Puthu Kavithai 22(2)

Puthu Kavithai 22(2)

முதலில் உடனிருந்து அவ்வப்போது பேசிய ஷாலினியும் கூட பார்த்திபனோடு தனக்கு திருமணம் என்ற செய்தியை உரைத்தபோது வெகுவாக கலங்கிய முகத்தை காட்டியது வேறு மதுவை மேலும் கலங்க செய்தது. அவளை பார்த்திபனோடு சேர்த்து வைத்து தான் செய்த அலம்பல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

மனதுக்குள் சொல்ல முடியாத குற்ற உணர்வும் கூட! தான் இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கியிருக்காவிட்டால் ஒருவேளை ஷாலினி பார்த்திபனிடம் காதலை உரைத்திருக்க கூடுமல்லவா!

அதை தான் அல்லவா கெடுத்து குட்டி சுவராக்கி இருப்பது!

ஒருவேளை பார்த்திபனுக்கும் ஷாலினி மேல் எதாவது அபிப்ராயம் இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றியது! அதனால் தான் தன் முகத்தை கூட பார்க்க மறுக்கிறானோ என்றும் தோன்றியது!

சும்மா இருப்பவனின் மனம் சாத்தானின் உலைகளம் என்று சும்மாவா சொன்னார்கள்?

மது தெளிவானவள் தான்… ஆனால் சூழ்நிலை அவளை பல்வேறு விதமாக குழம்ப செய்தது.

அந்த இரவு வேளையில், எதையோ நினைத்தபடி, எதிலும் கவனமே இல்லாமல் தன் மனம் போன போக்கில் சிந்தித்தபடி இருந்தவளை உலுக்கியது அந்த தொலைக்காட்சி செய்தி.

உள்ளே போன மிளகு காரத்தை கூட உணராதபடி செய்திருந்தது.

‘பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்த அமைச்சரின் மகன்’ என்ற தலைப்பில் பிரேக்கிங் நியூஸ் என்று பரபரத்துக் கொண்டிருந்தது.

அதற்கு ஆதாரமாக அவனது செல்பேசி வீடியோ பதிவுகளின் காட்சிகளை மங்க செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்க, அதை அதிர்ச்சியின் விளிம்பில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மற்ற பெண்களிடம் அத்துமீறிக் கொண்டிருந்தான் ரதீஷ், உடன் சஞ்சய்! அனைவர் முகத்தையும்  மறைத்து இருந்தனர் அந்த வீடியோவில். ஆனால் அது ரதீஷும் சஞ்சயும் தான் என்பதில் இவளுக்கு சந்தேகம் இருக்கக் கூடுமா?

கிடையவே கிடையாதே! அது அவர்களே தான்!

சஞ்சயும் ரதீஷும் இவ்வளவு மோசமானவர்களா? தன்னை மட்டும் தான் இது போல நடத்தினான் என்று இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்ததும் கூட பொய்யா? இதுதான் அவர்களது தினப்படி நியமமா?

அந்த பெண்களின் அலறல் சப்தம் அவளை உலுக்கியது.

பார்த்திபன் மட்டும் இல்லையென்றால் தன் கதியும் அது தானே?

இத்தனை செய்துவிட்டு எப்படி தன்னிடம் காதல் வசனங்களை பேசினான் இந்த சஞ்சய் என்று அவளுக்கு புரியவே இல்லை.

தானும் அதை நம்பிக் கொண்டு, அவனை கண்மூடித்தனமாக காதலித்ததெல்லாம் அவளது நினைவில் வந்து அவளை குன்ற செய்தது.

அந்த அலறல் சப்தம் அவளை நடுங்க செய்தது. அவளையும் அறியாமல் அவளது உடல் தடதடத்தது. கண்கள் கலங்கி பார்வை மங்கியது. எழுந்து நின்றவளுக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை.

இரவு ஷிப்டை கண்காணிக்க செல்வதற்காக கிளம்பி வந்த பார்த்திபனின் கண்களில் பிரேக்கிங் நியூசை வெறித்து பார்த்தபடி இருந்த மது கண்ணில் பட்டாள்.

அவள் நடுங்குவதும், அவளது நடுக்கம் எதனால் என்றும் அவனால் உணர முடிந்தது.

அந்த மோசமான சூழ்நிலையை அவள் கடந்து வந்திருக்கிறாள் அல்லவா!

அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்குமே!

மேலாடை கிழிந்த நிலையில் குளியலறையில் தன்னை பூட்டிக் கொண்டு துடித்தபடி கதறிய மது நினைவுக்கு வந்தாள்.

