Rainbow kanavugal-25

Rainbow kanavugal-25

25

சரவணன் தன் தோழி சென்ற வழி தடத்தையே பார்த்திருந்தான். கடைசியாக அவள் சொல்லிவிட்டு போன வார்த்தை ஈட்டியாக அவனுக்குள் பாய்ந்தது.

தன் தோழியின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்காமல் அவன் முகத்தை திருப்பி கொண்டது உண்மைதான். ஆனால் அது மது மீதான கோபமோ நம்பிக்கை இன்மையோ இல்லை.

அவனின் இயலாமையின் வலி அது. காலையிலேயே வீணா அவனை பார்க்க மருத்துவமனை வந்ததும் அவள் வார்த்தைக்கு வார்த்தை இந்துவை தரைக்குறைவாக பேசியதையும் அவனால் தாங்கவே முடியவில்லை.

‘நான் நிறை மாசமா இருந்தன்னு கூட பார்க்காம தள்ளி விட்டவதானே… அவ கொலையும் பண்ணுவா… அதுக்கு மேலயும் செய்வா?” என்று இந்து மீது வாய் கூசாமால் ஒரு கொலை பழியை போட்டுவிட்டாள் வீணா.

கோபத்தில் இந்து தெரியாமல் செய்த ஒரு தவறை இத்தனை பெரிய குற்றத்தோடு ஒப்பிடும் தமக்கையை அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

வீணாவிற்கு இந்துவின் மீதிருந்த கோபமெல்லாம் ஒரு புறமிருந்தாலும் குழந்தை பிறந்த சமயத்தில் அவள் இந்து வீட்டிலிருக்க கூடாது என்று போட்ட நிபந்தனையை அவன் ஏற்கவில்லை.

இந்துவை எங்கேயும் அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தவன் வீணாவிடம் அவள் மாமியார் வீட்டுக்கு போக சொல்லி துர்கா மூலமாக சொல்லிவிட்டான். இருவரும் ஒன்றாக இருந்தால் தேவையில்லாத பிரச்சனைதான் வளரும் என்ற எண்ணம்தான் அவனுக்கு!

அந்த துவேஷம் வீணாவின் மனதில் ஆழமாக தங்கிவிட்டது. தன் தம்பியை தன்னிடமிருந்து பிரித்துவிட்டாளே என்று வீணாவிற்குள் இந்துவின் மீதிருந்த கோபமெல்லாம் பகையாக மாறியிருந்தது. அதன் வெளிபாடுதான் இன்று அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்!

அதுவும் இந்துவிற்கு எதிரான அந்த சந்தர்ப்பத்தை வீணா தனக்கு சாதகமாக்கி கொண்டு தன் அம்மாவின் மனதிலும் தம்பியின் மனதிலும் நஞ்சை கலந்துவிட்டாள்.

இதெல்லாம் அருகாமையிலிருந்த பார்த்த சரவணன் ஏதும் செய்ய இயலாமல் மனம் நொந்து போனான். தன் மனைவியின் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசவும் முடியவில்லை. அவர்களின் அந்த அநியாயமான பழியை கேட்கவும் முடியவில்லை.

வீணா பேச்சை கேட்டு கொண்டு துர்காவும் இந்துமதியை தரைக்குறைவாக பேச அவனால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. எரிமலையாக அவன் உள்ளம் தகித்து கொண்டிருந்த அந்த சமயத்தில் மதுவும் அதையே சொன்னால் அவனும் என்னதான் செய்வான்.

அதுவும் தன் உயிருக்குயிரான தோழியே தன் மனைவியின் நடத்தையை பற்றி குறைவாக சொல்லும் போது அவன் எப்படி அதை தாங்குவான்.

மற்றவர்கள் யார் பேசுவதும் அவனுக்கு பெரிய விஷயமில்லை. அதற்கு அவன் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை. ஆனால் அந்த வார்த்தை தன் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய தோழியிடம் இருந்து வருவதை அவன் விரும்பவில்லை.

