Sempunal 4

Sempunal 4

செம்புனல் – 4

தெய்வா வேணு பேசியவற்றைக் கேட்டாள். நேற்று செம்பருத்தி எடுத்து வந்து வைத்திருந்த விளக்கில் எண்ணெய் தீர்ந்திருந்தது. அங்கிருந்த குடிசைகளில் யாரிடமாவது கண்டிப்பாக இருக்கும். வெளியே வந்தால் நரன் முகம் காண நேரிடுமென்று இருட்டிலேயே படுத்திருந்தாள்.

உடல் வலி கொஞ்சம் குறைந்திருந்தது. எரிச்சல் கொஞ்சம் அடங்கியிருந்தது. மனம் மட்டும் கொதி நிலையில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவன் முகத்தை மூன்று முறைப் பார்த்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அருவருக்கச் செய்த முகம். இனி எப்போதும் பார்க்கக் கூடாதென்று நினைக்க வைத்த முகம்.

குடிசையில் பரவிய வெளிச்சத்தில் வாசலைப் பார்த்தாள். லாந்தர் விளக்கொன்று இருந்தது. எழுந்துச் சென்று அதை எடுத்தாள்.

அங்கயே இருக்கட்டும். எனக்கும் வெளிச்சம் வேணும்

வேணுவின் குரல் கேட்க வாசலிலேயே வைத்துவிட்டு வந்து படுத்தாள். தனியாகப் படுத்திருந்தாலும் துணை இருக்கும் தைரியம். உறங்காமல் இருக்க எத்தனையோ காரணங்களிருந்தன. உறங்கக் களைப்புப் போதுமானாதாக இருந்தது.

இப்படியே ராத்திரிப் பூரா என் மூஞ்சிய பாத்துட்டு உக்காந்திருக்கப் போறியா? எவ்வளோ நேரம் என்ன கட்டி வெச்சிருப்பீங்க? ஆத்திரம் தீர அடிச்சீங்கல்ல? அவுத்து விடு

மூடிட்டுப் படுடா

புல்லு தரையிலயா?”

பழகிக்கோ. இன்னும் எவ்வளோ நேரம் கட்டி வெப்பீங்கன்னுக் கேட்டல்ல… வருஷக்கணக்கா இங்கதான் இருக்கப் போற. படுத்துப் பழகிக்கோ

திரும்பத் திரும்ப இதையே சொல்லாதீங்கடா… நீங்க நெனைக்குற எதுவும் நடக்கப் போறதில்ல

உன்னால முடியவே முடியாதுன்னு பல விஷயத்துக்கு ஒருத்தன்கிட்ட சொல்லிட்டே இருந்தா அதுல ஒரு விஷயத்தையாவது முடிச்சுக் காட்டணும்னு அவனுக்கு வெறி வரும். எங்க எல்லாரோட வெறி உன்ன இங்க கட்டி வெக்குறது. விட மாட்டோம்

விடியுற வரைக்கும் என்ன உங்களால இங்க வெச்சிருக்க முடிஞ்சுதுன்னா உங்கள நான் காட்டிக் குடுக்காம விட்டுடுறேன். அப்படி மட்டும் முடியல… செத்தீங்க

வாய மூடுறியா? எல்லாரும் தூங்குறாங்க

சுத்தி இத்தனப் பொண்ணுங்கள வெச்சுக்கிட்டு வெட்டியா தூங்க சொல்லுறியா… ஏன்? நான் தூங்குனதுக்கப்பறம் நீ சைலண்டா எந்திரிச்சுப் போறதுக்கா?”

அவன் முகத்தில் ஓங்கி அறைந்தான். மரத்தின் வேர் மீது அமர்ந்திருந்த நரன் பக்கவாட்டில் சரிய மரத்தின் மறு பக்கம் சென்று அமர்ந்தான் வேணு.

எதுக்குடா சும்மா அடிக்குறீங்க? அவ்வளோ உத்தமனுங்களா நீங்கல்லாம்?”

“…”

எனக்கு தண்ணி வேணும்

“…”

டேய்… தொண்டக் காஞ்சுப் போச்சு. தண்ணிக் குடுடா. டேய்… உன் பேரென்ன? காது கேக்கலையா? இத்தன அடி அடிச்சீங்கல்ல? தண்ணி எடுத்துட்டு வா. கேக்குதா இல்லையா? இருக்கியாப் போயிட்டியா? டேய்…

எதற்கும் பதில் வரவில்லை. வேணு அடித்ததில் தரையில் விழுந்திருந்தவன் எழுந்து வேரின் மீதே அமர்ந்து மரத்தில் சாய்ந்து கொண்டான். வாங்கிய அடியின் வலி அப்போதுதான் தெரிந்தது. கத்தியது மூச்சு வாங்கியது. வாய் வழியாக மூச்சுவிட்டது தொண்டையைக் காயச் செய்தது. கண்கள் சொருக கை கால்களைக் கட்டியிருந்த சங்கிலியுடன் உறங்க ஆரம்பித்தான்.

