Thendral’s KandarvaLoga – 29

 

 

கந்தர்வ லோகா – 29

விஷ்வாவிற்கு தன் நெஞ்சை யாரோ ஊசியால் துளைப்பது போல இருந்தது. ‘காலையில் தன்னுடன் காதலால் கலந்தாடிய லோகா எங்கே! இப்போது எவனோ ஒருவனுடன் தன் நினைவே இல்லாமல் அவனுடைய வார்த்தைக்கு கட்டுப்படும் இவள் எங்கே!’

இது தன்னுடைய லோகி தானா என்பது அவனுக்கே சந்தேகம் தான்.

அவனுடைய சிந்தனை ஓட்டம் வேறு எங்கோ செல்ல, மனதை அடக்கி மீண்டும் அவள் கனவுடன்  மூழ்கினான்.

அங்கே அந்த கந்தர்வன் அவளது தோளில் கை போட்டு நின்று கொண்டிருந்தான். அவள் முகம் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் கண்கள் மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

‘அப்ப்ப்பாபா…..! அவன் தான் என்ன அழகு! என்ன மிடுக்கு, கம்பீரம்! இப்படி ஒரு ஆண்மகனை கண்ட எவரும் அவனைத் தவிர வேறு எதையும் சிந்திப்பது கடினம் தான். ‘ விஷ்வாவிற்கு, அவன் பெண்களை மயக்குவது சுலபம் தான் என்பது விளங்கியது.

அவன் லோகாவை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான். அவளும் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்மூடி இருந்தாள்.

 அவளின் மனத்தில் மீண்டும் சஞ்சலம் தோன்றியது. அவளின் எண்ணம் விஷ்வாவை நோக்கி பயணிக்க இருப்பதை அதீந்த்ரியன் உணர்ந்தான்.

அதை உடனடியாகக் கலைக்கும் வகையில் , அவளைத் தூக்கியவாறே அவள் முகத்தை அருகே எடுத்து, அவளின் கழுத்தில் மென்மையாக முகம் புதைத்தான். அவளுக்கு அவன் ஸ்பரிசம் கூச்சமூட்ட, மற்றவை மறந்து விட்டது. அவனது கரங்கள் அவள் முதுகை வருட உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது.

அவன் கழுத்தை மேலும் இறுக்கிக் கொண்டாள்.

அவளை மேலும் தனதாகிக் கொள்ள , அவளது கழுத்தில் தன் காந்த உதடுகளால் முத்தமிட,

அதைக் கண்ட விஷ்வாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ லோகா” என மனதால் கத்தினான்.

அது அவளது மூளையை சென்று அடையாவிட்டாலும் , அதீந்த்ரியனை விட்டு விலக வைத்தது.

சட்டென அவனது கரங்களிலிருந்து விடுபட்டாள். அவனை விட்டு சற்று விலகி நிற்க,

அதீ எரிச்சலுற்றான். இருப்பினும் லோகா தனக்கு வேண்டும் என்ற ஒரே நினைப்பில்,

அவளுக்கு தன்னுடைய காதலை விளக்க எண்ணி மேலும் அவன் கை அவளது இடையைத் தொட்டது.

விஷ்வா அவளை விடாது அழைத்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் தானும் லோகாவும் முத்தமிட்ட நிகழ்வை நினைத்து அவளுக்கும் அந்த உணர்வை ஏற்படுத்த நினைத்தான்.

அந்த எண்ணம் லோகாவை அதீயிடமிருந்து விலக வைத்தது. அவனது கையை தன் இடையிலிருந்து விலக்கினாள். மனம் கலங்கிய குளம் போல ஆனது. தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அதற்கு மேல் அவளைத் தொந்தரவு செய்தால், அவள் ஒரேடியாக விலகக் கூடும் என்று உணர்ந்தான் அதீந்த்ரியன்.