அப்போதைய சூழ்நிலை வேண்டுமானாலும் இந்துவை மதுவுக்கு தவறாக காட்டியிருக்கலாமே ஒழிய அவள் தவறானவள் அல்ல.

அவனுக்கு இந்துவின் மீது ஆழமான நம்பிக்கை இருந்தது. அதுவும் அவள் முன்பு செய்த ஒரு தவறுக்காக எந்தளவு துயரை அனுபவித்தால் என்று அவள் உணர்வுகளை வரிக்கு வரிக்கு படித்தறிந்து கொண்டவன்!

அது மட்டுமா? முதலிரவு அன்று அவள் அவனிடம் மன்றாடி கேட்டு கொண்ட வேண்டுதலை அவன் மனம் மறக்க இயலுமா?

“உங்களை கெஞ்சி கேட்கறேன்… என்னை தொடாதீங்க…

இந்த ஓடுகாளி ஒழுக்கங்கெட்டவங்கிற பட்டம் என்னோட போகட்டும்… நாளைக்கு அது என் வயித்துல பிறக்கிற புள்ளைங்களுக்கும் வர வேண்டாம்… வரவே வேண்டாம் ப்ளீஸ்

எனக்கு அப்படியொரு தண்டனையை மட்டும் கொடுத்திராதீங்க… ப்ளீஸ் மாமா… உங்க காலை பிடிச்சு கேட்கிறேன்” என்று கதறி கண்ணீர் வடித்தவளா இவர்கள் எல்லாம் சொல்வது போல அத்தனை இழிவான காரியத்தை செய்ய துணிவாள். நிச்சயம் மாட்டாள்.

அவனை அவள் கணவனாக ஏற்காவிடிலும் அவளை அவன் மனைவியாகத்தான் பார்த்தான். அணுஅணுவாக அவளை அவன் புரிந்தும் வைத்திருக்கிறான். அவள் கோபமும் வெறுப்பும் தன் மீதானது அல்ல. அவளின் முந்தைய மோசமான அனுபவங்களின் மிச்சங்கள் என்பதையும் அவன் நன்கறிவான்.

எல்லோரின் திருமண வாழ்க்கை போல அவர்களுக்குள் காதல் சரசங்களும் , தாம்பத்யமும் நிகழாவிடிலும் அவன் அந்த உறவையும் அவள் உணர்வுகளையும் ஆழமாக மதிக்கிறான்.

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். தன் நம்பிக்கையை அவள் ஒருபோதும் பொய்யாக்க மாட்டாள் என்று அவன் உள்ளுணர்வு சொல்லி கொண்டே இருந்தது.

அதுவும் தன் நெருங்கிய தோழியாகவே இருந்தாலும் அவளிடமும் தன் மனைவியை விட்டு கொடுப்பதை அவன் விரும்பவில்லை.

அதேநேரம் மதுவின் வார்த்தைகள் இந்துவின் மீதான நம்பிக்கையை அசைத்து பார்த்துவிடுமோ என்ற அவன் மனதிற்குள் லேசான பயம் எட்டி பார்க்கவும்தான் அவளை பாராமுகமாக தவிர்ப்பது போல பாவனை செய்து அவளை மேலே பேச விடாமல் அனுப்பிவைத்தான்.

ஆனால் இப்போது அவன் உள்ளம் கலங்கியது. தோழிக்காக…

எப்படி ஒரு சூழ்நிலையில் அவள் தனக்காக வந்து நின்றாள். அவளை போய் காயப்படுத்திவிட்டோமே என்று உள்ளுர வலித்தது.

மது சென்ற திசையையே இமைக்காமல் தவிப்போடு பார்த்திருந்த அவன் விழிகளில் கண்ணீர் வழிய தொடங்க,

“என்ன மாமா? அடிப்பட்ட காயம் வலிக்குதா?” என்று அருகிலிருந்து அக்கறையாக கேட்ட இந்துவின் குரலில் அவன் கவனம் திசைமாறியது.

அவள் தன்னருகில் வந்து நின்றதை கூட அவன் உணரவில்லை.

