அத்தியாயம் 17
மெளனமாக காலை உணவை அளந்து கொண்டிருந்தாள் மது.
மனதுக்குள் எக்கச்சக்க குழப்பம். போவதா வேண்டாமா என்ற குழப்பம். அதுவுமில்லாமல் பார்த்திபனிடம் எதுவும் கூறவில்லை. ஷிவானி பேசியதைப் பற்றி ஏன் தன்னால் அவனிடம் பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை என்பதை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
வேண்டாமென்று முடித்து விட்டு முற்றுப்புள்ளியிட்ட பின், மீண்டும் காற்புள்ளியிட்டு தொடர அவளுக்கு பிரியமில்லை தான். ஆனாலும் பழகி விட்ட மனம் ஏனோ தவித்தது.
சஞ்சயா இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான் என்ற தவிப்பு! சிறிது காலமென்றாலும் அவனை நேசித்து இருக்கிறாளே! எப்படி சட்டென மனதை ஒரேடியாக மாற்றிக்கொள்ள முடியும் என்று தனக்குத் தானே வாதம் செய்து கொண்டிருந்தாள்.
தட்டில் நெய்ப் புட்டு ஆறிக் கொண்டிருந்தது. தொட்டுக் கொள்ள கடலைக் கறி. தேவாம்ரிதமாகத் தான் இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் இறங்கவில்லை.
தாயும் ஏதோ கூட்டமென்று வெளியே சென்று விட்டார். தந்தை எப்போதும் போல காலையிலேயே கிளம்பி சென்று விட, ஒற்றையாக அமர்ந்துக் கொண்டு எதை உண்பது என்று வேறு சோர்வாக இருந்தது.
“பாப்பா… இன்னும் கொஞ்சம் புட்டு கொண்டு வரட்டா?” சமையல் செய்யும் வாசுகி கேட்க, “இல்லக்கா வேண்டாம்…” என்றவள், “கம்பங்கூழ் இருக்குமே?” என்று கேட்க,
“இருக்கு பாப்பா… அம்மாவுக்கு செஞ்சது…” என்று வாசுகி கூற,
“அதையே ஒரு கப் கொடுக்கா… புட்டு சாப்பிட பிடிக்கல…” என்றவள் தட்டை தள்ளி வைத்தாள்.
பானுமதிக்கு எப்போதும் இந்த கூழ் வகைகளில் ஏதேனும் ஒன்று காலையில் இருக்க வேண்டும். பெரும்பாலும் அவரது காலை உணவு அது மட்டும் தான். பாரம்பரிய உணவின் மேல் பெரும் விருப்பம் வைத்திருப்பவர் அவர். அவரது பழக்கம் தான் மதுவுக்கும். அந்த உணவுகளை விரும்பாதவர் வினோதகன் மட்டுமே. அவருக்காக தனியாக இட்டிலி, பொங்கல், பூரி என்று தனியாக தயார் செய்யச் சொல்லிவிடுவார் என்றாலும், அவரையும் பாரம்பரிய உணவு வகைகளை உண்ண வைக்க எப்போதும் பிடிவாதம் பிடிப்பதுண்டு.
“ம்மா… அப்பாவுக்குத் தான் இதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே… ஏம்மா அவரை போட்டு இவ்வளவு கொடுமை பண்ற?” என்று ஒருமுறை வேடிக்கையாக மது கேட்க,
“அப்படி கேளு மதுக்குட்டி…” என்று அவளுக்கு ஹைஃபை கொடுத்தார் அவளது தந்தை.
கையில் கம்பங்கூழை வைத்துக் கொண்டு வினோதகனை கெஞ்சிக்கொண்டிருந்தவர், இவள் பக்கம் திரும்பி,
“பிடிக்கலைன்னா அப்படியே விட்டுட முடியுமா மது? உடம்புக்கு நல்லதுன்னா ஏத்துக்கத் தானே வேணும்…” என்று சீரியசாகவே கூறினார்.
