Priyangaludan Mugilan 4

ப்ரியங்களுடன் முகிலன் 04

 

புன்னகைத்தான். மீராவை பார்த்து அழகாய் புன்னகைத்தான் மாதவன்.

‘ஒளியும் ஒலியும்தானே?’ கண்டிப்பா பார்க்கலாம். நான் கூட்டிட்டு போறேன். நீ காலேஜுக்கு ஓடிப்போயிட்டு ஓடி வந்திடுவியாம்’ செல்லமாய் மீராவின் தலையில் தட்டி அனுப்பி வைத்தான் அவன்.

குளித்து காலை உணவை முடித்துக்கொண்டு மாதவன் வெளியே வந்த அதே நேரத்தில் தனது வீட்டை விட்டு காரில் வெளியே வந்தான் கண்ணன்.

அவனது வீட்டுக்கு முன்னே எப்போதும் ஒரு சிறு கூட்டமிருக்கும். அங்கே  இருக்கும் குரோட்டன்ஸ் மரங்களுடன் கூடிய தோட்டத்தில் எப்போதும் அமுதனின் ரசிகர்கள், அவனை பார்க்க வந்த இயக்குனர்கள் என பலர் நின்றுக்கொண்டே இருப்பார்கள்.

திரைத்துறையில் அவனுக்கு நாட்டமில்லை என்பதால் திரைப்பட இயக்கம் என்பதை தாண்டி அவன் அப்பாவுக்கு இருந்த ஒன்றிரண்டு வியாபாரங்களை கவனிப்பது கண்ணனின் வழக்கம்.

வீட்டின் முன்னே இருந்தவர்களை தாண்டிக்கொண்டு வந்து அந்த அம்பாசிடர் காரை சாலையில் நடந்து வரும் மாதவனின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான் கண்ணன்.

‘வாடா அப்படியே நம்ம ஆஃபீஸ் வரைக்கும் போயிட்டு வரலாம் வாடா’ காரின் கதவை திறந்துவிட்டான் அவனுக்காக

காருக்குள் வந்து அமர்ந்தவுடன் முதல் வார்த்தையாக ‘அண்ணனை பார்க்கணும்டா ரொம்ப நாள் ஆச்சு’ என்றான் மாதவன்

சட்டென மாற்றம் கொண்டது கண்ணனின் முகம். ‘வந்ததும் ஆரம்பிச்சிட்டியா? ஏன்டா இப்படி இருக்கே. அவன்தான் உன்னை அலட்சிய படுத்தறான்னு தெரியுதில்ல. அப்புறம் ஏன் அவனை தெய்வம் மாதிரி பாக்குறே. போடா வெங்காயம்னு விடுவியா’ என்றான் கண்ணன் கொஞ்சம் எரிச்சல் சேர்ந்த குரலில்.

‘டேய்… அப்படி எல்லாம் சொல்லாதே கண்ணா..’ என்றான் இவன் அவசரமாக. ‘அவர் பெரிய நடிகர். அவருக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம். அவங்க எல்லாம் அப்படிதான் இருப்பாங்க’

எப்போதுமே மாதவன் ஏதோ தெய்வத்தை தரிசிக்க வந்தவன் போல்தான் அமுதன் முன்னால் சென்று நிற்பான். அவனிடம் ஒரு வார்த்தை கூட முகம் கொடுத்து பேச மாட்டான் அமுதன். அதை பார்க்கும் போதே கோபம் மண்டும் கண்ணனுக்குள் .

‘ஆமாம் பெரிய புண்ணாக்கு அவன். போடா டேய்…. அவன் என் அண்ணனாவே இருந்தாலும் இந்த விஷயத்திலே எனக்கு அவன் மேலே ரொம்ப கோபம்தான். நீ என் ஃப்ரெண்ட்டா. அவனெல்லாம் உன்னை அவமான படுத்தறதை என்னாலே தாங்கிக்கவே முடியாது.’ படபடவென பொறிந்தான் கண்ணன்

‘அவமானமெல்லாம் இல்லைடா’ என்றான் மாதவன் விடாமல். ‘எனக்கு வாழ்க்கையிலே பெரிய லட்சியமே உங்க அண்ணன் கூட ஒரே ஒரு படத்திலேயாவது ஒரு சின்ன சீன்லேயாவது நடிச்சிடணும். அதுதான் எனக்கு பெருமை ’

