செம்புனல் – 7
நரனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரிலிருந்து வெளியே வந்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் உடல் இன்னும் சில்லிட்டிருந்தது. ஈர சட்டையைக் கழட்டினான். குளிரெடுக்க மீண்டும் மாட்டினான்.
வேணு அவன் எதிரில் அமர்ந்திருந்தான். பூபதி மீனை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம்… செத்து… செத்துருப்பேன். நடுங்… நடுங்குறதுத் தெரியுதுல்ல? கம்பிளியக் குடு”
“உயிர் மேல அவ்ளோ ஆசையா?”
“நான் பொறந்ததுலேந்து சாகுற வரைக்கும் என்… கூடவே இருக்குறது என் உயிர். உன் கோவத்துக்காகல்லாம் அத என்னால… விட முடியாது. கம்பிளியக் குடு”
“உன் குளிருக்காக என் கம்பிளியக் குடுக்க முடியாது”
“இப்ப நான் நடுங்கி செத்துட்டா அப்பறம் நீங்க கஷ்டப்பட்டு என்ன தூக்கிட்டு வந்தது வீணாப் போயிடும். நீங்க வேற ஏதோ லைப்டைம் ப்ளான் எல்லாம் போட்டு வெச்சிருக்கீங்க… குடு”
“ஆயுசுக்கும் உன்ன பத்திரமாப் பாத்துக்குறது எங்கத் திட்டமில்ல”
“உங்ககிட்ட ஒரு க்ளாரிட்டியே இல்ல. முதல்ல என்னை என்ன பண்ணப் போறீங்கன்னு உக்காந்து டிஸ்கஸ் பண்ணுங்க. ப்ளான் பண்ணாமத் தூக்கிட்டு வந்து… நீ கம்பிளிக் குடுக்கலன்னா என்ன? நான் நெருப்புலக் குளிர் காஞ்சுக்குறேன்”
எழுந்துச் சென்று பூபதியின் அருகில் அமர்ந்தான். இலையில் ஏற்கனவே சுட்டு வைத்திருந்த மீனின் வாசனை நாசிக்குள் நுழைந்து நுரையீரலை நிறைக்க வயிற்றுக்குள்ளிருந்த சுரப்பிகளெல்லாம் ஆர்ப்பரித்தன.
இங்கு வந்ததிலிருந்து பெரும்பாலும் மீனே உண்கிறான். சபரியைவிட பூபதி சுட்டுத் தருபவற்றில் ஒரு பிரத்யேக ருசி. அவன் எழுந்துச் சென்றாலே மீன் பிடிக்கப் போகிறானென்று அர்த்தம் செய்து கொண்டான்.
குளிர் மறந்தது. வெள்ளித் தட்டில் சாம்பல் அள்ளிப் பூசியது போலிருந்த மீனைக் கையிலெடுத்தான். வரி வரியாய்க் கோடு கீறி, பிளவுகளில் உப்பை மட்டும் தூவி சுட்டெடுத்திருந்தான் பூபதி. கையிலிருந்ததை வாய்க் கொள்ளுமளவிற்கு உள்ளே தள்ளினான்.
“டேய் டேய்… முட்டாப் பயலே… முள்ளு இருக்கும்டா. துப்பு… கொஞ்சம் கொஞ்சமாப் புட்டு சாப்பிடு. மீனக் கண்டா மட்டும் பூனையாயிடுற. துப்புடான்றேன்… இந்த இலையக் கழுவிட்டு வா”
“மறுபடியும் தண்ணிலக் கை வெக்க முடியாது. நீ ஊமைன்னு நெனச்சேன்”
“உன்னால எப்படிக் கவலையே இல்லாமப் பேச முடியுது?”
“கவலைப்படுற மாதிரி இப்ப என்னாகிப் போச்சு?”
“நீ பண்ணக் காரியத்துக்கு எல்லாரும் காரித் துப்புறாங்க. உன்ன வெறுக்குறாங்க. நீ செஞ்சத ஊர்ல இருக்க வேற எவன் செஞ்சிருந்தாலும் வருத்தப்படுவான். உனக்கு வருத்தமாவே இல்லையா?”
“ஊரோட ஒத்து வாழுறதெல்லாம் ஆரம்பத்துலேந்து நமக்கு ஒத்து வராமப் போயிடுச்சு. இலை வேணாம். இப்படியே சாப்பிட்டுக்குறேன்”
“என்ன ஜென்மமோ?”
“அவன்கிட்டப் பேச்சுக் குடுக்காத பூபதி. சீக்கிரம் சுடு. எனக்கும் பசிக்குது”
“ஆமா பூபதி. என்கிட்டப் பேசுனா அப்பறம் நீயும் என்ன மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுடுவ. பேசாத”
அவன் தலையில் ஓங்கி அடித்த வேணு அவனருகில் அமர்ந்து இலையில் இருந்த இன்னொரு மீனை எடுத்துக் கடித்தான்.
