Sangeetha’s Paarvaiye ramyamaai- full novel

Sangeetha’s Paarvaiye ramyamaai- full novel

பார்வையே ரம்மியமாய்

பார்வை – 1

மதுர குலுங்க குலுங்க

நீ நையாண்டி பாட்டுப் பாடு”

அலறிக் கொண்டிருந்தது அங்கிருந்த லவுட் ஸ்பீக்கர்கள். ஸ்பீக்கரை விட அங்கிருந்த ஆட்களிடமிருந்து வந்த சத்தம் சற்றுத் தூக்கலாக இருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், மற்றும் மயிலாட்டம் ஆடும் கலைஞர்கள், சில வாத்தியக் கலைஞர்கள், இவர்களோடு நண்டும் சிண்டுமாக ஆறேழுப் பொடுசுகள் என்று அந்தப் புகை வண்டி நிலையமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது இவர்கள் கொடுத்த அலப்பறையில்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிவந்தவர்களில்,  ‘இவைய்ங்களுக்கு இதே வேலையா போச்சு’ என்ற முகச்சுளிப்புடன் சிலரும், ‘அப்படி யாருக்குடா இந்த வரவேற்பு’ என்ற ஆர்வத்துடன் சிலரும் அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

கரகாட்டம் மற்றும் கோலாட்டக் கலைஞர்களுக்கு ஈடாகத் தன்னுடைய நடனத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தான் பாண்டியன். ஒடிசலான தேகம். பளபள மஞ்சள் கலர் சட்டை. தொடை தெரிய தூக்கிக் கட்டிய கைலி. கண்களில் போன திருவிழாவுக்கு வாங்கிய டூப்ளிகேட் ரேபான். இவன் தான் பாண்டி என்று எல்லோராலும் பாசமாக மற்றும் கோபமாக அழைக்கப்படும் பாண்டியன். 

பாண்டியனின் தற்போதைய சந்தோஷத்திற்குக் காரணம் அவனுடைய ஆருயிர்த் தோழனும், உறவுமுறைப்படி பங்காளியுமான பிரபாகரன் இன்று வேலை முடிந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மதுரை வருகிறான் என்பதே. பிரபாகரன் இங்கு இருக்கும்வரை இனி மதுரையே இவர்கள் கைக்குள் இருப்பதாக ஒரு நினைப்பு பாண்டியனுக்கு.

பாண்டியிடமிருந்து கரகாட்டப் பெண்களைக் காப்பதே அந்தக் குழுவில் உள்ள ஆண்களுக்குப் பெரும் வேலையாகிப் போனது. அவர்களுடைய முறைப்புகளும் கடுப்புகளும் எல்லை மீறுவதற்குள்ளாக பிரபாகரன் வந்தப் புகை வண்டி மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்திருந்தது அதிர்ஷ்ட வசமாக. வேகமாக வந்து ஒரு சிறுவன் பாண்டியின் காதில் இத்தகவலைக் கூறிவிட்டு ஆட்டத்தில் ஐக்கியமானான்.

“எடோய் என் மாப்பிள்ளை வண்டி வந்துருச்சு. நான் போய் அவனைக் கூட்டியாரேன். எங்க தலை தெரிஞ்சதும் இங்கிருக்குற அம்புட்டு பயலுக காதும் செவிடாகுற மாதிரி ஒரு கொட்டு அடிக்கணும் புரியுதா? சத்ததுக்கு ஏத்த மாதிரிதான் இன்னைக்குப் படிக்காசு கிடைக்கும். சொல்லிபுட்டேன் ஆமா” என்று பொதுவாக நின்று அனைவரின் காதுகளிலும் விழுமாறு சத்தமாகக் கூறியவன், இரண்டு பேரை மட்டும் தனியாக அழைத்து,

“எழுதிக் கொடுத்த வசனமெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்களாடா? நீங்க கூவுற கூவுல என் மாப்பி உச்சி குளிர்ந்து போயிடணும். இது மட்டும் நடந்துச்சு அண்ணன் உங்க ரெண்டு பேரையும் தனியா கவனிப்பேன்” என்று அவர்களின் காதைக் கடித்துவிட்டு அலப்பறையாக புகை வண்டி நிலையத்திற்குள் நுழைந்தான்.

அங்கோ இவன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வருவதற்குள் மொத்த ரயிலுமே காலியாகிப் போயிருக்க “மாப்பி… மாப்பி” என்று பாண்டி மட்டுமே தொண்டை வறளக் கத்திக் கொண்டிருந்தான். வெறுத்துப் போனவனாகத் தன்னுடைய அலைப்பேசியைக் கையில் எடுத்து அழைப்பு விடுக்க,

அழைப்பு ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக பெரும் சத்தம் வந்து பாண்டியின் காதை அடைத்தது. எங்கிருந்து இவ்வளவு சத்தம் என்பது புரிந்த நொடி வேக எட்டுக்களை எடுத்து வைத்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து சேர்ந்தான் பாண்டி. மூச்சு வாங்க ஓடி வந்தவன் கண்ட காட்சி,

சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாய் சூழ்ந்து ஆடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுநாயகமாக நின்று பாட்டின் சத்தத்தை விட அதிக சத்தமாக விசிலடித்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். 

கருமையான கேசம் அலை அலையாக அடங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, இதழ்களுக்குப் போட்டியாகக் கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களில் அவ்வளவு குறும்பிருந்தது. கூர்மையான நாசி, அளவான மீசை, ஆறடிக்குக் கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம், மாநிறத்தில் ஆண்மையின் மொத்த உருவமாக எந்தக் கவலையுமில்லாமல் ஆடிப் பாடிக் கொண்டிருந்தான் பிரபாகரன் சுருக்கமாகப் பிரபா.

பாண்டியைப் பார்த்தவுடன், “என்ன மாப்பி உன்னை வரவேற்க கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம் பார்த்தியா” என்று வாய் பேசினாலும் கால்கள் ஆட்டத்தை நிறுத்தவில்லை. பாண்டி வேகமாக வசனம் பேச வேண்டிய ஆட்களைத் தேட அவர்களோ மெய்மறந்து பிரபாவுடன் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“நிறுத்து… நிறுத்து… நிறுத்துங்கடா. இந்தா எல்லாரும் காசை வாங்கிட்டுக் கிளம்பு” என்று கோபமே உருவாக பாண்டி சொல்ல, அவனை அருகில் வந்து ஆரத் தழுவிக் கொண்டான் பிரபா.

“டேய் மாப்பி கூல்யா, கோவிச்சுக்கிட்டியா என்ன?” என்று அப்பொழுதும் நடனக் கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தவனின் தோள் மீது வம்படியாகக் கையைப் போட்டுக் கொண்டே கேட்டான் பிரபா.

“பின்ன என்னடா உன்னை வரவேற்க நான் வந்தா இவன் என்னை வரவேற்கிறானாம். போடா நான் எம்புட்டு பிளான் போட்டிருந்தேன் தெரியுமா? எல்லாம் வீணா போச்சு” விடாமல் முறுக்கிக் கொண்டான் பாண்டி.

“எது? இவனுங்க கூவுனதுதான் உன் பிளானா?” என்று அங்கு சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த இருவரையும் சுட்டிக் காட்டிப் பிரபா கேட்டவுடன்  அவ்விருவரும் வெகு பவ்வியமாக கைலியைக் கீழிறக்கி சட்டைக் காலரை இழுத்து விட்டுக் கொண்டார்கள்.

வேகமாக அவர்கள் இருவரின் அருகிலும் சென்ற பாண்டி, “அண்ணன் இல்லாத போதும் கரெக்டா உங்க வேலையை செஞ்சிருக்கீங்க டா. என்ன அண்ணனாலதான் அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்க முடியாம போச்சு” என்று உச்சு கொட்ட,

“அண்ணே காசு” என்று அவ்விருவரும் ஒற்றுமையாகக் கோரஸ் பாடித் தலையை சொரிந்தார்கள். “உங்களுக்கு இல்லாததாடா?” என்று கேட்டு சற்று அதிகமாகவே அவர்களுக்குப் பணத்தைக் கொடுக்கவும், பணம் வாங்கிய குஷியில் இருவரும்  மீண்டுமாகக் கோஷமெழுப்பினார்கள்.

“கலியுக இராம லெட்சுமணர்களே வருக வருக

மதுரை மண்ணின் உத்தம புத்திரர்களே வருக வருக”

என்று அவ்விருவரும் உச்சஸ்தாயில் கத்த, பாண்டி வெகு பெருமையாக மிதப்பாக பிரபாவை ஒரு பார்வைப் பார்க்க, பிரபாவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

“ஏன்டா உனக்கு இந்தக் கொலைவெறி? நான் ராமன் நீ லெட்சுமணனா?” என்று சிரிப்பும் இருமலுமாக பிரபா கேட்க,

“நான் உன்னைய விட ஆறு மாசம் பெரியவன்டா. நான்தான் ராமன். நீ லெட்சுமணன்” என்று சிரிக்காமல் சொன்னான் பாண்டி.

“நீ ராமனா? ஊருக்குள்ள ஒத்த புள்ளை விடாம துரத்தி துரத்தி சைட் அடிச்சவனெல்லாம் ராமனாடா?” என்று அடக்க மாட்டாமல் மீண்டும் சிரிக்கத் தொடங்கியவன், “ஆமா, இந்த விஷயம் என் தங்கச்சிக்குத் தெரியுமா?” என்று கர்ம சிரத்தையாக வினவினான் பிரபா.

“அவ அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாடா” என்று முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டுப் பதிலளித்தான் பாண்டி.

“ஏன் மாப்பி? மறுபடியும் சண்டை போட்டியா? ரெண்டு பேரும் அடிச்சுக்காம இருக்கவே மாட்டீங்களாடா?”

“இல்ல மாப்பி. இது வேற” என்று வெட்கப்பட்டுக் கொண்டே பாண்டி கூற,

“ஆத்தீ! அதை விட இது இன்னும் டேஞ்ஜராச்சேடா. ஏன்டா உன்னை மாதிரியே ரெண்டு குட்டிப் பாண்டி டவுசரில்லாம மதுரையை வலம் வர்றது பத்தாதா? மூணாவது வேறயா?” அதிர்ந்து போனவனாக வினவினான் பிரபா.

“ம்ப்ச் இப்பவே வாயை வைக்காதே மாப்பி. எனக்கு… எனக்கு என்னை மாதிரியே ஒரு குட்டிப் பொம்பளைப் புள்ள வேணும்டா” அருகில் வந்து பிரபாவின் சட்டைப் பட்டனைத் திருகிக் கொண்டே பாண்டி கூற,

“உன்னை மாதிரி பொம்பளைப் புள்ளயா” என்று கூறி கற்பனை செய்துப் பார்த்த பிரபா வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டு, “மாப்பி நான் எங்கம்மாவுக்கு ஒத்தப் புள்ளடா. இப்படியெல்லாம் சொல்லி எனக்கு நெஞ்சு வலி வர வைச்சுடாத. அதுக்கும் மேல தயவு செஞ்சு நீ வெட்கம் மட்டும் பட்டுடாதே. தாங்க முடியலைடா டேய்” என்று சொல்லியவாறே அவர்களின் காரை நோக்கிப் போனான் பிரபா.

அங்கு அவர்களுக்கு முன்பாக பிரபா கொண்டு வந்திருந்த பெட்டிப் படுக்கைகளுடன் ஆஜராகியிருந்தார்கள் அந்த ஆறேழு வாண்டுகளும். 

“எங்கக்காக்கள் பெத்த ரத்தினங்களே, எப்படிடா இருக்கீங்க எல்லாரும்? முப்பெரும் தேவியரும் அதான்டா என் மூணு அக்காக்களும் நலமா? அவர்களுக்கு வாக்கப்பட்டு வந்த என் அப்பாவி மாமாக்கள் நலமா?” என்று அவர்களை நோக்கிப் பிரபா தொடுத்தக் கேள்விக் கணைகளுக்கு,

“சூப்பர் மாமா, நல்லா இருக்கோம் மாமா, டாப்பு டக்கரு மாமா” என்று ஆளுக்கொருப் பதிலாகத் தந்தார்கள் அந்த மழலைப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

“அப்பாவி மாமாக்களா? அடப்பாவி மாமான்னு வேணா சொல்லு அதேன் அவெய்ங்களுக்குப் பொருத்தமா இருக்கும்” வாய் தன் பாட்டுக்கு முணுமுணுக்க பிரபாவின் பெட்டிகளை அந்த மகேந்திரா ஸ்கார்ப்பியோவினுள் வைத்துக் கொண்டிருந்தான் பாண்டி.

“ஏன்டா இப்படி குண்டக்க மண்டக்க பேசுற” என்ற பிரபாவின் கேள்விக்கு,

“சின்ன புள்ளைகென்டு நினைக்காத மாப்பி. அம்புட்டும் விஷம். நான் இப்ப எதாவது சொன்னேன்டு வையி, நாம வீடு போய் சேர்றதுக்குள்ள நாம பேசுன மேட்டரு போயிரும். இங்கனதான இருக்கப்போற, நாம சாவகாசமா பேசுவோம். இந்தாட்டி எத்தனை மாச லீவு மாப்பி? மூணு மாசமா ஆறு மாசமா?” என்று முன்னதை முணுமுணுப்பாகவும் பின்னதை சத்தமாகவும் கேட்டான் பாண்டி.

“இந்தாட்டி ஆறு மாசம் இங்கன தான் பாண்டி. ஆற அமர இருந்து வீட்டையும் மதுரையையும் ரசிக்கப் போறேன். கம்பெனியில சொல்லிட்டேன்டா. அஞ்சு மாசம் கழிச்சுத்தான் வருவேன்டு” பேசிக் கொண்டே பிள்ளைகள் அனைவரையும் நடு இருக்கையிலும் பின் இருக்கையிலுமாக அமர வைத்துவிட்டுத் தான் வந்து டிரைவர் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் பிரபா.

பாண்டியும் பெட்டிகளை ஏற்றி வைத்து விட்டு வந்து டிரைவர் இருக்கையில் அமர, அந்த மஹேந்திரா ஸ்கார்பியோ மதுரை ஹைவேசில் வேகமெடுக்கத் தொடங்கியது. இருக்கையை சாய்த்துவிட்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவாறு பிரபாகரன் கண்ணை மூடிக் கொள்ள, அவன் மனமறிந்தவனாக இளையராஜாவின் ராகங்களை ஒலிக்க வைத்தான் பாண்டியன்.

மெச்சுதலாக அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் பிரபா. பின்னிருந்து எழும் பிள்ளைகளின் சத்தமோ, அவர்களை மிரட்டும் பாண்டியின் குரலோ, வாகன நெரிசலோ எதுவுமே பிரபாவைப் பாதிக்கவில்லை. அவன் சிந்தை முழுவதையும் இளையராஜா ஆக்கிரமித்திருந்தார்.

பிரபாகரன் விவசாயக் குடும்பத்தில் ஒரு ஏழைத் தாய் தந்தையருக்கு மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவதாகப் பிறந்தவன். தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் தாயாரின் தலையில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் விழ, பிரபா வளர்ந்தது முழுக்க முழுக்க அவன் அப்பத்தாளிடம்தான்.

“உங்க சீயான் வயல்ல சீரக சம்பா சாகுபடி போட்டாகன்னா ஊரு சனமே நம்ம வரப்பு வழியாதான்ப்பு கடந்து போகும். வாசனை புடிக்கன்டே அந்த வழியாத்தான் போவாக வருவாக. அம்பூட்டு வாசனையா இருக்கும் அந்த அரிசி. இப்பெல்லாம் எங்க அப்படி வாசம் வருது? கண்ட கண்ட உரத்தைப் போட்டு மண்ணு வீணா போச்சு” இப்படியாகப் பல விவசாயக் கதைகளைக் கேட்டே வளர்ந்தான் பிரபாகரன்.

தந்தை இறந்த பிறகு பிரபாவின் தாய் சுந்தரவடிவால் தனியாளாக விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை. வானம் பொய்த்துப் போவது, தண்ணீர் பற்றாக்குறை, உரங்களின் விலையேற்றம், இடைத்தரகர்களின் தலையீடு என்று ஏகப்பட்டத் தடைகள். உழும் நிலத்தில் களையெடுக்கத் தெரிந்த சுந்தரவடிவுக்கு இந்தக் களைகளை அகற்றும் மார்க்கம் புரியவில்லை.

விளைவு, நிலத்தை விற்றுவிட்டு மாமியார் மற்றும் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் அப்பொழுது ஓரளவு வளர்ச்சி அடைய ஆரம்பித்திருந்தத் தன்னுடைய பிறந்த ஊரான மதுரை திருப்பரங்குன்றத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிய அளவில் ஒரு சாப்பாட்டுக் கடையைத் தொடங்கி அதில் வரும் வருமானம் மூலம் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

தங்கம், தனம், சொர்ணம் என்று மூன்று அக்காக்கள் பிரபாவுக்கு. பெயரளவிலாவது இவையெல்லாம் இருக்கட்டுமென்று அவர்களின் தந்தை இவ்வாறு பெயர் சூட்டியிருந்தார் போல. 

மூவரின் திருமணம், சீர்வரிசை, பிரசவம் என்று சுந்தரவடிவு திணறிப் போனதென்னவோ உண்மை. பிரபாகரன் தலையெடுத்து சம்பாரிக்கத் தொடங்கிய பின்னர்தான் அவர் கால்கள் சொஞ்சம் ஓய்வெடுக்கத் தொடங்கின.

மூன்று அக்காக்களுக்கும் மதுரையின் சுற்று வட்டாரத்துக்குள்ளாகவே சம்பந்தம் தகைந்திருந்தது. மூத்த அக்கா வீட்டுக்காரர் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர். இரண்டாவது மாப்பிள்ளை சிறு அளவில் கட்டிட வேலைகளை கான்டிராக்ட் எடுத்து செய்பவர். மூன்றாமவரோ சிறிய அளவில் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். எது இருக்கிறதோ இல்லையோ மூன்று மாப்பிள்ளைகளிடமும் மாப்பிள்ளை முறுக்கு இன்னும் குறையாமல் இருந்தது.

பிரபா படித்தது கடல் பொறியியல் (Marine Engineering). திட்டமிட்டோ அல்லது லட்சியத்திற்காகவோ இதில் சேரவில்லை. தானாக அமைந்தது. இறுதியாண்டு படிக்கும்பொழுதே ஜூனியராக அதாவது ஐந்தாம் நிலைப் பொறியாளராக கேம்பசிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டான். 

அதன் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் படித்துப் பரீட்சை எழுதி, நான்கு, மூன்று, இரண்டு என்று முன்னேறி இன்றுத் தலைமைப் பொறியாளராக (சீஃப் என்ஜினியர்) டேங்கர் கப்பலில் பணிபுரிகிறான்.

தமக்கைகள் மூவரின் திருமணத்திற்காக வாங்கியிருந்த கடன்களையெல்லாம் அடைத்து முடிக்கவே போதும் போதுமென்றானது பிரபாவுக்கு. அதன் பிறகும் அவர்களுக்கென்றே செலவு செய்து கொண்டிருந்தவனை அவனுடைய அப்பத்தா தான் சொந்தமாக ஒரு வீடு கட்டுமாறு பணித்தார்.

அவர் விருப்பப்படியே கிட்டத்தட்ட இரண்டு கிரவுன்ட் நிலம் வாங்கிப் போட்டான் பிரபா. தோப்பு வீடென்றால் கொள்ளைப் பிரியம் அப்பத்தாவிற்கு. அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே சற்றே பெரிய இடமாகவே வாங்கினான் பிரபா.

ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அப்பத்தா இறைவனடி சேர்ந்துவிட, சோர்ந்து போனவனாக வீடு கட்டும் பொறுப்பை இரண்டாவது அக்கா தனத்தினுடைய கணவரிடம் ஒப்படைத்து விட்டுத் தன் கப்பல் பணிக்குத் திரும்பிவிட்டான் பிரபா.

வீடு கிரஹப்பிரவேசத்துக்குக் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து இப்பொழுது தான் நிலத்தில் அவனுடைய பாதங்கள் பதிகின்றன. 

நீல நிறம் என்றால் கொள்ளைப் பிரியம் பிரபாகரனுக்கு. கப்பலில் வேலை முடிந்ததும் அந்த நீலக் கடலையும் நீல வானத்தையுமே மணிக்கணக்காக ரசித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பான் இளையராஜாவின் இசையோடு. அதைப் போலவே பசுமை சூழ்ந்த வயல்வெளியையும் நீல வானையும் அதாவது பச்சையும் நீலமும் இணைந்ததாகக் கண்டு களிக்க வேண்டுமென்பது மட்டுமே அவனுடைய நீண்டநாள் கனவு.

அப்பத்தா விதைத்த விவசாயக் கனவு அவனுக்குள் விருட்சமாக வளர்ந்திருந்தது. சொந்த வீடு என்ற கனவு நிறைவேறிவிட்டது. அடுத்ததாகப் பெரிய அளவில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணம் சேமிக்கத் தொடங்கியிருந்தான் பிரபாகரன்.

“இறங்கு மாப்பி” என்ற பாண்டியினுடைய குரலைக் கேட்டுக் கண் விழித்த பிரபா வீட்டைப் பார்த்து அதிர்ந்து போனான். சொந்த வீடு குறித்த தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைத்திருந்தவனை மூன்று மாப்பிள்ளைகளும் இணைந்து,

“அப்படியெல்லாம் நீயா ஒரு முடிவுக்கு வந்துடாத தம்பி” என்று சொல்வது போல, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வாசலில் பிரபாவை வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

 

பார்வை – 2

“என்ன மாப்புள எப்படி இருக்க?”

“பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?”

“ஐயா பிரபா என்னய்யா ஆளே இப்படி இளைச்சுப் போயிட்ட?”

இப்படி ஆள் மாற்றி ஆள் கேட்ட எந்தக் கேள்விக்குமே பிரபாவிடமிருந்து பதில் வரவில்லை. வீட்டைப் பார்த்த அதிர்விலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. தாயார், மூன்று தமக்கைகள், அவர்களின் கணவன்மார்கள் அந்த இடமே சொந்த பந்தங்களால் சூழப்பட்டிருந்தாலும் பிரபாவால் எப்பொழுதும் போல அவர்களோடு ஒன்ற முடியவில்லை.

சுற்றி வர நிறைய இடம் விட்டுப் பல வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நடுவில் வீடு இருக்க வேண்டும் என்பதே பிரபா மற்றும் அவன் அப்பத்தாவின் விருப்பமாகும். அதற்காகத்தான் வாங்கும் பொழுதே இரண்டு கிரவுண்ட் வருமளவுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுரடியில் இடம் வாங்கிப் போட்டான்.

கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் இதற்காகவே இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கியிருந்தான் பிரபா. மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி என்று அவன் வளர்க்கத் திட்டமிட்டிருந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே அது வீடாக இருக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மூன்று தமக்கைகளும் வரப் போக சற்றுப் பெரிய வீடாகவே ஒரு கிரவுண்டில் கட்டினாலும் எஞ்சியிருக்கும் இடம் தாராளமாக செடிகளுக்கும், மரங்களுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் போதும் என்றே நினைத்திருந்தான் பிரபா. ஆனால் இங்கு நடந்திருப்பதோ வேறாக இருந்தது.

அவனை வரவேற்றது ஒன்றல்ல மொத்தமாக நான்கு வீடுகள். பகுதிக்கு இரண்டாக இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வீடுகள் கார் பார்க்கிங் மற்றும் சகல வசதிகளோடு. நிலம் வாங்கிய புதிதில் சுற்றி ஃபென்சிங் போட்டுப் பாதுகாத்துத், தானும் அப்பத்தாவும் பார்த்துப் பார்த்து வைத்த மர வகைகளில் கால்பகுதி மட்டுமே மிஞ்சியிருந்தது.

“புண்ணியவான் வீட்டு வாசல்ல புங்க மரம் இருக்கணுமப்பு” என்று சொல்லியபடி அப்பத்தா வாசற்புரத்தில் நட்டு வைத்த நான்கு புங்கக்கன்றுகள் மட்டுமே ஆளுயர மரமாக வளர்ந்திருந்தன. இது தப்பியதற்குக் காரணம் தன் தாயார் சுந்தரவடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் பிரபா.

இப்படித் தன் நினைவுகளுடன் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரபாவை, “ஷாக்கைக் குறை, ஷாக்கை குறை இல்ல அதுக்கு வேற உன் மாமனுங்கத் தனி ஆவர்த்தனம் வாசிப்பானுங்க” என்று காதோரம் ஒலித்த பாண்டியின் கிசுகிசுப்பான குரல் நிஜத்திற்கு மீட்டு வந்தது.

“என்ன மாப்ளே அப்படியே அசந்து போய் நின்னுட்ட? என்னடா நாம ஒரு வீடு கட்டத்தானே காசு கொடுத்தோம், எப்படி மாமா நாலு வீடு கட்டியிருக்காங்கன்னு பார்க்குறியா?

உனக்கும் நல்லது கெட்டது சொல்ல எங்களை விட்டா யாரு இருக்கா மாப்ளே? அதான் நாங்க சகலைங்க மூணு பேருமா சேர்ந்து பேசி உனக்கும் அத்தைக்கும் ஒத்தாசையா இங்கனக்குள்ளவே இருந்துக்கலாமுன்னு முடிவு பண்ணோம்.

உங்கக்காங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கிருந்தாலும் உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது பாரு. அதான் நாங்களாவே பணம் பொரட்டிக் கட்டிக்கிட்டோம்” என்று ரொம்பவும் பெருந்தன்மையாகக் கூறினார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர்.

“நீ கொடுத்தக் காசுக்கெல்லாம் வரவு செலவுக் கணக்கு வழக்குப் பக்காவா வச்சிருக்கேன் பிரபா. நீ எப்பக் கேட்டாலும் உடனே கொடுத்திடுவேன்” என்று கேட்டால்தான் வரவு செலவு கணக்கு கைக்கு வரும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

“அடடா இப்ப எதுக்குத் தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? பிரபா முதல்ல குளிச்சு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரவைக்கு எங்க வீட்டுலதானே எல்லாருக்கும் சாப்பாடு. அப்பப் பேசிக்கலாம்” என்று எதுவுமே நடக்காதது போல் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்லியது மூன்றாவது அக்கா சொர்ணத்தின் கணவர்.

இப்பொழுது எந்த வீட்டிற்குள் தான் செல்வது என்பதே புரியாமல் திகைத்து நின்ற பிரபாவை, “எஞ்சாமி, உப்புக் காத்து பட்டுப்பட்டு இப்படிக் கறுத்துப் போயிட்டியே ராசா” என்று சொல்லியவாறே பிரபாவின் கைப்பிடித்து அவனைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவடிவு.

“ஹ்ம்க்கும்… இல்லாட்டி மட்டும் உன் புள்ள அப்படியே அரவிந்த்சாமி கலரு” என்று கூறிக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் பாண்டி.

“நீ சொன்னாலும் சொல்லலையின்னாலும் என் மகன் ஆளும் சரி அவன் மனசும் சரி எப்போதுமே வெள்ளை தான்டா பாண்டி” என்று அவனுக்குப் பதிலளித்தார் சுந்தரவடிவு.

“நீ என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு சித்தி. உன் மருமகனுங்களைக் கண்டுட்டா மட்டும் அப்படியே வாயை ஜிப்புப் போட்டு மூடிறு.”

“என்னடா பண்ணச் சொல்ற? பொட்டப் புள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கோமே” எனறு பெருமூச்சோடு கூறினார் சுந்தரவடிவு.

“இதைச் சொல்லிச் சொல்லியே எங்க வாயை அடைச்சிறு. நீயே கேளுடா பிரபா,  இந்த வீட்டு விஷயத்துல இவைங்க அடிச்சக் கூத்து அஸ்திவாரம் போட்டதுக்குப் பொறவு தான் எங்களுக்கே தெரிஞ்சுது.

அப்பயாவது உன்கிட்ட உடனே சொல்லி இதை அப்பவே தடுத்து நிறுத்தலாமுன்னு சொன்னா இந்த சித்தி விடவே இல்ல. பத்தாததுக்கு என்னையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிடுச்சு” பல நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் பாண்டி.