‘டேய்… டேய்… டேய்…. அறிவு கெட்டவனே உன் வேல்யூ தெரியாம பேசறியே. டெல்லிலே கவர்மென்ட் உத்தியோகத்திலே இருக்கே. பச்சை இங்க்லே கையெழுத்து போடறே. இதுக்கு மேலே என்னடா வேணும். இன்னும் உன் வேலையிலே ப்ரமோஷன் வாங்குற வழியை பாருடா. இன்னும் இன்னும் மேலே போ. உன்னை தேடி இவனுங்க எல்லாம் வருவானுங்க. அதுதாண்டா பெருமை’’

‘இனிமே நான் வாழ்க்கையிலே மேலே போய்… அது… அது எல்லாம்… நடக்காதுடா..’ என்றான் சற்றே தழைந்து விட்ட குரலில்.

‘ஏன்டா சட்டுன்னு டல் ஆகிட்டே? நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன். சும்மா சினிமா சினிமான்னு உசிரை விடாதே. சினிமாங்கிறதும் ஒரு தொழில்தான். எங்க அண்ணன் சினிமாலே ஒரு தொழிலாளி அவ்வளவுதான். அவனுக்கெல்லாம் பூஜை பண்ணாதே நீ. அது உனக்குத்தான் டைம் வேஸ்ட் ’ என்றபடியே திரும்பி மாதவனின் கண்களுக்குள் பார்த்தான் கண்ணன் ‘கண்ணன் சொல்றேன் கேளுடா..’  

‘கேட்கலையே. நீ சொன்னதைத்தான் கேட்காம விட்டுட்டேனே. அதனாலேதானேடா எல்லாம். இப்போ எதையுமே மாத்த முடியாதுடா’ அவன் சொல்ல காரை சாலையின் ஒரமாக நிறுத்தியே விட்டான் கண்ணன்.

‘நீ காலையிலிருந்தே சரியில்லை. என்னடா ஆச்சு?’

‘சொல்றேன் சீக்கிரமே சொல்றேன் எல்லாத்தையும். உன்கிட்டே சொல்லாம வேறே யார்கிட்டே சொல்ல. அதுக்கு முன்னாடி எனக்கு உங்க அண்ணன் கூட நடிக்க ஒரு வாய்ப்பு வாங்கிக்கொடுடா’

‘பச்… மாதவா..’

‘ப்ளீஸ்டா கண்ணா… அடுத்து நமக்குன்னு இன்னொரு நேரம் வராமலா போகும். அப்படி வரும் போது நீ சொன்னதை எல்லாம் நான் கேட்பேன், நீ எனக்குன்னு என்ன செஞ்சாலும் அதை அப்படியே ஏத்துப்பேன்’ என்றான் எதையோ மனதில் மூடி மறைத்துக்கொண்டவனாக

‘போடா..’ என்றான் கண்ணன் தோற்று போன குரலில். ‘எங்க அண்ணனோட உன்னை நடிக்க வைக்க எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அவன் உன்னை கொஞ்சம் கூட மதிக்க மாட்டான். வேணும்னா எங்க அப்பாகிட்டே பேசி வேறே ஏதாவது படத்திலே உனக்கு வாய்ப்பு வாங்கித்தரேன். சரியா’ முடிவாக சொல்லிவிட்டு காரை கிளப்பினான் கண்ணன்.

சில நிமிடங்கள் இருவருக்கும் நடுவில் ஒரு வித மௌனம் ஓடி வந்து அமர்ந்துக்கொண்டது. அதை மெல்ல உடைத்தான் மாதவன்

‘ஒரு விஷயம் உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன். இன்னைக்கு நைட் மீராவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரலாமாடா. அதுக்கு ஒளியும் ஒலியும் பார்க்கணுமாம் டி.விலே.’ அவன் சொல்லி முடிக்கவில்லை மொத்தமாய் மலர்ந்து போனான் கண்ணன்.

‘மீராவா? நம்ம மீராவாடா? வீட்டுக்கு வராளா? ஹேய்… நிஜமாவாடா?’ குதூகலித்து கூவியவனை வியப்பாக பார்த்தான் மாதவன்.