“நிஜமா என்ன ஜென்மம் இது வேணு?”
“வேணு… பேரு வேறத் தெரிஞ்சுடுச்சு. ஜாக்கிரதையா இருந்துக்கோ”
“பேருத் தெரிஞ்சு? இன்னும் கொஞ்ச நாள்ல எங்க எல்லார் பேரயும் தெரிஞ்சுப்ப. அவப் பேருத் தெரியுமா?”
வாயருகில் எடுத்துச் சென்ற துண்டை இலையில் போட்டு அதை வெறித்தபடி அமர்ந்திருந்தான் நரன். நெருப்புச் சூட்டில் குளிர் உடலை விட்டுப் பிரிந்துச் சென்று கொண்டிருந்தது.
வேணு மீனை மீண்டும் இலையில் வைத்து எழுந்தான். பூபதி மீதமிருந்த சுடாத மீன்களை அள்ளிச் சென்று ஆற்றிலேயே போட்டான்.
இருவரும் சென்றுவிட நரன் சுட்டு வைத்திருந்த அனைத்தையும் சாப்பிட்டான். வேணு கடித்து வைத்த மிச்சம் உட்பட.
வேணுவின் மனதுக்குள் பூபதி கேட்டக் கேள்வித் தொக்கி நின்றது. ‘என்ன ஜென்மம் இதெல்லாம்?’
அடுத்த நாள் முழுவதும் செம்பருத்தியோ ரோஜாவோ தெய்வாவைப் பார்க்க வரவில்லை. சாப்பாட்டை சபரி எடுத்து வந்து கொடுத்தான். அவள் பேசும் முன் அவசரமாகத் தூக்கைக் குடிசை வாசலில் வைத்துச் சென்றுவிட்டான். இரவு அவன் வருவதற்காக வாசலில் காத்திருந்தாள்.
அவளைக் கண்டதும் அவன் நடையின் வேகம் குறைந்தது. திரும்பிச் செல்லவும் முடியாது. வேகம் தூரத்தை அதிகரிக்கப் போவதில்லை. பெருமூச்சுடன் குடிசையருகில் வந்தான்.
“காலைல 3 மணிக்கு எந்திரிக்கணுமாம். சொல்ல சொன்னாங்க. வந்து எழுப்புவாங்களாம். நாலு மணி முதல் பஸ்ல கெளம்பணுமாம். சீக்கிரம் தூங்குவியாம்”
“யாரோ சொல்லிவிட்டத எங்கிட்ட ஒப்பிக்க வந்தீங்களா?”
“நல்லா சாப்பிடு. நிம்மதியாத் தூங்கு”
“இதத் தவிர சொல்லுறதுக்கு வேற எதுவுமில்லையா?”
“வேற என்னம்மா சொல்ல?”
“எங்கக் கெளம்பணும்?”
“மாப்ள ஊருக்குதான்”
“யாருண்ணா மாப்ள?”
“யாரா? தெய்வா என்ன… நெஜமா… யாரும் சொல்லலையாம்மா?”
“நீங்களும் சொல்லப் போறதில்லையா?”
“ஆத்மனோட அக்காவக் கட்டிக் குடுத்துருக்கோமே… ரங்கன்… அவங்களோட தம்பி பரமன் தான் மாப்ள. அவங்க வழக்கப்படி மாப்ள ஊருலக் கல்யாணம். நம்ம எல்லாரும் நாளைக்குக் காலைலப் போறோம்”
தெய்வா தூக்கை வாங்கிக் கொண்டு அமைதியாக உள்ளே சென்றுவிட சாபரிக்கு இப்போது அவளிடம் ஏதாவது பேச வேண்டுமென்றிருந்தது. அழைத்தால் வெளியே வருவாள். என்ன பேச? சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு சிவாவின் வீட்டிற்கு வந்தான்.
செம்பருத்தி மட்டும் வீட்டிலிருந்தார். சிவாவும் ஆத்மனும் டவுனுக்குச் சென்றிருந்தனர். இன்னும் வரவில்லை போல.
“குடுத்துட்டியா? சாப்பிட்டாளா?”
“அவக்கிட்ட மாப்ள யாருன்னு சொல்லவே இல்லயாம்மா?”
“மாப்ள… நான் சொன்னேன்… இல்ல… கல்யாணம்னு சொன்னதும் படிப்பப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாளா… சிவா சொல்லலையா?”
“சரிம்மா. நான் போய் தேங்காய்க்கு மஞ்சள் தடவுறேன். சிவா வந்தா மத்த வேலையப் பாத்து முடிச்சுடுறோம்”
செம்பருத்தி திண்ணையில் அமர்ந்தார். காலையிலிருந்து ஊரில் உள்ளவர்களைத் திருமணத்திற்கு அழைப்பது மட்டுமே வேலை. மற்றவை எல்லாம் சிவா பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டான். எல்லாமென்றால் அதில் தெய்வா அடக்கமில்லையா?
