PuthuKavithai 16

அத்தியாயம் 16

அன்று காரமடை தொழிற்சாலையில் மிக முக்கியமான கூட்டம் நடைபெற்றதால் முந்தைய தினம் இரவே சென்னையிலிருந்து கிளம்பியிருந்தான் பார்த்திபன். சகுந்தலாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் முட்டி வலி அதிகமாக இருந்ததால் அவரால் அவனோடு பயணிக்க முடியவில்லை.

சற்று வலி குறைந்ததும் காரமடை வருவதாக அவர் கூறவே அவன் மட்டும் கிளம்பியிருந்தான், ஆயிரம் அறிவுரைகளை மதுவுக்கு கூறிவிட்டு. அந்த அறிவுரைகளை தானே அவள் வெறுப்பதும்!

மதுவை மேடையில் பார்க்க முடியாத சிறு வருத்தமும், ஏமாற்றமும் வினோதகனுக்கும் பானுமதிக்கும் இருந்தாலும் மதுவந்தியின் முடிவு அவர்களுக்கும் பெருமையாகத்தான் இருந்தது, இவ்வளவு தெளிவாக மறுத்துரைப்பவளா தங்கள் மகள் என்ற பெருமிதமான கேள்வியோடு!

“டேய் குட்டி… அதான் சூப்பரா அவங்களுக்கு நோஸ்கட் கொடுத்துட்டியே, அப்புறமும் ஏன் இப்படி மூட் அவுட்டா உட்கார்ந்துட்டு இருக்க? கமான் சியர் அப் பேபி…” என்று வினோதகன் அவளை எழுப்பி தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல, சிறிதாகி விட்ட முகத்தோடு, அவரது கையை எடுத்துவிட்டு,

“ப்பா… புரியுதுப்பா… ஆனா எனக்கு ரிக்கவராக கொஞ்ச நாளாகும்…” என்று மீண்டும் அமர்ந்து கொள்ள,

“ஆமா… இந்த நாசா விஞ்ஞானி அனுப்புன ராக்கெட் மேல பாயாம, கடல்ல குதிச்சுடுச்சாக்கும்? மூஞ்சியை தூக்கி வெச்சுக்கிட்டே இருக்கா… அடச்சீ எந்திரி…” வேடிக்கையாக பார்த்திபன் அவளை எழுப்ப, அவனைப் பார்த்து முறைத்தாள்.

“மாமா… ப்ளீஸ்… உங்களால என்னோட பீலிங்சை புரிஞ்சுக்க முடியாது… என்னை விட்டுடுங்க…” சில மணி நேரங்களுக்கு முன் அவனது தோளில் சாய்ந்துகொண்டு அழுததையும், அவனது புரிதலை அவளையும் அறியாமல் உணர்ந்ததையும் சிறு பிள்ளையாக மறந்து விட்டு மீண்டும் எரிச்சலாக கூறினாள்.

“என்ன மது உன் மாமனால புரிஞ்சுக்க முடியாது? எல்லாருமே உன் வயசை தாண்டி வந்தவங்க தான்… மரியாதையை கைவிடாம பேசு மது…” பானுமதி ஒரு பக்கம் குரல் கொடுக்க,

“மதிக்கா… கொஞ்சம் இரு…” என்று அவரைப் பார்த்து கூறியவன், “மதுப்பாப்பா…” என்று ஆரம்பிக்க, நிமிர்ந்து பார்த்த மதுவின் பார்வையில் டிஎம்டி பார் கொதித்தது.

“நான் பாப்பாவா?” கடுப்பாக அவள் கேட்க,

“இல்லையா பின்ன? இப்படி உட்கார்ந்து மூக்கை உறிஞ்சுட்டு இருந்தா எல்லாருமே உன்னை பாப்பான்னு தான் சொல்வாங்க பாப்பா…” என்று சிரிக்காமல் கூற, எல்லோரும் அவனைப் பின்பற்றி,

“பாப்பா… பாப்பா…. மதுப்பாப்பா…” என்று கிண்டலாக கூற, அவள் காதை மூடிக் கொண்டாள்.

“ம்மா… உன் தம்பியோட சேர்ந்துகிட்டு என்னை நீ கிண்டலடிக்கிறியா?” அந்த நிலையிலும் பானுமதியிடம் மல்லுக்கு நின்றவளை பார்த்து அனைவராலும் சிரிக்கத்தான் முடிந்தது. இதுதான் மது!

