VNE 54(2)

“கடைசில என்ன சொன்னாப்லன்னு தெரியுமா லட்டுக் குட்டி…” என்றவனின் குரலில் சிறு கேலி எட்டிப் பார்க்க,

“என்ன?” என்று கேட்டாள்.

“சொல்லி பார்ப்பானாம்… ரொம்ப முடியலைன்னா உன் கால்ல விழுந்துடுவானான்…” மரியாதையை கைவிட்டு நண்பனை பற்றிக் கூறி சிரிக்க, மஹாவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆமா… ரொம்பத்தான்… கால்ல விழுந்துட்டு தான் மறுவேலை பார்க்க போறாங்க… கன்னாபின்னான்னு என்னை பேச வேண்டியது… அப்புறமா மச்சான் கிட்ட போய் கொஞ்ச வேண்டியது… நான் பொண்டாட்டியா இல்ல நீ பொண்டாட்டியான்னே எனக்கு தெரியல…” என்று சலித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் சந்தோஷமாகத்தான் இருந்தது.

வாய்விட்டு சிரித்தான் கார்த்திக்.

“விடுடா… இதெல்லாம் மென் டூ மென் டாக்… ஒரு ஆம்பிளை மனசு ஆம்பிளைக்கு மட்டும் தான் தெரியும்…” என்று சிரிக்க,

“நல்லா தெரிஞ்சுக்க… என்னை விட்டுடுங்க ரெண்டு பேரும்…” என்றவளிடம் ஷ்யாமிடம் கூறியதை எல்லாம் கூறி சமாதானம் செய்ய மேலும் சிலதை பேசிவிட்டு வைத்தான்.

இவளது மனதுக்குள் வெகுவான பாரம்!

காலையில் பண விஷயத்தில் அவன் மூட் அவுட்டாகி இருப்பதை கண்டிப்பாக அவள் அறிந்து இருந்தாள். சாதாரண மனைவியாக இருந்தால், கண்டிப்பாக அவனுக்கு தலை சாய்க்க தோள் கொடுத்து தைரியம் சொல்லியிருக்க கூடும். ஆனால் அந்த நிலையிலும் அவனை தன்னோடு சாய்த்துக் கொள்ளாமல் இன்னமும் அவனது கோபத்தை தூண்டி விட்டது எது என்று யோசித்தாள். தன்னிடம் வெளிப்படையாக பேச முடியாமல் தான் கார்த்தியிடம் பேசுகிறானா?

தவறு செய்து கொண்டிருக்கிறோமோ என்ற வேதனை அவளை வாட்ட, டேபிளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

கண்களில் மெல்லிய கண்ணீர் படலம்!

“ஐ லவ் யூ ஷ்யாம்… ஐ ஆம் சாரி… ரியலி சாரி…” அவளையும் அறியாமல் முனுமுனுத்தவளுக்கு தலை பாரமாக இருந்தது. மைக்ரேன் தலைவலி ஆரம்பமாகும் போல தோன்றியது.

அவசரமாக ஒரு ட்ரமடாலை பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள்.

அவள் பேசிக் கொண்டிருந்ததால் ரவுண்ட்ஸுக்கு தான் மட்டும் போய்விட்டு வந்தமர்ந்தாள் பிருந்தா.

“என்னடி ஷ்யாம் அண்ணா கூட சண்டையா?” என்று சாதரணமாக பிருந்தா கேட்க,

“ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்ல…” சலிப்பான குரலில் கூறியவளை ஒரு மார்கமாக பார்த்தாள்.

“ஏன்… ரெண்டு பேரும் ஹனிமூன் எதுவும் போகலையா செல்லோ?” என்று இவள் கேட்க,

“அது ஒண்ணுதான் குறைச்சல்?” என்று முனுமுனுக்க, பிருந்தாவுக்கு அது சரியாக படவில்லை.

“என்னடி? என்னாச்சு? ஒரு மாதிரியாவே இருக்க?” பிருந்தா விடாமல் கேட்க, ஷ்யாமை பற்றி அவளிடம் கூட சொல்ல விரும்பவில்லை. அவனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவனது செயல்களை எல்லாம் விமர்சனம் செய்ய வேண்டியிருக்கும். அதை தான் செய்தால் பரவாயில்லை. கேட்பவர்களும் விமர்சித்தால்? அது பிருந்தாவாக இருந்தாலும், கார்த்திக்காக இருந்தாலும், அவளை பொறுத்தவரை அனைத்துமே ஒன்றுதான்.