“என்னம்மா வெளில உக்காந்திருக்கீங்க? இன்னும் தூங்கலையா?”
“ம்ம்? என்னமோ யோசன சிவா. அப்படியே உக்காந்துட்டேன். யாரெல்லாம் அழைக்கணும்னுக் கூட எங்கிட்டக் கேக்கலையே… முறையா வெத்தலை வெக்கலன்னா வர கூட மாட்டாங்க. நீ…”
“கூப்பிட வேண்டியவங்க எல்லாரையும் கூப்பிட்டாச்சு. இன்னைக்கு ஒரே நாள்ல எத்தன ஊர் அலஞ்சிருக்கேன் தெரியுமா? ஒண்ணும் கவலப்படாதீங்க. போய்ப் படுங்க. நான் சபரி வீடு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்”
“ஒரு எட்டு தெய்வாவையும்…”
“வேணாம். நம்மளப் பாத்தா சும்மா எதையாவது கேப்பா. அதுக்குதான் உங்களையும் அந்தப் பக்கம் போக வேண்டாம்னு சொன்னேன். வெளில பாய் எடுத்து வைங்க. நீங்க கதவத் தாழ் போட்டுப் படுங்க”
சிவா சபரியின் வீட்டுக்கு வந்தான். டவுனுக்குப் போனபோது ரங்கனுக்கு அழைத்துப் பேசியிருந்த ஆத்மன் அவனுடன் வெளியே நின்று அடுத்த நாள் செய்ய வேண்டிய காரியங்களை சொல்லிக் கொண்டிருந்தான்
“எல்லாம் சரி… தெய்வாவுக்கு மாப்ள யாருன்னு கூடத் தெரியல. இப்ப சாப்பாடு குடுக்கப் போனப்போ கேட்டா. முதல் தடவையாக் கொஞ்சம் அவசரப்படுறோமோன்னுத் தோணுது”
“இருக்க நெலமப் புரியாமப் பேசாத சபரி. போலிஸ் அவக்கிட்ட நெருங்குறதுக்கு முன்னாடி அவள இந்த ஊர விட்டு பத்திரமா அனுப்பிடணும். கல்யாணம் அதுக்கு சரியான வழி. அதனாலதான் பரமன் உடனே வெச்சுக்கலாம்னு சொன்னதும் எல்லாரும் யோசிக்காம ஒத்துக்கிட்டோம்”
“சரி ஆத்மா… அதுக்காக அவ யார் வீட்டுக்குப் போறான்னுக் கூட அவக்கிட்ட சொல்ல நமக்கு நேரமில்லாமப் போச்சா?”
“அம்மா சொல்லிருப்பாங்கன்னு நெனச்சேன். இப்ப சொல்லிட்டல்ல… அவ என்ன சொன்னா?”
“எதுவுமே பேசாமப் போயிட்டா சிவா”
“விடு… நீ யார மாப்ளன்னு சொல்லியிருந்தாலும் அவ பேசாமதான் போயிருப்பா. என்ன பண்ண முடியும் அவளால?”
“இருந்தாலும்…”
“நம்ம அவளுக்குக் கெடுதல் பண்ணுறோமா?”
“தேடுனாலும் இப்படி ஒரு சம்பந்தம் கெடைக்காது”
“சபரி ரொம்பக் கொழப்பிக்காத. நாளைக்குக் கிட்டத்தட்ட ஊர் காலியாயிருக்கும். ஒருவேள போலீஸ்காரன் வேவுப் பாத்துட்ருந்தா இத்தனப் பேருக் கெளம்பிப் போறதப் பாத்துட்டுக் கண்டிப்பா ஊருக்குள்ள வருவான். என்னாலையோ சிவாவாலையோ இங்க இருக்க முடியாது”
“தரணிய இங்க இருக்கச் சொல்வோம் ஆத்மா. வேணு?”
“ம்ம்ஹும்… இப்பப் போய் அவனக் கூட்டிட்டு வரதெல்லாம் நடக்காத விஷயம். அந்த நாய என்னைக்கு ஊருக்குள்ள கூட்டிட்டு வரது?”
“இன்னும் ரெண்டு நாள் மட்டும் அங்க இருக்கட்டும். நீ சொல்லுற மாதிரி போலிஸ் நாளைக்கு வந்து தேடித் பாத்துட்டா அப்பறம் அவங்க சந்தேகம் போயிடும். அதிகம் இந்தப் பக்கம் வர மாட்டாங்க”
அதிகாலை தெய்வாவை எழுப்ப அவள் தாயும் சித்தியும் இன்னும் சில பெண்களும் வந்தார்கள். ஆற்றங்கரைக்குச் சென்று குளிக்கச் சொன்னார்கள்.