சிரித்து முடித்த சகுந்தலா, “மதுக்குட்டி, நாங்க எல்லாருமே உனக்காக தான் இருக்கோம்… என்னோட ஒரே பேத்தி நீ… இந்த பக்கத்துக்கும் சரி, உங்க அப்பா பக்கத்திலும் சரி, நீ தான்டா ராஜகுமாரி… எல்லாத்துக்கும் ஒரே வாரிசு… நீ போய் கலங்கி உக்காரலாமா? நாங்கல்லாம் எதுக்கு கண்ணு இருக்கோம்?” மிகவும் தீவிர முக பாவத்தோடு கூற, பார்த்திபன் அவசரமாக இடையிட்டான்.

“ஹலோ ஹலோ… என்ன? என்னை மறந்துட்டு அத்தனையையும் தூக்கி உன் பேத்தி கைல குடுத்துடுவியா?” வேண்டுமென்றே வம்பிழுத்தவனை பார்த்து கிண்டலாக சிரித்தார்.

“நீ எப்படியும் கல்யாணம் பண்ண போறதில்லை… சாமியாரா போகப் போறதா பேச்சு வருதே பார்த்தி… அதான் என்னோட பேர்ல இருக்கறது எல்லாம் என் பேத்திக்கு மட்டும் தான்…” சிரிக்காமல் அவர் கேலி செய்ய, மற்ற மூவரின் முகத்திலும் அதே கிண்டல் சிரிப்பு. விளையாட்டாக கூறினாலும் அவரது ஆசை அதுதான். அதற்கு கண்டிப்பாக பார்த்திபன் எதுவும் கூறப் போவதில்லை தான். ஆனாலும் வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தான் அவன்.

“அதனால? எல்லாத்தையும் தூக்கி உன் பேத்திக்கு குடுத்துடுவியா?”

“ஆமா… நீ ஒரு கல்யாணம் பண்ணி, பேரனோ பேத்தியோ என் கைல குடுத்துட்டு இப்படி போட்டிக்கு வந்தா பரவால்ல பார்த்தி… ஒண்ணுமே இல்லாம இப்படி போட்டி போட்டா நாங்க என்ன பண்றது?”

“ம்மா… இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… சரி இப்ப ஒன்னும் கெட்டு போய்டல… சக்ரவர்த்தி நம்ம பதிலுக்காக காத்துட்டு தான் இருக்காப்ல… சொல்லிடவா?” என்று சகுந்தலா பார்த்திபனுக்கு கிடுக்கி பிடி போட, என்ன சொல்வது என்று தீவிரமாக ஆராய்ந்தான்.

“ம்மா… ஈஸ்வரமூர்த்தி குத்தகை பணத்தை தந்தாரா? அந்த ஆள் ரொம்ப லேட் பண்றாப்ல… அடுத்த வருஷம் குத்தகையை மாத்தி தந்துடலாமா?” சம்பந்தமே இல்லாமல் கேட்டவனை ஒரு மார்கமாக பார்த்து வைத்தார் சகுந்தலா.

“அந்த ஈஸ்வரமூர்த்திய நான் பார்த்துக்கறேன்… நீ ஒழுங்கா என் கேள்விக்கு பதில் சொல்லு…” என்று அவனுடைய தாய் அவரென்று சகுந்தலா நிருபிக்க, மது இப்போது வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கியிருந்தாள்.

“அம்மாச்சி… மாமாவை பத்தி என்ன நீ நினைச்ச? அவருக்கு எத்தனை ஆஃபர் இருக்கு… எவ்வளவு போட்டி இருக்கு?! நீ என்னடான்னா பொசுக்குனு இப்படி கேக்கறியே?!” பார்த்திபனை கேலியாக பார்த்தபடி, அவள் பங்குக்கு கிண்டல் செய்ய, அவன் கண்களால் எச்சரிக்கை செய்தான், ‘சொல்லிவிடாதே’ என்று!

அவள் பேசியது ஷாலினியை நினைத்துதான் என்றாலும், அஞ்சலியை பற்றிய பேச்சு வந்து விடுமோ என்ற கவலை அவனுக்கு. வெகு வருடங்கள் கழித்து இது போல சேர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தை அஞ்சலியை பற்றி பேசி இன்னொரு முறை கசப்பாக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவன் அவன் தான் என்றாலும், வினோதகனின் மேல் கோபம் இருந்தாலும் இந்த நேரத்தில் அவள் பற்றிய பேச்சு எதற்கு என்ற எண்ணம் அவனுக்கு!

“ஏய் வாண்டு… ஒழுங்கா போய் படுத்து தூங்கு… அதை விட்டுட்டு வெட்டியா பேசிட்டு இருக்க நீ…” அவளை விரட்டப் பார்க்க,

“மாமா… உங்க ரகசியம் வெளிய வந்துடும்ன்னு பயப்படறீங்களா?” கண்ணை சிமிட்டியபடி மது கேட்க, அவனுக்கே அந்த ரகசியம் என்னவென்று புரியவில்லை. ஆனால் மற்றவர்களோ,

“ரகசியமா? அடப்பாவி… பார்த்தி நீயா?” என்று வாயை பிளந்தனர்.

