ப்ரியங்களுடன்…. முகிலன் 17
சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்த முகிலனின் முகத்தில் மெதுமெதுவாய் மாற்றம் பரவியது. என்ன தோன்றியதோ? எழுந்து நின்று வானத்தை பார்த்து ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டான் அவன்.
‘இதுக்கு என்ன சார் அர்த்தம்?’ ஷ்யாமின் குரலில் நிறைய ஆற்றாமை.
‘இனிமே என்னை கூப்பிடாதேன்னு அர்த்தம்’ என்றான் முகிலன் நிதானமாக.
‘யார்கிட்டே முகிலன் கிட்டேயா? நான் யார்னு தெரியாம விளையாடி பார்க்கிறனா?’
என இது போன்ற தருணங்களில் எப்போதும் கொதிக்கும் முகிலன் இத்தனை நிதானமாக இருப்பதே ஆச்சரியமாக இருந்தது ஷ்யாமுக்கு
‘சார்… நான்தான் எப்பவும் அவருக்கு சப்போர்ட் பண்ணுவேன். ஆனா இப்போ எனக்கே கோபம் வருது. நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்து..’ ஷ்யாம் முடிப்பதற்குள் ஷ்யாமின் முன்னால் நீண்டது முகிலனின் கரம்.
‘போதும் ஷ்யாம். அங்கே அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். இதுக்கு மேலே இது பத்தி பேச வேண்டாம்’ என்றான் முகிலன் ஆணையிடும் தொனியில் ‘நாம நம்ம வேலையை பார்க்கலாம்’
ஷ்யாம் நிமிர்ந்து முகிலன் முகம் பார்க்க அதில் நிறையவே தெளிவு இருந்தது அதுவே அவனுக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது
இத்தனை நாட்கள் ஷ்யாம் வருணுக்கு தாளம் போட்டதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவனால் இன்று அவன் வருணுக்கு எதிராக ஒற்றை வார்த்தை சொல்வதை கூட ஏற்றக்கொள்ள முடியவில்லை. அது ஏன் என்பது முகிலனுக்கே வியப்பாக இருந்தது.
‘இப்போ என்ன செய்யலாம் சார்?’ ஷ்யாம் கேட்க
‘ஷூட்டிங் போகலாம் ஷ்யாம். என்றான் முகிலன் உறுதியான குரலில்.
அறைக்கு சென்று தயாராகி ஷூட்டிங் நடக்கும் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குள் சிங்கப்பூரை அடுத்து இருக்கும் அந்த செயின்ட் ஜான்ஸ் தீவை அடைந்து இருந்தனர்.
படப்பிடிப்பில் அனுபமா பற்றிய் பேச்சுக்கள் நிறையவே இடம்பெற்றாலும் இத்தனை தூரம் நாடு கடந்து வந்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்யும் சூழ்நிலை அங்கே யாருக்கும் இல்லை.
அந்த கடற்கரை தீவில் அவன் நடிக்கும் அந்த திரைப்படத்திற்கான பாடல் காட்சிகள் எடுக்கப்பட இருந்தன. நடன காட்சிகள் என்றாலும் ஆடி விடலாம் இங்கே கதாநாயகியை காதலித்தாக வேண்டும்.
படப்பிடிப்புக்கு வந்துவிட்டாலும் காமெராவின் முன்னால்தான் என்றாலுமே கூட சத்தியமாய் யாரையும் காதலிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இருந்தாலும் ஒரு நடிகனாக அவன் அதை செய்துதானே ஆக வேண்டும்.
கேமரா இயங்க துவங்கியது.
‘அந்த கதாநாயகியின் இடையை ஒற்றை கையால் பிடித்து தூக்கி சுழற்றி, அவள் பின் கழுத்தை முகர்ந்து, அவள் கன்னங்களை இதழ்களால் ஒற்றி’ என்ன முயன்றாலும் முகத்தில் கொஞ்சமும் புன்னகையோ, விழிகளில் காதலின் பாவமோ வரவே இல்லை முகிலனுக்கு . .
இரண்டு மூன்று டேக்குகள் வாங்கி விட்டிருந்தான் முகிலன்.
‘டோன்ட் கால் மீ ஹியர் ஆஃப்டர்’ மறுபடி மறுபடி வருண் மட்டுமே வந்து வந்து போய்க்கொண்டிருந்தான் மனதில். ஆனாலும் அவன் மீது கோபம் எழவில்லை.
‘என்னதான் செய்துகொண்டிருப்பான் அவன்? இந்த சூழ்நிலையை கையாண்டு விடுவானா? நிலைக்கொள்ளாமல் மனம் அலைபாய்ந்தது.