நல்ல உறக்கத்தில் யாரோ தலையைப் பிடித்து இழுக்க அவன் கண் விழித்துப் பேசும் முன் வாயில் துணியால் கட்டினார்கள். தெய்வாவை அவள் சித்தி ரோஜா எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

சீக்கிரம் சபரி. எவ்வளோ தூரம் போக முடியுமோ போயிடு. உனக்குதான் வழி நல்லாத் தெரியும்ல… எங்கயும் நிக்காத. போ போ…

ஆத்மன் அவசரப்படுத்த, தரணி வாயில் துணியை இறுக்கிக் கட்ட நரனை இழுத்துப் போனான் சபரி. வேணு சிவாவுடன் ஊருக்குள் செல்வது தூரத்தில் தெரிந்தது.

நரன் திமிறினான். தரணி ஒரு பக்கமும் சபரி ஒரு பக்கமும் அவனைப் பிடித்திருந்தனர். நேற்று மாலை சாப்பிட்டது, வாங்கிய அடியென்று உடலில் பலமில்லாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்குச் சென்றான்.

இருட்டு அதிகரித்துக் கொண்டே போக எங்கே போகிறோமென்று எதுவும் புரியவில்லை. சில இடங்களில் ஓடினார்கள். சில இடங்களில் மெல்ல நடந்து சுற்றிப் பார்த்து வழியறிய முயன்றார்கள். சில இடங்களில் வேகமாக நடந்தார்கள். எங்கும் நிற்கவில்லை.

இதற்கு மேல் போனால் சுற்றியிருக்கும் மரங்கள் கூட கண்ணுக்குத் தெரியாதென்ற நிலை வந்தபோது நரன் கத்தினான். சத்தம் காட்டில் எதிரொலித்தது.

அவன் முடியை இழுத்து தலையைப் பின் பக்கமாக சாய்த்துப் பிடித்தபடி நடந்தான் சபரி. வாயில் கட்டியிருந்த துணியைக் கடிக்கக் கூட முடியவில்லை. தொண்டை அடைத்தது. எச்சில் விழுங்கத் தடுமாறினான். சத்தம் வரவில்லை. கண்கள் கலங்கத் துவங்கின.

என்ன கத சொல்லுறீங்க? அவரோட பிரெண்ட்ஸ் ரெண்டுப் பேரும் நேத்து நைட்டே வீட்டுக்கு வந்துட்டாங்க. நீங்கதான அவரு மேல கம்ப்ளயின்ட் குடுத்தீங்க?”

இன்ஸ்பெக்டர் உச்சஸ்தாயியில் கத்தினார். உடன் இன்னும் 4 அதிகாரிகள் நின்றிருந்தனர். அதில் இருவர் பெண் காவலர்கள். ஆறுமுகத்தின் வீட்டின் முன் நிறைய ஆட்கள் சேர்ந்திருந்தனர்.

ஐயா கம்ப்ளயின்ட் குடுத்தோம். சட்டப்படி உங்கக்கிட்ட நியாயம் கேக்க வந்தோம். நீங்க கூப்பிட்டுப் பேசுனீங்க… அடுத்து அந்தத் தம்பி என்ன செய்யப் போகுதுன்னு தெரில. ஒருவேளை கண்டிப்பா ரப்பர் தோட்டம் வெக்கப் போறேன்னு மேற்கொண்டு வேலைய ஆரம்பிச்சாத் திரும்ப உங்ககிட்ட வந்து நிக்கப் போறோம். எங்களுக்கு உங்கள விட்டா யாருய்யா இருக்கா?”

இதெல்லாம் நல்லாப் பேசுறீங்க… பையனக் காணும்னு ஸ்டேஷன்ல வந்து உக்காந்திருக்காரு. அவருக்கு என்ன பதில் சொல்லுறது?”

நாங்க என்னய்யா பண்ணோம்? அந்தத் தம்பி காட்ட அழிக்குறதுப் புடிக்கல. வந்து சொன்னோம். மத்தபடி இருக்க மரம் செடி கொடிங்களுக்கு பாதிப்பு வராம என்ன செஞ்சாலும் நாங்களும் கூட நின்னு வேலைப் பாப்போம்யா. இதுக்கும் அந்தத் தம்பி வீட்டுக்கு வரலங்குறதுக்கும் என்னய்யா இருக்கு?”