“என்னது ரகசியமா?” அவனும் புரியாத பார்வையோடு கேட்க,

“ம்ம்ம் பின்ன?” என்றவள், தன்னுடைய அம்மாச்சியையும் தாயையும் நோக்கி, “அங்க ஒரு பொண்ணு இவரை பார்த்து உருகோ உருகுன்னு உருகிட்டு இருக்கா… எக்கச்சக்கமா சைட் சீயிங் போயிட்டு இருக்கு… இவரும் க்ரௌநட் பேக்டரியே ஓபன் பண்ணிருக்கார்… இதெல்லாம் தெரியாம நீங்கள்லாம் வெட்டியா இருக்கீங்க…” என்று சிரித்துக் கொண்டே போட்டுக் கொடுத்துவிட, மற்ற மூவரும் கண்களை விரித்து, “அடப்பாவி…” என்று அவனைப் பார்க்க,

“ஏய்… பாப்பா… நான் க்ரௌநட் பேக்டரி ஓபன் பண்ணதை நீ பார்த்தியா? ஏதோ சும்மா பேசினது… அதெல்லாம் ஒரு கணக்கிலேயே வராது…” தன்னுடைய நிலையை விளக்கிவிடத்தான் அவன் முயன்றான். ஆனால் அதிலேயே அவன் மாட்டிக் கொண்டு விட,

“போதுமா? இவரே ஒத்துக்காச்சு… என்ன அம்மாச்சி? உன் பையன் சாமியாராவா போக போறாப்ல?” என்று கேட்டு கண்ணடிக்க,

“பார்த்தி… மதுக்குட்டி சொல்றதெல்லாம் உண்மையா?” சகுந்தலா ஆச்சரியமாக கேட்டார். பின்னே, இப்படி எதாவதாவது செய்தி வந்து அதுவாவது உண்மையாகாதா என்ற ஆசை அவருக்கு. அவரும் தான் என்ன செய்வார்? தன் மகனின் குணம் அறிந்தவராயிற்றே!

ஆனால் அவரும் பானுமதியும் மறந்த விஷயம் என்னவென்றால் எந்த ஆணும் திருமணம் வேண்டாமென்று அவ்வளவு சுலபத்தில் சொல்லி விட போவதில்லை. தான் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்றும் இறுகி இருக்கவும் போவதில்லை. அப்படி இருந்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். நிறைய வலிகளின் தாக்கங்கள் இருக்க வேண்டும்.

காயங்கள் ஆறிவிடலாம். ஆனால் தழும்புகள் மறைய வேண்டுமல்லவா! அந்த தழும்பை மறக்க வேண்டுமென்றால் அதை ஈடு செய்யும் பெண் வேண்டும்… அந்த பெண்ணை பார்க்காத வரை, அவள் அந்த காயத்துக்கு மருந்தாகும் வரை, அந்த ஆண் மாறப் போவதில்லை.

சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவையே விதிகளாவதில்லை!

வியப்பாக கேட்ட தாயை பார்த்து முறைத்தவன், மதுவையும் முறைத்தான்.

“ம்மா… இந்த லூசு சொல்லுதுன்னு நீயும் கேக்கற?” என்றவனை,

“ஹலோ யாரை லூசுன்னு சொல்றீங்க?” மது முறைத்தாள்.

“வேற யாரு? நீதான் லூசு… கொஞ்சமாவது அறிவு இருந்தா, இப்படி ஒரு காசிப்பை பரப்பி விடுவியா? இப்படித்தான் அந்த பொண்ணு கிட்டயும் பேசிட்டு இருக்கியா?” கடுப்பாக மதுவை திட்ட, அவள் இன்னமும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

பானுமதிக்கும் சகுந்தலாவுக்கும் இது சுவாரசியமான விளையாட்டாக இருந்தது. வினோதகன் கண்டுக்கொள்ளவே இல்லை. கண்டுகொண்டால் மீண்டும் பார்த்திபன் தன்னுடைய வளைக்குள் சுருண்டு கொண்டால் என்னாவது என்ற பயம் வேறு. ரத்தம் சூடாக இருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் ஆடி விடலாம். ஆனால் வயதாகும் போது, தெளிவு வரும் தான், தான் செய்த தவறுகளின் வீரியம் புரிகின்றது.