கல் முழுவதும் மீராவின் கவனம் படிப்பில் செல்லவே இல்லை. பின்னே இது என்ன விளையாட்டா என்ன? எத்தனை நாள் கனவிது? ஒளியும் ஒலியும் அதுவும் கலர் டிவியில். தோழிகளிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்தாள் அவள்.

‘நான் வாரா வாரம்தான் பார்க்கிறேன்’ அவளது தோழி பல்லவி ஆரம்பித்தாள்.

அவள் வீட்டில் இருந்தது ஒரு கருப்பு வெள்ளை டி.வி. அதில் ஒளியும் ஒலியும்  பார்க்க தோழிகள் கூட்டம் அவள் வீடு தேடி செல்வது வழக்கம்தான். மீரா அவள் வீட்டுக்கெல்லாம் சென்றதில்லை.

‘ஒளியும் ஒலியும்க்கு அப்புறம் செய்திகள் வரும் பாரு. அதிலே ஷோபனா ரவின்னு ஒருத்தங்க செய்தி வாசிப்பாங்க. அவங்க செய்தி வாசிக்குற அழகை பார்க்கணும். அதை விட அவங்க கட்டிட்டு வர சேலை அழகை பார்க்கணும்’

‘நான் இன்னைக்கு கலர் டி.வி.லே பார்க்க போறேன் தெரியுமா? கருப்பு வெள்ளை டி.விலே கலர் என்ன தெரியும்? நான் இன்னைக்கு சேலை என்ன கலர்னு பார்த்திட்டு வந்து சொல்றேன்’ மீரா பட்டென சொல்ல எல்லாரும் அவளை சற்றே வியப்புடன் பார்க்க ஒளி குறைந்தது பல்லவியின் முகம்.

‘கலர் டி.வியா? பொய் சொல்லாதே உங்க வீட்டிலே கலர் சாக்பீஸ் கூட கிடையாது. இதிலே கலர் டி,வியாம்’ சொல்லிக்கொண்டே பல்லவி தோழிகளுடன் சேர்ந்து சிரிக்க

‘எங்க வீட்டிலே இல்ல. ஆக்டர் அமுதன் வீட்டிலே. அவர் வீடு எங்க வீட்டு பக்கத்து வீடு தெரிஞ்சுக்கோங்க. நான் அங்கே போய்தான் டி.வி. பார்க்க போறேன். நாளைக்கு பார்த்திட்டு வந்து சொல்றேன்’ சந்தோஷ குரலில் சொன்னாள் மீரா

‘பொய். இன்னொரு பொய். அவங்க வீட்டிலே எல்லாம் உன்னை உள்ளே கூட விட மாட்டங்க’ பல்லவியின் குரலில் நிறையவே பொறாமை.

‘உண்மையைதான் சொல்றேன். அவரோட தம்பி எங்க மாதவனுக்கு அவ்வளவு பழக்கம்.’ மீரா சொல்ல

‘ஹேய்… நிஜமாவா? ‘ தோழிகள் அவளை சூழ்ந்துக்கொள்ள

‘ஆமாம். க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இன்னைக்கு ஒளியும் ஒலியும் பார்த்திட்டு, அப்படியே ஷோபனா ரவி புடவையும் பார்த்திட்டு அப்படியே அமுதன் சார்கிட்டேயும் பேசிட்டு வந்து உங்க எல்லாருக்கும் சொல்றேன்’ என்றாள் மீரா குரலிலும்  விழிகளிலும் பெருமை மின்ன.

‘அமுதன் சார் வெளியூர் போயிருக்கார் ஷூட்டிங்குக்கு. நான் பேப்பர்லே பார்த்தேன். அப்புறம் இன்னைக்கு நைட் கரென்ட் இருக்காதாம் ஒளியும் ஒலியும் டைம்லே. அதுக்கும் மேலே நேத்துதான் ஷோபனா ரவி செய்திகள் வாசிச்சாங்க. இன்னைக்கு அவங்க வர மாட்டாங்க. வரதராஜன்தான் வருவார்.’ மீராவின் வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பல்லவி ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க

‘அதெல்லாம் பார்க்கலாம் நீ ஜெயிக்கறியா நான் ஜெயிக்கறேனான்னு நாளைக்கு வந்து சொல்றேன்.’ மீரா அவளை நேராக பார்த்து  சொல்லிவிட்டு கிளம்ப பல்லவி தவிர மற்றவர்கள் எல்லோரும் அவளை விழிகள் விரிய பார்த்துக்கொண்டே இருந்தனர்.