“ரொம்ப வலிக்குதுன்னா… வலிமாத்திரை எதாச்சும் கேட்கட்டுமா மாமா? கேட்டா கொடுப்பாங்க… நான் வேணா போய் கேட்டு பார்க்கட்டுமா?” என்று அவள் கேட்க அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

தனக்காக, அதுவும் தன் வலிக்காக அவள் துடித்து போய் பேசி கொண்டிருப்பதை அவன் திகைப்பாக பார்த்திருக்க,

“என்ன மாமா? நான் கேட்டிட்டே இருக்கேன்… நீங்க எதுவும் பேசாம” என்றவள் சட்டென்று தன் வாக்கியத்தை முடிக்காமல் உதட்டை கடித்து கொண்டு,

“சாரி மாமா… சாரி நான் தெரியாம” என்று தன் தவறை எண்ணி அவசரமாக மன்னிப்பும் கேட்டாள்.

அந்த நொடி அவன் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. அதுவும் முதல் முறையாக அவள் தன்னிடம் இப்படி கரிசனமாக பேசுவதை எண்ணி உள்ளுர ரசித்து கொண்டிருந்தான்.

அதேநேரம் தனக்கு ஒன்றுமில்லை என்பது போல அவன் பாவனை செய்ய அவளோ, “உங்களுக்கு வலிக்கலன்னா ஏன் மாமா அழுதீங்க?” என்று கேட்க, அவன் மனம் நெகிழ்ந்தது.

முதல் முறையாக தன் உணர்வுகளுக்கு அவள் மதிப்பளிக்கிறாள். அதன் காரண காரியங்களை தன்னிடம் கேட்டறிந்து கொள்ள முற்படுகிறாள். அதுவும் முக்கியமாக பேசாத தன் உதடுகளிடம் அவள் பதில் எதிர்பார்க்கிறாள்.

இத்தனை நாட்களாக அவளிடம் அவன் எதிர்பார்த்தது குறைந்த பட்சம் இந்த மாதிரியான அக்கறையும் அன்பும் நிறைந்த வார்த்தைகளைதான். அது இன்று நடந்தேறியது.

ஆனால் இப்போதும் தன்னால் அவளுக்கு தர முடிந்தது மௌனத்தை மட்டும்தானே என்றவன் மனம் தவிக்க, அவன் முகம் வேதனையாக மாறியது.

அவன் முகமாற்றத்தை கவனித்தவள், “என்னாலதானே மாமா உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் வலியெல்லாம்” என்று அவள் அழ தொடங்க, அவன் மனம் மேலும் பாரமானது.

அவளை இருக்கையில் அமர சொல்லி கண்காட்டினான். அவள் தயக்கத்தோடு அமர அவள் கண்ணீரை அவன் துடைத்துவிட, அவனை திகைப்பாய் பார்த்தாள்.

அசையாமல் அவள் விழிகள் இரண்டும் அவனிடம் நிலைகொண்டுவிட, கண்ணீர் நனைந்த அவள் கன்னங்களை மெல்ல அவன் தன் விரலால் துடைத்துவிட்டான்.

உள்ளம் நெகிழ்ந்தவள் அவள் கண்ணீர் துடைத்து அவன் கரத்தை இறுக்கமாக பற்றி கொண்டாள். நில்லாமல் பெருகிய அவள் கண்ணீர் அவன் கரங்களையும் சேர்த்து நனைக்க, அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவளிடம் சிக்கி கொண்ட அவன் கையையும் விடுவித்து கொள்ள முடியவில்லை. அவள் கண்ணீரையும்  துடைக்க முடியவில்லை.

ஆனால் அவளே சுற்றுபுறம் உணர்ந்து அவன் கரத்தை விடுவித்துவிட்டு தன் கண்ணீரையும் துடைத்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள்.