“என் ராசா பல ஆயிரம் மைல் கடந்து எந்தக் கப்பல்ல எந்தக் கடல்ல நிக்கிறானோ? அவன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாமுன்னு நாந்தான்யா சொன்னேன். அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இதை உன்னால தடுத்து நிறுத்த முடியாதுன்னு தான்யா சொல்லலை. அக்காங்களுக்காகவாவது பார்க்கணுமில்ல ராசா” என்றார் சுந்தரவடிவு.

“ஒத்த கண்ணுல வெண்ணையும் மத்த கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற சித்தி நீ” என்று பட்டென்று கூறிவிட்டான் பாண்டி.

அதைக் கேட்ட மாத்திரத்தில் சுந்தரவடிவின் கண்களில் இருந்து கண்ணீர் கரையுடைக்கத் தொடங்கியது. “என்னடா பாண்டி நீயும் இவுக அப்பாத்தாளை மாதிரியே பேசுற? சரி நான் நல்ல அம்மாவா இல்லாமலேயே இருந்துட்டுப் போறேன். உனக்கென்டு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைச்சுப்புட்டா அவ வந்து என் மவனை நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேனே.

அதுவுமில்ல தள்ளிக்கிட்டே போகுது. உஞ்சோட்டுப் பசங்க எல்லாம் பொண்டாட்டி, புள்ள, குட்டின்னு இருக்கும் போது எஞ்சாமி மட்டும் இப்படி ஒத்தையில் நிக்கிறானே” என்று சுந்தரவடிவு அழத் தொடங்கிவிட்டார்.

“ம்மா ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுற? உன்ன விட நல்ல அம்மா இந்த உலகத்துலேயே கிடையாதும்மா. நீ எம்புட்டு கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கினன்னு எனக்குத் தெரியாதாம்மா? நம்ம அக்காங்களுக்கு செய்றது என் கடமைம்மா. இதுக்கெல்லாம் நீ போட்டு மனசைக் குழப்பிக்காதே. இவன் கிடக்கான் கிறுக்குப் பய” என்று பாண்டியை முறைத்தவாறேத் தன் தாயை அணைத்துக் கொண்டு கூறினான் பிரபா.

“இங்காரு பிரபா, இந்தாட்டி என்ன ஆனாலுஞ்சரி பரிசம் போட்ட பிறவுதான் நீ கப்பலுக்குப் போற. அடுத்த ட்ரிப்பு வரும் போது கல்யாணத்தை முடிக்கிறோம். வயசும் முப்பதாகப் போவுதில்ல ராசா. 

இந்தக் கப்பல் வேலைதானே இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் புடிக்குதில்ல. போனதாட்டி வந்தப்ப சொன்னியே அந்த கனடா நாட்டு வேலை, பேசாம அதுல சேர்ந்துடுய்யா” என்று முடிவாகக் கூறினார் சுந்தரவடிவு.

“ம்மா என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு அப்படியெல்லாம் போக முடியாதும்மா. பொறுத்தது பொறுத்துட்ட. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் மட்டும் பொறுத்துக்க. நான் கொஞ்சம் காசு ரெடி பண்ணிட்டு இந்த வேலையவே விட்டுடறேன். நிலம் வாங்கி நாம பழையபடி விவசாயம் பண்ணலாம்மா. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா” என்றான் பிரபா.

“யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். கப்பலு என்ஜினியரென்டு சொன்னாலே எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறான். இதுல விவசாயம் பார்க்கிறான்னு சொன்னோமென்டு வையி, சாதகத்தைக் கூட குடுக்க மாட்டாய்ங்க” சுந்தரவடிவு அங்கலாய்த்துக் கொள்ளவும் “தம்பி” என்று அழைத்தவாறே மூன்று அக்காமார்களும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“இந்தா வந்தாச்சுல்ல முப்பெரும் தேவியர்களும்” என்றவாறே அவர்களை வரவேற்றான் பாண்டி.

“ஐயா பிரபா, அஸ்திவாரம் எல்லாம் போட்டப்புறம் அம்மாவுக்கு எப்ப விஷயம் தெரியுமோ அப்பத்தான்யா எங்களுக்கும் சொன்னாவ. இந்த ஒரு தாட்டி இந்தப் பாவிச் சிறுக்கியளை மன்னிச்சிறு சாமி” என்றார் மூத்த அக்கா தங்கம்.

“எக்கா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றவ? உங்களுக்குச் செய்யாம நான் யாருக்குக்கா செய்யப் போறேன்? இதுவும் என் கடமை தானேக்கா”

“இன்னொரு சென்மம் சேர்ந்து பொறப்போமா தெரியாது. ஆனா எங்களைப் பாரமா நினைக்காம பாசமா நினைக்குற பாரு, அதுக்காகவே இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் உன் கூடவே பொறக்கணும்டா தம்பி” கண்ணீருடன் கூறினார் இரண்டாவது அக்கா தனம்.

மூவரில் சற்றுக் கஷ்ட ஜீவனம் இவருக்குத்தான். கணவருக்கு எதாவது கட்டிட வேலை கான்டிராக்ட் கிடைக்கும் நாட்களில் சமாளித்து விடுவார். அது கிடைக்காத பொழுதோ வீட்டுச் செலவு, வாடகை, பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் என்று மிகவும் திணறிப் போய் விடுவார். அந்த சமயங்களில் அவருக்குக் கைகொடுத்து உதவுவது சுந்தர வடிவுதான்.

“மூணு பேருமா சேர்ந்து மதுரையில வெள்ளம் வர வைச்சிராதீகக்கோவ். கண்ணுல இருந்து வார வாட்டர் ஃபால்சை முதல்ல எல்லாரும் க்ளோஸ் பண்ணுங்க” சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டுக் கேலியில் இறங்கினான் பாண்டி.

“ம்க்கூம் ரொம்பத்தான்டா பாண்டி பண்ற” என்று பாண்டியிடம் நொடித்துக் கொண்டு, “எம்மா நம்ம மாணிக்கம் மாமா சொன்ன விஷயத்தை தம்பிகிட்ட சொல்லிட்டியளா” என்றார் மூன்றாவது அக்கா சொர்ணம்.

“அது என்னது எனக்குத் தெரியாத புது மேட்டரு” என்று பாண்டியும்,

“எந்த மாணிக்கம் மாமா ம்மா?” என்று பிரபாவும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

“அவுக உங்கப்பாரு வழியில தூரத்து சொந்தம்ய்யா. உங்க அப்பத்தா இறந்ததை சாரிக்க வந்திருந்தாவ. அப்பத்தேன் உனக்கு பொண்ணு பார்க்குறோமென்டு தெரிஞ்சு அவுக பொஞ்சாதி வழியில் பொள்ளாச்சியில் ஒரு பொண்ணு இருக்குறதா சொல்லிக் கையோட சாதகமும் புள்ள போட்டோவும் மறுக்கா ஒரு தரம் வந்து தந்துட்டும் போனாக” என்றார் சுந்தரவடிவு.

“பொண்ணு பார்க்க அம்புட்டு அழகா இருக்கா தம்பி. அவுக அம்மா அப்பா அம்மாச்சி எல்லாம் ரொம்ப நல்ல மாதிரியாம். ஒரேயொரு தம்பி மட்டுந்தானாம் அந்தப் புள்ளைக்கு.”

“பெரிய ஜமீன்தார் வம்சமாம் தம்பி. பொள்ளாச்சி பக்கத்துல பூங்குளம் தான் இவுக ஊராம்.”

“பொண்ணும் உனக்கு சமமா நல்லா படிச்சிருக்கு தம்பி. அந்த ஊருலேயே ஒரு பள்ளிக்கூடத்துல கணக்கு டீச்சரா இருக்காம்.”

மூன்று அக்காக்களும் மாற்றி மாற்றிக் கூற அவர்கள் கூறியதில் எது காதில் விழுந்ததோ இல்லையோ ‘கணக்கு டீச்சர்’ என்ற ஒற்றை வார்த்தையில் மற்ற அனைத்தும் மறந்து போயிருந்தது பிரபாவுக்கு.

மனம் வேகமாகத் தனக்கு வந்த அத்தனைக் கணக்கு வாத்தியார்களையும் எண்ணிப் பார்க்க வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டான் பிரபா. மற்ற அனைத்துப் பாடங்களையும் எளிதில் படித்து விடுபனுக்கு கணக்கு மட்டும் இன்று வரை தண்ணிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

“எக்காவ் கறிவேப்பிலை கொத்து கணக்கா ஒத்தத் தம்பியை வளர்த்து யாரோ ஒரு வாத்திச்சி கையில மாட்டி வுட பார்க்குறீயளே. இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்ல ஆமா” பொங்கி விட்டான் பிரபாகரன்.

“அதானே என் மாப்பிக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு” விஜய்காந்த குரலிலேயே கூறினான் பாண்டியன்.

“போங்கடா போக்கத்தவனுகளா. சொல்றானுக பாரு தேடிக் கண்டுபுடிச்சு ஒரு காரணத்தை. ஒரு நல்ல நாளா பார்த்து நான் சாதகம் பொருத்தம் பார்க்கப் போறேன். எல்லாம் நல்லபடியா பொருந்தி வந்தா இந்தப் பொண்ணுக்குப் பரிசம் போட்ட பொறவுதான் நீ கப்பலுக்குக் கிளம்பணும்” இறுதியில் உறுதியாகக் கூறிவிட்டார் சுந்தரவடிவு.

“எம்மா நீ அந்த போட்டொவைக் கொண்டு வந்துக் காட்டும்மா. அப்புறம் பார்க்கலாம் இவன் என்ன சொல்லுறான்டு” பரிகாசமாக சிரித்துக் கொண்டே கூறினார் தங்கம்.

“எக்கா உன் தம்பியை என்னன்டு நினைச்ச? அவ எந்தூரு ரம்பையா இருந்தாலும் எனக்கு வேண்டான்னா வேண்டாம் தான்” மிதப்பாகவே சொன்னான் பிரபா.

 “சரி சரி எங்க தம்பி தங்கக் கம்பிதான். நீ முதல்ல குளிச்சு சாப்பிட்டுட்டு நிதானமா போட்டோவைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வா. இப்ப நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு வாசலை நோக்கிச் சென்றவர்கள் திரும்ப வந்து,

“தம்பி இந்த விஷயம் இப்போதைக்கு உன் மாமனுங்களுக்குத் தெரிய வேண்டாம்ய்யா. இப்பவே சொன்னோமுன்னா எதாவது சொல்லி  ஆட்டையக் கலைச்சாலும் கலைச்சிறுவாக. எல்லாம் ஒத்து வந்த பொறவு சொல்லிக்கலாம்” என்பதையும் மறக்காமல் சொல்லி விட்டுச் சென்றார்கள். 

“பார்த்தியா மாப்பி, எதை எங்க சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு பூராத்தையும் டிசைட் பண்றது இதுகதேன். எதையும் எப்படி ப்ளான் பண்ணிப் பண்ணனுங்குறதை உன் அக்காங்க கிட்ட தான்  கத்துக்கணும்டா” பாண்டி பிரபாவின் காதோடு கிசுகிசுத்துக் கொண்டிருக்க, தன் மகள்களோடு சேர்ந்து அவர்கள் தாய் சுந்தரவடிவும் வெளியே வந்தார்.

“என்னடி இவன் பொண்ணு பேரைக் கூட கேக்க மாட்டேங்குறான்?” கவலையோடுப் பெண்களிடம் முறையிட,

“ம்மா அதெல்லாம் தம்பி ஒத்துக்கும்மா. நீ முதல்ல அந்தப் புள்ள போட்டோவைத் தம்பிக்கிட்ட குடு” என்றார் தங்கம்.

“முதல்ல சாதகம் பார்த்துட்டுப் பொறவு கொடுக்கலாமென்டு இருந்தேன். நான் இன்னைக்கே நம்ம சோசியரைப் போய் பார்த்துட்டு வாரேன்” என்றார் சுந்தரவடிவு ஒரு முடிவெடுத்தவராக.

“டேய் பாண்டி நீ இன்னும் கடைக்குக் கிளம்பாம இங்கனதேன் சுத்திக்கிட்டிருக்கியாடா?” என்று பாண்டியை நோக்கிக் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரவடிவு.

“அதானே பார்த்தேன்! என்னடா சித்தி இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். டேய் பிரபா இதுக்கு மேல நான் இங்கன இருந்தா உங்கம்மா இட்லிச் சட்டியில மாவுக்குப் பதிலா என்னை ஊத்தி வேவ வைச்சிரும். நான் கிளம்பறேன். சாயங்காலமா நீ அப்படியே கடைப் பக்கம் வாடா” என்றுவிட்டு அவர்களின் சாப்பாட்டுக் கடை நோக்கிக் கிளம்பி விட்டான் பாண்டி. பாண்டி தான் சுந்தரவடிவுக்குத் துணையாக அவர்களின் கடையைத் தற்போது கவனித்துக் கொள்கிறான்.

பாண்டி கிளம்பியதும் பிரபா சென்று குளித்துவிட்டு வர, வெள்ளை வெளேரென்று ஆவி பறக்க சுடச்சுட புழுங்கலரிசிச் சாதமும், மணக்க மணக்க மண் சட்டியில் அயிரை மீன் குழம்பும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

டைனிங் டேபிளைத் தவிர்த்துவிட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தவன், “ஸ்ஸ்ஸ் எத்தனை நாளாச்சு எங்கம்மா வைக்கிற அயிரை மீன் குழம்பு சாப்பிட்டு? இன்னைக்கு ஒரு புடி புடிக்கப் போறேன்” என்று கூறிக் கைகளைப் பரபரவென்றுத் தேய்த்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

முதற் கவளம் அமுதமாய் அவன் தொண்டைக்குள் இறங்க, கண்களை மூடி அதை அனுபவித்து ருசித்தவன், நாவால் சப்புக் கொட்டியவாறே, “ம்மா மீன் குழம்பு வைக்கிறதுல இந்த ஜில்லாவிலேயே உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதும்மா” என்று கூறி வியர்க்க விறுவிறுக்க ரசித்து உண்டான்.

ஆவலாகப் பிரபா சாப்பிடுவதையே ஆசையோடுப் பார்த்திருந்தார் சுந்தரவடிவு. ‘ஆத்தா மீனாட்சி என் மவனுக்கு இந்த சம்பந்தம் எப்படியாவது முடிஞ்சிடணும். உனக்குப் பொங்க வைச்சுப் படையல் போடுறேன் தாயீ’ என்று அவசரமாக மீனாட்சி அம்மனுக்கு ஒரு வேண்டுதல் விண்ணப்பத்தையும் வைக்கத் தவறவில்லை அந்தத் தாய் மனது.

‘உண்ட களைப்பு தொண்டை வரைக்கும்’ என்று கூறி அம்மாவின் மடியிலேயே ஒரு தூக்கமும் போட்ட பிறகுதான் பிரபாவுக்கு வீடு வந்து சேர்ந்த நிறைவே கிட்டியது. அந்தி சாயும் பொழுதில் கையில் காஃபி டம்ளரோடு பின்கட்டுக்கு வந்தவன் அங்கிருந்ததைப் பார்த்து அந்த நாளின் இரண்டாவது முறையாக அதிர்ந்து போனான்.

அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றவன் “அம்மா” என்று கோபமாக அவனையும் மீறிக் கத்தியிருந்தான் பிரபா.

 

பார்வை – 3

நான்கு அடி உயரத்துக்கு மேடை எழுப்பப்பட்டு அதற்கு மேல் கம்பிகளின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. பார்த்ததும் புரிந்து போனது பிரபாவுக்கு அது ஒரு செல்போன் கோபுரமென்று. அதிர்ந்து போனவனாகத் தனை மறந்து அம்மா என்று கிட்டத்தட்ட அலறியிருந்தான் பிரபா.

ஒற்றை வீடு நான்கானதைக் கூட அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது. இதை முற்றிலும் ஜீரணிக்க முடியவில்லை. பிரபாவின் சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார் சுந்தரவடிவு.

“பிரபா எதுக்குய்யா இந்தக் கத்து கத்துன?”

“இது என்னம்மா? யாரு இதைக் கட்டுறதுக்குப் பர்மிஷன் கொடுத்தது?” விழிகள் கோபத்தில்  சிவந்திருக்க உக்கிர மூர்த்தியாக மாறியிருந்தான் பிரபா.

“இதுக்குத்தான் இந்தக் கத்து கத்துனியாக்கும். நாங்கூட என்னமோ ஏதோ என்டு பயந்து போயிட்டேன்.” என்று நொடித்துக்  கொண்ட சுந்தரவடிவு மேற்கொண்டு சொல்லத் தொடங்கினார்.

“இந்த வீட்டுக்கு வந்த புதுசுல யாரோட செல்லு போனுலயும் டவரே கிடைக்கலைய்யா. நீ பேசுறது கூட பாதி சமயம் அரை குறையா தான்யா காதுல விழும். அப்பத்தேன் நம்ம மூத்த மாப்பிள்ளை நான் இதுக்கு ஒரு வழி பண்ணுறேன் அத்தைன்டு சொல்லி இந்த டவரு வைக்க ஏற்பாடு பண்ணாவ.

மாமா தேன் பாவம். முனுசிபாலிட்டி ஆபீசுக்கு நடையா நடந்து அனுமதி வாங்குனாவ. இதை வைச்சுப்புட்டா நல்லா சிக்னலு கிடைக்குமாம்ய்யா. போதா குறைக்கு இதை நம்ம இடத்துல வைக்கிறதுக்காவ வேண்டி அவைங்க நமக்குக் காசு வேற குடுப்பாய்ங்களாமே!

நீ ஆயிரந்தான் சொல்லு, படிச்சவுக படிச்சவுகதேன். ‘நீங்களும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அத்தை இந்தக் கடையில் நின்டு கஷ்டப்படுவீக? இதை இங்கன வைச்சுக்கிட்டா அதுக்கு அந்த கம்பெனிக்காரன் காசு கொடுப்பான். நாளைப்பின்ன பிரபாவுக்கு கல்யாணம் ஆன பொறவு நீங்க கைச்செலவுக்கு அவனை மாசா மாசம் எதிர்பார்க்க வேணாம் பாருங்க’ என்டு சொல்லி இதை ஏற்பாடு பண்ணிவுட்டாக பிரபா” ரொம்பவும் பெருமையாகக் கூறினார் அந்த வெள்ளந்திப் பெண்மணி.

“ஓஹோ இப்படி வேற சொல்லிக்கிட்டுத் திரியிறாரா அந்தாளு! எங்கம்மாவை எப்படிப் பார்த்துக்கணுமுன்னு எனக்குத் தெரியும். அதை ஒன்னும் இந்தாளு எனக்கு சொல்லித் தரத் தேவையில்லை.

நானும் அக்கா வூட்டுக்காரராச்சேன்னு பொறுத்துப் போனா ரொம்பத்தேன் பண்றாக மூணு பேரும். இதைக் கட்டுற முன்னுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமுன்னு தோனலையில்ல? கப்பலுக்குத் தானே போனேன், செத்து கித்துப் போயிடலையே” எவ்வளவு கத்தியும் ஆற்றாமைத் தீரவில்லை பிரபாவுக்கு.

தான் ஆசை ஆசையாகப் பார்த்துப் பார்த்து வாங்கிய நிலம். அதில் தன் இஷ்டத்துக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. சரி உடன் பிறப்புகளுடன் ஒன்றாக வாழ்க்கையைக் கழிப்பதும் ஒரு சுகம் தானே. இன்றைய காலகட்டத்தில் எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஆனால் இந்த செல்போன் கோபுரம் முற்றிலும் அவன் கருத்துக்களுக்கு எதிரானதாயிற்றே. என்னதான் உடன் பிறந்தவர்கள் மீது பாசம் கொண்டவனாக இருந்தாலும் பிரபாவும் ஒரு தனி மனிதன் தானே. அவனுக்கென்று தனிப்பட்டக் கொள்கைகள், விருப்பு வெறுப்புகள் இருப்பதில் தவறொன்றும் கிடையாதே.

இயற்கையின் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் தீராக் காதல் கொண்ட ஒருவன் இது போன்ற விஷயங்களுக்கு எதிராக நிற்பதில் ஐயமொன்றும் இல்லையே. காலம் காலமாக வாழப் போகும் வீட்டில் இப்படி இயற்கைக்கு முரணான ஒரு விஷயம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பிரபாவால்.

வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் மூத்த அக்கா தங்கத்தின் வீட்டிற்கு. செத்து கித்துப் போயிடலையே என்று பிரபாவின் வாய் வழி வந்த வார்த்தையால் திகைத்து நின்ற சுந்தரவடிவு என்னும் மனித சிலைக்கு இப்பொழுது பிரபா வீராவேசமாகக் கிளம்பவும் தான் உயிர் வந்தது.

“ஐயா பிரபா என்னய்யா இது? மாமாவைப் போய் மருவாதை இல்லாம பேசிக்கிட்டிருக்க? ஏன்ய்யா இது இங்கன வைக்கக் கூடாதா? எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருய்யா. கோவப்படாதே” என்று சொல்லிப் பிரபாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சுந்தரவடிவுக்கு நன்றாகவே தெரியும், தன்னுடைய மகன் எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையானவனோ அதே அளவுக்குக் கோபக்காரனும் கூட. அவனுடைய கோபம் நியாயமான விஷயத்திற்கு மட்டுமே என்பதும் அவருக்குத் தெரியும்.

மூன்று மாமன்களும் தன்னை எவ்வளவு திட்டினாலும், மட்டம் தட்டினாலும் பொறுத்துக் கொள்வான். அதே சமயம் அக்காக்களின் மீது கோபமாக கை நீட்டுவார்களேயானால் பொங்கி விடுவான். அவர்களும் பிரபாவுக்குப் பயந்துதான் கை நீட்டாமல் இருக்கிறார்கள், இல்லையென்றால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதையும் சுந்தரவடிவும், பிரபாவின் தமக்கைகளும் உணர்ந்தே இருந்தனர்.

தன்னுடைய மகனைப் பற்றி முழுவதுமாக அறிந்த சுந்தரவடிவுக்கு அவனுடைய கோபத்தை சாதாரணமாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அதே சமயம் இவன் சென்று மூத்த மருமகனிடம் கோபமாகப் பேசுவதையும் விரும்பவில்லை அவர். எனவே சற்றுப் பொறுமையாகவே இந்த விடயத்தைக் கையாள விரும்பினார் அவர்.

“பதறுன காரியம் சிதறிப் போகும். நீ முதல்ல உள்ளார வா. வந்து அம்மாட்ட சொல்லு என்ன விஷயமென்டு. பொறவு மாமாகிட்ட பேசலாம்” என்று சொல்லிப் பிரபாவின் பிடித்தக் கையை விடாமல் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் சுந்தரவடிவு.

வீட்டுக்குள் அழைத்துச் சென்று பிரபாவுக்கு முதலில் குடிப்பதற்கென்று தண்ணீரைக் கொடுத்த பிறகுதான் பிரபாவைப் பேச விட்டார் சுந்தரவடிவு. உள்ளுக்குள் இறங்கிய தண்ணீர் பிரபாவின் கோபத்தையும் கொஞ்சம் மட்டுப் படுத்தி இருந்தது.

“ம்மா வீடுகளோ, ஆஸ்பத்திரியோ, பள்ளிக்கூடமோ இருக்குற பகுதிகள்ல இந்த செல்போன் டவரு எல்லாம் கட்டக் கூடாதென்டு சட்டமே இருக்கும்மா. டவுனுக்குள்ளாரதான் மனுஷங்க காசுக்கு ஆசைப்பட்டு வீட்டோட மொட்டை மாடியிலேயே இதைக் கட்டிக்கிறாக.

பொறவு அந்த செல்போன் கம்பெனிக்காரன் கிட்ட வாங்குன காசைக் கொண்டு போய் கேன்சரு ஆஸ்பத்திரியில கொடுக்குறாக. நமக்கு எதுக்கும்மா இந்தத் தலையெழுத்து? வாழுறது கொஞ்ச நாள், அதை நோய் நொடி இல்லாம வாழ வேண்டாமாம்மா?” சற்றுப் பொறுமையாகவே எடுத்துரைத்தான் பிரபா.

“கேன்சரா? இதால இம்புட்டுப் பாதிப்பு வருமென்டு எனக்குத் தெரியாதேய்யா” என்றார் சுந்தரவடிவு.

“இது உங்களுக்குத் தெரியாம இருக்குறதுல தப்பில்லைம்மா. ஆனா நீங்க சொன்னீகளே படிச்சவரென்டு, அந்த மெத்தப் படிச்ச மேதாவிக்கு இது தெரியாம இருக்குறது தான் தப்பு. மனுசனோட சராசரி ஆயுட்காலம் எவ்வளவென்டு சொல்லுங்க பார்ப்போம்?”

“என்ன ஒரு அறுபதிலிருந்து எழுபது வருஷம் இருக்குமாய்யா?”

“இப்ப இருக்குற கால கட்டத்துல ஒரு மனுஷனோட சராசரி ஆயுட் காலம் எழுபத்தி இரண்டு வருஷம். ஆனா தேனீ, தேனீ அப்படிங்குற ஒரு பூச்சி வகை இருக்கில்லையா? அது மட்டும் இல்லைன்னா மனுசனோட ஆயுட் காலம் வெறும் நாலு வருஷம் கூட வராது.”

“என்னய்யா சொல்ற?” மோவாயில் கை வைத்து வியந்து போனவராகக் கேட்டார் சுந்தரவடிவு. அவருக்கு இந்த விஷயம் அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.

“நிசந்தான்ம்மா. தேனீக்கள் இருக்குறதாலதேன் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுப், பூவாகிப், பிஞ்சாகிக், காயாகிக், கனியாகுற விசயமெல்லாம் நடக்குது. அந்தத் தேனீ இனம் மட்டும் முழுக்க அழிஞ்சுப் போச்சுன்னா மனுசனுக்கு சாப்பிட சாப்பாடு எதுவும் கிடைக்காம அவனோட சராசரி ஆயுட் காலம் வெறும் நாலு வருஷமா குறைஞ்சு போயிடும்.

அந்தத் தேனீ வகையையும் சிட்டுக்குருவி இனத்தையும் முழுக்க முழுக்க அழிக்கிறது இந்த செல் போன் டவருங்கதேன். இதுல இருந்து வார கதிர் வீச்சு தாங்க முடியாமத்தேன் அதுக எல்லாம் அழிஞ்சுக்கிட்டே வருது.

அதுமட்டுமில்லாம இந்த டவரு வீடுகளுக்குப் பக்கத்துல இருந்தா அந்த வீடுகள்ல இருக்குற மனுசங்களுக்குக் கேன்சர் வருமென்டு ஆதாரப்பூர்வமாகவே நிரூபிச்சிருக்காக. வெளி நாடுகள்ல எல்லாம் இதை வைக்கிறதுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு. நம்மூர்லதேன் சிலர் ஏமாந்தும், சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டும் வைச்சிப்புட்டு பொறவு கஷ்டப்படுறாக” தாயாருக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துக் கூறினான் பிரபா.

“ஆத்தீ இதுல இம்புட்டு விசயமிருக்கா. எனக்குத் தெரியாதேயப்பு. ஏதோ இதை வைச்சுப்புட்டா சிக்னலு நல்லா கிடைக்குமென்டு சொல்லவும் தலையாட்டிப் போட்டேன். புத்து நோயா! அந்தப் பேரைக் கேட்டாலே பகீரென்டு வருதுய்யா எனக்கு” உண்மையிலேயே கொஞ்சம் பயந்து தான் போனார் சுந்தரவடிவு.

“ம்மா நம்ம அப்பத்தா ஒரு வார்த்தை சொல்லும் நினைவிருக்கா? ‘இந்தக் காலத்துல எல்லாரும் மனுசப் பயலுக வாழுறதுக்கு மட்டுந்தேன் வீடு கட்டிக்கிறாக’ என்டு அடிக்கடி சொல்லும். நாம கிராமத்துல இருந்து இந்தூருக்கு வந்த புதுசுல இப்படி சொல்லிச் சொல்லியே புலம்பிக்கிட்டு இருக்கும்.