அவசரமாக அவள் அருகில் வந்தவன், நடுக்கத்தில் கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் பார்த்திபன்!

தலையைப் பிடித்துக் கொண்டு முகத்தை மறைத்தவாறு, “டிவிய ஆஃப் பண்ணுங்க… டிவிய ஆஃப் பண்ணுங்க…” என்று கத்த, அவளது சப்தம் கேட்டு சகுந்தலா ஓடி வந்தார்.

பானுமதி அப்போதுதான் வெளியே சென்றிருந்தார்.

பானுமதியோடு வேலையாட்களும் ஓடி வர, ஓடிக் கொண்டிருந்த தொலைகாட்சியை அவசரமாக நிறுத்தி விட்டு, ஆட்களை பார்த்து உள்ளே செல்லும் படி கண்ணைக் காட்டினான் பார்த்திபன். யாருடைய கண்களுக்கும் கருத்துக்களுக்கும் மது விருந்தாக தேவையில்லையே!

அவளோ விடாமல் தலையை பிடித்தபடி கதற, “மது… என்னாச்சும்மா?” என்று அவளது முகத்தை நிமிர்த்த முயன்றான் பார்த்திபன்.

அவன் தானென்று உணராமல், “ஐயோ… என்னை விடு… விடு…” என்று இன்னும் கதற, ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த தாயை அவசரமாக அழைத்தான்.

“கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா…” என்று அவரை விரட்ட, ஸ்மரணை வந்தவர், அவசரமாக ஓடினார்.

“மது… இங்க பாரும்மா…” அவளது கைகளை பிரித்து விட முயல, அவளோ பிடிவாதமாக தலையை இறுக்கமாக பற்றியபடி கதறினாள்.

“வேணா… ப்ளீஸ்… என்னை விட்டுடு… மாமா… அவனை விட சொல்லுங்க…” என்று அவள் அலறிய போது அவனால் அதை தாளவே முடியவில்லை.

“மது… இங்க பாரு… நீ இப்ப நம்ம வீட்ல இருக்க… யூ ஆர் சேஃப்… நான் இருக்கேன்ல…” அவளது கைகளை வலுகட்டாயமாக பிரிக்க முயற்சித்தான் பார்த்திபன். ஆனால் முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக தலையை பிடித்துக் கொண்டு முகத்தை மூடியவாறு கதறியவளை என்ன செய்வது என்று தோன்றவில்லை.

“மது… கொஞ்சம் இங்க பாரு… நான் தான்… அவங்க யாரும் இங்க இல்ல…” என்று பலவாறு கூறினாலும் அவள் சமாதானமாகவில்லை.

அவசரமாக வந்த சகுந்தலாவிடமிருந்து நீரை வாங்கியவன், “மது… இங்க பாரு… தண்ணியக் குடிம்மா…” அவனால் அதற்கும் மேல் சப்தமாக கூறவும் முடியவில்லை. மிரட்டவும் முடியவில்லை. என்னவென்று புரியாமல் வேலையாட்கள் இப்போது விழித்தாலும், கண் காது மூக்கு வைத்து எப்படி வேண்டுமானாலும் வெளியே பரவ வாய்ப்பிருக்கிறதே!

“மதுக்குட்டி… அம்மாச்சி இங்க தான்டா இருக்கேன்… என்ன சாமி ஆச்சு?” சகுந்தலாவும் தவித்தபடி கேட்க, யாருடைய வார்த்தைகளும் அவளது காதில் விழவில்லை.

அந்த பெண்களின் அலறல் சப்தம் மட்டுமே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த பெண்களின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்தவள், அவை அனைத்தும் தனக்கே நடப்பதை போன்ற பிரம்மைக்குள் சென்று விட்டாள். எப்போதும் இருக்கும் மது இப்படிப்பட்டவள் அல்ல. ஆனால் இப்போதிருக்கும் மது, ஒரு மோசமான விபத்திலிருந்து தப்பி வந்தவள், அதன் தாக்கம் அப்போதும் மாறவில்லை.

இப்படி ஒரு சம்பவத்தை தாண்டி வந்தவளுக்கு சுற்றி இருப்பவர்கள் சற்றேனும் ஒரு இடைவெளி கொடுத்திருந்தால் அந்த பிரம்மை தோன்றியிருக்காதோ என்னவோ? ஆனால் அவளது பாதுகாப்புக்கென பெரியவர்கள் நிச்சயித்த திருமணமும் அவளது மன உணர்வுகளோடு விளையாட, அதே நேரத்தில் தொலைக்காட்சியில் அவள் கேட்ட செய்திகளும் சேர்ந்து அவளது மன திடத்தை மொத்தமாக முடக்கிப் போட்டது.