பேருந்திலிருந்து இறங்கி அவள் வீடு நோக்கி நடந்து வருகையில் அவள் பின்னால் சைக்கிள் மணி!  தபால்காரர்!

அப்போதெல்லாம் வரும் தாபல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதனால் காலை மாலை என இரு வேளையிலும்  தபால்காரர்கள் வருவது வழக்கம். அவள் வீட்டுக்கு வந்த தபால்களை அவர் அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

‘அம்மா பம்பாயிலிருந்து சித்தப்பா லெட்டர் போட்டிருக்கார்’ சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் மீரா.

‘யாரு வெங்கட்ராமனா?’ கேட்டுக்கொண்டே வந்தார் அவள் அம்மா. வெங்கட்ராமன் மீராவின் அப்பாவின் தம்பி. கடைசி தம்பி. மீராவுக்கும் அவருக்கும் பத்து வயது மட்டுமே வித்தியாசம்.

கடிதத்தை வாங்கி படித்தபடியே அங்கிருந்த மாதவனை பார்த்து கேட்டார் அம்மா

‘ஏன்டா மாதவா நீதான் ஏதோ சினிமா சினிமாங்கறியே. இந்த வெங்கட்ராமன் பம்பாயிலே ஏதோ ஃபிலிம் இன்ஸ்டிடியூட்லே படிச்சிட்டு இப்போ படமெல்லாம் எடுக்க போறானாம். நீயும் அவன்கிட்டே போனா ஏதாவது வாய்ப்பு கொடுப்பான் இல்ல’

‘இல்ல அத்தை வேண்டாம்’ உடனடியாக வந்தது பதில் மாதவனிடமிருந்து.

‘ஏன்டா அவனும் உனக்கு ஒரு தாய்மாமன்தானே?’

‘தாய் மாமன்தான், .அம்மாவோட தம்பிதான். ஆனா அவர்கிட்டே எனக்கு பெரிய ஒட்டுதல் இல்லை அத்தை. எனக்கு கண்ணன் ஏதாவது வாய்ப்பு வாங்கித்தருவான்’ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டிருந்தான் மாதவன்.

ரவு ஏழு மணி.

வார்த்தையில் சொல்ல முடியாத ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது அவளிடத்தில் நிமிடத்துக்கு இரண்டு முறை கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். ஏனோ அது நகர்வதாகவே தோன்றவில்லை அவளுக்கு,

‘இறைவா மின்சாரம்  மட்டும் போய் விடக்கூடாது. இன்று ஒரு நாள் ஒரே நாள் கருணை காட்டு. நான் ஒளியும் ஒலியும் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்’ நிமிடத்துக்கு ஐந்து முறை வேண்டிக்கொண்டாள் அவள்.

கண்ணாடியின் முன்னால் சென்று பத்தாவது முறையாக தலை வாரிக்கொண்டாள்.

‘விளக்கு வெச்ச பிறகு எதுக்கு தலையை வாரிக்கறே?’ அம்மா பார்த்தால் திட்டுவாள்தான். அவசரமாக பின்னிக்கொண்டாள் கூந்தலை. அணிந்திருந்த அரக்கு நிற பாவடையும் அதற்கு தோதான தாவணியையும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டாள்.

‘எல்லாம் போதும். இந்த பாவடையும் தாவணியும் என்னை இன்னமும் கருப்பாகத்தான் காட்டுகிறது. நான் என்ன தேவதையா? என்னை ரசிப்பவர்கள் அங்கே யார் இருக்கிறார்கள்? நான் போய் டி.வி பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்’ சொல்லிக்கொண்டாள் தனக்குள்ளே.

‘போலாம் மாதவ் ப்ளீஸ்..’ அவனை கெஞ்சி, விரட்டி, மிரட்டி ஏழே காலுக்கே கிளம்பி விட்டிருந்தாள் கண்ணன் வீட்டுக்கு

‘இன்னும் வயலும் வாழ்வுமே முடிஞ்சிருக்காது’ சிரித்தான் அவன்.