நேக்கா பேசி சமாளிக்குறீங்களா? அன்னைக்கு ஸ்டேஷன் வந்தவங்கள்ல ரெண்டுப் பேர இழுத்துட்டுப் போயி விசாரிக்குற விதத்துல விசாரிச்சாத் தன்னாலத் தெரிஞ்சுடப் போகுது

நாங்க நியாயமா இருக்கும்போது நீங்க இப்படிப் பண்ணா அப்பறம் எங்களுக்கு உங்க மேல இருக்க நம்பிக்க போயிடாதாய்யா? இதுக்கா உங்கள நம்பி உங்ககிட்ட வந்தோம்?”

தேடிப் பாக்கணும் அதுக்…

தாராளமாப் பாத்துக்கோங்கய்யா. இதுனால உங்க சந்தேகம் தீரும்னா செய்யுங்க

கூட ரெண்டுப் பேர அனுப்புங்க

ஆத்மா, சிவா போங்கப்பா

வீடு வீடாகக் கதவைத் தட்டி உள்ளே சென்று தேட ஆரம்பித்தனர். சிலரைக் கேள்விக் கேட்டனர். எல்லோரும் ஒரே போல் நரன் யாரென்றே தெரியாது என்றும் ரப்பர் தோட்டம் குறித்து சிவாவும் ஆத்மனும் சொன்னதாகவும் சொன்னார்கள்.

நீங்க அன்னைக்கு ஸ்டேஷன் வந்தீங்கல்லடா? என்னடா பண்ணீங்க?”

சார் எங்கப்பா இந்த ஊர் தலைவர் சார். அவர மீறி இங்க சின்னப் புள்ள கூட எதுவும் செய்யாது. அவரு சொன்னதக் கேட்டீங்கல்ல? நாங்க என்ன கோவப்பட்டு சண்டைக்குப் போனோமா? இல்ல போராட்டம் பண்ணோமா? உங்ககிட்ட தான சார் வந்தோம்? எங்களுக்கு ஒண்ணுன்னா நீங்க பாத்துக்க மாட்டீங்களா சார்?”

நாங்கல்லாம் என்னதான் படிச்சாலும் வேலைக்குப் போனாலும் எங்க மேலதான சார் உங்களுக்கு முதல்ல சந்தேகம் வருது?”

நீங்க ஸ்டேஷன் வரைக்கும் வந்ததால இங்க முதல்ல வந்தேன். அந்தப் பையன் ஊருப் பூரா சண்ட வளத்து வெச்சிருக்கான் போல… அவங்க அப்பாவே சொல்லுறாரு. இதுல எங்கப் போறேன் வரேன்னு ஒண்ணும் சொல்லுறதில்லையாம். இப்பக்கூட அவன் பிரெண்ட்ஸ் வீட்டுல வந்து அவனக் கேக்கவும் மகன் இன்னும் வரலன்னுத் தேட ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்சம் பெரிய இடம்பா… மேலதிகாரிக்கிட்ட பதில் சொல்லணும்… உங்களுக்கு எதாவது தெரியுமா?”

நாங்க ஒரு நாள் போய் பாத்துப் பேசுனோம். இன்னொரு நாள் நீங்க ஸ்டேஷன்ல கூப்பிட்டு பேசுனீங்க. மத்தப்படி அவனப் பத்தி எதுவும் தெரியாது சார்

வீடு வீடா இந்த மொட்ட வெயில்ல அலையணும்னு என் தலையெழுத்து. காலைல ஏழு மணிக்கு ஆரம்பிச்சது. எல்லா வீட்டையும் பாத்தாச்சு. பின்னாடிப் போன லேடி கான்ஸ்டபில்ஸ் இன்னுமா வரல?”

அதோ வராங்க சார்

யாருமில்ல சார். கொஞ்ச தூரம் காட்டுக்குள்ளயும் போய் பாத்தாச்சு

இப்பக் கெளம்புறோம். நல்லாப் பேசுனேன்… அப்படியே விட்டுடுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. நீங்க பண்ணதாத் தெரிஞ்சுது… போகலாம்

போலிஸ் கார் சென்றதும் ஆத்மன் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து இதோட முடியாது. இப்படி எத்தன வாட்டி வந்து கேட்டாலும் ஒரே பதில சொல்லணும். இல்லன்னா நாங்க இவ்வளோ கஷ்டப்படுறதுக்கு அர்த்தமே இல்லஎன்றான்.

