உயிர் தேடல் நீயடி 18
பாறையை துளைத்து வேர்விடும் மென் தாவர முளையின் அதிசயம் போல, இவன் துருபடிந்த இரும்பு இதயத்திற்குள் காதலெனும் மெல்லுணர்வு மொட்டவிழ்வதும் பேரதிசயமாய்…
வழக்கமான வேக நடையோடு அலுவலகத்திற்குள் நுழைந்தவன் பார்வை வழக்கத்திற்கு மாறான அலைபுறுதலோடு தன்னவளை தேடி அவளிடம் நிலைத்தது.
எப்போதும் போல காவ்யா கணினி திரையில் முகத்தை புதைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இந்த கணம், அவளை அப்படியே கைகளில் ஏந்தி, காற்றில் பறந்து வேற்றுகிரகம் சேர்ந்துவிட வேண்டும் போல் அவனுள் பேராசை எழுவதாய்!
எம்டி வரவை உணர்ந்து எழுந்து நின்றவளை பார்வையால் பின்தொடரும்படி ஆணையிட்டு தன் கேபின் நோக்கி விபீஸ்வர் நடக்க, இவளும் தனது குறிப்பு கையேட்டினை எடுத்துக் கொண்டு அவன் பின்னோடு சென்றாள்.
விபீஸ்வர் இருக்கையில் அமராமல் மேஜையில் சாய்ந்தபடி தன்னவள் மீது உரிமை பார்வை பதித்து நின்றான். காவ்யா, அவன் சொல்லபோவதை குறிப்பெடுத்து கொள்ள தயாராய் நின்றாள்.
வினாடிகள் கடந்தும் அவன் பேசாதிருக்கவே இவள் பார்வை அவன் முகம் நோக்கி உயர்ந்தது.
அவனின் ஒற்றை புருவம் கேள்வி குறியாய் உயர்ந்து நிற்க, “வர சொன்னீங்க சர்!” காவ்யா பதில் தந்தாள்.
“நானா? எப்ப?” என்றவனின் பார்வையில் கூடை குறும்பு பளிச்சிட்டது.
“இப்ப வரும்போது…!” என்றவள், அவன் அழைக்காமல் கண் செய்கை மட்டுமே செய்தது நினைவுக்கு வர திணறினாள்.
அவளின் திணறலை சிதறாமல் ரசித்திருந்தவன், மந்தகாச புன்னகையோடு அவளருகில் வந்து நின்று, “என்கிட்ட ஏதாவது சொல்லணுமா கவி?” என்று மேலும் அவளை சீண்டலானான்.
“இல்ல சர்” தன் பார்வை தாழ்த்தி சங்கடமாக பதில் தந்தாள்.
“பின்ன, ஏதாவது கேக்கணுமா?”
“இஇல்ல சர்”
“எதுவும் இல்லாம தான், இங்க வந்தியா பேபி?” அவளை வம்பிழுப்பதில் இவனுக்குள் சிறு பிள்ளையின் துள்ளாட்டம்.
“சாரி சர்” என்று நகர்ந்தவளின் கைபற்றி நிறுத்தியவன், “ரெண்டு வார்த்தைக்கு அதிகமா என்கிட்ட பேச கூடாதா?” அவன் கேள்வி அவளை மோத, காவ்யா மௌனமாகவே நின்றாள்.
அவனிடம் இருந்து தள்ளி நிற்க தான் முயல்கிறாள் இவளும். ஆனாலும் அவனுடன் இன்னும் நெருங்கி செல்வதை போன்ற உணர்வு இவளை கலக்கமடைய தான் செய்திருந்தது.
அன்றைக்கு அவன்மீது ஏற்பட்ட பரிதாபத்தினால் தான் இரவு முழுதும் அவனுக்கு துணையாக இருந்தாள். ஆனால் அதையே சாதகமாக்கிக் கொண்டு அவன் தன்னிடம் எடுத்துக்கொண்ட உரிமையை இவளால் சாதாரணமாக விலக்க முடியவில்லை.
“என்மேல அப்படியென்ன கோபம் உனக்கு ம்ம்?”