அதிலும் வளர்ந்து நிற்கும் தன் மகள் மதுவந்தியை பார்க்கும் போதெல்லாம் ஒற்றையாக இருக்கும் பார்த்திபனுக்கு தான் செய்தது மிகவும் அநியாயமோ என்று அவ்வப்போது மனம் சாட்டையை எடுத்து விளாசுகிறது.

அப்போது நல்லதாக நினைத்தது, இப்போது இப்படியாகும் என்று அவரும் நினைக்கவே இல்லையே!

அப்போது அவர் தெரிந்து செய்த தவறுகளை அவன் சுலபமாக சமாளித்து விட்டான். ஆனால் அறியாமல் செய்த பிழை இன்று பாவமாகி நிற்கிறதே!

“அவளை ஏன்டா திட்டற? ஒரு ஆர்வத்துல தானே சொல்றா? நீ ஒழுங்கா ஒரு கல்யாணத்தை பண்ணியிருந்தா, நாங்க உன்னை ஏன் கண்டுக்கறோம்? சரி அந்த பொண்ணு யாரு? உனக்கு பிடிச்சுருந்தா எங்களுக்கு எந்த தடங்கலும் இல்லை தம்பி…” என்று சகுந்தலா பார்த்திபனை பிலுபிலுவென்று பிடித்துக் கொள்ள,

“ம்மா… இவ சொல்றான்னு சீரியஸா பேசாதே… அதுவும் இந்த மதுவை போல ஒரு வாண்டு… ரெண்டும் ப்ரெண்ட்ஸ்… சும்மா ஒன்னு ரெண்டு தடவை பேசியிருக்கு… அதுவும் மது விஷயமாத்தான்… அதுக்கு தான் இவ ஓவர் பில்ட் அப் கொடுக்கறா…” என்று விரிவாக விளக்கவும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சப்பென்றாகி விட்டது.

பாவமாக மதுவை பார்க்க, அவளது கண்களில் குறும்புக் கூத்தாடியது.

“அம்மாச்சி… இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்காருன்னு பார்த்துடலாம்… கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகணும்ன்னு நீ தானே சொல்லிருக்க…” என்று சிரிக்க, அவனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“வாலுப் பொண்ணே… ஓடிடு…” என்று அவன் கை ஒங்க, அவள் சிரித்துக் கொண்டே ஓடிப் போனாள் தனது அறைக்கு.

அழுது வடிந்து கொண்டிருந்த மகள், இப்படி சிரித்த முகமாக ஓடுவதை பார்த்த வினோதகனுக்கு மனம் திருப்தியாக இருந்தது. காரணம் பார்த்திபன். அவனை நன்றியாக பார்த்தார். அவனோ அவரது பார்வையை ஏற்கவில்லை.

கடந்த கால கசப்புக்களை மறந்து இப்போது பேசிக்கொண்டிருந்தானே தவிர, அவன் முற்றிலுமாக அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவனது நடத்தையிலேயே தெரிய, வினோதகனுக்கு சற்று சுருக்கென்று தான் இருந்தது.

“பரவால்லை பார்த்தி… கொஞ்சம் தேறிட்டா…” என்று மகிழ்ச்சியோடு பானுமதி கூற, அவனோ கிண்டலாக சிரித்தபடி,

“அக்கா… உன் பொண்ணு இன்னும் நாலு பேரை தேத்திடுவா! அவ்ளோ தெளிவு… நாம தான் கவலைப்பட்டுட்டு இருக்கணும்…” என்று கூற, சகுந்தலா இல்லாத காலரை ஏற்றிவிட்டுக் கொண்டார்.

“பின்ன? யாரோட பேத்தி?!!” என்று சிரிக்க,

“ம்மா… இந்த பெருமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றவன், சற்று யோசிப்பது போல பாவனை செய்து,

“ஊருக்கு போனவுடனே இந்த கிழவியோட கையெழுத்தை முதல்ல வாங்கி வைக்கணும்… விட்டா பேத்தி பேத்தின்னு எல்லாத்தையும் அவளுக்கே குடுத்துடும்…” சப்தமாக அவன் யோசிக்க, ‘அடப்பாவி’ என்பது போல சகுந்தலாவும், பானுமதியும் வாய் மேல் கை வைத்துக் கொண்டனர்.

இரவு நடந்ததை நினைத்து பார்த்தவனுக்கு அந்த கூட்டத்தின் நடுவிலும் புன்னகை மலர்ந்தது.

தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான கூட்டம் அது!