சின்னதாக ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு நகர்ந்தான் முகிலன். கடல் அலைகள் கால் நனைக்க நின்று மனதை ஒரு நிலைப்படுத்திக்கொள்ள முயன்றான் அவன். அந்த காதல் காட்சிக்குள் தன்னை திணித்துக்கொள்ள எண்ணி கண்களை மூடிக்கொண்டவனின் விழிகளுக்குள் சட்டென வந்து கண்சிமிட்டி புன்னகைத்தாள் மயூரா.
‘ஊ…..ஃப்’ இவள் வேறே நேரம் காலம் தெரியாமல்’ என்று முகிலன் கண்களை சட்டென திறந்த நேரத்தில் ஒரு மின்னல் வெட்டியது அவன் மனதில்.
‘இந்த பெண் எப்படியும் அவன் அருகில்தானே இருக்கும். இது எப்படியும் இந்த சூழ்நிலையை கையாளும் தைரியத்தை அவனுக்கு கொடுத்துவிடுமே. அதுதான் அவனுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். ஆயிற்றே’ நினைக்கும் போதே ஒரு நிம்மதி கலந்த சிறு புன்னகை அவன் இதழ்களில் எழுந்தது. மனம் கொஞ்சம் தெளிவானது.
அதனோடு வேறே ஏதேதோ எண்ண ஓட்டங்கள் அவனுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்க சரியாக அந்த நொடியில் முகிலனது கைப்பேசியை எடுத்துக்கொண்டு அவனருகில் வந்தான் ஷ்யாம்.
‘சார் மயூரா மேடம் லைன்லே இருக்காங்க’
‘ஆஹான்..’ அவனது புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க முகிலன் கைப்பேசியை வாங்கிக்கொள்ள, சிறிய இடைவெளிக்கு பிறகு முளைத்திருந்த அந்த ‘ஆஹா..ன்’ னில் கொஞ்சம் புன்னகைத்து கொண்டான் ஷ்யாம்.
தன்னிலை விட்டு இறங்கி முகிலன் இரண்டு முறை அழைத்தபோதே அவனது தவிப்பு புரிந்து போயிருந்தது அவளுக்கு. அதை சற்றேனும் குறைத்து விட வேண்டும் என்றுதான் அவள் அவனை அழைத்ததே.
‘நீங்க மட்டும் இல்லை இந்த உலகத்திலே வேறே யாருமே அவனுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கவே முடியாது’ சொன்னவன்தானே அவன். அவன் மனநிலை அவளுக்கு புரியாதா என்ன?
எல்லாம் சரிதான். ஆனால் அரசல் புரசலாக எல்லாரும் பேசிக்கொள்வதைப்போல் வருண் திருமணத்தை நிறுத்தியது முகிலன்தானா? அப்படி என்றால் அதன் காரணம் என்ன? தவறு அனுபமாவின் மீது இருக்ககூடுமா?
இது போன்ற கேள்விகள் அவள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டேதான் இருந்தன. வருணை பார்க்க பார்க்க அவளுக்கு மனம் ஆறவில்லை முகிலனிடம் நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்றுதான் தோன்றியது.
‘சொல்லுங்க மயூரா வெங்கட்ராமன்’ என்றான் முகிலன் தெள்ளத்தெளிவாய்.
‘அந்த ‘வெங்கட்ராமன்’னில் இருந்த அழுத்தத்தில் ‘ரொம்ப முக்கியம்’ என்றாள் மறுமுனையில் வாய்விட்டு.
‘ரொம்ப முக்கியம்தான்.’ என்றான் இவன் அவள் எதை சொல்கிறாள் என்பதை புரிந்துக்கொண்டதைப்போல் ‘அதுவும் இனிமே ரொம்ப முக்கியம்’
‘புரியலை’ என்றாள் பெண்.
‘புரியவேண்டாம். சொல்லுங்க வருண் எப்படி இருக்கான்?. ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கானா? சட்டென கேட்டான் முகிலன்.
‘இல்லை முகிலன். அப்படியே இறுகிப்போய் உட்கார்ந்து இருக்கான்’ என்றாள் மயூரா. ‘இப்போதான் போஸ்ட் மார்டம் முடிஞ்சு இப்போதான் அவளை கொண்டு வந்தாங்க.’ என்றாள் அவள்.
அந்த காட்சிகள் கண்முன்னே விரிந்ததை போல் கண்களை இறுக மூடிக்கொண்டான் முகிலன் ‘மனம் திருடிய காதலி மடியில் இந்த நிலையில் கிடப்பது உயிர் வலி .அல்லவா. உயிர் பறிபோவதை விட பெரிய வலி அல்லவா? இயற்கையே அவனுக்கு இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தியை கொடு’ சொல்லிக்கொண்டான் முகிலன்.