தன்னை நிமிர்ந்து பார்த்தவளிடம், “போய் சாப்பிட்டு வா” என்று அவன் செய்கை செய்ய,

“உஹும் வேண்டாம்.. நேத்துல இருந்து இப்படியே இருக்கேன்… காலையில இருந்து முகம் கூட கழுவல” என்றவள் நிலையை அப்பட்டமாக எடுத்துரைக்க அவன் புன்னகைத்துவிட்டு,

அந்த தளத்தில் அமைந்திருந்த குளியலறையை சுட்டி காட்டினான்.

“நான் போயிட்டா நீங்க தனியா இருப்பீங்களே… அத்தையும் தம்பியும் வரட்டும்… அப்புறமா நான் போறேன்” என்று அவள் சொல்லவும் அவளிடம் சம்மதமாக தலையசைத்தவன், அவள் கரத்தை தன் கரத்திற்குள் எடுத்து கொண்டான்.

“பிடிச்சிக்கட்டுமா?” என்ற அனுமதி பார்வையோடு!

அவள் தலையசைத்து மௌனபுன்னகை சிந்த வார்த்தைகளின்றி அவர்கள் இருவரின் விழிகளும் காதல் மொழி பேசியது. ஆனால் அந்த காதல் உணர்வை சில வினாடிகள் கூட நீடிக்க விடாமல் பாலாவும் துர்காவும் அங்கே வந்துவிட்டிருந்தனர்.

**************

மது பயந்து பயந்து தன் படுக்கையறையை திறந்தாள். உள்ளே அஜயின் கோபம் எந்த அளவுகோலில் இருக்குமோ என்று?

அவள் திறந்த மாத்திரத்தில் அவனோ குறுக்கும்  நெடுக்குமாக அந்த அறையை அளவெடுத்து கொண்டிருந்தான். அவள் நுழையவும் அவளை படுகோபமாக அவன் முறைக்க, அவளுக்கு உள்ளுர தடதடத்தது.

கதவை மூடிவிட்டு அவனை நெருங்க, அவனோ வேகமாக மேஜை மீதிருந்த பைல் கண்ணாடி மற்றும் கைபேசியை எடுத்து கொண்டு வெளியேற எத்தனித்தான்.

“அஜய் நில்லு” என்றவள் அழைப்பிற்கு திரும்பியவன்,

“நான் இருக்கிற கோபத்துக்கு இப்ப நான் இங்க இருந்தா உன்னை தேவையில்லாம ஏதாவது திட்டிடுவேன்… ப்ளீஸ் என்னை போகவிடு” என்று கதவை திறக்க போனவனிடம்,

“சரி போ… ஆனா நீ திரும்பி வர வரைக்கும் சாப்பிடாம மாத்திரை போடாம இப்படியேதான் உட்கார்ந்திருப்பேன்” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டு படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஏறஇறங்க மூச்சு வாங்கி கொண்டே அவளருகில் வந்தவன், “என்னடி? காலையில இருந்த இப்படியே சொல்லி என்னைய ப்ளேக் மெயில் பண்ணிக்கிட்டு இருக்க” என்க,

“ப்ளேக் மெயில் பண்றேனா? அப்போ என் மேல அக்கறை இருக்க மாதிரி அப்படியே நீ உருகுறதெல்லாம் சும்மா நடிப்பா?” என்று கேட்டாள்.

“மது… திஸ் இஸ் யுவர் லிமிட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா அறைஞ்சுடுவேன் பார்த்துக்கோ?” என்றவன் சீற்றமாக பொங்க,

“அடிச்சிடுவியா? எங்க அடி பார்ப்போம்” என்று வம்படியாக எழுந்து நின்று அவனிடம் ஒற்றை கன்னத்தை திருப்பி அவள் காட்ட, அவனுக்கு எரிச்சலானது.

“படுத்துறாளே” என்று தலையிலடித்து கொண்டவன் மீண்டும் வெளியேற பார்க்க அவனை வழிமறித்து நின்றவள்,

“திரும்பியும் எங்க போற?” என்று கேட்க,

“எங்கயும் போலம்மா தாயே… ஹால் ரூம்தான் போறேன்” என்று தன் கையிலிருந்த பொருட்களை மீண்டும் மேஜை மீது வைத்திருந்தான்.