அப்ப நாம இருந்தது ரொம்ப சின்ன லைன் வீடு. இதுல எப்படி மாடு, கன்னு, கோழி எல்லாம் வளர்க்க முடியுமென்டு விசனப்பட்டுக்கிட்டே இருக்கும். வீட்டுக்கே அப்படிச் சொல்லும் போது இந்த பூமி நமக்கு மட்டுமாம்மா சொந்தம்? எல்லா உயிரினத்துக்கும் சேர்த்துத் தானே. நம்மளோட சுயநலத்துக்காக நாம ஒரு உயிரினத்தைக் கூண்டோட அழிக்கிறது எந்த வகையிலம்மா நியாயம்?”

தன்னுடைய பல நாள் ஆதங்கத்தைத் தன் தாயாரிடம் கொட்டித் தீர்த்து விட்டான் பிரபா. உலக மக்களின் சுயநலப் போக்கை நினைத்துக் கவலை கொண்டாலும், இப்படிப் பல்லுயிர் ஓம்பும் தன் மகனை நினைத்துப் பெருமை பட்டுக் கொண்டார் சுந்தரவடிவு.

“என்ன ஆனாலுஞ்சரி அப்பு, இந்த டவரு இங்கன இருக்கப் படாது. ஆனா இதை எப்படிய்யா உன் மாமன்கிட்ட சொல்றது? மூணு பேருல ரொம்பவும் நொண்ண நாட்டியம் புடிச்சவனாச்சே. தான் புடிச்ச மொசலுக்கு மூணே காலென்டு இவன் ஒத்தக் கால்ல நிப்பானே” மூத்த மருமகனைப் பற்றி நினைக்கும் பொழுதே பயம் பற்றிக் கொண்டது சுந்தரவடிவுக்கு. ஏகப்பட்டதைச் சமாளித்தவருக்கு இன்றுத் தன் மருமகன் எந்த ஏழரையைக் கூட்டப் போகிறாரோ என்று பயம் வருவது இயல்பு தானே.

“நீ கூட வந்து வேடிக்கையை மட்டும் பாரு. மூணுல எந்தூடு தங்கமக்கா வூடு?” என்றவாறே கிளம்பி விட்டான் பிரபா. கையோடு தமக்கை வீட்டுக்கென வாங்கி வந்தப் பொருட்களையும் எடுத்துக் கொண்டான். பின்தொடர்ந்த சுந்தரவடிவுக்குத்தான் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.

“இந்தூடு தான்ய்யா” என்று பிரபாவிடம் சொல்லிவிட்டு, உள் நுழைந்து மகளை அழைத்துக் கொண்டே அடுப்படிக்குள் புகுந்து கொண்டார் சுந்தரவடிவு.

இவர்கள் வந்த அரவம் கேட்டு அறை ஒன்றிலிருந்து வெளிப்பட்டார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர் நடேசன். அதற்குள் தமக்கையின் மக்கட் செல்வங்கள் மூவரும் பிரபாவைச் சூழ்ந்து கொள்ள பொறுமையாக அவர்களிடம் பேசி, அவர்களுக்காக வாங்கி வந்ததை அவர்களிடம் கொடுத்தான் பிரபா.

பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றைக் கையோடு ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சென்றுவிட, ஹாலில் எஞ்சியிருந்தது பிரபாவும் நடேசனும் மட்டும்தான். “வா மாப்புள” பிரபாவின் கையிலிருந்த பை காலியாகும் வரை அதில் கொஞ்சம் கவனமாக இருந்த மனிதர் இப்பொழுது தான் வரவேற்றார் மச்சினனை.

“எப்புடி இருக்கீக மாமா?” ஓற்றைக் கேள்வி தான் கேட்டான் பிரபா. வறண்டு கிடக்கும் வைகை அணையில் கீழ்ப்பாலம் முங்கி மேப்பாலம் முங்கும் அளவுக்கு வெள்ளம் வந்ததைப் போல வார்த்தைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு வந்தன நடேசனிடமிருந்து.

“எங்கிட்டு நல்லா இருக்குறது. அதுவும் உன் வூட்டுக்கு மூத்த மருமகனா வாக்கப்பட்டு வந்துட்டு நான் அதுக்கெல்லாம் ஆசைப்பட முடியுமா? நீ பாட்டுக்கு ஆறு ஏழு மாசம் நிம்மதியா கப்பலே கதியென்டு போயிடுற. இங்க என் பொழப்பில்ல நாறிப் போகுது.

உன் மத்த ரெண்டு அக்காங்களுக்கும் மாப்பிள்ளை பார்க்கும் போதே சொன்னேன். பார்க்குற வரன் என் தகுதிக்கு இல்லைன்னாலும் கொஞ்சமாவது எனக்கு சரிசமமா பாருங்க அப்படின்டு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். ஆரு கேட்டா என் பேச்சை.

நல்லா தேடிக் கண்டுபுடிச்சீங்கடா ஊருல இல்லாத மாப்பிள்ளைகளை. ஒருத்தன் மேஸ்திரி, இன்னொருத்தன் மெக்கானிக்கு. இவனுக எல்லாம் என் தகுதிக்கு ஈடாகுவானுகளா?

இந்த லட்சணத்துல நீ பாட்டுக்கு வூடு கட்டுற வேலையை என்னமோ ஊருலயே இவன் ஒருத்தன்தான் இருக்குற மாதிரி உன் இரண்டாவது அக்கா வூட்டுக்காரர் கிட்ட கொடுத்துட்ட. இதைக் கட்டி முடிக்கிறதுக்குள்ள அவன் சொல்றதை எல்லாம் நான் கேட்குற மாதிரி ஆயிடுச்சு. இதெல்லாம் தேவையா எனக்கு?

இனி இந்த மாதிரி முக்கிய வேலையெல்லாம் நீ எனக்கிட்டக் கொடுத்துப் பழகு மாப்புள. இந்த ஒரு தடவை போனா போகுதுன்டு பொறுத்துப் போயிட்டேன். சும்மா சும்மா இதுவே நடந்தா அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ. என் வீடு எப்படி இருக்கணுமென்டு சொல்ல அவன் யாரு? மனசுக்குள்ள பெரிய எஞ்சினியரென்டு நினைப்பு” கடகடவென பொரிந்துத் தள்ளிவிட்டார் நடேசன்.

பேசி முடித்துவிட்டு ஆவலாக பிரபாவின் முகத்தைப் பார்க்க, அவனோ மிகவும் சாவகாசமாக கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கேட்டானே ஒரு கேள்வி.

“நாந்தேன் அடிக்கு ஒருக்கா போன் போடுறேன்ல்ல மாமா, அப்பயே இதையும் சொல்லியிருக்கலாமே. ஏன் சொல்லாம விட்டீக? அப்பத்தா இருக்கும் போது வெத்தலை வாங்கியாந்து கொடுத்தா கூட ஒரு போன் போட்டு சொல்லுவீக. இதையும் அது மாதிரி சொல்லியிருக்க வேண்டியது தானே.”

பிரபாகரன் கேட்டதென்னவோ மிகவும் எளிதான கேள்விதான். நியாயமான கேள்வியும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக என்ன சொல்வதென்று தான் ஐயோ பாவம் நடேசனுக்குத் தெரியவில்லை.

பிரபாவுக்கும் இது ஒன்றும் புதிதல்ல. இவர்கள் மூவரும் சேர்ந்து கொண்டு கூட்டுக் களவாணித்தனம் செய்வதும், பிறகு ஒவ்வொருவரும் தனித்தனியாக மற்றவரைப் பற்றிக் குறை சொல்வதும் பழகிப் போன ஒன்று. எப்பொழுதும் தெரியாதது போல் காட்டிக் கொள்பவன் இன்று முதல் முறையாக நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக ஒரு கேள்வி கேட்டே விட்டான்.

பதில் சொல்லத் தெரியாத நடேசன் கோபத்தைப் பதிலாக மாற்றிக் கொண்டார். “அடியே தங்கம், பேரைப் பாரு பேரை தங்கமாம் தங்கம். வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சலம். கிளம்புடி முதல்ல இங்கேயிருந்து. கேட்டான்ல்ல உன் தம்பி நாக்கு மேல பல்லைப் போட்டு ஒரு வார்த்தைக் கேட்டுட்டான்ல்ல.

 நானெல்லாம் கவரி மான் பரம்பரையாக்கும். போய் பொண்டாட்டி புள்ள குட்டியோட பிளாட்பாரத்துல தங்கினாலும் தங்குவேன். இனி ஒரு நிமிசம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டே வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடக்கத் தொடங்கிவிட்டார்.

“மாமா இப்ப நான் என்ன சொல்லிப்போட்டேன்டு இப்படிக் கோபப்படுறீக. மத்த ரெண்டு மாமாவுந்தேன் சொல்லலை. நீங்களாவது சொல்லியிருக்கலாமேன்டு ஒரு உரிமையில தானே கேட்டேன். இதுக்குப் போய் இப்புடிக் கோவிச்சுக்கிடுறீயளே” என்று கூறி அவர் கையைப் பிடித்து இழுத்து வந்து உள்ளே அமர வைத்தான் பிரபா.

மற்ற இருவரையும் விடத் தன்னிடம் தான் உரிமை அதிகம் என்பது போல பிரபா சொன்னதில் கொஞ்சம் மனம் குளிர்ந்து இருந்தாலும், “என்னைப் பார்த்து எப்படி மாப்புள நீ அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்” என்று கவுண்டமணி கணக்காக மீண்டும் மீண்டும் பொரிந்து கொண்டிருந்தார் நடேசன்.

“அத விடுங்க மாமா. ஏதோ அறியா புள்ள தெரியாம பேசிப்புட்டேன். மன்னிச்சிடுங்க மாமா” என்று பிரபா கூறவும் நடேசனின் தலையில் இமயமலையின் சாரல் வீசியதை யாரும் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டார்.

“நான் இப்ப வேற ஒரு முக்கியமான விசயத்தைப் பத்திப் பேசத்தேன் வந்தேன் மாமா” லேசாக அடிக் கோடிட்டுக் காட்டினான் பிரபா.

அடுத்து எந்த பூதம் வெளியாகப் போகுதோ என்ற பயத்துடனேயே பிரபாவை ஏறிட்டுப் பார்த்தார் நடேசன். பிரபாவிடம் கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து அவனுடைய இடத்தில் ஆளுக்கொரு வீடாகக் கட்டிக் கொண்டது மூவருக்குமே கொஞ்சம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

“மாமா இந்த செல் போன் டவரு…” என்று பிரபா ஆரம்பித்ததுமே ரொம்பவும் பெருமையாகப் பேசத் தொடங்கினார் நடேசன்.

“நீ பாட்டுக்கு இப்புடி ஊருக்கு ஒதுக்குப்புறமா இடத்தை வாங்கிப் போட்டுப்புட்ட. இங்கன என்னடான்னா ஆத்திர அவசரத்துக்குக் கூட ஒரு போன் பேச முடியாது போல. எந்த போன்லயும் சிக்னலே கிடைக்கல.

இங்கனதேன் மாப்புள உன் மாமா எப்பேற்பட்ட அறிவாளி அப்படிங்குறதை நீ புரிஞ்சுக்கணும். உன் மத்த மாமனுங்களும் வெறுமன புலம்ப மட்டுந்தேன் லாயக்கு. நாந்தேன் இதுக்கு என்ன தீர்வென்டு நல்லா யோசிச்சுப் பார்த்து இப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணினேன்.

உனக்கு நல்லா வகையா ஒரு அமௌன்ட்டும் பேசி வைச்சிருக்கேன். எடம் உன் பேர்ல தானே இருக்கு. அதேன் நீ வந்துக் கையெழுத்துப் போட்டதும் பணத்தைத் தருவாகளாம். அது வரைக்கும் ஏன் வேலையை நிறுத்தி வைக்கீக. ஆரம்பிச்சுக்கிடுங்க. என் மாப்பிள்ளைக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்டு சொல்லி வேலையை ஆரம்பிக்க சொல்லிட்டேன். நமக்கும் ஒரு உத்தரவாதம் வேணுமில்ல. எப்படி என் சாமர்த்தியம்?” காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாத குறையாக அவ்வளவுப் பெருமையாகக் கூறினார் நடேசன்.

“இல்ல மாமா எனக்கு அது இங்க இருக்குறதுல விருப்பமில்ல. அதை நிறுத்திட சொல்லிருங்க மாமா. அது நம்ம உடம்புக்கும் கேடு” தன்மையாகவே கூறினான்பிரபா.

“என்ன மாப்புள சுத்த கூறு கெட்டத்தனமா பேசுற. சும்மா இருக்குற இடத்துல நாலு கம்பிய நட்டுட்டு அதுக்கு நமக்கு லட்சக் கணக்குல காசு தாரேங்குறாய்ங்க. பேசாம பணத்தை வாங்கிப் போடுவியா, அதை விட்டுட்டு கேனைத்தனமா பேசிக்கிட்டிருக்க?”

“நான் கேனையனாவே இருந்துட்டுப் போறேன் மாமா. என் இடத்துல அந்த டவர் இருக்கக் கூடாது அவ்வளவுதேன். என் இடமுன்னு இல்ல, என் வீட்டைச் சுத்திக் குறைஞ்சது நூறு மீட்டர் தூரத்துக்கு அந்த டவர் வர்றதை என்னால அனுமதிக்க முடியாது மாமா” கொஞ்சம் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

“ஆனாலும் நீ இம்புட்டு சுயநலவாதியா இருக்கக் கூடாது மாப்புள. இதால எத்தனை பேர் பயனடைவாக தெரியுமா?” அவ்வளவு எளிதில் இதை விட மனமில்லை நடேசனுக்கு.

“எனக்கு என் குடும்பந்தேன் முக்கியம் மாமா. இந்த என் குடும்பத்துக்குள்ள நீங்களுந்தேன் இருக்கீக. இதால என்னென்ன கேடு வருமென்டு தெரிஞ்ச பொறவும் இதை வைக்க என் மனசு ஒப்பலை. அதேன் காசு எதுவும் வாங்கலையில்ல. இதை இத்தோட நிறுத்திப்புட்டு அவுக சாமானத்தையெல்லாம் எடுத்துக்கிட சொல்லிடுங்க” உறுதியாக சொல்லிவிட்டு எழுந்துவிட்டான் பிரபாகரன்.

“இல்ல மாப்புள, இப்படிப் பாதில நிறுத்தினா கோர்ட்டு கேசென்டு எதுவும் போனாய்ங்கென்னா நமக்குத் தானே வீண் அலைச்சலு… சிக்கலு…” என்று இழுத்தார் நடேசன்.

“இங்காருங்க மாமா, இடம் என் பேருல இருக்கு. என்கிட்ட சொல்லாம, என் அனுமதி இல்லாம இதைக் கட்ட ஆரம்பிச்சதுக்கே நானும் அவைங்க மேல கேசு போடலாம். இதைச் சொல்லுங்க அவைங்ககிட்ட. அதேன் காசு எதுவும் வாங்கலையில்ல, அப்புறமென்ன? காசு வாங்கலையில்ல?” என்று மீண்டும் ஒருமுறை நடேசனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்து அழுத்தமாக வினவினான் பிரபாகரன்.

அவனுடைய அந்த அழுத்தமானப் பேச்சிலும் பார்வையிலும் சற்றே மிரண்டு போனவராக இடம் வலமாகத் தலையை மட்டும் ஆட்டி வைத்தார் நடேசன். இனி பிரபா தன்னுடைய வாதத்திலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வர மாட்டான் என்பதுத் தெளிவாகப் புரிந்து போனது நடேசனுக்கு. செல்போன் கம்பெனிக்காரர்களிடம் எப்படிப் பேசி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார் அந்தப் புத்திசாலி மனிதர்.

“எக்கோவ் உப்புக்கண்டம் வாசம் ஆளைத் தூக்குது. வீட்டுல போட்டியாக்கா?” என்று கேட்டவாறே சமையலறையை நோக்கி நகர்ந்தான் பிரபாகரன்.

 

பார்வை – 4

அந்த செல்போன் கோபுரத்தைத் தொடர்ந்து கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவதற்குள் பிரபாகரனின் மூத்த மாமா நடேசனுக்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாற் போல் ஆனது. அவ்வளவு எளிதில் அந்த செல்போன் நிறுவனம் அவர்களுடைய கட்டுமானத்தை நிறுத்த முன் வரவில்லை.

பிரபாவோ ‘அது உன் பாடு’ எனும் விதமாக எதிலும் தலையிடவே இல்லை. ஆனால் அந்த செல்போன் டவர் அங்கு இருக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். நடேசன் படாதபாடு பட்டு அந்த செல்போன் டவரை எடுக்க வைத்தார். இதற்கே ஒரு மாத காலம் முற்றிலும் கடந்திருந்தது.

தான் பிரபாவுடைய நலன் கருதி செய்த ஒரு செயலை அவன் அவமதித்தது மட்டுமல்லாமல், அதற்காக முன் பின் தெரியாதவர்களிடம் எல்லாம் தன்னைக் கீழிறங்கிப் போகச் செய்துவிட்டானே என்று பிரபாவின் மீது கடுங்கோபத்தில் இருந்தார் நடேசன்.

நடேசன் மட்டுமல்ல மற்ற இரண்டு அக்காவின் கணவர்களும் கூட பிரபாவின் மீது கோபமாகத் தான் இருந்தார்கள். கழிவு நீர் வெளியேற்றம், மழை நீர் சேகரிப்புப் போன்ற விடயங்கள் கட்டமைப்பில் இரண்டாவது மாமாவுக்கும் பிரபாவுக்கும் முட்டிக் கொண்டது.

அவரிடம் தானே பிரபா வீடு கட்டும் பொறுப்பை விட்டுச் சென்றிருந்தான். எனவே அது தொடர்பான கேள்விகளை அவரிடம் தானே கேட்க முடியும். பிரபாவிற்கு அத்தியாவசியமாகத் தோன்றுவதெல்லாம் அவருக்கு அநாவசியமாகத் தோன்றியது காலக் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். 

மூன்றாவது அக்காவின் கணவர் தனக்கெனத் தனியாக ஒரு மெக்கானிக் ஷாப்பை வீட்டுக்கு முன்பாக வைத்துக் கொள்ளப் போவதாகக் கூற, பிரபா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மூன்றாவது அக்காவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். மற்ற இரண்டு அக்காக்களுக்கும் ஆளுக்கொருப் பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அதைக் காரணமாகக் கூறி, ‘பெண் பிள்ளைகள் வளரும் வீட்டில் இதெல்லாம் வேண்டாம். தேவையில்லாதப் பிரச்சனைகள் வரலாம்’ எனக் கூறி மறுத்திருந்தான்.

அதோடல்லாமல் ‘இந்த இடமும் இன்னும் அந்தளவுக்கு வளர்ச்சியடையவில்லை. உங்களுக்கு டவுனுக்குள் வேறு இடம் பார்க்கலாம் மாமா’ என்றும் கூறியிருந்தான். ‘அது எனக்குத் தெரியாதா’ என்று முறுக்கிக் கொண்டு திரிபவரிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் பிரபாவும் அத்தோடு விட்டுவிட்டான்.

இவ்வாறாக மூன்று மாமன்மார்களும் பிரபாவின் மீது ஏகக் கடுப்போடு இருந்த மிக நல்ல தருணத்தில் தான், சுந்தரவடிவு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பெண்ணின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து முடித்தார்.  இரண்டு ஜாதகமும் நன்றாகப் பொருந்தி இருந்தது.

முறைப்படி அதைத் தன் மகள்கள் மற்றும் மருமகன்களிடமும் தெரிவிக்கத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தத் தருணமும் அமைந்தது.

அன்று இரண்டாவது மகள் வயிற்றுப் பேரனுக்குப் பிறந்த நாள். சிறுவனுக்கு நண்பர்களை அழைத்துக் கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாட ஆசை. இம்முறை மாமன் வீட்டிலிருக்கும் பொழுது பிறந்த நாள் வந்ததால் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தப் புத்திசாலி வாண்டு.

அவன் விருப்பப்படியே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமாக மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். மெல்ல சுந்தரவடிவு பேச்சைத் தொடங்கினார்.

“மாப்பிள்ளைக எல்லாரும் ஒன்னா இருக்கீக. இங்கனயே நான் விசயத்தை சொல்லிடறேன். நம்ம பிரபாவுக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரு வரன் வந்திருக்கு.”

“பொள்ளாச்சியாஆஆஆ… அதெல்லாம் சரி வராது அத்தை. ஆரு இங்கனயிருந்து அம்புட்டுத் தொலவு போயாரது? அதெல்லாஞ் சரிப்படாது” சுந்தரவடிவு முடிக்கும் முன்னமே முந்திக் கொண்டார் மூத்த மாப்பிள்ளை.

“ஏங்க செத்த இருங்க. அம்மா என்னதான் சொல்றாகென்டு கேட்போமே” மூத்த உடன்பிறப்புத் தன் கடமையை செவ்வனே செய்து முடித்தது. “ம்க்கூம்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவருடைய மணாளன்.

“கொஞ்சம் தொலவுதேன்  மாப்புள. ஆனா நமக்குத் தூரத்து உறவு முறைக்காரவுக அதேன்…” என்று இழுத்தார் சுந்தரவடிவு.

“தூரத்து சொந்தமென்டா எம்புட்டுத் தூரமென்டு தெளிவா சொல்லிப்புடு சித்தி” என்றான் பாண்டி.

“நம்ம மாணிக்கம் அண்ணேன் இருக்காகல்ல அவுகளோட பொஞ்சாதி வழிச் சொந்தம். பொள்ளாச்சிப் பக்கம் பெரிய சமீன்தார் குடும்பமாம். சாரிச்ச வரைக்கும் நல்ல விதமாத்தேன் சொல்றாக. 

அதேன் நீங்க எல்லாம் உங்களுக்கு என்னைக்கு உங்களுக்குத் தோதுப்படுமென்டு சொன்னீகன்னா நாம போய் பொண்ணு பார்த்துட்டு வரலாம்” ஒருவழியாக விஷயத்தைச் சொல்லி முடித்துவிட்டார் சுந்தரவடிவு.

“இதுக்கு எதுக்கு அம்புட்டுத் தொலைவு போகணுங்குறேன்? அதேன் என் அக்கா மவ இருக்காள்ல்ல? அவளையே பரிசம் போட்றுவோம்” என்றார் இரண்டாவது மாப்பிள்ளை.

“நீ மட்டும் உன் அக்கா மகளைக் கட்டாம வெளியில நல்ல புள்ளயா பார்த்துக் கட்டிக்கிடுவ. நாங்க மட்டும் கட்டிக்கிடணுமாக்கும். என்ன ஒரு நல்லெண்ணம்” என்று பாண்டி முணுமுணுக்க அவனுக்கு ஒரு முறைப்பான பார்வைப் பரிசாகக் கிடைத்தது இரண்டாவது அக்கா தனத்திடமிருந்து.

“இங்காருங்க அத்தே இந்த சமீன்தார் வூட்டுப் புள்ள எல்லாஞ் சரிப்படாது. உங்க மகனை அப்படியே வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டுப் போயிறுவாக. அப்புறம் உங்க மகன் இருந்தும் இல்லாத மாதிரிதேன் பார்த்திக்கிடுங்க” இலவச ஆலோசனை வழங்கியது மூன்றாவது மருமகன்.

“ஆமாம்மா எனக்கென்னவோ மாமா சொல்றது தான் சரின்னு தோனுது. நாம எதுக்கும் வேற இடமா பார்ப்போமே” என்று சொன்ன பிரபாகரனை வெட்டவா குத்தவா என்பது போல அவனுடைய தாயாரும் தமக்கைகளும் பார்த்து வைக்க, மெல்ல அந்த இடத்திலிருந்து பாண்டியுடன் சேர்ந்து நழுவிவிட்டான் பிரபாகரன்.

இருவரும் சென்ற பிறகு, மூன்று மாப்பிள்ளைகளும் கூட ஒருவர் பின் ஒருவராகக் கீழிறங்கிச் சென்று விட மகள்களுடன் தனித்துப் பேச இடம் கிடைத்தது சுந்தரவடிவுக்கு.

“என்னங்கடி இது இந்தப் பய இந்தப் பாடு படுத்துறான். பொம்பளைப் பிள்ளைக உங்களுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்கக் கூட நான் இம்புட்டுக் கஷ்டப்படலை. ஆனா இந்தப் பய என்னைய ஒரு வழி ஆக்காம விட மாட்டான் போலயே.

நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன். திட்டிப் பார்த்துட்டேன். அழுதுங் கூடப் பார்த்துட்டேன். ஒன்னத்துக்கும் புடி கொடுக்க மாட்டேங்குறான். உங்க அப்பத்தா இருந்திருந்தாலாவதுப் பேசிப் பேசியே அவனை வழிக்குக் கொண்டு வந்துருவாக. மவராசி என்னைய இப்படித் தனியா பொலம்ப வுட்டுட்டு அவியளும் போய்ச் சேர்ந்துட்டாக.

பொண்ணைப் போய் பார்த்ததுக்கப்புறம் புடிக்கலைன்டு சொன்னா கூட ஒத்துக்கலாம். இப்படி போட்டோவைக் கூடப் பார்க்காமப் புடிவாதம் புடிக்கிறவனை என்னதேன் பண்றது?” தன்பாட்டில் புலம்பத் தொடங்கிவிட்டார் சுந்தரவடிவு.

“எம்மா தம்பி போன டிரிப்பு வந்தப்ப சொல்லுச்சே அவுக கேப்டனோ ஆரோ கப்பலுக்குப் போன எடத்துல ஒரு வெளிநாட்டுப் புள்ளய காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டதா. அதேன்மா நம்ம நாலு பேரையும் உக்கார வைச்சு கதை கதையா சொன்னுச்சே, மறந்துட்டீகளாக்கும்?

அந்த மாதிரி நம்ம தம்பியும் ஆராவது வெளி நாட்டுப் புள்ளயைக் காதலிக்குமோ? அதை சொல்ல சங்கடப் பட்டுக்கிட்டுதேன் இப்புடி புடி கொடுக்காம இருக்குதோ?” என்றார் மூத்த மகள் தங்கம்.

“நம்ம தம்பி அப்படியெல்லாம் பண்ணாதுக்கா” என்று ஒருமித்தக் குரலில் கூறினார்கள் இளையவர்கள் இருவரும்.

“அப்படி அவன் யாரையாச்சும் விரும்பினா கூட பரவாயில்லயே. சாம் சாமென்டு நான் கல்யாணம் பண்ணி வைப்பேனே. அப்படி எதாவது இருக்கான்டு நீங்க மூணு பேரும் சேர்ந்து கொஞ்சம் நயமா சாரிச்சு சொல்லுங்கடி. புண்ணியமா போகும் உங்களுக்கு” என்றார் சுந்தரவடிவு.

“ஏம்மா தம்பி அப்படி வெள்ளைக்காரியைக் கட்டிக்கிறதுல உனக்கு வருத்தம் இல்லையா?” சொர்ணத்திடமிருந்து வந்தது இந்தக் கேள்வி.

“எனக்குத் தேவை எல்லாம் அவன் கல்யாணம் முடிஞ்சு குடும்பம், புள்ள குட்டியென்டு சந்தோசமா இருக்கணும். அம்புட்டுத்தேன். வாராவ யாரா இருந்தா என்ன? அவ என்னைய தாங்க வேண்டாம். என் மகனுக்குப் புடிச்சவங்குற ஒரே காரணத்துக்காகவே நான் அவளைத் தங்கத் தட்டுல வைச்சுத் தாங்க மாட்டேனா?” வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவருடைய அடி மனதிலிருந்து வந்த வார்த்தைகளில் மகள்கள் மூவரும் கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள்.

“நீ ஒன்னும் கவலைப்படாதம்மா. அதேன் பாண்டிப்பய கூப்புட்டுப் போயிருக்கான்ல்ல. அவஞ் சொன்னா நம்ம தம்பி கேட்டுக்கும்மா. இல்லாட்டி திரும்ப ஒருக்கா காலையில நாமளே தம்பிக்கிட்ட பேசுவோம்மா” என்று மகள்கள் மூவரும் சேர்ந்துத் தாயாருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்.

**********************

பாண்டியும் பிரபாவும் ஆளில்லா அந்த ரோட்டில் நடை பயின்று கொண்டு இருந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முதலில் மௌனத்தை உடைத்தது பாண்டிதான்.