“ லோகாஷி நீ குழம்பற அளவுக்கு எதுவும் இல்லை. நான் என்னைப் பத்தி இப்போ சொல்றேன். “ அவனது மயக்கும் குரலில் அவளிடம் சொல்ல,

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவள் மேல் இருக்கும் காதலைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஒரு புறம் விஷ்வாவும் அவனை செவிமடுக்கிறான் என்று அறிந்தே இருந்தான் அந்த கந்தர்வன்.

 

எதைப் பற்றியும் கவலைப் படாமல், அவளிடம் பேசினான்.

“ உன்னை முதல் முதலில் பார்த்த நாளிலிருந்தே உன்னை நான் நேசிக்கிறேன் லோகாஷி. உனக்கும் எனக்கும் காதல் பந்தம் என்பது நம் விதி. “ அவள் அருகில் அமர்ந்து அவள் கண்களைப் பார்த்து சொல்ல,

அவளுக்கு அவன் சொல்வது எதுவும் புதிதாக இருப்பது போல இல்லை. ஏற்கனவே அவளது மனதில் பதிந்த ஒன்றாய் தோன்றியது.

அவன் மேலும் தொடர்ந்தான்.

“ என் பெயர் அதீந்த்ரியன். நான் ஒரு கந்தர்வன். இந்த பூமியில் இப்போது நான் வந்தது உனக்காகத் தான். உன் சிறு வயது முதலிருந்தே உனக்காக மட்டுமே பல இன்னல்களையும் தாண்டி காத்திருக்கிறேன். உன் காதலை முழுதாகப் பெற துடிக்கிறேன்.

எத்தனையோ முறை நாம் சந்தித்திருக்கிறோம். பல வகையில் உணர்த்தியிருக்கிறேன். நிச்சயம் என்னுடைய காதல் உனக்கு புரிந்திருக்கும்.” அவள் தலை குனிந்து நிலத்தைப் பார்க்க,

அவள் முகத்தை ஒரு கையால் நிமிர்த்தி ,

“ ஹ்ம்ம்??” என்று முகத்தை சாய்த்துப் பார்க்க,

 

அவள் பதில் சொன்னாள்.

“ எனக்கு புரியுது . ஆனால்….” என்ன சொல்வதென்று புரியாமல் தயங்கினாள். அவளுக்கே அவள் நிலைமை புரிந்தால் தானே!

அவளின் தயக்கம் விஷ்வாவிற்கு நன்கு புரிந்தது. அவள் மனதில் தான் இருப்பது அவளுக்கு உணர முடியவில்லை. இப்போது கந்தர்வன்  அவளை மயக்கியிருப்பதால் சொல்லத் தெரியாமல் விழிக்கிறாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவளுக்கு தான் செய்ய வேண்டிய மனோ பயிற்ச்சியும் , உணர்த்த வேண்டிய காதலும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தான்.

தொடர்ந்து அவர்களை கவனிக்க,

“ உன்னுடைய தயக்கத்தை நான் போக்குகிறேன். உன் நினைவால் நான் செய்த உன்னுடைய சிலையை நீ பார்த்தால் இப்படி தயங்க மாட்டாய். “

அவன் சொல்ல, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ என்ன என்னோட சிலையா? நீங்க செஞ்சீங்களா?” விழி விரிக்க,

மெல்ல சிரித்துவிட்டு, “ஆமா! உனக்காக காத்திருந்த நேரங்களில் அதைத் தான் பார்த்து ரசித்துக் கொண்டேன். “

“ நான் பார்க்கணுமே” ஆர்வத்தால் அவனது கையைப் பற்றிக் கொள்ள,

பல்லைக் கடித்தான் விஷ்வா. ‘ நீ என் பொண்டாட்டி டி. கொஞ்சமாவது என்னை உணரு டி’ நெஞ்சு வலித்தது. அவளை இழுத்துக் கொண்டு வரவேண்டும் போல ஆத்திரம் பொங்கியது. என்ன செய்வது கனவாயிற்றே! ஆனால் உணர்வுகள் நிஜம். அதைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“சிலைய பாக்கறாளாம். பெரிய கலா ரசிகை. ஆளப் பாரு. வாண்டு! சின்ன வயசுல நான் உன்ன படுத்தினத்துக்கு சேர்த்து வெச்சு எனக்கு வலிக்க வைக்கற டி. நிஜமா உன்ன வேற ஒருத்தனோட பாக்க முடியல டி.

