Priyangaludan Mugilan 18

Priyangaludan Mugilan 18

ப்ரியங்களுடன் முகிலன் 18

சில்லென்ற ஒரு காற்று வீட்டின் பின்னால் இருந்த தென்னை மரங்களுக்கிடையில் ஊடுருவி சலசலத்தது. கரன்ட் இல்லை போலும். மெலிதாக வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது அருகில் இருந்த அந்த ஹரிக்கேன் விளக்கு. ஏன் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லையா தெரியவில்லை முகிலனுக்கு?

மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர் மூவரும். வருண், முகிலன் மயூரா என மூவரும். அவள் தட்டில் உணவை வைத்துக்கொண்டு இருவர் கையிலும் உருட்டி உருட்டி கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அந்த இருட்டில் கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பூனை. திடீரென அந்த பூனை அங்கே அமர்ந்திருந்த மயூராவின். மீது பாய்ந்தது. அலறிக்கொண்டு அப்படியே அவள் அருகில் அமர்ந்திருந்த முகிலன் மீது சாய்ந்தாள் அவள்.

‘பூனைடா. பூனை வேறே ஒண்ணுமில்லை. அவன் கரம் அவளை இதமாக அணைத்தது. அதற்குள் திடுக்கென விழித்து எழுந்தான் முகிலன்.

‘கனவா? எப்போது உறங்கினான். எப்படி உறங்கினான்? எப்படி கனவு வந்தது. அவனுக்கே புரியவில்லை.

இது என்ன பைத்தியகாரத்தனமாய் ஒரு கனவு பூனைக்கெல்லாம் பயப்படும் பெண்ணா மயூரா? தலையில் அடித்துக்கொண்டான் அவன். மாடியில் சாப்பிட்டுகொண்டிருக்கிறேன் என அவள் சொன்னதன் விளைவாக இருக்குமோ இந்த கனவு.? சிரித்துக்கொண்டான் முகிலன்.

அவனெங்கே அறிந்தான் இது கனவு மட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே நிகழ்ந்த நிகழ்வென்று

அதே நேரத்தில்

அங்கே சென்னையில் படுக்கையில் படுத்து புரண்டுக்கொண்டிருந்த அமுதனின் மனதிற்குள் திடீரென வந்தது மீராவின் ஞாபகம். அவள் முகம் மெல்ல மெல்ல நினைவில் ஆடியது.

‘அப்படியே இருக்கிறாளே! பார்ப்பதற்கு மீராவை உரித்து வைத்திருக்கிறாளே மயூரா.’ திடீரென ஒரு சந்தோஷ படபடப்பு.

கண்ணன் கையில் கமெராவுடன் மீராவை படமெடுத்த காலங்கள் அமுதனின் மனதில் ஆடின. அவர்கள் வீட்டில் அவனது காதலை அறிந்தது அமுதன் மட்டும்தானே.

‘என் பொண்ணு என்னடா தப்பு பண்ணா? நீங்க எல்லாரும் சேர்ந்து அவளை கொன்னுடீங்களேடா. நியாயம் சொல்லுங்க. அவளுக்கு ஒரு நியாயம் சொல்லுங்க’ அவள் இறந்த போது இவர் வீட்டு வாசலில் வந்து நின்று அவள் அம்மா கதறியது இன்னமும் நினைவு இருக்கிறது. அதை எல்லாம் நினைக்கும் போது இப்போதும் உடல் நடுங்கியது அவருக்கு.

சில நாட்கள் முன்னால் அவர் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்த போது வந்ததே அந்த கனவு. அதில் மாதவன் சொன்ன வார்த்தைகளை அவர் முழுமையாக நம்ப ஆரம்பித்திருந்தார் அவர். அதே திசையில் யோசிக்க யோசிக்க ஏதேதோ கணக்குகள் புரிவது போல் இருந்தது அவருக்கு

அந்த கனவு நிஜம்தான். மாதவன் சொன்னது உண்மைதான். அதன்படி  நியாயமாக முகிலன் வருணை கண்களுக்குள் வைத்து தாங்கி இருக்க வேண்டும். ஆனால் என் மீது இருக்கும் வெறி அவனுக்கு. என்னை அழித்து விட வேண்டும் என்ற வெறி. வருணை எனக்கு பிடிக்கும் என்பதால் அவன் வாழ்க்கையும் சேர்த்து அழிக்கிறான்.