மெல்லிய புன்னகையோடு அவனை எங்கேயும் போகவிடாமல் அவன் கழுத்தில் மாலையாக தன் கரத்தை கோர்த்தவள், “என் மேல ரொம்ப கோபமா?” என்று வினவும்,

“நான் யாரு உன் மேல கோபப்பட… எனகென்ன உரிமை இருக்கு… உனக்கு நானெல்லாம் முக்கியமா என்ன?” அவள் முகம் பாராமல் பார்வையை திருப்பி கொண்டு விட்டேற்றியாக பதிலளித்தான்.

“இப்படியெல்லாம் பேசாத அஜய்… எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அவனை அவள் வாஞ்சையாக பார்க்க,

“எதவும் பேச வேண்டாம்னு ஒதுங்கி போறவனை வம்படியா இழுத்து பேச வைச்சுட்டு அப்புறம் கஷ்டமா இருக்கு நஷ்டமா இருக்குனா” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பவும் அவள் விழிகளில் நீர் நிறைந்தது.

அவள் மௌனமாக அவனை விட்டு விலக அதற்கு மேல் அந்த கோபத்தை இழுத்து பிடித்து கொண்டிருக்க அவன் ஒன்றும் சாதாராண கணவன்மார்களின் ரகம் இல்லையே. அவன் மதுவின் அஜய்!

தன்னுடைய ஒவ்வொரு அணுவிலிருந்தும் அவளை நேசிக்கிறான். அவளை மட்டுமே உயிராக நேசிக்கிறான். மனைவி என்பதை தாண்டி அவளை ஒரு குழந்தையாக பார்க்கிறவன்.

வேறெதுவுமே அசைத்து பார்த்திட முடியாத அவன் கோபத்தையும் பிடிவாதத்தையும் அவளின் ஒற்றை துளி கண்ணீர் அசைத்து பார்க்க, “மது” என்று விலகயவளை  தம் கரம் கொண்டு அணைத்து கொண்டான்.

“சரி நான் கோபப்படல… நீ அழாதே” என்றவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன், “வா… சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு” அவன் கோபம் கரைந்து அவளை கனிவாக அழைக்க,

“சாப்பாடெல்லாம் அப்புறம்… எனக்கு இப்போ வேற ஒன்னு வேணும்” என்று அவள் ஆளை விழுங்கும் பார்வை பார்க்க அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக,

“கொடுப்பேன்… ஆனா அப்புறம் மூச்சு முட்டுது அது இதுன்னு சொல்ல கூடாது” என்றவன் அவளை வில்லங்கமாக ஒரு பார்வை பார்த்தான்,

“உஹும்” என்றவள் தலையசைத்த மறுகணம் அவள் இதழ்களின் மீது பகிரங்கமாக தன் ஆளுமையை செய்தவன் மெல்ல மெல்ல அவளை முத்த மழையில் நனைய செய்திருக்க,

“அஜய் போதும்டா” என்று அவளாக கெஞ்சும்வரை அவன் தம் காதல் லீலைகளை நிறுத்தும் எண்ணமே இல்லை.

மெல்ல அவள் இதழ்களை பிரிந்தவன் தம் கரங்கள்  கொண்டு அவள் முகத்தை ஏந்தியபடி, “இந்த இரண்டு நாளா நான் ரொம்ப ரொம்ப டிப்ரஸ்டா இருந்தேன் தெரியுமா?… இந்த் வீடே நரகம் மாதிரி இருந்துச்சு…. அப்பா, நான், அனு எல்லோரும் ஒரு நடைபிணம் மாதிரி இருந்தோம்… இன்னும் கேட்டா இப்பவும் அப்படிதான் இருக்கோம் அம்மாவை கூட சரியா கவனிக்க முடியல…