அவன் பேசறதுக்கு மயங்கிடாத. உன்ன தேவதை மாதிரி நான் பாத்துக்கறேன். அவன விட அதிகமா நான் விரும்பறேன் டி மக்கு. உன்னோட விஷ்வாவ அழ வைக்காத வாண்டு. ப்ளீஸ் மா. “ அவன் அவளுடன் மனதில் பேச,

அவள் எண்ணம் எதுவோ உரைக்க, அடுத்த நொடி அதீந்த்ரியன் மறைந்தான்.

 

கனவிலிருந்து எழுந்தாள் லோகா.

நிம்மதிப் பெருமூச்சு விட்டான் விஷ்வா. ‘ ஏதோ கொஞ்சமாவது புரிஞ்சு வெளில வந்தியே. நான் உன்ன பத்திரமா இதுல இருந்து காப்பாத்தறேன். கவலைப் படாத தங்கம். நிம்மாதியா தூங்கு டா.’ மனதில் சொல்லிக் கொண்டு உறங்கச் சென்றான்.

ஆனால் அவளுக்குத் தான் தவறு செய்த உணர்வு வந்தது. விஷ்வாவுடன் காலையில் தான் அத்தனை நெருக்கமாக இருந்தோம். ஆனால் இவன் கனவில் வந்து தன்னை தொல்லை செய்கிறானே! இவனோடு காதல் செய்ய நான் எவ்வாறு தயாராகினேன்! அவளுக்கு நெஞ்சு வெடிக்கும் அளவு துக்கம் வந்தது.

எழுந்து அமர்ந்து அழத் தொடங்கினாள்.

விஷ்வாவின் படத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.

“ விஷ்வா! நான் வேணும்னு எதுவும் செய்யல டா. எனக்கு ஏன் அவனோட கனவு வருதுன்னு தெரியல! எதையும் என்னால தடுக்க முடியல. நான் உனக்கு துரோகம் பண்ற ஃபீல் வருது விஷ்வா!  ஐ அம் சாரி. ஐ லவ் யூ டா! உன்னை தவிர எனக்கு வேற யாரும் மனசுல இல்லை. நம்பு விஷ்வா! “ அவன் போட்டோவிற்கு முத்தமிட்டு , கண்ணீர் விட்டாள்.

 

எவ்வளவு அழுதும் மனதின் பாரம் குறைய வில்லை. மயக்கமே வந்துவிடும் போல ஆகியது.

தேம்பியபடியே மெல்ல படுத்துக் கொள்ள, கண்கள் அழுத வலியில் தானாக மூடிக் கொள்ள வைத்தது. அப்படியே உறங்கினாள்.

காலையில் முதல் வேலையாக விஷ்வா அவளைப் பார்க்க வந்தான்.

மஞ்சுளா அவனைப் பார்த்து இப்போது விஷமமாகச் சிரிக்க,

‘ ஐயோ இவங்க வேற, என்ன நக்கலா பாக்கறாங்களே! ரொமான்ஸ் பண்ண வந்துட்டேன்னு நினைக்க போறாங்க. என்ன சொல்லி சமாளிக்க??’

“ ஒன்னுமில்ல அத்தை! நேத்து சின்ன சண்ட அதான் கொஞ்சம் வெளில கூட்டிட்டு போலான்னு…” என்று இழுக்க,

“ நான் எதுவுமே கேட்கலையே விஷ்வா. விஷ்வான்னு கூப்பிடலாமா இல்ல உங்க மாமா மாதிரி மாப்பிள்ளைன்னு கூப்பிடனுமா?”

“ அத்தை! நீங்க விஷ்வா ன்னே கூபிடுங்க. மாமா தான் சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாரு. எனக்கே ஓவரா இருக்கு. லோகி எழுந்துட்டாளா?”