‘அனுபமாவை பார்ததும் எனக்கே உடம்பு ஆடிப்போச்சு. ஆனா அப்படியே சிலை மாதிரி இருக்கான் அவன். கண்ணிலேர்ந்து தண்ணியே வரலை. அடுத்தடுத்து அடி விழுது முகிலன் அவனுக்கு எப்படி தாங்கிப்பான்னு தெரியலை’’ என்றாள் மயூரா.
‘கண்ணிலிருந்து தண்ணி வரலையா?’ ஏன்? மனசுக்குள்ளே எல்லாத்தையும் அழுத்தி வெச்சிருக்கானா? என்றான் அவசரமாக. ‘அது தப்பாச்சே’
‘தப்புத்தான் முகிலன். நல்லதில்லை. என்ன செய்யறதுன்னு தெரியலை’
‘நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?’ என்றான் கொஞ்சம் இறங்கிய தொனியில்
‘சொல்லுங்க’
‘நீங்கதான் இந்த நேரத்திலே வருண் கூட இருக்கணும்.. அவன் ரொம்ப துவண்டு போயிடாம பார்த்துக்கணும். அதுதான் இப்போ முக்கியம்’ சொன்னவன் கொஞ்சம் இடைவெளி விட்டு யோசித்து சொன்னான் ‘என்ன இருந்தாலும் நீங்க அவனுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லையா?
அந்த பெஸ்ட் ஃப்ரெண்ட்’டில் நிறையவே அழுத்தம் கொடுத்துதான் சொன்னான் முகிலன். ‘நான் அவன் அருகில் வர முடியாத நிலையில் இருக்கிறேன். பார்த்துக்கொள்ளடி பெண்ணே. என் வருணை பத்திரமாக பார்த்துக்கொள்’ என்ற தவிப்பு அதில் ஒளிந்து கிடந்தது.
அவளுக்கும் அது புரியாமல் இல்லை. சாதரண நேரத்தில் அவன் அப்படி எல்லாம் சொல்லி விடுபவனா என்ன முகிலன்?
அந்த சூழ்நிலையின் இறுக்கத்தையும் மீறி ஒரு சின்ன புன்னகை தோன்றி மறைந்தது மயூராவின் இதழ்களில்.
‘கண்டிப்பா கூடவே இருப்பேன் முகிலன். நீங்க சொல்லவே வேண்டாம்.’ என்றாள் அவள் உறுதியான குரலில்.
‘தேங்க் யூ’
‘ஆனா இப்போ என்னாலே அவன் பக்கத்திலேயே போக முடியலை. அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து எங்கப்பா அவன் காதிலே என்னவோ சொல்லிட்டே இருக்கார். அவன் தலையை தலையை ஆட்டிட்டே இருக்கான் ’ அவள் சாதரணமாக சொல்ல
‘ஆஹா….ன்’ சொன்னவனின் குரலில் நிறையவே விரவி இருந்தது. ‘இந்த நிலையிலுமா தனது வேலையை தொடர்கிறார் இவர்?
வருணின் ‘டோன்ட் கால் மீ ஹியர் ஆஃப்டர்’க்கான காரணமும் அர்த்தமும் தெளிவாக புரிந்திருந்தது முகிலனுக்கு. இதழோரம் ஒரு அலட்சிய புன்னகை வந்து போனது அவனுக்கு..
‘என்ன திடீர்னு சைலென்ட் ஆகிட்டீங்க முகிலன்?’
‘இல்ல ஒண்ணுமில்லை. அப்புறம் போலிஸ் கேஸ் ப்ராப்ளம் எதுவும் இல்லையே. அப்படி எதுவம் இருந்தா சொல்லுங்க. எனக்கு எல்லா இடத்திலேயும் ஆள் இருக்கு. என்னாலே இங்கிருந்தே ஒரு மணி நேரத்திலே எல்லாத்தையும் சரி பண்ணிட முடியும்’
‘இப்போதைக்கு எல்லாம் சரியா போயிட்டிருக்கு முகிலன். ஏதாவது சின்ன பிரச்சனைனாலும் உங்களைதான் கூப்பிடுவேன்’ புன்னகையுடன் சொன்னாள் மயூரா.
’ஷுர் மயூரா வெங்கட்ராமன்’ அவன் சொல்ல
உங்ககிட்டே நேரடியா ஒரு கேள்வி கேட்கலாமா?