“இதை சாப்பிட்டு தான் நான் நூறு வயசு வாழனும்னா எனக்கு அவ்வளவு வயசே வேண்டாம் தாயீ… என்னை உட்டுடு… நான் ஏதோ அறுபதோ எழுபதோ, நல்லா ருசியா சாப்பிட்டு இருந்துட்டு போறேனே…” என்று எப்போதும் போல அன்றும் வினோதகன் புலம்ப, மது சிரித்துவிட்டாள். பானுமதியோ அவரை முறைத்தவர்,
“உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா? அச்சானியமாவேத்தான் எப்ப பார்த்தாலும் பேசுவீங்களா?” என்று கோபித்துக் கொள்ள, மனைவியை கெஞ்சி கொஞ்சி தாஜா செய்து கொண்டிருந்தார் அவளது தந்தை.
அவர் இது போல கெஞ்சி கொஞ்சும் சம்பவங்கள் நாளுக்கொருமுறை நடக்கும் என்பதால் மது புன்னகைத்துக் கொண்டாள். அவளது ஹீரோ வினோதகன் தான் என்பது போல, ஆதர்ச நாயகி தன்னுடைய தாய் தான்.
இருவருக்குமே வீட்டில் இருக்கும் சந்தர்ப்பம் குறைவு என்றாலும் இருக்கும் சமயமெல்லாம் இது போல அழகான சண்டைகளுக்கும், ஊடல்களுக்கும், கால் வாரல்களுக்கும் குறைவே இராது. தனது பெற்றோரை ரசித்துப் பார்க்கும் போதெல்லாம் அவளது மனக்கண்ணில் இது போன்ற புரிதலோடும் காதலோடும் கூடிய காதலன் நிழலாடுவான்.
சஞ்சுவை பார்க்கும் முன் இருந்த நிழலுருவம், அவனை நேசிக்கத் துவங்கியதிலிருந்து அவனுருவமாகவே மனதுக்குள் பதிந்து இருந்தது.
அவனிடம் பெரும்பாலும் காட்டிக்கொள்ள மாட்டாளே தவிர, மனதுக்குள் அவ்வளவு ஆசை வைத்திருந்தாள் அவன் மீது.
மாடர்ன் உடைகளை அணியலாம், முற்போக்காக இருக்கலாம், பெண் விடுதலை குறித்தும் பேசலாம், ஆனால் காதலென்று வரும் போது ஏன் இந்த பெண்கள் பிற்போக்குத்தனமாகவே யோசிக்கின்றனர் என்று நிறைய முறை விவாதிக்க நேர்ந்திருக்கிறது, அவளது தாயிடம், அவரைப் பற்றியே!
ஆனால் உணர்வுகள் அனைவருக்கும் ஒன்றுதான் போல!
ஆனால் அந்த உணர்வுகளை எல்லாம் காலில் மிதித்து விட்டு அவன் அந்த ப்ரோபோசலை சொல்லும் போது உள்ளுக்குள் லட்சம் முறை இறந்திருப்பாள், அவ்வளவு வலி!
காதலித்தவனே இன்னொருவனிடம் தன்னை விட்டுக் கொடுக்க முயல்கிறானே என்ற அந்த ஒற்றைப் புள்ளி, அவளது மனதுக்குள் மிகப் பெரிய வெறுமையை தோற்றுவித்து இருந்தது.
அவனது சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு வெறியே எழுந்தது.
கண்ணியத்தை விட்டுக் கொடுத்து காதலை வாங்க வேண்டுமா? என்ன மூடத்தனம் இது?
வெளியே ஹாரன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.
‘ஷிவானிதான் வந்திருப்பாள் போல’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு, இன்னும் ஷாலினியை காணாதது சற்று பதட்டத்தைக் கொடுத்தது.
செல்பேசியை எடுத்தவள், ஷாலினிக்கு அழைத்து, “ஷால்… அவ வந்துட்டா போல… இன்னும் எவ்வளவு நேரமாகும் உனக்கு?” என்று கேட்க,
“ஏய் இங்க ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்டி… காரை நகர்த்தவே முடில…” என்று பாவமாகக் கூற,
“அடிப்பாவி… உன்னை நம்பிதானே இருந்தேன்… இப்ப நான் என்ன பண்ணட்டும்? தனியா போக கொஞ்சம் ஏதோ மாதிரி இருக்கு ஷால்…” அவளது மனம் ஏனோ ஒருமாதிரியாகவே இருந்தது.