அவளது தவிப்பையும் துடிப்பையும் கதறலையும் கண்டவன், ஒரு முடிவோடு எழுந்தான்.

மதுவை இரு கைகளால் அள்ளி எடுத்தவன், அவளது அறை நோக்கிப் போனான். அவளோ அந்த பிரம்மைக்குள்ளிருந்து வெளியே வர முடியாமலும், தன்னை தூக்கியது பார்த்திபன் தானென உணர தெரியாமலும், கதறியபடி துள்ளினாள். அவள் கீழே விழுந்துவிடாதபடி இறுக்கமாக பிடித்தவன்,

“ம்மா… ரூம் கதவை ஒபன் பண்ணு…” என்று சகுந்தலாவை நோக்கி கூற, அவர் பதட்டத்தோடு மதுவின் அறை கதவை திறந்தார். அவள் வரும் போதெல்லாம் கீழிருக்கும் அறையில் தான் தங்குவது. இப்போதும் அந்த அறையில் தான் இருந்தாள்.

பார்த்திபன் அந்த அறைக்குள் அன்று தான் நுழைந்தான். அவள் தங்க ஆரம்பித்தது முதல் அந்த அறைக்குள் அவன் நுழைந்ததில்லை. ஏனென்று தெரியவில்லை, அவனாக அங்கு போனதே இல்லை. பெரும்பாலும் அவன் கோவையில் இருந்ததால் அதை அவன் பெரிதாக நினைத்துமில்லை.

அவளை கையில் ஏந்தியபடி அறைக்குள் நுழைந்தவன், பெரும்பாடு பட்டு அவளை கட்டுப்படுத்தியபடி, படுக்கையில் கிடத்தினான்.

அப்போதும் அவள், “ஐயோ… என்னை விட்டுடு…” என்று அழுதபடியே அவனை தள்ளிவிட்டு எழுந்து ஓட முயல, பார்த்திபன் அவளது இருபுறமும் கைகளை இறுக்கமாக பற்றியபடி,

“மது…” வெகு அழுத்தமாக அழைக்க, முதன் முறையாக அவளது அரட்டல் குறைந்து கண்கள் ஓரிடத்தில் நிலையாக நின்றது. தன் அருகில் நிற்பது பார்த்திபன் தான் என்பதை அறிந்து சற்று ஆசுவாசமானாள்.

“மது… நான் இருக்கேன்… உன் மாமா உன் கூடத்தான் இருக்கேன். உனக்கு எதாச்சும் ஆக நான் விட்ருவேனா?” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக கூற, உதடு துடித்து முகம் கோவைப்பழமாக சிவந்து, அவனையே பார்த்தவள், அழுகையில் வெடித்தாள்.

“மாமா…” என்று கேவியவளை பார்த்தவனுக்கும் கண்கள் கலங்க பார்த்தது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்,

“ஒன்னுமில்ல மது… நான் இருக்கேன்… நான் உன் கூடவே இருக்கேன்…” என்றவன், படுக்கையில் அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

“பயமா இருக்கு மாமா…” என்று கேவியபடியே அவனது கழுத்தை மது கட்டிக் கொள்ள, அவளை அணைத்துப் பிடித்தபடியே,

“நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்படற மது?” என்று அவளை தடவிக் கொடுக்க, அவனை இன்னுமே இறுக்கிக் கொண்டாள் மது. அவளது நடுக்கத்தை அவன் உணர்ந்தான்.  தண்ணீரை எடுத்துக் கொண்டு அவசரமாக வந்த சகுந்தலா, பார்த்திபனுக்கு அருகில் நீரை வைத்துவிட்டு, அவனிடம் கண்ணைக் காட்டி விட்டு வெளியேறினார்.

இனி பார்த்திபன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி அவருக்குள் வந்தது!

மென்மையாக அவளது தலையை அவன் தடவிக் கொடுக்க, மதுவின் மனதுக்குள் பாதுகாப்பு உணர்வு!

அவனது தோளில் சாய்ந்தபடி கண்களை மூடியவள், அவளையும் அறியாமல் உறங்க ஆரம்பித்தாள்!

குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ!

தலைவன் மடியில் மகளின் வடிவில்

தூங்கும் சேயோ!

error: Content is protected !!