‘அனுபமாவின் இடத்திலிருந்து வருணை பார்த்துக்கொள் என்றேனே?. என் உதடுகள் தாண்டி எப்படி வந்தன அந்த வார்த்தைகள். என் கணக்குகள் சரி என்றால் நான் சொன்னது சரியா தவறா?

மயூரா வருணுக்கானவளா? முகிலனுக்கானவளா? யோசித்து யோசித்து கனக்க ஆரம்பித்த தலையை இரண்டு கைகளிலும் தாங்கிக்கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தார் அமுதன்

நியாயப்படி அவள் முகிலனுக்கானவளாக இருந்தாலும் வருண் வாழ்கையை அழித்தவன் அல்லவா முகிலன். அப்படி என்றால் அவள் வருணைத்தானே சேர வேண்டும். ஆம் அவள் வருணைத்தான் சேர வேண்டும் அறுதியிட்டு கூறியது அவர் மனம்.

மறுநாள் மதியம்

மயூரா வந்து வருணுடன் சில மணி நேரங்கள் கழித்துவிட்டு அவனை சாப்பிட வைத்துவிட்டு சென்றிருந்தாள். என்னதான் அவன் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அவளுடன் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் அவள் உடன் இருக்கும் நேரங்களில் அவனது மன அழுத்தம் கொஞ்சம் குறைவதை வருணால் நன்றாக உணர முடிந்தது.

அவள் சென்ற பிறகு அங்கே வந்து சேர்ந்திருந்தார் வெங்கட்ராமன். அமுதனும் வெங்கட்ராமனும் அவனது அறைக்கு வந்து அமர்ந்தனர்.

‘சாப்பிடீங்களா வருண்?’ துவக்கினார் வெங்கட்ராமன்

‘உன் பொண்ணுதான் சாப்பிட வெச்சா அவனை’ இது அமுதன். ‘ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் போலிருக்கு. அவ இவன் கூட இருக்கும் போது சந்தோஷமா இருக்கான் வருண். போனதும் டல்லா உட்கார்ந்துக்கறான்’

அவர் சொன்ன வார்த்தைகளில் மெலிதாய் ஒரு மாற்றம் வெங்கட்ராமனின் முகத்தில். அப்படியே வருணையும் மயூராவையும் இணைத்து அவர் மனம் போட்டு வைத்தது ஒரு கோடு.

ஒரு தந்தையாய் மயூராவை வருணுக்கு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை அவருக்கு. அவனது குணத்தையும் கண்ணியத்தையும் அறிந்தவர்தானே அவர். அதே நேரத்தில் முகிலனுடன் அவள் இணைந்து படம் எடுக்கும் நேரத்தில் எங்கே அவள் அவன் பக்கம் சாய்ந்து விடுவாளோ என்ற பயமுமே இந்த எண்ணத்துக்கு ஒரு காரணமாக இருந்தது.

முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் அவன் அமர்ந்திருந்த அந்த சுழல் நாற்காலியை சற்றே ஆட்டிக்கொண்டே கைப்பேசியை துழாவிக்கொண்டு அமர்ந்திருந்தான் வருண்.

‘அவளா? அவ முகிலனை வெச்சு படம் டைரெக்ட் பண்ண போறாளாம். அதிலேதான் மும்முரமா இருக்கா. இதிலே இவன் கூட எங்கே இருக்கிறது?’ கொஞ்சம் குத்தலாக சொன்னார் வெங்கட்ராமன் வருணை ஆழம் பார்த்துக்கொண்டே.

கைப்பேசியை விட்டு அவன் விழிகள் எழவில்லை என்றாலும் அவர் வார்த்தைகளில் அவன் நெற்றி கொஞ்சம் சுருங்கி விரிந்தது உண்மை.

‘தயவு செய்து முகிலனை பத்தின பேச்சை எடுக்காதே வெங்கட்’ என்றார் அமுதன். அழிச்சிட்டான் அவன். வருண் வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டான். அவன் பிளான் பண்ண படி அனுபமா வருண் கல்யாணம் நடத்திருந்தா இன்னைக்கு அவ கண்டிப்பா உயிரோட இருந்திருப்பா. கொன்னுட்டான். முகிலன்தான் அவளை கொன்னுட்டான்’ அவர் முடிக்க வருணின் விழிகள் சில நொடிகள் மூடித்திறந்தன.  