“ஏன் மாப்பி ஆரம்பத்துலயிருந்து இந்த சம்பந்தம் வேண்டான்டே சொல்லிக்கிட்டு இருக்க? உனக்குப் புடிக்கலையா? புள்ளவூட்டு போட்டோவைப் பார்த்தியா?” என்று பாண்டி வினவ,

“அதெல்லாம் நான் எந்த போட்டோவும் பார்க்கலை மாப்பி. எனக்கென்னவோ ஆரம்பத்துலேயே இது சரிவராதென்டு தோனிடுச்சு. அவ்வளவு பெரிய வீட்டுப் புள்ள இங்கன எல்லாம் வந்து இருக்குமாடா?

எத்தனை நாள்தான் பாண்டி பணத்துக்குப் பின்னாடியே ஒடுறது? எனக்கு விவசாயந்தேன் என் கனவு, லெட்சியம் எல்லாமே பாண்டி. அதுக்கு எனக்கு ஒத்துழைக்கிற புள்ளயா கட்டுனாத்தேன் வாழ்க்கை சிக்கலில்லாம போகும். இந்தப் புள்ள அதுக்குச் சரிவருமென்டு எனக்குத் தோனலைடா” என்றான் பிரபா.

“இப்ப என்ன, உனக்கு நயன்தாரா வேணாம். தேன்மொழி கனிமொழியென்டு எவளாவது ஒருத்தி வாய்க்கா வரப்புல திரியிறவதேன் வேணுமாக்கும்” நக்கலாக வினவினான் பாண்டி.

பாண்டியின் தோளில் கையைப் போட்டு அவன் கழுத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்ட பிரபா, “இந்த நக்கலுதான வேண்டாங்குறது” என்று கடுப்படிக்க,

“அடேய் விடுறா என்னைய. ஒரு அறியா புள்ளைய கழுத்தை நசுக்கிக் கொன்னுப்புடாத” என்றவாறே ஒருவழியாக பிரபாவின் கிடுக்கிப் பிடியில் இருந்து நழுவிக் கொண்டான் பாண்டி.

“இங்காரு பிரபா இத்தன நாளுந்தேன் சித்தி பொண்ணு பார்த்துச்சு. ஆனா அது சரியில்ல இது சரியில்லையென்டு சொல்லி சித்தியே பாதிய தட்டிக் கழிச்சிரும். அதுவும் மீறி ஒத்து வந்தா உன் மாமனுங்க ஒருக்கா ஃபில்டர் பண்ணுவானுங்க.

எல்லாத்தையும் தாண்டி வந்தா அந்த பொண்ணு வூட்டுக்காரங்களே எங்களுக்குக் கப்பல்ல வேலை பார்க்குற மாப்பிள்ளை வேண்டாமென்றுவாக. இப்படியே போயிக்கிட்டே இருந்தா இதுக்கு முடிவுதேன் என்ன மாப்பி? பொண்ணைப் பார்க்காமலேயே நீயா ஒரு முடிவுக்கு வராதடா.

உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதா இல்லையா? காலா காலத்துல இதையெல்லாம் நடத்தி முடிச்சுப்புடணும் மாப்பி. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுப் புத்தியோட பொழச்சுக்க ஆமா” நண்பனின் வாழ்க்கையில் தனக்கிருக்கும் அக்கறையை வார்த்தைகளில் நிரூபித்து இருந்தான் பாண்டி.

பாண்டி சொல்வது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக பிரபாவுக்கும் தோன்ற, “இப்ப என்னைய என்னதேன் மாப்பி பண்ணச் சொல்லுற?” என்று ஒருவழியாக இறங்கி வந்தான் பிரபா.

“அப்படிக் கேளு. இப்ப நேரா வீட்டுக்குப் போவோம். எப்படியும் சித்தி உனக்கு ஒரு மண்டகப்படி வைச்சிருக்கும். அதைக் காது குளிர கேட்டு ரசிக்கிறோம். அப்புறஞ் சித்தி மனசு குளிர அந்தப் புள்ளயைப் போய் பொண்ணு பார்த்துட்டு வாரோம். நேர்ல பார்த்தும் உனக்குச் சரி வராதென்டு தோனுச்சுன்னா என்ன செய்றதென்டு யோசிப்போம். இப்ப வா முதல்ல வூட்டுக்கு நடையைக் கட்டுவோம்” என்று கூறி பிரபாவையும் இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாண்டி.

பாண்டியின் கூற்றைக் கொஞ்சமும் பொய்யாக்காமல் பயங்கர கோபத்துடன் இருந்தார் சுந்தரவடிவு. அது அவர் கதவு திறந்து விடும் வேகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக இருக்கையிலேயே சுந்தரவடிவு ஏதோ பேசத் தொடங்க,

“சித்தி வெயிட். சுப்ரபாதத்தை ஆரம்பிச்சிராத. நான் எல்லாத்தையும் அவங்கிட்ட பேசிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். இப்பப் பேயாமப் போய் அந்தப் புள்ள போட்டோவைக் கொண்டாந்து உன் புள்ள கையில கொடு. அதப் பார்த்துட்டு அவன் ஒரு முடிவு சொல்லட்டும்” என்று கூறி சுந்தரவடிவை உள்ளே அனுப்பி வைத்தான் பாண்டி.

புகைப்படத்தை எடுப்பதற்காக சந்தோஷத்துடன் சுந்தரவடிவு உள்ளே சென்றுவிட, “உன் மாமனுங்களை நம்பிக் கல்யாணத்தை நடத்துற வேலையைத்தேன் தர முடியாது. நிறுத்துற வேலையை நல்லாவே செய்வானுக. அதால இப்போதைக்கு சித்திக்கிட்ட மறுப்பா எதையுஞ் சொல்லி வைக்காதே மாப்பி. நாம பார்த்துக்கலாம்” என்று பிரபாவிடம் சொல்லி வைத்தான் பாண்டி.

புன்னகை முகமாக சுந்தரவடிவு புகைப்படத்துடன் திரும்பி வர, அதை அவரிடமிருந்து கிட்டத்தட்டப் பிடுங்கி முதலில் பார்த்தான் பாண்டி. “சித்தி பரவாயில்லயே நல்லா அம்சமான புள்ளயாதேன் பார்த்திருக்க. காலெண்டருல போட்டிருக்க மகாலெட்சுமி போட்டோ கணக்காவுல்ல இருக்கு இந்தப் புள்ள” என்றான் பாண்டி.

“கண்ணு போடாதடா என் மருமக மேல” என்று சுந்தரவடிவு நொடித்துக் கொள்ள,

“இந்தா மாப்பி, நீ பாரு. பார்த்து ஒரு நல்ல முடிவா எடு. சட்டு புட்டுனு போய் பொண்ணைப் பார்த்துப் பேசி முடிப்போம். சரி சித்த நானும் அப்படியே கெளம்புறேன். வரேன்டா பிரபா” என்று சொல்லிப் பிரபாவிடம் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டான் பாண்டி.

கையில் புகைப்படத்துடன் தனது அறைக்குள் சென்ற பிரபா, வெகு நேரத் தயக்கத்துக்குப் பின் கவருக்குள் இருந்த புகைப்படத்தை வெளியில் எடுத்துப் பார்த்தான். பார்த்த அடுத்த நொடி பட்டென்று புகைப்படத்தை மறுபுறமாகத் திருப்பிக் கொண்டான். ஏனெனில் அத்தனை அழகாக அந்தப் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

“பிரபா வேண்டான்டா. இந்தப் புள்ளய போய் பார்த்தோம், அந்தப் புள்ளயா பார்த்து நம்மள வேண்டாமென்டு சொன்னாத்தேன் உண்டு. யப்பா என்ன அழகுடா சாமி” பிரபாவின் இதழ்கள் தானாக முணுமுணுத்துக் கொண்டது.

மீனலோசனி குமரப்பன் M.Sc.,

என்று புகைப்படத்தின் பின்புறம் அழகாக, மணிமணியாக எழுதப்பட்ட எழுத்துக்கள் பிரபாவைப் பார்த்து ஏளனமாகக் கைக்கொட்டிச் சிரித்தது. 

 

பார்வை – 5

அண்டமாய் அவனியாகி

அரியொணாப் பொருள தாகித்

தொண்டர்கள் குருவு மாகித்

துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற

என்னருள் ஈச னான

திண்டிறல் சரவணத்தான் 

தினமும் என் சிரசைக் காக்க 

தெய்வீகமான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது ஷண்முகக் கவசம். பழைய காலத்து முறைப்படி கட்டப்பட்ட தொட்டிக் கட்டு வீடு. வீட்டின் நடுவில் இருந்த முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்த துளசிச் செடி சொல்லாமல் சொன்னது அந்த வீட்டின் செழுமையை.

துளசி மாடத்தில் விளக்கேற்றப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் பின்புறம் வலது கோடியிலிருந்த பூஜை அறையில் அமர்ந்து ஷண்முகக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார் கோதை.

கோதை, பெயருக்கேற்றாற் போன்ற தெய்வீகக் களை பொருந்திய முகம். பார்ப்பதற்கு அசப்பில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த நடிகை பத்மினியைப் போன்ற தோற்ற அமைப்பு. நெற்றியில் சிறு கீற்றாக விபூதி, தங்க நிற பிரேமினால் ஆன கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்தக் கண்களில் அவ்வளவு தீட்சண்யம். 

மூக்கில் இருந்த வைர பேசரி டாலடித்து அவருடைய அழகை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது. அரக்கு நிறத்தில் புடவையணிந்து, புடவைத் தலைப்பை போர்த்தினாற் போல் கொண்டு வந்து முன்புறம் சொருகியிருந்தார்.

கோதையின் கணவர் கமலநாதன் கோவை வட்டாரத்தில் மிகப் பெரிய ஜமீன் வம்சம். கமலநாதனுடைய தாத்தா அரசாங்க உத்தரவுக்கு முன்னதாகவே தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை செய்தவர்களுக்கும், ஊர் மக்களுக்குமாகப் பிரித்துக் கொடுத்த வள்ளல். காலப்போக்கில் ஜமீன் முறை அழிந்தாலும் இவர்களை விடப் பெரும் பணக்காரர்கள் வந்த பொழுதிலும் கூட இவர்களுக்குரிய மரியாதை இன்று வரை நீடித்திருக்கிறது.

கோதை – கமலநாதன் தம்பதியரின் ஒரே செல்ல மகள் லலிதா. அந்த ஊரில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான கரும்பாலை மில்லில் வேலைக்காக வந்தவர் குமரப்பன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய காரணத்தால், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார் கமலநாதன்.

குமரப்பன் குணத்திலும் கரும்பைக் கொண்டிருந்ததால் மிகவும் இனிமையாகவே நடந்தது இல்லறம். ஆசைக்கு ஒரு பெண் மீனலோசினி, ஆஸ்திக்கு ஒரு ஆண் முகிலன் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்கள் லலிதா – குமரப்பன் தம்பதிகளுக்கு.

கமலநாதான் இருக்கும் வரை வரப் போக இருந்தவர், அவர் இறந்த பிறகு கோதையைத் தனியே விட மனமில்லாமல் இங்கேயே குடும்பத்துடன் வந்துவிட்டார் குமரப்பன். தான் எதுவும் சொல்லாமலேயே குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடக்கும் மருமகன் மீது எப்பொழுதுமே தனிப்பாசம் உண்டு கோதைக்கு. 

சுலோகங்கள் எல்லாம் சொல்லி முடித்தக் கோதை மணியடித்துக் கொண்டே தீபாராதனை காட்டவும் சமையலறையில் இருந்து அவரது மகள் லலிதாவும், வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது மருமகன் குமரப்பனும் வந்து தீப ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் துளசித் தீர்த்தம் வழங்கியவாறே,

“மீனா எங்கம்மணி?” என்றுத் தன் மகள் லலிதாவிடம் கேள்வி எழுப்பினார் கோதை.

“இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க் வாராங்க் இல்லீங்கம்மா, அதுதானுங்க நான் நம்ம செல்வி புள்ளைய வாசத் தொளிச்சு சாணம் போட்டு மொழுகிக் கொஞ்சம் பெரிய கோலமா போடச் சொன்னேனுங்கம்மா. உங்க பேத்தி தானே ரங்கோலி போடறதா சொல்லிப் போட்டுக் காலையிலிருந்து அங்கனயே தானுங்கம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கா” என்றார் லலிதா.

“நல்லாயிருக்கு அம்மணி நீ சொல்றது. அவளைப் பொண்ணு பார்க்க வாரதுக்கு அவளையே கோலம் போடச் சொன்னியாக்கும். போய் வெரசா முடிச்சுட்டு உள்ர வரச் சொல்லு அம்மணி” என்று கோதை சொல்லத் தான் சென்று அழைத்து வருவதாகக் கூறி லலிதா வாசலுக்குச் சென்றார்.

அங்கு பல வண்ணக் கலவையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தது பல வகைப் பூக்களும் அவற்றுக்கிடையில் ஒரு மயிலும். அந்த அவசரத்திலும் ஒரு நிமிடம் நின்றுத் தன் மகளின் கைவண்ணத்தை ரசித்துவிட்டே அவளைத் தேடிக் கொண்டு சென்றார் லலிதா.

“ராசு சின்னம்மணி எங்க?” என்று அங்கிருந்த பண்ணை ஆளிடம் கேட்க,

“நம்ம பாக்யம் கன்னுக்குட்டி ஈன்றுச்சுங்க அம்மணி. செல்விப் பொண்ணு வந்து அதைச் சொல்லவும் சின்னம்மணி கட்டுத்தரைக்குப் போயிட்டாங்கங்கோ” என்று பணிவாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.

“இந்தப் பொண்ணோட” என்று முணுமுணுத்தவாறே வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார் லலிதா.

அங்கு சென்றும் மீனலோசனியைக் காணாமல், அதற்கு மேலும் தேடுவதற்கு அந்தப் பரந்து விரிந்தத் தோட்டம் அனுமதி தர மறுத்தக் காரணத்தால் வீட்டுக்குள் சென்று கோதையிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் அவர். 

மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் எப்பொழுதும் வீட்டுப் பெண்களிடம்தான். அதனால் அவர் அதைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டார். இன்று முதன் முறையாக அவருடைய ஆசை மகளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனரே! அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டுமே என்ற பதட்டம் கொஞ்சமல்ல நிறையவே இருந்தது லலிதாவுக்கு.

மாட்டுத்தொழுவத்திலிருந்து சற்றுத் தள்ளி வாழைத் தோப்புக்கு அருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி மீனலோசனி. ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கொங்கு நாட்டுக்கே உரித்தான வாளிப்பானத் தோற்றம், செம்மஞ்சள் நிறமுடைய அழகி.

அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப்பட்டிருக்க, ஆர்கிட் நிறச் சுடிதார் அவள் இடை தழுவியிருந்தது. அவள் கன்றிலிருந்தே ஆசையாக வளர்க்கும் பாக்யம் எனும் பசுமாடு இன்று கன்று ஈனப் போவதால் நேற்றிலிருந்து அந்த மாட்டைத் தான் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மீனா. இரவில் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை அவளால்.

மாடு கொஞ்சம் சிரமப்படுவது போல் தோன்றவும் இன்று அதிகாலையிலேயே கால் நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மீனாவின் பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அழகான ஒரு பெண் கன்றினை  சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ஈன்றெடுத்திருந்தது பாக்யம்.

“சின்னம்மணி வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல சகுனமுங்கோ. நான் போய் பெரியம்மணிக்கிட்ட சொல்லிப் போட்டு வாரேனுங்” என்று அவர்கள் வீட்டுப் பண்ணையாள் அந்தப் பக்கம் நகரவும், பிறந்த கன்றுக்குட்டி ஒரு முறைத் துள்ளி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழவும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் பாக்யத்திடமிருந்து கன்றுக்குட்டியிடம் வந்து சேர்ந்தாள் மீனா. ஆசைதீர ஒரு முறைத் தடவிப் பார்ப்பதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் தானும் கிணற்றுக்குள் குதித்திருந்தாள் மீனலோசினி.

பிறந்ததிலிருந்தே நீச்சலடித்துப் பழகிய கிணறென்பதால் எந்தப் பயமும் இன்றிக் கிணத்துக்குள் குதித்திருந்தாள். இவள் குதிக்கவும் அங்கிருந்த மற்ற ஆண்கள் கிணற்றுக்குள் குதிக்கத் தயங்க, செல்வி நொடியில் புடவையை உதறிவிட்டு பாவாடையை மேலேற்றிக் கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.

இரு பெண்களுமாகச் சேர்ந்து இருபத்தி ஐந்து கிலோ எடையுடைய அந்தக் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருக்கும் படி வரைக்கும் நீந்தி வந்து ஒருவழியாக அதனைத் தூக்கிக் கொண்டு மேலேறி வந்தார்கள். கொஞ்சம் மேலே ஏறவுமே அங்கிருந்த பண்ணையாட்கள் சென்றுக் கன்றுக்குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.

வெளியே வரவும் கால்நடை மருத்துவர் அந்தக் கன்றுக்குட்டியைப் பரிசோதித்து ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னதும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அதன் பிறகே சுடிதாரை உதறிக் கொண்டு மேலே வந்த மீனா பார்த்ததெல்லாம் தன்னை முறைத்துக் கொண்டு நின்றத் தன்னுடைய அம்மத்தா கோதையைத்தான்.

“அம்மத்தா நீங்க எதுக்குங் இம்புட்டுத் தூரம் வந்தீங்?” என்று அசடு வழிந்து கொண்டே கேள்வி கேட்க,

“நான் வாரது இருக்கட்டுங்கண்ணு. நீ என்ன பண்ணியிருக்குறேன்னு புரியுதா? ஒன்ன ஆரு கண்ணு கிணத்துக்குள்ளாற குதிக்க சொன்னது? நீ குதிச்சதால இவிங்க ஆரும் குதிக்க முடியாம நிக்கிறாங்க.

ஆம்பளை ஆளுக குதிச்சா சுளுவா கன்னைத் தூக்கிடுவாங்க. உன்னால முடியுமா கண்ணு. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா உன்ர அப்பன் ஆத்தாளுக்கு ஆரு பதில் சொல்றது கண்ணு” என்று கடிந்தவாறே பேத்தியின் கைப்பிடித்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார் கோதை.

“அம்மத்தா… அம்மத்தா… ஒரே நிமிசமுங். நான் இன்னும் கன்னுக்குட்டியை ஒழுங்கா கொஞ்சவே இல்லீங். நீங்க வூட்டுக்குப் போறதுக்குள்ளார நான் ஒரே ஒருக்கா கொஞ்சிப் போட்டு வந்துடறேனுங்க அம்மத்தா. ப்ளீஸ்…” என்று சிறு பிள்ளையாய் மாறிக் கெஞ்சும் பேத்தியைக் கண்டு இளகிய மனத்தை இறுக்கிப் பிடித்தவராய்,

“உறம்பிர எல்லாம் வார நேரமாச்சு கண்ணு. பேசாம வா சாமி. உன்ர பொறந்தவன் வந்தப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து கொஞ்சிக்கோங்க” என்று சொல்லியவாறே பிடித்தக் கையை விடாமல் அழைத்துச் சென்றுவிட்டார் கோதை. செல்லும் முன் அங்கிருந்த பண்ணை ஆட்களை முறைக்கவும் தவறவில்லை.

 வேறு வழியில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா. தம்பியின் வரவைப் பற்றி அம்மத்தா கூறியதும் அவள் மனதும் குளிர்ந்து தான் போனது. அவ்வளவுப் பிரியம் தம்பியின் மீது. இருவருக்குமிடையில் ஆறு வருட வயது வித்தியாசம்.

தம்பி கேட்டானென்றால் அவனுக்காக எதையும் செய்வாள் மீனலோசினி. ஊருக்குள்ளிருந்த பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு அக்கா சம்பாதிப்பது அனைத்தும் தம்பிக்குத்தான். லலிதா பண விவகாரங்களில் கொஞ்சம் கெடுபிடி. அவ்வளவு எளிதில் அவரிடமிருந்து பயலால் பணம் வாங்கிவிட இயலாது. அதற்காகவே அக்காவுக்கு காக்கா பிடித்து வேண்டியவற்றை வாங்கிவிடுவான்.

இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு வானூர்திப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான் முகிலன். அக்காவுக்கு மட்டும் செல்லமாக முகில். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதால் இப்பொழுதெல்லாம் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைக் காண முடியுமென்பதில் அவ்வளவு கவலை மீனாவுக்கு.

இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அக்காவைப் பெண் பார்க்க வருவதாலும் கல்லூரியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தான். வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட இவ்வளவு ஆவலாக எதிர்பார்க்கவில்லை மீனா. தம்பியின் வரவைத் தான் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள்.

ஒருவழியாக அம்மத்தாவும் பேத்தியும் வீட்டுக்குள் வந்து சேர்ந்தார்கள். மீனாவுடைய ஈர உடையைப் பார்த்து லலிதா திட்டத் தொடங்க அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து உடை மாற்றுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா.

உள்ளே நுழைந்தவுடன் தனது அலைபேசியை எடுத்துத் தம்பிக்கு அழிப்பு விடுக்க,

“அக்கா கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சுங். நான் மதியம் கிளம்பி சரியா ரெண்டு மணிக்கெல்லாம் உங்க முன்னாடி நிப்பேனுங். இப்ப எனக்குத் திட்டு வாங்கிக் கொடுக்காம போனை வைங்கக்கா” கிசுகிசுத்தான் முகிலன்.

“அப்போ இப்ப மட்டும் எப்படிப் பேசிறீங்களாம்?” அவனைப் போலவே கிசுகிசுப்பானக் குரலில் கேட்டாள் மீனா.

“அது பென்சுக்குக் கீழே குனிஞ்சுப் பேசிக்கிட்டு இருக்கேனுங்கக்கா” அழைப்பைத் துண்டிக்காமல் தமக்கைக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“சரி சரி முகிலா சீக்கிரமா வந்துடு சாமி. எனக்கு ஒரு மாதிரி குழப்பமா இருக்கு கண்ணு. நீ என்ர கூடவே இருக்கோணும் சரியா” என்று தன் மன அலைப்புறுதலைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மீனா.

உடை மாற்றுவதற்காக வார்ட் ரோபைத் திறக்க அங்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கவர் இவள் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் பிரித்தவள், அதன் உள்ளிருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு,

“என்ன மிஸ்டர்.பிரபாகரன் உங்களைப் பத்தி வர்ற சேதி ஒன்னும் நல்லதா படலையே. பேசாம ரிஜெக்ட் பண்ணிடவா?” என்று கேட்டவாறே வில்லென வளைந்திருந்தத் தன் புருவங்களில் ஒன்றினை ஏற்றி இறக்கினாள்.

(‘நீ இப்படி ஈர டிரஸ்சோட நின்னுக்கிட்டுப் புருவத்துல டான்ஸ் ஆடிக் கேட்டின்னா பய இங்கேயே ஃபிளாட் ஆகிடுவாம்மா’ அப்படின்னு நாம கத்துறது அவளுக்குக் கேட்கலைப் போல மக்கா!)

முதலில் மீனலோசனிக்குத் தங்கள் சொந்தத்துக்கு உள்ளேயே அக்கம்  பக்கத்து ஊர்களில் தான் வரன் தேடினார் கோதை. ஒன்றும் ஒத்து வராமல் இருந்த பொழுது தான் இவர்களது உறவு முறைப் பெண்ணின் கணவரான மாணிக்கம் வந்து இந்த வரனைப் பற்றிக் கூறினார். 

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் வரன் கிடைப்பதே இந்தக் காலத்தில் அபூர்வம். அதிலும் தன் சொந்தக் காலில் நின்று உழைத்து முன்னேறித் தன் தாயையும் தமக்கைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஒருவன் நிச்சயம் தங்கள் பெண்ணையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தாமாகவே அவரிடம் உதயமாகியிருந்தது.

பிரபாகரனின் புகைப்படமும் திருப்திகரமாகவே இருந்தது பெரியவர்களுக்கு. மீனலோசினியை அழைத்து சம்மதம் கேட்க அவளும் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இந்தப் பெண் பார்க்கும் படலத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. 

மீனலோசினி மனதிற்குள் நினைத்திருந்தது வேறு. முதலில் மதுரையா, அவ்வளவு தூரமா என்று யோசித்தாள். எப்படியும் தன் தம்பி படிக்கும் படிப்புக்கு அவன் நிரந்தரமாக இங்குத் தங்கப் போவதில்லை. அம்மத்தா, அப்பா, அம்மா அனைவருக்கும் வயதும் கூடிவிட்டது. இனி இந்த தோட்டம், துரவு, வரவு, செலவு, அனைத்தையும் தான் பார்த்துக் கொள்ளக் கூடிய வகையில் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தாள். 

பின் பிரபாவின் வேலையைப் பற்றி அறிந்ததும், அவன் கப்பலுக்குச் செல்லும் நாட்களில் தான் வந்து இங்கு இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளலாமே என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே சம்மதித்திருந்தாள்.

நேற்று போனில் அழைத்திருந்த மாணிக்கம் சித்தப்பா வேறொரு விஷயத்தைக் கூறியிருந்தார். அது அத்தனை உவப்பானதாகத் தோன்றவில்லைப் பெண்ணுக்கு. பிரபாகரன் கனடாவில் வேலைக்கு முயற்சிப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் இது போன்று நாடாறு  மாதம் கடலாறு மாதம் என்ற நிலை இருக்காதென்றும், நிரந்தரமாகவே கனடாவில் செட்டில் ஆகி விட வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட வீட்டிலிருந்தப் பெரியவர்களுக்கெல்லாம் சந்தோஷம் மீனாவைத் தவிர. இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் பிரபாகரனை நிராகரித்து விடலாமா என்று அவன் புகைப்படத்திடமே கேட்டுக் கொண்டிருந்தாள். இந்த யோசனையிலேயே மீனா சுற்றிக் கொண்டிருக்க, சொன்ன நேரத்துக்கு முன்னதாக சீக்கிரமே வந்து சேர்ந்தான் அவளுடைய தம்பி முகில்.

“என்னடா அக்காவைப் பொண்ணு பார்க்க வர்றாங்களே, கொஞ்சம் முன்னாடியே வந்து அம்மா அப்பாவுக்கு உதவுவோம், அதெல்லாம் கிடையாது. இப்படித்தான் கடைசி நிமிசத்துக்கு வருவியா சாமி?” என்று கொஞ்சம் கோபத்துடனேயே மகனை வரவேற்றார் லலிதா.

“வந்ததும் வராததுமா ஏன் அம்மணி புள்ளையை ஏசுற? லீவ் போட்டா ஏன் போட்டேன்னு ஏச வேண்டியது. பொறுப்பா காலேசுக்கு போயிட்டு வந்தா அதுக்கும் ஏசுவியா?” என்று கூறியவாறே பேரனுக்காகப் பரிந்து கொண்டு வந்தார் கோதை.

“நல்லா கேளுங்க அம்மத்தா. புள்ள ஹாஸ்டல்ல இருந்து வந்தவுடனே, ‘ஏங்கண்ணு இப்படி மெலிஞ்சு போயிட்ட’ன்னு சொல்லிச் செல்லம் கொஞ்சி சாப்பாடு போடோணும். அதை விட்டுப்போட்டு… ம்….” என்று வாகாக அம்மத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டே செல்லம் கொஞ்சினான் முகில்.

முகிலை நெருங்கி வந்த லலிதா, அவன் கன்னத்தைத் தடவியவாறே, “எனக்கும் அப்படிச் சொல்ல ஆசைத் தான் கண்ணு. அதுக்கு நீ மெலியோணுமே. ஒவ்வொரு வாரமும் உப்பிப் போய்த்தானே சாமி நீ வார” என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, இதைக் கேட்ட கோதையுமே சிரித்துவிட்டார்.

“ம்க்கூம்” என்று முறைத்துக் கொண்டுத் தன் தமக்கையின்  அறைக்குச் செல்ல முற்பட், “வேணாஞ்சாமி அப்புறம் அவ வேற வந்து ஒரண்டை இழுப்பா. வந்து சாப்பிடு கண்ணு” என்று வேறு வழியில்லாமல் லலிதா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

“அந்தப் பயம் இருக்கோணுங்கம்மா” என்று கெத்தாகக் கூறிவிட்டு உணவருந்தி முடித்தப் பின்  தான் தன் தமக்கையைத் தேடிச் சென்றான் முகிலன்.