 

“ அவருக்கு உன்னை அப்படி கூப்பிட்டா தான் சந்தோஷமாம். சரி விடு. லோகாகும் உனக்கும் சண்டை ன்னு எனக்கு தெரியாது. அதான் அவ இன்னும் எழுந்து வரலையா. நீயே போய் பாரு! நான் காபி எடுத்துட்டு வரேன். “ உள்ளே செல்ல நினைக்க,

அவசரமாக அவரைத் தடுத்தான். “ இல்ல அத்தை ! இப்போ எதுவும் வேண்டாம். “ சொல்லிவிட்டு அவள் அறையை இரண்டிரண்டு படிகளில் தாவி அடைந்தான்.

இவர்களின் செயல்கள்  பெரியவர்களையும் சந்தோஷப் படுத்தியது. எப்போதும் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் மஞ்சுளா.

அவள் அறையை அடைந்ததும் மெதுவாகத் தட்ட, அது தாழ் போடாமல் திறந்து கொண்டது.

உள்ளே சென்று பார்க்க, மெத்தையில் கால்களைக் குறுக்கிக் கொண்டு, கைகளை மடக்கிக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடந்தது அவன் இதயம்.

மெத்தையைச் சுற்றியிருந்த அந்த சாளரத்தை விலக்கி, மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அவளை அனைத்துக் கொண்டு படுத்தான்.

அவள் சற்று சிணுங்கி அவன் மார்பில் வாகாக ஏறிப் படுத்துக் கொண்டாள். அவளை தன்னோடு மென்மையாக அனைத்துக் கொள்ள,

அவன் ஸ்பரிசம் உணர்ந்து, வலியால் இறுகியிருந்த கண்களை மெல்லப் பிரித்து , பாதி மூடிய கண்களில் பார்க்க,

விஷ்வா தான் கண்மூடி படுத்திருந்தான். தன்னவன் என்ற நிம்மதியில் அவன் மேல் கால் போட்டுக் கொண்டு அவனது இடையைக் கட்டிக் கொண்டாள்.

நேற்று இரவின் நினைவு வர , எங்கே அவன் விஷயம் தெரிந்தால் கோபித்துக் கொள்வானோ என்று சிறு பயத்துடன் அவள் உடல் விறைக்க, அதை உணர்ந்தான் விஷ்வா.

அவளை ஆறுதல் படுத்தும் வகையில் தன்னுடைய கால்களை அவள் மேல் போட்டு, பிரண்டு பின்னிக்கொண்டான்.

உடல்கள் ஒட்டி உரச, ரசாயன மாற்றம் ஆரம்பமானது. அவனது மார்பிலிருந்து கழுத்துக்குள் அவள் முகம் புதைய, அவளின் மூச்சுக் காற்றில் தன்னை கரைத்துக் கொண்டான்.

அவனது சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க, அவளது கைகள் அனிச்சையாக அவனது மார்பைத் தொட்டது.

 

அவனோ அவளது கூந்தலை தன் விரல்களால் அளைந்து கொண்டு சிரமப் பட்டு தன்னைக் கட்டுப் படுத்தினான்.

மெதுவாக அவள் காதில், “ லோகி நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல டி, என்னை கெட்டப் பையானாக்காத” என்று முனக,

“ போடா சாமியார்.. இன்னும் என்ன நல்லவன் வேஷம் போடற” என்று கழுத்தைக் கடித்தாள்.

“ஆ….” வலியில் அவன் கத்த, இருவரும் எழுந்து அமர்ந்தனர்.

மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அவனைப் பார்க்க, அவன் தலையணையில் சாய்ந்து இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் அனைத்தையும் சொல்லிவிடும் வேகம் வந்தது.

“ விஷ்வா! நான் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும். நீ பொறுமையா கேளு!” பயந்து கொண்டே சொல்ல,

“எல்லாம் எனக்குத் தெரியும் டி. உன் தப்பு எதுவும் இல்லை” என்று அவளை இழுத்து அனைத்துக் கொள்ள,

அவளுக்கு ஆச்சரியம் !

Comments Here