நடந்த விஷயம் மாறி மாறி மூளைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு… உனக்கும் இந்த கஷ்டமெல்லாம் வேண்டாம்னுதான் உன்னை உங்க வீட்டுல விட்டெனே ஒழிய மனசு உன்னைய சுத்திதான் இருந்துச்சு… ஆனா இப்போ இந்த நிமிஷம் அவ்ளோ ரிலீபா பீல் பண்றேன்டி” என்று சொல்லியவன்,

“என் தேவதைடி நீ” என்று அவளை இறுக அணைத்து கொள்ள, “ஆஆ” என்று அவள் அலறவும் அந்த நொடியே அவளை விலகி நின்றவன்,

“சாரி சாரி… ரொம்ப அழுத்தி கட்டி பிடிச்சிட்டேனா?”: என்று பதறல் உணர்வோடு கேட்க,

“நீயில்ல… உள்ள இருக்குற உன் குட்டி வாலுங்க” என்றாள் முகத்தை சுருக்கியபடி!

“ஏன் என்னாச்சு?” என்றவன் பதட்டமாக வினவ,

“ம்ம்ம்ம்… காலையில இருந்த சமத்து புள்ளையா இருந்தாங்க… நீ என்னை கட்டி பிடிச்சதும் ரெண்டும் உள்ள தைய்யா தக்கான்னு குதிக்குது” என்று சொல்லி அவளின் மேடிட்ட வயிற்றை காட்ட அது மேலும் கீழுமாக எம்பி கொண்டிருந்தது.

அந்த காட்சியை பார்த்து அவன் உற்சாகம் பொங்க அவள் வயிற்றில் கை வைத்து, “என் லிட்டில் சாம்ப்ஸ் என்ன பன்றீங்க?” என்று கேட்க அவை இன்னும் அதிகமாக எம்பி குதிக்க,

“ரெண்டும் உன் செல்லங்கதான் அஜய்… நேத்தெல்லாம் கப்சிப்னு இருந்தாங்க… இன்னைக்கு உன் குரல் கேட்டதும் எப்படி குதிக்கிறாங்க பாரேன்” என்றவள் முடியாமல் படுக்கையில் அமர்ந்து கொண்டு,’

“முடியலடா சாமி” என்று தவித்து போனாள்.

“என் லிட்டில் சாம்ப்ஸுக்கு பசிக்குதா இருக்கும்… நீ வா… முதல சாப்பிடுவோம்” என்று அவளை கை தாங்கலாக அழைத்து கொண்டு அவன் அறையை விட்டு வெளியே வர,

“இந்த ரெண்டு வாலுங்க பொறந்ததும் நீதான் கூட இருந்து பார்த்துக்கணும் சொல்லிட்டேன்… என்னால தனியா இவங்களை சமாளிக்க முடியாது… ஆமா” என்று கணவனிடம் புலம்பியவள் அனன்யாவின் அறை கதவை கடக்கும் போது அப்படியே நின்றுவிட்டாள்.

“என்ன மது?” என்றவன் கேட்கவும்,

“அனுவையும் சாப்பிட கூப்பிடுங்க அஜய்” என்றாள்.

“அவ வரமாட்டா… அப்பா கெஞ்சி கதறி பார்த்துட்டாரு… ஒரு ரியாக்ஷனும் இல்ல”

“அதுக்கு அப்படியே விட்டுடுவீங்களா?”

“இல்ல மது… அவளே தோணும் போது வருவா… தண்ணி குடிப்பா அப்புறம் அவ புள்ளைய தூக்கிட்டு உள்ள போயிடுவா… இரண்டு நாளா இப்படிதான் நடக்குது” என்றான்.

“நீங்க அனு கிட்ட பேசி பார்த்தீங்களா?”