சுமார் ஐம்பதாயிரம் டன் வருட உற்பத்தியை இரண்டு பங்காக பெருக்குவதற்காக மாவட்ட நிர்வாகத்திடமும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமும் சம்மதம் பெறுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம். எப்படியிருந்தாலும் பணம் தான் பேசும் என்றாலும், பெயரளவிற்கு ஒரு கூட்டத்தை நடத்தி மினிட்சை ஒப்படைக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாயிற்றே!

டிஎம்டி கம்பிகள் மட்டுமல்லாது, இரும்பு பெல்லட்ஸும், இரும்பு குண்டுகளையும் முக்கியமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது அந்த தொழிற்சாலை.

இரும்பு பெல்லட்களை பவுண்டரிகளில் காஸ்டிங் செய்யவும், இரும்பு குண்டுகள் பெரும்பாலும் கியர்கள், பேரிங்குகள் செய்வதற்கும் பயன்படும்… கியர் என்றால் சிறு கியர்கள் முதல் ராட்சச இயந்திரங்களை இயக்கும் ராட்சச கியர்களும் கூட அடங்கும்.

பெருமளவில் நீர் உபயோகம் இருப்பதால், சுற்றுசூழல் அதிகாரிகளிடம் கண்டிப்பாக ஒப்புதல் பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உண்டு. அதோடு மிக சூடான நீரை வெளிவிட வேண்டிய அவசியமும் இருப்பதால், சூழலை பாதிக்காத அளவு அந்த நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயமும் உண்டு.

அருகில் உள்ள மனிதர்கள், உயிரினங்கள், பசுமைக்கும் எந்த தீங்கும் வராது என்பதை அவர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.

கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“சுமார் எவ்வளவு இன்வஸ்ட் செய்யலாம்ன்னு இருக்கீங்க பார்த்திபன்?” போரடித்த மினிட்ஸ் கூட்டத்தின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, அந்த இளம் ஆட்சியர் பார்த்திபனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

அவள், அதாவது நந்தினிக்கு சுமார் முப்பது வயதுக்குள் இருக்கலாம் என்பது பார்த்திபனின் ஊகம். அந்த வாரத்தில் தான் கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தாள். தோற்றம் வெகு அழகு ப்ளஸ் நேர்த்தி. நெற்றி வகிட்டில் குங்குமமும், கழுத்தில் முகப்பு வைத்த தாலியையும் தவிர வேறேதும் ஸ்பெஷல் அலங்காரங்கள் எதுவுமில்லை. ஹைநெக் ப்லௌஸ், கஞ்சியிட்ட காட்டன் புடவை, இறுக்கமாக பின்னலிடப்பட்ட கூந்தலென கம்பீரமான அழகு. வட இந்திய சாயல் இருந்தாலும் தமிழ் தான் பேசினாள், அதுவும் அவ்வளவு அழகான தமிழ்!

“ஒரு பைவ் சி ப்ளான் பண்ணிருக்கேன் மேடம்… செலவு எவ்வளவு இழுக்குதுன்னு பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா போடலாம்…” மரியாதையாகக் கூறியவன், “நீங்க தமிழா? இல்லைன்னா நார்த்தா?”

பொது அறிவுக் கேள்வியாகத்தான் அவன் கேட்டதே! நந்தினி சிரித்துக் கொண்டே, “என்னங்க? நம்மூர் தமிழைக் கூட கண்டுபிடிக்க முடியலையா? நான் கரூருங்க…” என்று அதே புன்சிரிப்போடு கூற, பார்த்திபன் ஆச்சரியத்துடன், “அட… நம்மூர் பொண்ணா நீங்க?” என்றவன்,

“அதான் அறிவுக்களை தாண்டவமாடுதா?” என்று நகைச்சுவையாகக் கேட்க,

“ஆஹா… இதை அப்படியே எங்க வீட்ல அவுங்க இருக்கும் போது சொல்லுங்க… அப்பவாவது நமக்கு மேல் மாடில சரக்கு இருக்கறதா ஒத்துக்கட்டும்…” என்று கிண்டலாக அவள் கூற, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மாவட்டத்துக்கே ஆட்சியர் தான் என்றாலும் சராசரி பெண்களை போல கணவனிடம் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறாரே என்று நினைத்துக் கொண்டான். அதை அவன் வெளிப்படுவில்லை.

“வீட்ல என்ன பண்றாங்க?”

“சக்தி… சக்திவேல்… பிசினெஸ் பண்றாங்க… ரீட்டெயிலிங்க்… செய்யின் ஆப் ஸ்டோர்ஸ்…” என்றவள், அந்த பிரபலமான ரீட்டெயில் செயின் பெயரைக் கூற,

“அட அவங்களா? மேடம் பெரிய ஆளுங்க தான்…” வந்த காரியத்தை விட்டு அரட்டையில் இறங்கினாலும் அவ்வப்போது கூட்டத்தில் நடப்பவற்றை நந்தினி தானாக கிரகித்துக் கொண்டுதான் இருந்தாள்.