ஷ்யாமை எங்குமே விட்டுக் கொடுக்க முடியாதுதான்!

“ஒண்ணுமில்ல பிருந்தா… தலைவலி அவ்வளவுதான்…” என்று முடித்து விட்டு, பேஷன்ட்சை பார்க்கவாரம்பித்தாள். அன்றைக்கென்று அவளுக்கு தியேட்டர் டியூட்டி ஒதுக்கி இருக்க, சற்று எரிச்சலாக இருந்தது. ஆனால் அவர்களது குழுவில் இரண்டு பேர் வரவில்லை என்பதால் மஹாவும் பிருந்தாவும் மட்டுமாகத்தான் தியேட்டரை பார்க்க வேண்டி இருந்தது.

அவ்வப்போது செல்பேசியை பார்த்துக் கொண்டு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஏதாவது மெசேஜ், கால் என்று ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்தாள்.

எத்தனை சண்டையிட்டு வந்தாலும் பாழும் மனது அதைத்தானே எதிர்பார்க்கிறது? வெட்கம் கெட்ட மனம் என்று தன்னைத் தானே குட்டிக் கொள்ளவும் அவள் மறக்கவில்லை.

மணியை பார்த்துக் கொண்டே இருந்தாள். ஷ்யாமை பார்க்க வேண்டும் என்று மனம் அவ்வப்போது பரபரத்துக் கொண்டிருந்தது.

கிளம்பும் நேரத்தில் டெலிவரி கேஸ் ஒன்று வந்துவிட, அவளையும் அறியாமல் பரபரப்பு சூழ்ந்து கொண்டது.

டெலிவரி பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரு உயிரை இந்த உலகத்துக்குள் கொண்டு வருவதை அவள் ரசித்து செய்வாள். எந்த நேரமாக இருந்தாலும், டெலிவரி பார்க்க மட்டும் அவள் சுனங்கியதில்லை.

இப்போதும் அப்படியே!

உடன் பிருந்தாவும் இருக்க, தன்னை மறந்து அந்த டெலிவரியில் ஆழ்ந்தாள்.

செல்பேசியை சைலன்ட் மோடில் போட்டுவிட்டுத்தான் அவள் டெலிவரி பார்க்க வந்தது.

அதை அறியாத ஷ்யாம், டின்னருக்கு இவள் தயாராக வேண்டுமே என்ற பரபரப்பில் விடாமல் கால் செய்ய துவங்கியிருந்தான்.

டெலிவரி சற்று பிரச்சனைக்குரியதாக வேறு இருக்க, நேரம் கரைந்து கொண்டிருந்தது. பனிக்குடம் உடைந்து விட்டாலும், குழந்தை கொடி சுற்றிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்க, வேறு வழியில்லாமல் கைனக் சீஃப்பை அழைக்க, அவர் அறுவை சிகிச்சை தான் வழி என்று முடித்து விட, அந்த பெண்ணோ, அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள்.

குழந்தையை கொடி சுற்றியதால், அது வெளிவரும் போது கழுத்தை இறுக்க, குழந்தையின் வைட்டல்ஸ் குறைய ஆரம்பிக்க, வெளிவந்த குழந்தையை உள்ளே போக வைக்க வேண்டியிருந்தது.

அந்த பெண்ணோ, வலியில் துடித்தாலும் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கவே முடியாது என்று முட்டாள் தனமாக பிடிவாதம் பிடிக்க, வேறு வழியில்லாமல், திரும்பவும் வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கினாள் மஹா.

திரும்பவும் கொடி சுற்ற, வைட்டல்ஸ் குறைய, பெண்ணுடைய ஹெட்ஸ் டவுன் செய்ய என இது சைக்கிள் ரியாக்ஷனாக நடைபெற, ஒரு கட்டத்தில் மஹா துணிந்து சட்டென குழந்தையை வெளியே எடுத்தாள்.

பெரிய ரிஸ்க் தான்… ஆனாலும் துணிந்து செய்து முடிக்கும் போது மாலை கடந்து இரவு மணி ஒன்பதை தொட்டிருந்தது.

அனைத்தையும் முடித்து, குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு, செவிலிப் பெண்களிடம் செய்ய வேண்டியவற்றை சொல்லிவிட்டு வீட்டுக்கு இருவருமாக காரில் கிளம்பும் போது மணி பத்தை தொட்டிருந்தது.

அப்போதுதான் தோன்ற செல்பேசியை பார்த்தாள் மஹா. அதுவரை மொத்தமாக மறந்து விட்டிருந்தாள்.