“டோன்ட் ஒர்ரி மது… நீ அவ கூட போயிட்டு இரு… நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்… ஆக்சுவலா எங்க போற அவளோட?” என்று கேட்க,
“ஷிவானியோட ப்ரென்ட் வீட்ல சஞ்சு வெய்ட் பண்றதா சொன்னா…”
“பேசாம ரெகுலர் ஸ்பாட்டுக்கே வர சொல்ல வேண்டியதுதானே?”
“ப்ச்… பரவால்ல விடு ஷால்… எப்படியோ ஒன்ஸ் ஃபார் ஆல் குட் பை சொல்ல போறோம்… அவ்வளவுதானே…” சற்று அலட்சியமாகத்தான் இருந்தாள்.
“பீ கேர்புல் மது… டேக் கேர்… அவளை, அவ ப்ரென்ட் வீட்டு அட்ரெஸ வாட்ஸ்அப் பண்ண சொல்லு…” என்று முடிக்க,
“சரி சீக்கிரம் வந்துடு…” என்று கூறிவிட்டு செல்பேசியை வைத்தவள், வாசுகியை அழைத்து, “அக்கா… கொஞ்சம் வெளிய போறேன்… அம்மா கேட்டா சொல்லிடுங்க…” என்று கிளம்பினாள்.
அவளுக்காக காத்திருந்தது விதியா? சதியா?
*****
இறுகிய முகத்தோடு சஞ்சய்யின் முன் அமர்ந்திருந்தாள் மது. அந்த ரிசார்ட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்த ஷிவானி, தனக்கு வேலை இருக்கிறதென கிளம்பியபோது மதுவுக்கு அவளையும் அறியாமல் மனம் திக்கென்று இருந்தது.
முதலில் ஷிவானியின் வீட்டிற்கு அழைத்துப் போவதாகக் கூறித்தான் மதுவை அவள் சம்மதிக்க வைத்ததே! ஆனால் அவளது வீட்டிற்கு செல்லாமல் வேறு பாதையில் கார் செல்வதை பார்த்து,
“ஷிவா… எங்க போற நீ? இது உன் வீட்டுக்கு போற பாதை இல்லையே…”
“இல்ல மது… ஆக்சுவலா உன்னை என் வீட்டுக்குத் தான் கூட்டிட்டு போலாம்ன்னு இருந்தேன்… ஆனா அன்பார்ச்சுநெட்லி என்னோட அங்கிள் வந்துட்டாங்க… நீங்க ப்ரீயா பேச முடியாது… அதான் ஈஸிஆர் ரிசார்ட்டுக்கு உன்னை கூட்டிட்டு வரேன்னு சஞ்சுகிட்ட சொல்லிருக்கேன்… அவனும் அங்க வெய்ட் பண்ணுவான்….” மிகவும் சாதாரணம் போல அவள் கூற, மதுவுடைய கோபம் எல்லை மீறியது.
“அறிவிருக்கா ஷிவா உனக்கு? நீயா முடிவு பண்ணிப்பியா? என்னை ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?” கோபத்தில் கொதித்து கொட்டினாள் வார்த்தைகளை!
“ஹேய் இதுல என்ன பர்மிஷன் கேட்கறது? நாம எப்பவும் போற ரிசார்ட் தானே? அதான் அங்க ப்ளான் பண்ணேன்… நீ இப்படி புதுசா குதிப்பன்னு தெரிஞ்சு இருந்தா உன்கிட்ட இன்பார்ம் பண்ணி இருப்பேன் மது…” ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டே மதுவை அவளறியாமல் வளைத்தாள் ஷிவானி.
“ஆனாலும் நீ என்கிட்டே சொல்லிருக்கணும் ஷிவா… வரணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு பண்ணனும்…” கடினமானக் குரலில் அவள் கூற,
“என்ன மது… என்னை நம்ப மாட்டியா?”