“ஏனுங்க்கா உள்ர வரலாங்களா? உங்க ட்ரீம்ஸ்சு எல்லாம் முடிஞ்சுதுங்களா?” என்று கேட்டவாறே அறையினுள் நுழைந்த முகிலனை ஓடிச் சென்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் மீனா.

“எப்பயிலிருந்து அக்கா ரூமூக்குள்ள வாரதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்க ஆரம்பிச்ச முகில்?” செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் மீனா.

“அப்புறம் மச்சான் வரப் போறாரில்லீங்க். இதெல்லாம் பழகிக்கத்தான் வேணும்”

“ம்ப்ச்” சலித்துக் கொண்டாள் பெண்.

“ஏனுங்க்கா மாப்பிள்ளை பிடிக்கலீங்களா. ஏற்பாடு பண்ண முன்னுக்கு உங்க கிட்ட கேட்டாங்க தானே?” தமக்கையின் முகவாட்டம் பார்க்கப் பொறுக்கவில்லைத் தம்பிக்கு. தம்பியிடம் நேற்று மாணிக்கம் சித்தப்பா தொலைப்பேசி வாயிலாகத் தெரிவித்த அனைத்தையும் ஒப்பித்தாள் மீனா.

“இதுக்காங்க அக்கா இவ்வளவு பீலிங்கு? மச்சானோட உங்களைத் தனியா பேச வைக்கிறது என்ர பொறுப்புங்க. அப்ப கேட்டுத் தெளிவுப்படுத்திக்கோங்க. அதை விட்டுப் போட்டு இப்படி ஏழு முழத்துக்கு முகத்தை நீட்டி வைச்சா பார்க்க நல்லவா இருக்குங்க்” என்று கூறியவாறே அவள் முன்னுச்சி முடியை நீவி விட, மீனாவுக்கு மொத்த பாரமும் இறங்கினாற் போல நிம்மதியானது.

“நீ வேற ஏன்ரா அதுக்குள்ள மச்சான் மச்சான்னு ஏலம் விடுற. இப்பத்தானே பொண்ணு பார்க்கவே வாராங்க. இன்னும் எவ்வளவோ இருக்குல்ல கண்ணு” என்றாள் மீனா.

“எனக்கென்னவோ இவர்தான் என்ர மச்சான்னு உறுதியா தோனுதுங்கக்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு கவலை தானுங்கக்கா” என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினான் முகிலன்.

தம்பி தன்னைப் பிரிய முடியாமல் தான் வருந்துகிறான் போல என்றெண்ணிய மீனா, கஷ்டப்பட்டு எம்பி நின்று முகிலனின் தலை கோதி வாஞ்சையுடன், “என்ன சாமி” என்று கேட்க,

“உங்களுக்கு ஒரே ஒரு கொளுந்தியாளாவது இருந்திருக்கலாங்க்கா. இப்படி மூணும் நங்கையாளா போச்சே” என்றான் உச்சுக் கொட்டியவாறே.

இதைக் கேட்ட மீனாவுக்குத்தான் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. புரிந்த பிறகு அவனை அடிப்பதற்குத் தோதாக எதையாவது தேடிக் கொண்டே, “உன்ர கவலை உனக்கு” என்று கூறிக் கொண்டே டிரஸ்சிங் டேபிளில் இருந்த சீப்பை எடுப்பதற்குள் முகிலன் ஓட்டம் எடுத்திருந்தான்.

நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க, அவர்களும் வந்து சேரவும் இப்படியே கேலியும் கிண்டலுமாக ஒருவழியாகப் பெண் பார்க்கக் குறித்த நேரமும் வந்து சேர்ந்தது. பிரபாகரனும் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.

 

பார்வை – 6

வீட்டின் மூன்று மருமகன்களையும் ஒன்றிணைத்து பொள்ளாச்சிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது பாண்டிக்கு. பிரபாகரன் எதிலும் அவ்வளவாக ஈடுபடாமல் பட்டும் படாமல் விலகி நடக்க, சுந்தரவடிவு ஒவ்வொன்றுக்கும் பாண்டியைத் தான் தேட வேண்டியதாகிப் போனது.

“சித்தி அநேகமா பிரபா கண்ணாலத்துல நான் வழுக்கைத் தலையோடத்தேன் சுத்தப் போறேன் பார்த்துக்க. உன் மூணு மருமகன்களையும் ஒன்னா கூட்டியாந்து நிப்பாட்டுறதுக்குள்ளயும் பிச்சுக்கலாம் போல இருக்குது. இந்தப் பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது ஆமா. படுத்துறானுகளே என்னைய” என்று புலம்பித் தீர்த்து விட்டான் பாண்டி.

மூவரும் மூன்று திசைக்கு இழுத்தால் அவனும் தான் என்ன செய்ய முடியும். ஒருவழியாகப் பெண் பார்க்கச் செல்வதற்கான நாளைக் குறித்துப் பின் எதில் பயணம் மேற்கொள்வது என்பதில் ஒரு கலகத்தை சமாளித்து, வாடகைக்கு ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு குடும்பமாக இன்றுப் புறப்பட்டு விட்டார்கள் பொள்ளாச்சிக்கு.

மூன்று தமக்கைகளும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு பிரபாவைக் கிண்டல் செய்து கொண்டே வர எல்லாவற்றுக்கும் புன்னகைதான்  பதிலாக வந்தது பிரபாவிடமிருந்து. மீனாவின் புகைப்படத்தை அன்று பார்த்ததோடு சரி. ஒருமுறைப் பார்த்ததற்கே அந்தப் பளிங்கு முகமும் கண்களும் ஆழப் பதிந்து போனது மனதில்.

பிரபாவுக்குப் பெண் பார்ப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை மதுரையில் கோவிலில் வைத்து இரண்டுப் பெண்களைப் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் தோன்றாத ஒரு விசித்திர உணர்வு இப்பொழுதுத் தன்னை ஆட்டி வைப்பது கொஞ்சம் விந்தையாகத் தான் இருந்தது பிரபாவுக்கு. கண்டதும் காதல், வெளிப்புறத் தோற்றம் இதிலெல்லாம் பெரிதாக எந்த ஈடுபாடோ நம்பிக்கையோ இல்லை பிரபாவினிடத்தில்.

பாண்டி சொன்னது போல நேரில் சென்று பேசிப் பார்ப்போம். ஒத்து வந்தால் திருமணம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கப்பலும் வேலையும். புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஒரு முறை வேலைக்கென்று சென்று விட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாது என்று நம்பிக் கொண்டிருந்தான்.

திண்டுக்கல், பழனி வழியாகப் பயணம் நீள, பழனி தாண்டியதுமே ஒரு இதமான குளுமை பரவுவதை அனைவராலும் உணர முடிந்தது. காதில் ஹெட்போன் வழியாக இளையராஜா வசியம் செய்ய, கண்களோ எங்கெங்கும் சூழ்ந்திருந்த பசுமையில் இமைக்க மறந்து மயங்கிக் கிடந்தது.

பிரபாவுக்கு மிகவும் பிடித்த வான் நீலத்தோடுப் போட்டி போடுவதுப் போல் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்திருந்த வயல் வெளிகள். இவை இரண்டுக்கும் நடுவில் பாலம் அமைத்ததைப் போன்று ஓங்கி உயர்ந்த மலை முகடுகள். அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறிச் செல்லும் மேகங்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை பிரபாகரனுக்கு. 

பொள்ளாச்சியிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பூங்குளம். கிராமம் என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு இரண்டும் கலந்த கலவையாக இருந்தது அந்த ஊர். வழியில் ஓரிருவரிடம் வழி கேட்கப் பேரைச் சொன்னதுமே அவர்கள் காட்டிய மரியாதைப் பெண் வீட்டாரின் பெருமையைச் சொல்லாமல் சொன்னது.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்துப் பிரிந்து இடது புறமாகத் திரும்ப, இரண்டு பக்கமும் சூழ்ந்திருந்தத் தென்னை மரங்களுக்கு நடுவில் சென்று கொண்டிருந்தது அந்தத் தார்ச்சாலை. தென்னை மரங்களின் அணிவகுப்பு முடிந்ததும் தொடங்கியது பாக்கு மரங்களின் அணிவகுப்பு. இப்பொழுது தார்ச்சாலை மறைந்து வண்டி செல்வதற்கு ஏதுவாகத் தானாக அமைந்திருந்த மண் ரோடு தொடங்கியது.

பாதையை ஒட்டி ஒரு சிறு வாய்க்கால் ஒன்று சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலில் கூட்டம் கூட்டமாக மணி வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. அனைவருமே அந்த இயற்கைச் சூழலை மனமார ரசித்துக் கொண்டிருக்க அபஸ்வரமாக ஒலித்தது மூத்த மாப்பிள்ளை நடேசனின் குரல்.

“ஏன் அத்த உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இவங்க வீட்டுக்குப் போறதுக்கு ஒழுங்கா ஒரு தார் ரோடு கூட இல்லை. நம்ம பிரபா படிச்ச படிப்பென்ன, வாங்குற சம்பளமென்ன, அவனுக்குப் போயும் போயும் இப்படி ரோடு கூட இல்லாத குக்கிராமத்துலேயா பொண்ணெடுக்கணும்?” என்று நீட்டி முழக்கினார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் சுந்தரவடிவு விழிக்க, “எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுது?” என்றான் பாண்டி.

“என்னடா பாண்டி நக்கலா?  நானும் பார்த்துக்கிட்டுதேன் வாரேன். வர வர நீ கொஞ்சம் ஓவராத்தேன் போயிக்கிட்டிருக்க” மீசையை முறுக்கிக் கொண்டதோடு நில்லாமல் தானும் முறுக்கிக் கொண்டார் அவ்வீட்டினுடைய மூத்த மாப்பிள்ளை.

“ஐய மாமா நான் உங்களைச் சொன்னேன்டு நெனச்சீகளா? இந்தா உங்க மகேன் ஏதோ வெளாடுறானே, அதைத்தேன் சொன்னேன். இந்தா வேணுமென்டா நீங்க கூட பார்த்துக்கிடுங்க. டேய் அந்த செல்லு போனை உங்கப்பாக்கிட்ட காமிடா” என்றதும் ஒருவேளை உண்மையாகத்தான் சொல்கிறானோ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டது மூத்த சமூகம்.

யோசனையினூடே வீட்டை நெருங்க இப்பொழுது ஆரம்பித்தது மூன்றாவது மாப்பிள்ளை. “நாமெல்லாம் காரை வீட்ல இருக்கோம். போயும் போயும் ஓட்டு வீட்டுலயா பொண்ணெடுக்குறது?” என்று அவர் பங்குக்கு கொஞ்சம் திருப்ப,

“ம்க்கூம்… இங்கனயாவது இம்பூட்டுப் பெரிய வீடு இருக்குது. எங்கக்காளைக் கட்டிக் கொடுக்குறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தப்ப வீட்டையே காணோமேன்டு நானும் பிரபாவும் அலைஞ்சது எங்களுக்குத்தானே தெரியும்” என்று கூறிய பாண்டி அவர் பதில் கூறுவதற்கு முன்,

“வந்தாச்சு, வந்தாச்சு எல்லாரும் இறங்குங்கப்பா ஏய்” என்று கூவிக் கொண்டே தான் முன்னதாக வண்டியில் இருந்து இறங்கித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

“இந்த பக்கமெல்லாம் இதைத் தாங்க மச்சு வீடென்டு சொல்லுவாக. பெரிய பணக்காரவுக மட்டுந்தேன் இப்புடி வீட்டுல இருப்பாக. எதுவும் தெரிஞ்சா பேசுங்க. இப்படி என்னத்தையாவதுப் பேசி மானத்தை வாங்காதீக” என்று ரகசியமாகத் தன் கணவரைக் கடிந்து கொண்டார் மூன்றாவது அக்கா சொர்ணம். 

ஏனோ இரண்டாமவர் மட்டும் எதிலும் ஈடுபடாமல் கொஞ்சம் சிந்தனை வசப்பட்டவராகவே சுத்திக் கொண்டிருந்தார். அவரின் மீதே தன் மொத்த கவனத்தையும் குவித்து அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தார் இரண்டாவது அக்கா தனம்.

வீட்டைப் பற்றியும் ரோட்டைப் பற்றியும் குறை கூறிய இரண்டு சமூகமும் அங்கு வீட்டு வாசலில் ஏற்கனவே வந்து நின்றிருந்த சில பல ஆடிக்களையும் பி.எம்.டபிள்யூக்களையும் பார்த்து ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.

முறைப்படி குமரப்பன் லலிதா தம்பதியினர் முகிலோடு இணைந்து வந்து வாசலிலேயே இவர்களை எதிர்கொண்டு மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆலிவ் க்ரீன்  நிறப் பட்டுடுத்தி காதிலும் மூக்கிலும் வைரங்கள் ஜொலி ஜொலிக்க இரு கரம் கூப்பி இவர்களை வரவேற்ற கோதையம்மாளைப் பார்த்ததுமே மரியாதையுடன் கூடிய பிரமிப்பு பிரபா வீட்டினர் அனைவருக்கும் உதயமானது.

சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல், “வா கண்ணு”, “வா சாமி” என்று அன்போடு வரவேற்ற விதமே மதுரைக்காரர்கள் அனைவரையும் பாரபட்சமின்றிக் கவர்ந்தது.

நல்ல நீள அகலத்தோடு வெளியே இரண்டு திண்ணைகள், அதற்கடுத்து வெராண்டா போன்றொரு இடம் அதையும் கடந்தால் நடுவில் முற்றத்துடன் நாற்புறமும் அறைகள் சூழ விசாலமாகக் கட்டப்பட்ட குட்டி அரண்மனை அது. கீழேயே மொத்தமாக நான்கு அறைகள் இருந்தன. பூஜையறையும் சமையலறையும் மட்டுமே தனித்து தெரிந்தது. மற்றதை வகைப்படுத்த முடியவில்லை.

அங்கேயே ஒரு மூலையில் மாடிக்கான படிக்கட்டுகள் செல்ல மேலேயும் இதே போன்ற அமைப்பு இருக்குமோ என்று எண்ணிக் கொண்டான் பிரபா. இது மட்டுமல்லாமல் பிரபா மனதில் ஏகப்பட்ட கேள்விகள் குடி கொண்டிருந்தன. எல்லாமே அவர்களின் தென்னை மற்றும் பாக்கு மரங்களைப் பார்த்தபின் அவர்களுடைய விவசாய முறைகள் குறித்து உருவான சந்தேகங்கள். யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் பிரபா.

இவர்கள் வந்து சேர்ந்து நேரம் சரியாக மாலை ஐந்து மணி. முதலில் பிராயணக் களைப்பு போவதற்காகவும் அந்த சூட்டைத் தணிப்பதற்காகவும் இனிப்பு சேர்க்கப்பட்ட வெள்ளரிப்பழம் சிறிய கிண்ணங்களில் வழங்கப்பட்டது. அடுத்துப் பொதுவாக அனைவரையும் அறிமுகப்படுத்தும் படலம் தொடங்கியது. இரு தரப்பினரும் அறிமுகப்படலம் முடித்ததும் சுடச்சுட கேசரியும் வடையும் பரிமாறப்பட்டது.

முதலில் பெண்ணைப் பார்த்து விடலாமே என்று சுந்தரவடிவு கேட்க, “ஏங்கண்ணு அப்படிச் சொல்லிப் போட்ட? எப்படியிருந்தாலும் மாணிக்கம் தம்பி வகையில நாம எல்லாம் உறம்பிர தானே கண்ணு. அதால எல்லாரும் சாப்பிடுங்க முதல்ல” என்று கோதையம்மாள் கூறிவிட யாராலும் மறுத்துக் கூற முடியாமல் போனது.

மீனலோசினி மாடியில் தன்னறையில் இருந்தவாறே ஜன்னல் வழியாகக் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான்  இருந்தாள். சரியாக அவள் கண்ணில் படுமாறு பிரபாவை அமர வைத்திருந்தான் முகிலன். ஆகாய நீல வண்ணத்தில் டிஷர்ட்டும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்து எந்தப் பந்தாவும் இல்லாமல் இயல்பானப் புன்னகையுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்ததும் கொஞ்சம் பிடித்துத் தான் போனது மீனாவுக்கு.

புகைப்படத்தைவிட நேரில் ஆள் இன்னும் கொஞ்சம் அம்சமாகவே இருப்பது போல் தோன்றியது. ‘மதுரையிலிருந்து மதுரை வீரன் கணக்கா வருவாங்கன்னு பார்த்தா இவங்க மேடி மாதிரி இல்ல வந்திருக்காங்க’ என்று எண்ணிக் கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே கூடாதென்று மனதோடு உருப்போட்டுக் கொண்டாள்.

கோதையம்மாள் தலையசைக்க லலிதா சென்று அவருடைய ஆசை மகளை அழைத்து வந்தார். பட்டுப் புடவை எல்லாம் அணியாமல் ஆகாய நீலத்தில் அடர் நீல நிறத்தில் பார்டர் போட்டது போல ஒரு டிசைனர் புடவையைத்தான் அணிந்து வந்தாள் பெண். ஒப்பனையும் சரி, நகைகளும் சரி மிகவும் எளிமையாகவே கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

“ஆத்தீ இந்தப் புள்ள காலைப் பார்த்தாலே பொட்டு வைக்கலாம் போல இருக்கு. இந்தப் புள்ள நம்ம ஊர் வெயில்ல எல்லாம் வந்து இருக்குமாக்கா” என்று தனக்கருகில் அமர்ந்திருந்த தமக்கைகளின்  கிசுகிசுப்பைக் கேட்டுத்தான் தலை நிமிர்த்திப் பார்த்தான் பிரபா.

அவள் தலை குனிந்து நின்ற தோற்றம், இரு தாமரை இதழ்கள் இமைகளாக மாறி கண்களை மூடியிருப்பது போல் தோன்றியது பிரபாவுக்கு. பின்னலில் சூட்டப்பட்டிருந்த குண்டு மல்லியின் சரங்களில் ஒன்றிரண்டு முன்புறம் வந்து விழுந்திருக்கக் கழுத்தில் மெல்லியதாக ஒற்றைச் சங்கிலி மட்டுமே. 

அதிலிருந்த ப்ளூ சபையர் அவ்வப்பொழுது ஜொலித்துத் தன்னுடைய மதிப்பை சொல்லாமல் சொல்லிக் கொண்டது. இரு கைகளிலும் நான்கைந்து மெல்லிய தங்க வளையல்கள். மொத்தமாகவே இவைகளை மட்டும் தான் அணிந்திருந்தாள் மீனா. எந்தவித ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருப்பவள் இதிலெல்லாம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது இயல்புதானே.

‘கண்ணிமையில் தூண்டிலிட்டுக்

காதல் தனைத் தூண்டி விட்டு

எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே’

சத்தமில்லாமல் வந்து பிரபாவின் மனதோடு இசையமைத்துப் போனார் இளையராஜா. இமைக்க மறந்துப் பார்த்திருந்தான் பாவையை. 

“இங்கன வாம்மா” என்று கூறி மீனாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார் சுந்தரவடிவு. “அழகா இருக்க தாயீ” என்று கூறி கள்ளங்கபடமில்லாமல் தனக்குத் திருஷ்டிக் கழிக்கும் அந்த வெள்ளந்திப் பெண்மணியை முதல் சந்திப்பிலேயே மிகவும் பிடித்துப் போனது மீனாவிற்கு.

அவளிடமும் ஒருமுறைத் தன்னுடைய மகள்கள் மருமகன்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பேரன் பேத்திகள் உட்பட. ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தும் பொழுதும் நிமிர்ந்து பார்த்து சிறு புன்னகையைத் தந்தவள் பிரபாவைப் பற்றிச் சொல்லும் பொழுது மறந்தும் கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

முகிலன் சென்று கோதையம்மாளின் காதைக் கடிக்க, “இப்படி நாம எல்லாரும் சுத்தி இருந்தா இவிய ரெண்டு பேரும் பார்த்துக்க கூட மாட்டாங்க. ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா போய் பேசிட்டு வரச் சொல்லாங்களா?” என்று சுந்தரவடிவிடம் நேரிடையாகவே கேட்டார் கோதை.

“தாராளமா போய் பேசிட்டு வரட்டுங்கம்மா” என்று சுந்தரவடிவும் உடனடியாக சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். 

“நெம்ப சந்தோஷம் கண்ணு. அப்புறஞ்சாமி, நான் உனக்கு அத்தை முறையாகோணும், மொறைய மாத்திப் புடாத கண்ணு” என்று கூறி நலுங்காமல் சிரிக்கும் அந்த வயதானப் பெண்மணியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

முற்றத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறைக்குப் பிரபாவைக் கூட்டிச் சென்றான் முகில். அவர்களைப் பின்தொடர்ந்து மீனா சென்றாள். முதலில் பிரபாவும் முகிலுமே தங்களுடைய படிப்பு குறித்துக் கொஞ்ச நேரம் வளவளத்துக் கொண்டிருந்தார்கள். வாய் முகிலோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் எதிரில் அமர்ந்திருக்கும் பாவையை நொடிக்கொரு தரம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

தலை குனிந்திருந்தாலும் மீனாவும் அதை உணரவே செய்தாள். இதுவே தொடர, “நீங்க பேசிக்கிட்டிருங்க். நான் இப்ப வந்துடுறேனுங்க்” என்று சொல்லிவிட்டு முகிலன் நாசூக்காக வெளிநடப்பு செய்ய,

“தைரியம் வந்துடுச்சுங்களா மீனலோசினி? இப்பவாவது என்னை நிமிர்ந்துப் பார்த்துப் பேசுவீங்களா?” என்று பேச்சைத் தொடங்கி வைத்தான் பிரபாகரன்.

“என்ர வூட்டுக்குள்ளார எனக்கென்னங்க் பயம்” என்று கூறி முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீனா. அந்தக் கண்களில் குடியேறி விடத் துடித்த மனத்தை அடக்கியவாறே,

“உங்களுக்குப் பயமில்லாமலா உங்க தம்பி இவ்வளவு நேரம் இங்க இருந்தாரு” உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவினான் பிரபாகரன்.

“எனக்கு ஒன்னும் பயமெல்லாம் இல்லீங்க். நேத்து மாணிக்கம் சித்தப்பா போன்ல சில விஷயம் சொன்னாருங்க். நீங்க கனடாவுக்கு வேலைக்குப் போகப் போறதா. எனக்கு அப்படி வெளிநாட்டுக்கு வாரதுல எல்லாம் விருப்பம் இல்லீங்க். 

என்னால எங்க வீட்டாளுங்களை விட்டுப் போட்டு, இந்தத் தோட்டம், மாடு, கன்னு இதையெல்லாம் விட்டுப் போட்டு அம்புட்டுத் தொலைவு வந்து இருக்க முடியாதுங்கோ. என்ர வூட்ல அல்லாத்துக்கும் நீங்க வெளிநாடு வேலைக்குப் போறதுல சந்தோஷமுங்க. என்னைத் தவிர. 

அதால நீங்களே என்னை புடிக்கலைன்னு சொல்லிச் சொல்லிடுங்க். அவ்வளவுதானுங்க விசயம்” படபடவென்று அனைத்தையும் கொட்டி விட்டாள் மீனா. 

“ஆக ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புடிக்கலையென்டு சொல்லத்தேன் இருந்திருக்கோம்” என்று கூறிச் சிரித்தான் பிரபா.

“நீங்க ஏனுங்க்…” எப்படிக் கேட்பது என்று தயங்கியவள் “யாராவது லவ்?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

“அதெல்லாம் இல்லங்க” என்று பிரபா சொல்லவும் மனதோடு ஒரு இதம் பரவுவதை நன்றாகவே உணர்ந்தாள் மீனா.

“பின்ன வேற என்ன காரணமுங்க்?”

“அம்மா நீங்க ரொம்பப் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு சொன்னாங்க. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயம் பண்றதுதான்ங்க கனவு லட்சியம் எல்லாமே. நடுவுல பணப் பிரச்சனை, அக்காங்க கல்யாணம் இதுக்காகவெல்லாந்தேன் நான் இந்த வேலைக்கு இன்னும் போயிக்கிட்டிருக்கேங்க.

இன்னும் ரெண்டு வருஷம் தான்ங்க இந்த வேலை. அதுக்குள்ளாற நான் எதிர்பார்க்குற அளவு பணத்தை சேர்த்துட்டு வேலையை விட்டுட்டு நிலம் வாங்கி விவசாயம் பண்றது அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேங்க.

நீங்க ரொம்பப் பெரிய இடமா… அதேன் நீங்க எப்படி என் கூட என் லட்சியத்தை அனுசரிச்சுப் போவீங்கன்னு யோசிச்சு தள்ளித் தள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தேங்க. எங்க அம்மா இந்தாட்டி விடாப்பிடியா புடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டாங்க” தன் நிலையைக் கூறி முடித்தான் பிரபா.

“பெரிய வூட்டுப் பிள்ளைங்கெல்லாம் வேலை செய்ய மாட்டாங்கன்னு உங்க கிட்ட ஆருங்க சொன்னது?”

“இல்லீங்க நீங்க வேற போட்டோவுல தேவதை கணக்கா அம்பூட்டு அழகா இருந்தீங்களா…” மேற்கொண்டு பிரபா பேசுவதற்குள் இடையிட்டாள் மீனா.

“போட்டோவுல அழகா இருந்தேன்னா அப்போ நேர்ல அழகா இல்லீங்களா” கேட்ட பிறகே தன் கேள்வியின் அர்த்தம் விளங்கியது மீனாவுக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அவள் முக பாவனைகளை ரசித்துப் பார்த்தவன், “அப்போ ஓகே சொல்லிடலாங்களா?” என்று மீனாவிடமே திருப்பிக் கேட்க, இம்முறை நிஜமாகவே வெட்கப்பட்டுத் தலைக் கவிழ்ந்தாள் பெண். அந்த வெட்கத்தை ரசிக்க விடாமல் அதற்குள்ளாக பிரபாவை அழைத்து விட்டார்கள் அவன் வீட்டார்.

அறையிலிருந்து வெளிவந்த இருவரது மலர்ந்த முகமுமே சம்மதத்தைச் சொல்லாமல் சொல்ல, மேற்கொண்டுப் பேசலாமா என்று குமரப்பன் கேட்டார்.

“அதெப்படிங்க? நாங்க ஊருக்குப் போயிட்டு எல்லாரும் கலந்து பேசிட்டு உங்களுக்குத் தாக்கல் சொல்றோங்க” என்று சரியான நேரத்தில் கட்டையைப் போட்டார் இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

அவருடைய இந்தப் பதிலில் பெண் வீட்டாரின் முகம் கொஞ்சம் விருப்பமின்மையை காட்டியது. அதிலும் மீனாவின் முகம் சட்டென வாடிவிட்டது. அதைக் காணப் பொறுக்காதவனாக பாண்டியின் காதோடு ஏதோ ரகசியமாகப் பேசி அவனை அனுப்பிவிட்டுத் தன் அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பிரபா.

சுந்தரவடிவும் வேறு வழியின்றி அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, வாசலில் திண்ணையில் அமர்ந்த பிரபா தன்னுடைய ஷூவை மாட்டினான், மாட்டினான் மாட்டிக் கொண்டே இருந்தான் வெகு நேரமாக. 

நேரமாவதைத் தொடர்ந்து மீனாவும் கூட வெளியில் வந்து முகிலின் பின்புறம் மறைந்தவாறு நின்றுப் பார்த்தாள். அந்நேரம் பார்த்து சரியாக ஒலித்தது பிரபாவின் அலைப்பேசி.

‘சொக்குப் பொடி மீனாட்சி

சொக்க நாதன் நான்தான்டி’  

இந்த இரண்டு வரிகள் மட்டுமே ரிங் டோனாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்க, பிரபாவோ அலைப்பேசியை எடுத்துப் பேசுவதாகத் தெரியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஒரு நொடிப் பார்த்தவன் மீனாவிடம் மட்டும் புருவம் உயர்த்தி சில நொடிகள் தாமதித்தது அவன் பார்வை. இறுதியாகத் தன் அன்னை சுந்தரவடிவிடம் வந்த பிரபாவின் விழிகள் ஏதோ சொல்ல அதன் அர்த்தம் புரிந்தவராய்,

“அதேன் என் மவனே சொல்லிட்டானே இதுக்கு மேல நாங்க கலந்துப் பேச என்ன இருக்கு. உங்களுக்கு சம்மதமென்டா இப்போவே மேற்கொண்டு பேசிடலாங்க அத்தை” என்று கோதையிடம் சொல்லிவிட்டார் சுந்தரவடிவு.