இருபது மிஸ்ட் கால்ஸ்… ஷ்யாமிடமிருந்து மட்டுமே!

பக்கென்று இருந்தது.

கடவுளே!

அவசரமாக பிருந்தாவை வீட்டில் விட்டு விட்டு, அவளது வீட்டை அடையும் போது மனம் திக் திக் என்றுதான் இருந்தது. நல்ல நாளிலேயே இவன் தில்லை நாயகம். இதில் டின்னருக்கு அழைத்திருந்த போதா இப்படியாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய, சோபாவிலேயே அமர்ந்த வாக்கில் அமர்ந்து கால் மேல் காலிட்டு கண்களை மூடி கைகளை கட்டிக் கொண்டு பின்னால் சாய்ந்திருந்தான் ஷ்யாம்.

சத்தமில்லாமல் அறைக்குள் சென்றவள், குளித்து முடித்து, த்ரீ போர்த் நைட் பேன்ட், குட்டி டிஷர்ட்டை அணிந்து கொண்டு முடியை விரித்து விட்டவள், டைனிங் டேபிளை நோக்கி வந்தாள்.

உணவெதுவும் உண்டானா என்று தெரியவில்லை. டேபிளை ஆராய்ந்தாள். மகேந்திரன் செய்து விட்டு போயிருப்பான் போல… ஆனால் எதுவும் தீண்டப்படாமல் இருக்க, அவனுமே உண்ணவில்லை என்று புரிந்தது.

அவளது பசியெல்லாம் ஆவியானது!

அனைத்தையும் மூடி வைத்தவள், மெளனமாக அவன் முன்பாக வந்து அமர்ந்தாள்.

“ஷ்யாம்…” மெல்லிய குரலில் அழைக்க,

“ம்ம்ம்…” என்றான். அப்படியென்றால் உறக்கமில்லை. விழித்து கொண்டுதான் இருந்திருக்கிறான். உள்ளுக்குள் குளிரெடுத்தது.

“சாப்பிடலையா?” என்றாள் சிறிய குரலில்.

“எனக்கு ஃபுல்லா இருக்கு… நீ சாப்பிடு…” இன்னும் கண்களை அவன் திறக்கவே இல்லை.

“வெளிய சாப்பிட்டியா?” கேட்க பயமாக இருந்தது தான். ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் பொண்டாட்டி நீ இருக்கல்ல… உன்னை விட்டுட்டு நான் மட்டும் போவனா?” என்று இறுக்கமாக பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்க,

“சரி… வா சாப்பிடலாம்…”

“காலைல சொன்னதை சாதிச்சுட்ட இல்ல…” கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் அத்தனை கோபம் அவனது வார்த்தைகளில்.

“இல்லடா… நான் அப்படி நினைக்கல…” எப்படியாவது உணர்த்திவிடும் வேகமிருந்தாலும் எப்படி விளக்குவது என்று அவளுக்கு தெரியவில்லை.

“பின்ன வேற எப்படி மஹா?” கண்களை திறந்து கேட்க, அதில் அத்தனை சிவப்பு.

“ட்ரின்க் பண்ணியா?” ஒரு மாதிரியான குரலில் கேட்க,

“உன் இஷ்டத்துக்கு நீ செய்யும் போது என் இஷ்டத்துக்கு நான் செய்ய மாட்டேனா? ஆனா இன்னைக்கு நான் ட்ரின்க் பண்ணலை…” கூர்மையாக கூற, காயப்பட்டது மனது!

“என் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணலை ஷ்யாம்… தியேட்டர் டியூட்டி… டெலிவரி ரொம்ப காம்ப்ளிகேட் ஆகிடுச்சு…”

“ம்ம்ம்… தெரியும்… ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணேன்… உனக்குத்தான் ஒரு போன் பண்ணி சொல்லக் கூட முடியாதே மஹா…” அவளையே குற்றம் சாட்ட, தலை குனிந்தாள்.

“சாரி ஷ்யாம்… அந்த அவசரத்துல உனக்கு இன்பார்ம் பண்ண முடியல… இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்…” என்ற போது அதற்கு மேலும் அவனால் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை.

“இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்… ஐ ஜஸ்ட் வான்ட் டூ ஷேர் வித் யூ… கால் பண்ணா நீ எடுக்கவே இல்ல…” எனவும்,

“காலைலருந்து நீ கால் பண்ணுவன்னு போனையே முறைச்சுதான் பார்த்துட்டு இருந்தேன்…” என்றவளின் குரலில் தொனித்த ஏக்கத்தை கண்டு புன்னகைத்தான் ஷ்யாம். உள்ளுக்குள் அத்தனை உணர்வுகள் இருந்தாலும் காட்டிக் கொள்ளக் கூடாதாமாம்.