‘கேள்வியா? ஷூர் கேளுங்க’
‘வருண் மேலே இத்தனை அக்கறை இருக்கிற நீங்க ஏன் அவன் கல்யாணத்தை நிறுத்தினீங்க? அந்த கல்யாணம் நடந்திருந்தா இந்த அளவுக்கு பிரச்சனைகள் வந்திருக்காதோ என்னவோ?’ அவள் கேட்டேவிட சில நொடிகள் மௌனம் குடியேறியது முகிலனிடத்தில்.
‘பதில் சொல்லுங்க முகிலன்’
‘நான்தான் கல்யாணத்தை நிறுத்தினேன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க’ என்றான் எந்த பாவமும் இல்லாத குரலில்.
‘என் மனசு சொல்லுது. என் மனசு சொல்றது எப்பவுமே சரியாத்தான் இருக்கும்’
‘ஆஹான்…’ மெல்ல சிரித்தான் முகிலன் ‘சில கேள்விகள் அழகா இருக்கும் மயூரா வெங்கட்ராமன். ஆனா அதோட பதில்கள் அத்தனை அழகா இருக்கிறது இல்லை. அதனாலே இந்த பேச்சை விட்டுடுங்க இதோட’
‘எல்லாரும் உங்களுக்கு வருணை வாழவிடக்கூடாதுன்னு வெறின்னு பேசறாங்க முகிலன். எங்க அப்பா உட்பட’
‘ஆஹான்… கரெக்டாதான் சொல்றாங்க. அதுதான் உண்மை’ என்றான் சலனமில்லாமல்.
‘இல்ல பொய். என் முகிலனை எனக்கு தெரியும். வேறே ஏதோ காரணம் இருக்கு’ சொல்லியே விட்டாள் மயூரா. அந்த ‘என் முகிலன்’ எங்கிருந்து வந்தது என்று அவளுக்கே புரியவில்லை ஆனால் வந்தே விட்டது வெளியே.
‘என் முகிலன்’ அவள் சொன்ன விதமும் தொனியும் ஏனோ அவனை தலைமுதல் கால் வரையாக குலுக்கிப்போட்டது. அவள் தன்னை மெல்ல நெருங்குகிறாளோ என தோன்ற தன்னாலே படீரென வெடித்தது அவன் குரல்.
‘என்ன தெரியும் உனக்கு? ஆங்.. என்ன தெரியும் உனக்கு முகிலனை பத்தி.. இந்த மாதிரி ‘என் முகிலன்’ என் உயிருனு டைலாக் எல்லாம் எனக்கு பிடிக்காது’
சட்டென மாறிய அவனது தொனியும், வார்த்தைகளின் ஒருமையும் அவளை கொஞ்சம் குலுக்கினாலும் இதற்கெல்லாம் அசறுபவள் இல்லையே மயூரா.
‘இங்க பாருங்க மயூரா வெங்கட்ராமன் அப்படி ஏதாவது எண்ணங்கள் மனசிலே இருந்தா உடனே தூக்கி போடுங்க’. நான் மனுஷனே கிடையாது. மிருகம். வெறி பிடிச்ச மிருகம்’ என்றான் குரலில் இருந்த காரம் கொஞ்சமும் குறையாமல்.
‘கத்தி முடிச்சிட்டீங்களா’ என்றாள் படு நிதானமாக. ‘பொதுவா நான் சொன்ன வார்த்தைகளை எப்பவுமே திருப்பி வாங்கிகிறது இல்லை. அதே மாதிரி நீங்க கல்யாணம் நிறுத்தினதுக்கும் வேறே ஏதோ காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும். ஆனா இப்போ இதெல்லாம் பேசற நேரமில்லை. அப்புறம் இன்னொரு நாள் பொறுமையா பேசுவோம். இப்போ வெச்சிடறேன்’ அவன் அடுத்து பேசுவதற்குள் துண்டித்துவிட்டாள் அழைப்பை.
இதை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை முகிலன். பொதுவா நான் சொன்ன வார்த்தைகளை எப்பவுமே திருப்பி வாங்கிகிறது இல்லை.’ ‘அப்படி என்றால் என்ன அர்த்தமாம்? நீ ‘என் முகிலன்’ என்பதுதானே’
பட்டென நெற்றியில் அடித்துக்கொண்டான். ‘எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அதுவே என்னை சுற்றி வளைக்கிறதே. வேண்டாம் இது வேண்டாம்’ சற்று தள்ளி நின்றிருந்த ஷ்யாமிடம் கைப்பேசியை தூக்கி போட்டுவிட்டு காமெராவின் முன்னால் சென்று நின்றுவிட்டான் முகிலன்.