‘அது என்ன வயலும் வாழ்வும்?’

‘அது விவசாயம் பத்தின ப்ரோக்ராம்’

‘ஓ.. சரி அப்போ அதுவும் பார்க்கிறேன்’ அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள் அவள்.

நவராத்திரி நேரம் மற்றவர்கள் வீட்டு கொலுவுக்கு செல்லும் பெண்கள் ஒன்றிரண்டு பேர் தெருவில் தென்பட்டாலும் பொதுவாகவே தெரு சற்றே வெறுச்சோடித்தான் இருந்தது. எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் சைக்கிள் மணி சத்தம் கூட குறைந்திருந்தது.

ஒளியும் ஒலியும் நேரத்தில் பொதுவாக தெருக்கள் அப்படிதான் இருக்கும். டிவி இருக்கும் வீடுகளுக்கு அக்கம் பக்கத்தினர் படை எடுப்பதும். குடும்பத்தினர் அனைவரும் வேலைகளை முடித்துக்கொண்டு ஒன்றாக டிவியின் முன்னால் அமர்வதும் என எல்லாரிடமும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்தான்.

மாதவனை பார்த்ததும் கண்ணன் வீட்டு கூர்க்கா கதவை திறந்து விட்டான். சந்தோஷ பரபரப்பும் கொஞ்சம் பயமும் சேர்ந்துக்கொள்ள மாதவனின் கைப்பிடித்துக்கொண்டு நடந்தாள் மீரா.

கண் முன்னே பெரிதாய் விரிந்த கூடம் முழுவதும் பளிங்கு தரை. வியப்பில் விரிந்த கண்களுடன் அவள் உள்ளே கால் வைத்த நொடியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தான் கண்ணன்.

‘வாங்க வாங்க ரெண்டு பேரும்..’ சொன்னவனின் பார்வை இப்போது மீராவிடமே தஞ்சம். இத்தனை நாட்களில் இப்போதுதான் அவளை அவன் இத்தனை அருகில் பார்ப்பது!! தித்திப்பாய் ஒரு மகிழ்ச்சி பரவியது அவனுக்குள்ளே.

கூடத்தின் ஒரு பகுதியை அழகாய் அலங்கரித்திருந்தன கொலு பொம்மைகள். சில நொடிகள் மீரா இமைக்க மறந்து அவற்றை பார்த்திருக்க அவளையே பார்த்திருந்த கண்ணனும் தன்னை மறந்திருந்தான். அந்த பாவடையும் தாவணியும் நீள் பின்னலும் அவளை தேவதையாக காட்டுவதைப்போலவே அவனுக்கு தோன்றியது.

வீட்டில் கொலுவுக்காக விருந்தினர்கள் வந்திருப்பது அவர்களுக்கு புரிந்தது.

‘வீட்டிலே கெஸ்ட் வந்திருக்காங்களாடா? நாங்க வேணும்னா அடுத்த வாரம் வரவா?’ மாதவன் சற்றே தயக்கத்துடன் கேட்க கலைந்து நிமிர்ந்தான் கண்ணன்

‘டேய்… நீதாண்டா வி.ஐ.பி.. வாடா உள்ளே’ என்றான் கண்ணன். அதற்குள் அங்கே வந்திருந்தார் அவன் அம்மா.

‘வாம்மா . உன் பேர் மீராதானே. வா உள்ளே வா. நவராத்திரி மஞ்சள் குங்குமம் வாங்கிக்கோ வா ‘

‘மஞ்சள் குங்குமமா? வெரி குட் வெரி குட்’ ரகசியமாய் ஒரு சந்தோஷ புன்னகை ஓடியது கண்ணனின் இதழ்களுக்குள் ‘அம்மா இவங்களுக்கு ஒளியும் ஒலியும் பார்க்கணுமாம். சீக்கிரம் அனுப்பு மேலே’ அம்மாவிடம் சொல்லிவிட்டு

‘மீ….ரா..’ என்றான் மயிலறகால் வருடும் தொனியில். அந்த அழைப்பு அவளை குலுக்கியது நிஜம். விருட்டென அவள் திரும்ப