“ஏன் முறைச்சு பார்த்த? நீ கால் பண்ணா குறைஞ்சு போயிருவியா?” சிரித்தவனை பார்த்து முறைத்தாள்.

“பொண்டாட்டிக் கிட்ட சண்டை போட்டுடமே… கொஞ்சமாவது சமாதானம் பண்ணலாம்ன்னு உனக்கெல்லாம் தோணுதா? எருமை…” என்றவளை உதடுகள் வளைய, முகம் கொள்ளா சிரிப்புடன், உல்லாசமாக பார்த்தான் ஷ்யாம்.

“நான் வேற மாதிரி தான் சமாதானம் பண்ணுவேன்டி… உனக்கு ஓகே வா?” என்று கேலியாக கேட்க,

“எங்கருந்து? வெறும் பேச்சுதான்…” சிறு குரலில் வேண்டுமென்றே அவனை கிண்டல் செய்தவள், டைனிங் டேபிளை நோக்கி போக முயல, ஷ்யாம் அவளது கையை பிடித்து இழுக்க, அவன் மேலேயே விழுந்தாள்.

“அப்புறம் அப்படி இப்படின்னு பேசக் கூடாது…” அவளது காதில் கிசுகிசுக்க,

“அப்படி இப்படின்னா எப்படி பாவா?” அவனது மீசை காதில் உராய்வதால் உடலோடு குரலும் சிலிர்க்க, ஹஸ்கியான பாவா என்ற அவளது அழைப்பு அவனை எங்கோ அழைத்து சென்றது.

“பாவாவா? என்னடி ஆச்சு உனக்கு இன்னைக்கு?” என்றவனது குரலில் அத்தனை காதல்!

“ம்ம்ம்… பாவா… இதான் காலாமாம்…” ஹஸ்கியான தொனி மாறாமல், அத்தனை மயக்கமாக கூறி, அவனிடம் தன்னுடைய காலை காட்ட, அது பளிங்கு போலதான் இருந்தது. ஆனால் ஏன் இவள் காலை காட்டுகிறாள் என்று புரியாமல் அவன் பார்க்க, அவள் கண்ணை சிமிட்டி,

“கால்ல விழறேன்னு சொன்னியாமாம்! சீக்கிரம் விழுப்பா… டைம் ஆகுது…” என்று கிளுகிளுப்பாக இவள் சிரிக்க, ஷ்யாம் வெட்க புன்னகையை மறைக்க முடியாமல், அவளது வெற்றிடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடிக்க, அவளால் மேலெழும் உணர்வுகளை தாள முடியவில்லை. அவனை சமாதானம் செய்யத்தான் அவள் முயற்சி செய்தாள், ஆனால் அவளே அதில் சுகமாக வெட்கத்தோடு சிக்கி கொள்ள, அவளை விழுங்கும் பார்வை பார்த்தான். அவனது மனைவியின் மாற்றத்தை அவனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“என் பொண்டாட்டி கால் தானே?! விழுந்துட்டா போச்சு…” என்று எழுந்தவன், அவனுடைய மனைவியை அப்படியே கையில் ஏந்த,

“பசிக்குதுடா… சாப்பிடனும்…” என்று இவள் சிணுங்கினாள்.

அவளது காதுக்கருகில் குனிந்தவன்,

“எனக்கும் தான்டி…” என்றவன், இன்னும் நெருக்கமாக அவளை தான்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, வேறு எதையோ கிசுகிசுக்க, அவளது முகம் சிவந்து, அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“ச்சீ ரொம்ப கிரீன் கிரீனா பேசற…”

“உன் கிட்ட அப்படித்தான் பேச முடியும்டி பொண்டாட்டி…” என்றவனை அப்போதுதான் கவனித்தாள். பேசிக்கொண்டே அறைக்கு வந்ததை.

நிமிர்ந்து அவன பார்க்க முடியாமல் தலை குனிய, அவளை தள்ளி நிறுத்தி, குறும்பாக பார்த்தவன், கைகளை விரித்தபடி அவளை அழைக்க, கால்கள் பின்னியது. எதுவோ அவளை பின்னிழுக்கப் பார்க்க, அதை உடைத்தவள், வெட்கத்தை மறந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.