‘நீங்க இப்படி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம் வருண் சார்’ என்றார் வெங்கட்ராமன். ‘நேத்துலேர்ந்து  நான் இதையேத்தான் சொல்லிட்டு  இருக்கேன்.  இந்த மரணத்துக்கே அவன்தான் காரணம்னு ப்ரெஸ்கிட்டேயே சொல்லலாம்னு நேத்து காலையிலிருந்து சொல்றேன். நீங்கதான் கேட்க  மாட்டேங்கறீங்க  அவன் உங்களுக்கு இத்தனை செஞ்சிருக்கான். நீங்க அவனை சும்மா விட்டா எப்படி?

மெல்ல மெல்ல விழிகளை உயர்த்தி அவர் முகம் பார்த்தான் வருண்.

‘அவனை கீழே தள்ளணும். அவன் அவமான படணும். ஒரு தடவை எல்லார் முன்னாடியும் அவன் அவமான பட்டான்னா அதுக்கு அப்புறம் முகிலன் அவ்வளவுதான். தமிழ் சினிமாலேயே அவனுக்கு மரியாதை போயிடும். அவன் தன்மானம் போயிடும் அதுக்கு அப்புறம் அவன் வெளியிலே தலை காட்டவே மாட்டான். அதுதான் அவன் குணம். அவ்வளவுதான் அதோட முகிலன் அப்படிங்கற ஒருத்தன் இல்லாமலே போயிடுவான்.’ அவர் குரலில் நிறையவே வன்மம்.

‘அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றீங்க?’ யோசித்து ஒற்றை ஒற்றை வார்த்தையாக உச்சரித்தான் வருண். அவன் அப்படி கேட்டதிலேயே நிறைய சந்தோஷம் வெங்கட்ராமனுக்கு.

‘நீங்க என் படத்திலே நடிக்கணும் வருண்’ என்றார் அவர் பட்டென. ‘நான் முதலிலேயே உங்ககிட்டே கேட்டேன். நீங்கதான் மறுத்துட்டீங்க. இந்த படத்தை நாம ஆறு மாசத்திலே முடிச்சிட்டாபோதும் அவன் என் காலிலே வந்து விழுவான். அதை தமிழ்நாட்டிலே எல்லாரும் பார்க்குறா மாதிரி செய்திடலாம். அவ்வளவுதான் அதுக்கு அப்புறம் அவன் எழுந்துக்கவே மாட்டான். அவனே நினைச்சாலும் அவனாலே எழுந்துக்க முடியாது ’ என்றார் வெங்கட்ராமன்’

‘ஆறு மாசத்திலே முடிக்கணும் இல்லையா?’ இது வருண்.

‘ஆமாம். அதிலே கிட்டதட்ட ஒரு மாசம் முடிஞ்சிடுச்சு வருண். இன்னும் அஞ்சு மாசத்துக்குள்ளே முடிக்கணும்’

‘நீங்க என்ன சார் சொல்றீங்க?’ என்றான் வருண் அமுதன் முகம் பார்த்து.

‘இதிலே நான் சொல்ல என்ன இருக்கு?’ என்றார் அவர் பட்டும் படாமலும்.

‘நிறைய இருக்கு சார். என்ன இருந்தாலும் முகிலன் உங்க பையன் இல்லையா? என்றான் வருண் அவர் விழிகளை ஊடுருவியபடியே.

‘இருக்கலாம் வருண். ஆனா அவன் உனக்கு இத்தனை துரோகம் பண்ணி இருக்கானே. அவனை எப்படி மன்னிக்க? தப்பு பண்ணவங்க எல்லாருக்கும் தண்டனை கிடைச்சுத்தானே ஆகணும். அது நானாகவே இருந்தாலும் சரிதான்’ என்றார் எதை எதையோ மனதில் சுழல விட்டபடி. ‘இனி நீங்க என்ன செஞ்சாலும் நான் அதுக்கு குறுக்கே வர மாட்டேன்.