“அப்பா சொல்லியே கேட்காதவ… நான் சொல்லி கேட்க போறாளாக்கும்” என்றவன் கடுப்பாக சொல்ல,

“கேட்பாங்க அஜய்… தனித்தனியா இருந்தாலும் நீங்க ரெண்டு பெரும் கிட்டத்தட்ட ஒரு உயிர் மாதிரிதான்… அவங்கள உங்களாலதான் புரிஞ்சிக்க முடியும்” என்றாள்.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல… நாங்க இரண்டு பெரும் ட்வின்ஸா இருந்தாலும் எங்க இரண்டு பேரோட டேஸ்ட் திங்கிங் எல்லாம் வேற வேற… இன்னும் கேட்டா எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போகவே போகாது” என்றவன் சொல்லவும்,

“அதுக்கு காரணம் உங்க டெஸ்ட் திங்கிங் வேறயா இருந்தாலும்… உங்க ரெண்டு பேரோட கேரக்டரும் ஒன்னு” என்றாள்.

“என்ன சொன்ன?” என்றவன் அவளை முறைத்து பார்க்க.

“நிஜமாதான் சொல்றேன்… உன்னோட பிடிவாதம் கோபம் நாம எடுத்த விஷயத்தில ஜெயிக்கணும்னு வெறி… இப்படி உன் குணமெல்லாம் அனுகிட்டயும் அப்படியே இருக்கு” என்றாள்.

“என்னடி? இதான் சாக்குன்னு என்னை குத்தி காட்டிறியா?”

“ப்ச் அதெல்லாம் இல்ல… நான் சீரியஸா சொல்றேன்… நீ பேசுனா அனு வெளியே வருவாங்க… ட்ரை பண்ணு” என்றதும் நம்பிக்கையே இல்லாமல், “சரி ட்ரை பண்றேன்” என்று அவன் அனுவின் அறை கதவை தட்டி,

“அனு… வா சாப்பிடலாம்” என்று குரல் கொடுத்தான். பதிலில்லை. “அனு வெளியே வா” என்று அவன் தொடரச்சியாக கதவை தட்டி அழைக்க எந்தவித எதிர்வினையும் இல்லை.

“சரி விடு அஜய்” என்று  மது சொல்ல அவனா விடுவான்?

எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டுமென்ற பிடிவாத குணம் கொண்டவனாயிற்றே!

அத்தனை சீக்கிரத்தில் விட்டு கொடுத்துவிடுவனா?

உள்ளே இருந்து எந்த பதிலுரையும் இல்லாததில் சுறுசுறுவென அவனுக்கு கோபமேற, “அனு ஏ அனு கதவை திறடி” என்று குரலை உயர்த்தினான்.

அவன் தட்டிய தட்டில் கதவு உடையாத குறை. ஆனால் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் கதவு உடைவதற்கான அபாயமும் தெரிந்தது.

‘சும்மா இருந்த சங்கை ஊதுனா கதையாயிடுச்சே’ என்று மனதில் எண்ணி பயந்தவள், “வேண்டாம் அஜய்” என்று அவனிடம் பொறுமையாக சொல்ல,

“அதென்ன அவளுக்கு அவ்வளவு திமிரு… அந்த சுரேஷ் ஒரு பொறுக்கி அவனுக்காக என்னையும் அப்பாவையும் கஷ்டபடுத்துறா… அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு காதலிச்சு கல்யாணம் வேற பண்ணிக்கிட்டா… அப்பவே அவனை வீட்டுக்குள்ள சேர்த்திருக்க கூடாது” என்றவன் பொறிந்து தள்ள, படாரென்று அறை கதவு திறந்து கொண்டது.

“சுரேஷை பத்தி இன்னும் ஒரு வார்த்தை பேசுன நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” உக்கிர கோலத்தில் தன் உடன் பிறப்பை முறைத்து கொண்டு நின்றாள் அனன்யா.

அவள் நின்ற கோலத்தை பார்த்து அஜயும் மதுவும் அதிர்ந்து போனார்கள். தலை விரி கோலமாக கண்கள் எல்லாம் கருவளையம் சூழ அழுதழது அவளின் தோற்றமே மொத்தமாக மாறி போயிருந்தது.

எப்போதும் தன் அழகிலும் உடையலங்காரத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் அனன்யாவா இது என்று இருவராலும் நம்பவே முடியவில்லை. .

error: Content is protected !!