“போன வாரம் வரைக்கும் உன்னை நம்பினேன் ஷிவா… இப்ப இல்ல…”
“இப்ப மட்டும் என்ன ஆகிடுச்சு மது?”
“இப்ப நீ மிஸ் சென்னை… அதுக்காக நீ கொடுத்த விலை… அது தப்பு… எனக்கு உன்மேல இருந்த அபிப்ராயம் போய்டுச்சு…” கசப்பாக அவள் கூற,
“உனக்கு புத்திசாலித்தனம் போறலை மது… நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்… அவ்வளவுதான்… அதுக்காக நான் கெட்ட பொண்ணு இல்லையே…” குரல் ஒருமாதிரி வலித்து வெளிவர, அதை உணர்ந்த மதுவுக்கும் என்னவோ போல இருந்தது. அவளை ரொம்பவும் காயப்படுத்துகிறோமோ என்ற உணர்வு.
“எனக்கு அந்த புத்திசாலித்தனம் வேண்டாம் ஷிவ்…”
“எனக்கு வேணுமே மது… மோஸ்ட் டிசர்விங் பர்சன் நீ… உன்னைத் தாண்டி அது என்கிட்டே வருதுன்னா அதை நான் யூஸ் பண்ணிக்க வேண்டாமா?”
அவள் கேட்பதும் ஏனோ நியாயமாகத் தோன்றியது.
“அதுக்காக இந்த வழியை நீ சூஸ் பண்ணினது பெரிய முட்டாள்தனம் இல்லையா? நம்ம லைப்ப பத்தி கொஞ்சமாவது யோசிச்சு இருக்கணும் ஷிவ்…”
“அதைப் பத்தியெல்லாம் எனக்கு யோசிக்க டைம் கூட இல்லை மது… அர்ஜுனனுக்கு கண் பார்வை அவனோட இலக்கு மேல மட்டும் தான் இருக்குமாம்… அதை நீ தப்புன்னு சொல்வியா?” மிக நியாயமாக கேட்பதாக தோன்றியது மதுவுக்கு. ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“அதானேடி நான் பண்ணேன்…” என்று அவள் கூற, அதற்கும் மேல் அவள் பேசுவதற்கு ஒன்றுமில்லையென்று தோன்றியது.
இவர்களை போன்றவர்களுக்கு பேச்சுக்கலை மிகப் பெரிய சொத்து. இவர்களது பேச்சினால் எதையும் சாதிக்க முடியும் என்கிற திமிர் வந்து விடும் போது அத்தனை பாவங்களையும் தயங்காமல் செய்து விடுவார்கள்.
ஷிவானி ஒரு நரி… தந்திரத்தில் அவளை வெல்ல யாராலும் முடியாது. நரியாக இருக்கவும் ஒரு சாமர்த்தியம் வேண்டும். எத்தனை பெரிய அவமானங்களையும் துடைத்து போட்டுவிட்டு போக தெரிய வேண்டும். ஈனத்தனமான விஷயமாக இருந்தாலும் தயங்காமல் செய்யும் துணிச்சல் வேண்டும். மற்றவர் பார்வையில் நாம் கேவலமான ஜந்துவாக பார்க்கப் படுவோம் என்ற நிலை இருந்தாலும் அதை பற்றி கொஞ்சமும் கவலை இருக்கக் கூடாது. அப்படி இருந்து விட்டால் அவள் நரியாக முடியாது.
வெற்றியை சுவைக்க சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புலியாகத்தான் உறும வேண்டும் என்பதும் கூட இல்லை. நரியாக தந்திரம் காட்டி வெற்றியை சுவைப்பவர்களே அதிகம். ஆனாலும் அவர்களால் அந்த வெற்றியை பெருமையாக சொல்லிக் கொள்ள முடியுமா என்ன?
ஆனால் நம்மை சுற்றி இந்த நரிகளும் ஓநாய்களும் தானே அதிகம்!