விபீஸ்வர் குரலில் தெரிந்த மாறுபாட்டை இப்போதுதான் உணர்ந்தவளுக்கு அவன் வேண்டும் என்றே தன்னை வம்பிழுப்பது புரிய, “எதுவுமில்ல சர்…” தன் கையை விலக்கிக் கொள்ள முயன்றாள்.
“ம்ஹும் நான் உன்ன ஹக் பண்ணதால தான, என்னை விட்டு விலகி போக ட்ரை பண்ற கவி! அதுக்காக நான் சாரி எல்லாம் கேட்க போறதில்ல” என்றவனை முறைப்பாக ஏறிட்டாள்.
அவளின் கார பார்வையை ஏந்திக் கொண்டவன், பிடித்து இருந்த அவள் கைவிரல்களில் தன் விரல்களை கோர்ந்தபடி, “அன்னைக்கு பயத்துல இப்படி நான் உன் கைய பிடிச்சிகிட்டது தப்பில்லனா? சந்தோசத்துல உன்ன ஹக் பண்ணதும் எனக்கு தப்பா தெரியல கவி!” விபீஸ்வர் ஆழ்ந்து சொல்ல, இவளுக்கு அவன் பேசுவது புரிந்தும் புரியாத நிலை!
ஆனால், ‘அவனிடமிருந்து விலகிவிடு’ என்று அவள் ஆழ்மனதின் எச்சரிக்கை பலமாய் ஒலிக்க, தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டாள். அவனும் தடுக்கவில்லை.
“வேலையை தவிர வேறெதையும் பேச வேண்டிய அவசியம் இல்ல சர் நமக்குள்ள” உறுதியாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அவள் போவதை பார்த்து இருந்தவன், ‘நமக்குள்ள நிறையவே மாறியிடுச்சு பேபி, அதையெல்லாம் நீயும் சீக்கிரம் புரிஞ்சுக்குவ, இல்ல… நான் தான் புரிய வைக்கணும்!’ என்று எண்ணமிட்டவன், உயிர் காதலிலும் தன் பிடிவாதகுணத்தையே பற்றி கொண்டான்.
அவனிடம் யார் சொல்வது வெற்று பிடிவாதத்தால் காதலுணர்வை கட்டவிழ்க்க இயலாதென்று!
காவ்யதர்ஷினியின் நினைவுகள் முழுவதும் அவன் மனதில் மென்மையான இதமான உணர்வாய் பரவ, அவளோ முற்றிலும் மாறான மனநிலையில் உழன்றிருந்தாள்.
விபீஸ்வரின் நினைவுகள் முழுவதும் இவளுள் பயத்தையும் பதற்றத்தையுமே விளைத்திருந்தன!
#
அவளை சுற்றிலும் எங்கும் தண்ணீர் தண்ணீர் மட்டுமே சூழ்ந்து இருந்தது. அந்த வேக நீரோட்டம் அவளையும் இழுத்து செல்ல, தட்டுத்தடுமாறி ஏதோ பாறையின் நுனியை பிடித்து கொண்டாள். வழுக்கும் பாறையும் நீரின் வேகமும் அவளை அலைகழிக்க, கைகள் நழுவி நிரோடு போனவளுக்கு அந்த அழைப்பு கேட்டது.
“கவி… கவி…” கத்தியபடியே எங்கிருந்தோ விபீஸ்வர் அவளை நோக்கி வேகமாக நீந்தி வந்து அவளின் கைகளை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்தபடி கரையை நோக்கி நீந்தலானான்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவர்களுக்கு கரை தெரிந்தபாடில்லை. விபீஸ்வரும் நீந்தும் வேகத்தை குறைந்தபாடில்லை, காவ்யாவும் பயத்தில் அவனை இறுக்கமாக பிடித்து இருந்தாள். தப்பிக்கும் வழிதான் தெரிந்தபாடில்லை.
நீரோட்டத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்க, சோர்வில் காவ்யாவின் பிடிதளர்ந்து நிரோடு அடித்து சென்று மூழ்கி போனாள். ‘கவீ…!’ விபியின் அலறல் சத்தம் மட்டுமே அங்கே எங்கும் எதிரொலித்தது…
காவ்யா வேர்த்து விறுவிறுத்து தூக்கத்தில் இருந்து பதறி விழித்து கொண்டாள்.