“நெம்ப சந்தோசம்மா. எல்லாரும் உள்ர வாங்க” என்று கூறியபடியே கோதை முன் செல்ல, அதுவரை மாட்டுவதாகப் பேர் பண்ணிக் கொண்டிருந்த ஷூவை நொடியில் கழட்டி விட்டு அவரை முதல் ஆளாகப் பின் தொடர்ந்தான் பிரபா.

அதன் பிறகு பேச்சு வார்த்தை துரித கதியில் நடைபெற, திருமணத்திற்கான நாளைக் குறிக்கும் பொறுப்பை கோதையம்மாளிடமே விட்டுவிட்டு மதுரைக்குக் கிளம்பினார்கள் பிரபா குடும்பத்தினர்.

இட்லி, இரண்டு வகை சந்தகை, பலாப்பழ பாயாசம் என்று தடபுடலாக ஒரு விருந்து வைத்த பிறகே அவர்களை மன நிறைவோடு அனுப்பி வைத்தனர் லலிதா குமரப்பன் தம்பதியினர். இம்முறை அனைவரின் முன்னிலையிலும் மீனாவிடம் சொல்லிக் கொண்டுப் பதிலாக அவளின் வெட்கம் கலந்த தலையாட்டலையும் பெற்றுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் பிரபாகரன்.  

 

பார்வை – 7

நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது பிரபா குடும்பத்தினர் மதுரை வந்து சேர்வதற்கு. தூக்கத்தில் ஆளுக்கொருப் பக்கமாக சாமியாடிக் கொண்டிருந்தத் தங்களதுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மூன்று தமக்கைகளும் தத்தமது இல்லங்களை நோக்கி நகர,

“புள்ளைகளுக்குப் பாலைக் கொடுத்து தூங்க வைங்கத்தா” என்று சொல்லியபடியே சுந்தரவடிவும், பாண்டியும் பிரபாவுடன் நின்றிருந்தனர். பிரபா வேன் டிரைவருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அண்ணே உங்க வீடு எங்கிட்டுண்ணே. ரொம்பத் தொலைவென்டா இங்கனயே ரவைக்குத் தூங்கி எந்திரிச்சு காலையில கிளம்புங்கண்ணே” பணத்தைக் கொடுத்ததோடு வேலை முடிந்தது என்றில்லாமல் அவரின் நலனிலும் அக்கறைக் கொண்டு விசாரித்தான் பிரபா.

“பரவால்ல தம்பி. நம்ம வூடு இங்கப் பக்கத்துலதேன். நான் போயிக்கிடுதேன். கண்ணாலத்துக்கும் நம்மகிட்டயே வண்டி எடுத்துக்கிடுங்க தம்பி” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு அவர் கிளம்பவும் பிரபாவின் அலைப்பேசி ‘சொக்குப் பொடி மீனாட்சி’ என்று அலறவும் சரியாக இருந்தது.

“ஏன் சித்தி நேத்து ம்ஹூம் இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாமென்டு சொல்லிக்கிட்டு ஒரு பய திரிஞ்சானே அவன நீ எங்கிட்டாச்சும் பார்த்த?” என்று பாண்டி நக்கலடிக்க,

“நானும் அவனத்தேன் பாண்டி தேடுறேன். பய சாயங்காலத்துலயிருந்து கண்ணுலயே அம்புட மாட்டேங்குறான்” என்று கூறி சுந்தரவடிவும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்.

தெரியாத நம்பராக இருக்கவும் செல்லை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனாக, “ம்மா நீயுமாம்மா? அவெங்கூட எல்லாம் சேராதம்மா” என்று சுந்தரவடிவின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சலுகையாகப் பிரபா கூற,

“ஏன்டா பேச மாட்ட. பொண்ணு பார்க்க இங்கேயிருந்து அம்புட்டுப் பேரையும் கிளப்புறதுக்கே என் தலை முடியில பாதி போயிடுச்சு. எதையுங் கண்டும் காணாம சுத்திக்கிட்டு இருந்துப்புட்டு, ஒத்த பாட்டுல சோலிய முடிச்சுட்டியே” தன் ஆதங்கத்தைப் பாண்டி கொட்டித் தீர்க்க,

“உனக்குத்தேன் கல்யாணம் முடிஞ்சுடுச்சே மாப்பி. மூணு புள்ளைகளும் ஆகப் போவுது. இதுக்கு மேல உன் தலையில முடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன?” என்று அசால்ட்டாகக் கூறினான் பிரபா.

“ஹேய் ஹேஹேய்… இது நல்ல கதையா இருக்கே. கல்யாணம் முடிஞ்சுட்டா ஒருத்தனுக்கு முடி இருக்கக் கூடாதா? நல்லா வந்து வாச்சீங்கடா எனக்குன்னு. இனி நீயாச்சு உன் மாமனுங்களாச்சு.

நீ அவெங்க கையைப் புடிப்பியோ, கால்ல விழுவியோ? நீயே உன் கல்யாணத்தை நடத்திக்க. உன் மண்டையில முடி இருக்கா இல்லையான்டு நான் கல்யாணத்தன்னைக்கு வந்து பார்த்திக்கிடுதேன். 

இங்காரு சித்தி இனிமே எதுக்காச்சும் என்னைய கூப்பிட்ட, பார்த்துக்க” பொங்கிவிட்டான் பாண்டி.

“என் ராசா, நீ மட்டும் இல்லாட்டி இந்த விசயம் இம்புட்டு சுளுவா முடிஞ்சுருக்குமா? ஏன்டா பாண்டி இம்புட்டுக் கோவப்படுற? இந்தக் கண்ணாலம் மட்டும் நல்லபடியா முடியட்டும். உன்னைத் திருப்பதிக்கு கூட்டிப் போய் முடியிறக்கறதா நான் அந்த ஏழுமலையானுக்கு நேர்ந்துக்கிடலாமென்டு இருக்கேன்” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுந்தரவடிவு.

“ஆக ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் என் முடியிலதேன் கண்ணு. நீ என்னத்த வேண்டிக்கிறது? இந்தக் கல்யாணம் முடிஞ்சும் என் மண்டையில முடி இருந்தா நானே திருப்பதிக்குப் போய் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா? இப்ப திருப்தியா ரெண்டு பேருக்கும்?” படபடவென பாண்டி பொரிந்து கொண்டிருக்கும் பொழுதே பிரபாவின் அலைப்பேசி மறுபடியும் அதே பாடலைப் பாடியது.

இம்முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான் பிரபாகரன். முகில் தான் அழைத்திருந்தான். முகில் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் அக்கா தம்பி இருவரும் உறங்குவது மட்டும் ஒரே அறையில் தான்.

கீழே உள்ள அறைகளில் ஒன்று கோதையம்மாள் பயன்படுத்துவது. மற்றொன்று விருந்தினருக்கானது. மாடியில் குமரப்பன் – லலிதா தம்பதியினர் ஒரு அறையிலும், மீனாவுக்கும் முகிலுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அறைகளும் இருந்தன. இது போக விருந்தினருக்காக இங்கொரு அறையும் இருந்தது.

தம்பி ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து ஒரு வாரக் கதையும் ஒட்டு மொத்தமாக பேசித் தீர்ப்பதற்காக இருவரும் எதாவது ஒரு அறையில் ஒன்றாகக் கதை பேசியபடித் தூங்குவது வழக்கம். இன்றும் அவ்வாறு தூங்கியிருக்க அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு மீனா தம்பியை எழுப்பினாள்.

“முகில், டேய் முகில்… எந்திரி கண்ணு”

“இப்ப எதுக்குங்க்கா உசுப்பி விடுறீங்க். தூக்கம் வருதுங்க்கா.” 

“இல்ல கண்ணு அவியெல்லாம் மதுரைக்குப் பத்திரமா போயிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஒரு போன் போட்டுக் கேளு சாமி.”

“வரத் தெரிஞ்சவங்களுக்குப் போகத் தெரியாதுங்களாக்கும். அதெல்லாம் அவங்க பத்திரமா போயிருப்பாங்க. நீங்க பேசாம போய் தூங்குங்கக்கா. எனக்குத் தூக்கம் வருதுங்க்கா” தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்ட பொழுதிலும் தமக்கையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான் முகிலன்.

“என் கண்ணு இல்ல, என் தங்கம் இல்ல. ஒருக்கா அக்காவுக்காக கேளு சாமி” மீனாவும் விடுவதாக இல்லை.

நன்றாகத் திரும்பி அவள் முகம் தெரியும் வகையில் படுத்துக் கொண்டவன், “சரி கேட்டுச் சொன்னா எனக்கு என்னங்க்கா கிடைக்கும்” கட்டிலுக்கு அருகில் டென்ஷனுடன் நின்றிருக்கும் தமக்கையிடம் அழகாக டீல் பேசினான் இளையவன்.

“நீ அடுத்த வாரம் வரும் போது அக்காவுக்கு சேலரி கொடுத்திருப்பாங்கல்ல அதை முழுசா உனக்கே தந்திடுறேன் தங்கம். இப்ப போன் பண்ணு சாமி”

“ஹைய! இனி யாருக்கு வேணும் அந்த ஐயாயிரம் ரூபாய். இனி இந்த சில்லறைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற. என்ர மச்சான் பெரிய ஆளாக்கும். கப்பல்ல பல நாட்டுக்குப் போய் வாரவங்க. அதால என்ர மச்சான் போற ஊருலயிருந்தெல்லாம் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வருவாராக்கும். வேற எதாவது பெட்டர் டீல் இருந்தா சொல்லுங்க்கா. இல்ல என்னைய தூங்க விடுங்க” விடாமல் சீண்டிக் கொண்டிருந்தான் சின்னவன்.

இப்பொழுது என்ன சொல்லி முகிலை வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் “முகிலு” என்று பாவமாக அழைத்தாள் மீனலோசினி.

அதற்கு மேலும் அவளைக் கெஞ்ச விடாமல் சிரித்தபடியே, “க்கா என்ர போன்ல மச்சான் நம்பர் இருக்குதுங்க். மச்சான்னு போட்டே ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன். நீங்களே கூப்பிட்டுக் கேளுங்க்கா” என்றான்.

“ஐயோ நானெல்லாம் பேச முடியாது முகிலு. அம்மாவுக்கும் அம்மத்தாவுக்கும்  தெரிஞ்சுது அவ்வளவு தான். கொஞ்சம் நீயே கேட்டு சொல்லேன். ப்ளீஸ் என் செல்ல முகில் இல்ல.”

“நானும் பார்க்கத்தானே போறேன், நீங்க போனும் கையுமா சுத்தப் போறதையெல்லாம்” என்று கூறியபடியே அவனுடைய அலைப்பேசியை எடுக்க,

ஐயோ அவனுடைய அலைப்பேசியில் இருந்து அழைத்தால் நமக்கு எப்படி அவங்க நம்பர் தெரியிறது என்று மனதுக்குள் அலறியவளாக, கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,

“முகில் இதுல இருந்து கால் பண்றியா?” என்று கூறியபடியே தன்னுடைய அலைப்பேசியை எடுத்து நீட்டினாள் மீனா.

“இப்ப மட்டும் அம்மாவும் அம்மத்தாவும் திட்ட மாட்டாங்களாக்கும். நம்பர் எக்ஸ்சேஞ்சுக்கு நல்ல நேரம் பார்த்தீங்க்கா” என்று கூறிச் சிரித்தபடியே அவளுடைய அலைப்பேசியிலிருந்தே பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

“மச்சான் நான் முகில் பேசுறேனுங்க.”

“சொல்லு முகில். நம்பர் புதுசா வரவும் முதல் தடவை கட் பண்ணிட்டேன். நீ எங்கிட்ட வேற நம்பர் கொடுத்திருந்தியா, அதான் தெரியலை.”

“நான் கொடுத்தது தாங்க மச்சான் என்ர நம்பரு. இங்க ஒருத்தவங்களுக்கு நீங்க பத்திரமா மதுரைக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சுக்கணுமாமா. அதுக்குத் தானுங்க நல்லா தூங்கிட்டு இருந்தவனை உசுப்பி விட்டு கேட்கச் சொல்றாங்க.

இதுல போன் பண்றது வேற அவிய போன்ல இருந்து பண்ணனுமாம். ஏனுங்க மச்சான் நீங்களே இந்த நாயத்தைக் கேளுங்க. இப்படி என்னை உசுப்பி விட்டு அவங்க போன்ல பேசச் சொல்றதுக்குப் பதிலா அவங்களே உங்கிட்ட பேசி இருக்கலாம் இல்லீங்” என்று முகில் பேசிக் கொண்டே போக தொப் தொப்பென்று முகில் அடி வாங்கும் சத்தம் இங்கு பிரபா வரைக் கேட்டது.

ஹா…ஹாவென்று பெருங் குரலெடுத்துச் சிரித்தான் பிரபாகரன். “ஐயோ மச்சான் என்ர காது போச்சுங்க். இவ்வளவு சத்தமாவா சிரிப்பீங்க்? அக்கம் பக்கம் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் பாவமுங்க மச்சான்” இப்பொழுது பிரபாவையும் கலாய்க்கத் தொடங்கி இருந்தான் முகில்.

சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாண்டியை அருகில் இழுத்து அவன் தோளில் கையைப் போட்டவாறே, “அவனுக எல்லாம் தூங்குனா என்ன? தூங்காட்டி எனக்கென்ன? நான் சிரிக்கிறது உன் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் கேட்கணுமில்ல. அதான் இந்தச் சத்தம். நாங்க பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோமுன்னு அவங்க கிட்ட சொல்லிடு முகில்” என்றான் மச்சான்.

“சாடிக்கேத்த மூடிங்க மச்சான். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னு வைங்க நான் தூங்கின மாதிரிதான். அதனால நீங்களே உங்க வாயால நீங்க பத்திரமா ஊருக்குப் போய்ட்ட விவரத்தை என்ர அக்கா கிட்ட சொல்லிடுங்க் மச்சான். குட் நைட்” என்று கூறியவாறே அலைப்பேசியை மீனாவிடம் நீட்டினான் முகில்.

‘ம்ஹூம் நான் மாட்டேன்’ என்று சைகையிலேயே கூறி மறுத்துக் கொண்டிருந்தவளின் கைகளில் வலுக்கட்டாயமாக அலைப்பேசியைத் திணித்துவிட்டு, “நான் என்ர ரூமுக்குப் போறேனுங்கக்கோவ்” என்று சொல்லி அவன் அறையைப் பார்த்துப் போய்விட்டான் முகில்.

இங்கு மதுரையிலோ பாண்டியைப் பிடித்து வீட்டுக்குள் தள்ளிவிட்டு, நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் தாயாரிடம் அசடு வழிந்துவிட்டு வேக வேகமாக மொட்டை மாடிக்கு ஏறப் போன பிரபாவைத் தடுத்தது பாண்டியின் குரல்.

“சித்தி நானும் இன்டைக்கி இங்கயே படுத்துக்கிறேன்” என்று சுந்தரவடிவிடம் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து உள்ளிருந்தவாறே க்ரில் கேட்டினை வெளிப்புறமாகப் பூட்டியவன் சாவியை எடுத்துப் பிரபாவிடம் தூக்கிப் போட்டுவிட்டு,

“விடியிறதுக்குள்ள பேசி முடிச்சின்டா கதவைத் தொறந்துகிட்டு வந்து சேரு மாப்பி. எங்களுக்குத் தூக்கம் வருது. நாங்க போய் தூங்குறோம்” என்று கூறிவிட்டுத் திரும்பினான் பாண்டி.

அவனைப் போக விடாமல் க்ரில் கேட்டிலுள்ள கம்பியின் ஊடாகக் கையை விட்டு அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, பாண்டியின் தலையைக் கேட்டில் முட்ட வைத்து, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றினைப் பதித்துவிட்டு இரண்டிரண்டுப் படிகளாகத் தாவி ஏறி விரைவாக மொட்டை மாடியினைச் சென்றடைந்தான் பிரபா. “அடேய்” என்று பாண்டி கத்தியது பிரபாவின் காதுகளில் விழவே இல்லை. 

இவ்வளவு களேபரத்தையும் என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருந்தாள் மீனா.

“ஹலோ மீனலோசினி லைன்ல இருக்கீங்களா? எதாவதுப் பேசுங்க” என்றான் பிரபா மொட்டை மாடியில் கட்டைச் சுவற்றில் அமர்ந்தவாறே.

வெறும் ‘ம்ம்ம்’ மட்டுமே பதிலாக வந்தது அந்தப் பக்கத்திலிருந்து. “என்னங்க இது சாயங்காலம் அவ்வளவு போல்டா பேசுனீங்க. இப்ப என்னடான்னா வாயே திறக்க மாட்டேங்குறீங்களே” என்றான் பிரபா.

“அது வேண்டாமுன்னு சொல்லச் சொல்றதுக்காகப் பேசிப்போட்டேனுங்க்” என்று வேகமாகப் பதில் தந்தவள், “இப்ப என்ன பேசுறதுன்னு தெரியலீங்க்” என்பதை முணுமுணுப்பாகக் கூறினாள் மீனா.

“சரி நீங்க என்ன பேசுறதுன்னு யோசிச்சு வைங்க. நாம நளைக்குப் பேசலாங்களா?” சிரிப்புடன் பிரபா வினவ,

“சரிங்க்” என்று கூறி வேகமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள் மீனா. அப்பொழுது தான் அடைப்பட்டிருந்த மூச்சும் வெளியே வந்தது. தன் நிலையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டு, அலைப்பேசியால் தன் தலையில் தட்டிக் கொண்டாள். பின் நினைவு வந்தவளாக பிரபாவின் அலைப்பேசி எண்ணை எந்தப் பெயரில் சேமித்து வைப்பது என்று சிந்தித்தாள்.

சிந்தித்தவளுக்கு ‘சொக்கநாதன் நாந்தான்டி’ என்ற வரிகள் மனதுக்குள் ஓட, சிரிப்புடன் ‘சொக்கு’ என்ற பெயரில் சேமித்துக் கொண்டாள். அலைப்பேசியை வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவள் உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் உறங்கிப் போனாள்.

இங்கு பிரபாவுக்கும் அதே நிலைதான். கீழே வீட்டுக்கும் போகத் தோன்றாமல் அப்படியே மொட்டை மாடியிலேயே படுத்துவிட்டான். மறக்காமல் தன்னுடைய அலைப்பேசியில் ‘சொக்குப்பொடி’ என்ற பெயரில் மீனாவின் அலைப்பேசி எண்ணை சேமித்து வைத்துக் கொண்டான்.

‘இவளைப் பேச வைக்கவே நான் ரொம்பப் பேசணும் போலயே. பேசுறதுக்கே இந்தப் பாடுன்னா இன்னும் மத்ததுக்கெல்லாம்… டேய் பிரபா விடா முயற்சி விஸ்வரூப வெற்றிடா. இதைவிட உனக்கு வேற என்னடா வேலை? நாளையிலிருந்து மினி குட்டிக்கிட்ட பேசுறது மட்டுந்தான் உன் வேலை’ மனதோடு எண்ணிக் கொண்டான். உற்சாக மிகுதியில் உறக்கம் கண்களை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது. சந்தோஷ மிகுதியில் ஹோவென்றுக் கத்த வேண்டும் போல் தோன்றியது. சூழ்நிலைக் கருதி அடக்கி வாசித்தவன் சூரியன் உதிக்கும் நேரத்தில் ஒருவழியாக உறங்கிப் போனான்.

******************

எண்ணியது போலவே தினமும் பல முறை அவனுடைய மினிக்குட்டியிடம் பேசிவிடுவான் பிரபா. தினமும் மீனா காலையில் கண் விழிப்பதே ‘ஓய் சொக்குப்பொடி’ என்கிற பிரபாவின் அழைப்பில்தான் என்றாகிப் போனது.

பிரபாவுடைய மரியாதையான வாங்க போங்க என்ற அழைப்புகளெல்லாம் ஒருமைக்கு மாறியிருந்தது. மீனா நக்கலாக வினவ, ‘எனக்கு நானே மரியாதை கொடுத்துப் பேசிக்க முடியுமா’ என்று கெத்தாகப் பதில் கொடுத்திருந்தான் பிரபா.

இதுவரை உடைகளில் எல்லாம் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாத மகன் இப்பொழுது ஒரு நாளைக்குப் பலமுறை உடை மாற்றுவதை வெளியில் கேலியாகவும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் பார்த்து வியந்து கொண்டார் சுந்தரவடிவு. 

பாண்டி, தங்கம், தனம், சொர்ணம், சுந்தரவடிவு, கூடவே வாண்டுகள் என்று அனைவருக்கும் மிகப் பெரிய என்டர்டெயின்மென்டே பிரபாதான் என்றாகிப் போனது. அவனும் ஒற்றை ஆளாக சலிக்காமல் இவர்களை சமாளித்துக் கொண்டு வந்தான்.

மீனாவோ மறுநாளே முகிலின் துணையோடுத் தன் அம்மத்தாவிடம் கெஞ்சிக் கொஞ்சி அவர் மூலமாகத் தன் தாயாரிடமும் அனுமதி வாங்கிய பின்னரே பிரபாவிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினாள்.

மீனா பொழுதுபோக்கிற்காகத் தான் சொந்த ஊரில் உள்ள பள்ளியிலேயே வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். சிறு பள்ளி தான் என்றாலும் கட்டுப்பாடுகள் அதிகம். ஆசிரியர்கள் கூட வகுப்பறைக்கு அலைப்பேசி எடுத்துச் செல்லவெல்லாம் அனுமதி கிடையாது.

எப்பொழுதும் இடைவேளை நேரங்களின் பொழுது மற்ற ஆசிரியைகள் தங்கள் அலைப்பேசியைத் தேடிப் போக மீனா அவ்வாறல்லாமல் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது வழக்கம். இப்பொழுதெல்லாம் முதல் ஆளாக இடை வேளை நேரத்தில் அலைப்பேசியைத் தேடிப் போகும் மீனா மிஸ்சை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பள்ளியின் பிள்ளைகள்.

போனும் கையுமாக இவர்கள் இருவரினுடைய நாட்களும் கழிய, கோதையம்மாள் சொன்னபடி வீட்டுக்கே ஜோசியரை வரவழைத்து திருமணத்திற்கு ஏற்ற நாளைக் குறித்துத் தரக் கூறினார்.

பிரபாகரன், மீனலோசினி இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோசியர் ஐந்து மாதங்கள் கழித்தே இவர்கள் இருவருக்கும் திருமணத்துக்கான நாளைக் குறித்துக் கொடுத்தார். அந்த விபரத்தை சுந்தரவடிவிடம் கோதையம்மாளே தெரிவித்து, பிரபாவின் வேலைக்கும் மற்றவர்களுக்கும் இந்தத் தேதி ஒத்து வருமா என்று கேட்கவும் சொய்தார்.

பின் இரு வீட்டாரும் ஒரு வழியாகக் கலந்துப் பேசி திருமணத்தை ஜோசியர் குறித்துக் கொடுத்தத் தேதியிலேயே ஐந்து மாதங்கள் கழித்தே வைத்துக் கொள்வதாக முடிவெடுத்தனர். திருமணத்தையும் அதற்கு முதல் நாள் நிச்சயதார்தத்தையும் பொள்ளாச்சியில் நடத்திக் கொள்வதாகவும் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

அதற்கு முன்பாகத் திருமணத்தை உறுதி செய்வது போல் ஒப்புத் தாம்பூலம் மாற்றிக் கொள்ளவும், அந்தச் சடங்கை மதுரையில் வைத்து செய்வதற்காக ஒரு நல்ல நாளும் பார்த்து பெண் வீட்டார் அனைவரும் மதுரைக்கு வர ஏற்பாடானது மீனாவைத் தவிர. இத்துடனே மாப்பிள்ளை வீடு பார்க்கும் சடங்கையும் சேர்த்து பிரபா வீட்டிலேயே எளிய முறையில் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டனர் இரு வீட்டாரும்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருமணத்திற்கு முன் இடைப்பட்ட காலத்தில் பிரபா கப்பலுக்கு வேலைக்கு செல்வதற்கும் அவனுடைய கம்பெனியில் பேசி அனுமதி வாங்கிக் கொண்டான். இப்பொழுது சென்றுவிட்டால் திருமணம் முடிந்து ஒரு ஆறு மாத காலம் இங்கு நிம்மதியாகத் தங்கிவிடலாம் என்பது பிரபாவின் எண்ணம். எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பெண் வீட்டாரும் ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக மதுரை வந்து சேர்ந்தார்கள்.

 

பார்வை – 8

பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பிள்ளை மொழிச் சொல்லை விட

ஒற்றைப் பனைக் கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன்… தொலைந்தேன்… என்று அவர்கள் காதலில் தொலைந்தே போயினர் பிரபாகரனும் மீனலோசினியும். நாட்கள் மிக இனிமையாக நகர இருவரும் அலைப்பேசியில் பேசியே தங்கள் காதல் பயிரை வளர்த்துக் கொண்டனர்.

பிரபா, மீனாவிடம் மட்டுமல்லாது குமரப்பன், லலிதா, முகில் என்று அனைவரிடமும் அவ்வப்பொழுது பேசி விடுவான். அதிலும் குறிப்பாகக் கோதையம்மாளிடம் நாள் தவறாது பேசிவிடுவான். தன்னுடையே அப்பத்தாளே மீண்டும் கிடைத்தது போல் அவ்வளவு சந்தோஷம் பிரபாகரனுக்கு. மீனாவே சில சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு நீண்டு கொண்டு இருந்தது அவர்களின் உரையாடலகள்.

“அம்மத்தா இன்னிக்கு சேவ கரெக்ட் டைமுக்கு கூவிருச்சுங்க்ளா” என்று மீனாவும்,

“எனக்கு கூவிருச்சு கண்ணு உனக்கு?” என்று கோதையும், இவ்வாறு இருவரும் அடிக்கடிக் கேட்டு ஹைபை கொடுத்துக் கொள்வார்கள்.

வெயில் என்றும் பாராமல்  மழை என்றும் பாராமல் மொட்டை மாடியே கதி என்று இருந்தான் பிரபாகரன். அவனுக்குத் தான் அங்கு வீட்டில் ஒழுங்காக சிக்னல் கிடைக்காதே. ‘டவர் வைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா’ என்று மூத்த மாமாவின் முணுமுணுப்பை வேறு அடிக்கடி கடக்க வேண்டியிருந்தது.

மூன்று மாப்பிள்ளைகளும் ஒருவாறு அவர்களது மனைவிகளால் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட்டு இருந்தார்கள் முதல் முறையாக. “இங்காருங்க என் தம்பி எங்க மூணு பேருக்காக இது வரைக்கும் எவ்வளவோ விசயத்தைப் பொறுத்துப் போயிருக்கான். பணத்தைப் பண்மென்டுப் பார்க்காம உங்களுக்காகத் தாராளமா செலவு பண்ணியிருக்கான். 

மொத மொறையா அவென் ஒரு விசயத்துல ஆர்வமா இருக்கான். அதை நல்லபடியா அவனுக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டியது கூடப் பொறந்தவுகளா எங்கக் கடமை, பொறுப்பு. எங்களோட புருஷனெங்குற முறையில உங்களுந்தேன் அந்தப் பொறுப்பு இருக்கு. அதால இந்த கண்ணாலத்தை எங்க அம்மாவுக்குத் துணையா முன்ன நின்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.

இதுல எதாவது உங்க மூணு பேரால சிக்கல் வந்ததா தெரிஞ்சுது, அப்புறம் நல்லாயிருக்காது பார்த்துக்கிடுங்க” என்று மூன்று தமக்கைகளும் தங்களது கணவன்மார்களுக்குத் தனித்தனியாக வேப்பிலை அடித்திருந்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது.