‘நடந்திடுமா இது?’ இப்போது திரும்பி வெங்கட்ராமனின் முகம் பார்த்து கேட்டவனின் விழிகளில் நிறையவே கோபக்கோடுகள்..

‘நீங்க மனசு வெச்சா கண்டிப்பா நடக்கும் வருண்’ படபடத்தார்

‘சரி. நான் மனசு வெச்சும் ஒரு வேளை நடக்கலைன்னா’ என்றான் அழுத்தமான குரலில்.

‘அப்படி எல்லாம் ஆகாது வருண். நாம ஜெயிச்சிடுவோம் வருண்’ அவர் வார்த்தைகளில் நிறையவே அவசரம்.

‘போட்டி வெச்சாதான் சார் தெரியும் யார் ஜெயிக்கறாங்க யார் தோற்கறாங்கன்னு. பரீட்சை வராத வரை எல்லாரும் பாஸ்தான்’ என்றான் வருண் அழுத்தமாக. ‘அப்படி நீங்க தோத்துட்டா என்ன செய்ய போறீங்க? அதையும் நான் தெரிஞ்சுக்கணும்’ சொன்னவனின் விழிகளில் அப்படி ஒரு தீவரம்.

‘அது அவன்தான் முடிவு பண்ணனும். அப்படிதான் அவன் சொல்லி இருக்கான்’ கொஞ்சம் தளர்வாய் வந்தது வெங்கட்ராமனின் குரல்.

‘ஓ………’ என்றான் வருண் நாற்காலியின் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு. ‘சார் முடிவு பண்ணுவாராமா?.

வெங்கட்ராமன் அவன் முகத்தையே பார்த்திருக்க எந்த பதிலும் சொல்லாமல் கண்களை கூட திறக்காமல் சில நிமடங்கள் நாற்காலியில் ஆடிக்கொண்டே இருந்தான் வருண். பின்னர் மெல்ல கண்களை திறந்து வெங்கட்ராமனின் முகம் பார்த்து சொன்னான்

‘நான் நடிக்கிறேன் உங்க படத்திலே. இன்னும் ஒரே வாரத்திலே ஷூட்டிங் ஆரம்பிக்கணும்.’

மறுநாள் காலை

வழக்கம் போல் வருணை பார்க்க வந்திருந்தாள் மயூரா. அங்கே அவனது அறை மேஜை மீதிருந்த அனுபமாவின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வருண். ஏதேதோ நினைவுகளில் இறுகிக்கிடந்தது அவனது பார்வை

‘குட் மார்னிங் வருண்’ சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் மயூரா.

அங்கே அவனுடன் அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன். மற்றவர்கள் யாருடனும் முகம் கொடுத்து சரியாக பேசாதவன் இவருடன் மட்டும் ஒட்டிக்கொண்டு அலைவதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது மயூராவுக்கு.

‘சரி நான் அப்புறம் வரேன் வருண்’ எழுந்தார் வெங்கட்ராமன். ‘நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க’

அவர் விலகியவுடன் கேட்டாள் மயூரா ‘அப்படி என்னதான் டிஸ்கஷன் உங்க ரெண்டு பேருக்கும்?’

‘ம்?’ இன்னும் கொஞ்ச நாளிலே முகிலனை எல்லார் முன்னாடியும் உங்கப்பா காலிலே விழ வைக்க போறேனே. அதை பத்திதான் பேசிட்டு இருந்தோம்’ விழிகளால் அவள் விழிகளை படித்தபடியே நிதானமாக சொன்னான் வருண்.

‘வாட்?’ மொத்தமாய் மாறிப்போனது மயூராவின் முகம்.

‘எஸ்’ கண் சிமிட்டினான் அவள் முக மாற்றங்களை படித்தபடியே ‘தலைவர் சவால் விட்டிருக்காராம். உங்க அப்பா ஆறு மாசத்திலே என்னை வெச்சு படம் முடிச்சிட்டார்ன்னா அவர் காலிலே விழறேன்னு. எப்படி? மெல்ல சிரித்தான். ‘நாம முடிச்சிடுவோம். எல்லாத்தையும் முடிச்சிடுவோம்’

ஏனோ இந்த வகையான பேச்சுக்களைக்கூட தாங்கிக்கொள்ளவே முடியவில்லை மயூராவால்.