எத்தனை பயங்கரமான கனவு!
அவளுடலின் அதிர்வு இன்னும் குறைந்தபாடில்லை. அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பார்கவியை பார்த்தவள் சற்று தன்னை தேற்றிக் கொண்டு எழுந்தாள்.
விடிவிளக்கின் வெளிச்சத்தில் சமையலறை நோக்கி சென்றவள் தண்ணீர் எடுத்து பருகி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, கடிகாரத்தை பார்க்க நான்கு மணி காட்டியது. இனியும் உறக்கம் வருமென்று அவளுக்கு தோன்றவில்லை.
கூடத்து நாற்காலியில் வந்து அமர்ந்தவளுக்கு கனவை பற்றிய யோசனை தான் ஓடியது.
ஒருவரின் ஆழ்மனதின் ஆசைகளும் பாதிப்புகளும் தான் கனவாக வரும் என்று இவள் படித்திருக்கிறாள் தான்.
கனவில் தனக்கு ஆபத்து என்ற தோற்றத்தை விட, தன்னை காப்பாற்ற கனவில் விபீஸ்வர் வந்தது தான் அவளை நெருடியது.
விபீஸ்வர் தன் மனதை இத்தனை பாதித்திருக்கிறானா? என்ற எண்ணமே அவளை குழப்பியது. அவளுக்குள் ஏதோ எங்கோ தவறுவதை போன்ற உணர்வு. அதுவும் சில நாட்களாக அவன் பார்வை, பேச்சில் ஏதோ புதுவித மாற்றத்தை இவளால் உணர முடிந்திருந்தது.
எல்லாம் தன்னால் தான் என்று நொந்து கொண்டவள், ‘அன்னைக்கு அவன் என் கையை பிடிச்சபோதே உதறி இருக்கணும், பாவம்ன்னு அவன்மேல பரிதாபபட்டது தப்பா போச்சு’ என்று தன் தலையில் அடித்து கொண்டாள்.
அன்றைய நாளில் தொழிற்சங்க கூட்டம் இருந்ததால் அரை நாள் கூட்டத்தின் விவாதத்திலேயே கழிந்திருந்தது.
கூட்டம் முடித்து இருவரும் நிறுவனம் சென்று கொண்டிருக்க வாகன நெரிசலில் சிக்கி தாமதமாக சற்று எரிச்சலோடு ஸ்டேரிங்வீலை விரல்களால் தட்டியபடி பொறுமையை இழந்து காத்திருந்தான் விபீஸ்வர்.
காவ்யதர்ஷினியின் பார்வை அவனை தவிர்த்து வெளியே வாகனங்களை பார்த்திருக்க, நாளுக்கு நாள் அவளின் விலகல் இவன் நெஞ்சை ஒருபுறம் பிழிந்தெடுப்பதாய்.
‘டக்டக்’ கார் கண்ணாடி தட்டப்பட்டது. அங்கே அழுக்கு சட்டை சிறுவன் வியாபார பொருட்களை தன் கைகளில் ஏந்தி நின்றிருந்தான்.
விபீஸ்வரின் கண்கள் சட்டென பளீச்சிட, கண்ணாடியை திறந்து விட்டான். ‘ஏய் சோடாபுட்டி, இப்ப வாய் திறக்காம எப்படி இருக்க நானும் பார்க்கிறேன்?’ என்று எண்ணிக் கொண்டான்.
“சார் சார் லைட் பென் சார்… வெறும் பத்து ரூபா தான் சார் வாங்கிங்க சார்…” கொளுத்தும் வெயிலில் அச்சிறுவன் விளக்கு எரியும் எழுதுகோளை வாங்கிக் கொள்ளும்படி வேண்டி நின்றான்.
காவ்யாவிற்கு பாவமாக தான் இருந்தது எனினும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். இப்போது இந்த பொருளை வாங்கி, விபீஸ்வரிடம் தனியாக வாங்கிக் கட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.