எவன் வந்தாலும் நாங்கப் பாத்துக்குறோம் ஆத்மா. நம்மளோட நியாயத்த அடுத்தவன்கிட்டக் கேட்டு ஆவப்போறது ஒண்ணுமில்ல

நீங்க பண்ணுறதுதான் சரி… நீ தைரியமா இருப்பா

கெழவி… அன்னைக்கு என்னமோ அவனுக்கு வக்காலத்து வாங்குன? படிச்சவன்ன?”

படிச்சா மட்டும் புத்தி வந்துடுமா? மனுஷன் பண்ணுற வேலையா இது? அந்தப் புள்ள தெய்வாவ பாத்தா நெஞ்செல்லாம் பதறுது. அது…

சரி எல்லாரும் கெளம்புங்க

எல்லோரும் சென்ற பிறகு மகனிடம் வந்தார் ஆறுமுகம். அடுத்து என்னப்பா செய்யப் போறீங்க? அவன விட்டா நம்மப் பேர சொல்லுவான். இங்கயே வெச்சிருந்தாலும் போலிஸ் வந்து விசாரிச்சுட்டே இருப்பாங்க. இன்னும் எத்தன நாளைக்குப்பா? பேசாம வெட்டிக் கூறு போட்டுக் காட்டுக்குள்ள பொதச்சுட்டா?”

அது ஒரு விஷயமே இல்லய்யா. ஆனா அவன சித்திரவதப் பண்ணணும்

அதனால என்ன ஆகப் போகுது வேணு?”

மத்தவங்களுக்கு பயம் வரும்

சிவா… அவன் இங்க இருக்குறதே யாருக்கும் தெரியப் போறதில்ல. அப்பறம் எவனுக்கு பயம் வரும்?”

இன்னைக்குத் தெரியாம இருக்க்கலாம்பா. ஆனா சந்தேகம் இருக்குல்ல? நம்மதான் தூக்கிருப்போம்னு இங்க வந்து விசாரிக்குறாங்கல்ல? இனி எவன் காணாமப் போனாலும் நம்மக்கிட்ட வந்து கேப்பாங்க. எவனும் நம்ம முகத்துக்கு நேரா சொல்ல மாட்டான்… பொண்ணத் தொட்டதுனாலத் தூக்கிட்டாங்கன்னு. ஆனா எல்லாருக்கும் தெரியும்

எல்லாருக்கும் தெரிஞ்சு… ஒரு நாள் ஊரே இல்லாமப் பண்ணணும்னு எவனாவது நெனச்சா? இத்தன உசுருப் போறதுக்கு நம்மக் காரணமா இருக்கணுமா?”

அப்படியெல்லாம் ஒரு ஊர அழிக்குறது சாதாரண விஷயம் இல்லய்யா. நீங்க ரொம்ப யோசிச்சுக் கொழப்பிக்காதீங்க. அவன் இங்கதான் இருப்பான். யாரு என்ன பண்ணுறான்னுப் பாத்துடலாம்

தெய்வாவை காட்டுக்குள்ளிருந்து மீண்டும் குடிசைக்குக் கூட்டி வந்தார் ரோஜா. வேணு, சிவா, ஆத்மன் அவளைப் பார்க்க வந்தனர்.

என்ன எதுக்கு சித்தி ஒளிச்சு வெக்குறீங்க?”

எதோ சந்தேகத்துல விசாரிக்க வந்திருப்பாங்க. உன்ன இந்த நெலமையிலப் பாத்தா முடிவே பண்ணிடுவாங்க. உன் அண்ணன யோசிச்சுப் பாத்தியா?”

நீங்க இங்க வந்தவங்களப் பத்திப் பேசுறீங்க. என் காலேஜ், நான் வேலைப் பாக்குற எடம்னுப் போய் விசாரிச்சா என்ன ஆகும்னு யோசிச்சீங்களா?”

நேத்துலேந்து யோசிச்சுட்டுதான் இருக்கோம்

என்னண்ணா யோசிக்குறீங்க? நான் போய்…

எங்கயும் போகத் தேவையில்ல. இப்போதைக்கு இங்க இருக்குறதுதான் உனக்குப் பாதுகாப்பு. உன்ன வெளில அனுப்பிட்டு எவன் வந்து…

பொண்ண ஆம்பளக்கிட்டேந்து எப்படி இன்னொரு ஆம்பளையாலக் காப்பாத்த முடியும்? ஒருத்தன தண்டிச்சீங்க… ஊருல இருக்கவனயெல்லாம் தண்டிக்க நேரமில்லன்னு என்ன வெளிலப் போக விட மாட்டேங்குறீங்க. இதுக்குப் பேரு பாதுகாப்பா? ஆயுசுக்கும் அடச்சு வெச்சுட முடியுமா?”