மாப்பிள்ளை மூவருக்குக் கூட இந்தத் திருமணத்தில் பெரிதாகக் குறை கூற ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொள்ளாச்சியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே அவர்களை வாயடைத்துப் போகச் செய்திருந்தது. அதனால் தற்சமயத்துக்கு தங்களது மனைவிகளின் பேச்சைக் கேட்டே நடப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

பிரபா அளவுக்கு இல்லாவிடிலும் மீனாவும் அவ்வப்பொழுது பிரபாவின் தமக்கைகளிடமும் அவர்களின் கணவர்களிடம் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டுதான் இருந்தாள். பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் கூட சமயத்தில் நடந்தது. மீனாவுடைய பாசமான மற்றும் மரியாதையான பேச்சும் கூட இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் எனலாம்.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக பெண் வீட்டினர் மதுரைக்கு வந்தார்கள். பிரபா எவ்வளவோ முயன்றும் மீனாவை வரவழைக்க முடியவில்லை. அதில் கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் பிரபாவுக்கு. 

இந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்னும் ஒரு வாரத்தில் அவன் வேலைக்காக லண்டன் சென்றாக வேண்டும். அங்கிருந்து தான் இம்முறை அவனுடைய பணி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனாவை ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று அவன் கொண்ட பேராவலை சம்பிரதாயம் என்ற பெயரில் அடக்கி விட்டனர் இரு வீட்டாரும் இணைந்து.

கோதையம்மாள், குமரப்பன், லலிதா, முகில், இவர்களுடன் இணைந்து அவர்களின் மிகவும் நெருக்கமான உறவுகள் சில பேர் என்று ஒரு இருபது பேர் மதுரைக்கு வந்தார்கள். அனைவருக்குமே பிரபாவின் வீட்டையும் மனிதர்களையும் மிகவும் பிடித்திருந்தது.

அனைத்துமே யாருடைய தயவும் இல்லாமல் சுந்தரவடிவு மற்றும் பிரபாவின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி எனும் பொழுது அவர்களின் மகிழ்ச்சி இரு மடங்கானது. எந்தத் தயக்கமும் இன்றி அவர்களைத் தன்னுடைய உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார் சுந்தரவடிவு.

அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து கொங்கு நாட்டவருக்கு ஆச்சரியமே. “ஏனுங்க்கா மதுரைனாலே பரோட்டா தானுங்களே விசேசமே. அது உங்க கடையில இல்லீங்க்ளா?” ஆச்சரியமாகக் கேட்டார் உறவுமுறைப் பெண் ஒருவர்.

“அதெல்லாம் செய்யக் கூடாதென்டு எங்க அத்தை உத்தரவும்மா. அவுக இப்ப இல்லையென்டாலும் அவுக வார்த்தையை என்னால என்னிக்குமே மீற முடியாது தாயீ. சாப்பாட்டுக் கடை வைச்சிருக்கவுக தன் கடையில சாப்பிட வாரவுக வவுத்துக்கு ஒரு நாளுந் துரோகஞ் செய்யக் கூடாதென்டு அடிக்கடி சொல்லுவாக. அவுக யோசனைப்படி இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பமென்டு எல்லாமே வயித்துக்குக் கேடு விளைவிக்காத உணவு வகைதேன் நம்ம கடையில. 

காலைலைக்கும் ரவைக்கும் மட்டுந்தானுங்களே. நம்ம கடையில ஃபேமசானதென்டா இட்லியும் மீன் குழம்புந்தேன்.

‘சாப்புட வாரவுக வாய் வாழ்த்தலையென்டாலும் அவுக வவுறு கண்டிப்பா வாழ்த்துமென்டு’ எங்க அத்த அடிக்கடி சொல்லுவாக. இதுல காசு வாரது குறைச்சதேன், ஆனாலும் இதுல கிடைக்குற மனத்திருப்தி… எங்களுக்கு அதுவே போதுமென்டு தோனிடுச்சும்மா” சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தார் சுந்தரவடிவு.

அந்த ஆத்மார்த்தமான புன்னகை எப்படிச் சாத்தியப்பட்டது என்பது அங்கிருந்த அனைவருக்குமே நன்கு புரிந்தது. அந்தப் புரிதல் நல்லதொரு அபிமானமாக வளரவும் செய்தது.

“ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பரோட்டோ போட்டுக்கிட்டு பரோட்டா மாஸ்டரா இருந்த என்னை இப்படித் தோசை மாஸ்டரா ஆக்கிட்டாங்கம்மா” சிரித்துக் கொண்டே புகார் படித்தார் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த நபர்.

“ம்க்கூம் அதுனாலதேன் எங்க மாஸ்டர் ஊத்துற தோசையெல்லாம் பரோட்டா சைசுலேயே வருது” என்று அவருக்குப் பதில் கொடுத்தான் பாண்டி. இவ்வாறுப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கப் போயினர். பெண் வீட்டினரும் திருப்தியுடன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிவிட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பினார்கள்.

குமரப்பனுக்குத் தன்னுடைய சொந்தக் காலில் உழைத்து முன்னேறித் தாயையும் தமக்கைகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும் மருமகனை நினைத்துப் பெருமையோ பெருமை. பிரபா தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் தெளிவாக அவரிடம் பேசியிருந்தான். அதிலும் அவருக்குப் பெருமைதான்.

கோதையம்மாளுக்கும் லலிதாவுக்கும் சுந்தரவடிவை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பெண்மணியை நம்பித் தாராளமாகத் தங்கள் பெண்ணைக் கொடுக்கலாம் என்று முடிவே செய்திருந்தார்கள்.

பூங்குளத்தில் கிளம்பியதிலிருந்து அனைத்தையும் தன் தமக்கைக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வேலையை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்தான் முகில். அவனுடைய பேச்சு முழுவதும் பிரபாவின் லண்டன் பயணத்தைப் பற்றியும், அங்கு சென்று அவன் ஏறப் போகும்  கப்பல் பற்றியும் அது செல்லும் இடங்களைப் பற்றியுமே இருந்தது. அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியிருந்தான் பிரபா.

ஊருக்குத் திரும்பும் வழியில் கோதையம்மாளின் தம்பி முறை உறவுக்காரர் ஒருவர், “ஏனுங்க்கா நம்ம தகுதிக்கு ஏத்த எடம் போலத் தெரியலீங்களே” என்று ஒரு மாதிரியாக இழுக்க,

“எந்த விதத்துல தம்பி அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இப்போ நாம தோட்டம், தொறவு, காடு, கரை எல்லாங் கட்டி ஆளுறோமுன்னா இதெல்லாம் நமக்கு முன்னாடி இருந்தவங்க உருவாக்குனது தானே. அதை நாம பெருக்குற வேலையை மட்டும் தானே செய்யிறோம்.

பிரபா தங்கம் அப்படிக் கிடையாது. இப்ப வந்திருக்குற வளர்ச்சி அவங்க சொந்த உழைப்பு, முயற்சி. அதோட நல்ல குணத்துக்கும், உழைப்புக்கும் இன்னும் பெரிய எடத்துக்குப் போவோணும் அந்தத் தம்பி.

காசு என்ன கண்ணு பெரிய காசு. நம்ம கிட்ட இல்லாததா? மனுசனுக்குத் தேவை குணமும், உழைக்கோணுங்குற வேகமும் தான். இது ரெண்டுமே பிரபா தம்பிக்கிட்ட நெம்ப இருக்குது.

அதுவுமில்லாம நம்ம மீனாளுக்கும் பிரபா தம்பியை நெம்பப் பிடிச்சிருக்குது. இதை விட வேற என்ன கண்ணு வோணும்?” என்று ஒரே போடாகப் போட்டு அடக்கிவிட்டிருந்தார் கோதை.

********************

பிரபா மறுநாள் சென்னையிலிருந்து லண்டனுக்கு விமானம் மூலமாகச் செல்வதாக ஏற்பாடு. அதனால் வழக்கம் போல் தன்னுடைய  பிரயாணத்துக்குத் தேவையானவற்றைப் பேக் செய்யும் வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான். இரண்டு நாட்களாகவே வேலை அதிகம். மீனாவிடம் எப்பொழுதும் போல் உரையாட முடியவில்லை. இன்று இரவு கண்டிப்பாக அழைப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்காகக் கொஞ்சம் விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்.

எப்பொழுதடா வேலை முடியும் என்று காத்திருந்துவிட்டு வேலைகளை முடித்தக் கையோடு அலைப்பேசியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான் பிரபா. அம்மா, அக்கா, பாண்டி யாருடைய கேலியும் அவனைச் சென்றடையவே இல்லை.

எப்பொழுதும் பிரபா அழைக்கும் பொழுது ‘மாமா’ என்று உற்சாகமாகப் பதில் வரும் இடத்தில் இன்று வெறும் ‘ம்ம்ம்’ மட்டுமே வந்தது.

“ஓய் சொக்குப்பொடி, ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தியாடா? எல்லா வேலையும் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா. இனி நாளைக்கு பூரா ஃப்ரீதான். உன்கிட்ட பேசுறது மட்டுந்தேன் நாளைக்கு என் வேலை. சரியாடா மினிக்குட்டி. இப்ப கோவம் போயிடுச்சா என் மினிக்குட்டிக்கு? மாமாகிட்ட பேசலாமே” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இவ்வளவு பேசியதற்கும் பதிலாக வெறும் “ம்ம்ம்” மட்டும் தான் பதிலாக வந்ததுப் பெண்ணிடமிருந்து.

“என்னடா”

“ம்ம்ம்”

“எதாவது பேசுடா. என்னாச்சு என் சொக்குப்பொடிக்கு?”

“ம்ம்ம்”

“மாமா எதாவது உனக்குப் புடிக்காததை செஞ்சுட்டேனா? மாமா மேல கோவமா இருக்கியா?”

இப்பொழுது ‘ம்ம்ம்’ மாறி “ம்ஹூம்” வந்தது. ஏதோ ஒன்று சரியில்லாததுப் போல் தோன்ற, “மினிக்குட்டி அழறியாடா?” என்றுப் பதறிப் போனவனாக வினவினான் பிரபா. இந்தக் கேள்விக்குப் பதிலாக மௌனமே வந்தது பெண்ணிடமிருந்து.

“எதாவது சொல்லுடா. இப்படிப் பேசாமயே இருந்தா நான் என்ன நினைக்கிறது? நீ எதாவது சொன்னா தானே மாமாவுக்குத் தெரியும். பேசுடா” என்ற கெஞ்சலுக்குப் பிறகே மௌனம் துறந்தாள் மீனலோசினி.

“நீங்க எதுக்கு மாமா இப்ப வேலைக்குப் போறீங்க? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கலாமில்லிங்க்?” குரல்  ஏகத்துக்கு பிசிறடித்தது.

“இப்பக் கிளம்புறதுக்கே இந்தப் பாடு. இன்னும் கல்யாணம் முடிஞ்சு கிளம்புறதா இருந்தா அவ்வளவுதேன்” சிரிப்புடன் கேட்டான் பிரபா.

“எனக்கு அழுகை அழுகையா வருது. உங்களுக்கு சிரிப்பா இருக்குதுங்களாக்கும். போங்க மாமா” அழுகையுடன் சேர்ந்து கொஞ்சம் கோபமும் வந்தது.

“கல்யாணம் முடிச்சு நான் எம் பொண்டாட்டியோட பார்க்க வேண்டிய வேலையே நிறைய இருக்கும். அப்பப் போய் வேலைக்குப் போகச் சொல்றியேடா” கிசுகிசுப்பாகப் பேசினான் பிரபா.

அவர்கள் பேசத் தொடங்கிய நாளிலிருந்து முதல் முறையாக மறைமுகமாகத் தான் என்றாலும் தங்கள் அந்தரங்கம் குறித்து இன்றுதான் மனம் திறந்திருக்கிறான் பிரபா. அந்தக் கிசுகிசுப்பான குரல் பெண்ணவளை வசியம் செய்ய அழுகை எல்லாம் மறைந்து ஒரு மோன நிலையில் அலைப்பேசியைக் காதில் வைத்த வண்ணம் மௌனமாக அமர்ந்திருந்தாள் மீனலோசினி.

“டேய் மினிக்குட்டி, வீடியோ கால் போடட்டா?” மீண்டும் கிசுகிசுப்பான குரலில் பிரபா கேட்க,

“ம்ஹூம்” வெட்கத்துடன் தலை ஆட்டினாள் பாவை.

“ஏன்டா?” தாபம் மிகுந்த குரலில் பிரபா வினவ,

“அழுமூஞ்சியா இருக்கேன் மாமா” சிணுங்கலாகப் பதில் வந்தது அவனுடைய சொக்குப் பொடியிடமிருந்து.

“எந்த மூஞ்சியா இருந்தாலும் பரவாயில்ல. எனக்கு உன் கண்ணைப் பார்க்கணும் போல இருக்குடா. ஹப்பா என்ன கண்ணுடா சாமி, அப்படியே மனுஷனை உள்ள சுருட்டி வைச்சுக்குற மாதிரி.

அதெப்படி கண்ணுக்குள்ள தூங்கப் போறேன், தங்கப் போறேன்னு இந்த கவிஞருங்க எல்லாம் லூசுத்தனமா பாட்டு எழுதுறாங்களேன்னு நான் யோசிச்சிருக்கேன். இப்ப இல்ல தெரியிது அவங்க எல்லாம் எவ்வளவு அனுபவிச்சு எழுதி இருக்காங்கன்னு.

ஒரே ஒரு தடவை வீடியோ கால் போட்டுப் பேசலாம்டா. என் செல்ல மினிக்குட்டி இல்ல” பிரபாவுக்கு ஊருக்கு செல்லும் முன் அவனுடைய சொக்குப் பொடியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

“இன்னைக்கு உங்கப் பேச்சும் சரியில்ல. குரலும் சரியில்லீங்க் மாமா. எதைப் பார்க்குறதா இருந்தாலும் நீங்க நேர்ல வந்துப் பார்த்துக்கோங்க். இப்ப நான் போனை வைக்கிறேனுங்க் மாமா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள் மீனா.

பேசி முடித்ததும் இருவருடைய மனநிலையும் உல்லாசமாக மாறியிருந்தது. இந்த நொடி உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதர்களாகத் தங்களைத் தாங்களே உணர்ந்தார்கள் என்றே சொல்லலாம். 

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து சுந்தரவடிவின் முன் பள்ளி செல்லும் சிறுவன் போன்ற முகப் பாவத்துடன் வந்து நின்றான் பிரபாகரன். அவர் என்னவென்று விசாரிக்க,

“ம்மா, ஊருக்குப் போறதுக்கு முன்ன நான் போய் உங்க மருமக கிட்ட சொல்லிட்டுக் கிளம்பட்டுமா? இங்க இருந்து பொள்ளாச்சிக்குப் போயிட்டு அப்படியே அங்க இருந்து ரவைக்கு சென்னைக்குப் பஸ் ஏறிக்குவேன்ம்மா. ப்ளீஸ்ம்மா” என்று அவர் புடவை முந்தானையைப் பற்றிக் கொண்டு பின்னாடியே சுற்றி வருபவனைப் பார்த்தால் சிரிப்பு தான் வந்தது சுந்தரவடிவுக்கு.

“தாராளமா போயிட்டு வாய்யா. ஆனா பஸ்சுல எல்லாம் வேண்டாம். நீ நம்ம பாண்டியையும் கூட்டிக்கிட்டு நம்ம வண்டியிலேயே போயிட்டு வா. அதுதேன் கொஞ்சம் கௌரதையா இருக்கும். சரியா?”

“அம்மான்னா அம்மாதான். என் செல்ல அம்மா” என்று சொல்லி அவர் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, “ஆனா மாமா எல்லாரும் கேட்டா என்ன சொல்றது?” என்று கேட்டான் பிரபா.

“அதெல்லாம் உனக்கெதுக்கு. நாங்க பார்த்துக்கிடுவோம். நீ வெரசா பாண்டிக்கு போனைப் போட்டுக் கிளம்பி வரச் சொல்லு. இப்பவேக் கிளம்புனாத்தேன் சரியா இருக்கும்” தான் ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரைக் குத்தப்பட்ட மகனின் நலனை மட்டுமே விரும்பும் நல்ல அம்மா என்று மீண்டும் நிரூபித்தார் சுந்தரவடிவு. அதற்குப் பிறகு பாண்டியையும் பிரபாவையும் ஏற்றிக் கொண்டு அந்த ஸ்கார்ப்பியோ மதுரை – பொள்ளாச்சி ஹைவேசில் பறந்து கொண்டிருந்தது.

**********************

அன்று மீனா பள்ளியில் வேலை முடிந்துத் திரும்பும் பொழுது, அறிந்தவர் அறியாதவர் அனைவரும் அவளிடம் சொல்லியது ஒரே விஷயத்தைத் தான்.

“சின்னம்மிணி உங்க் வூட்டுக்கு மாப்பிளை வந்திருக்குறாராமுங்கோ” சிறிய ஊர் என்பதாலும் அந்த ஊரிலேயே மிகவும் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தினருடைய பெண் என்பதாலும் பிரபா வந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவியிருந்தது.

இந்தத் திடீர் விஜயத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை மீனா. இன்று இரவு சென்னைக்குக் கிளம்புவதாகத் தானே சொன்னார்கள். அதற்குள் இங்கு எப்படி? தனக்காகவே வந்தானோ என்று மனம் இறக்கைக் கட்டிப் பறக்கத் தானும் ஸ்கூட்டியில் பறந்து கொண்டு விரைவாக வீடு வந்து சேர்ந்தாள் மீனா.

அடித்துப் பிடித்து வீடு வந்து பார்த்தால் வீடே அமைதியாகக் காட்சியளித்தது. ‘மாமா வந்திருந்தால் இந்நேரம் வீடே பேச்சும் சிரிப்புமாக அல்லவா இருக்கும். ஒருவேளை வெளியே எங்கேயாவது போயிருப்பாங்களோ? இல்ல மாமா வரவே இல்லையோ?’ என்று தோன்றிய நொடி அத்தனை சந்தோஷமும் வடிந்து போனது பெண்ணவளிடமிருந்து.

அவளுடைய அந்த நொடி நேர மனக்குமுறலையும் விரும்பாதவனாகக் கணீரென்று கேட்டது பிரபாவின் சிரிப்பொலி அடுக்களையிலிருந்து. ‘கிச்சனுக்குள்ளயா இருக்காங்க?’ என்று விரைந்து செல்ல, அவள் ஆசையைப் பொய்யாக்காமல் அங்கு தான் நின்றுப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இப்படித் திடீரென்று வந்து நிற்பான் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விரைவாக எதாவது செய்து கொடுக்க வேண்டுமே என்றெண்ணி லலிதா வேகமாக ரவா பொங்கல் செய்து கொடுத்தார்.

அதன் சுவையில் மயங்கியவனாக, “ரவையில் பொங்கல் கூட செய்யலாமாங்க அத்தை?” என்று கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்திருந்தான். கூடவே பாண்டியும் கோதையம்மாளும். பேச்சு அங்கேயே நீண்டு அப்படியே திசை மாறி மீனா பக்கம் செல்ல,

“அப்பத்தா நேத்து உங்க பேத்தி ஒரே அழுகாச்சியாக்கும். அது அழுகவும் எனக்கும் சங்கடமா போச்சா, அதேன் நேர்லயே பார்த்து சொல்லிட்டுப் போகலாமென்டு கிளம்பி வந்துட்டேன்” என்று பிரபா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான் மீனா வந்து சேர்ந்தாள்.

“நல்லா கேட்டுக்கிடுங்க அப்பத்தா. இது வரைக்கும் எத்தன தாட்டி இவனைக் கப்பலுக்கு அனுப்பிட்டு எங்க சித்தி கண்ணைக் கசக்கிட்டு இருந்திருக்கும். அப்பயெல்லாம் வராத சங்கடம் சாருக்கு இப்ப வந்துடுச்சாமா” என்று பாண்டி சொல்ல அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்க, வேறு வழியில்லாமல் பிரபாவும் சிரித்துதான் சமாளிக்க வேண்டியிருந்தது.

மீனா வந்த வேகத்துக்குத் தனக்கு முதுகுக் காட்டி நின்று கொண்டிருந்தவன் மீது மோதி நின்றாள். அவள் மோதிய வேகத்துக்குக் கையில் இருந்த காஃபிக் கோப்பையை சிந்தாமல் பிடித்து விட்டாலும் திரும்பிப் பார்த்து அது மீனா என்று தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் தானாகவே கொஞ்சம் காஃபியை சட்டையில் ஊற்றிக் கொண்டான் பிரபா.

“என்ன கண்ணு பார்த்து வரமாட்டியா?”

“ஐயோ காஃபி சூடா வேற இருந்துச்சே!” என்று ஆளாளுக்குப் பதற,

“ஒன்னுமில்லைங்க அப்பத்தா. மேலுக்கு எல்லாம் சுடலைங்க அத்தை. இந்த டிரெஸ்சை மட்டும் மாத்திக்கிட்டா போதும். பாண்டி கார்ல இருக்குற பெட்டியில இருந்து ஒரு சட்டை எடுத்துத் தாடா” என்று கூலாகச் சொன்னான் பிரபா.

பாண்டியும் அதே போல் எடுத்து வந்து தர, பிரபாவைப் பார்த்த மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் சிலைப் போல் நிற்கும் மீனாவை உலுக்கி, “போ கண்ணு தம்பிக்குப் பாத்துரூமைக் காட்டு” என்று கூறி கோதை அனுப்பி வைத்தார். 

லலிதாவோ மீனாவின் கையில் ஒரு புது துண்டைக் கொடுத்து, “இதைக் கொடு கண்ணு. அப்படியே மாப்பிள்ளைக் கிட்ட அந்த சட்டையை வாங்கி வெரசா வாசிங் மிசின்ல போடு” என்றார்.

‘பய பிளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு. என்னமா பிளான் பண்றான்ய்யா!’ என்று பாண்டி முணுமுணுத்தது யார் காதிலும் விழவில்லை.

கோதையின் அறைக்குள் இருந்த குளியலறைக்குப் பிரபாவை அழைத்துச் சென்றாள் மீனா.  பாத்ரூமைக் காட்டிவிட்டு வெளியே செல்ல முற்பட்டவளை, அவள் கரத்தைப் பிடித்துக் கதவோரமாக சாய்த்து அவள் நகர முடியாத வண்ணம் அரணாக நின்றான் பிரபா.

சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் அவன் நின்ற தோற்றமும், அந்த அருகாமையும் அவனிடமிருந்து வெளிவந்த பெர்ப்யூமின் மெல்லிய வாசனையும் பெண்ணுக்குள் கலகமூட்ட கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் மீனலோசினி.

மூடிய கண்களுக்கு வலிக்காமல் முத்தமிட்டவன், “ஓய் சொக்குப் பொடி நேர்ல வந்து பார்த்துக்க சொன்னில்ல. இப்ப நான் நேர்ல வந்துட்டேன். கண்ணைத் தொறந்து என்னைப் பாரு” என்று அவள் காதோரத்தில் கிசுகிசுக்க, அந்தக் குரலுக்கு மயங்கியவளாய் கண்களைத் திறந்தாள் மீனா.

அவள் கண்ணோடு கண் கலந்தவனாக, அவள் தலை முடி கோதி, வெண்டைப் பிஞ்சு விரல்களோடு விரல் கோர்த்து, “ஏன்டா நேத்து அழுதே?” என்று கேட்க பதில் பேசத் தோன்றாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

“இப்ப எப்படி போன் பேசுறோமோ அதே மாதிரி ஷிப்புக்கு போன பிறகும் பேச முடியும்டா. மதுரையில இருக்குறதுக்குப் பதிலா ஷிப்ல இருப்பேன். அவ்வளவு தான்டா வித்தியாசம். இதுக்குப் போய் அழலாமா?” என்று கேட்டவாறே அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான் பிரபா.

அவன் அணைப்புக்குள் அடங்கியவளாய் தலையை மட்டும் நிமிர்த்தி, “எனக்கு நீங்க என்னை விட்டுட்டு ரொம்ப தூரம் போற மாதிரி இருந்துச்சுங்க் மாமா. அழுகை அழுகையா வந்துச்சு தெரியுமா” சொல்லும்போதே உதடு பிதுங்கியது.

இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அந்த உதட்டைத் தன் வசமாக்கிக் கொண்டான். முதல் முத்தம் முடியாமல் நீண்டு கொண்டே போனது. ஆசிரியை மாணவியாக மாறிக் காதல் பாடம் படிக்கத் தொடங்கினாள். ‘கணக்கு டீச்சரா’ என்று ஒரு காலத்தில் பயந்தவன் இன்று அந்த டீச்சருக்கே பாடம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

முதல் முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியோடு பிரபாவின் பயணம் தொடங்கியது. தன் மீது உயிராக இருக்கும் மீனாவே தங்களதுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் போகிறாள் என்ற உண்மை அறியாதவனாக லண்டன் சென்று கப்பலில் ஏறினான் பிரபாகரன்.

 

பார்வை – 9

சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி

கத்தும் கடலலைத் தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டும் வைத்துப்

பவளப் பட்டும் கட்டி

அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வரச் சிந்திக்கலாமா

மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா

காதுக்குள் இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரும் சித்ராவும் உருகிக் கொண்டிருக்கத் தன்னையே மறந்தவனாக அந்தக் கப்பலின் டெக்கில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். திருமணம் நின்று போயிருந்தது. அதுவும் மீனா இத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறித் திருமணத்தை நிறுத்தியிருந்தாள். அதன் பிறகு பிரபா எவ்வளவோ முயன்றும் அவளிடம் பேசக் கூட முடியவில்லை. பிரபாவின் வேலை முடியவோ இன்னும் ஒரு மாத காலம் முழுதாக இருந்தது. கையறு நிலையில் இருந்தான் பிரபாகரன்.

கப்பல் இப்பொழுது நின்று கொண்டிருந்த இடம் கரீபியின் தீவுகளில் உள்ள பஹாமாஸ் எனும் இடம். பிரபாவுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று. இத்தீவின் விசேடம் கப்பலில் இருந்தவாறே கடலின் அடி ஆழம் வரை அதாவது ஸீ பெட் என்று சொல்வார்களே அதுவரைக் காண முடியும். கப்பல் பயணத்தின் பொழுதே இந்தத் தீவின் அழகில் மனம் மயங்குபவன் இம்முறை நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தும், ரசிக்காமல் வெறித்திருந்தான்.

அவனருகில் வந்தமர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஆதரவாக அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். “இப்படியே மூஞ்சியை வைச்சுக்கிட்டு இருக்காத பிரபா. உனக்கு இது கொஞ்சங் கூட செட் ஆகலை. பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நீ நேர்ல போய் நின்னீன்னா கண்டிப்பா அந்தப் பொண்ணால உன்னை வேண்டாமுன்னு சொல்ல முடியாது. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ.

இப்ப ஏதோ கோவத்துல அப்படி சொல்லிட்டாங்க. உன்னை நேர்ல பார்த்துட்டா அந்தக் கோபத்தை அந்தப் பொண்ணால இழுத்துப் பிடிக்க முடியாது. சோ சியர் அப் மை பாய்” ஆதரவாகப் பேசினார் ஸ்டீவ்.

“எவ்வளவு கோவம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டட்டும். அதுக்காக ஒரேடியா என்னை வேண்டாமுன்னு சொல்லிடுவாளா? அவளால எப்படி முடிஞ்சுது? என்னால சுத்தமா முடியலையே” பிதற்றிக்க் கொண்டிருந்தான் பிரபா.

“எல்லாம் சரியாகிடும். இல்லை ஒரு வார்த்தை சொல்லு, நானே அந்தப் பொண்ணை நேர்ல பார்த்து, இந்தப் பய புலம்புறதை என்னால காது கொடுத்து கேட்க முடியலைம்மா. புலம்பிப் புலம்பியே எல்லாரையும் ஒரு வழி ஆக்குறான். எங்களைக் காப்பாத்துறதுக்காகவாவது நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோம்மான்னு சொல்லிக் கெஞ்சியாவது சம்மதிக்க வைக்கிறேன் போதுமா. இப்ப எந்திரிடா. எந்திரிச்சுப் போய் எஞ்சின் செக் பண்ணு போ. சும்மா சோக கீதம் இசைச்சுக்கிட்டு”

“ம்ச்… ஒரு டென் மினிட்ஸ் கேப்டன். நீங்க போங்க, நான் வரேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நடந்ததை அசைபோடத் தொடங்கினான்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன், பிரபா கப்பலுக்கு வந்து முழுதாக இரண்டு மாத காலம் ஓடியிருந்தது. பிரபா மதுரையில் இல்லாத போதும் திருமண வேலைகள் ஜரூராகவே நடந்து கொண்டிருந்தது எந்தத் தொய்வும் இல்லாமல்.