அச்சிறுவன் இன்னும் கெஞ்சியபடி நிற்க, வேறுபக்கம் திரும்பி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“இந்த பென்ல லைட் எரியும் சார்… பிளீஸ் மேடம் ஒரு பேனா வாங்கிக்கங்க மேடம்…” தொடர்ந்து அந்த சிறுவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அவளை கவனித்த விபீஸ்வர், ‘என்னாச்சு இவளுக்கு? ரொம்ப ஓவரா தான் பண்றா! சரியான அழுத்தக்காரி’ என்று கடுப்பானவன் நூறு ரூபாய் தாளை அச்சிறுவனிடம் நீட்டினான்.
“எத்தனை பென் சார் வேணும்?” காசை வாங்கிக் கொண்டு அந்த சிறுவன் கேட்க, “பத்து கொடு” விபீஸ்வரின் குரலில் காவ்யா திகைத்து திரும்பினாள். அவன் ஒற்றை புருவம் ஏற்றி, இறக்கி என்னவென்பதை போல கேட்க, இவள் மறுப்பாக தலையசைத்து விட்டு திரும்பி கொண்டாள்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்” பெரிய வியாபாரத்தை முடித்து விட்ட திருப்தியில் அச்சிறுவன் சந்தோசமாக நகர்ந்து சென்றான்.
‘என்னடா இது, அப்ப என்னை கேலி பேசிட்டு இப்ப இவனே வாங்கிறான்! நான் சொன்னதுக்காக வாங்கி இருப்பானோ? ச்சே ச்சே இருக்காது’ காவ்யா குழப்பமாக அவனை ஏறிட்டாள்.
“அந்த பையனுக்கு நானும் ஒருவேளை சாப்பாட்டுக்கு உதவி பண்ணிட்டேன் போதுமா, இதை நான் வச்சுட்டு என்ன செய்ய!” என்ற விபீஸ்வர் அந்த பேனாக்களை அவளின் கையிலேயே திணித்தான்.
“நீங்க கொடுத்த நூறு ரூபா உங்களுக்கு பெருசா இருக்காது, ஆனா அந்த பையனுக்கு அதுதான் சர் ரொம்ப பெரிய தொகை, இந்த பேனா எல்லாம் உங்களுக்கு சீப்பா தெரியலாம், ஆனா இதுல ஒரு பேனா வாங்க வழியில்லாம அல்லாடறவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க சர்” காவ்யா இத்தனை நாள் வாய்ப்பூட்டு கழன்று ஏதோவொரு வேகத்தில் பேசி விட்டாள்.
‘என்கிட்ட ஏட்டிக்குப் போட்டியா வாயடிக்கணும்னா மட்டும் பக்கம் பக்கமா பேச்சு வருமே!’ என்று அலட்டிக் கொண்டவன், “நம்ம சமுதாயத்தில எப்பவுமே இந்த ஏற்ற தாழ்வு இருந்திட்டே தான் இருக்கு காவ்யா, அதற்கான முழு காரணமும் வசதி படைச்சவங்க மட்டும் தான்ற கருத்தை என்னால ஒத்துக்க முடியாது. முன்னேறனும்னு துடிப்புள்ளவன் எந்த நிலைமையில இருந்தாலும் போராடி மேல வந்துடுவான்… நீ சொல்ற இந்த அடிமட்ட ஜனங்க அந்த வறுமைக்கும் வாழ்க்கைக்குமே தங்களை பழக்கப்படுத்திட்டு அதிலிருந்து மேலவர மனசில்லாம ஊறிபோய் கிடக்கிறவங்க!” விபீஸ்வரும் தன் நிலைப்பாட்டில் அவன் கருத்தை கூறினான்.
“இருக்கலாம் சர், அப்படி இருக்கிறவங்க தங்களோட அடுத்த தலைமுறையையும் அதே வறுமையில அழுத்தறது தான் கொடுமையா இருக்கு… சின்ன சின்ன குழந்தைங்க பிஞ்சு கையேந்தி பசிக்குதுன்னு கேட்கும்போது கஷ்டமா இருக்கும் சர்…!” என்று காவ்யா வேதனையாக சொல்ல, வாகன நெரிசல் குறைய விபீஸ்வர் தன் காரை மிதமான வேகத்தில் செலுத்தலானான்.