‘இன்னும் பத்து நிமிஷம் டைம் இருக்கு. நீ நிதானமா மேலே வா’ என்றான் இதமாக

‘மாடியிலேயா?’ அவள் மெல்ல கேட்க’

‘ஆமாம். இடது பக்கம் முதல் ரூம். அங்கே என்னோட டி.வி இருக்கு அதிலே பார்க்கலாம் சரியா? நீ வா அதுவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் மேலே இருக்கோம்’ வெகு உரிமையாய் ஒருமையில் சொல்லிவிட்டு அவன் மாதவனின் பக்கம் திரும்ப அவன் பார்வை அமுதனை தேடிக்கொண்டிருக்க

‘டேய்…’ என்றான் கண்ணன் ‘நீ தேடுற ஆள் இங்கே இல்லை. ஷூட்டிங் போயிருக்கான். வா வா மேலே வா’ அவனை இழுத்துக்கொண்டு நடந்தான்

இங்கே மீராவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார் அவன் அம்மா. அங்கே பட்டுப்பாவாடைகளும், புடவைகளும், நகைகளும் மின்ன மின்ன இவள் வயதை ஒட்டிய பெண்கள் ஐந்தாறு பேர் அமர்ந்திருந்தனர். விழிகள் விரிய அவர்களை இவள் பார்த்துக்கொண்டிருக்க

‘இவங்க என் அண்ணன் பொண்ணுங்க, அப்புறம் நாத்தனார் பொண்ணுங்க. இவங்களிலே ரெண்டு பேரைதான் அமுதனுக்கும், கண்ணனுக்கும் பார்க்கணும்’ அவளிடம் சொல்லிக்கொண்டே தாம்பூலத்தை அவளிடத்தில் நீட்டினார் அம்மா.

‘ஓ..’ என்று தலை அசைத்து புன்னகைத்தாள் மீரா.

தாம்பூலத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு மாடிப்படி ஏறினாள் மீரா. எல்லாரிடத்திலும் அழகும், நிறமும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன..

எல்லாரும் பணத்தின் மீதே பிறந்து பணத்தின் மீதே வளர்ந்தவர்கள் என நன்றாக புரிந்தது அவளுக்கு. அதே நேரத்தில் அவர்கள் இவளை பார்த்து ஏதோ கிசுகிசுத்து சிரித்துக்கொள்வதும், ஒரு சிலர் இவளை பார்த்து முகம் சுளிப்பதும் கூட புரிந்தது அவளுக்கு.

‘போதும். இன்று ஒரு நாள் டி.வி. பார்த்துவிட்டு ஓடி விடுவேன் இங்கிருந்து. அதன் பிறகு யார் யாரை திருமணம் செய்துக்கொண்டால் எனக்கென்ன’ சொல்லிக்கொண்டே மாடி ஏறினாள் அவள். அவளெங்கே அறிந்தாள் இவளுக்கும் கண்ணனுக்குமான பந்தம் ஒரே நாளில் முடிந்து போவது இல்லை என.

அவனது அறையின் கதவை தட்டிவிட்டு இவள் உள்ளே நுழைய, அங்கே  மாதவனும் அமர்ந்திருக்க சில்லென வரவேற்றது ஏசி காற்று. அதை விட இதமாய் வரவேற்றது கண்ணனின் குரல்.

‘வாங்க வாங்க வாங்க மேடம். இப்படி வந்து உட்காருங்க’ அவனது அழைப்பில் தன்னையும் அறியாமல் சில்லென சிலிர்த்தது அவளுக்குள்ளே. என்ன தெரிந்ததோ? ஏது புரிந்ததோ அவர்கள் இருவரையும் புன்னகையுடன் மாறி மாறி பார்த்திருந்தான் மாதவன்.

இத்தனை நேரம் மனதில் இருந்த இனம் புரியாத இறுக்கம் கண்ணனின் குரலில், அவன் அருகாமையில் சற்றே தளர்ந்தது போலே ஒரு உணர்வு பிறந்தது அவளுக்கு. மெல்ல சுதாரித்துகொண்டவளின் பார்வை இப்போது அங்கிருந்த டி.வியின் மீது சென்று விழ முகம் மலர சோபாவில் சென்று அமர்ந்தாள் மீரா.