பாடல் ஒலிக்க ஆரம்பித்து இருந்தது. என்னதான் எனக்கு எந்த உணர்வும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயன்றாலும் அவனது மனதின் மிக மிக ரகசியமான பிரதேசத்தில் அவளது ‘என் முகிலன்’ புதிதாய் ஒரு சந்தோஷ ஊற்றை விதைத்து இருந்தது உண்மை.
அவனே அறியாமல் உள்ளுக்குள் அவள் சிரித்துக்கொண்டே இருக்க அந்த பாடல் காட்சியை மிக அழகாய், நேர்த்தியாய் நடித்து முடித்திருந்தான் முகிலன்.
இங்கே இந்தியாவில் நேரம் இரவு ஒன்பதை தொட்டிருந்தது..
நேற்றுவரை சினிமாவில் பலரது கனவு கன்னியாக இருந்தவள் இன்று வெறும் சாம்பலாகி போயிருந்தாள். விபத்தில் ஏற்பட்ட மரணம் என்றபடியால் அன்று இரவுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டிருந்தனர் அவர்கள் வீட்டில். அனுபமாவின் ரசிகர்கள் வந்து அவளை கடைசியாக பார்க்கும் சூழ்நிலை கூட அங்கு இல்லை.
எல்லாம் முடிந்த பிறகு வருண் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். அவனுடனே வந்தனர் தனாவும், மயூராவும். காலையில் வருவதாக சொல்லி விடை பெற்றிருந்தார் வெங்கட்ராமன்.. வருண் மயூராவின் இடையில் இருக்கும் அந்த நட்பை இப்போதுதான் உணர்ந்திருந்தார் அவர்..
காரிலிருந்து இறங்கி தளர்வாய் நடந்தான் வருண் அவனை பார்த்ததும் உள்ளிருந்து ஓடி வந்தார் அமுதன். அவர் உடல் நிலை காரணமாக அனுபமாவின் வீட்டுக்கு அவரால் வர இயலவில்லை.
ஓடி வந்தவர் வருணை கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று சோபாவில் தனது அருகில் அமர்த்திக்கொண்டு அவன் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டு கண்களில் நீர் சேர கேட்டார் அமுதன்.
‘ஏன்டா? எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் உனக்கு சந்தோஷம் மட்டும் கிடையாதுன்னு எழுதி வெச்சிருக்கா?’
இதழோரம் சேர்ந்த ஒரு விரக்தியான புன்னகையுடன் விழிகளை தாழ்த்திக்கொண்டான் வருண்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். நீங்க வேறே. இத்தனை நாள் சந்தோஷமாதானே இருந்தான். இப்போ ஏதோ டைம் சரி இல்லை. அவ்வளவுதான் கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாகும். நான் சரி பண்ணுவேன்’ அவசரமாக இடை புகுந்தாள் மயூரா.
கண்களில் கொஞ்சமாக ஓடிய சந்தோஷ ரேகைகளுடன் நிமிர்ந்தார் அமுதன். அவளை இதுவரை அவர் ஓரிரு முறை பார்த்திருந்தால் அதிகம். அன்று விருது விழாவில் பார்த்தது இப்போது நினைவில் ஆடியது.
‘நீ வருணுக்கு ஃப்ரெண்டாமா?’ என்றார் அவர்.
‘சும்மா இல்ல பெஸ்ட் ஃப்ரெண்ட்’ அவள் சொல்லும் போது அவள் மனதிற்குள் முகிலன் வந்து எட்டிப்பார்ப்பதை மட்டும் அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
அமுதன் விழி அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவளது முகம் கொஞ்சம் பரிச்சயமான முகம் போலத்தான் தோன்றியதேயொழிய அது மீராவின் முகம் என அவர் நினைவுக்கு எட்டவில்லை.
‘சரி பண்ணிடுமா. அவன் கூடவே இருந்து அவன் சந்தோஷத்தை அவனுக்கு திருப்பி கொடுத்திடு’ என்றார் அவர் கொஞ்சம் படபடப்பாக..
பின்னே பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னா சும்மாவா. அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சின்னு எல்லா இடத்திலேயும் இருந்து அவனை பார்த்துக்கணும்’ என்றாள் சின்னதான புன்னகையுடன்.
எப்படி அவர் உதடுகள் இந்த வார்த்தைகளை உச்சரித்தன என்று அவருக்கே தெரியவில்லை.
‘அனுபமா இடத்திலேயும் இருந்து அவனை நீதான் பார்த்துக்கணும்’ யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் சட்டென சொல்லிவிட வருண் விருட்டென நிமிர்ந்து மயூராவின் முகம் பார்த்தான்.