“சில விசயங்கள் கஷ்டமா இருந்தாலும் கடந்துதான் ஆகணும் காவ்யா, நீ வேதனைபடறதால மட்டும் இங்க எதுவும் மாற போறதில்ல” விபீஸ்வர் நிதர்சனத்தை உரைக்க, காவ்யாவும் ஆமோதித்து தலையசைத்தாள்.
“இதுபோல இருக்க குழந்தைகளுக்கு படிப்பும் சாப்பாடும் தந்தா அவங்களும் மேல வந்துடுவாங்க இல்ல சர்?”
“அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் இதையெல்லாம் செஞ்சுட்டு தானே இருக்காங்க”
“ஆனா பெருசா எந்த மாற்றமும் வந்தது போல தெரியலயே சர்!”
“ம்ஹும் இப்ப நாம வேலையை பத்தி மட்டுமா பேசிட்டு இருக்கோம், அப்ப ஏதோ சொன்ன? வேலையை தவிர என்கிட்ட பேச வேற எதுவும் இல்லன்னு!” சாலையை கவனித்தபடி விபீஸ்வர் பேச்சின் திசையை மாற்றி விட, அதுவரை பேசிக் கொண்டு வந்தவள் மறுபடி ஊமையாகி போனாள்.
அவளின் மூடியிட்ட மௌனம் இவனை இம்சிக்க, அதற்குள் அவர்களின் நிறுவனமும் வந்திருந்தது.
இறங்க போனவளை தடுத்தவன்,
“நான் தப்பானவன்னு என்னை பூத கண்ணாடி வச்சு பார்க்காத பேபி… என்னோட சாதாரணமா பேச கூட முடியாம உன்ன எது தடுக்குதுன்னு உன்ன நீயே கேட்டு பாரு!” விபீஸ்வர் அவளிடம் சொல்லிவிட்டு இறங்கிவிட, அவன் சொன்னதை முழுதாய் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துடனே இறங்கி அவன் பின்னோடு நடந்தாள்.
திறமையான முதலாளியாக… எதனையும் எதிர்த்து போராடும் வல்லவனாக… எதையும் அலட்சியபாவத்தோடு சாதித்து காட்டும் சாதனையாளனாக… பெண் இச்சையில் சிக்கி கிடந்த உல்லாசியாக… தாயன்பில் உடைந்து அழும் பிள்ளையாக… விபீஸ்வரின் எல்லா தோற்றங்களும் காவ்யதர்ஷினியை ஏதோ ஒரு வகையில் பாதிக்கதான் செய்தது. அந்த பாதிப்புகள் கசப்பான உணர்வு கலவையாய் தான் அவளுள் தேங்கி நின்றன.
அவன் நம்பிக்கையாளானா? மோசமானவனா? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு அந்நிறுவனத்தில் தான் பணிபுரியும் கடைசி மாதத்திற்கான நாட்களை எண்ணி கொண்டிருந்தாள் அவள். அத்தோடு தனது மாற்று வேலைக்கான தேடலிலும் ஈடுபட்டு இருந்தாள்.
அவளின் மனநிலையை உணர்ந்ததாலோ என்னவோ விபீஸ்வரும் தன்னை இயல்பாகவே காட்டிக் கொண்டான்.
அழையா விருந்தாளியென அவனுள் வந்திட்ட காதல்… அவனை அவனாய் இருக்க விடாமல் இம்சை செய்வதாய்.
கண்ணாடியின் பிம்பம் எப்போதும் போலவே அவன் உருவத்தை பிரதிபலிக்க, அவனுள்ளே மொத்தமாய் அவளாய் மாறிப்போன அறிகுறிகள்!
இப்போதே அவளிடம் தன் காதலை மொத்தமாய் கொட்டிவிடும் துடிப்பு, அவளின் மனமாற்றத்திற்காக இன்னும் பொறுத்திருக்க வேண்டிய தவிப்பு என
காதலின் தடத்தில் முதன்முதலாய் தட்டு தடுமாறி நடைப்பயிலும் மழலையாய் அவன் நெஞ்சம்!
விபீஸ்வரின் காத்திருப்பும் பொறுமையும் அவன் பிடிவாதத்திற்கு முன் சில நாட்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் ஓடிபோகுமென அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.
#
உயிர் தேடல் நீளும்…