வண்ணமயமாய் விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன டி.வி.யில். இமைதட்ட மறந்திருந்தாள் மீரா. அப்போது டி.வி.யில் கையில் குளிர்பானத்துடன் சிரித்தது அந்த குழந்தை.

‘ஐ லவ் யூ ரஸ்னா’ கன்னத்தில் அந்த குளிர்பான கிளாசை வைத்துக்கொண்டு அந்த குழந்தை சொல்ல இவள் களுக்கென சிரிக்க இமைகள் கீழறங்கவில்லை கண்ணனுக்கு.

சினிமா குடும்பத்திலேயே பிறந்து, வளர்ந்து, உழன்றுக்கொண்டு இருப்பவனுக்கு இதுவரை சினமா பாடல்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருந்ததில்லைதான். ஆனால் இனி அவை இவனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி, ஏன் ஒரு அற்புதமான மருந்தாகி  போகப்போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

இதோ இப்போது மீராவை ரசிப்பது ஒன்றே மிகப்பெரிய ஆனந்தமாக இருந்தது அவனுக்கு.

இப்போது துவங்கியது ஒளியும் ஒலியும். மூச்சு விடக்கூட மறந்து போனதைப்போல் விழிகளில் சந்தோஷ தோரணங்கள் ஊஞ்சலாட ஆச்சரியமும் படபடப்புமாய் டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா.

‘மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்’ சிவாஜி கணேசன் வந்து நின்றார் டி.வியில் .

‘புது பாட்டு வருமா?’ அதற்குள் அவசரம் மீராவுக்கு.

‘வரும்பா. வரும். அடுத்து வரும் பாரு’ அவளது தவிப்பை ரசித்தபடியே அவனது அறையில் இருந்த ஃப்ரிட்ஜின் அருகே சென்றான் கண்ணன்.

இரண்டு நிமிடங்கள் கடந்திருக்க சட்டென இடையில் நின்று போனது பாடல் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என ஒரு அறிவிப்பு பலகை சிரித்தது டிவியில்.

‘அச்சச்சோ…..என்னாச்சு. ஏன் நின்னு போச்சு..’ குழந்தையாய் கூவியவளின் அருகே புன்னகையுடன் வந்து நின்றான் கண்ணன் அவன் கையில் இருந்த ட்ரேயில் மூன்று  குளிர்பான குவளைகள்

‘ஜூஸ் எடுத்துக்கோ’ அவன் மெல்ல சொல்ல

‘பாட்டு எப்போ வரும்.’ விழிகள் படபடக்க உச்சகட்ட தவிப்பில் கேட்டவளை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை அவனால்.

‘வரும் வரும் இப்போ வந்திடும். ஜூஸ் எடுத்துக்கோ’ அவன் சொல்ல

பொம்மையை தவற விட்ட குழந்தையின் படபடப்புடன் டிவியையும் அவன் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே ஜூஸை எடுத்துக்கொண்டவளுக்குள் மொத்தமாய் சரிந்திருந்தான் கண்ணன்.

மெலிதான குரலில் இதமாய் சொன்னான் ‘ஐ லவ் யூ ரஸ்னா’

‘ம்?’ அவள் விலுக்கென நிமிர

மறுபடியும் அதே தொனியில் அவள் முகம் பார்த்து சொன்னான் ‘ஐ லவ் யூ ரஸ்னா’

அந்த நொடியில் அந்த ஒரு நொடியில் மட்டும் அவளுக்குள் பல நூறு பூக்கள் பூத்து குலுங்கின. அடுத்த நொடியில் மெதுவாக அழுத்தியது நிதர்சனம். மயங்காதே. இது நடக்காது என உள்ளுக்குள் ஏதோ ஒன்று கூவத்துவங்க அவள் முகம் மெல்ல மாற  சட்டென தரை இறங்கினான் கண்ணன்.