பொள்ளாச்சியிலேயே ஆகச் சிறந்த மண்டபமாகப் பார்த்து இவர்களது திருமணத்திற்காகப் புக் செய்திருந்தார் குமரப்பன். இரு வீட்டாரும் இணைந்து காஞ்சிபுரத்துக்கே ஒரு முறை சென்று முகூர்த்தப் பட்டு வாங்கி வந்தார்கள். இரண்டு மூன்று புடவைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபாவிடம் வீடியோ காலில் காட்டிய பிறகே முகூர்த்தப் பட்டைத் தெரிவு செய்தாள் மீனா. அதுவரையில் எல்லாம் நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது.

பத்திரிக்கை அச்சடித்து வந்த பிறகு பெண் வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களை முறையாக அழைக்கும் பொருட்டு பிரபா வீட்டிலிருந்து சுந்தரவடிவு, மூத்த மகள் தங்கம், அவர் கணவர் நடேசன், இரண்டாவது அக்கா தனத்தின் கணவர், பாண்டி ஆகியோர் கிளம்பி வந்திருந்தனர் பூங்குளத்திற்கு. மற்றவர்களுக்கு வேறு வேலை காரணமாக வர இயலவில்லை.

வந்த வேலையும் திவ்யமாக முடிந்திருந்தது. மீனா பள்ளிக்குச் சென்றிருந்ததால் அவள் வந்தவுடன் அவளையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றெண்ணி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மீனாவுக்காகக் காத்திருப்பதில் வந்திருந்த பிரபாவின் மாமாக்கள் இருவருக்கும் பிடித்தமில்லை.

‘ஏன் நாமதேன் இன்னைக்கி வருவோமென்டு தெரியும் தானே. அப்புறம் என்னத்துக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். வீட்ல இருக்கலாமில்ல, நம்மளை விட அதேன் முக்கியமா போச்சா’ என்று இருவரும் தங்களுக்குள்ளாக முணங்கிக் கொண்டார்கள்.

மீனாவுக்கு அன்று பள்ளியில் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை. எப்படியும் இவர்களும் மதுரையிலிருந்து வந்து, பிறகு பத்திரிகை எல்லாம் வைத்து முடித்து வர நேரமாகும். அதற்குள் நாம் திரும்பிவிடலாம் என்றெண்ணியே பள்ளிக்குக் கிளம்பியிருந்தாள். திடீரென்று பள்ளியின் தாளாளர் வருகை தந்துவிட சட்டென்று கிளம்ப முடியாமல் கொஞ்சம் தாமதமாகி விட்டது.

அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்தவளை வாசலிலேயே வைத்துக் கடிந்து கொண்டார் லலிதா. “கொஞ்சம் சீக்கிரம் வாரதுக்கு என்ன கண்ணு? அவியெல்லாம் உனக்காகத் தான் நெம்ப நேரமா காத்துக்கிட்டிருக்காங்க. பாரு மூஞ்சியெல்லாம் எப்படி சோர்ந்து போய் இருக்குதுன்னு. அவங்களைப் பார்க்குறதுக்கு முன்னாடி போய் உன்ர ரூம்ல வேற சேலையை மாத்திக்கிட்டு முகம் கழுவி கொஞ்சம் ஃபிரெஷ்ஷா வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மீனாவும் தாயாரின் பேச்சைத் தட்டாமல் யாருடைய கவனத்தையும் கவராத வண்ணம் மாடிக்குச் செல்ல முற்படுகையில் சரியாக நடேசன் அவளைப் பார்த்துவிட்டார். பார்த்தவர் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம். அப்படி இருந்துவிட்டால் அவர் நடேசன் அல்லவே. எனவே ஆரம்பித்திருந்தார்.

“ஏம்மா உனக்காக நாங்க எல்லாம் இம்பூட்டு நேரமா காத்துக் கிடக்கோம். நீ என்னடான்னா வந்தவுகள வாங்கன்னு கூட கேட்காம நீ பாட்டுக்குப் போற” என்று உரத்தக் குரலில் கூறவும் அங்கிருந்த அனைவருக்குமே தர்ம சங்கடமாகிப் போனது. 

“ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க்ண்ணா. ஸ்கூல்ல கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்க். காக்க வைச்சதுக்கு நெம்ப சாரிங்க்ண்ணா. போய் கொஞ்சம் ஃபிரெஷ் அப் பண்ணிட்டு வந்து பேசலாமுன்னு நினைச்சேனுங்க்ண்ணா. இதோ ஒரு நிமிசத்துல வந்துரேனுங்க்” என்று சொல்லி மாடிப்படியேறியவளைப் பாதியில் தடுத்து நிறுத்தியது நடேசனின் குரல்.

“ஓஹோ இம்பூட்டு நேரம் மஹாராணி வாரதுக்காகக் காத்திருந்தாச்சு. இனி மேக்கப் முடிச்சு வார வரைக்கும் வேற காத்திருக்கணுமோ? நமக்கெல்லாம் வேற வேலை வெட்டியே இல்லையென்டு நினைச்சுட்டாகப் போல சகலை” என்று சொல்லி இரண்டாவது அக்கா தனத்தின் கணவனையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

சுந்தரவடிவும், தங்கமும் தர்மசங்கடமாக மீனாவைப் பார்க்க, முயன்று முகத்தில் ஒட்ட வைக்கப்பட்ட புன்னகையுடன் வந்து, “வாங்க அத்தை, வாங்க அண்ணா, வாங்க அண்ணி” என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்றுப் பின், “பிள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லீங்க் அண்ணி” என்று சொல்லியவாறே சுந்தரவடிவு அருகில் அமர்ந்து கொண்டாள் மீனா.  

அலுத்துக் களைத்து வரும் மருமகளை இப்படி விடாப்படியாகப் பிடித்து வைத்துப் பேசுவதில் மனம் ஒப்பாத சுந்தரவடிவு, “ரொம்ப சோர்வா இருக்கியேம்மா. நீ போய் முகம் கழுவிட்டு வாம்மா. வந்து மொத எதையாவது கொஞ்சம் சாப்பிடு. போம்மா” என்று மெதுவான குரலில் கூற, அவரின் குரல் பேதத்தை உணர்ந்தவளாக, “பரவாயில்ல இருக்கட்டுமுங்க அத்தை. அப்புறமா சாப்பிட்டுக்கிறேனுங்க்” என்று மறுத்துக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள்.

சூழ்நிலை விரும்பத்தகாததாக மாறும் முன் வேறு பேச்சை ஆரம்பிப்பதற்காக, “மாப்பிள்ளை தம்பி விவசாயம் பண்ண நிலம் வாங்கப் போறதா சொன்னாருங்க். இப்ப நம்ம தோப்புக்கு எதுக்கால இருக்குற எடம் விலைக்கு வருதுங்க். அதைப் பேசி முடிக்கலாமுங்களா?” என்று சுந்தரவடிவிடம் கேட்டார் குமரப்பன்.

சுந்தரவடிவு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு பதிலளித்தார் அவருடைய இரண்டாவது மருமகன். “அதெல்லாம் சரி வராதுங்க. அவென்தேன் புரியாம ஏதோ உளறிக்கிட்டு இருக்கான்னா நீங்க வேற ஏங்க. விவசாயம் பார்க்க முடியாமத்தேன் அவென்  அவென் வேற வேலைக்குப் போயிக்கிட்டிருக்கானுங்க. இவென் என்னடான்னா இருக்குற வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்கப் போறானாம். இதெல்லாம் நடக்குற காரியமுங்களா? 

யம்மா மீனா, நீதேன் அவென்கிட்ட இதெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தணும் புரியுதா” என்றார்.

“சொல்லித் திருத்துறதுக்கு அவர் ஒன்னும் தப்புப் பண்ணலீங்களேண்ணா. விவசாயம் பண்றது தான் அவருக்கு விருப்பமின்னா நான் அதுக்குத் தானுங்களே அவருக்கு உதவியா இருக்க முடியும். எனக்கொன்னும் அவர் ஆசை தப்பானதா தெரிலீங்க்ண்ணா” என்றாள் மீனா.

மீனாவின் பதிலில் மகிழ்ந்தவராக சுந்தரவடிவு அவளுக்கு “என் ராசாத்தி” என்று சொல்லித் திருஷ்டி எடுக்க அது இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றியது அவரது மருமகன்களை. சரியாக அந்நேரம் பார்த்துப் பாண்டியின் அலைப்பேசிக்குப் பிரபாவிடமிருந்து அழைப்பு வர,

“மாப்பி சூழ்நிலை கொஞ்சம் சரியில்லடா. எதாச்சும் பிரச்சன ஆகும் முன்னுக்கு நான் இவெங்களைக் கூட்டிக்கிட்டு கெளம்புறேன். நீ அப்புறமா கூப்புடுடா” என்று சொல்லிப் பாண்டி அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க,

“டேய் இருடா யாரு பிரச்சன பண்றா?” என்றான் பிரபா.

“வேற யாரு எல்லாம் உன் மாமனுங்கதேன்” என்று பாண்டி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

“அத்த நீங்க வேற புரியாம பெருமை பட்டுக்காதீக. அவுக நம்ம பிரபாவை வீட்டோட மாப்பிள்ளையாக்கப் பார்க்குறாக. அதுக்குத்தேன் தோப்பு விலைக்கு வருது, அது வருது, இது வருதென்டு அடி போடுறாக. அது புரியாம நீங்க பாட்டுக்கு…

நாங்கதேன்  முன்னாடியே சொன்னோமுல்ல, இந்தப் பக்கிட்டு பொண்ணு எடுத்தா நம்ம பயல வீட்டோட வைச்சிக்கிடுவாகென்டு. நீங்கதேன் ஒத்துக்கிட மாட்டேன்னீக. இப்ப நாங்க சொன்ன மாதிரி தானே நடக்குது” என்றார் நடேசன் உரத்தக் குரலில்.

அவர் கூறிய விதமும், எழுப்பிய சத்தமும் சற்றே அவமரியாதையாகத் தோன்ற அதிர்ச்சியில் அமைதியாகிவிட்டார் குமரப்பன். கோதையம்மாளும் லலிதாவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நடேசன் அவ்வாறு பேசியது தன் தந்தையை அவமானப்படுத்தியதைப் போல் தோன்ற,

“அதை வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற நீங்க யாரும் சொல்லக் கூடாதுங்க்ண்ணா” என்று பட்டென்று கூறியிருந்தாள் மீனா. இந்தப் பதிலைக் கேட்டு இப்பொழுது சுந்தரவடிவும், தங்கமும் ஏன் பாண்டியுமே கூட திகைத்துப் போக, “மாப்பி ஃபோனை மீனா கிட்ட கொடு” என்று இவ்வளவு நேரமும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரபா பாண்டியிடம் கூறினான்.

பாண்டி அலைப்பேசியை மீனாவிடம் நீட்ட, அவள் அதை வாங்கி ஹலோ என்று கூறும் முன், “மீனா மாப்பிள்ளைக கிட்ட மன்னிப்புக் கேளு” என்றிருந்தான் பிரபா இறுகிய குரலில். 

“இங்க என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீங்க பாட்டுக்கு மன்னிப்பு கேளுன்னா என்னங்க மாமா அர்த்தம்? அப்ப என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லீங்களா?” என்றாள் மீனா.

“இப்போதைக்கு இது பெரிய பிரச்சனை ஆகாம இருக்கணும். அதுக்கு வேண்டிதேன் சொல்றேன். நீ ஒரு தடவை மன்னிப்புக் கேட்டுடு. இதால நாம ஒன்னும் கொறஞ்சு போயிட மாட்டோம். கேளு மீனா” என்றான் பிரபா கொஞ்சம் பிடிவாதக் குரலில். திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் இந்தப் பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும். இதை மனதில் வைத்தே பிரபா அவ்வாறு கூறினான்.

“கேட்க முடியாதுங்க் மாமா” அதை விடப் பிடிவாதக் குரலில் மீனா. தன்னிடம் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தையும் கேட்காமல் மன்னிப்பு கேட்கச் சொன்னது தன் மீது நம்பிக்கையின்மையாகத் தோன்றியது மீனாவிற்கு.

“ஸ்ப்ப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா?” சலிப்பாகப் பிரபாகரன் பேசியது அவ்வளவு நேரம் மீனா இழுத்துப் பிடித்து வைத்திருந்தப் பொறுமையை வெகு தொலைவுக்கு விரட்டியிருந்தது.

“தேவை இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன். இவ்வளவு சலிப்போட இந்தக் கல்யாணம் நடக்கோணுமுன்னு எந்தத் தேவ்வையும் இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன்.”

“மினிம்மா நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுடா.” 

“எப்ப நீங்க என்கிட்ட ஒரு வார்த்தையும் கேட்காம நீங்களா முடிவெடுத்துப் பேசுனீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சுங்க். கல்யாணத்துக்கு அப்புறமும் இதே கதைதானுங்களே நடக்கும். எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லீங்க்.”

“மினிம்மா” தவிப்பானக் குரலில் பிரபா அழைக்க,

“குட் பை மிஸ்டர்.பிரபாகரன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துப் பாண்டியிடம் அலைப்பேசியை நீட்டியிருந்தாள் மீனா.

“இங்க நான் ஆருகிட்டயாவது மன்னிப்புக் கேட்கோணுமுன்னா அது உங்க கிட்ட தானுங்க்” என்று சொல்லி சுந்தரவடிவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னை மன்னிச்சுக்கிடுங்க. இந்தக் கல்யாணம் நடக்காதுங்க” என்றாள். 

“மீனாம்மா அவசரப்பட்டு எடுத்தோமா கவுத்தோமான்னு பேசக் கூடாது தங்கம். இதென்ன கண்ணு புதுப் பழக்கம் பெரியவங்களை எதுத்துப் பேசுறது. அவியட்ட மன்னிப்புக் கேளு” என்று கோதையம்மாளும் லலிதாவும் கூட வலியுறுத்த,

“எனக்குப் புடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி என்ர வீட்ல யாரும் வற்புறுத்த மாட்டாங்கன்னு நான் இப்ப வரைக்கும் நம்புறேனுங்க அம்மத்தா. அதே மாதிரி பண்ணாத தப்புக்கு என்னால மன்னிப்புக் கேட்க முடியாதுங்க்.  எனக்கு இந்தக் கண்ணாலத்துல இஷ்டம் இல்லீங்க்” என்று சொல்லிவிட்டு அது வரைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகையை வெளியேற்றுவதற்காகத் தன்னறை நோக்கி விரைந்துவிட்டாள்.

யாரும் யாரிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்க, கலங்கிப் போய் நின்றிருந்த சுந்தரவடிவின் கைகளைப் பற்றிய கோதையம்மாள், “ஆண்டவன் போட்ட முடிச்சு இது தான்னா அதை மாத்த ஆராலயும் முடியாது கண்ணு. நீ கவலைப்படாம போயிட்டு வா. கொஞ்சம் ஆறப் போட்டு பேசலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் கோதை.

மதுரைக்குத் திரும்பும் வழி நெடுக தங்கமும் சுந்தரவடிவும் புலம்பிக் கொண்டே வர, “இத்துணூன்டு புள்ள, எங்களை எல்லாம் அசிங்கப்படுத்தியிருக்கு. அது உங்களுக்கெல்லாம் பெருசா தெரியலை. நாங்க எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பரவாயில்ல. அப்படித்தானே” என்று பொங்கி விட்டனர் மருமகன்கள் இருவரும்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மீனலோசினி யாருடனும் பேச விரும்பாதவளாக அமைதியைக் கையிலெடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் தனிமையில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தே நொந்து போயினர் மற்றவர்கள்.

பிரபா எத்தனையோ முறை முயன்றும் மீனாவிடம் பேச முடியவில்லை. ஆனால் வீட்டில் இருந்த மற்றவர்கள் பிரபாவிடம் எந்தப் பகையும் பாராட்டவில்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எதையும் நிறுத்த வேண்டாம் என்றும் தான் வந்து அனைத்தையும் சரி செய்வதாக சொல்லி  அவர்களை ஆறுதல் படுத்தியிருந்தான் பிரபா. பிரபாவின் மீதுள்ள நம்பிக்கையில் பத்திரிக்கை வைப்பதை மட்டுமே நிறுத்திவிட்டு மற்ற வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருந்தார் குமரப்பன். அவர்களுக்கும் இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை விட மனமில்லை.

 

பார்வை – 10

சொன்னபடி நான்கு மாதங்கள் கழித்து இந்தியா வந்து சேர்ந்தான் பிரபாகரன். இம்முறை பிரபாவுக்கு சைன் ஆஃப் சிங்கப்பூருக்குக் கிடைக்க அங்கு ஒரு நாள் தங்கிவிட்டுப் பின் இந்தியா திரும்பினான். நேரடியாக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்து இறங்கியவனை வரலாற்றில் முதல் முறையாக அமைதியாக வரவேற்க வந்திருந்தான் பாண்டி. அமைதியாக ஸ்கார்ப்பியோ பொள்ளாச்சி நோக்கிப் பறந்தது.

‘இன்று பிரபா ஊர் திரும்பும் நாள்’ என்ற எண்ணம் அலைக்கழிக்க காலையில் இருந்தே மிகவும் சோர்ந்து போனாள் மீனா. திருமணம் வேண்டாமென்று ஜம்பமாகக் கூறிவிட்டாள் தான். ஆனால் பிரபாவை மறப்பது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லையே. ஊருக்கு வந்த பின் தன்னை வந்து சந்திப்பானா மாட்டானா என்று மனதுக்குள் நடக்கும் பட்டிமன்றத்திற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

காலையிலிருந்து அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் மாலை மங்கும் நேரம் கீழே இறங்கி வந்தாள். தாயாரைத் தேடி சமையலறைக்குச் செல்ல, அங்கு லலிதா மும்முரமாக ரவா பொங்கல் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததுமே பிரபாவின் நினைவும், அதைத் தொடர்ந்த அன்றைய நிகழ்வுகளும் மனதுக்குள் கிளை பரப்பத் தொடங்கியது.

“அம்மத்தா எங்கங்க்ம்மா” எதையாவதுப் பேச வேண்டுமே என்று கேட்டாள் மீனலோசினி.

“அவங்க ரூம்புல அவங்க பேரன் கூட பேசிக்கிட்டிருக்காங்க கண்ணு” என்றார் லலிதா.

“முகில் வந்திருக்குறானாம்மா? வாரதா என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றாள் மீனா. 

“முகில் இல்ல கண்ணு. இவங்க வேற. நமக்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லைன்னாலும் இந்தத் தம்பி உங்க அம்மத்தாவோட பேரன் தானாம். அதை ஆரும் தடுக்க முடியாதாமா. இந்தா நீயே இதைக் கொடுத்துப்போட்டு வா” என்று சொல்லி அவள் கையில் பொங்கலைக் கொடுத்து அனுப்பி வைத்தார் லலிதா. 

ஒருவேளை பிரபாவாக இருக்குமோ என்று மனதுக்குள் மறுபடியும் பட்டிமன்ற விவாதம் ஆரம்பிக்க, அதை நிறுத்தும் வழி அறியாது கோதையம்மாளின் அறையை நோக்கிச் சென்றாள் மீனா. வந்தவளை வரவேற்றது அவளின் பட்டிமன்ற நாயகனே தான். கண்களின் அணை உடைப்பெடுக்க, இமைத்தால் மறைந்து விடுவானோ என்ற பயத்தில் இமைக்கவும் மறந்து பிரபாவைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள்.

அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்ததை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, “ஏங்க அப்பத்தா இதேன் உங்க பேத்திங்களா? இம்புட்டு அழ்கான புள்ளைக்கா கண்ணாலம் நின்டு போச்சு? நீங்க பார்த்த மாப்பிள்ளை சரியில்லை அப்பத்தா. சுத்த கூறு கெட்டவனா இருப்பான் போலயே.

அவன் இடத்துல நான் இருந்திருந்தா, எம் பொண்டாட்டி பேசுனது உங்களை வருத்தியிருந்தா அவ சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எனக்கு நீங்க எல்லாம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவளுந்தேன் முக்கியமுன்னு சொல்லி அந்த மாமா கையில காலுல விழுந்தாவுது கண்ணாலத்தை முடிச்சிருப்பேன் இந்நேரத்துக்கு. பாருங்க இப்பக் கூட அதைத்தேன் பண்ணிட்டு வரேன்” பிரச்சனையை சரி செய்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னான் பிரபாகரன்.

பேச்சு மட்டுமே கோதையம்மாளிடம் நீடித்துக் கொண்டிருந்தது. பார்வையோ மொத்தமாய் மீனாவை மொய்த்துக் கொண்டிருந்தது.

கண்கள் லேசாகக் கலங்கியிருக்க, குரலும் கரகரத்துப் போயிருக்க இயல்பாக இருப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு பிரபா பேசிய தொனியில் தன்னைத் தொலைத்தாள் பாவை. இத்தனை நாட்களாக ‘உன் குடும்பம் மட்டும் தான் உனக்கு முக்கியமா? நான் இல்லையா?’ என்று பிரபாவின் மீது கொண்டிருந்த தார்மீகக் கோபத்தை மறக்கச் செய்திருந்தது அவனது பேச்சு.

கோதை அங்கிருப்பதையும் மறந்து “மாமா” என்று கூவியவாறே பிரபாவை அணைத்திருந்தாள் மீனா. “ஹப்பா இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை நாளாச்சு” என்று சொல்லியவாறே அவனும் அணைத்துக் கொண்டான். இருவரின் கண்களும் மழையைப் பொழிய இருவருக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது. மனம் விட்டுப் பேசிக் கொள்ளட்டும் என்றெண்ணியவராகக் கோதை அவ்விடம் விட்டுச் சென்றார்.

“சாரிடா மினிக்குட்டி. மாமா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா” என்று சொல்லியவாறே அவளது உச்சியில் முத்தம் பதித்தான் பிரபாகரன்.

“நாந்தான் மாமா சாரி சொல்லோணும். எனக்கு மறுநாளே புரிஞ்சு போச்சுங்க் மாமா. உங்களை விட்டு என்னால இருக்க முடியாதுன்னு. ஆனா இவ்வளவு நடந்தப்புறம் எப்படிங்க் உங்க வீட்டுல என்னை சேர்த்துப்பாங்க. அதான் நீங்க போன் பண்ணும் போதெல்லாம் எடுக்கவே இல்லீங்க். நெம்பத் தவிச்சுப் போயிட்டேனுங்க் மாமா. இனி என்ன நடந்தாலும் உங்களை விட்டுப் போக மாட்டேனுங்க் மாமா” என்று சொல்லி அணைப்பை இறுக்கியவளாய் அவன் நெஞ்சத்திலேயே தன் முதல் முத்திரையைப் பதித்தாள் மீனலோசினி.

*********************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு. அழகிய நல்லூர், பொள்ளாச்சிக்கும் கோவைக்கும் இடையில் இருக்கும் அழகிய கிராமம். இங்கு தான் பிரபா தன்னுடைய விவசாயக் கனவை நனவாக்கியிருந்தான். இப்பொழுது அவனுக்கென்று சொந்தமாக ஒரு தென்னந்தோப்பு, நன்செய், புன்செய், நாட்டுக் கோழிக்கென்று தனிப் பண்ணை அனைத்தும் உள்ளது.

பண விஷயத்தில் நாசூக்காக விலகிக் கொண்டவன் தொழில் விஷயத்தில் ஒவ்வொன்றையும் தன்னுடைய மாமனார் குமரப்பனிடம் ஆலோசனை கேட்ட பிறகே செய்வது வழக்கம். அதில் அவர்களுக்கும் பரம திருப்தி, சந்தோஷம். சுந்தரவடிவும் தங்கள் உணவு விடுதியை மொத்தமாகப் பாண்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு இப்பொழுது மகன், மருமகளுடன் சந்தோஷமாக நாளைக் கழிக்கிறார்.

“அப்பா தீக்கிரம் வெளியே வாங்கப்பா. பாப்பா துண்டு வைச்சிக்கேன்” என்று குளியலறையின் வாசலிலேயே பூந்துவாலையுடன் கத்திக் கொண்டிருந்த பூச்செண்டின் பெயர் ஆதர்ஷினி. பிரபாகரன் மீனலோசினி தம்பதியரின் மூன்று வயது மகள்.

“அப்பாக்கிட்ட துண்டு இருக்குடா பாப்பா. நீங்க போய் அப்பத்தாக்கிட்ட இருங்க. அப்பா இதோ வந்துடுறேன்” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான் பிரபா.

“அது அம்மா துண்டு. அது நேநா” கொஞ்சம் கொஞ்சமாய் குரல் அழுகைக்குத் தயாராக, அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாக லேசாகக் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி “என் சமத்து பாப்பா. நீங்க தாங்கடா. எப்பப் பாரு எம்மக கூட போட்டி போடுறதே இவளுக்கு வேலையா போச்சு” என்று போலியாக அலுத்துக் கொண்டு மகள் கையிலிருந்த துண்டை வாங்கிக் கொண்டான் பிரபா.

அத்தோடு நிறுத்தாமல், “அம்மா துண்டை குடுப்பா” என்று பிரபா ஏற்கனவே வைத்திருந்த துண்டைக் கேட்டு வாங்கி அதை சர்வ அலட்சியமாகக் கட்டிலில் வீசிவிட்டு அவளுடைய அப்பத்தாவிடம் ஓடிச் சென்றது அந்த வாண்டு. 

அம்மா மகள் இருவருக்கும் யார் அப்பாவுக்கு முதலில் துண்டைக் கொடுப்பது என்று போட்டி நடந்திருந்தது. அதில் மகளை முந்திக் கொண்டு மீனா துண்டை நீட்டியிருந்தாள். குட்டிப்பெண் அதில் அழுது கொண்டு அப்பத்தாவிடம் குறை படிக்க ஓடிவிட, பிரபாவின் மீது நம்பிக்கையற்றவளாக அந்த அறைக்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தாள் மீனா மகளை உள்ளே விடாமல். பிரபாவோ அவள் எதிர்பார்க்கா நேரம் அவளையும் உள்ளிழுத்து முழுதாக நனைத்துவிட்டிருந்தான்.

மகள் சென்றவுடன் கதவை அடைத்துவிட்டு உள்ளே திரும்பியவனை சராமாரியாக அடித்தாள் உள்ளே தொப்பலாக நனைந்து போய் நின்று கொண்டிருந்த மீனலோசினி.

“வலிக்குதுடி பொண்டாட்டி. உன் கூட குளிக்கவே செய்றேன். உன் மக கொடுத்த துண்டை வாங்கக் கூடாதா? அம்மாவுக்கும் மகளுக்கும் என்னை வைச்சு போட்டி போடுறதே வேலை” என்று சொல்லியவாறே அவள் கைகளிரண்டையும் ஒற்றைக் கையில் அழுத்திப் பிடித்து மற்றொரு கையால் இடை வளைத்துத் திரும்பவும் அவளை ஷவருக்கடியில் நிறுத்தியிருந்தான்.

“போங்க் மாமா. உங்களுக்கு உங்க பொண்ணு பொறந்தப்புறம் என் மேல பிரியமே இல்லீங்க்” என்று செல்ல ஊடல் கொண்டு சிணுங்குபவளை இன்னும் கொஞ்சம் தன்னோடு இறுக்கி அணைத்து,

“பிரியம் இல்லாமயாடா சொக்குப்பொடி பின்னாடியே சுத்தி வரேன். நல்லா பார்வையாலேயே சொக்குப் பொடி போட்டு மயக்கி வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு பேச்சை. இப்படிப் பொய்யா பேசுற இந்த உதட்டை என்ன பண்றேன் பாரு” என்று கூறியவாறே வன்மையாக அவள் உதட்டைக் கொய்திருந்தான்.

முற்றும் 

error: Content is protected !!