அந்த நரியின் தந்திர வளைக்குள் சிக்கினாள் மது!
அது அவளது தவறா? அவளது வயதின் தவறா?
அந்த ரிசார்ட்டில் இருந்த ஓபன் ரெஸ்டாரன்ட் அது. சிறு சிறு குடில்களை போல அமைந்திருந்தது. ஒவ்வொரு குடிலும் தனிப்பட்டது. உணவருந்த வருபவர்களுக்கு முழுத் தனிமை இருக்கும். சர்வர் வந்து உணவை கொடுக்கும் வேளையில் மட்டுமே வேறொருவர் உள்ளே வர முடியும்.
அதற்காக மூடப்பட்ட குடில் கிடையாது. திறந்தவெளி தான், ஆனால் யாரும் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்பது எழுதப்படாத விதி.
சுற்றிலும் பூத்துக் குலுங்கும் நந்தவனம், அருகே விஸ்தாரமான நீச்சல் குளம். அதனருகே ஓய்வெடுக்க குடைகள். சற்று தள்ளி இருந்த அறைகளும் கூட கூரை வேயப்பட்ட குடில்கள் தான்.
வெயில் இருந்தாலும் அந்த இடத்தில் சூழ்ந்திருந்த பசுமையால் சில்லென்று இருந்தது. கூப்பிடு தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, சூழ்நிலை வெகு ரம்யமாக இருந்தது.
தூரத்தில் எங்கோ பார்த்தபடி மெளனமாக அமர்ந்திருந்தாள் மது. மனம் உலைகலனாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
எதிரில் சஞ்சய்!
அவளையேப் பார்த்தபடி… அவளை விழுங்கியபடி!
ஒவ்வொரு அசைவிலும் அவனை வசீகரித்தாள் இந்தப் பெண்!
த்ரீ போர்த் லீவிஸ் ஜீனும், ஸ்லீவ்லெஸ் கிராப்ட் பிங்க் டாப்பும் அணிந்திருந்தாள். அது வளைவுகளை அவ்வளவு அழகாக எடுத்துக் காட்டி அவனை போதையேற்றிக் கொண்டிருந்ததை அவள் அறிய மாட்டாள்!
ஷார்ட்ஸ் போடுவதை இப்போதெல்லாம் வெகுவாக குறைத்திருந்தாள். பார்த்திபன் விரும்பவில்லை என்பதோடு பானுமதியிடம் எகிறிவிட்டு சென்றதிலிருந்து இவள் சற்று அடக்கி வாசிக்க பழகியிருந்தாள்.
இடையை தொட முயற்சி செய்த முடியை, ஸ்ட்ரைட்டன் செய்து, லேசாக ப்ரௌன் கலரிங் செய்து, ஃபெதர் கட்டில் அழகாக வழிய விட்டிருந்தாள், பாதி முடியை மட்டும் க்ளட்சில் அடக்கி விட்டு! அது கழுத்து வரை லேயராகவும் கார்ல்லாகவும் அழகாக அலை அலையாக தவழ்ந்து கொண்டிருந்தது… மீதமிருந்த முடி அவளது இடை வரை வழிந்து கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவுக்கும் அது அழகாக கன்னத்தைத் தொட்டு கொஞ்ச, அதை ஒதுக்கி விட்டு அந்த ஆப்பிள் கன்னங்களில் முத்தமிட தோன்றிய உணர்வை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.
சங்குக் கழுத்தில் சிறு பிளாட்டினம் செயின், குட்டி பென்டன்ட்டோடு. அது உறவாடிய இடத்தை வெறித்துப் பார்க்க சொன்ன மனதை இழுத்துக் கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான்.
மெழுகினால் செய்யப்பட சிலை போல அமர்ந்திருந்த அந்த தோற்றத்தையும், வெண்வாழை தண்டாக பளபளத்த அந்த கால்களையும் பார்க்கையில் அவனது உணர்வுகள் எங்கெங்கோ பறந்து சென்றது.