‘ஏன் வருண் உன் புத்தி இப்படி போகுது.. உண்மையிலேயே முகிலன் உன்னை எந்த இடத்திலே வெச்சிருக்கார் தெரியுமா? அவருக்கு நீ ரொம்ப ஸ்பெஷல் நீ அவருக்கு போய் தப்பு பண்றியே வருண்.

‘அது என்ன வெச்சிருக்கார்? ‘ர்ர்ரர்ர்ர்’ ன்னு அந்த அழுத்து அழுத்துறே என்றான் விழிகளால் கொக்கி போட்டபடியே ‘முகிலன் உனக்கு அவ்வளவு ஸ்பெஷலா?’

அவன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்றே புரியவில்லை மயூராவுக்கு. ஆனால் சுள்ளென பொங்கியது அவள் கோபம்.

‘எனக்கு முகிலன் என்ன மாதிரி ஸ்பெஷல்ன்னு உன்கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ வெடித்தன அவள் வார்த்தைகள். ‘நீ முகிலனுக்கு எதிரா எங்கப்பாவோட கை கோர்க்குறது எனக்கு பிடிக்கலை. நீ இந்த படம் பண்றது எனக்கு பிடிக்கலை’ என்றாள் நேரடியாக. ‘முகிலன் மேலே தப்பு இருக்காதுன்னு என் மனசு சொல்லுது வருண். அவர் உன் மேலே…‘ என்று ஏதோ சொல்ல வந்தவள் அவனது கூர்மையான பார்வையில் அப்படியே நிறுத்திக்கொண்டாள்.

‘உனக்கு ஃப்ரெண்ட்.ஷிப்ன்னா என்னனு தெரியலை வருண்’ என்று தோற்றுபோன குரலில் முடித்தாள் மயூரா.

‘ஆஹான்…’ முகிலன் பாணியில் சொல்லிக்கொண்டே அருகிலிருந்த அனுபமாவின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு ‘எனக்கு ஃப்ரெண்ட்.ஷிப்ன்னா என்னனு தெரியலை’  என்றபடியே அனுபமாவின் முகத்தை விரல்களால் வருடினான். பின்னர் சட்டென நிமிர்ந்தான்.

‘எனக்கு நீ முகிலனோட கை கோர்க்குறது பிடிக்கலைன்னு சொன்னா உன் படத்தை நீ நிறுத்திடுவியா?’ அவன் அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டே கேட்க அதிர்ந்தாள் மயூரா.

‘ஹேய்.. நீ எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறே?’

‘நான் நிறுத்த சொன்னா எனக்காக நீ இந்த படத்தை நிறுத்துவியா பதில் சொல்லு?’ மறுபடியும் நிதானமான தொனியில் கேட்டான் நிமிராமலே.

‘மாட்டேன்’ அடுத்த நொடி பதில் அவளிடமிருந்து.

‘அப்போ எனக்கு நீ அட்வைஸ் பண்ணாதே. நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும். உன் வேலையை நீ பாரு.’ பட்டென முகத்தில் அடித்தார் போல் சொன்னான் வருண்.

அவன் மனநிலை, அழுத்தம், வலி எல்லாம் உணர்ந்தவள்தானே அவன் தோழி. அதனால் அவனிடம் சண்டை போட கூட தோன்றவில்லை அவளுக்கு.

‘சரி வருண்.. நான் என் வேலையை பார்த்துக்கறேன். பட் நான் இந்த விஷயத்திலே முகிலன் பக்கம்தான் சொல்லிட்டேன். நான் நாளைக்கு ஊட்டிக்கு கிளம்பறேன். ரெண்டு நாளையிலே ஷூட்டிங். ஒரு வாரம் பத்து நாள் இங்கே இருக்க மாட்டேன். உடம்பை பார்த்துக்கோ. எப்போ என்ன வேணும்னாலும் போன் பண்ணு சரியா.’

‘வீசு. நீ அவனுக்கு நல்லா சாமரம் வீசு. ஊட்டிதானே? நானும் அங்கேதான் வரேன் உங்க அப்பா ஷூட்டிங்குக்கு. சந்திப்போம் எல்லாரும்’ என்றான் எந்த பாவம் என்றே கண்டுபிடிக்க முடியாத குரலில்.