அந்த பார்வையில் இருந்தது சின்ன சந்தோஷமா, கோபமா, கசப்பா, எரிச்சலா எதுவமே புரியவில்லை அவளுக்கு. அவள் முகத்திலும் மெலிதாக மாற்றம் பரவ பார்வையை இயல்பாக திருப்பிக்கொண்டாள் பெண். என்ன தோன்றியதோ எழுந்தே விட்டான் வருண்.
‘நீ போயிட்டு குளிச்சு ஃபெரெஷ் ஆயிட்டு வா வருண். காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடலை. நான் ஏதாவது உனக்கு சாப்பிட கொண்டு வரேன்.’ சூழ்நிலையை இயல்புக்கு தள்ளியவாறே சொன்னாள் மயூரா
‘எனக்கு எதுவும் வேண்டாம் மயூரா. சாப்பிடுற மூட் சத்தியமா இல்லை’ காலையிலிருந்து முதல் வரி பேசி இருக்கிறான் அவளிடம்.
‘நான் சாப்பாடு எடுத்திட்டு வரேன். நீ மொட்டை மாடிக்கு வரே அவ்வளவுதான். நாலு வாய் சாப்பிடு போதும். உள்ளே போய்விட்டாள் அவளும்.
அதே நேரத்தில் அங்கே சிங்கப்பூரில் ஹோட்டல் அறையின் பால்கனியில் அமர்ந்திருந்தான் முகிலன். அவனுக்குமே உணவு உள்ளே இறங்கவில்லை. விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்து கிடந்த இரவு நேர சிங்கப்பூரின் பளபளப்பை ரசிக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தான் அவன்.
நேரம் அங்கே பதினொன்றை தாண்டி இருக்க ஷ்யாம் இரவு உணவை முடித்து உறங்கிவிட்டிருந்தான். ஒரு வித தனிமையும் ஆற்றாமையும் முகிலனை ஆட்கொண்டு அழுத்திக்கொண்டிருந்தது.
விரல்கள் கைப்பேசியை துழாவிக்கொண்டிருந்தன. அனுபமா பற்றிய செய்திகளும் புகைப்படங்களுமே நிரம்பி இருந்தன எல்லா இடத்திலும். அவள் கடைசி புகைப்படத்தை யாரும் வெளியிடவில்லை என்றாலும் அந்த செய்திகளே அவன் உயிர் வரை கீறின.
அங்கங்கே செய்திகளுடன் வருணின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. எல்லாவற்றிலும் அவனோடு தோளோடு தோள் உரசியபடி வெங்கட்ராமன். இமை தட்டாமல் யோசனையுடன் அதையே பார்த்திருந்தான் சில நிமிடங்கள்.
‘டோன்ட் கால் மீ ஹியர் ஆஃப்டர்’ சின்ன சிரிப்புடன் வாய்விட்டு சொன்னபடியே அந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.
கண்டிப்பாக செய்தியாளர்கள் இவன் பெயரை எங்கேனும் இழுப்பார்கள், வெங்கட்ராமன் எதையாவது பேசுவார் என எல்லாவற்றக்கும் தயாராகவே இருந்தான் முகிலன். ஆனால் அப்படி எதுவுமே நடக்காததுதான் இவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது. அவர் மனதில் வேறே திட்டங்கள் இருப்பது இப்போதுதான் மெல்ல மெல்ல புரிகிறது அவனுக்கு.
‘நடக்கட்டும். எதுவும் நடக்கட்டும். எல்லாவற்றையும் சந்திக்கும் தைரியம் கொண்டவன் இந்த முகிலன்’ இவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில்.
அதே நேரத்தில்
உணவு தட்டுடன் மொட்டை மாடிக்கு வந்தாள் மயூரா. வானத்தை பார்த்தபடியே படுத்துக்கிடந்தான் வருண்.
‘பார்த்திருப்பாளோ? என் மடிசார் அழகி வானத்திலிருந்து என்னை பார்த்துக்கொண்டிருப்பாளோ?’
‘நாம கொஞ்சமா சாப்பிடலாமா?’ என்றபடியே அவனருகில் வந்து அமர்ந்தாள்
‘பச்….’ என்று எழுந்தவன் நகர பார்க்க அவன் கையை பிடித்து இழுத்து கீழே அமர வைத்தாள்
‘நீ வீட்டுக்கு போ. மயூரா’ என்றான் கொஞ்சம் எரிச்சல் கூடிய குரலில். ‘
‘பத்து மணிக்கு எனக்கு அப்பா கார் அனுப்புவார். நான் போய்க்கறேன். நீ இப்போ சாப்பிடு நான் உருட்டி உருட்டி தருவேனாம் நீ அப்படியே வாங்கி வாங்கி சாப்பிடுவியாம்’ என்று சொல்லியபடியே அவன் கண்களுக்குள் பார்த்தாள் மயூரா.