“அடடா…” என்று சிரித்தவள், “அதை நீங்க சொல்றீங்களா?” என்று சிரித்து விட்டு, சற்று சீரியசான மோடுக்கு போனவள், “என்னங்க பெரியவங்க, சின்னவங்க? எல்லாம் சில காலம் தான்… இல்லையா?” என்று தத்துவார்த்தமாக கூறினாள். நந்தினி சட்டென்று இந்தளவு யாருடனும் பேசிவிட மாட்டாள். பார்த்திபனை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாள். அதோடு அவனது கண்களில் தெரிந்த நேர்மையும் தெளிவும் அவளை நட்பு பாராட்ட சொன்னது.

“கண்டிப்பாங்க… நீங்க சொல்றது உண்மை தான்… எதுவானாலும் சில காலம் தான்… இன்னைக்கு என்கிட்டே இருக்கறது, நாளைக்கே உங்க கிட்ட வரலாம்…” என்று பொதுவாக அவன் சொல்ல, அது அவளுக்கென்றே கூறியதை போலத்தான் இருந்தது.

ஆரம்பத்தில் சித்ரா காதலித்த சக்தி எப்படி தன்னுடையவனானான் என்பதையே அவள் இப்போது வரை புரிந்து கொள்ளவில்லையே! ஆனாலும் அவன் தான் இப்போது அவளது உயிர் அல்லவா!

அழகான இரண்டு குழந்தைகளும், அவளது செல்ல சக்தியும் மட்டுமே அவளது சுவாசம். ஐஏஎஸ் என்ற இந்த மூன்றெழுத்தை அடைய, அவளைக் காட்டிலும் பிரயத்தனப்பட்டவன் தன் சரி பாதி என்பதில் அவ்வளவு பெருமை அவளுக்கு.

சக்திவேலை பற்றி நினைக்கும் போதே அவளது முகம் மென்மையானது. புன்னகையை பூசிக் கொண்டது. ஆமென்று தலையாட்டிக் கொண்டாள்.

சற்று நேர மௌனத்துக்குப் பின், “உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டேன் பார்த்திபன்…” என்று அவள் நிறுத்திவிட்டு அவனது முகத்தை தீர்க்கமாகப் பார்த்தாள்.

என்னவென்ற கேள்வியோடு நந்தினியை பார்த்தான் பார்த்திபன். எதையோ அவள் கேட்க விழைகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

“எனக்கு ஒரு ஆப்ளிகேஷன் இருக்கு…” என்றவள், “நான் இங்க கோவைல ரெண்டு இல்லைன்னா மூணு வருஷம் இருக்கலாம்… ஆனா நான் போகற ஒவ்வொரு இடத்துலையுமே கொஞ்சம் அர்த்தமுள்ள வேலைகளை செய்யனும்ன்னு நினைக்கறேன்… முக்கியமா லேடீசுக்கு…” என்றவள் நிறுத்த, பார்த்திபன் அவளை ஆச்சரியப் பார்வை பார்த்தான்.

“என்ன செய்யறதுன்னு மட்டும் சொல்லுங்க மேடம்… செஞ்சுடலாம்…” அவள் கூற வருவது புரிந்து அவள் கேட்கும் முன்பே அவன் ஒப்புதலைக் கூறிவிட, இப்போது ஆச்சரியமாகப் பார்ப்பது நந்தினியின் முறையாயிற்று.

“நான் என்ன சொல்ல வரேன்னு சொல்றதுக்குள்ள ஓகே சொல்லீட்டீங்களே…” என்று அவள் புன்னகையோடு கேட்க,

“நீங்க செய்ய நினைக்கறது சேவை மேடம்… அதை நீங்க கேட்டுத்தான் நான் செய்யனுமா? இல்லையே… எனக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கே…” என்று அவனும் பதிலுக்கு புன்னகையோடு கூற,

“நான் ஏதாவது எடக்குமடக்கா கேட்டு இருக்கணும்…” என்று சற்று விளையாட்டாக கூற,

“நீங்களா? கண்டிப்பா மாட்டீங்க… உங்க கண்ல உண்மை இருக்கு… செயல்ல நேர்மை இருக்கு… மனுஷங்களை பிரிச்சு பார்க்க தெரியாட்டி இத்தனை பேரை கட்டி மேய்க்க முடியாது மேடம்…” என்று அவன் சிரித்தான்.

இது சக்தி எப்போதும் கூறுவது அல்லவா! ‘கிரேட் மென் திங்க்ஸ் அலைக்’ என்பது சரிதான் போல! பாராட்டுதலாக விழி உயர்ந்தது.