புடவைக் கட்டிவிடும்போது அவள் உடலில் தெரிந்தத் தழும்புகளைப் பார்க்காமல் தவிர்க்க முயற்சி செய்தார் ரோஜா. அவை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.
நான்கு நாட்களுக்குப் பிறகு ஊருக்குள் வந்தாள். வீட்டில் பூஜை செய்யச் சொன்னார்கள். தந்தை படத்தை வணங்க சொன்னார்கள். பஸ் ஏற மூன்று கிலோமீட்டர் நடைப் பயணம். பஸில் அருகில் அமர்ந்த செம்பருத்தி மகளின் கையைப் பிடித்துக் கொண்டார்.
ஆத்மன் எதிர்ப்பார்த்தது போல் விடிந்ததும் போலிஸ் வேன் ஒன்று ஊருக்குள் வந்தது. தரணி சத்தம் கேட்டு அங்கே வந்தான்.
“என்ன ஒருத்தரையும் காணும்? ஊர காலி பண்ணி எங்கப் போயிருக்காங்க?”
“கல்யாணம் சார். நீங்க ஆறுமுகம் ஐயா வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தீங்கல்ல? அதே ஊரு, அதே வீட்டுலப் பேசி முடிச்சிருக்கோம்”
“யாருக்கு?”
“சிவா தங்கச்சி சார்”
“நீ ஏன் போகல?”
“எல்லாப் பொம்பளைங்களும் போக முடியாதுல்ல. இன்னும் கொஞ்சம் வயசானவங்களும் இருக்காங்க. இதுல ஒரு வருஷத்துக்குள்ள எழவு விழுந்த வீட்டுக்காரவங்க…”
“போதும் போதும்”
“காவலுக்குக் கொஞ்சம் பேரு இருக்கோம் சார்”
“சரி… காட்டுக்குள்ள போகணும். கூட வா”
“எதுக்கு சார்”
“வாடான்னா…”
தரணி எங்கும் நிற்காமல் திரும்பியும் பார்க்காமல் காட்டுக்குள் நடந்தான். இன்ஸ்பெக்டர் வேறு பக்கம் போக சொன்னால் வழிக் கிடையாது, சறுக்கும், இருட்டு என்று ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அவன் போன பாதைக்கு அவர்களை வர வைத்தான். சில மணி நேரங்கள் சுற்றிவிட்டு வந்த வழியே திரும்பிப் போனார்கள்.
பஸிலிருந்து இறங்கியதும் ஆரத்தி சுற்றிய பெண்கள் தெய்வாவின் கைப் பிடித்து அழைத்துச் சென்றார்கள். ஊர் எல்லையோடே தன் மகள் தனக்கில்லையென்று ஆகிவிட செம்பருத்தி ரோஜாவோடு நடந்தார்.
ஊர்க் கூட்டம் நடக்கும் மேடையில் பந்தல் போடப்பட்டிருந்தது. தெய்வாவை பந்தலின் கீழ் அமர வைத்தார்கள். சுற்றி நின்றவர்கள் பேச்சுக் காதில் விழவில்லை. சடங்குகளை இயந்தரம் போல் செய்தாள்.
வளையல் போட அவள் கையை எடுத்து மணமகனின் கையில் கொடுத்தபோது உடல் லேசாக நடுங்கியது. வளையல் அணிவித்தபோது மணிக்கட்டில் இருந்த ரத்தக்கட்டை வருடியக் கைகள் கருகமணி மாலையைத் தலை வழியாக அவள் கழுத்தில் மாட்டின.
முதல் முறையாக அருகில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள். மாலையை சரி செய்து கொண்டிருந்தான். குனிந்துப் பார்த்தாள். அவள் கழுத்திலும் சங்குப் பூமாலை இருந்தது. யார், எப்போது போட்டார்கள் என்று நினைவில்லை.
பரமன் தெய்வாவை பார்த்தான். கருகமணியைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கையை அதிலிருந்து விலக்கி அவள் மடியில் வைத்தவன் உடனே அவன் கையை விலக்கிக் கொண்டான்.
“மாப்ள வீட்டுக்குப் போய் விளக்கேத்தணும். எந்திரிச்சு வாங்க”
பரமன் எழுந்து முன்னே நடக்க தெய்வாவை எழுப்பி அழைத்துச் சென்றாள் காவேரி. வீட்டில் விளக்கேற்றியதும் தலைகுனிந்து நின்றவளின் காதருகில் குனிந்த பரமன் “கால்ல விழு. எல்லாரும் பாக்குறாங்க” என்று ரகசியமாக கூறினான். அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் மடிந்தமர்ந்துக் குனிந்து அவன் பாதம் தொட்டாள்.
Leave a Reply