அதுக்காக வீட்டுல இருக்கப் பொம்பளைங்கப் பின்னாடியே திரியுறது தான் எங்க வேலையா? பொழப்ப யாருப் பாக்குறது? சோறு எப்படி பொங்குறது?”

சிவா கத்தாத. தெய்வா… காயமெல்லாம் சரியாகுற வரைக்கும் நீ இங்க இரு. மத்தத அப்பறம் பாக்கலாம்

தெய்வா அடுத்துப் பேச வந்ததைக் கேட்க ஆண்கள் யாரும் அங்கில்லை. ரோஜா அவளுக்கு மாற்றுடை எடுத்து வருவதாகச் சொல்லிச் சென்றார்.

காலேஜுல, கடையில லீவ் சொல்லணும். இப்போதைக்கு மூணு நாள் லீவ் சொல்லுவோம். அதுக்கப்பறம் என்ன செய்யுறது?”

யோசிக்கணும் வேணு. ச்ச… எத்தன விஷயத்த யோசிக்க வேண்டியிருக்கு?”

டென்ஷன் ஆவாத சிவா. சபரிக்கு தகவல் சொல்லி அனுப்பணும். இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு அவன அங்கயே வெச்சுக்க சொல்லணும்

போலீஸ்காரன் திரும்ப வருவான்னு நெனைக்குறியா ஆத்மா?”

வராம? அவனுக்கு காசு கெடைக்குற வரைக்கும் வந்துட்டுதான் இருப்பான்

ஆத்மன் சொன்னது போல் வந்தார்கள். இம்முறை எந்தப் பேச்சுமின்றி ஆத்மனையும் சிவாவையும் இழுத்துச் சென்றார்கள். ஒரு நாள் முழுக்க அடித்து விசாரித்தார்கள். ஊர் மக்கள் திரண்டு வந்ததால் அதற்குமேல் ஸ்டேஷனில் அவர்களை வைத்திருக்க முடியாமல் விடுவித்தார்கள். அத்தோடு முடியாதென்று விடுப்பட்டவர்களுக்குத் தெரியும்.

மகனின் காயங்களுக்கு மருந்துப் போட்ட செம்பருத்தியால் கண்ணீரை அடக்க முடியவில்லை. மவளுக்காவப் பாப்பனா? மவனுக்காவப் பாப்பனா? ஏன்டா இப்படி என் வயித்துல நெருப்பள்ளிக் கொட்டுறீங்க? எதுக்குடா நமக்கிந்த தலையெழுத்து?”

ஆத்மனின் அம்மா எழிலரசி அழவில்லை. தலைவருன்னா சும்மான்னு நெனச்சியா? போன தலைமுறை வரைக்கும் வெட்டுக் குத்துன்னு திரிஞ்சவங்க நம்மல்லாம். சின்ன வயசுல கை போனது கால் போனதெல்லாம் பாத்திருக்கேன். இன்னைக்கு எவனோ கூட்டிட்டுப் போய் அடிச்சா… இதுக்கெல்லாம் பயந்துடாத. உனக்கு சரின்னுப் பட்டது… ஊருக்கு நல்லதுன்னு பட்டத செய்

நரன் வாயிலிருந்த கட்டை அவிழ்த்து இலையில் எடுத்து வந்திருந்த நீரை அவனுக்குப் புகட்டினான் தரணி.

இன்னும்… தண்ணி

மூன்று நான்கு முறைக் குடித்த பிறகே நிமிர்ந்து அமர்ந்தான். ஏதேதோ வினோதமான சத்தங்கள் கேட்டன. உச்சி வேளையாக இருக்க வேண்டும். ஆனால் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்தது.

விடுங்கடா என்ன… அவங்க கைல சிக்குனீங்க…

இவன் ஒருத்தன்… உனக்கு இன்னுமாப் புரியல? சுத்திப் பாரு. இதுக்குள்ளதான் இனி உன் மொத்த வாழ்க்கையும்

சபரி சொல்ல சொல்ல சுற்றியிருந்த இருட்டு இன்னும் அதிகரித்தது. தலையை உலுக்கி கண்களை அகல விரித்தான். பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் மனதில் பதியவைக்க வேண்டும். எதுவரை?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!