அவன் கையில் வந்த உருண்டை தன்னாலே வாய்க்குள் சென்றது. அவனாலும் அப்போது அவளை விட்டு விழி அகற்ற முடியவில்லை. அவள் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவே முடியவில்லை அவனால்.
எதில் கட்டுப்பட்டான் என வருணுக்கே தெரியவில்லை. அன்று அமாவசை போலும் வானில் நிலவை காணாவில்லை.
இரண்டு மூன்று உருண்டைகள் அப்படியே உள்ளே சென்றுக்கொண்டிருந்த போது காரணமே மயூராவின் நினைவில் வந்து நின்றான் நம் முகிலனும். காலையில் அவன் கத்திய கத்தலும்.
‘பொதுவாக அவளிடம் குரல் உயர்த்துபவர்கள் மிகக்குறைவுதான். அப்படி யாரும் பேசினால் அதன்பிறகு அவர்களிடம் இவள் முகம் கொடுத்து பேசுவது என்பது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் முகிலன் மீது கோபப்பட இயலவில்லை இவளால்.
ஏனோ அவன் சாப்பிடாமல் அமர்ந்திருப்பான் என்று தோன்றிக்கொண்டே இருந்தது இவளுக்கு.
‘மறுபடியும் அவனை அழைத்து பார்த்தால் என்ன?’ என்ற எண்ணம் மேலோங்க
இன்னொரு உருண்டையை வருண் கையில் கொடுத்துவிட்டு ‘“ஒரு நிமிஷம்..” என்றபடியே முகிலனின் எண்ணை அழைத்திருந்தாள் மயூரா. இந்த சூழ்நிலையில் அதை செய்திருக்க கூடாது என பிறகுதான் புரிந்தது அவளுக்கு.
அவனது கையில் இருந்த கைப்பேசி மயூரா அழைக்கிறாள் என்பதை உணர்த்தியது. சில மணி நேரங்களாக உள்ளுக்குள் அழுந்தி இருந்த ‘என் முகிலன்’ இப்போது மறுபடியும் மனதின் மேற்பகுதிக்கு வந்து நீந்தியது.
‘இல்லை. இவள் அழைப்பை நான் ஏற்பதாக இல்லை’ பேசாமலே அமர்ந்திருந்தான் அவன்.
ஆனாலும் அந்த ‘என் முகிலன்’ அவள் குரலில் அவன் செவிகளில் ஒலிப்பதை போலே தோன்றியது. தவிர்க்கவே இயலாத சந்தோஷ பரவசம் அவனுக்குள்ளே. ‘என் முகிலன்’ இந்த ஒற்றை வார்த்தையில் அப்படி என்ன மாயம்? புரியவில்லை அவனுக்கு.
ஆனால் மீராவிடமிருந்து இந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் கண்ணன் தவமிருந்தான் என இவனேங்கே அறிந்தான்.
ஒரு நிமிட இடைவெளிக்கு பிறகு மறுபடி அழைப்பு மயூராவிடமிருந்து. அழைப்பை ஏற்கவில்லை முகிலன். அவள் மனதில் இருப்பதை எந்த வகையிலும் வளர்த்துவிட இவன் விரும்பவில்லை.
சில நொடிகள் கழித்து மறுபடியும் மூன்றாவது அழைப்பு. அவன் உறங்கி இருப்பானோ என்று கூட அவளுக்கு ஒரு எண்ணம்தான். ஆனாலும் ஏதோ ஒரு உந்துதுதல். அந்த சில்லென்ற காற்றும், வெகு லேசான சாரலும் என மொட்டை மாடியில் இருக்கும் இதமான சூழ்நிலையில் அவனையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தவிப்பு அவளுக்கு.
‘விடமாட்டாளா இவள்? என்று கைப்பேசியை பார்த்தவன் ஒரு வேளை வருண் விஷயமாக எதுவும் அழைக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு.
‘தான் நினைத்தால் அந்த ‘என் முகிலனுக்கு’ எப்போது வேண்டுமானாலும் கத்திரி போட்டுவிடலாம் என்ற நம்பிக்கை எழ சட்டென அழைப்பை ஏற்றான் முகிலன்,
‘முகிலன்..’ கம்பீரமாய் அழுத்தமாய் சொன்னான் அவன் மறுமுனையில்.
