனை மெல்ல கலைத்தான் ஷ்யாம்.

‘ம்?’ முகம் நிறைய குழப்ப மேகங்களுடன் ஷ்யாமை பார்த்தான் முகிலன்.

‘தலைவரையா கூப்பிட்டீங்க?

‘ம்.’ கட் பண்றான்’ என்றான் மெதுவாக.

‘ஒரு வேளை அங்கே அவர் ரொம்ப பிஸியா இருக்கலாம் இல்லையா சார்?

‘ம். இருக்கலாம்’ என்றான் ஷ்யாமை ஏற இறங்க பார்த்தபடியே. ‘இவன் தனது தலைவனை எப்போது விட்டுக்கொடுத்திருக்கிறானாம்?

நான் ஒரு தடவை கூப்பிட்டு பார்க்கவா சார்?’

‘ம்?’ சரி கூப்பிட்டு பாரு. உன்கிட்டே என்ன சொல்றான் பார்ப்போம் உன் தலைவன் ’ என்றான் முகிலன்.

உடனே வருணை அழைத்தான் ஷ்யாம். அது இரண்டாவது முறை ஒலிப்பதற்குள் துண்டிக்கப்பட்டது அழைப்பு. அதோடு நின்றிருந்தால் கூட எல்லாம் சரியாக இருந்திருக்கும். நிற்கவில்லை. அதை தொடர்ந்து வருணிடமிருந்து ஷ்யாமின் கைப்பேசிக்கு வந்தது அந்த குறுஞ்செய்தி.

அதை பார்த்ததும் ‘சார்..’ கொஞ்சம் அதிர்ந்து அழைத்தான் ஷ்யாம். ‘இதை கொஞ்சம் பாருங்க சார்’

‘டோன்ட் கால் மீ ஹியர் ஆஃப்டர்’ என்று இருந்தது அந்த செய்தி. ‘இனிமேல் என்னை அழைக்காதே’

சுள்ளென்று ஒரு நொடி கோபம் பொங்கியது முகிலனுக்கு. உயிருக்குள் கத்தி பாய்ந்த  உணர்வில் அதை கையில் வைத்து பார்த்துக்கொண்டே இருந்தான் முகிலன்.

                        தொடரும்…….