‘சொல்லி இருக்ககூடாதோ? நான் இப்படி சட்டென உளறி இருக்கக்கூடாதோ? என்ன நினைத்திருப்பாள் இவள். அதற்கு மேல் என் நண்பன் என்னை பற்றி என்ன நினைத்திருப்பான்? முதலாவதை விட இரண்டாவது கேள்வியே அவனை அதிகமாக குடைந்தது

‘இல்ல இது ரஸ்னா ஜூஸ்மா. இப்போ டி.வியிலே அந்த பாப்பா சொல்லிச்சு இல்ல அது’ மாதவனையும் மீராவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே அவன் தவிப்புடன் சொல்ல அவள் பேசாமல் குளிர்பானத்தை எடுத்துக்கொள்ள மாதவனுக்கும் கொடுத்துவிட்டு குற்ற உணர்ச்சி அழுத்த அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான் கண்ணன். சட்டென ஒளிர்ந்தது தொலைக்காட்சி. அதில்

‘ராதா ராதா நீ எங்கே? கண்ணன் எங்கே நான் அங்கே’

என கமலஹாசனும் ஸ்ரீதேவியும் மாறி மாறி காதலித்துக்கொண்டிருக்க இங்கே மூவரும் ரஸ்னாவை பருகியபடியே  மௌன சிலைகளாய் அமர்ந்திருந்தனர்.

இதில் வருத்தம் எதுவுமே இல்லை மாதவனுக்கு. சொல்லப்போனால் இது சரியாக நடந்தால் மகிழ்ச்சியே! மட்டற்ற மகிழ்ச்சியே!

தனதருகில் இருந்த நண்பனின் கரத்தை எடுத்து தனது கரத்தினுள் வைத்துக்கொண்டு மெல்ல அழுத்திக்கொடுத்தான் மாதவன். பல நூறு வார்த்தைகள் கொடுத்துவிடாத நம்பிக்கையை, நிம்மதியை, மகிழ்ச்சியை அந்த ஸ்பரிசம் கொடுக்க நெகிழ்ந்து போய் நண்பனை பார்த்தான் கண்ணன். அறை முழுதும் பாடல் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

‘கண்ணா கண்ணா நீ எங்கே? ராதா எங்கே நான் அங்கே’

அடுத்த பாடல் ஒலிக்கும் வரை அவர்களுக்கிடையில் மௌனமே ஆட்சி செய்துக்கொண்டிருந்தது. ‘கண்ணில் என்ன கார்காலம். கன்னங்களில் நீர் கோலம்’ அடுத்த பாடல் தொடங்க

‘ஹேய்… இது புது பாட்டு’ மௌனத்தை உடைத்தான் மாதவன். படம் வந்து ரெண்டு மூணு மாசம்தான் ஆச்சு.

‘ம்… ஆமாம் ரொம்ப புதுசு…’ சந்தோஷ கூவலுடன் தன்னை உற்சாகத்துக்குள் தள்ளிக்கொண்டாள் மீரா.

எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்து வந்த பாடல்களை இருவரும் மாறி மாறி ரசித்துக்கொண்டே இருந்தனர். ஒளியும் ஒலியும் நிறைவு பெற அடுத்து வந்தது செய்திகள்.

‘இதுதான் ஷோபனா ரவியா?’ இன்னொரு சந்தோஷ கூவல் பெண்ணிடமிருந்து.

‘ஆமாம் இவங்களேதான்’ இது மாதவன்.

அடுத்து ஷோபனா ரவியின் புடவை, அவர் செய்தி வாசிக்கும் விதம் அவரது புன்னகை என எல்லாவற்றையும் பார்த்து இருவரும் மாறி மாறி வியந்துக்கொண்டிருக்க மாதவனின் பின்னாலிருந்து அவள் முகம் பார்த்து மனம் படிக்க முயன்ற கண்ணனுக்கு ஏமாற்றமே.

தளர்ந்து போனவனாக சோபாவிலேயே சிலையாய் அமர்ந்திருந்தான் கண்ணன்.  அவர்கள் கிளம்பும் நேரம் வர மெல்ல எழுந்தான் அவன்..

‘வரேன்டா..’ கண்ணனின் தோள் அணைத்து சொல்லிவிட்டு மாதவன் நகர

‘குட் பை கண்ணன்’ அவள் அழுத்தம் திருத்தமாக சொன்ன விதத்தில் சற்றே அதிர்ந்தது கண்ணனின் இதயம்.

‘குட் பை’ என்றால் என்ன அர்த்தமாம்?

                            தொடரும்…..