‘மயூரா..’ என்றாள் இவள் புன்னகையுடன். காலையில் எதுவுமே நடக்கவில்லை என்பதை போன்ற தொனியில்.
‘ஆஹான்….’ என்றது மறுமுனை ‘சொல்லுங்க. வருண் சாப்பிட்டானா?’ குரலில் இருந்த அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொண்டான் முகிலன்.
‘இதோ சாப்பிட்டுட்டே இருக்கான். நாங்க மொட்டை மாடியிலே உட்கார்ந்து சாப்பிடறோம். நான் உருட்டி கொடுத்திட்டே இருக்கேன். அவன் அப்படியே சாப்பிடறான்.’ சொன்னாள் அவள். அந்த நொடி வரை மறுமுனையில் இருப்பது யாரென தெரியவில்லை வருணுக்கு.
‘’ஆஹான்..” ஏனோ அந்த காட்சி கண் முன்னே வந்த உணர்வு முகிலனுக்கு ஒரு வித லயிப்புடன் புன்னகைத்துக்கொண்டான் முகிலன்.. அவன் கண்கள் நிலவில்லா அந்த வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தன அங்கே சென்று அவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் போல் கூட தோன்றியது.,
‘ச்சே.. என்னை என்ன செய்து வைக்கிறார்கள் இந்த மயூராவும், வருணும்’ என தலையை குலுக்கிக்கொண்டவன்.
‘நீங்க சாப்பிடீங்களா?’
‘நான் சாப்பிட்டேன்.’ பொய் சொன்னவன் ‘ஒகே மயூரா வெங்கட்ராமன் நீங்க சாப்பிடுங்க. வேறே எதுவும் முக்கியமான விஷயம் இல்லை இல்லையா?’ என்றான் இயல்பாக.
‘முக்கியமான விஷயம் எதுவும் இல்லை முகிலன். நீங்க இங்கே இருந்தா உங்களுக்கும் சாதம் ரெண்டு உருண்டை உருட்டி கொடுக்கலாம்னு தோணிச்சு. அதான் கூப்பிட்டேன்’ மனதில் இருப்பதை அவள் சொல்லி முடிக்க விருட்டென நிமிர்ந்தான் வருண்.
‘முகிலனா?’ வருணின் அதிர்ச்சி குரல் முகிலனின் செவிகளை கூட எட்டியது
‘’முகிலன்தான். பேசறியா வருண்? என்றவள் ‘ஒரு நிமஷம் முகிலன்’ என்று கைப்பேசியை வருணை நோக்கி நீட்டியும் இருந்தாள்.
மறுமுனையில் அப்படி ஒரு மௌனம். ‘என்னுடன் பேசப்போகிறானா வருண்’?’
‘எதிர் முனையில் இருப்பது முகிலனா?’ உடல் லேசாக நடுங்கியது வருணுக்கு. கண்களில் கண்ணீர் சேர்ந்துவிட துடித்தது. அழைப்பை துண்டித்துவிடு என அவளை பார்த்து விரலசைத்தான் வருண்.
‘ஏன் வருண்? பேசேன். முகிலன் காலையிலிருந்து உன்னோட…’ அவள் ஏதோ சொல்ல வர
‘கட் பண்ணு..’ எகிறி வெடித்தது அவன் குரல். அது முகிலனையும் எட்ட தவறவில்லை. மயூரா சற்று அதிர்ந்து பார்க்க அதற்குள் முகிலனின் விரல்கள் தன்னாலே துண்டித்திருந்தது அழைப்பை.
முகிலன் கோபக்காரன் என தெரியும் மயூராவுக்கு. ஆனால் வருண் எப்படி வெடித்து இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறாள். ஆனாலும் அவன் இருக்கும் மனநிலையில் அவனிடம் எந்த வாக்கு வாதமும் செய்ய விரும்பவில்லை அவள்.
‘அவரே கட் பண்ணிட்டார். சரி நீ சாப்பிடு’ சில நொடிகளில் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு சொன்னாள் அவள்.
‘தேவை இல்லை. நீ வீட்டுக்கு போ…’ அவளிடம் சொல்லிவிட்டு மாடியிலிருந்து விறுவிறுவென இறங்கி சென்று விட்டிருந்தான் வருண்.
‘கட் பண்ணு!!!’
சுள்ளென்று சாட்டையால் அடித்தது போல்தான் தோன்றியது. இறுகிப்போன, உடலுடனும், அலைபாயும் உள்ளத்துடனும் ஆள்காட்டி விரல்களை நெற்றியில் அழுத்திக்கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தான் முகிலன்.
தொடரும்…..