எழுத்தில் வடிக்க முடியாத அவனது உணர்வுகள், “என்னன்னு சொல்லு சஞ்சு… அதை விட்டுட்டு இப்படி கேவலமா லுக் விட்டுட்டு இருக்காதே…” என்ற அவளது கடுப்பினால் வடிந்தது.
“என்னன்னு நான் தான் சொல்லனுமா மது?” அவனது ஏக்கம் வெளிப்படாமலில்லை. ஆனால் அதை அவள் ஏற்கும் மனநிலையில் அவளில்லை.
“நீ சொல்லாம நான் புரிஞ்சுக்க வேண்டிய அவசியத்தை நீயே ஸ்பாயில் பண்ணிட்டதா தான் ஞாபகம்…”
“அதெப்படி நான் ஸ்பாயில் பண்ணுவேன் மது? அப்படி எப்படி நீ நினைக்கற?” அவனுக்கு புரியவில்லை.
“சும்மா நடிக்காதே சஞ்சு… உன்னோட நடிப்பை நம்பிக்கொண்டிருக்க இன்னும் நான் சின்ன பிள்ளை இல்ல…”
“ஏன் இந்தளவு வார்த்தையை விடற? ஏன் இவ்வளவு கோபமா இருக்க? தயவு செஞ்சு சொல்லு…”
“உனக்கு ஒண்ணுமே தெரியாதில்ல…” ஏளனமாக அவள் கேட்க,
“சத்தியமா தெரியல… உன்னை சின்சியரா லவ் பண்றதை தவிர எனக்கு வேற ஒண்ணுமே தெரியல ஹனி… ஐ ஸ்வேர்…” என்று அவன் சத்தியம் செய்வது போல தொண்டைக்குழியை கிள்ளிக் கொண்டு கூற,
“சின்சியர்… சின்சியாரிட்டிக்கு உனக்கு மீனிங் தெரியுமா சஞ்சு?”
“சொல்றதை தெளிவா சொல்லு மது… உன்னோட ஹிட்டன் அஜெண்டா தான் என்ன?”
“அந்த ஹிட்டன் அஜெண்டாவை நீ தான் சொல்லணும்! இன்னும் நமக்குள்ள ரிலேஷன்ஷிப் இருக்கறதா நினைச்சுட்டு இருக்கியா?” என்று கடுப்பாக கேட்டு விட்டு செல்பேசியை எடுத்து, ஷாலினிக்கு அழைத்தவள்,
“ஷால்… இங்க ஈசிஆர்ல…” என்று ஆரம்பித்து அந்த ரிசார்ட்டின் பெயரை சொல்லி…”அங்க வந்துடு… கொஞ்சம் சீக்கிரம் ஷால்… என்னால ஹெட்ஏக் தாங்க முடியல…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவளது செல்பேசியை பறித்தான் சஞ்சய்.
அவனது இந்த திடீர் செயல் அவளை அதிர செய்தது.
“சஞ்சு… பிஹேவ் யுவர்செல்ப்… என்னோட செல்லை கொடு…” என்று கோபமாக அவள் கேட்க, அலட்டிக்கொள்ளாமல் பேசியை காதில் வைத்தவன்,
“லிசன் ஷாலினி… இட் இஸ் ஜஸ்ட் எ லவர்ஸ் குவாரல்… டோன்ட் ட்ரை டூ இன்டர்ஃபியர்…” என்று கடித்துவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்து அவனது ஜீன் பேக்கட்டில் வைத்துக் கொண்டு நகர்ந்தான்.
அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ரதீஷ் கடினமானவனென்று அவள் அறிவாள். ஆனால் இவன் அப்படி கிடையாதே!
“சஞ்சு என்னோட போனை என்கிட்டே கொடு…” அவன் பாட்டிற்கு நகர்ந்து போய்க் கொண்டே இருக்க, மது கோபத்தோடு அவன் பின்னே போய்க் கொண்டிருந்தாள்.
அவன் இழுத்த இழுப்பிற்க்கு அவளும் உடன்படுகிறாள் என்பதைக் கூட அவள் அறியவில்லை. கோபம் கண்ணை மட்டுமல்ல, வழியையும் மறைத்தது.