“என்னோட அம்மாவும் அக்காவும் தான் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் பார்த்துக்குவாங்க… அவங்களை இதுல என்கேஜ் பண்ணி விடறேன்… நீங்க என்ன செய்யனும்ன்னு நினைக்கறீங்களோ செய்ங்க…” என்றவனை மெச்சுதலாகப் பார்த்தாள்.

“இதை நானே செய்யலாம்… சக்தி கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க… ஆனா ஒவ்வொரு இடத்திலையும் என்னால கடைசி வரைக்கும் மானிட்டர் பண்ண முடியாது… அதுக்காக ஒவ்வொரு ஊர்லையும் உங்களை மாதிரி கொஞ்சம் பேரை ஆர்கனைஸ் பண்ணனும்ன்னு பார்க்கறேன்…” என்று சற்று அவள் விளக்க,,

“நல்ல இன்டஷன் மேடம்… கண்டிப்பா செய்ங்க… நாங்கள்லாம் இருக்கோம்…” என்று தைரியம் கொடுக்க, பேச்சு வளர்ந்து கொண்டே அவனது தொழிற்சாலையை பற்றியும் நாட்டு நடப்பை பற்றியுமாகப் போனது.

கௌரவக் கொலையால் பாதிக்கப்பட்ட அவளுடைய தோழிகளை நினைத்துப் பார்த்தாள். முக்கியமாக அவர்களை போன்றவர்களை மீட்டெடுப்பது முக்கியமான விஷயமாகப் பட்டது. கல்வியும் பொருளாதார சுதந்திரமும் இதுபோன்ற கொடுமைகளை கண்டிப்பாக தடுக்குமென அவளுடைய மனதுக்கு பட்டது.

அவளது மனம் கௌரவக் கொலைகளை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. எத்தனையோ சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட நமது சமூகத்தை சீர்த்திருத்துவதும் அவளது குறிக்கோளில்லை. தன்னால் முடிந்தளவு சமூகத்துக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமையென்று தான் நினைத்தாள். ஆட்சியராக இருப்பது என்பது வேறு… அரசாங்கத்தின் வரம்பிற்கு உட்பட்டு, அனுமதி பெற்று செய்வதென்பது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல!

இதை அவளது தனிப்பட்ட முன்னெடுப்பாக செய்யவே விரும்பினாள். கரூரிலிருந்த வரை சற்று முயன்று பார்த்திருந்தாள். அதற்குள் கோவைக்கு மாற்றலாகிவிட்டதால் முழுமையாக செய்ய முடியாதது அவளது மனதில் ஒரு குறையாகவே தங்கி விட்டது. அதனால் தானோ என்னவோ இங்கு வந்த ஒரு வாரத்திலேயே சிலபல அடிகள் எடுத்து வைக்க ஆரம்பித்து இருந்தாள்.

“உங்களை மாதிரி இன்னும் நாலு பேர் கிடைச்சா போதுங்க… நிறைய விஷயம் செய்யலாம்…” அவள் கூறியது உண்மைதான். இந்த மனம் இல்லாமல் தான் நமது சமூகம் சீழ் பிடித்து புரையோடி போயிருக்கிறது.

அரசியல் என்பது தீண்டத்தகாதது இல்லை என்பதை மக்களும், படித்த இளைஞர்களும் புரிந்துக் கொண்டு, அதில் ஈடுபடாத வரை, மக்களுக்கு விடியல் என்பது எட்டாக்கனி தான் அல்லவா!

‘திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது’ என்பது எந்த காலத்துக்கு பொருத்தமோ, இன்று அவ்வளவு பொருந்தி போகிறது. மக்களின் நலன் மேல் அக்கறையில்லாத அரசாங்கம், தன்னுடைய நலனை மட்டுமே நாடும் ஆட்சியாளர்கள், இதற்கு நடுவே மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல மக்களுக்கு அத்தனை பக்கமும் இருந்து வாட்டியெடுக்க காத்திருக்கும் பிரச்சனைகள், பாவம் தான் மக்கள் என்று தான் அவளுக்கு தோன்றுகின்றது.

தான் கொண்ட அதிகாரி எனும் முகமூடி அவளது இந்த எண்ணங்களை திரையிட்டு மறைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எவ்வளவு தூரத்திற்கு மறைக்க முடியும்?

அவள் கூறியதை கேட்டு புன்னகைத்தவன், “உண்பது நாழி… உடுப்பது இரண்டே… உறைவிடம் ஒன்றே… மற்றது எதுவும் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்… ஆனா நமக்குன்னு இருக்க சமூக கடமையை மறக்கக் கூடாதுன்னு நினைக்கறேன்…” என்று இயல்பாகக் கூறக் கேட்டுப் புன்னகைத்தாள்!