‘இப்படி எல்லாம் இருப்பவனே இல்லையே வருண். எப்படி இரண்டு மூன்று நாட்களில் இப்படி மாறிப்போனான் இவன்?’ ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவனை பார்த்தவள் அவனிடம் தலையசைத்து விடைபெற்றுக்கொண்டு நகர்ந்தாள்.

இரண்டு நாட்கள் கடந்திருந்தன. சிங்கபூரிலிருந்து இன்று காலையில்தான் சிங்கப்பூரிலிருந்து திரும்பியிருந்தான் முகிலன்.. இரண்டு நாட்களாக. மயூராவிடம் கூட அவன் பேசி இருக்கவில்லை அவன். .

‘எப்படி இருக்கிறானாம் வருண்?’. அவளிடம் கேட்க வேண்டுமென தவித்துக்கொண்டுதான் இருந்தது உள்ளம். இருந்தாலும் வேண்டுமென்றே தவிர்த்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

படப்பிடிப்பு தொடர்பான விஷயங்களை கூட ஷ்யாமைவிட்டே பேச வைத்திருந்தான். இதனாலேயே வருண்  வெங்கட்ராமனுடன் இணைந்த செய்தி கூட அறிந்திருக்கவில்லை அவன்

சில மணி நேரங்களில் மயூராவின் படப்பிடிப்புக்கு செல்ல கோவை விமான நிலையத்தில் சென்று இறங்கினான் முகிலன்.

‘நேரே ஊட்டிலே தாத்தாவோட பைக்காரா கெஸ்ட் ஹவுஸ் போயிடலாம் ஷ்யாம்’ என்றான் முகிலன் ‘அங்கே போய் கொஞ்சம் ரிஃபெரெஷ் ஆயிட்டு ஷூட்டிங் கிளம்பிடலாம்’.

வந்து இறங்கினான் அந்த பைக்கரா கெஸ்ட் ஹவுசுக்கு. சில்லென தாலாட்டி குளிர் காற்று முத்தமிட வரவேற்றது ஊட்டி. அடிக்கடி இல்லை என்றாலும் இங்கே படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் இரண்டு மூன்று முறை இங்கே வந்திருக்கிறான் முகிலன்.

கார் உள்ளே சென்று நிற்க கீழே இறங்கியவன் காரணமே தெரியாமல் அந்த கெஸ்ட் ஹவுசையே பார்த்தபடி நின்றுவிட்டான் முகிலன்.

‘அப்பாவுக்கு ஊட்டினாலே பிடிக்காதுடா’ இதுவும் அம்மா முன்பு சொன்னதுதான். ‘ஏனாம் அப்படி?’ இந்த கேள்விக்கு அம்மாவிடம் பதில் இல்லைதான்.

நேரம் மாலை மூன்றை தாண்டிக்கொண்டிருக்க அந்த தோட்டத்தில் ஒரு சாய்வு நாற்காலியை போட்டு அமர்ந்துக்கொண்டு அங்கிருந்து தெரிந்த மலை முகடுகளையும், மரங்களையும் மலைகளோடு முத்தமிட்டு விளையாடும் மேகங்களையும் ரசித்தபடியே காபியை பருகிக்கொண்டிருந்தான் முகிலன்.

இதற்கு முன்பு சில முறைகள் இங்கே வந்திருந்தாலும் இப்படி ஆயாசமாக அமர்ந்து இவற்றையெல்லாம் ரசித்தது இல்லைதான் முகிலன். இன்று ஏனோ அமர்ந்திருந்தான் இப்படி. வார்த்தைகளில் வடித்துவிட முடியாத பரவசம் அவனுக்குள்ளே இருந்தது நிஜம்.

காரணமே இல்லாமல் வருணும் மயூராவும் மனதிற்குள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தனர்.

அவனெங்கே அறிந்தான் அவன் அமர்ந்திருக்கும் அதே இடத்தில்தான் அன்று மாதவன் மீராவின் கைப்பிடித்து கண்ணனிடம் கொடுத்தான் என!

                         தொடரும்…..

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!