“ஐ அப்ரிஷியேட் இட் பார்த்திபன்… ஒரு கேப்பிடலிஸ்ட், கம்யுனிசம் பேசறது பெரிய விஷயம்…” மனமுவந்து கூற,

“இது கம்யுனிசம் இல்லம்மா… ஹியுமானிசம்… மனுஷனா இருக்க குறைந்தபட்சமான தகுதி…” என்று புன்னகையோடு கூறும் போதே பார்த்திபனின் செல்பேசி அழைத்தது.

ஷாலினி தான் அழைத்திருந்தாள்!

“ஜஸ்ட் எ மினிட்” என்று நந்தினியிடம் கூறியவன், “சொல்லும்மா ஷாலினி…” சற்றே ஒரு வகையான  ஒதுக்கம் வந்திருந்தது, ‘எல்லாம் இந்த மதுவினால்…’ என்று உள்ளுக்குள் கடுப்பாக இருந்தது.

“பார்த்திபன்… ஒரு முக்கியமான விஷயம்…” அவளது குரலில் ஏனோ ஒரு அவசரத்தன்மை.

“என்னம்மா?”

“இங்க ஷிவானி கொஞ்சம் பிரச்சனையை இழுத்துவிட போறா மாதிரி இருக்கு…”

“என்னம்மா சொல்ற நீ? எங்க இருக்க?” சட்டென பதட்டம் வந்து அவனது குரலில் ஒட்டிக் கொண்டது.

“நாங்க ரெண்டு பேர் மட்டும் ஆம்ஃபா ஸ்கை வாக் வந்தோம்… ரெண்டு பேருக்குமே கொஞ்சம் சேஞ்ச் வேணும்ன்னு… அன்எக்ஸ்பெக்ட்டடா ஷிவானி வந்தா… வந்தவ, கிட்டத்தட்ட ஒன் ஹவரா ஆர்கியு பண்ணிட்டு இருக்கா, மதுகிட்ட!” என்று கூறவும்,

“என்ன விஷயமா ஷாலினி?” கடினமாக அவன் கேட்க,

“திரும்ப சஞ்சுவோட இவ ரீயுனிட் ஆகணுமாம்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,

“ஷிவானி… திரும்ப திரும்ப அதே விஷயத்தை பேசாதே… உன்னோட ஆசை நிறைவேறிடுச்சு இல்லையா… கிளம்பு… உன்னோட ஸ்பான்சர்ஸ் வெய்ட் பண்ணுவாங்க…” சற்று குரலை உயர்த்தி மது பேசுவதும் காதில் விழுந்தது.

“மது… கடைசியா ஒரே ஒரு விஷயம் சொல்லனும்ன்னு நினைக்கறேன்… நீ இல்லைன்னா சஞ்சு செத்துடுவான்… அந்தளவு உன்னை லவ் பண்றான்… சும்மா மிரட்ட அவன் அதை சொல்லலை… ஹீ மீன்ஸ் இட்… அப்புறம் உன்னுடைய இஷ்டம்…” என்று அவள் முடிக்க, மது மௌனமாகியதும் கேட்டது.

ஷாலினியும் எதுவும் பேசாமல், அவர்களது விவாதத்தை பார்த்திபன் கேட்கட்டும் என்று லைனிலேயே இருந்தாள்.

சற்று நேர மௌனத்துக்குப் பின்,

“ஓகே ஷிவானி… நான் வர்றேன்… ஆனா அவனுக்கும் எனக்கும் இனிமே ஒன்னும் இல்லைன்னு சொல்லத்தான் வர்றேன்…” என்று அவள் கூற, ஷிவானி மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தாள்.

ஆனால் கண்களில் ஒரு குரூர வெற்றி சிரிப்பு மிளிர்ந்தது.

“தேங்க்ஸ்… தேங்க்ஸ் எ லாட் மது…” என்று அவள் மகிழ்ந்தது வெளிப்பார்வைக்கு என்பது பார்த்திபனுக்கு தெரியுமா? அல்லது அதை கவனிக்காமல் செல்பேசியில் கவனம் வைத்திருந்த ஷாலினி தான் அறிவாளா? இது எதையும் அறியாமல் தலைக்கு கையை முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்த மதுவுக்கு தெரியுமா, சஞ்சுவை பார்க்க இருக்கும் அந்த நாளோடு அவளது  வாழ்க்கை தலைகீழாகப் போகிறது என்று!

முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ??

error: Content is protected !!